Recent Comments

    தைப் புரட்சிப் பெண்டிர்

    பா.செயப்பிரகாசம்

    (இன்றும் ஆண்களது ஆதிக்கம் உலக அரசியலில் உச்சமாக இருப்பதால் பெண்களது உரிமைகள் மட்டுப்படுத்தப்படுகின்றன. ஆனால் உச்சத்தைக் கண்டுள்ளன பெண்களது போராட்ட வீச்சுகள். இவை மீண்டும் மீண்டும் தொடரவேண்டும். வருகின்ற 8 ஆம் திகதி உலகப் பெண்கள் தினம். இந்தத் தினத்தில் பெண்களது உரிமைகளது கோரிக்கைகள் உலகப் பந்தைச் சுரட்டுதல் அவசியமானது. தமிழ் நாட்டின் காத்திரமான எழுத்தாளரும், மனித விடுதலைப் போராளியுயான பா. செயப்பிரகாசம் “தைப் புரட்சிப் பெண்டிர்” எனும் தலைப்பில் இந்த விடுதலைத் தினம் மீது எமது பத்திரிகைக்காக எழுதிய கட்டுரை நன்றியுடன் பிரசுரமாகின்றது.)

    முற்ற முழுக்க சிந்தனையால், செயலால் பெண்கள் விடுதலை பெற்றுவிட்டதாக எப்போது கருத இயலும்?

    கல்வி, பொருளாதாரம், வாழ்க்கை நிலை ஆகியவற்றில் பெண் மேம்பாடு அடைந்திருந்தாலும், பண்பாட்டு விடுதலை பெற்றிருக்கிறார்களா என்ற கேள்வி அடிப்படையானது. பண்பாட்டு விடுதலை சமத்துவத்தின் அடையாளம். மனம் என்பது பண்பாடு சம்பந்தப்பட்டது. பெண்னுக்கு மனதளவில் பண்பாட்டு விடுதலை சாத்தியப்பட்டிருக்கிறதா?

    தமிழ்ப்பெண் இந்து சமூகப் பெண்ணாக ஆக்கப்பட்டு ஏறக்குறைய ஒன்றரை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டது. இந்து மதம் என்பது ”பிறப்புத் தத்துவத்தால்” கட்டமைக்கப்பட்டது.பாலியல் வேற்றுமை, சாதி வேறுபாடு என்பது இந்துமதத்தின் பிறப்புத் தத்துவம். பெண்கள் மனசளவில் சாதி, மதக் கட்டமைப்பிலிருந்து, சாதி மதக் கோட்பாடுகளைக் கொண்டு இயக்கும் ஆண்களின் கட்டுப்பாட்டுக்குளிருந்து வெளியேறியிருக்கிறார்களா என்ற கேள்வி எழுப்பினால் இல்லை என்றே பதில் சொல்ல வேண்டியிருக்கும். பண்பாட்டுப் புரட்சியினை அவர்கள் இன்னும் தொடவில்லை.

    சென்னைக் கடற்கரையிலும் ,முக்கிய நகரங்களிலும் இளைஞர் எழுச்சியில் பங்கேற்ற பெண்கள் சுதந்திர சிந்தனையுடன் வீடுகளுக்குள்ளிருந்து, பணியிடங்களிலிருந்து வெளியேறி வந்திருந்தார்கள். களத்தில் கூடி நின்ற அத்தருணத்தில் அவர்கள் எல்லாவற்றிலிருந்தும் தம்மை விடுவித்துக் கொண்ட மனவெளியில் உலவினார்கள் . அத்தருணம் நாமனைவரும் இருகைகள் சேர்த்துக் கொட்டுகிற வரவேற்புக்குரியது. அவ்விடம், அச்சூழல் விட்டு அகன்றதும், தம்மைச் சுற்றிலும் நிலவுகிற பழைய மனவுலக நிலைக்குள், குறிப்பாய் குடும்ப மனநிலைக்குள் பொருதித்திக் கொள்வார்கள் தாம்; அது தவிர்க்க இயலாது. சூழல் மாறுகையில் பழைய பண்பாட்டுச் சிக்கலிலிருந்து விடுபடுவதும், சூழல் முன்னையதாக ஆகிறவேளை பழைய மனநிலை பெறுதலும் நிகழும்.

