அவன் பாடசாலை பஸ்ஸில் எங்களோடு வருபவன்.
எங்கள் ஊர் எல்லையில் உள்ள கிராமம். இரு கிராமங்களையும் சேர்த்து பட்டினசபை ஆக்கியிருந்தார்களே தவிர, நம் கிராமங்களுக்கும் பட்டினத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
அவன் படித்தது யாழ்.இந்து கல்லூரி.
நான் யாழ்.கத்தோலிக்க கல்லூரி!
என்னை விட ஒரு வகுப்பு குறைந்தவன்.
அவனை எங்களுக்கு பார்த்திபன் என்றே தெரியும்.
பஸ்ஸில் நான் ஏறினால் கலகலப்பாக இருக்கும் என்று நண்பர்கள் நம் வருகைக்காக காத்திருப்பார்கள்.
பலாலி, வசாவிளான், மயிலிட்டி நண்பர்களோடு, அவனது ஊரைச் சேர்ந்த பிரபா, தேவகுமார் எல்லாம் எனது குறும்புக் கதைகளுக்கு சிரிப்பதற்காய் காத்திருப்பார்கள்.
நமது பஸ்ஸில் நான் தமிழ்ப் பட ஹீரோ மாதிரியான கலாட்டாப் பேர்வழி இல்லை.
கூச்ச சுபாவம், ஆனால் நண்பர்களோடு மட்டும் வள வளா!
இந்த லட்சணத்துக்குள் ஏதாவது கசமுசா நடந்து விடும் என்று அஞ்சியோ என்னவோ, பெண்களுக்கு என தனியான பாடசாலை பஸ் இருந்தது.
ஆண்களுக்கான எங்கள் பாடசாலை பஸ்ஸில் பெரும் கலாட்டா பண்ணியது என்றால், அது நம்ம ஈஸ்ட்ஹாம் கவுன்சிலர் சத்தியநேசன் தான். அது தனியான பெருங்கதை.
அப்பாவியான தேவகுமார் வீட்டுக்கு முன்னால் டெலா என்றொரு இயக்கம் தனது இருப்பைக் காட்ட குண்டு வைக்கப் போக, ஏற்கனவே குண்டு வைத்தது தெரிந்தவர்கள் எல்லாம் உயிரைக் காத்துக் கொள்ள ஓடித் தப்ப, தங்களை இராணுவம் ஒன்றும் செய்யாது என்று நம்பிய தந்தை வீட்டில் பிள்ளைகளோடு காத்திருக்க, குண்டு வெடித்த பின்னால், இராணுவம் வீட்டுக்குள் புகுந்து தேவகுமார், தந்தையைச் சுட்டுக் கொன்றது.
தாயும் சகோதரனும் உயிர் தப்பியிருந்தார்கள்.
அப்போது தேவகுமார் யாழ்.பல்கலைக் கழகத்தில் கற்பித்துக் கொண்டிருந்தார்.
இந்த பஸ்ஸில் அவனும் வருவான். அவனது மட்டப் பையன்களுடன் கதைத்ததைத் தவிர, என்னோடு ஒரு நாளும் கதைத்ததில்லை.
பஸ்ஸின் பின் புறத்தில் ஆட்கள் நிற்பதற்கான இடத்தில், நாய்க்குட்டிகள் காருக்குள் இருந்து தலையை நீட்டுவது போல, பின் ஜன்னலைத் திறந்து தலையை நீட்ட முண்டியடிப்பவர்களில் அவனும் ஒருவனாக இருந்தான்.
அவனுடைய தந்தையார் இராசையா வாத்தியார். ஒரு ஸ்கூட்டர் வைத்திருந்தார்.
எனது அப்பு தோட்டம் செய்த இடத்திற்கு அருகில் அவரும் தோட்டம் செய்திருந்தார். அப்பு சேட் போட்டிருந்ததைக் கண்ட ஞாபகம் மிகவும் அரிதானது. வெயிலில் கறுத்த வெறும் உடம்புடன் இடுப்பில் வேட்டியில் புகையிலையைச் சொருகிக் கொண்டு தோட்டம் செய்த அப்பு, தோட்டத்திற்கு அருகில் இருந்த வெறும் தரையில் புடலங்கன்று நாட்டி, பந்தல் போட்டிருந்தார்.
அதிலிருந்து நாலு கவடு தூரத்தில் இராசையா வாத்தியாரும் வேளாண்மை செய்து கொண்டிருந்தார். வாத்தியார் தோட்டத்தில் இறங்கி கொத்தியதையோ, நீர் இறைத்து தண்ணீர் கட்டியதையோ கண்டதில்லை. ஸ்கூட்டரில் வெள்ளை வேட்டியோடு வந்து வரம்பில் கூட கால் வைக்காமல் வெளியோ நின்று இன்ஸ்ட்ரக்சன் வழங்குவதோடு அவரது வெள்ளை வேட்டி வேளாண்மை நடந்து கொண்டிருந்தது.
