2018. ஒக்டோபர் 1ஆம் திகதி, காலை 10மணி. பூதத்தம்பி கோட்டை, 2ம் ஒழுங்கை. அண்ணாவி தாவீதுத்திறவு வீட்டு முற்றத்து வேப்பமர நிழல். பழையதொரு சாய்ந்த பலகை நாற்காலியில் அண்ணாவியார்.
காரைநகர் கடற்படை தண்ணிப் பவுசரோடு வந்து சனங்களுக்கு சாட்டி மாதாங்கோயில் குடிதண்ணீர் கொடுத்துவிட்டுப் போன சிறிது நேரத்தில்.
அண்ணாவியார் வீட்டுப் பனைமட்டை வேலியில் இரண்டு கரட்டி ஓணான்கள். அதிலொன்று நெருப்பாய்ச் சிவந்து பொம்மிய இரு மென்னைகளும், பருத்துச் சுருங்கும் தொண்டையுமாகவும், சிங்கத்தின் சிலிர்த்த முடிகள்போல் முள்ளங் கொம்புகளாகவும் திமிறித் தினவெடுத்து நின்றது. பழையேற்பாட்டில் சித்தரிக்கப்பட்ட தாவீது கோலியாத்து சண்டைக் கட்டத்தை "கோலியாத்தனே வாடா, கேடு செய்துடும் மூடா..." என அண்ணாவி அந்தோனி கூத்தில் யுத்தக்காட்சிப் பாடலில் எழுதியதுபோல நீண்ட நேரமாக ஒன்றையொன்று தனகிக் கொண்டிருந்த காட்சியையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு....
Camera rolling, Ready, Act.... .................. இப்ப பாடுங்க ஐயா....
சரியா தம்பி....? இப்ப பாடலாமா?
ஓம், கமெரா ஓடுது பாடுங்கையா.
சரி பாடப்போறன், வடிவாப் பதிஞ்சுபோடுங்க தம்பி.
ம் ம் பாடுங்கையா....
நிப்பாடிப்போட்டு ஒருக்காப் பார் ராசா சரியாப் பதிஞ்சிருக்கா எண்டு.
Cut cut.
அதெல்லாஞ் சரியையா.
எற்பன் போட்டுக் காட்டப்பன்.
Rewind, play
"சளிப்பிடிச்ச தரவளி பாடுறதுமாதிரிக் கிடக்குது தம்பி"
"இல்லயையா, இது கமெராஸ்பீக்கர் அப்பிடித்தான் இருக்கும். ஒறிஜினல் ரிவியில சரியா வந்திடும்"
"சரி தம்பி, மோசமில்ல..., எண்டாலும் கிணத்துக்க கிடந்து கத்தின மாதிரி..... ஒரு தகரச்சத்தமாக் கிடக்கு.
இது வந்து தம்பி நான் ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி நாப்பத்தெட்டாம் வருசம் எழுதி மேடயேத்தின அன்பலங்காரி நாடகம் ராசா. அப்ப எனக்கு இருவது வயசு. அன்பலங்காரி நாடகத்தில வாற பாட்டுத்தான் இப்ப நான் பாடினது. இந்த நாடகத்தப் பாத்தபிறகுதான் எங்கட பெரியம்மான் தன்ர மூத்தமகளச் சடங்கு கட்டித் தந்தவர். எங்கட பெரியம்மானக் கேள்விப் பட்டிருக்கிறியளோ தம்பி...? அண்ணாவி எம்பரதோர் சூசைமுத்து எண்டால் இந்தச் சுத்துவட்டாரத்தில இருக்கிற பதினெட்டு ஊருக்கும் தெரியும். இந்தப் பிரதேசம் முழுக்க அவர்தான் தலைச்சன் அண்ணாவி. அவரட்ட படாத அடியெல்லாம் பட்டுத்தான் எங்கதரவளி நாடகம் பழகினனாங்கள். நாலுமுளப் பூவரசங்கம்ப நெருப்பில காய்ச்சித்தான் கொண்டுவருவார் நாடகப் பழக்கத்துக்கு. அப்பேக்க பெரியமாதாங் கோயில்ல இருந்த மேற்றாணியாண்டவர் அல்பிறேட்டு குயோமர் அவர் ஆள்விட்டுக் கூப்பிடுவிச்சு அச்சேஸ்ரவர் கதைகளச் சொல்லச் சொல்ல நாடகமா எழுதின மனுசன். அப்ப நாங்கெல்லாம் இளவட்டத் தரவளியள்.
