வைரவருக்கு வாய்ச்ச நாய் மாதிரி என்று நெருக்கத்தைப் பற்றிய ஒரு பிரயோகம் யாழ்ப்பாணத்தில் உண்டு. வாகனங்கள் சரியாக 'அமையாவிட்டால்' அதனால் ஏற்படும் தலையிடி பற்றி வாகன உரிமையாளர் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். கியூறியஸ்க்கும் வைரவர்களுக்குமான தொடர்பு நாய் வாகன சம்'பந்தம்' இல்லாத ஒரு பூர்வ ஜென்ம பந்தம். வடபகுதியிலேயே கடா வெட்டிப் பலி கொடுக்கும் வைரவர்கள் மூன்று பேர் தான் இருந்தார்கள். ஆனால் நம்ம ஊரில் மூன்று வைரவர்கள் இருந்தார்கள். இதில் வட பகுதியிலேயே வேள்விக்குப் புகழ் பெற்ற ஹீரோ காட்டு வைரவர். மற்றவர் அவரது பிரதித் தலைவரான மடத்தடி வைரவர். பலாலி வீதியின் இரு மருங்கிலும் இருந்து அருள் பாலித்தவர்கள் இவர்கள்.
இதிலெல்லாம் சம்பந்தமேயில்லாமல் இன்னோர் மூலையில், கோப்பாய் றோட் பக்கமாய், தன் பாட்டைப் பார்த்துக் கொண்டு அருள் பாலித்துக் கொண்டிருந்தவர் ஞானவைரவர். குழந்தைகளுக்கு அக்கி வருத்தம் வரும் போதெல்லாம் இவரது கோயில் ஐயரிடம் போய் குழந்தைகளுக்கு முதுகில் ஏதோ கீறி வந்தால் குணமாகும் என்று பலரும் அவரிடம் போய் வருவதுண்டு. கியூறியஸின் அண்ணன் மகனுக்கும் அக்கி வந்து, அண்ணிக்கு வழித்துணையாக கியூறியஸ் போய் வந்த ஞாபகம்.
இவருக்கு ஞானம் பிறந்ததால் தான் உயிர்க் கொலை எதிலும் சம்பந்தப்படாமல் இருந்தாரோ தெரியாது. இவருக்கு ஞானம் இருந்ததோ என்னவோ, கியூறியஸ்க்கு ஞானம் பிறந்ததில் இவருக்கும் பெரும் பங்குண்டு. கியூறியஸ் வீட்டுக்கு சுமார் இரண்டு மைல் தொலைவில் உள்ள இவரது கோயிலுக்கு அருகில் ஒரு வாசிகசாலை உண்டு. நீண்ட காலம் தினசரி நடந்தே போய், குமுதம், விகடனை எழுத்துக் கூட்டிப் படிக்கும் பாணியில் வாசிக்கும் ஆர்வலர்கள் அருகில், அவர்கள் வாசித்து முடிக்கும் வரையில் பொழுதைப் போக்க, காலையிலேயே ஆஜராகும் மலாயன் பென்சனியர்கள், றிட்டையர்ட் கவர்மன்ட் சேர்வன்டுகள், கிளறிக்கல் சேர்வன்டுகள் எல்லாம் வாசித்து முடிந்த பின்னால், அங்கு கவனிப்பாரற்றுக் கிடக்கும் ஆங்கிலப் பத்திரிகைகளை வாசித்துக் கொண்டிருந்தது கியூறியஸ் பரிநிர்வாணம் அடைந்ததற்கான பெரும் காரணங்களில் ஒன்று. கடைசி வரைக்கும் இவர் தாவர பட்சணியாக காலத்தை ஓட்டிக்கிட்டிருந்தார். பிள்ளைகளைப் பிடித்துக் கொண்டு போய் பலியெடுக்காமல், பிள்ளைகளின் நோய் பிணிகளைக் குணமாக்கியதால் கியூறியஸ் இவருக்கு எப்போதும் வீரவணக்கம் செலுத்துவதுண்டு.
மடத்தடி வைரவர் பாவம். பிரதித் தலைவர்... கவனிப்பாரற்று பற்றைகளுக்கு நடுவில் பராமரிப்பில்லாமல் அல்லாடிக் கொண்டிருந்தார். அந்தக் கோயிலும் பற்றைகளும் அம்புலிமாமாவில் வரும் பாழடைந்த கோவிலில் உள்ள புதையல் கதைகளை நினைவூட்டியதால், தான் வளர்ந்த காலத்தில் புதைபொருள் ஆராய்ச்சி செய்து புதையலைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று இளவல் கியூறியஸ் அப்போது திட்டம் தீட்டியிருந்தாலும், பின்னால் வெளிநாட்டில் அதை விட அதிகமாய் அள்ளலாம் என்ற நினைப்பில் அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்டது இன்னொரு கதை.
பணத்தை வைத்துக் கொண்டு ஊரைக் கெடுக்கும் இந்தக் காலம் போலில்லாது, யாரோ தனவந்தர் தொலைதூர வழிப்போக்கர்களுக்காய் எப்போதோ கட்டிய மடமும் கிணறும் தூர்ந்து போய் பற்றைகள் பற்றிக் கிடக்க, அதன் பின்னால் கிடந்து காலத்தைக் கழித்தவர் அவர். எப்போதோ மணியொலி கேட்ட ஞாபகம் தவிர, இவரைப் பக்தர்கள் மொய்த்தது பற்றி எந்த நினைவும் இல்லை. சில நேரம் ஏதோ ஒரு காலத்தில் பாடல் பெற்று ஓகோ என்று வாழ்ந்த பின்னால் ஏதோ காரணங்களுக்காக சதிக் குற்றச்சாட்டில் துரோகியாகி ஓரம் கட்டப்பட்டிருக்கக் கூடும்.
