(அட, பல வருடங்கள் கழிந்து விட்டன. “தாயகம்” வாசகர்களுக்கும் வாசகிகளுக்கும் அந்நியமானவர் அல்ல ஜெயந்தீசன். எனது நூற்றுக்கு மேற்பட்ட குட்டிக்கதைகள் ஓர் “ரஷ்ய எழுத்தாளரை” ஆசிரியராகக் கொண்ட “தாயகம்” இதழில்தான் வந்தது. அவர் பெயர் குருசேவ். மன்னிக்கவும் இவர்தான் ஜோர்ஜ் என்பது பின்னர் தெரியவந்தது. தமிழில் அராஜகத்தை எதிர்த்து இப்போதும் எழுதியபடியும் தோட்டத்தின் கைதியாகவும் இருப்பவர். முகத்தைக் காட்டாமல் இருப்பதில் விருப்பு உள்ள இவருக்கு முகநூலில் நிறைய லைக்குகள் வருதல் சகஜம்தான். ஏன்? இவரது உடலில் உள்ளது எழுத்து எனும் இரத்தம்.
இது எனது மீள்வருகை அல்ல. சில வேளைகளில் மீளவும் நான் வரலாம். எனது ஆவணங்களுக்குள் மறைந்துகிடந்த இந்தக் கதை இப்போதுதான் எனது கண்ணில் தெரிந்தது. இது 2005 இல் எழுதப்பட்ட கதை. இதனை உங்கள் வாசிப்புக்குத் தருவதற்கே இந்த வருகை.
இப்போது முகநூல் செய்திகள் யாவும் “குட்டி”க் கதைகளாகவும், குத்துக் கதைகளாகவும், கூத்திக் கதைகளாகவும், கூத்துக் கதைகளாகவும் பலரையும் மயக்கும் வேளையில் நானும் எழுதுவதா என எனது பழைய காதலியிடம் கேட்கப் போன் பண்ணினேன். பதில் இல்லை. வாட்ஸாப்பில் தேடி “Hi” என்றேன். அவளிடமிருந்து “Bye” வந்தது.
மீண்டும் Hi என்றேன். “நான் அவளில்லை. அவளிண்ட புருஷன்” என்ற பதில் ஓடியோவில் வந்தது. நான் தப்புவதற்கு ஓடினேன்.)
அவர் ஓர் இளைஞர். ஆனால் நான் அவரை எப்போதும் ஓர் வயோதிபரோடுதான் காண்பதுண்டு. இருவரும் இணைபிரியாத நண்பர்கள், நட்பிற்கு வயதில்லையென நினைத்துக்கொண்டேன். காதலும் நட்பும் வயதைக் கடந்த சங்கதிகள் என்பதை நான் அனுபவபூர்வமாக அறிந்தும் உள்ளேன். ஆனால் எதுவும் நித்தியமானதாக இல்லாததால், காதல் கரைவதற்கும் நட்பு உடைவதற்கும் வாய்ப்புள்ளதை வேறு அனுபவங்களிற்கூடாகக் காணும் உவாதை எனக்கு ஏற்பட்டதுண்டு. நான் நண்பர்களாகக் கருதியோர் யமன்களாக உருமாற்றம் பெற்றதையும் கண்டுள்ளேன்.
சில தினங்களாக நான் அந்த இளம்பையனைத் தனியாகக் கண்டதால் சிறிது ஆச்சரியம் வந்தது. இன்றும் அவரைக் கண்டேன். முகம் வாடியும், கவலைக்களையும் கொண்டிருந்தது. ஓர் பியர் ரின் கையில். என்னைக் கண்டதும் சிரமப்பட்டுச் சிரித்தார்.
'தம்பி! அய்யா இல்லை, அதாலைதான் கவலையோ?" எனக் கேட்டேன்.
'அண்ணை! 2 கிழமையா அய்யாவைக் காணமுடியாம இருக்குது."
'வருத்தம் கிருத்தமோ?"
'அவரை நேற்றைக்கும் மெத்ரோவிலை கண்டதாக ஒரு பிறண்ட் என்னிட்டைச் சொன்னவன்."
'அவருக்கு நீர் அடிச்சுப் பாத்தனீரே?"
'அடிச்சா அவதான் எடுக்கிறா, பேரைக் கேக்கிறா, சொன்னோண்ணை கட்."
'உமக்கு அய்யா அடிச்சவரோ?"
'முன்னமெண்டா அடிக்கடி அடிப்பார். அவருக்கு பாஷை விளங்காததாலை நான்தான் அவற்றை மொழிபெயர்ப்பாளர். என்ரை ரெலிபோன் விடியக் கத்தினா அய்யாவுக்கு பிரெஞ்சிலை ஒரு கடிதம் வந்திட்டுது எண்டு அர்த்தம்."
'அப்ப ஏன் அய்யா உமக்கு அடிக்காமலிருக்கிறார்? நீர் அடிக்கேக்கை ஏன் அய்யாவைப் பிடிக்கமுடியமா இருக்குது?" என வேதாளம் பாணியில் 2 கேள்விகள் கேட்டேன்.
'என்னோடை ஒரு கொட் றிங் எடுப்பியளே?" பையன் கேட்டான். போத்தலைப் பார்க்கமலேயே நான் 'சியர்ஸ்" சொன்னதும் அவர் சற்றே மருண்டுவிட்டார்.
நான் கடைக்கு வெளியே. அவரோ உள்ளே. சின்னப் போத்தலோடு வருவார் என நினைத்தால் பெரிதோடும் 2 சின்ன பிளாஸ்டிக் கிளாஸ்களோடும் வந்தார். முழுப்போத்தல் அரைப்போத்தல் ஆகியபின் பையன் என்னை முறைத்துப்பார்த்தான். அடித்துவிடுவானோ என்ற அச்சம்கூட வந்தது.
'அண்ணை! உவன் அய்யா ஒரு சாதி வெறியன்."
'தம்பி! உணர்ச்சிவசப்படாம பேசுங்கோ!"
'அண்ணை! எனக்குத் தெரியும் ஏன் அவன் அய்யா இப்ப என்னைச் சந்திக்கிறதில்லையெண்டு."
'நீர் விரும்பினா உமக்குத் தெரிஞ்சதைச் சொல்லும்!"
'அண்ணை 3 கிழமைக்கு முன்னம் அய்யாவோடை இதிலை நிண்டு அடிச்சுக் கொண்டிருக்கேக்கை என்ரை மச்சான் வந்தான். நல்லாத் தெரிஞ்சதைப்போல அய்யாவோடை கதைச்சான். அவன் அய்யாவோடை கிளீனிங் வேலை செய்த விசயம் எனக்குத் தெரியாது. நான் அய்யாவிட்டை அவன் என்ரை மச்சான் எண்டு சொன்னன். போத்தில் முடியாம இறங்கதாவர் அண்டைக்கு தனக்கு வெறி ஏறிட்டுதாம் எண்டிட்டு இறங்கீட்டார். அதுக்குப் பிறகு அவர் தலைமறைவாகீட்டார்."
'இதுக்கு எது காரணம்?"
'எனது சாதி அவருக்குத் தெரியாது, ஆனா மச்சானின்ரை சாதி தெரியும்".
இந்தப் பதிலால் எனக்குள் ஏறிய அரை உடனடியாக இறங்கியது.
18-02-05
You must be logged in to post a comment Login