Recent Comments

    அறிவுபூர்வமாய் சிந்திப்போம்!

    justice

    ஏடு இட்டோர் இயல்

    தற்போதைய சிறுமியின் கொலை விவகாரம் குறித்து எமது தமிழினம் கொண்டிருக்கும் சிந்தனைப் போக்கும் அதனால் எழுந்த நடவடிக்கைகளும் உணர்வுபூர்வமாக இருப்பதாகவே உள்ளது. இதை அரசியலாக்கும் சந்தர்ப்பவாதம் முதல் அந்த மரணம் நடந்த விதம் பற்றி வக்கிர உணர்வுள்ளோருக்கு தீனி போடும் ஈனச் செயல்கள் வரைக்கும் எமது சமூகத்தின் பதில் செயற்பாடுகள் உள்ளன.

    இதைக் கொஞ்சம் நிதானமாக அறிவுபூர்வமாக அணுகுவது எங்கள் இனம் சரியான வழியில் செல்ல உதவலாம்.

    இந்தக் கொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைத்தல், குற்றவாளிகள் தண்டிக்கப்படுதல், இவ்வாறான நிகழ்வுகள் இனிமேலும் எங்கள் சமூகத்தில் நிகழாதிருப்பதை உறுதி செய்தல் என்பவற்றுக்கும் அப்பால், மற்றச் சமூகங்கள் போலன்றி, யுத்தத்தில் சிக்குண்டு அதிலிருந்து மீண்டு, மீண்டும் ஒரு நாகரிக சமூகமாக எழுச்சி பெறுவதற்கு, எமது சமூகம் கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்களும் இதில் உள்ளன.

    உணர்வுபூர்வமான முறையில், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கொலை செய்ய வேண்டும் என்ற உணர்வில் பலர் உள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது. போதைப் பொருட் கடத்தலில் மரண தண்டனை பெற்றவரைக் காப்பாற்றத் துடித்த பலரும், தற்போது போதைப் பொருள் சம்பந்தப்பட்ட இந்த கொடூரச் சம்பவத்திற்கு பொறுப்பானவர்களைக் கொல்லத் தயாராக இருப்பது தான் இங்கேயுள்ள முரண். தமிழர்களாகிய எங்களின் நீதி உலக நீதியாக, பொதுவானதாக இல்லாமல், சுயநலம் சார்ந்ததாய் வசதிக்கு ஏற்ப மாறுகின்ற ஒன்றாக இருப்பதற்கு இதை விட உதாரணம் வேண்டியதில்லை.

    சம்பந்தப்பட்டவர்களைத் தாக்குவதற்கு பலர் முயன்றதாகவும், பொலிசாரின் பாதுகாப்பில் இவர்கள் கொண்டு செல்லப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. அதையும் விட, முக்கிய சந்தேக நபர் ஒருவரை, தற்போதைய அரசில் அங்கம் வகிக்கும் விஜயகலா மகேஸ்வரனும், சட்டத்தரணி ஒருவரும் தப்பி ஓட உதவியதாகவும் செய்திகள் வருகின்றன.

    தண்டிக்கப்பட வேண்டிய ஈனர்கள் ஊடகவிலாளர்களே!

    இந்தக் கொலையை வைத்து, வக்கிர உணர்வுகளுக்குத் தீனி போட்டு பிழைப்பு நடத்தும் ஈன வியாபாரிகளின் செயற்பாடு இன்னமும் முடியவில்லை. அந்த வீடியோக்கள் இணையத் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன என்ற செய்தி மூலம் இவர்கள் சொல்ல வருவது என்ன? போய் தேடிப் பாருங்கள் அல்லது எங்களுக்குக் கிடைத்ததும் முதல் வேலையாக அதை உங்களுக்கு காண்பிப்போம் என்பது தான்.