நீங்கள் கேள்விப் பட்டியளோ தெரியாது.... அண்ணாவி சூரன் அருளப்பன், அண்ணாவி ராவணத்தம்பி, அடுத்தது... இவர்தான்... அந்த... பனவளவு பதஞ்சொல்லி குஞ்சர்.... இவயளெல்லாம் எங்கம்மானட்ட அடிவாங்கி நாடகம் படிச்சாக்கள்தான். பதஞ்சொல்லி குஞ்சருக்குக் கண்டமுமில்ல, சுதியுமில்ல, தாளமுங் கிடயாது. முறிமுயெண்டு முறிப்பான்பாவி.
பிறகிட்டு குஞ்சன் கரயூரில சிஸ்ரர்மாரின்ர புள்ளப்பெறு ஆஸ்ப்பத்திரியில மருத்துவிச்சியாயிருந்த பறங்கிப் புள்ளயச் சடங்கு கட்டி அலுப்பாந்தியடிக்குப் போனபிறகு றேடியோவில பாட்டுப் படிச்சுப் பெரியாளாப் போனார். இப்ப என்னடாண்டால் குஞ்சன்தான் கூத்த நட்டு எருப்போட்டு, தண்ணியூத்தி வளத்தவரெண்டு கதைக்கிறாங்கள். சிரிப்புத்தான் வருகுது."
"அவர் பெரிய அண்ணாவியாரெல்லோ ஐயா?"
"ஓமோம்...., பெரிய நீள அகலமான அண்ணாவிதான் ராசா அவர். ஆறில்லாத ஊரில அடிக்கழுவுற குசவன் குண்டுதான் அமுதசுரப்பியாம்"
"ஐயா, நீங்கள் நாடகம் எண்டு சொல்லுறது கூத்தைதானேயையா....?"
"பின்ன...? இப்பயெல்லோ உங்கதரவளிக்குக் கூத்து வேற நாடகம் வேற"
"சரி ஐயா, நீங்கள் எத்தின கூத்து எழுதியிருக்கிறீங்கள்?"
"நான் கனக்க எழுதயில்லயப்பன். இத்தனைக்கும் ஒரு... ஒரு, பத்துப் பன்ரெண்டு நாடகந்தான் எழுதியிருப்பன். அம்மான் எழுதிவச்ச கொப்பியளத்தான் கனக்கச் சோடின போட்டனான். அவற்ற பாட்டுகளுக்குக் கிட்ட எந்த விண்ணனும் நிக்கேலாது. கூத்துவாசின இல்லாத கொஞ்சப்பேர் நாகமுத்தப்பாவின்ர தேங்காவத்தயில இந்தியாவுக்கு அடைஞ்சுபோய் நாடகக்கொட்டக பளகிப்போட்டு வந்து அந்தப்படிக்கே கொண்டுவந்து அவங்கட கொப்பியளப் போட்டிச்சினம். அதுதான் கூத்தெண்டும் சொல்லிச்சினம் கொஞ்சப்பேர். பிறகிட்டு கூத்துத் தெரிஞ்சவனும் இந்தியாவுக்குப்போய் கரிநாடக சங்கீதம் பழகிப்போட்டு வந்து எங்கட கூத்துப் பாட்டுகள ஒரு சத்தாருக்கு இழுத்து கனச்சுக் கனச்சுப் பாடிச்சினம். என்னடாண்டால் புதும செய்கினமாம். எல்லாங் கரிநாடகமாக் கிடந்துது"
"ஐயா எங்களின்ர கலைகள நவீனமாக்கி, புதுமைகளச் சேர்க்கிறது நல்லதுதானே ஐயா?"
