பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி
அறியாப் பருவத்து விடலையாய் கனவு காணத் தொடங்கி, நரைதிரை மூப்பொரு வடிவம் கொண்ட இன்று வரைக்கும் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, என் கனவிலும் நினைவிலும் தொல்லை தந்த/தரும் கனவுக்கன்னிகளுக்கு…
வழமை போல சில சினிமா நடிகைகள்… வெறும் கனவின் கன்னிகள்!
சிறீதேவி… கமலஹாசன் வில்லனாக நடித்த படம் என் மனத்திரையில் ஓடிய ஒன்று மட்டும் தான். பையலாய் இருந்த போழ்தில் புல்லரிக்க வைத்தவள்.
பானுப்பிரியா… ஹொலிவூட்டின் சுஸான் சரண்டனின் கண்களோடு, நடிப்பும் அழகும் கவர்ந்து… விசயம் தெரிந்த வயதிலும் வியக்க வைத்தவள்.
It really broke my heart to know how both of you ended up.
ஜொடி பொஸ்டர்… டாக்சி ட்ரைவர் படத்தில் றொபேட் டி நீரோவுடன் விபசாரியாய் நடித்தவள். இப்போதைய ஹொலிவூட் கிசுகிசுப்படி பெண் காதலி உண்டாம்.
புளூ லகூனில் வந்த புரூக் ஷீல்ட்ஸ்… இப்போது தொலைக்காட்சித் தொடர்கள் சிலவற்றில் கண்ட போது, வயது முதிர்ந்து…
வாழ்க்கை வெறுத்தது!
ஒப்பரேஷன் டே பிரேக்கில் வந்து என் இதயத்தை பிரேக் பண்ணிய பெயர் தெரியா நடிகை…
உங்களுக்கு எல்லாம் காதல் கடிதம் எழுதும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை. கல்லான இதயத்தையும் கரைத்துக் காதலாய் கசியும் வகையில் என்னால் எழுதியிருக்க முடியும். என் எழுத்தில் மயங்கி நீங்கள் பதில் எழுதியிருந்தால், வீட்டில் கட்டி வைத்து உரிப்பு நடக்கும் என்ற பயம். எங்கள் காதல் தோற்றதற்கு, என் கோழைத்தனம் காரணம்.
என்னை மன்னித்து விடுங்கள்!
சில டீச்சர்மார்கள்… பெயர்களைச் சொல்லப் போனால், பழைய மாணவர் சங்கப் பார்ட்டிகளில் கலகம் மூளலாம். நெருக்கமான நண்பர்களை இழக்க நேரலாம். அந்த நேரத்துக் கிழவி டீச்சர்களும் தங்கள் காதற் கவர்ச்சி பற்றிப் பெருமிதங் கொண்டு புல்லரித்து விட்டுப் போகட்டுமே, மேலுலகில்! பிரம்புகளால் பின்பக்கத்தைப் பதம் பார்த்த நீங்கள் என்ன பரலோகத்திலா இருக்கப் போகிறீர்கள்?
என் crush கள் யார் என்பது என்னோடேயே என் கல்லறைக்கு வரட்டும்!
ஆங்கில வாத்தியார் கற்பித்த முருகைக்கல் தீவுக் கதையில் வந்த ஆதிவாசிப் பெண் அவாத்தியா… மேலாடை இல்லாமல் இடையில் துண்டோடு. பிறகென்ன கற்பனைக்குப் பஞ்சம்? கதாநாயகன் றல்ப் றோவராக என்னைக் கற்பனை பண்ணி, ‘தென்னை மரச் சோலையிலே சிட்டுப் போல போன’ அவளோடு வாழ்ந்த உல்லாச நினைவுகள்.
சுஜாதாவின் கதைகளுக்கு ஜெயராஜின் ஓவியங்களில் வந்த மெல்லிய பெண்கள்… கற்பனைப் பெண்களுக்குக் கூட கனவுகளைக் கலைக்கத் தெரியும் என நிருபித்தவர்கள்.