    எங்களைப் பொறுத்தவரை, குற்றம் இழைத்தவர்களை விட, தண்டிக்கப்பட்ட வேண்டிய ஈனர்கள் இவர்கள் தான். இவர்களைத் தான் எங்கள் சமூகம் ஊடகவியலாளர்கள் என்று கொண்டாடுகிறது என்றால், தவறு எங்கள் சமூகத்தில் தான் இருக்கிறது. இது தற்போது இணையத் தளங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை, யாழ்ப்பாணத்திலிருந்து வரும் பத்திரிகைகளிலும் இதே கதை தான் என்பது தான் இங்கே அதிர்ச்சியைத் தருகிறது.

    புலிகளின் கையில் போராட்டம் போன பின்னால், ஊடக அறம் என்பது கொலை செய்யப்பட்டு விட்டது. உண்மையான செய்திகளை வெளியிட்டு, சமூகம் செல்ல வேண்டிய திசையை, கருத்துப் பரிமாற்றங்கள் மூலம் காண்பிக்க வேண்டிய ஊடகங்கள், வெறும் பொய்களைப் பிரசாரம் செய்யவும், ஊடக தர்மத்திற்கு அப்பாற்பட்ட படங்களையும் விடயங்களையும் பிரசுரித்து, போராட்டத்தின் ‘புனிதம்’ பற்றியும், எதிரி பற்றிய கொடூரமான சித்தரிப்பையும், தமிழ் மக்கள் மனதில் திணிக்கும் கருவிகளாகவே மாறி விட்டிருந்தன. திணிக்கப்பட்ட அந்த ஊடக ‘நெறிமுறையைக்’ கடந்தவர்கள் கொல்லப்பட்டதனால் ஏற்பட்ட பயமும், புலிகளின் ‘ஊடக நெறிமுறை’ பிழைப்பதற்கான வழியாகவும் வந்த பின்னால், தமிழ் சமூகத்தில் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் கோமாளித்தனமான, ஆனால் அவற்றால் பயன் பெறுபவர்களால் சிலாகிக்கப்படுவதான ஒன்றாகவே இன்று வந்து முடிந்திருக்கிறது.

    இவ்வாறான ஒரு ஊடகப் பாரம்பரியத்தையும், அந்த பாரம்பரியத்தைக் கைக் கொண்டு சமூகத்தை சிந்திக்க விடாமல் இருட்டில் வைத்திருப்பதையும், அதன் மூலம் வக்கிரங்களை விற்பனை செய்யவும் வழி வகுக்கும் ஊடகவியலாளர்களையும் சமூகமாக தொடர்ந்தும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்பதை எங்கள் தமிழினம் முடிவு செய்ய வேண்டும்.

    இந்த ஈனப்பிறவிகள் அடையாளம் காணப்பட்டு, எமது சமூகம் அதற்கு தக்க பதில் அளிக்க வேண்டும். இந்த ஊடகங்களின் செய்திகளைப் பார்வையிடுவதை நிறுத்தினாலோ, அதில் விளம்பரம் செய்வோருக்கு அழுத்தம் கொடுப்பதாலோ மட்டுமே இவர்களை சமூகத்திலிருந்து அப்புறப்படுத்தலாம். ஏனெனில், இவர்கள் ஊடகம் என்ற போர்வையில் பிணத்திலும் பணம் சம்பாதிக்கவே இயங்குகிறார்கள். அதற்காக எந்த வக்கிரங்களையும் ஆபாசங்களையும் பரபரப்பூட்டும் தலையங்கங்களுடனும், உசுப்பேத்தும் ‘கவித்துவமான’ தலைப்புகளுடனும், விற்பனை செய்யவே முயற்சிக்கிறார்கள். அதைப் பார்ப்போரின் எண்ணிக்கையை வைத்துக் கொண்டு விளம்பரம் சேர்ப்பதன் மூலமே பணம் சம்பாதிக்கிறார்கள். அந்த வருமானத்திற்கான வழியை நிறுத்துவதன் மூலமே இந்தச் சமூக விரோதிகளை அப்புறப்படுத்த முடியும்.