தோட்ட வேலைக்கு அந்த ஏரியாவில் தோட்ட வேலை செய்த நம்ம இன சனத்தை வேலைக்கு அமர்த்தாமல் வேறு யாரையோ தான் கொண்டு செய்வித்திருந்தார்.
அவரது தோட்டச் செய்கை நீண்ட நாள் நீடித்த ஞாபகம் இல்லை.
மேல் வுகுப்புகளுக்குப் போகப் போக, என்னவோ எனக்கு அவனுடைய பார்வை பிடிக்கவேயில்லை.
யாழ்ப்பாணத் தமிழில் செடில் பார்வை என்று சொல்லும் பார்வை.
நானோ கிறுக்கன்.
சும்மா போடா என்னும் ரகம்.
நட்பு நாடிய சிரிப்புகள் கூட எங்களுக்கு இடையில் இருந்ததில்லை.
பின்னர் அடிக்கடி தனியே சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கிப் போகும் போது கண்டிருக்கிறேன்.
ஊரில் கண்டு பழகாமல் இங்கே வந்து பரிச்சயமாகி, அடிக்கடி உறவினர் வீட்டில் சந்திக்கும் தம்பி ஒருவன் சொல்வான்…
தான் பலாலி வீதியில் சைக்கிளில் போகும் என்னைக் காணும் போதெல்லாம் எனக்கு பின்னால் கொஞ்ச நேரத்தில் அவனும் அதே போல சைக்கிளில் வருவான் என்று!
இப்படியாக இரண்டு பேருக்கும் நகரத்துக்குள் சோலிகள் இருந்தன்.
பல தடவைகளில் எதிரெதிரே சந்தித்தாலும், பரஸ்பரம் கண்டு கொண்டதாகவே காட்டிக் கொள்ளாத சகவாசம்.
பிறகு இயக்கத்தில் பெரும் புள்ளியான பின்னர், செடில் பார்வையின் செறிவு கூடியிருந்தது.
அந்த தம்பி சொன்னான்… ‘அண்ணை அவன் இயக்கத்துக்கு போனது விருப்பத்தில இல்ல. அவனும் அவனுடைய தந்தையின் நண்பரான இன்னொரு ஆசிரியரின் மகனும் மோட்டார் சைக்கிளில் போய்க் கொண்டிருந்த போது, அவன் எங்கோ சைக்கிளை மோதி அந்தப் பையன் இறந்து போனான். அதன் பின்னர் தான் அவன் இயக்கத்துக்கு போனான்’.
இந்தக் கதை முன்பு நான் கேள்விப்பட்டதேயில்லை.
பின்னாளில் யாழ்ப்பாண கல்வி நிலையம் ஒன்றில் ஆங்கிலம் கற்பித்துக் கொண்டிருந்த போது, யாருமில்லாத பகல் நேரங்களில் அங்கே நிற்பதுண்டு. அந்த நேரங்களில் அறிமுகமில்லாத பலர் ஏதோ ‘வகுப்புகளுக்கு’ வருவார்கள். ஆண்களும் பெண்களுமாய்!
அவர்களுக்கு இவன் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தான்.
அப்போது கண்டாலும் அதே செடில் பார்வை! தன்னை ஒரு பெரும்புள்ளி என்ற எண்ணத்தோடு பார்க்கும் அற்ப பார்வை!
இராணுவம் அடிக்கடி தேடுதல்கள் மேற்கொள்ளத் தொடங்கிய போது, ஒரு தடவை இராணுவ வண்டித் தொடர் அந்த பாதையில் திருப்ப, என்னோடு கதைத்துக் கொண்டிருந்த மாணவர்களோடு வேலிப் பொட்டுக்குள்ளால் பாய்ந்தோட வேண்டியிருந்தது.
இதனால், கல்வி நிலையத்தாருக்குச் சொல்லி, ‘நான் தனியே நிற்கும் இடத்தில் இது அனாவசியமான பிரச்சனை’ என்று சொல்ல, அவர்களும் எனக்கு விசயம் தெரிந்ததையிட்டு பயந்தோ என்னவோ, அந்த வகுப்புகளை நிறுத்தி விட்டார்கள்.
இப்படியே இவன் இயக்கத்தின் அரசியலில் பெரும் புள்ளியாகி விட்டிருந்தான்.
பிறகு நான் வெளிநாட்டுக்கு வந்து விட்டேன்.
உண்ணாவிரதத்தில் இருத்தி அவனை காந்தி ரேஞ்சுக்கு கொண்டு போய் விட்டிருந்தார்கள்.
இயக்கத்தில் இருந்த போது, நம்ம ஊர்ச் சந்தியில் மனநோயாளி ஒருவனை மின்கம்பத்தில் கட்டிச் சுட்டது, கூட்டத்தில் கேள்வி கேட்டவர்களை துப்பாக்கியால் மிரட்டியது என அவன் இயக்கத்தில் ஞானஸ்நானம் பெற்று மனம் திரும்பியிருந்தான்.
