நானும் அர்விந் அப்பாத்துரையும் உமாகாந்தனைக் கடைசியாகப் பார்க்க வில்லியர் லூபெல் செல்லும் ரயிலுள் இருந்தபோது, எனக்கு உமாவின் மணிக்கவிதைகள் நினைவுக்கு வந்தன. நான் ‘தினபதி” ‘சிந்தாமணி”யுள் எழுத்துத் தொழிலாளியாக இருந்தபோது, இலக்கியத்திலேயே அதிக கரிசனை காட்டினேன். 80 களில் இலங்கைத் தமிழ் இலக்கியத்துள் புதுக்கவிதை தேசியப் பத்திரிகைகளால் மிகவும் நன்றாக வரவேற்கப்பட்டது. தேசியப் பத்திரிகைகளின் இலக்கியத் தேர்வுகள் மீது எனக்கு ஓர் பேரபிப்பிராயம் இல்லாதபோதும், அபூர்வமாக நல்ல படைப்புகளும் அதற்குள் நுழைந்துள்ளன எனக் கருதுகின்றேன். சிந்தாமணி தொடக்கிய மணிக் கவிதைப் பகுதிக்குள் நான் குப்பைகளையும் குண்டுமணிகளையும் கண்டதுண்டு. காதல் இல்லாமல் இவர்களிற்கு கவிதைகள் எழுத வராதா எனும் கேள்வியோடு கவிதை விமர்சன உலகில் அப்போது இருந்தபோதும் உமாகாந்தனின் காதல் கவிதைகளை ரசித்தேன். இவரது கவிதைகள் தினபதி, சிந்தாமணி ஆசிரியபீடங்களால் ரசிக்கப்பட்டன. எளிமையும் ஆர்ப்பாட்டமெதுவுமில்லாத காதல் மொழி இவரது எழுத்தின் காந்தம் எனலாம். சிந்தாமணி ஆசிரியர் இராஜ அரியரத்தினமும் (முன்னாள் ‘ஈழகேசரி” ஆசிரியர்) இவரது காதல் கவிதைகளின் பரம ரசிகர். ‘யார் இந்த உமாகாந்தன்?” என திரு இராஜ அரியரத்தினத்திடம் கேட்டபோது, ‘அவர் பிரான்ஸிலிருந்து எமக்கு எழுதுகின்றார்.” என்றதுடன் அவர் கவிதைகளின் எளிமை தனக்குப் பிடித்துள்ளதுமென்றார். ஆம்! நான் சிந்தாமணியில்தான் உமாவை அறிந்தேன்.
நான் இலங்கையில் பயங்கரவாத நிலைகளைக் கண்டு பாரிஸ் வந்தபோது எழுத்து உலகத்திற்கு அப்பாற்பட்ட இன்னோர் உலகிலிருந்தேன். அதாவது விளம்பரப் பத்திரிகைகளை மூட்டையாக முதுகில் காவி, பனி நிலங்களுக்குள் கால்களைப் புதைத்து, தபால் பெட்டிகளிற்குள் போடும் வேலை. என்னோடு தொழில் செய்தவர்களில் ஒருவரான ஓவியர் தேவதாஸனின் (இப்போது இவர் அரசியலில்…) மூலமாகவே எனக்கு உமாவின் தொடர்பு ஏற்பட்டது. ஈழமக்கள் செய்தித் தொடர்பு நிறுவனம் நடத்திய “தமிழ் முரசு” சஞ்சிகையின் ஆசிரியராக உமா இருந்தார். இது EPRLF வின் செய்திப்பிரிவான EPIC இனால் வெளியிடப்பட்டது.
இந்த சஞ்சிகையில் நான் பல வருடங்களாக எழுதியவேளைகளில் இவரோடு நிறையப் பழக முடிந்தது. உமாகாந்தனின் கையெழுத்தால் தயாரிக்கப்பட்டதே “தமிழ் முரசு”. புகலிட இலக்கியத்தினதும் அரசியலினதும் காத்திரமான முதலாவது பதிவாக இதனை நாம் இன்றும் கருதலாம். உமாவின் எழுத்துக் கரிசனையை நான் இந்தக் காலங்களில் அவரிற்கு அருகிலிருந்து தரிசித்துள்ளேன். இவரது பேச்சுத் திறனை மேடைகளிலும் எபிக் (EPIC) கூட்டங்களிலும் கண்டுள்ளேன். புகலிடத்தில் உமாகாந்தன் காட்டிய அரசியல் அக்கறை தீவிரமானது. பல நெருக்கடிகளிற்கு மத்தியிலும் தனது அரசியல் கொள்கையில் தெளிவான பார்வையைக் கடைப்பிடித்தார். இவரிடம் இருந்தது இடதுசாரி மனம். இலங்கையின் கொடூரமான போர் சூழலை எரிக்க எது வழி? ஆம்! இவரது வழிகள் இடதுக் கொள்கையிலேயே விளைந்தன.