    இவ்வாறான ஒரு ஊடகப் பாரம்பரியத்தையும், அந்த பாரம்பரியத்தைக் கைக் கொண்டு சமூகத்தை சிந்திக்க விடாமல் இருட்டில் வைத்திருப்பதையும், அதன் மூலம் வக்கிரங்களை விற்பனை செய்யவும் வழி வகுக்கும் ஊடகவியலாளர்களையும் சமூகமாக தொடர்ந்தும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்பதை எங்கள் தமிழினம் முடிவு செய்ய வேண்டும்.

    அரசியலாக்கப்படும் சமூகப் பிரச்சனை

    அடுத்தது, இதை அரசியலாக்குவதில் எந்தத் தீர்வும் வந்து விடப் போவதில்லை. அரசியல் கட்சிகள் இந்தக் கொந்தளிப்பையும் அனுதாபத்தையும் தங்களுக்குப் பயன்படுத்துவதை ஒரு சமூகமாக அனுமதிப்போமாயின், இழந்த அந்த உயிருக்குச் செய்யும் அவமரியாதையாகும். இந்தப் பிரச்சனைக்குள் அரசியல்வாதிகளை அனுமதிக்காமல், இதை ஒரு சமூகப் பிரச்சனையாக எதிர்கொள்வது, எங்கள் சமூகம் தீர்வுகளைக் கண்டடைய வழி செய்யும்.

    இந்தக் குற்றத்திற்கு எதிராக தற்போது நடைபெறும் ஆர்ப்பாட்டங்களும், கோஷங்களும் இதன் அடிப்படைக் காரணங்களை அடையாளம் காட்ட மாட்டா. வெறுமனே மரத்தைப் பார்த்துக் குலைக்கும் நாயைப் போல, இந்த கொடூரத்திற்கு எதிராக பாடசாலைப் பகிஷ்கரிப்போ, கடையடைப்போ பயன் தராது. தமிழ் நாட்டுப் போராட்டங்களின் பஸ், புகையிரத எரிப்புப் போல, டயர்களை எரிப்பதும், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துவதும், எங்கள் சமூகத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும்.

    பாடசாலைப் பிள்ளைகள், பெண்கள் உட்பட மக்கள் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்தி, பதாகைகள், கோஷங்களுடன் கூச்சல் போடுவது, இந்த கொடூரத்தின் பின்னாலுள்ள சமூகப் புற்றுநோய்களை அடையாளம் கண்டு தீர்வு காண விடாமல் நீர்த்துப் போகவே செய்ய உதவும். கொஞ்ச நாளில் இதை மறந்து, அடுத்த ஒரு பிரச்சனை வரும் வரைக்கும் தன்தன் வேலையைப் பார்க்கப் போகவே இது வழி செய்யும்.

    வெறுமனே மரத்தைப் பார்த்துக் குலைக்கும் நாயைப் போல, இந்த கொடூரத்திற்கு எதிராக பாடசாலைப் பகிஷ்கரிப்போ, கடையடைப்போ பயன் தராது. தமிழ் நாட்டுப் போராட்டங்களின் பஸ், புகையிரத எரிப்புப் போல, டயர்களை எரிப்பதும், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துவதும், எங்கள் சமூகத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும்.

    இதை தனியே ‘பெண்களுக்கு எதிரான வன்முறை’ என்று இதன் தாற்பரியத்தைக் குறுக்குவதும் இதே வழியில் தான் உண்மையான பிரச்சனை எது என்பதை அடையாளம் காண்பதில் இருந்து விலகிச் செல்லவே உதவும். காரணம், இது எங்கள் சமூகத்தில் நடைபெற்றதென்பதால்! பெண்களுக்கு எதிரான உடல் ரீதியான வன்முறை குடும்ப அமைப்புக்குள் நியாயமாக்கப்பட்டு வழமையாக்கப்பட்ட சமூகத்தில், பால் வன்முறை பற்றிய விழிப்புணர்வும், அதற்கெதிரான தீர்வு தேடிய நடவடிக்கைகளும் அவசியமானது தான். ஆனால், அது மட்டும் தான் இந்த கொடூரத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய தனிப் பொருள் அல்ல!