ஹீரோ காட்டு வைரவருக்கு நூற்றுக்கணக்கில் கடா வெட்டும் போது, இவருக்கும் சிம்போலிக்காக ஒரு கோட்டஸி கிடாய் ஒன்று டோக்கனாய் வெட்டப்படும். அதை வைத்தே இவர் ஒரு வருடத்தைக் கழிக்க வேண்டியது தான்.
தன் பெருமையை யாரும் கணக்கெடுக்காத கோபத்திலோ என்னவோ, இரத்தம் குடிக்கும் தன் இயல்பை பூர்த்தி செய்வதற்காக அடிக்கடி மடத்தடியில் நடக்கும் விபத்துக்களுக்கு காரணமாக இவரைக் குற்றம் சாட்டுவதுண்டு. மடத்தடியில் இருந்த அரச அல்லது ஆல மரத்தில் இருந்து இவர் விட்ட சேட்டைகளால் விபத்துக்கள் நடக்கும்;. குழந்தையைச் சைக்கிளில் ஏற்றி வந்த தந்தை ஒருவருக்குக் கார் அடித்து வேலி ஓரமாய் ரத்தம் சிந்த கிடந்ததை சின்ன வயதுக் கியூறியஸ் கண்டிருக்கிறான். அப்புறமாய் குஞ்சப்பு ஒருவரின் மகள் டபிள் டெக்கர் பஸ்ஸின் கீழ் அகப்பட்டு சைலன்சர் எரித்த விடயமும் கியூறியஸின் சிறுவயது காலத்தில் நினைவில் நின்றவையில் ஒன்று.
இந்த சேட்டைகளுக்கு, மடத்தடிக்கு அப்பால் பள்ளமான பகுதியில் இருந்து வரும் வாகனங்களுக்கு மேட்டில் நிற்பவர்கள் பற்றி தெரிய முடியாததால் விபத்துக்கள் நடந்திருக்கலாம் என்ற பகுத்தறிவு வாதத்தை விட, வைரவ சுவாமியின் திருக் கைங்கர்யம் பற்றிய பயம் முக்கியமானதாயிருந்தது.
நிலாக்கால இரவுகளில் அப்பாவுடன் கதைக்க வரும் பக்கத்து வீட்டு கிழவனும் கிழவியும் சொல்லும் 'பேய்க்கதைகளைக்' கேட்டு இரவுகளில் கிழுவம்வேலிகளில் சிறுநீர் கழிக்கப் போகும் போதும் கண்ணை மூடிக் கொண்டே கியூறியஸ் போவதுண்டு. அந்தக் கிழவி தான் 'குமர்ப் பிள்ளையாக' இருந்த காலத்தில் ஒரு நாள் இரவு, மித்திரனில் வரும் ஜி.நேசன் கதை மாதிரி, மூன்று நாய்கள் காட்டு வைரவர் கோயிலில் இருந்து மடத்தடி வைரவரிடம் போனதைத் தான் கண்ட கதையை அடிக்கடி சொல்லிப் பயமுறுத்துவதுண்டு. அந்த மூன்று நாய்களும் ஓரம் கட்டப்பட்ட பிரதித் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்த தேசியத் தலைவரை அழைத்துச் சென்றனவா என்பதும், கிழவிகள் எல்லாரும் சொல்லும் கதைகள் எல்லாம் அவர்கள் 'குமர்ப்பிள்ளையாய்' இருந்த காலத்தில் மட்டும் நடந்ததாய் இருக்கின்றன என்பதுமான மர்மங்கள் கியூறியஸ்க்கு இன்று வரைக்கும் புரிந்ததேயில்லை.
நம்ம ஹீரோ காட்டு வைரவர் தான் கியூறியஸின் மகா தோஸ்து. மூன்றாம் வகுப்புப் பள்ளிக்கூடம் முடிந்த பின்னால், புளியங்காய் எறியச் செல்லும் நண்பர்களின் பின்னால் கியூறியஸும் இழுபட்டுச் செல்வதுண்டு. குறி பார்த்துக் கல்லெறியும் சூரர்களின் பின்னால் ஓடுவதற்கு வசதியாக நின்றபடியே, தன் மீது சுமத்தப்பட்ட புளியம்பழம் பொறுக்கும் கடமையை கியூறியஸ் குண்டு வீச்சுகளுக்குத் தப்பி முன்னேறி காயமடைந்த சக போராளியை மீட்டு வரும் போராளி போல, கல் வீச்சுகளுக்கு இடையில் பாய்ந்து சென்று செவ்வனே நிறைவேற்றுவதுண்டு. புளியம்பழம் தின்று நாசி அரித்து எரிந்து, வெள்ளைப் பூசாரி பொன்னம்பலத்தின் விரட்டல்களுக்கு தப்பி ஓடி வந்தால், பள்ளிக்கூடம் முடிந்து நேரடியாக வீட்டுக்கு வராததற்கு அடியும் பேச்சும் விழும். கோயிலில் கறுப்புப் பூசாரி மாணிக்கத்திற்கும் பங்குண்டு. அவர் புளியங்காய் திருடர்கள் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.
கியூறியஸ் வாழ்ந்த அப்பாவின் வீடும், சகோதரர்களின் வீடும் கோயிலின் இருபுறமும் இருந்ததால் கிட்டத்தட்ட தினசரி குறுக்குப் பாதையால் வைரவரைத் தரிசித்தே செல்ல வேண்டிய நிலை.
அந்தக் கோயிலைக் கடந்து போகும் போதெல்லாம் கருவறையின் உச்சியில் கொடும்பல்லோடும் வாளோடும் கோரப் பார்வை பார்த்த சூரர்களின் சிலைகளைக் கண்டு கியூறியஸ்க்கு மகா பயம். இதனால், தன் அக்கா சொல்லித் தந்தபடி, உச்சி வெயில் நேரங்களில் தனியாகப் போகும்போது செபமாலை சொல்லிக் கொண்டே வேகமாய் கடப்பது பழக்கம்.