இஞ்ச வாங்கோ ராசா, கூத்து அப்பப்ப கனக்க மாத்தல்களையும், புதுசு புதுசாப் புதுமயளயுஞ் செய்துகொண்டுதான் அப்பன் வந்திருக்கு.... எங்கட பேரன் பூட்டன் காலத்தில ஆடின கூத்துகளயும், எங்கட காலத்தில போட்ட சோடினயளயும், எங்கட பிள்ளயளின்ர காலத்தில ஏத்திற நாடகங்களையும் வடிவா அறிஞ்சு பாத்தீங்களெண்டால் தெரியும் தம்பி. கூத்தெண்டு சொல்லிச்சொன்னால் அது கீழ்சாதியளின்ர குப்பயெண்டு அந்தக்காலத்தில சொன்னாக்கள்தான் இப்ப வந்து தங்களுக்குத் தெரிஞ்ச எதயெதயெல்லாமோ சொருகிப்போட்டு, கூத்துக்குப் புதும செய்யினமாம். பாசி பிடிச்சுக் கிடந்த கூத்துக்கு கலப்பத்தடிச்சுத் தூக்கிச் சாத்தி நிமித்துகினமாம். சொல்லுவாருக்குச் சொன்னால், கேட்பாருக்கு மதியில்லையாம். எங்கட அப்பன் பாட்டான் பூட்டன் செய்யாத புதுமயளா? அந்தக்காலத்தில கண்டந்தூக்கிப் பாடினாங்களெண்டால் எட்டூருக்கு இடிமுழக்கமாப் போய்விழும். இப்ப எவனுக்குக் குரலிருக்கு...? மைக்குக்கு முன்னால நிண்டு அனுங்கிறாங்கள். கேட்டால், அந்தக்காலத்தில சும்மா சும்மா கத்தின்னாங்களாம். அது புழயாம். மைக் இல்லாத காலத்தில சுதிலயம் பிசகாமல், தாளக்கட்டுக்குள்ள நிண்டு, குரலெடுத்துத்தான் பாடவேணுமெண்ட அறிவுகூட இல்லாதாக்கள நாமென்ன சொல்லுறது? கூத்துவாசன தெரியாதவைக்கு அது கத்தலாத்தான் தெரியும் தம்பி. அதில இருக்கிற சூச்சுமம், கனிவு, லாவகம் இதெல்லாம் இவைக்கு விளங்காது. காத்தடி கடலடியில மடிவலத்தோணி அணியத்தில நிண்டு மண்டாடி அம்பாப் பாடினால் ஒருகட்டைக்கங்கால கயித்துத் தோணியில நிக்கிற கயித்துக்காறன் பதில்ப்பாட்டுப் பாடுவான். சத்தந்தான் சனங்கள எங்களட்ட அள்ளுகொள்ளயா வரப்பண்ணினது. குரலெடுத்துக் கொலுத்தருப் படிச்சால் அது போய் மேகத்தில இடிச்சு மழ வரவேணும் ராசா. வரும், அப்பிடி வந்த காலங்கள்தான் எங்கட அப்பன் பேரன்ர காலங்கள்"
அண்ணாவி தாவீதுத்திறவு எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சிரித்தபடியே இவற்றைச் சொல்லிக் கொண்டிருப்பதுபோல் தெரிந்தாலும், உண்மை அதுவல்ல..... அவரினுள்ளே ஒருவித கோபமும், கவலையும் இருந்ததுதான்.
"ஐயா, ஒரு கேள்வி. இப்ப நீங்கள் முதல்ப் பாடின பாட்டு பேராசிரியர் கற்பகவிநாயகம் விசுவலிங்கத்தார் எண்பதுகளில எழுதின கூத்திலதானேயையா?"
"................................."