இவர் கவிஞர், அரசியல்வாதி மட்டுமல்லர். நடிகரும்கூட. EPIC சில ஆண்டுகள் நடத்திய “சங்கே முழங்கு” எனும் கலாசார, அரசியல் நிகழ்வில் எனது நாடகங்கள் தோன்றின. “படகு” என்பது ஓர் நாடகத்தின் தலைப்பு. இது புகலிட வாழ்வைப் பல நிறங்களில் காட்ட எழுதப்பட்டது. இந்த நாடகத்தில் ஓர் பிரெஞ்சுப் பெண்ணும், நாடக நடிகையான Evelyne Levasseur ஐ நடிக்க வைத்தேன். புகலிடத்தில், எமது தமிழ் நாடகத்தில் ஓர் பிரெஞ்சுப் பெண் நடிகையாக வருதல் ஓர் முதல் விஷயம். இந்த நாடகத்தில் நடிக்கமுடியுமா என உமாவைக் கேட்டபோது, மென்மையான சிரிப்போடு “ஆம்” என்றதுடன், எனது நாடகப் போக்கு வித்தியாசமானது என்பதையும் என்னிடம் சொன்னார். இவர் நடித்த முதலும் கடைசியுமான நாடகமாக “படகு” இருக்கலாம். மிகவும் அற்புதமான நடிப்பு. வந்தோரை ரசிக்க வைத்தது. இந்த நாடகத்தின் நடிகர்கள் யாவரும் EPIC இன் அங்கத்துவர்களே. இவர்களது கலை ஆற்றல்கள் செழுமையானவை. EPIC நிறுவனத்தினது கலை, அரசியல், செய்தித்துவப் போக்குகளில் முக்கியமானவர் உமாகாந்தன்.
பாரிஸ் 75008 இல் உள்ள Hôtel Le Vignon தான் இவரது தொழிலிடம். நான் அடிக்கடி இவரை விஞ்னோனில் சந்தித்ததுண்டு. நான் எப்போது போனாலும் வாசித்துக்கொண்டே இருப்பார். இவரது வாசிப்பு வேட்கை என்னைப் பிரமிக்க வைத்தது. இந்த வேளையில்தான் நான் கனடா “தாயகம்” இதழுக்கு எழுதிக் கொண்டிருந்தேன். உமாவின் வாசிப்பு உலக அரசியலை நோக்கியது. “தாயகம் பத்திரிகைக்கு நீங்கள் எழுதுவது நல்லது. உங்களால் முடியுமா?” எனக் கேட்டேன். அவரது தொழிலுக்கு நீக்கல் வராது இருக்கவேண்டும் என்பது என் எண்ணம். “ஆம்” என்றார். அவர் ஹோட்டலில் இருந்து எழுதிய “உலக விமர்சனம்” பக்கங்களைத் தேடுவது என் போக்கு, இது இனிய போக்குமாகும். பின் இவைகளை Pedro Vianna வினது “Documentation Réfugiés” இதழை வெளியிடும் நிறுவனத்தில் FAX மூலமாக “தாயகம்” இதழுக்கு அனுப்பி வைப்பேன்.
உமாவின் “உலக விமர்சனங்கள்” ஹோட்டலில், தனது வேலை நேரத்துடன் எழுதப்பட்டவையே. “இன்று உங்களுக்கு நேரம் இல்லாது விட்டால், நாளை நான் வந்து நான் கட்டுரையை எடுப்பேன்” என நான் சொல்லும்போது “சில நிமிடங்களில் முடிந்து விடும்” என்பார். அவருடன் கழித்த ஹோட்டல் தினங்கள் அவருக்கு எழுத்து என்பது சேவை என்பதைக் காட்டியது. பல தடவைகளில் நான் சென்றபோது கட்டுரை முடியாமல் இருக்கும், அவர் தொழிலால். மிகவும் அன்புடன் எனக்குத் “தண்ணீர்” தந்துவிட்டு, தொழிலையும் பார்த்து, கட்டுரையை முடித்துத் தந்துவிடுவார்.
கனடா தாயகம் பத்திரிகையில் இவர் வாராவாரம் எழுதிய ‘உலக விமர்சனம்” பகுதி புகலிட வாசகர்களின் கவனத்தை ஈர்த்தது. சிக்கலான அரசியல் கேள்விகளைத் தெளிவான மொழியில் தமிழ் வாசிப்பிற்கு இவர் வழங்கினார். இவரது எழுத்துக்குள் ஒவ்வொரு உலக நாடுகளும் பேசப்பட்டன. உமாவின் விமர்சனப் பார்வை ஓர் இடதுசாரிப்போக்கை எப்போதுமே கொண்டிருந்தது. இதனை இவரின் அரசியல் நேர்மையெனலாம்.
தனது கடைசித் தினங்களில் உமாவின் உருவம் உமாவின் உருவமாக இருக்கவில்லை என்பதை மிகவும் சோகத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இவரது இருப்பின் போக்குகள் மீளவும் எமது நினைவுக்கு ஆக்கப்படவேண்டும். இவரது உழைப்பின் மீதான காணிக்கைக்காக.
umakanthan-thayagam-novembre-19-2004
You must be logged in to post a comment Login