    .கல்விகற்று ,கைநிறையப் பொருளீட்டுகிற பெண்டிருக்கு சம காலத்தில் பொருளாதார சமத்துவம் வாய்த்துள்ளது. கல்விச் சமத்துவம், பொருளாதாரச் சமத்துவம் எட்டிய அளவு , சமூக சமத்துவம், பண்பாட்டுச் சமத்துவம் கைப்படக் காணோம். ஆண்களின் ஆதிக்கத்தை எதிர்த்து நின்றால் குடும்ப வாழ்வு,குறிப்பாக குடும்பத்துள் பொருந்தியிருக்கும் தன்வாழ்வு சிதைக்கப்படுமோ என்ற மனதளவிலான அச்சுறுத்தல் ; பணிபுரியும், பொருளீட்டும் பெண்களும் எதிர்த்துப் போரிடத் தயங்குகிறார்கள்.ஆனால் ஆணாதிக்கம் என்பது கண்ணெதிரில் நிற்கும் எதிரி.உண்மையான எதிரி ,தன்னை மறைத்துக் கொண்டு நிற்கிற - இந்து மதம் உருவாக்கி உயிர்ப்பித்து வரும் சாதி , பாலியல் பிறப்புத் தத்துவம் தாம் . இதிலிருந்து விடுபடாத எந்தப் பெண்ணுக்கும் விடுதலை, சமத்துவம் சாத்தியப்படுவதில்லை.ஆனால் இளையோர் எழுச்சி நடைபெற்ற நாட்களில் ,அத்தருணங்களில் பெண்கள் இந்த உளவியலிலிருந்து அகன்றிருந்தார்கள் என்பது நிதரிசனம்.

    -- 2--

    தைத் திங்கள் குளிர்: 5- மணிக்கு வீதிக்குவந்து நின்றது விடியல். மஞ்சள் சேலையை உருவி தரையெங்கும் அத்தாசமாய் தூக்கியெறிந்து வீசியது போல் ஏழுமணிக்கு வீதியில் காத்திருந்தது இளம் வெயில்.யார் வந்தாலென்ன? காலைப்பொழுதை வெளியில் அனாதையாய் நிறுத்திய வீடுகள் முடங்கிக் கிடந்தன . வீடுகள் முன் கவனிப்பாரற்றுக் கிடக்கும் விடியல் , நகரத்திற்கு ஞாயிற்றுக்கிழமை என அறிவித்தது.

    அன்றைய ஞாயிறு( 22-01-2017) இது வழக்கமாய் விடியும் மாநகர விடியல் இல்லை என்பதைக் காட்டியது. அலைக்குளிரும் சேர்ந்தடிக்கும் மெரினா கடற்கரைக் குளிர்மணலில் இரவுமுழுமையும் குறுக்கிப் படுத்து எழுந்த பெண்களுக்கு மாநகராட்சி கட்டிவைத்த சில கழிப்பறைகளே இருந்தன. ஒரு கிலோமீட்டர் தொலைவுள்ள வீடுகளில்- பக்கத்துக் குப்பங்களின் வீடுகளில் கழிப்பறைகளைப் பயன்படுத்திக் கொள்ள மீனவக் குடும்பத்துப் பெண்கள் அழைத்துப் போனார்கள், “ அக்கா நீங்க எங்கூட வாங்க” என ஒருசிறு பெண் நான்கைந்து பெண்களை அழைத்துக் கொண்டு போனாள். கழிப்பறையைப் பயன்படுத்தி வெளியில் வந்ததும், கணிணித் தொழில்நிறுவனத்தில் பணிசெய்யும் ஒரு பெண் விடைபெறுகையில் அந்தப் பூம்பிஞ்சைத் தழுவி கன்னத்தில் முத்தமிட்டார்.அந்த நிமிடமே போதும் என்பது போல் குடும்பத்தினர் சிலிர்ப்பாகி நின்றனர்.

    களைகட்டிய ஒருவார எழுச்சியில் 21,22 ஆகிய இரு நாட்கள் உடனிருந்தேன். மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளில் திருப்பாவை, திருவெம்பாவை பாடி, நீராடி இறைவனை வழிபடப் போவார்கள். கோயில் கொடை , பொங்கலிடுதல்,முளைப்பாரி, மாவிளக்கு, கும்மியடிப்பு என பெண்கள் அணிவகுப்பு சாதியாக நடக்கிறது. மதுரை மாதிரி கிராமநகரங்களில் இவ்வகை விழாக்களுக்கு சாதியாக பெண்கள் அணிவகுக்கிறார்கள்.மெரினா கடற்கரை வித்தியாசமான தரிசனதைக் கொண்டிருந்தது. காலைக்கடன் கழிக்க கூட்டிப் போனவர்கள் மீனவப் பெண்கள்; அவர்கள் எந்த சாதி என்று பார்க்கவில்லை; கூடவே தொடர்ந்த பெண்களும் சாதி கருதவில்லை.சாதி மதம் கடந்து ’தமிழன்’டா’ என்ற ஒற்றைச் சொல்லில் இணைந்திருந்தார்கள் கடற்கரையில்.