சஞ்சிகை ஒன்றில் நெதர்லாந்தின் டியூலிப் விழாவின் அலங்கார ஊர்தியில் உட்கார்ந்திருந்த பொன்னிறத் தலையழகி… என் பாடப் புத்தகங்களில் கனநாளாய் ஒளித்து விளையாடியவள்.
தென்னாபிரிக்கா, ஹொங்கொங், பின்லாந்து, ஜேர்மனி என்று எல்லாம் இருந்து காதல் புரிந்த பேனா நண்பிகள்… தன் காதலன் தன்னைக் கவனிக்காதது பற்றி என்னிடம் சொல்லி ஆறுதல் தேடிய ஹொங்கொங் பெண், அகல சகலமாய் இருந்தாலும், தன் பழைய காதலைச் சொல்லி, என் காதலை ஏற்றுக் கொண்ட பின்னிஷ்காரி… இன்று எப்படி இருப்பீர்களோ?
செம்பாட்டுப் புழுதி ஊரிலிருந்து பட்டணத்திற்குப் படிக்கப் போன காலத்தில், பெண்களின் பாடசாலை பஸ்களில் கடக்கும் போது, திரும்பிப் பார்த்தே என்னை நேரம் தவறாமல் தரிசனம் பெற வரவைத்தவர்களே,
எங்கள் பஸ் போகும் வழிகளில் பஸ்ஸிற்காய் காத்திருந்து, மார்போடணைத்த புத்தகங்கள் நானாக இருக்கக் கூடாதா என்று ஏங்க வைத்தவர்களே,
பின்னாளில் சைக்கிளில் நெஞ்சு நோக பஸ்ஸைத் துரத்தி, திருமுக தரிசனத்திற்கும், கடைக்கண் பார்வைக்குமாய் அலைய வைத்தவர்களே,
பள்ளிக்கூடம் முடிந்து, பாடசாலை பஸ்ஸில் ஏறாமல், உன்னைப் பார்ப்பதற்காக, உன் பாடசாலை பஸ் வரும் வழியில் உன்னைக் காண ஓடி வர வைத்தவளே, உன் சிரிப்பு இன்றும் என் கண்ணுக்குள்!
என் நீண்ட காலக் கனவுக் கன்னி நீ!
உனக்காய் எழுதி ஒளித்து வைத்த காதல் கவிதையை என் அண்ணன் கண்டு விசாரிக்க, அதெல்லாம் சும்மா கவிதை என்று சுத்தி, கடைசியில் மற்ற அண்ணன் என் புத்தகங்களிற்கிடையில் கண்டு கனடாவுக்கு அனுப்பி, அந்தக் காதல் கவிதை தாயகத்தில் பிரசுரமான கதை உனக்குத் தெரிந்திருக்குமோ?
படித்து முடித்து, வேலை வெட்டி இல்லாக் காலங்களில் பஸ்ஸில் வரும் நண்பர்களோடு விட்ட ஜோக்குகளின் ரசிகைகளே,
நான் வராத நாட்களில் எங்கே அந்த அண்ணையைக் காணேலை என்று அவர்களின் காது படக் கேட்டு அவர்களைப் பொறாமைப்பட வைத்தவர்களே,
தட்டச்சு வகுப்பில் தற்செயலாய் திரும்பிப் பார்த்த கண்கள் சந்திக்கப் போய், காதலாகிக் கசிந்த பெண்ணே, எட்டாம் வகுப்புப் பெண்ணான உனக்கு எப்படி என் மீது காதல் வந்தது? என்னைப் போலவே, நீயும் குடிசை வாசிதான். இருந்தாலும் என் குடிசையில் உன்னைக் கோப்பெருந்தேவி ஆக்கியிருப்பேன்.
அங்குமிங்குமாய் டியூட்டரிகளில் என்னோடு படித்தவர்கள்… சைக்கிளில் பின்னால் அலைந்து வீடு வரை பாதுகாப்பாய் கொண்டு போய் விட்டவர்கள்.