மடப்பள்ளியில் கமகம வாசனையுடன் வைரவருக்கு படைக்க எண்ணெயில் பொரியும் வடையும் பொங்கலும் சுண்டி இழுத்தாலும், வைரவரும் கியூறியஸ் உடன் அந்த பொங்கல், வடைகளைப் பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருக்கவில்லை. சைவக் கோயில் சாப்பாடு சாப்பிட்டால் பேய் பிடிக்கும் என்ற கியூறியஸின் பயம் மட்டுமல்ல, கியூறியஸின் சாதிசனம் கோயில் வாசலில் நின்றே தரிசனம் செய்ததும் அதற்கு ஒரு காரணம்.
இந்தப் பூசாரிமாரின் பேரர்கள் எல்லாம் கியூறியஸ் வீட்டுக்குப் பக்கத்தில் தோட்டம் செய்து கொண்டிருந்ததால், அவர்களின் அன்புக்குப் பாத்திரமானவனாக கியூறியஸ் வளர்ந்தான். வாத்தியாராக இருந்த கியூறியஸின் அப்பாவுடன் வந்து கதைக்கும் அவர்கள் எங்கள் வீட்டில் ஏன் தேத்தண்ணீர் குடிப்பதில்லை என்ற கேள்விக்கு அப்போது சரியான பதில் கிடைத்ததேயில்லை. எங்கள் வீடுகளில் எல்லாம் அவர்கள் ஏன் 'வாய் நனைப்பதில்லை' என்ற மர்மம் துலங்க நியாயமான காலம் பிடித்தது. ஆனாலும் அவர்கள் சுட்டிப் பையன் கியூறியஸ் மீது வைத்த அன்பு களங்கமில்லாததாகவே இருந்தது.
இந்த வைரவர் அங்கே எப்படி வந்து சேர்ந்தார் என்பது தான் சுவையான கதை. கியூறியஸின் அப்பா சொன்ன வரலாற்றுப்படி, இந்தப் பூசாரிமார்களின் பேரன் முத்தர் வன்னியில் இருந்து வண்டிலில் வைக்கோல் கட்டிக் கொண்டு வந்த போது அதில் டிக்கட் இல்லாமல் ஜோய் ரைடில் தொத்திக் கொண்டு வந்து சேர்ந்தவர் தான் இந்த வைரவர். டச்சுக்காரன் காலத்தில் இருந்தே ஆனையிறவில் இருக்கும் இராணுவ முகாமை எப்படிக் கடந்து வந்தார் என்பதற்கு, இவர் முற்பிறவியில் வல்வெட்டித்துறைக் கனக்ஷன் எதையாவது கொண்டிருந்தது காரணமாயிருக்கலாம்.
வந்த அவரும், பேசாமல் வரும் வழியில் ஏதாவது சுடலையில் அசைலம் அடிச்சமா? செக்கன்ட் ஷோ படம் பார்த்த பின்னால், சுடலையைக் கடக்கும் போது விசில் அடித்தபடியே தாண்டும் மாவீரர்களுடன் தாச்சி விளையாடினமா? என்றில்லாமல், பழக்க தோசக் கோளாறில் பூசாரி வீட்டுப் பெண்டிரின் துடக்குச் சேலைகளுடன் சேட்டை விட்டதாலோ என்னவோ, அவரை யாரோ மந்திரவாதிகளைப் பிடித்து, அறைந்து சிறைப்பிடித்த இடத்தில் தான் இந்த கோயில் எழுந்ததாம். வைரவரை அறைந்தது என்ற பதம் ஏதோ யேசுநாதரைச் சிலுவையில் அறைந்தது போன்றது தான் என்றே கியூறியஸ் எக்கச்சக்கமான காலமாய் நம்பிக் கொண்டிருந்தான். அவரும் கோடாலியால் அறையப்பட்டார் என்பது இப்போது கொஞ்ச நாளைக்கு முன்னால் தான் ஓடி வெளிச்சது. என்ன செய்ய? கியூறியஸ் ஒரு டியூப் லைட்.
வன்னிப் பக்கமாய் அவலமாய் இறந்து ஆவியாய் அலைந்த வைரவர் நம்ம ஊரில் கோயில் கொண்ட வரலாறு இப்படியாகத் தான்..!
எங்கோ இருந்த பூசாரி, சூழவர நம்ம சாதி சனம் இருக்கும் பகுதியில் கொண்டு வந்து அறைந்ததற்கு காரணம் உண்டு. வர்ணாசிரம தர்மம் மனிதர்களுக்கு மட்டுமானதன்று, தெய்வங்களுக்குமானது. சிவன், முருகன், பிள்ளையார், அம்பாள் என்பவர்கள் உயர்சாதியினருக்கு அருள் பாலிக்கவும், வைரவர், காளி, பூதராயர், அண்ணமார் எனப்படும் அனுமார், முனி போன்றவர்கள் பஞ்சமர்களின் குறைகேள் அதிகாரிகளாயும் என, உயர் சாதியினருக்குக் கடவுளரும் எளிய சாதியினருக்குப் பேய்களுமாய் பள்ளி கொண்டெழுந்து அருளியிருந்தனர். பேய்கள் இரவுகளில் சேட்டை விடுவதாலும் துன்பங்களுக்கு மூலமாயும் இருந்ததால், அவர்களின் இன்னல்களை கீழோர் அனுபவிக்கவும் மேலோர் தப்பிக்கவுமாய் இந்தப் பேய்கள் அடிமைக்குடி வாழ்விடங்களில் அறையப்பட்டு ஆலயங்கள் எழுப்பப்பட்டன. உயர்சாதி இடங்களில் உயிர்ப்பலி செய்வதும் முடிந்த பின்னால் காய்ந்த ரத்தம் நாறுவதும் ஆகாது என்பதால் இந்தக் கோயில்கள் அடிமைக்குடிகளின் பிரதேசங்களில் எழுந்து கொண்டாலும் அங்கு வெட்டப்படும் கடாக்களை, அவை பஞ்சமர் வீட்டுக் கிழுவங் குழை சாப்பிட்டு வளர்ந்தாலும், சாப்பிடுவதில் சாதிபேதம் இருந்ததில்லை.