    பிள்ளையைக் காணவில்லை என்று பெற்றோர் முறையிட்ட போது, பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை, எடுத்திருந்தால் பிள்ளையைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று நம்பினால்…
    சட்டம் தன்னுடைய வேலையைச் செய்யாமல், அரசியல் தலையீட்டினால் குற்றவாளிகளைப் பாதுகாத்திருந்தால், தப்ப விட்டிருந்தால்…
    ஏற்கனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டு, சிறை சென்று மீண்டவர்களின் நடமாட்டங்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்கு குந்தகமாக இருந்து, அதை தடுத்து நிறுத்தாமல் இருந்திருந்தால்…
    இந்தப் போராட்டம் பொலிசாரை நோக்கித் திரும்பியிருக்க வேண்டும்.

    இன்று எமது சமூகத்தின் சீரழிவில் எங்கும் நிறைந்திருக்கும் குடிவகை, போதைப் பொருள் பாவனை முக்கிய பங்கு பெறுகிறது. பாடசாலை மாணவர்கள் மட்டத்திலேயே இந்த போதைப் பொருட் பாவனை மலிந்திருக்கும் அளவுக்கு, எமது எதிர்காலத் தலைமுறையைச் சிதைக்கும் இந்தப் போதைப் பொருள் விற்பனை பாடசாலை வாசல்களிலேயே நடைபெறும் அளவுக்கு வந்திருக்கிறது.

    வெளியார்கள் இதை தமிழ்ப் பகுதிகளுக்குள் கொண்டு வந்தாலும், அந்தச் சங்கிலித் தொடரில் தமிழர்கள் இருக்கிறார்கள். இவ்வாறான சமூக விரோதிகளை சுதந்திரமாக போதைப் பொருள் விற்பனை செய்ய விட்டதற்காக பொலிசாரை நோக்கி ஆர்ப்பாட்டம் செய்திருக்க வேண்டும். அந்த விற்பனையைச் செய்யும் சமூக விரோதிகளை அடையாளம் காட்டி, பாடசாலை வாசல்களில் ஆர்ப்பாட்டம் செய்திருக்க வேண்டும்.

    குறிப்பிட்ட தனியார்கள் செய்த குற்றச் செயலுக்கு எதிராகச் செய்யப்படும் வெறும் அடையாள ஆர்ப்பாட்டங்கள் சமூகம் தான் கற்றுக் கொள்ள வேண்டியவைகளை அடையாளம் காணாமல், வெறும் காட்டுக் கூச்சல் போட்டு கோபத்தை தணிக்க மட்டுமே உதவும்.

    சட்டம் தன் கடமையைச் செய்ய விடுவோம்!

    கடைசியாக, இந்தக் கொலை சம்பந்தமாக பலரும் கொலை வெறியில் உள்ளார்கள்.

    சிவில் சமூகம் சட்டம், ஒழுங்கு முறைகளின் அடிப்படையிலானது. அதை உரியவர்கள் தவிர்ந்த, மற்றையவர்கள் கையில் எடுத்துக் கொள்ள முடியாது. அதை அனுமதிக்கவும் கூடாது. ஒவ்வொருவரும் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, தீர்ப்பு வழங்க முற்பட்டால், ஒரு சமூகமாக நாங்கள் இயங்க முடியாது.

    எமது இனம் சட்டம், ஒழுங்குகள் என்பன, ஒரு நாகரிக சமூகத்தின் செயற்பாட்டுக்கு அவசியம் என்பதை மனதில் கொள்ளாது, அது எமது இனத்தை அடக்குவதற்கு அடக்குமுறையாளர்களால் அநீதியாக திணிக்கப்பட்டவை என்ற போர்வையில் அதை மீறுவதை புத்திசாலித்தனமாகவே நினைக்கும் இனம்.