கண்டதுமே வெட்கிச் சிரித்து சிந்தையைக் குழப்பியவர்கள்… வகுப்பில் ஆசிரியர்களின் கோபத்துக்கு ஆளாகிய என் ஜோக்குகளுக்கு சத்தமாய் சிரித்து குட்டிப் பெருமிதம் கொள்ள வைத்தவர்கள்.
டியூட்டரியில் சேலை உடுத்திய செக்கிரட்டரியாக இருந்து, ‘ஓ! என் யாழ்ப்பாணமே!’யில் கதாபாத்திரமாய் வந்தவள்.
என் மாணவிகள்… பின்நாளில் கல்விநிலையம் ஒன்றில் கற்பித்த போது…
மற்றவர்கள் தலை குனிந்து பாடம் எழுதும்போது, கன்னத்தில் கை வைத்துக் கண்ணிமைக்காத காதல் பார்வையால் சங்கடப்படுத்தியவர்கள்.
அதே கல்விநிறுவனத்தின் மற்ற வகுப்பு மாணவிகள்… நான் கற்பிக்கும்போது அடுத்த வகுப்பில் இருந்து அதே உற்றுநோக்கலால் உதறல் எடுக்க வைத்தவர்கள்.
எங்கோ நின்று ஒரு காலை முன்னே வைத்து, உதடுகளை விரல்களால் உரசிக் கொண்டே, வைத்த விழி வாங்காமல் பார்த்தவளே, உன்னை கூகிளிலும் பேஸ்புக்கிலும் வலை போட்டுத் தேடியும் இன்று வரை என் கண்ணில் படாமல் ஜாலம் காட்டுகிறாய், நீ எனக்கு ஒரு எட்டாப்பழம் தான்… அன்றும் இன்றும்!
எனக்குத் தெரியாமல் என்னைக் காதல் பண்ணிய இரண்டு பேருக்கும்…
எனக்கெப்படித் தெரியும்?
உன் நண்பிகள் தான் போட்டோவைக் காட்டி ‘என்ன சேர், தானா வாறதை விட்டுட்டு நிக்கிறியள்’ என்று ‘சேர், நில்லுங்கோ, கூட்டிக் கொண்டு வாறம்’ என்று போனார்கள். திரும்பி வந்து நீ எங்கோ போய் விட்டதாகச் சொன்னார்கள்.
நல்ல வாத்திக்கு ஏற்ற நல்ல மாணவ மணிகள்!
மற்றவளே, என் விலாசம் கேட்க நீ போன இடம் தவறான இடம். என் அந்த நேரத்துக் காதலியிடம் போய், என் விலாசத்தைக் கேட்ட உன் முட்டாள்தனத்தை என்னென்பேன்?
நீங்கள் இருவரும் யாரென்பதே இன்று வரைக்கும் எனக்குத் தெரியாது. இந்த மூஞ்சியைக் காதலிக்க இரண்டு பேர் இருந்தார்கள் என்பதை இன்று வரைக்கும் பெருமையோடு நினைக்க வைப்பவர்களே, நீ காதலிப்பவளை விட, உன்னைக் காதலிப்பவளை மணந்து கொள் என்று அன்றே நான் படித்திருந்தேன்.
It was my loss.
Perhaps not.
உங்கள் யாருக்குமே இல்லாத துணிச்சல் ஒருத்திக்கு இருந்தது.
வந்தாள். கடிதம் தந்தாள். இதயத்தை வென்றாள்.
எங்கள் காதலைத் தெரிந்தும் ஏன் இப்படித் துரோகம் செய்தாய்? என்று நீங்கள் கண்ணீர் மல்கக் கேட்கக் கூடும்.
‘அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது’ என்ற பயம்?
அல்லது நான் காதலிப்பவளை விட, என்னைக் காதலிப்பவளை…?
அல்லது First come, first serve?