மாவிட்டபுரம் கோயில் காரருடன் கோபித்துக் கொண்டு, யாழ் மெட்டல் அலுமினியம் திருநாவுக்கரசு கட்டிய வைரவர் கோயிலில் தென்னிந்திய சிற்பாசாரியர்கள் கடமையில் ஈடுபட்டிருந்த போது, யாழ்ப்பாணத்திற்கு உல்லாசப் பயணம் வந்த தன் அக்காவின் ஜேர்மன் பேனா நண்பியைக் கூட்டிக் கொண்டு, கியூறியஸ் போய் பார்த்திருக்கிறான். நாயின் சிலை ஒன்றின் வாய்க்குள் ஒரு கல்லை வெளியில் வராமல் செதுக்கிய சிற்பிக்கு ஒரு சபாஷ். பாஸ்போட் இல்லாமல் அகதியாகவோ, கள்ளத் தோணியாகவோ வைரவன் என்ற பெயரில் வராமல், இந்தியாவில் இருந்து இமிகிரண்டாகவே இந்த வைரவநாதன் வந்ததால் அவருக்கு ஏகப்பட்ட சலுகைகள். ஆலயப் பிரவேசத்திற்கு ஆர்ப்பாட்டம் கண்ட மாவிட்டபுரத்துக் கோயிலோடு கோபித்து வைரவருக்கு திருத்தலம் எழுப்பினாலும், மேலோருக்கு அருள் புரிவதால் அங்கு வேள்வி நடந்ததில்லை.
இப்படியாக, கொடியேத்தம் முதல் தேர், தீர்த்தம், பூங்காவனம் போன்ற பெரும் எடுப்பிலான திருவிழாக் கோலம் எதுவும் இல்லாமல் நம்ம காட்டு வைரவ சுவாமி உள்வீதி உலாவோடும், ஆட்டு இரத்தத்தோடும் திருப்திப்பட்டுக் கொண்டிருந்தார்.
நம் ஊரில் ஞானப்பிரகாசம் அடிகளார் கத்தோலிக்க மதத்தைக் கொண்டு வந்த போது, கியூறியஸின் முன்னோர் 'சுவாமி, நாங்கள் பேய்களுக்குப் படைத்து அலுத்து விட்டோம்' என்று முறையிட்டதால், கத்தோலிக்க மதத்தில் பேய்களை விரட்டிய இறைவனின் தூதர்களின் தலைவனான புனித மைக்கேலை கோயில் கொண்டெழச் செய்திருந்தார். இந்த மைக்கேலும் இலங்கையில் மூன்றிடங்களில் உள்ளதால், இந்த மூன்று பேரும் மூன்று வைரவர்களைக் கவர் பண்ணுவதற்காக நியமிக்கப்பட்டிருக்கக் கூடும்.
இந்த வைரவ சுவாமியின் வேள்வியும் யேசு இறந்த பெரிய வெள்ளியும் ஒரே சீசனில் தான் வரும். ஒரு சனிக்கிழமை, பின்னால் எட்டாம் மடை என்ற பெயரில் அடுத்த சனியுமாக இரண்டு நாட்களில் கடாக்கள் வெட்டப்படும்.
முதல் வேள்விக்கடா பூசாரி வீட்டில் இதற்காகவே வளர்க்கப்பட்டு, மாலை சூடி மேளதாளத்தோடு, பலி கொடுக்கப்படும் மாவீரன் போல, சகல மரியாதைகளுடனும் அதிகாலை நான்கு மணிக்கு அழைத்து வரப்படும். நாசக பானை எனப்படும் இந்த ஊர்வலத்தை கியூறியஸின் தூக்கத்தைக் கலைத்து தட்டியெழுப்பி அப்பா காட்டிய போதும், தூக்கக் கலக்கத்தில் தூரமாய் தெரிந்த பெட்ரோமாக்ஸ் வெளிச்சம் தவிர வேறெதுவும் தெரிந்ததில்லை.
கோயில் முன்னால் சூழ வரக் கயிறு கட்டிய இடத்தில், அந்தக் காலத்து கியூறியஸ் சைஸ் கத்திகளுடன், நவாலியில் இருந்து வந்தவர்கள் ஆட்டுக்கு இரண்டு ரூபா சம்பளத்தோடு எந்தச் சலனமும் இல்லாமல் கடமையுணர்வோடு வெட்டிக் கொண்டே இருப்பார்கள். ஒருவர் தலையை இழுத்துப் பிடிக்க, இன்னொருவர் பின்னால் இழுத்துப் பிடிக்க, ஒரே வெட்டு, துண்டு இரண்டு.
ஒருநாள் கியூறியஸ் விடுப்புப் பார்த்துக் கொண்டிருக்க இரண்டு வெட்டுகளுக்குத் தப்பிய ஆடு மூன்றாம் வெட்டில் இரத்தம் சிதற விழுந்தது. தலையை வெட்டிய கத்தி நிலத்தில் கொத்தி தோன்றும் கிடங்கை வைத்துப் பெருமையாக 'எத்தனை ஆடு விழுந்தது' என்று பெரிசுகள் இரண்டு பேசிக் கொண்டிருந்ததை காதை எறிந்ததில் கேட்க முடிந்தது.
தலையும் ஆடும் மனிதர்களுக்குப் போக, வைரவர் இரத்தத்தைக் குடிப்பார். அவர் இரவு நாய் வேசத்தில் வந்து குடித்ததைக் கண்ட யாரோ பற்றி யாரோ சொல்வதைக் கேட்டாலும், நேரில் கண்டவர்களை கியூறியஸ் கண்டதில்லை.
