ஒரு பூந்தோட்டக் காவல்காரனின் நாட்குறிப்பிலிருந்து! (8)
ரொறன்ரோவில் கொஞ்ச நாள் மழை தொடர்ச்சியாக பொழிய, கொல்லைப்புறத் தோட்டத்தில் பயிர்களை விட, களைகள் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்திருக்கும். நம்மைப் போல, பிளாஸ்டிக் குந்து பலகையில் உட்கார்ந்து, ஒரு தியானம் போல ஒவ்வொரு களையாக பொறுமையாக வேரோடு பிடுங்க, உங்களுக்குச் சில நேரம் 'நாரிக்கை நோகலாம்'. 'இதையெல்லாம் மினக்கெட்டு ஒவ்வொண்டாப் பிடுங்க வேணுமோ? நாங்கள் தமிழர்கள், களையெடுக்கிறது எங்களுக்கு ஜுஜுபி மாதிரி' என்று கந்தன் கருணை விளையாட்டாய், போட்டுத் தள்ள பெரும் பெட்டிக் கடையில் Wipeout, Roundup என பல பெயர்களில் இருக்கும் களை கொல்லிகளை வாங்கி வந்து சங்காரம் பண்ணும் யோசனை வந்திருக்கும்.
இந்தக் களை கொல்லிகளில் இருக்கும் Glyphosate என்னும் இரசாயனப் பொருள் மிகவும் ஆபத்தான நஞ்சு. இந்த நஞ்சு எங்கள் உணவுகளில் வந்து சேர்ந்து புற்றுநோய் உட்பட்ட பல்வேறு நோய்களுக்கு காரணமாக இருப்பதாகவும், இது மனிதர்களுக்கு நோய் ஏற்படுத்தும் நஞ்சாக இருக்கலாம் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப நிறுவனமான புற்றுநோய் ஆய்வுக்கான சர்வதேச அமையம் கூறியிருக்கிறது.
இந்த மருந்துப் பாவனை அதிகமானதால், இலங்கையில் பலருக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக இலங்கை அரசு இந்த களைகொல்லிகளின் இறக்குமதியைத் தடை செய்திருக்கிறது. பல ஐரோப்பிய நாடுகள் இந்த மருந்தின் பாவனையை தடை செய்ததுடன், வேறு சில கட்டுப்படுத்தியுள்ளன.
இந்த மருந்து எந்த வேறுபாடுமின்றி, சகல களைகளையும் பயிர்களையும் அழிப்பதால், பொது இடங்களில் களையை அகற்ற அரசாங்கங்கள் இந்த மருந்தை அதிகளவு பயன்படுத்துகின்றன. இதை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமாக மொன்சான்ரோ, இந்த மருந்திற்கு இறக்காத தன்மையுள்ள மரபணுக்களை விதைகளுக்குள் செலுத்தி, சோயா, சோளம் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது. வயல்களில் இந்தப் பயிர்கள் விதைக்கும் போது, இந்த மருந்தை விசிறும்போது, இந்தப் பயிர்கள் தப்ப, மற்ற களைகள் இறக்கின்றன. ஆனால் இந்த விதைகள் உணவாகும்போது, அவற்றின் மூலமாக இந்த நஞ்சு எங்கள் உடலில் நுழைகிறது. இது புற்றுநோய் முதல் மதியிறுக்கம் போன்ற பல நோய்களுக்கு காரணமாகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, சிரமத்தைப் பாராமல் உங்கள் தோட்டக் களைகளை இரசாயனப் பொருட்கள் பாவிக்காமல், கைகளாலேயே அழியுங்கள். உடற்பயிற்சியும் ஆகிறது.
1. ஒவ்வொரு தடவையும் களைகளை வேரோடு பிடுங்குங்கள். வேரை விட்டு, வெறும் இலைகளைப் பிடுங்குவதால் எந்தப் பயனும் இல்லை. 2. களைகள் பூக்க முன்னால் அவற்றைப் பிடுங்குங்கள். அல்லது பூக்களைக் கத்தரித்து விடுங்கள். பூத்து பரவும் விதைகள் தான் பெரும் தலையிடி. 3. பயிர்கள் இல்லாமல் வெறுமனே இருக்கும் பாத்திகளில் Buckwheat போன்றவற்றை நட்டால், அவை களைகள் வளர்வதை தடுத்து, வேகமாய் வளரும். அவை பூத்து விதைகளாக முன்னால், பிடுங்கி உழுதால், அவை பசளையாகும். 4. பயிர்கள் நாட்டும் வரைக்கும் கறுப்பு பிளாஸ்டிக், பத்திரிகைகள் போன்றவற்றால் பாத்தியை மூடி விடலாம். 5. ஒவ்வொரு தடவையும் விதைகள் முளைக்கும் போது, மண்வெட்டியாலோ, விறாண்டிகளாலோ உழுது வேரை நகர்த்தினால், களைகள் காய்ந்து விடும்.
தோட்டம் செய்வது பயிர் நாட்டி பயன்பெறவே! பயிர் நாட்டுவதில் கவனம் செலுத்தாமல், சும்மா களையெடுக்கிறோம் பேர்வழி என்று அதிலே மட்டுமே கவனத்தைச் செலுத்தினாலோ, கந்தன் கருணை பாணியில் ஒரேயடியாக போட்டுத் தள்ளினாலோ (இரசாயனம் பாவித்துத் தான்!) ஈழமும் கிடைக்காது. கத்தரிக்காயும் கிடைக்காது!
சுவடி, ஜுன் 2015
You must be logged in to post a comment Login