முடிவாகத் தெரியாத வரை, முதல் அடி வைக்காதவன் நான்…
மூக்குடைபட நான் தயாரில்லை.
என் மாணவர்களும், சக ஆசிரியர்களும் என் காதலி மீதான தங்கள் காதலை என்னிடம் கொட்டித் தீர்த்தார்கள்…
அவள் ஏற்கனவே என் காதலியான விடயம் தெரியாமல்!
இந்த விசயம் தெரியா விசுக்கோத்து வில்லன்களுக்கு நடுவில் இந்தக் கதாநாயகனுக்கு வந்த பெருமிதம் யாருக்குத் தெரியும்?
கடைசியில் எல்லாம் முடிந்து இதயம் சுக்குநூறான கதையை, நீங்கள் அருகில் இருந்திருந்தால், உங்கள் மடியில் தலை வைத்து அழுதே சொல்லியிருப்பேன்.
அதற்கு ஆள் கிடைத்தது… எங்கோ தொலைவில்! அதெல்லாம் பெரிய கதை! பத்திரிகையில் வரும் அளவுக்கு!
நீங்கள் சில நேரம் ‘அவர் இப்ப எங்கே?’ என்று என்னைப் போல முகப்புத்தகத்திலும், கூகிளிலும் தேடக் கூடும். ஆனால் உங்களுக்குத் தெரிந்த என் பெயர் உண்மையில் என்னுடையதல்ல, அது கல்விநிலையத்தோர் தாங்களாக நினைத்துக் கொண்டது. அனாவசியமாய் உண்மைப் பெயர் எதற்கு என்று பொய் பெயரிலேயே காதல் பண்ணிய பேர்வழி நான். அம்மாவின் மரண அறிவித்தல் ஈழநாட்டில் வந்து, உண்மை தெரிந்து மாட்டுப்பட்ட போது, அதை வெட்டி அனுப்பி, இந்தக் கூத்து எல்லாம் தன்னை ஏமாற்றவே என்று சண்டை போட்ட காதலிக்கு எப்படி ஆறுதல் சொல்ல முடியும்?
தினசரி பாடசாலை போகும் நேரம் பார்த்து அந்த டியூட்டரி முன்னால் தவறாமல் காத்திருக்க… கவனியாதது போலக் கடந்து போய்… பின்னாளில் ரொறன்ரோவில் சப்வேயில் கண்டவளே, நீ என்னை அடையாளம் கண்டிருக்காமல் இருந்திருக்கக் கூடும். ஆனால் என் முட்டாள்தனம் பற்றி நான் கொண்ட வெட்கம் உனக்குத் தெரிந்திருக்காது.
இங்கே நான் வேலைக்குப் போகும் போதெல்லாம் பஸ்ஸில் வந்த நைஜீரிய மூளைசாலி மாமாவின் மச்சினிகளே, உங்களைக் கணக்கெடுக்காதது போல நான் புத்தகம் படித்துக் கொண்டிருந்தாலும், கண்ணை மூடித் தியானம் போல இருந்திருந்தாலும், உங்களின் ஒவ்வொரு அசைவையும் அவதானித்தது உங்களுக்குத் தெரியாமல் இருக்கக் கூடும். இந்தச் சிறிய ரொறன்ரோவில் உங்களை இன்னொரு தடவை காண முடியாமல் போனது பெரிய மர்மம் தான்.
வேலை முடிந்து வரும் வழியில், காரண காரியமில்லாமல் சிரித்த கரிபியன் கலப்புப் பெண்ணே, என் மலையாளச் சகோதரன் தள்ளி விட, உன்னோடு வந்து பேச்சுக் கொடுத்து… இந்த மூஞ்சியில் வழிகின்ற அசட்டுத்தனம் உனக்கு எப்படித் தான் பிடித்துப் போனதோ?