வைரவரின் சூரிய தரிசனத்தை மறைத்து நேர் முன்னால் இன்னொரு கோயில். அது காளி கோயிலாக இருக்க வேண்டும். வைரவ சகவாசத்தால் காளியாச்சியும் இரத்தம் குடிக்க வேண்டிய நிர்ப்பந்தம். ஆத்தாவுக்கும் நாசகபானை புறம்பாக வந்து சேரும். ஆத்தாவுக்கும் சில ஆடுகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டாலும், ஆத்தாவின் ஸ்பெஷாலிட்டி கோழி இரத்தம் தான். பிறப்பாலேயே குள்ளமான ஒருவர் உட்கார்ந்திருந்தபடியே, 25 சதமும் கோழித்தலையுமான சம்பளத்தில் கோழி வெட்டிக் கொண்டிருப்பார். தலையைக் கூட, அதிகளவு சதை கிடக்கத் தக்கதாக வைத்தே வெட்டுவார். கடைசிக் கிடாய்க்கு மோதகம் தீத்தி தொண்டைக்குள் இருக்கும்போதே வெட்டுவது போல, கடைசிக் கோழி வெட்டும் போது, அந்த ரத்தத்தில் புக்கையை கலந்து நாலா பக்கமும் வீசி எறிந்ததை கியூறியஸ் அருகில் இருந்தே தன் மீது ரத்தம் படாமல் சுத்தி வந்து பார்த்திருக்கிறான்.
வேள்வியை விட, கோயில் திருவிழா தான் கியூறியஸ்க்கு பிடித்தமானது. கியூறியஸ் உடன் மூணாம் வகுப்பில் வைரவரின் புளியங்காய் சுவடிய நண்பர்கள் உடனடியாகவே வைரவரை வைத்துப் பிழைக்கப் பழகி விட்டார்கள். போர் ஏசஸ், திறீ றோசஸ், பிரிஸ்டல் சிகரட் பெட்டிகளை கடைகளில் பொறுக்கி, அந்த மட்டைகளை சதுரமாய் வெட்டி, ஒரே இலக்கத்தை இரண்டு மட்டைகளில் எழுதி, நாலு கிழுவந்தடி, இரண்டு தென்னோலை, (அதுவும் வைரவர் கிணற்றடியான் தென்னை), ஒரு கயிறு கொண்டு சிறு இடத்தைக் கிளெய்ம் பண்ணிக் கொள்வார்கள். பெரிய மட்டை ஒன்றில், அதற்கும் பிரிஸ்டல் போர்ட் என்று தான் பெயர், 'சைக்கிள் பாதுகாப்பு' என்று எழுதி வைத்து, நாலாதிசையிலிருந்தும் சைக்கிளில் வரும் மெய்யடியார்களின் பைசிக்கிள்களுக்கு பாதுகாப்பு வழங்குவார்கள். 25 சதத்திற்கு மட்டைகளை வாங்கியவர்கள் ஒன்றை சைக்கிள் ஹாண்டிலில் பிரேக் கம்பியில் கொழுவி மற்றதை பொக்கட்டுக்குள் வைத்து வைரவ ஆராதனைக்கு போய் விடுவார்கள்.
கியூறியஸ்க்கும் இப்படி பணம் சம்பாதிக்கும் ஆசை இருந்தாலும், 'உனக்கெதுக்கடா இந்த வயதில் பண ஆசை' என்று வீட்டில் திட்டியதால், இற்றை வரைக்கும் அந்த பண ஆசை மனதில் வந்ததேயில்லை. இந்த நண்பர்களில் பலர் கியூறியஸ் பட்டணத்திற்கு பஸ்ஸில் படிக்கப் போன காலத்தில் படிப்புகளை விட்டு மேசன் வேலைக்கும் கரை வேலைக்கும் என பட்டணமும் தொலைதூரமுமாய் போய் பணம் சம்பாதித்து சிறுவயதிலேயே குடியும் குடித்தனமுமாய் இருந்தார்கள்.
வேள்வி என்றாலே முதல் நாள் இரவே பெட்டிக் கடை வியாபாரிகளும் ஐஸ் கிரீம் சைக்கிள்களும் சுகாதார முறையின்றி தயாரிக்கப்பட்டு இலையான் மொய்க்கும் உணவு விற்பனையாளர்களும் என பெரும் கூட்டம் வந்திறங்கும். பிளாஸ்டிக் கை வளையல்களும் அலுமினியப் பாத்திரங்களும் வாங்க, பளீர் என ஒளி வீசும் புளோரசன்ட் குருத்துப்பச்சை, சர்பத் கலர்களில் சேலைகளும் பொருத்தமில்லாத சட்டைகளும் போட்ட கிராமத்துப் பெண்கள் வந்து சேர்வார்கள். போகும்போது, பனை ஓலைப் பெட்டிகள், சமையல் பாத்திரங்கள் என வாங்கி தலையில் வைத்தபடி, ஐஸ்கிரீமோடு மூக்குச்சளியையும் நக்கிக் கொண்டே காரணமில்லாமல் அழுது கொண்டு இழுபட்டுக் கொண்டே போகும் குழந்தைகளோடு போய்ச் சேர்வார்கள். மறுபுறம் பொங்க வந்தவர்கள் ஓலைப் பெட்டிகளில் புக்கையும் வடையுமாய் படைத்துக் கொண்டிருப்பார்கள்.
சிறுவர்கள் எல்லாம் நிச்சயமாய் அம்மம்மாக் குழல் வாங்கி பீ பீ என்று ஊதிக் காதைக் கிழித்துக் கொண்டிருப்பார்கள். வேறு சிறிசுகள் விசில்கள் வாங்கித் துன்பம் கொடுக்கும். பலூன் ஊதிக் கொண்டிருந்த குழந்தைகள் வெடித்த பலூன்களுக்காய் ஆங்காங்கே தாய்மார்களின் சேலைகளை இழுத்தபடியே மூக்கைச் சிந்திக் கொண்டிருப்பார்கள். சில கிறுக்கர்கள் இதற்காகவே ஊசி வைத்து சிறுவர்களின் பலூன்களை இரகசியமாக குத்துவார்கள். கடலைக்காரிகள், சதா பெட்ரோமாக்ஸ் உடன் வலம் வரும் கரம் சுண்டல், பகோடா கண்ணாடி வண்டில்காரர்கள், ஐஸ்கிரீம் வான்காரர்கள் என்று ஒரே திருவிழா மயம் தான்.