    ஜல்லிக்கட்டு என்னும் பண்பாட்டு நிகழ்வு ஒற்றைச் சாதியின் கைவசமுள்ளது என்றகருத்து பரப்புரை செய்யப்பட்டுள்ளது.நானும் அக்கருத்தில் தான் இருந்தேன்.இணையதளத்தில் வெளிப்பட்டிருந்த களநிலவரப் புள்ளிவிவரம் அதைத் தவிடுபொடியாக்கியது.

    “ நேற்றிரவே பதிவொன்று எழுதுவதாகத் திட்டம்.ஆனால் முகநூலின் ‘ சூடு’ அதிகமாகி விட்டது.ஆதரவு,எதிர்ப்பு என்ற எதிர்வுக்குள் மட்டுமே இருப்பு சாத்தியம் என்றாகி விட்டது. எவ்வளவு முயன்றாலும் ‘ முத்திரை குத்தல்’ ! முன் வைக்கும் தரவுகளும் தாட்சண்யமின்றி புறந்தள்ளப்பட்டு நோக்கம் மட்டும் சந்தேகிக்கப்படுகிறது. எனவே சில களத் தகவல்களை மட்டும் சொல்லிவிட்டு அவதானிப்புகளை அவரவர்க்கு விட்டு விடுவது நலமெனப்படுகிறது” என்னும் தன்னிலை விளக்கத்துடன் நண்பர் ஒருவர் பதிவிட்டிருந்தார்.

    1.அலங்காநல்லூர் : ஜல்லிக்கட்டு என்றால் அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் என்றால் ஜல்லிக்கட்டு.இந்தப் பிரபல்யம் இரண்டுக்கும் இணையாய் வாய்த்திருக்கிறது. அலங்காநல்லூரின் சாதிகளின் தொகுதியில் நாயுடு, மூப்பனார், வளையர், ரெட்டியார்,பள்ளர்(மள்ளர்), பறையர் உள்ளனர். ஊர் நாட்டாமைகள் நாயுடுகளே.

    வாடிவாசல் முதல் மரியாதை முனியாண்டி கோவில் காளைக்கே. முனியாண்டி கோவில் பூசாரிகள் பள்ளர்கள்(மள்ளர்). இந்தக் கோயில் காளைகளுக்கே இவர்களின்முதல் மரியாதை ! காளை அணைவதற்கு எந்த நாளிலும் பள்ளர்களுக்குத் (மள்ளர்) தடையில்லை. ஆனால் உள்ளூர் மாடுகளை உள்ளூர் ஆட்கள் பிற எந்த சாதியினரும் பிடிக்கக்கூடாது.

    பக்கத்தில் புதுப்பட்டி என்ற கிராமத்தில் அகமுடையார் சாதியினர் உள்ளனர்.அவர்கள் மாடு பிடிக்க வரலாம். மற்றபடி விழாக்குழு போன்ற எதிலும் அவர்கள் பங்கு இல்லை.இதுவரையான காலத்தில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு தொடர்பாக எந்தக் கலவரமும் நடந்ததில்லை.

    2. பாலமேடு;

    ஊரைப் பொருத்தவரை பெரும்பான்மையாக இருப்பவர்கள் நாடார்கள்,அதற்கடுத்து பள்ளர்(மள்ளர்), குறவர், கோனார், பறையர், ரெட்டியார் ஆகியோர். பாலமேடு விழா நிர்வாகக்குழு நாடார்கள் தலைமையில்.

    பாலமேட்டிலும் பள்ளர் (மள்ளர்) காளைகளுக்கு மாலை மரியாதை உண்டு; பாலமேட்டிலும் அனைத்து சாதியினரும் மாடுபிடிப்பதில் பங்கேற்கலாம்.யாருக்கும் தடை இல்லை.

    அலங்காநல்லூர் ஒன்றியப் பகுதியில் முக்குலத்தோர் சிறுபான்மையினர். பாலமேடு அலங்காநல்லூர் ஒன்றியத்துக்குள் வருகிறது.

    3. மதுரை அவனியாபுரம்:

    விழாக்குழுப் பொறுப்பாளர்களில் முற்போது முதல் தற்போதுவரை முக்குலத்தோர் சாதியினர் இல்லை; இங்கும் பள்ளர் (மள்ளர்களின்) காளைகளே முதல் மரியாதை ஏற்கின்றன.

    மாடு தழுவுதல் நடக்காததால் சாமி குத்தம் ஏற்படுகிறது என்று மனக்குமுறலுடன் சீறுவோர் இந்த பள்ளர் (மள்ளர்கள் ) தான்.