உண்ணாவிரதத்தோடு அவன் பாவங்களும் கழுவப்பட்டு இன்று கொண்டாடப்படும் புனிதர்களில் ஒருவனாகி விட்டான்.
அவனுடைய உண்ணாவிரதத்தில் தலைவர் வந்து ‘நீ முன்னால போ, நான் பின்னால வாறன்’ என்று சொன்னதாக புராணங்கள் சொல்கின்றன.
என்னைக் கேட்டால், இந்திய எதிரிக்கு சகுனம் பிழைக்க, அறுக்கப்பட்ட மூக்கு அவன்!
அவன் பலியாடு ஆக்கப்பட்டதற்கு எனக்கு ஒரு விளக்கம் உண்டு.
கிட்டு அப்போது பெரும் புள்ளி. கிட்டு என்றால் இயக்கம், இயக்கம் என்றால் கிட்டு என்ற நிலைமை.
ஒரு கட்டத்தில் கிட்டுவின் விசுவாசிகள் பலர் இயக்கத்திலிருந்து கழட்டப்பட்டார்கள்.
அவனும் கிட்டு காலத்தில் அரசியலில் பெரும் புள்ளியாக இருந்ததால், அவனை கழட்டுவதற்கு பதிலாக காவு கொடுப்பது ஒரே கல்லில் இரண்டு மாங்காயாகத் தலைவருக்கு தெரிந்திருக்கும்.
ஏற்கனவே அரசியல் தலைமை, ஆலோசனைக் கனவுகளுடன் இருந்தவர்களுக்கு, இவனை அகற்றுவது சாதகமான ஒன்று. தலைவருக்கு தகடு கொடுத்து அள்ளி வைத்திருப்பார்கள்.
அப்படி அரசியலைக் கரைத்துக் குடித்த ஹீரோ ஸ்டேட்டஸில் அவன் இருந்தான், உள்ளுக்கும் வெளியேயும் கனவுகளோடு இருந்தவர்கள் பொறாமைப்பட்டு மனம் புழுங்கும் அளவுக்கு!
உண்ணாவிரதம் இருந்தவர்களை கவர்ந்து சென்று கடிமணம் புரிந்த ஒருவர், இன்னொருவரை உண்ணாவிரதம் இருந்து சாகும் வரை பார்த்துக் கொண்டிருந்ததற்கு எந்த நியாயமும் இல்லை.
உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தால், இராணும் நுழைந்து விடும் என்று காரணம் காட்டி பல்கலைக்கழக மாணவர்களை கடத்திச் சென்ற அதே தலைவர், இராணுவத்தை வரவழைப்பதற்காகவே இந்த உண்ணாவிரதத்தை அரங்கேற்றியதன் முரண்நகையை என்னவென்பது?
தன்னுடைய அரசியல் இலாபத்துக்கும், கிட்டு விசுவாசியை கழட்டி விடுவதற்குமான ஒரு கல், இரண்டு மாங்காய் கதை தான் இது!
அவன் இறக்கும் தறுவாயில் தண்ணீர் கேட்டதாகவும், அது மறுக்கப்பட்டதாகவும் சூழ இருந்தவர்கள் சொல்கிறார்கள்.
சுலபமாகவே இந்தியாவின் கொடிய முகத்தைக் காட்டவே உண்ணாவிரதம் செய்தோம் என்று விட்டு, ஜகா வாங்கியிருக்கலாம். எந்தப் பெரிய மாற்றமும் நிகழ்ந்திருக்கப் போவதில்லை.
அந்த மரணத்தால் சாதித்தது எதுவும் இல்லை, இன்றைக்கு பேஸ்புக்கில் புனிதராக லைக் போடுவதைத் தவிர!
சிறுவர்களை எரியும் டயரில் தூக்கி எறிந்து கொன்றதை களையெடுப்பு என்று கொண்டாடிவர்கள் எல்லாம் அவனுடைய மரணத்தை கொண்டாடுவதன் மூலம் அகிம்சாவாதியாகி விட்டார்கள்.
அந்த டயர் எரிப்புக் கொலைகளில் அவனுக்கும் சம்பந்தம் இருந்திருக்கிறது.
எங்கோ வாசித்த ஞாபகம், அதன் சாராம்சம் இது தான்.
பெரிய ஹீரோக்கள் எல்லாம் ஒரு கட்டம் வரை சுற்ற உள்ளவர்களால் பப்பா மரத்தில் ஏற்றப்பட்டு, அதன் பின்னால் விரும்பினாலும் திரும்பி வர முடியாதபடி மேலே சென்றவர்கள்.
அவனுக்கு அதே நிலை தான்.
அவனைச் சாகடித்தவருக்கும் அதே நிலை தான்!
You must be logged in to post a comment Login