கியூறியஸ்க்கு பிடித்தது அந்த லொத்தர் காரர்கள் தான். மணிக்கூடு மாதிரி கீறிய ஒரு மட்டையின் நடுவில் மணிக்கம்பி முள் மாதிரி ஒன்றை வைத்து 12 டிக்கட் பத்து சதத்திற்கு விற்று முள் சுற்றி வந்து நிற்கும் இலக்கத்திற்கு அதிட்டப் பரிசு கிடைக்கும். ஒவ்வொரு வேள்வியின் போதும் தவறாமல் ஒரு அலுமினியக் கிண்ணச்சட்டியும் கிளாசும் கியூறியஸ்க்கு அதிட்டமாக விழும். தொடர்ந்து ஒரு மாதத்திற்கு அந்த வெற்றிக்கிண்ணங்களில் தான் ஆட்டுப் பால் குடிக்க வேண்டும், சோறு சாப்பிட வேண்டும் என்று முரண்டு பிடிக்கும் கியூறியஸ் அந்த கிண்ணச்சட்டிகள் கொண்டு தான் தோட்டக்கிணறுகளில் நீர் இறைக்கும்போது அள்ளிக் குளிப்பான். தன் அதிட்ட வீரப் பிரதாபங்களை தன் சகோதரர்களுக்கு அள்ளி விடும்போது அவர்களுக்கு சீ என்று போனாலும், கடைக்குட்டியின் சந்தோசத்தில் அவர்கள் என்றும் மண் போட்டதில்லை.
எங்கள் கோயில் சுவாமியாரின் அன்புக்குரியவனாக கியூறியஸ் இருந்ததால், 'பாதர், நான் கிடா வெட்டுக்குப் போறன்' என்று சொன்னால், ஒரு ஐம்பது சதம் தருவார். கியூறியஸின் அதிட்டத்திற்கு அவர் தந்த ஆசீர்வாதமும் காரணமாயிருக்கலாம்.
கியூறியஸ் தவறாமல் வாங்கும் இன்னொரு பொருள்... திரைப்படச் சுருள்களில் உள்ள படங்களைத் தனியாக வெட்டி, ஒரு பத்தோ பதினைந்தோ ஒரு பையில் போட்டு விற்பார்கள். இந்தப் படங்களை உள்ளே போட்டு சூரிய வெளிச்சத்தில் பார்க்க, ஒரு கடதாசிப் பெட்டிப் புரஜக்டர் 25 சதம். கேவா கலரில் வந்த வாத்தியாரின் நாடோடி மன்னன் உட்பட்ட பல்வேறு படங்களின் துண்டுகள் இப்படியாக கியூறியஸின் கலக்சனில் இருந்தன. கியூறியஸின் அண்ணன்மார் தேங்காய் எண்ணெயில் சூடாக்கி ஓடும் வள்ளம் ஒன்று ஒன்றே கால் ரூபாய்க்கு வாங்குவார்கள்.
மற்றும்படி, நிச்சயமாக ஐஸ்கிரீம், ஒரு சரை கடலை, சர்பத் என்ற உண்டிகளுடன் அன்றைய பணம் ஒரு மாதிரிக் கரையும்.
இந்த திருவிழாக் களேபரங்களிற்குள் ஆட்டு வியாபாரம் மறுபுறத்தில். பூசாரியின் உருளைக் கிழங்குத் தோட்டத்துக்குள் பயிர்களுக்கு நடுவில் இலையான் மொய்க்க கிடக்கும் தலை போன ஆடுகள் குறித்த பேரம் ஆங்காங்கே நடைபெறும்;. உடம்பிலிருந்து விடுபட்ட தலையுடன் ஆடுகள் தேசியத் தலைவர் மாதிரியே கண்ணைத் திறந்து பார்த்துக் கொண்டே பயமுறுத்தும். சாதாரண ஆடுகள் இருநூறு ரூபாய் போகும். பெரும் ஆடுகள் 1200 ரூபா வரை போகும். டீல் முடிந்ததும், தலையில்லா ஆடுகள் சைக்கிள் கரியரிலும், ஏ போர்ட்டி கார் டிக்கிகளிலும் தொங்கி நாலாதிசைக்கும் பயணமாகும்.
மதியம் ஆனதும் சனக் கூட்டம் கலைய, வைரவரை நாயும் தேடாது. கவனிப்பாரற்று தனித்துப் போயிருப்பார். அதன் பின்னால் தான் கியூறியஸ்க்கு திருவிழா. கியூறியஸின் அம்மாவின் சகோதரர்கள் எல்லாருமே இந்துக்களாய் இருந்தால், அவர்கள் வீடுகளில் நடைபெறும் ஆட்டிறைச்சி விருந்துபசாரத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். நீண்ட தூரத்தில் ஆங்காங்கே இருக்கும் சகலரின் வீடுகளுக்கும் போய் மூக்கு முட்ட முழுங்கி கண்டதும் திண்ட பண்டியனாய் மாலைக் கருக்கலில் கியூறியஸ் வீடு திரும்புவான்.
எதற்கும் அங்கு போவதற்கு முன்னால் கியூறியஸ் ஒரு தடவை வைரவரை விசிட் அடிப்பான். வைரவர் நாய் வேசத்தில் வந்து ரத்தம் குடிக்கிறாரா என்பதைக் காண வேண்டும் என்ற ஆசை. நாய்கள் நிற்கும். ஆனால், அவையெல்லாம் முன்பின் தெரிந்த உள்ளூர் நாய்கள்.