    இது சாதீயம் அல்ல; சக தமிழ் வேளாண்குடியின் மன ஓட்டம்.கள நிலவரம் இதுதான். தமிழ்நாடு முழுக்க நம்பப்படும்படிக்கு அந்தக் குறிப்பிட்ட “ ஆணவ ஆதிக்க சாதிக்கு” இந்த நிகழ்வுகளில் பிரதான பங்களிப்பு இல்லை. சமீப காலமாய் நில உடைமைஉறவுகளில் சாதிய ஆதிக்கத்தில் தாட்டியமாய்த் தென்படுகிற இந்த மறவர், கள்ளர்,அகமுடையார் ஜல்லிக்கட்டுப் பண்பாட்டில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இல்லை.மாடு பிடி விளையாட்டில் அவர்களும் பத்தோடு பதினொன்றாகப் பங்கேற்கின்றனர்.அவர்கள் பெரும்பான்மையாக வாழும் ராமநாதபுரம், மதுரையின் உசிலம்பட்டி, மேலூர் பகுதிகளில் இதுவரை ஜல்லிக்கட்டு நிகழ்வு இல்லை.

    அலங்காநல்லூரிலும், பாலமேட்டிலும் வாழும் சாதியினரும் ஆணவ ஆதிக்க சாதியினர்தானே என்பீர்களானால் ஆட்சேபமில்லை. ஆனால் இது வரையான குற்றச்சாட்டுகள் யாரை எண்ணிச் சொல்லப்பட்டதோ அவர்கள் இந்தக் களத்தில் இல்லை என்பது மட்டுமே தகவல் ” .

    - இந்த அரிய தகவலினூடாக நாம் பெறவேண்டிய மற்றொரு உண்மை தாழ்த்தப்பட்ட மக்கள் வாடிவாசல் களத்தில் நேற்று நின்றார்கள்; இன்றும் நிற்கிறார்கள் என்பது.

    விளையாட்டு என்பது சமூகப் பண்பாட்டு நிகழ்வு.எந்த ஒரு விளையாட்டும் சாதீய, மத அடிப்படையில் பிறந்ததில்லை.வேட்டைச் சமூகமாக, இனக்குழுச் சமூகமாக இருந்த காலத்தில் இயற்கையை இணைவாய்க் கொண்டுசெல்லும் முயற்சியில் தோன்றியது விளையாட்டு.இன்னும் சொன்னால் இயற்கையை பல்வேறு வகையில் கையாளும் உத்திகளே விளையாட்டுக்கள். ஒரு எடுத்துக்காட்டு- சிலம்பம். விலங்குகளைத் துரத்தியடிக்க உருவான கம்புவீச்சு, பின்னர் முறையான பயிற்சியில் கலையாக வளர்ச்சி கண்டது. ஆகவே ஜல்லிகட்டு என்ற விளையாட்டு ”ஏறுதழுவுதல்” என்னும் வினையாற்றுதலில் உருவானது. எப்படி ஜல்லிக்கட்டுக்கு சாதி அடிப்படையில்லையோ, அதனை மீட்கும் போராட்டத்துக்கும் அது அடிப்படையில்லாமல் போயிற்று.அதுதான் கடற்கரைக் களத்திலும் மற்ற எழுச்சிக் களங்களிலும் காண நேர்ந்தது.அதுதான் பெண்களையும் போராட்டத் திடல்களுக்குள் கூட்டிவந்தது.எந்த சாதியும் பெண்கள் கைப்பிடித்து, எனக்குப் பின்னாலே நீ வா எனக் கூட்டிவரவில்லை.

    --3--

    கடற்கரையில் இளையோர், மாணவா், மக்கள் திட்டுத்திட்டாக நிறைந்திருந்த நான்கு இடங்களில் 1965- மாணவா் இந்தி எதிர்ப்பில் ஈடுபட்ட அனுபவங்களை இன்றைய நாள் போராட்டத்துடன் அடுக்கடுக்காய் ஒப்பிட்டு நான் பேச முடிந்தது. நான்கு இடங்களில் மட்டுமல்ல, கலங்கரை விளக்கம் முதல் உழைப்பாளா் சிலைவரை நீண்டு படா்ந்திருந்த மக்கள் பரப்பில் ஒரு விநோதத்தைக் காணமுடிந்தது. திருமணக்கூடங்களில் - கருத்தரங்க அறைகளில் – மாநாடுகளில் - பள்ளி, கல்லூரி வகுப்பறைகளில் பெண்கள் தனிப்பகுதியாக உட்கார்ந்திருப்பார்கள். இந்த ஒழுங்கு சிதைக்கப்பட்டு, ஆண் பெண் விகற்பமற்று ’ஒன்னுமன்னாய்’ கலந்திருந்தார்கள். ஆண்பால் பெண்பால் பேதமற்று அனைவரின் கரங்களும் குரல்களும் இணைந்து உயா்ந்த அற்புதக் காட்சி அது.