"நல்ல எடுப்பான கதைதான் ராசா ஆனால்த் தடிப்பமில்ல" இது வீட்டுக்குள்ளிருந்து வந்து வெளியே எட்டிப் பார்த்த அண்ணாவி தாவீதுத்திறவாரின் மனைவி மகிறம்மா ஆச்சியின் குரல். அப்போதுதான் புரிந்தது மகிறம்மா ஆச்சி எங்களது உரையாடலை உள்ளிருந்து கேட்டுக்கொண்டிருக்கிறார் என்பது.
"ஒரு கேள்வி ஐயா, இதக் கேட்கலாமோ தெரியேல்ல....., அன்பலங்காரி கூத்துப் பிரதி பேராசிரியர் கற்பகவிநாயகம் விசுவலிங்கத்தார் எழுதி எண்பதுகளில அரங்கேற்றினதாத்தான் கேள்விப்படுகிறம். ஆனால் நீங்கள் நாப்பத்தெட்டில எழுதின கூத்தெண்டு சொல்லுறீங்கள்..... அதப்பற்றிக் கொஞ்சம் சொல்லேலுமோ ஐயா?"
தாவீதுத்திறவு அண்ணாவியார் கதிரையில் சாய்ந்தபடியே வேப்பமர உச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தார் சிறிது நேரம். பின் தொண்டையைச் செருமி, சொல்லவேண்டிய சொற்களைத் தனக்குள் அடுக்கிச் சரிசெய்தவராக என்னப் பார்த்தார்.
"படாது தம்பி, சொல்லப் படாது. இதுகளச் சொல்லவே படாது. நான் சொல்லுறதில ஏதெண்டாலும் ஒரு எற்பன் தப்பித்தவறிச் சமுகசந்திக்கு வருமாகுப்பட்டால் அந்த மனுசனுக்குச் சங்கையீனமாப் போயிடும். அது அழகில்லத் தம்பி. எண்டாலும் நாங்க பாக்க மேய்க்க அயலட்டையில வளந்த பிள்ள ராசா நீங்க. காமேந்து பண்ணுவீங்கள்தானே? இதப் பதிஞ்சுகிதிஞ்சு போடாதேங்க அந்த மெசின நிப்பாட்டுங்க முதல்ல"
"இல்லையையா, அது கமெரா ஓடேல்ல. நீங்க விரும்பினால்ச் சொல்லுங்கோ"
"அப்பேக்க.... அது வந்து அப்பன் எண்பத்தெட்டோ, எண்பத்தொன்பதிலயாயிருக்க வேணும்.... எங்கட கோயில்ப்பெருநாளுக்கு ஒரு கூத்துச் சோடின கட்டலாமெண்டு நினைச்சு இந்த அன்பலங்காரி கூத்த எடுத்து இளம்பிள்ளயளுக்குப் பழக்கிக் கொண்டிருந்தனான். அந்தமூட்டந்தான் இந்த மாஸ்ரர் தன்ர ஏதோ பட்டப்படிப்புக்கெண்டு யாழ்ப்பாணத்தில இருந்து கூத்துகளப் பற்றிக் கேட்டறிஞ்சுகொண்டுபோக வந்தவர். வந்த இடத்தில.... இந்த இந்தமாதிரி அன்பலங்காரி கூத்துச் சோடின கட்டப்போறம் எண்டதக் கேள்விப்பட்ட மனுசன், கூத்து மேடயேறுமடும் தானும் இதில வந்து என்னோட இருந்து கூத்தப் பாக்கப்போறதாகவும், கூத்து விசயங்கள இன்னும் அறிஞ்சுகொண்டுபோகத் தோதா இருக்குமெண்டும் கேட்டார். நானுஞ் சந்தோசமாச் சரி எண்டன். கிழமைக்குக் கிழம ஒவொரு பழக்கத்துக்கும் யாழ்ப்பாணத்திலயிருந்து பஸ் பிடிச்சு வந்து போவார். அப்பிடி வரேக்க சுடுதண்ணிப்போத்தல்ல கோப்பித்தண்ணியுங் கட்டுச்சாதமுங் கையோட கொண்டுவருவார். எங்கவீட்டில பச்சத்தண்ணியும் பல்லில போடார். இது என்ர மனிசிக்காறிக்குக் கடுமயான ஆத்திரம். ஆனா வெளியில காட்டிக்கொள்ள மாட்டாள்பாவி. ரெண்டொரு தடவ தின்னக் குடிக்கக் கேட்டுப்பாத்தாள்.... அவர் சங்கடங்காட்டினார் அதோட விட்டிட்டாள். நமக்குத் தெரியுந்தானே