இயற்கையின் மர்மங்களில் ஒன்றாய், ஒவ்வொரு வேள்வி தினத்தன்றும் மாலையில் மழை ஒன்று பெய்யும். கடும் சித்திரை வெயிலில் பெய்யும் இந்த மழைக்கு, 'ரத்தம் கழுவும் மழை' என்று பெயர். அப்படி வானம் பொய்த்தால், ரத்த நாற்றத்தோடு வைரவர் அல்லாட வேண்டியது தான்.
அப்புறமாய் கொஞ்சம் வயது ஏற, வைரவருக்கு சவால் விட வேண்டி, இரவுகளில் எல்லாம் வேறு பாதைகள் இருக்கத் தக்கதாய் வைரவ கோவில் பகுதியாலேயே கியூறியஸ் சைக்கிளில் போவான். கும்மிருட்டு, ஒற்றையடிப் பாதை. பகலில் போன பாதை நினைப்பில் போனால் சரி, இல்லாவிட்டால், விழுந்து கல்லடி பட வேண்டி ஏற்படும். சகோதரர் வீடுகளுக்குப் போய் நள்ளிரவில் வீடு திரும்பும் போதெல்லாம் வைரவ தரிசனம் வேண்டிப் போனாலும், வைரவர் ஒரு நாளும் கண்ணில் பட்டதேயில்லை.
ஒரேயொரு நாள் மட்டும், சொன்னால் நம்புகிறீர்களோ இல்லையோ, இரவு சைக்கிளில் போய்க் கொண்டிருக்க... நாய் ஒன்று காலோடு ஓடி வருகிறது. வழமையில் ஊர் நாய்கள் சைக்கிளைக் கண்டால் குரைக்கும். போன பாதையும் அருகில் வீடுகள் இல்லாத பகுதி. அந்த நாய் எப்படி வந்தது, எப்படி போனது என்ற மர்மம் இன்று வரைக்கும் தெரியாது. ஆனாலும், கியூறியஸ் ஒரு பேய்வெட்டி என்ற விசயம் வைரவருக்கு நன்றாகவே தெரிந்திருக்க வேண்டும். இதனால், கியூறியஸை தடுத்தாட் கொண்டு திருச்சோதனை செய்யும் எண்ணம் அவருக்கு வரவில்லை.
இப்படியாக, தன்னுடைய பக்தர்கள் தந்த ரத்தத்தைக் குடித்துக் கொண்டு, ஜாலியாக பங்கருக்குள்;;... சே.. கர்ப்பக்கிருகத்திற்குள் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்த வைரவருக்கும் வந்தது சோதனை... அதற்கும் காரணம் அமிர்தலிங்கம்!
'பட்டினி கிடந்து பசியாமல் மெலிந்த' தோற்றத்தில் இன்று வரையும் இருக்கும் காசியை மட்டக்களப்பில் ராஜதுரையோடு அமிர்தலிங்கம் தேர்தலில் போட்டியிட வைக்கப் போக, கோபம் கொண்ட ராஜதுரை ஜே.ஆர் அரசாங்கத்தில் சேர்ந்து, இந்து கலாசார அமைச்சரானார். இந்து கலாசார அமைச்சர் மிருகங்கள் மீதான அன்போ அல்லது யாழ்ப்பாணிகள் மீதான கோபமோ, மிருக பலித் தடைச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார். அதன்படி வேள்விகள் தடை செய்யப்பட்டன. இருந்தாலும், 'தெய்வம் கோபிக்கும்' என்று அதிகாலையிலேயே பொலிஸ் வரமுன்னால் சிம்போலிக்காக மடத்தடி வைரவர் மாதிரி காட்டு வைரவருக்கும் ஒரு ஆடு சட்டவிரோதமாய் வெட்டப்பட்டது. பின்னால் அதுவும் நின்று போனது. இப்படியாக தேசியத் தலைவர் பிரதித் தலைவரின் பரிதாப நிலைக்கு வந்து சேர்ந்தார்.
இப்போது வைரவருக்கு பெரிய பிரச்சனை. இரத்தம் குடிக்க முடியவில்லை. இதை விட அன்னிய மண்ணில் மூன்று தலைமுறைச் சிறை வாசம். எப்படியாவது வன்னிக்குத் திரும்பிப் போக வேண்டும். கோயில் முன்னால் ஓடிய ரத்தம் தமிழர்கள் வாழும் இடம் எல்லாம் ஓட வேண்டும், அதுவும் வெறும் சட்டத்திற்குப் பயந்து தனக்குப் பலி கொடுக்க மறந்த தமிழர்களின் ரத்தமாக இருக்க வேண்டும் என்று பழிவாங்கும் எண்ணம் கொண்டார். முக்கியமாக அதற்குச் சூத்திரதாரியான அமிர்தலிங்கத்தின் உயிரையும் எடுக்க வேண்டும்.
அதற்கு யாரையாவது ஆட்கொள்ள வேண்டும். பயந்தவனைத் தானே பேய் பிடிக்கும். தரிசனம் கிடைக்காதா என்று ராப்பகலாய் அலைந்த கியூறியஸ் மேல் நுழையாததற்கு காரணம், கியூறியஸின் துணிச்சல் மட்டுமல்ல! கியூறியஸின் அம்மா மட்டக்களப்பு மாந்திரிகரைப் பிடித்து எழுதிய குறிப்புப்படி கியூறியஸ் தேவர் கணத்தில் பிறந்தவன். அஞ்சா நெஞ்சன் அவனைப் பிடிக்க முடியாது.