    இவ்வாறாக குழுமும் இடங்களில் பெண்களின் நடை, உடையை நோட்டமிடுகிற ஆண்கண்கள் மனவிகாரப் பார்வையின் கண்ணாடிகளாய் வெளிப்படும். ஆணினத்தின் பார்வைப் புயலுக்குள் மாட்டுப்பட்ட பெண்ணாய் நாணமும் வெட்கமும் தவழ்ந்திட பெண்கள் நடமாடுவார்கள். தங்கள் ஒவ்வொருவரையும் ஒரு இலட்சிய நோக்கம் இந்த இடத்திற்கு அழைத்து வந்திருக்கிறது. இது போன்ற அற்பவிசயங்கட்கு இடமில்லை என்று அலட்டல் இல்லாமல் பெண்கள் போராட்டக் கடமையில் கருத்தாயிருந்தார்கள். பகல் போல் நகரத்தின் இரவும் அவா்களைத் தொந்தரவு செய்யாது இயல்பாய் ஆகியிருந்தது. எந்நேரமும் கடற்கரைப் போராட்டக் களத்துக்கு வருவதும் போவதுமாயிருந்தார்கள். அந்நாட்களில் நகரமெங்கும் பாலின சமத்துவம் நிலைபெற்றிருந்த காட்சிக்கு மூலமாகியிருந்தனர் அந்தப் போராளிகள்.

    பெண்ணை பெண்ணாக வளா்க்கும் பழக்கமுள்ள உறவினா் வீடு அது. அவர்களின் இரண்டு பெண்கள் ’கடற்கரைப் போராட்டத்தில் கலந்து கொள்ளப் போகிறோம்’ என்று சொன்னதும் சிறுதயக்கமுமின்றி பெற்றோர் ஒப்புதல் தெரிவித்தமை, அவா்களுக்குப் பேராச்சரியம். ஒப்புதல் தெரிவிக்காவிட்டாலும் மீறி வந்திருப்பார்கள் என்பது யதார்த்தமாய் இருந்தது. எதிரில் ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியில் ஆண்பெண் பேதமற்று முழக்கமிடும் இளையோரின் குரல்களைக் கண்டும் கேட்டுக்கொண்டுமிருந்த பெற்றவர்களே போராட்ட மன நிலையிலிருந்தனர். இந்த எழுச்சிக் களத்தில் பெண்பிள்ளைகளுக்குப் பாதுகாப்பாய் எந்தப் பெற்றோரும் உடன்வந்த காட்சி தென்படாதது போலவே, இனிவரும் நாட்களிலும் தம் பிள்ளைகளின் போராட்டத்தைக் காணவருவார்கள்.

    நான் பேசி முடித்த ஒரு இடத்தில் அடுத்துப் பேசுவதற்காக ஒரு இளம்பெண் நின்றுகொண்டிருந்தார். கழுத்தில் திரட்சியாய் கிடந்த தங்கக் கயிறு திருமணமான பெண் என்பதைக் காட்டிற்று. “வீட்டுக்குத் தெரியாமல் வந்திருக்கிறேன்; இரண்டு நிமிடம் பேசிவிட்டுப் போய்விடுகிறேன்” என பதட்டமாய் நின்றார். கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தவா்களிடம் அவரைக்காட்டி தகவல் சொன்னேன். “இப்போது வீட்டுக்குத் தெரியாமல் இங்கு வந்து நிற்கிறீா்கள். நீங்கள் பேசி விட்டுப் போனால் வீட்டுக்குத் தெரிந்து விடாதா” என்று அந்தப் பெண்ணிடம் கேட்டேன்.

    “தெரியட்டும்; அந்தக் கசப்பையும் பார்த்து விடலாமே என்று தான் வந்தேன்” என்றார். வீடு தரும் கசப்பை, மனஉளைச்சலைத் தீர்க்கும் மருத்துவ நிலையமாக அவருக்குப் போராட்டக் கடற்கரை மாற்றம் பெற்றுவிட்டது.