வேலையிடத்து ஈரானியப் பெண்ணே, தீக்குச்சி உடம்பும், சதா சிகரட்டுமாய், சோடாப்புட்டிக் கண்ணாடியோடு இருந்த உன்னை, என்னோடு சோடி சேர்க்க முயன்ற உன் சக நண்பிகள்… உனக்குச் சரியான பொருத்தமான ஆள் என்று அவர்கள் எனக்குச் சொன்னதைக் கேட்டுச் சிரிப்பதா? நம்புவதா?
எனக்கு ஏற்கனவே காதலி உள்ளாள் என்ற போது, எங்கே, எப்போது கடைசியாய் பார்த்தாய் என்ற கேள்விகளுக்கான பதிலைக் கேட்டு, வினோதமான பிராணியைப் போலப் பார்த்தார்கள்.
‘அதற்கென்ன? இப்போதைக்கு இவள்!’ என்று புத்திமதி சொன்னார்கள்.
உன்னைப் போலவே நானும் கொத்தவரங்காய் உடம்புக்காரன், வளைந்த முதுகு என்று மறுத்ததை நீ எப்படி எடுத்துக் கொண்டாயோ?
I know hell hath no fury like a woman scorned.
மன்னித்துக் கொள். மறுப்பதற்கு வேறு வழி தெரியவில்லை.
இன்னொரு வேலையிடத்தில் காதல் கொண்ட ஸ்பானியப் பெண்ணே, உன் காதல் தோல்விக்கு ஆறுதல் சொல்லப் போக, என் இதயத்தில் இடம் பிடிப்பதற்காய், ‘நான் இந்தியப் பெண்கள்போலத் தான், நன்றாகச் சமைக்கும் குடும்பப் பெண்’ என்றாய். திரைப்படச் சுருள்கள் ஓடும் இருட்டறைகளுக்குள் என் தோள்களில் சாய்ந்திருந்த போதும், என் கைகள் எல்லை மீறியதில்லை. என்னை நம்பிக் காத்திருந்தவர்களுக்கு நான் துரோகம் செய்ய நினைத்ததில்லை. உன் சோகக் கதை ஒரு நாள் கதையாகும்.
என் மாஜிக் கனவுக்கன்னிகளே,
உங்களில் பலருக்கு என்னைத் தெரிந்திருக்காது. இதற்குள் நான் உங்கள் மேல் கொண்ட தீராக் காதலா தெரியப் போகிறது? இந்த secret admirer இன் புனிதமான தெய்வீகக் காதலை நீங்கள் உணராமல் போனாலும், எங்கோ ஒருவன் உங்களை தன் இதயத்தில் வைத்துப் பூஜித்திருக்கிறான் என்பது தெரியட்டும்.
உங்களில் பலரின் பெயரும் எனக்குத் தெரியாது.
உங்களில் பெயர் தெரிந்த சிலரைத் திருட்டுத் தனமாய் முகப்புகத்தில் அவ்வப்போது தேடுவதுண்டு… நட்பு விருப்பு அனுப்பாமலேயே தான்.
என்னவோ ஒரு திருட்டுச் சுகம்!
முகப்புத்தகப் படங்களில் காண்பது உண்மையாக இருந்தால்… உங்கள் குறைவிலா வாழ்வு குறித்து எனக்கு மனம் நிறைவு.
சிலரை இங்கே கண்டேன். உங்களை நான் கண்ட வயதுப் பிள்ளைகளுடன்.
குடும்பமான பின்னால், தோற்றம் பற்றிய கவலையில்லாமல்…
ஊதிப் பெருத்து!
ஆடைகள் பற்றிய கவனமற்று!
பொருத்தமேயில்லாத கணவர்களுடன்!
சிலர் என்னை அடையாளம் காணவேயில்லை.
சிலருடன் கதைத்தும் இருக்கிறேன்.
மற்றவர்களே, உங்கள் வாழ்வு எப்படியோ?
மனம் நிறைந்த மணாளன் கிடைத்து, வாழ்வு நிறைந்திருந்தால்… கிடைத்த அதிஷ்டத்திற்கு நன்றியாயிருங்கள். இப்படி எல்லாருக்கும் கொடுத்து வைப்பதில்லை.