யாராவது பயந்தாங் கொள்ளி... அத்துடன் உயிர்ப்பலி எடுப்பதில் தயக்கம் காட்டாதவனாய் இருக்க வேண்டும். சின்ன வயதிலேயே கவண் கொண்டு அணிலும் பறவைகளும் என உயிர்ப்பலி எடுத்த உயிருக்குப் பயந்த பயந்தாங்கொள்ளி ஒன்றை வைரவர் ஆட்கொண்டார். அதற்கு நம்ம ஊர் வைரவர் தான் மறைந்து வாழ்ந்த மற்ற இரண்டு பங்கர்களில் ஒன்றான கோணாவத்தையைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
வைரவர் புது அவதாரம் எடுத்து சூரிய தேவன் ஆனார்.
மனிதர்கள் ஆடுகளைப் பலி கொடுத்த காலம் போய், சூரிய தேவன் பின்னால், செம்மறிகள் படை திரண்டு மனிதர்களைப் பலி கொடுக்கத் தொடங்கின. இரத்த தாகம் மேலிட, தன் பிறப்பிடமான வன்னிக்கு வைரவர் திரும்பினார். அங்கே பாதுகாப்பாக இருந்து கொண்டு, தமிழர்களை ஆயிரக்கணக்கில் பலி வாங்கினார். தேவைப்பட்ட போதெல்லாம் 'சிங்கள தெய்யோக்களுக்கு' பலியும் கொடுத்தார். மறக்காமல் அமிர்தலிங்கத்தைப் பழி வாங்கினார். ஆனால், ராஜதுரை மலேசியாவுக்கு மாறியதால் தப்பித்துக் கொண்டார்.
தனக்கு ஆடு பலியிட மறந்த கடைசித் தமிழன் இருக்கும்வரை தன் இரத்தம் குடிக்கும் வெறியை அவர் மறக்கவில்லை.
மனிதப் பிறவியெடுத்து மனிதர்களைப் பலி கொண்டு இரத்தம் குடித்த வைரவர் கடைசியில், ஆங்கிலப் பட ரத்தம் குடிக்கும் ட்ராகுலாக்களை உச்சியில் சிலுவையால் ஆப்பு அறைந்து கொல்வது போல, உச்சியில் கோடாலியால் அறையப்பட்டு, அவலமாய் இறந்து போனார். அவலமாய் இறந்ததால் வைரவர் இப்போது ஆவியாய் அலைந்து கொண்டிருப்பார். இப்போது முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் பக்கம் மனிதர்கள் இல்லாமல் நாய்கள் மட்டுமே இருப்பதால், வைரவருக்கு போக்குவரத்துக்குப் பிரச்சனை எதுவும் இல்லை. பாதுகாப்புப் பிரச்சனை தான் அதிகம். தங்களுடைய எக்ஸ்பயரி டேற் முடிவதற்கு முன்னால் தங்களை ஆத்தலைய விட்டவனைத் தேடி ஆயிரக்கணக்கான ஆவிகள் வன்னிக்காட்டில் வலை வீசிக் கொண்டிருக்கின்றன. உயிரோடு இருக்கும்போதே மக்களுக்குப் பயந்து பங்கரில் வாழ்ந்தவர், ஆவியாகினாலும் நிம்மதியில்லை. ஆவிகளுக்குப் பயந்த ஆவியாய் எத்தனை நாள் மறைந்து வாழ்வது? யாழ்ப்பாணத்திற்கு எஸ்கேப் ஆக வேண்டும். ஆனால் வைரவருக்கு வந்து வாய்ச்ச நாய்கள் எல்லாம் கட்டாக்காலியாகி விசர் பிடித்து வெளிநாடுகளில் தங்களுக்குள் கடிபடுகின்றன. 'இதுக்குள்ளாலை வெளியிலை எடுத்து விடு' என்று கே.பிக்கு போன் பண்ணுவதற்கும் சட்டலைட் போன் கோத்தபாயாவிடம்.
ஒரேயொரு வழி... தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்கள் வீடுகளுக்குத் திரும்பி வயல் செய்ய வெளிக்கிட்டால்.. அங்கிருந்து யாராவது வண்டிலில் வைக்கோல் கட்டிக் கொண்டு வந்தால், பழையபடி ஏறி வந்து வந்து சேர்வது தான். இப்படியே நாட்டுக்குள் இவர் புகுந்து கொண்டால் மீண்டும் தன் பழைய திருவிளையாடல்களைக் காட்டி, ரத்தக்களரியை ஏற்படுத்தக் கூடும். எனவே, இதற்குள் இவரை முள்ளிவாய்;க்காலில் வைத்தே அமுக்கி, அறைந்து திருத்தலம் கொண்டெழுந்தருளச் செய்தால், அவர் நந்திக்கடலில் தீர்த்தமாடி வணங்காண் உபயகாரர்கள் அனுக்கிரகத்தில் பேசாமல் தன் பாட்டைப் பார்த்துக் கொண்டிருப்பார். நாடும் குருதிப்புனல் ஓடாமல் தப்பிக்கும்.
எனவே, ஆவியாய் அலையும் வைரவப் பெருமானை மட்டக்களப்பு மந்திரியைப் பிடித்து.. சே.. மந்தீரீகரைப் பிடித்து அறைந்து, கோயில் எழுப்ப யாராவது தர்ம கர்த்தாக்கள் முன்வருவார்களாயின், பூசாரியாரின் பூட்டப்பிள்ளைகளை (கறுப்பா? வெள்ளையா?) தேடிப் பிடித்து பூசை செய்ய அனுப்பவும், வெளிநாட்டுத் தலைநகர் வீதிகளில் வேள்விக்கு வளத்த கடாக்கள் மாதிரி கட்டாக்காலிகளாய் அலையும் புலன் பெயர்ந்த செம்மறிகளை ஆயிரக்கணக்கில் பலி கொடுப்பதற்காய் கட்டி வணங்காமண்ணில் மாலை போட்டு மேள தாளத்துடன் நாசகபானை அனுப்பவும் கியூறியஸ் தயார்!
(உயிர்மெய் 2009 மலருக்காக எழுதப்பட்டது.)
You must be logged in to post a comment Login