    பணியாற்றும் நிறுவனத்தில்- பணியிடங்களில் போராட இயலாத எத்தனையோ பெண்கள் விடுமுறை போட்டு இங்கு நின்று போராடினார்கள்; நிறுவனங்கள் மீது, பணிபுரியும் அலுவலகங்கள் மேல் அவர்களுக்கு இருக்கும் வெக்கரிப்பை, அவ்விடங்களில் வெளிக்காட்ட முடியாத ஆங்கரிப்பை இவ்விடம் வெளிப்படுத்தும் நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்; இந்த யதார்த்தத்தை பணியில் அமர்த்திய நிறுவனங்கள் உணர்ந்தால் அந்நிறுவனங்களுக்கு இனிமேல் நல்லது. இல்லையெனில் ’கார்ப்பொரேட்டுகள்’ என்ன தூக்கியெறிந்தாலும் எட்டிப்பிடித்துக் கொள்ளும் நாய்களல்ல இந்தச் சீறும் காளைகள் என்பதை உணர்வார்கள். வளாகத்துக்குள் எழும் கொந்தளிப்புக்கும் சோ்த்துத் தான் இந்தக் எழுச்சி என்ற உண்மை வெளிப்பட்டது.

    எல்லாவற்றுக்கும் மேலாய் என்னைப் பிணித்துப் போட்ட ஒரு செய்தி; சில கல்லூரிகளில் முதல்வா், பேராசிரியா்கள் போராடுகிறவா்களுக்கு தடையேதும் நேராமல் ஊக்கப்படுத்தினார்கள் என்பது. ஆண்களும் பெண்களும் கல்வி பயிலும் கல்லூரியில் முதுகலை (எம்.ஏ) வகுப்பில் வருகைப்பதிவு எடுத்து முடிந்ததும் “போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்புபவா்கள் புறப்படலாம்; மற்றவா்கள் இருக்கலாம்” என்று ஒரு பேராசிரியா் தெரிவித்தார். அவா் சொன்ன அந்த நிமிடம் ‘படபட’ வென எழுந்து முதலில் வெளியேறியது மாணவிகள் தான் என்று ஒரு மாணவா் அதிசயித்தார்.

    இதைத்தான் பொறுக்க இயலாமல் “எவ்வளவு திமிர் இருந்தா பொம்பிளைங்க கூட்டம் கூட்டமா போராட வருவீங்க” என்று சொல்லிக் காட்டி. போலீஸ்காரா்கள் அடித்துக் கலைத்திருக்கிறார்கள் கடைசி நாளில்.

    சாதாரண மக்கள் முதல் கல்வியறிவு எய்தியோர் வரை கழற்றி எறிந்து வரும் ’ஆண்பால் பெண்பால் வேற்றுமையை’ அதிகார வா்க்கம் இன்னும் வீசியெறியாமல் வைத்திருக்கிறது. அதிகார மனநிலை + அரசமைப்பு + ஆயுதம் மூன்றும் கைவசமாயிருக்கிறவருக்குச் சொந்தமானவை இந்தத் திமிரான வார்த்தைகள். குப்பங்களுக்குள் வீடுவீடாய்ப் புகுந்து இழுத்து வந்து அடித்ததும், ஆட்டோக்களுக்கும் மீன் அங்காடிக் கூடாரங்களுக்கும் போலீஸ் ஓடி ஓடிப் போய் தீப்பந்தம் ஏந்திக் கொளுத்தியதுமான கொடூரம் அதிகாரம் செலுத்துவதில், அடக்குமுறை வீசுவதில், ஊழல் புரிவதில் ஆண். பெண் வித்தியாசம் காணமுடியாது என்பதை வெளிச்சமிட்டன.

    ’புரட்சியென்பது மாலை நேர விருந்தல்ல ’என்ற மார்க்சிய வாசகத்தை நேருக்கு நோ் கண்ட தரிசனம் 22 – ந் தேதி மாலையில் அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கும். முந்திய நாள் குடிசை மாற்றுவாரிய அலுவலகம் முன்னாலிருந்த கடற்கரை நடைபாதையில் நடுத்தர வயது சப்-இன்ஸ்பெக்டரிடம் ஒரு பெண் பேசிக்கொண்டிருந்தார் “எங்களைப் போல் பிள்ளைக உயிரைக் கொடுத்துப் போராடிக் கிட்டிருக்காங்க . அடிக்கமட்டும் செஞ்சிராதீங்க” . “செய்யமாட்டோம்” என்று சிரிப்புடன் தெரிவித்த சப் இன்ஸ்பெக்டருடன் அந்தப் பெண் கை குலுக்கினார்.