    சட்டத்தையும் ஒழுங்கையும் கடைப்பிடிப்பதை விட, அதை மீறுவதில் எமக்குள்ள அக்கறை வேறு யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலை தொடர முடியாது.

    இழப்பின் துயரமும், குற்றத்தின் கொடூரமும் உணர்வுபூர்வமாக கொந்தளிக்கச் செய்தாலும், அது நீதியின் கண்களை மறைக்க விடக் கூடாது. இதில் குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்படுவதும், சமூகம் அவர்களுக்கு கொடுக்கும் அவமானமும், இனிமேலும் இவ்வாறான செயற்பாடுகள் நடப்பதை தடுக்க உதவும்.

    துப்பாக்கி ஏந்தியவர்கள் தங்களை சட்டத்தின் காவலர்களாகவும், நீதிபதிகளாகவும் நினைத்து மரண தண்டனை கொடுப்பதை, இனத்தின் விடுதலைக்கான வழியாக ஏற்றுக் கொண்டவர்கள் நாங்கள். மரண தண்டனை வழங்கப்படும் போதும், தண்டனைக்குள்ளானவர்கள் தங்களை நியாயப்படுத்த வழி முறை செய்யப்பட்டதா என்ற கேள்வி கேட்காமல், தண்டனை வழங்கியயோர் சரியாகத் தான் செய்திருப்பார்கள் என்று நியாயப்படுத்தும் அளவுக்கு, தனி மனிதர்களிடம் அந்த அதிகாரம் போனதால் தான் எமது இனம் இன்றைய சீரழிவு நிலையில் இருக்கிறது.

    இந்தக் கொலை சட்டப்படி ஒரு கிரிமினல் குற்றம். ஆனால், நீதி விசாரணைகள் நடந்து நீதிபதி முடிவு செய்யும் வரைக்கும், இவர்கள் சந்தேக நபர்களே. அவர்களுக்கு தங்களை நியாயப்படுத்த வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, அவர்கள் குற்றம் செய்தவர்கள் தான் என்று சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். அதற்கு நாங்கள் வழி விடப் பழக வேண்டும். இவை அடிப்படை மனித உரிமைகள்.

    உணர்வு பூர்வமாக, நாங்கள் அவர்களுக்கு யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் உதவி வழங்கக் கூடாது என்று கூறலாம். அவர்கள் கொழும்பிலிருந்து கூட சட்டத்தரணிகளைக் கொண்டு வரலாம். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் வழங்கும் உரிமைகளை நாங்கள் மதிக்க வேண்டும்.

    இழப்பின் துயரமும், குற்றத்தின் கொடூரமும் உணர்வுபூர்வமாக கொந்தளிக்கச் செய்தாலும், அது நீதியின் கண்களை மறைக்க விடக் கூடாது. இதில் குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்படுவதும், சமூகம் அவர்களுக்கு கொடுக்கும் அவமானமும், இனிமேலும் இவ்வாறான செயற்பாடுகள் நடப்பதை தடுக்க உதவும்.

    சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்.
    அவ்வாறில்லாமல், நீதி வழங்கப்படாது போனால், அதற்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் நியாயமானவை.

    அதற்காக, புலிகள் யாழ்.இந்துக் கல்லூரி மைதானத்தில் மக்கள் வெள்ளத்தில் முன்னால் நிர்வாணமாக்கி அடித்துக் கொன்றது போல, பகிரங்கமாக இந்தக் குற்றவாளிகளையும் தண்டிக்க முடியாது.

    புலிகளின் Kangaroo Court காட்டு நீதிமன்றத்தை Mob justice கும்பல் நீதிமன்றத்தால் பிரதியீடு செய்வது, சட்டம் ஒழுங்கை மட்டுமல்ல, அடிப்படை மனித உரிமைகளை மதிக்கும் ஒரு நாகரிக சமூகமாக வேண்டிய எங்கள் சமூகத்திற்கு ஆபத்திலேயே முடியும்.

    Save

    Postad



    You must be logged in to post a comment Login