இரவுகளிலும், காலை எழும்போதும், ‘எனக்கேன் இப்படி?’ என்ற தலையணையை நனைக்கும் கேள்வியோடு வாழ்வு இருந்தால்…
ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.
விதி! இயற்கையின் நியதி!
தாரமும் குருவும் தலைவிதி. நான் இரண்டுமானவன்!
வாழ்வும் கூடத் தான்.
மனதால் காதலித்தவர்களையே மணம் செய்ய வேண்டும் என்றிருந்தால்…
ஊரில் அந்தப்புரங்களும் திரௌபதிகளும் தான் நிறைந்திருக்கும்.
எல்லா மனிதர்களும் நினைத்தது நடக்க வேண்டும் என்றால்…
உலகம் இயங்க முடியாது!
என்னைத் திருமணம் செய்திருந்தால் என்ன என்ற எண்ணமும் இப்போது வரக் கூடும்.
தெரிந்து கொள்ளுங்கள்!
எல்லா வாழ்வுகளும்
வெறும் அக்கரைப்பச்சை தான்!
மனித வாழ்வு நம்பிக்கையில்தானே
ஓடிக் கொண்டிருக்கிறது.
நம்பிக்கையை என்றைக்கு இழக்கிறோமோ,
அன்றைக்கே நாங்கள் இறந்து விடுகிறோம்.
நீங்கள் துணிச்சலோடு வாழ்வை வெல்ல என் பிரார்த்தனைகள் என்றும் இருக்கும்.
உங்கள் வாழ்வு செழிக்கட்டும். அன்பு நிறைந்திருக்கட்டும்.
என் வாழ்வு பற்றி உங்களுக்கும் சில நேரம் அறிய ஆவல் இருக்கக் கூடும்.
ஒரே வார்த்தையில்…
I am blessed with love.
வேறு யாருக்கும் இப்படிக் கிடைக்குமா என்று கேட்கிற அளவுக்கு!
என்னுடைய நல்ல மனதுக்கு எனக்கு நல்ல வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்று பலருக்கு கடுப்பேத்தியிருக்கிறேன்.
சிலரிடம் திட்டும் வாங்கியிருக்கிறேன்.
‘அப்ப என்ன எங்களுக்கு நல்ல மனமில்லையோ?’
இப்போது என்னை அடையாளம் கண்டு, என் காதலைத் தெரிந்தால், ‘ஓ, உமக்கு அப்பிடி ஒரு எண்ணமும் இருந்ததோ?’ என்று காதைத் திருகுவீர்களோ? இல்லை, அங்காலும் இங்காலும் பார்த்து விட்டு, கன்னத்தில் அறைந்து, கண்கள் பனிக்க ‘ஏண்டா, அப்ப கேட்டிருக்கலாம் தானே? நான் இப்பிடிச் செத்துக் கொண்டிருந்திருக்க மாட்டேன்’ என்பீர்களோ?
இப்போது குழந்தை, குட்டிகளுடன், சில நேரம் பேரர்களுடன், இருக்கும் நீங்கள்,
எங்களிருந்தாலும் வாழ்க, இதயம் நிறைந்து வாழ்க!
சில வெறும் கனவாய்,
இன்னும் சில
கனிந்து வரும் முன்னே
பிரிந்து போனவையாய்.
உலகை வெல்லும் கனவுகளை
வாழ்வின் கொடூரம் சிதைக்க
விதியின் வலிமையில் சரணடைந்து
நடப்பது நடக்கும்
என்ற என் வாழ்வு.
இன்றும் என்னை
இளமையாய் வைத்திருக்கும்
உங்கள் நினைவுகள்
இன்றும் இளமையாய்
இனிமையாய்!
என் இதயத்தில் குடியிருந்த என் மானசீகக் காதலிகளே…
உங்கள் எல்லோருக்கும் என் காதலர் தின வாழ்த்துக்கள்!
You must be logged in to post a comment Login