    அடுத்த நாட்காலை அந்தப் பெண்களின் ஆகாயத்திலிருந்த எல்லா நட்சத்திரங்களும் எரிந்து சாம்பலாகிக் கீழே விழுந்தன. அவா்களுடன் கை குலுக்கிய கை, மறுநாள் விடியுமுன்பே தடி சுழற்றி அடித்த சகிப்பின்மையைக் கண்டனா். வேறுபாடில்லது நிமிர்ந்து உயா்ந்தவா்களில் பெண் முகங்களை மட்டும் தேடித் தேடிப் பிரித்து அடித்து நொறுக்கினார்கள். ’போராட்டமா கேக்குது பொம்பிளைங்களுக்கு’ என்று நாற்றமெடுத்த வசவுகள் வந்து வந்து தாக்கின. பெண்கள் என்றாலே காக்கிகளுக்குத் தெரிவது உறுப்புக்கள் தான். பத்தாயிரம் போலீசார் கடற்கரை வேட்டையில் ஈடுபட்டிருப்பார்கள் எனில், அவா்களின் பிள்ளைகள் ஆயிரம் பேறாவது அங்கு தான் இருந்திருப்பார்கள். தன் அப்பனும், அண்ணனும் வீசுகிற வசவுகளை அவா்களும் வாங்கிக்கொண்டுதான் இருப்பார்கள் என்ற உணத்தி காக்கி உடைகளுக்கு இருக்கவில்லை.

    அன்று தம் மீது சமூகம் கற்பித்த ஒழுங்கை பெண்கள் சிதைத்தார்கள். உரிமைக்கான வெளியை நோக்கி எழுந்தார்கள் என்பது மட்டுமல்ல, தமக்கான போராட்ட களத்தை தாமே தூய்மைப்படுத்தினார்கள், தூய்மைசெய்யும் பணியில் ஈடுபட்ட இப்பெண்களின் வர்க்க நிலைகள் பலவாக இருக்கலாம். ஆனால் தமக்கான ஒழுங்கை தாமே வரித்துக்கொள்ளல் என்ற பண்பட்ட மனநிலையின் தொடக்கம் தூய்மை செய்தல்! பொதுமக்கள் சாப்பிட்டு வீசிய கப்புகளை - பிளாஸ்டிக் கழிவுகளை, குனிந்து குனிந்து பொறுக்கி எடுத்துப் பைகளில்போட்டு சளைக்காமல் வேலை செய்ததைக் காணமுடிந்தது. அந்த இடத்தில் அவா்களே எல்லாமுமாக ஆனார்கள்.

    அவரசக் சட்டம் கொண்டு வந்தாயிற்று; சல்லிக்கட்டுத் தடைக்கு முற்றுப்புள்ளி வைத்தாயிற்று ;ஏன் தொடருகிறார்கள் இன்னும் என்ற கேள்வி அப்பாவித் தனமான கேள்வி . சல்லிக்கட்டை முதலும் முடிவுமானதாக்கி, மற்றப் பிரச்சனைகளைப் பேசாமல் தவிர்ப்பதில் இந்த சுயநலக்காரர்களுக்கு பெருத்த ஆதாயம் உள்ளது. இத்தனை காலமும் இந்த சமுதாயத்தின் மீது கொட்டிக் கெட்டியாக்கி - அது முதலும் வட்டியுமாய் இளையோர்தலை மேல் குவிந்து மூச்சுத்திணறவைத்த தங்களின் குற்றச் செயல்களிலிருந்த தப்பித்துக் கொள்ளல்தான் “ஜல்லிக்கட்டு தான் முடிந்துவிட்டதே” என்னும் பரப்புரை. பிரச்சினைகளில் குளிர் காய்ந்து கொண்டே, புதியபுதிய பிரச்சினைகளை உருவாக்கிக்கொண்டே, ஓட்டு வாங்கி ஓட்டு வாங்கி, அந்த மாய உலகத்துள் காலத்துக்கும் நடமாட முடியும் என்ற துணிச்சல் அவர்களுக்கு உள்மனதில் கிடக்கிறது.

    அடக்கி ஆளும் மேலாண்மை சக்திகளிடம் ஒன்று கேட்கலாம். “இதுவரை நீங்கள் தொடங்கி வைத்த எந்தப் பிரச்சினைகளைத் தீா்த்து வைத்தீா்கள்? ”

    அதுதான் இருக்கிறதே மதுபானக் கடைகள்: அதற்குள் அடைத்துத் திசை திருப்பி விடலாம் எனக் கருதினால்,அந்தக் கருத்துக்கு விளக்குமாற்று அடி கொடுப்பது போல்,அதை எதிர்த்தும் பெண்கள் அக்கணத்தில் களத்தில் நின்றார்கள். போதையூட்டலுக்கு எதிரான போராட்ட முழக்கம் பெண்களின் நாவுகளிலிருந்து அன்று வெளியேறிற்று.