தம்பி இந்த நடப்புகள் மேய்ப்புகள் என்ன ஏதெண்டு. சோடினயண்டு நாலைஞ்சு பெரியபெரிய வாத்திமாரயெல்லாங்க் கூட்டிக்கொண்டு வந்தார். கூத்து முடியிறவர கூத்துக்கொட்டகயில என்னோட பக்கத்திலதான் நிக்க வச்சனான். தானும் கைத்தாளம் போடப்போறன் எண்டு கேட்டார். ஒரு சின்னக் கைத்தாளத்தக் குடுத்துப்போட்டுச் சொன்னன், இதக் கையில வச்சிருங்கோ மாஸ்ரர், தாளம் போடாதேங்கோ எண்டு. ஏனெண்டால் தாளத்தின்ர ஆனாவே இவருக்குத் தெரியாது தம்பி. மேடயில பிழயாக்கிழயாப் போட்டாரெண்டால் பிசகாகிப் போயிருமெல்லோ, அதுதான். கூத்து முடியச் சாமம் தாண்டிப்போச்சு. அதுக்குப் பிறகு எங்கட இந்த வீட்டிலதான் வந்த வாத்தியார்மாரெல்லாருக்குஞ் சாப்பாடு. அண்டு நிறைய நல்ல கணவாய்க்கறி. சட்டியோட தூக்கிவச்சு வெளுத்துக் கட்டினாம்பாவி, என்ர பெண்சாதிக்காறிக்கு அடக்கமாட்டாச் சிரிப்பு" சொல்லிவிட்டு தானும் பெரிதாகச் சிரித்துக் கொண்டார்.
"பின்னடிக்குத்தான் தம்பி கேள்விப்பட்டன் ராசா..... அந்தக் கூத்த தான்தான் போட்டதெண்டு சொல்லித் திரிஞ்சாராம் வாத்தி. நாமென்னத்தப் பறயிறது. இதால நமக்கென்ன கேடு வந்தது... பேசாமல் விட்டிட்டன். இதோட நீங்களும் விட்டுப்போடுங்க தம்பி. அடுத்தாப்புல இன்னொரு பகிடி என்னடாண்டால்...., இப்ப, அஞ்சு வருசத்துக்குமுந்தி என்ர பேரமக்கள், பூட்டமக்களெல்லாங் கூடிப்பறஞ்சு என்ர எண்பத்தஞ்சாவது வயச வலுசிறப்பாக் கொண்டாடிச்சினம். என்னப்பற்றிப் பொஸ்தகமெல்லாம் பதிப்பிச்சு, நான் எழுதின சின்னக் கூத்தொண்டும் சும்மா சோடினகீடின இல்லாமல்ப் போட்டு, ஊர்ச்சனத்தயும் கூப்பிடுவிச்சு கொண்டாடிச்சினம். அந்தப் பொஸ்தகத்தில போடுறதுக்கு ஒரு நாலு வார்த்த எழுதித் தரச்சொல்லி அந்த வாத்திட்டப் போய்க் கேட்டிச்சினமாம். தனக்கு என்னத் தெரியவே தெரியாதெண்டு பிலாத்து கணக்காக் கை விரிச்சுப் போட்டாராம். இந்த விண்ணாணக் கதயப் பிள்ளயள் என்னட்ட முதல்ல சொல்லேல்ல. பின்னடிக்குத்தான் கதயோட கதயாக் கேள்விப்பட்டன்"
மட்டைவேலியின்மேல் தனகிக்கொண்டு நின்ற ஓணான்களில் அந்தக் கொம்புகள் சிலிர்த்த கோலியாத்து ஓணானைக் காணவில்லை. தாவீது ஓணான் மட்டும் தனியனாய், சற்றுத் தள்ளி நின்ற ஊசித் தும்பியொன்றைப் பிடித்து விடுவதற்கு வளம் பார்த்துக்கொண்டு நின்றது. ----------------------------
முப்பத்தியிரண்டு வருடங்களின்பின் 2018 செப்டெம்பர் 28இல் இலங்கைக்கு மீண்டும் புறப்படுகிறேன். புறப்படும்போது எந்தத் திட்டங்களும் முன்னேற்பாடக இல்லை ஒன்றைத் தவிர. நான் சிறு வயதில் பார்த்து, கேட்டு இரசித்த கூத்துக் கலைஞர்களில் முடிந்தளவு சிலரையேனும் சந்தித்துப் பதிவாக்க வேண்டும் என்பது மட்டும்தான் கையோடும் பையோடும் கொண்டு சென்ற அந்தத் திட்டம்.
கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக, அப்பப்போ ஊரிலிருந்து கிடைக்கும் மரணச் செய்திகளில் நிறையவே கூத்துக் கலைஞர்களின் மரணங்களையும் அறிந்து கொண்டுதானிருந்தேன். யுத்தத்தால் பாதியும், முதுமையால் மீதியுமென நல்லபெருங் கலைஞர்கள் செத்துப்போனதை அறியும் போதெல்லாம் ஒரு குற்றவுணர்வு முகத்தில் அறைந்து கொண்டேயிருந்தது.
கமெராவோடு நாட்டில் அலைந்த காலங்களில் இந்தக் கலைஞர்களைப் பதிவு செய்யும் வாய்ப்புக்கள் ஏராளமாக இருந்தும், அதை ஏன் செய்யத் தவறினேன் என்ற ஆதங்கம் அகத்தினுகள் பிராண்டிக்கொண்டே இருந்தது.
ஆயினும் தொண்ணூறு வயதினைத் தாண்டியும் சிலர் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும், அவர்களைச் சந்தித்துவிடுவேன் என்ற நம்பிக்கையும் கணிசமான ஆறுதலைத் தந்தது.
அப்படி தனது தொண்ணூறாவது வயதை எட்டித்தொட்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் ஒருவர்தான் எங்களது பக்கத்துக் கிராமத்து அண்ணாவி தாவீதுத்திறவு. எழுபதுகளில் எனது சிறுவயதில் இவர் மேடையேற்றிய பல கூத்துக்களைப் பார்த்திருக்கிறேன். ஒன்றுவிடாமல்த் தவறாமல்ப் பார்த்திருக்கின்றேன். ஏனெனில் இவரது கூத்து மேடையேற்றங்கள் நடக்கும்போது எனது ஆச்சி கச்சான்கடை போடுவது வழக்கம். ஆச்சியோடு கூடவே நானும் போய்விடுவேன். கூத்துக்களை நெறிப்படுத்தும் அண்ணாவியாராக மட்டுமல்ல, பல கூத்துக்களில் பாத்திரமேற்றுப் பாடி நடித்துமிருக்கிறார். அந்த அரச உடைகளும், மணிகளும், மாளிகைக் காட்சிகளும், உச்ச எடுப்பான குரலும் நடிப்பும் இன்னமும் இரு கண்களுக்குள்ளும் இனித்துக் கொண்டுதான் இருக்கிறது. -----------------------------------------------
செப்டெம்பர் முதலாம் திகதி காலையிலேயே தீவகத்துக்குச் சென்று அம்மாவைச் சந்தித்து விட்டு, மதியம் அண்ணாவி தாவீதுத்திறவு வீட்டுக்கு வந்துவிட்டேன்.