    இயக்க வடிவமோ, வழிகாட்டும் தலைமையோ கொண்டிராத எழுச்சி தொடக்க நாட்களில் கொண்டிருந்த வீச்சை கடைசி இரு நாட்களில் சன்னம் சன்னமாய் இழந்தது. உதிரிகளின் உல்லாச நேரம் என்பது போல் எங்கெங்கோ, இருந்து உள்நுழையத் தொடங்கினா். தொடக்கத்தில் இலட்சிய வேத்தில் சிவப்பேறிய கண்கள்; பின்னாட்களில் வேறு மாதிரியாய் சிவப்பேறி சிலது நுழைந்தன. பாலியல் சீண்டல் எதுவும் தென்படாத களத்தில் பெண்ணை இழிவுசெய்யும் கொச்சை உதிர்த்தபடி சிலா். அப்படியானவா்களை களப்பெண்கள் தான் அடையாளம் காட்டினா்.

    பெண்களை அச்சப்படுத்தி அடக்கிவிட்டால், போராடக் கிளம்பும் இளையோர், மாணவரின் கால்களை பின்னுக்கு இழுக்கும் கடமையைச் செவ்வனே செய்வார்கள் என்ற பழைய கணிப்பிலேயே போலீஸ் செயல்பட்டிருப்பது தெரிகிறது. இருபத்தி மூன்றாம் தேதி காலை 4 மணிக்கு போலீஸ் படை படையாக இறங்கிச் சுற்றி வளைத்துக் கொள்ளத் தொடங்கியது. களத்தில் நிற்கிற பெண்களைப் பிரிப்பதும் களம் நோக்கி புதிதாய் வருகிறவா்களைத் தடுக்க வீதிகளை மறைப்பதும் என்ற வியூகம். ஆனால் வியூகத்தை உடைத்துக்கொண்டு போராடத் தொடங்கினார்கள். தடிகள், கண்ணீா்க்குண்டுகள் இறங்கின. இறுதி நாளில் போலீஸ் தடியடியும் கண்ணீர்ப்புகைக் குண்டும் இளையோர் கூட்டத்தைச் சிதைத்த போது,அவர்களுக்கு அரணாக அவர்களைக் காத்து நின்றவர்கள் நடுக்குப்பம்,மாட்டாங்குப்பம், ருத்ரபுரம், ஐஸ்ஹவுஸ் பகுதிகளைச் சேர்ந்த மீனவப் பெண்கள் .பெண்கள் சக்தி இல்லாமல், அவா்களின் முன்னணிப் பாத்திரமில்லாமல் மெரினா எழுச்சி இல்லைஎன்பது போல் அதையும் எதிர்கொண்டார்கள்.

    இதுவரை ஆண்கள் மட்டுமே முன்னெடுத்த வாழ்வியல் மீட்புப் போராட்டத்தினை தமக்கான போராட்டமாக பெண்கள் கை கோர்த்தார்கள். முன்னா் நடந்த எந்தப் போராட்டத்திலும் இப்படியொரு பெண்கள்திரள் பங்கேற்றதில்லை. ‘தமிழன்டா’ என்று கடற்கரை வெளியெங்கும் வெளிப்பட்ட புயற்குரலில், அச்சொல்லில் பெண்ணிருந்தாள்.

    இது என்ன வகையான எழுச்சி, எங்கிருந்து தொடங்கியது என்று தலையும் காணமுடியாமல் வாலும் தென்படாமல் திகைத்துப் போனார்கள் ஆட்சியாளர்களும் அரசியல் இயக்கங்களும். அத்தனை எளிதாய் இயக்கச் சூத்திரங்களுக்குள் இதனை அடக்க இயலாது ; ஆனால் ஒன்றைப் பெண்களுக்கு உணத்தியிருக்கிறது. ஒவ்வொருவரும் பெண் மட்டுமேயல்ல; பெண் போராளிகள் என்பதைக் காட்டியிருக்கிறார்கள்.இதுவரை பெண்களுக்கேயுரிய எத்தனை எத்தனையோ பிரத்தியேகமான பிரச்சினைகளுக்கு போராடியிருக்கலாம்: பொதுப் பிரச்சினைகளின் பொருட்டு பொதுக்களத்திற்கு பெண்கள் பெருந்திரள் வந்தது, கூடங்குள அணு உலை எதிர்ப்புப் போராட்டதிற்குப் பின் இதுதான்.குடும்ப வன்முறை முதல் பாலியல் வன்முறை வரையான தமக்கேயான தனிப்பிரச்சினைகளுக்கும் பொதுக்களத்தை உருவாக்கவேண்டும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது கடற்கரை எழுச்சி.இதுவே அடுத்த எழுச்சிக்கான மூலதனம். உலக மகளிர் தினத்துக்கு ”தமிழகத்தின் பதிவு இதோ எடுத்துக் கொள்ளுங்கள் ”என தை எழுச்சிப் பெண்டிர் தம் கடைமையைச் செய்துள்ளனர்.

    Save

    Postad



    You must be logged in to post a comment Login