இரண்டுமணிநேரமாக அண்ணாவியாரோடு பேசிக் கொண்டிருந்துவிட்டு அதன் பின்புதான் எனது விருப்பத்தைச் சொன்னேன் அவரை வீடியோப் பதிவு செய்யும் ஆவல் உண்டென்பதை.
"என்னப் பதியப் போறியளோ தம்பி....? ஏதாவது பட்டப்படிப்புக் கிடிப்புப் படிக்கிறியளோ அப்பன்...?"
"இல்லையையா, ஏன் அப்பிடிக் கேட்கிறீங்கள்?"
"இல்ல.... ஏதாவது கம்பசு கிம்பசில படிக்கிறாக்கள்தான் இப்பிடி ஏதாவது பதிச்சுக் கொண்டுபோக வருவினம்.... அதுதான் கேட்டனான்"
"அப்பிடியெதுகும் இல்லயையா, சின்ன வயசில உங்கட நிறயக் கூத்துகளப் பாத்திருக்கிறன். உங்கட கூத்துகள் எனக்கு நல்ல விருப்பம்"
"ஓமோம், நான் எங்க சோடின போட்டாலும் உங்கட பேத்திக்காறி கச்சான் கடகத்தோட வந்திடுவா. ஒரு மேடயும் தவற விடமாட்டாள்பாவி, இந்த.... தொண்ணூறில தீவ விட்டு வெளியேறி யாழ்ப்பாணத்தில சோனகதெருவில இருந்தம். அவவும் மருதடி ஒழுங்கைக்குள்ளதான் வந்திருந்தவ. பிறகிட்டு அங்கயிருந்து கிளாலிக்கு ஓடினம். கிளாலியில உமையாள்தேவி எண்டு ஒரு கூத்து... பொம்பிளப் புள்ளயளுக்குப் பழக்கிப் போட்டனான். அந்த நாடகம் முடிஞ்ச கையோட மூணாம் நாள்தான் உங்க பேத்திக்காறி கண்ண மூடினவ. பிறகிட்டு அங்கயிருந்து தச்சனாமடுவுக்கு ஓடிப்போனம். அங்கயும் ஏலேலம்மா எண்டொரு கூத்த எழுதிச் சோடின போட்டனாங்கள். அதுக்குப்பிறகு தொண்ணூத்தேழில மடுமாதா கொடியிறங்கின கையோட மன்னாருக்குள்ளால மண்டபம் போனம். அங்கயும் அகதிமுகாமில ரெண்டு கூத்தெழுதி இளந்தரவளியக் கொண்டு சோடின போட்டம். இப்பிடிக் கூத்தோடயும், குஞ்சு குருமானுகளோடயும் இல்லாத பொல்லாத தேசமெல்லாம் ஓடியோடி ஓஞ்சுபோய்க் கிடக்கிறம். கூத்த விட்டு நாங்களும் பிரிஞ்சதில்ல, கூத்தும் எங்கள விட்டுப் போனதில்ல. கூத்தின்ர கடப்படியில நாங்கள் நாய்களாகவும், இந்த நாய்களின்ர இருதயத்துக்குள்ள கூத்து சாமியாகவும் இருக்குதப்பன்.
காணுமடி மாதாவேயெண்டு, போய்ச்சேர்ர காலத்த வா வா எண்டாலும் அது வருகுதில்ல.... நாமென்ன செய்யிறது.... இப்பிடி உங்களப்போல கூத்தில நாட்டமுள்ள பிள்ளயளப் பாக்கவேணுமெண்ட குடுப்பனவு இருந்திருக்குப்போல... அதுதான்...."
"ஐயா, நீங்கள் கிளாலியில உமையாள்தேவி எண்டு ஒரு கூத்துப் போட்டதாகச் சொன்னீங்கள்..., நாங்களும் கேள்விப் பட்டனாங்கள். அதொரு பெண்போராளியப் பற்றின கூத்துத்தானேயையா?"
"ஓமப்பன்" அது வந்து.... இந்தக் கடல்ல வந்துகிடந்து கண்டமேனுக்குக் குண்டுகள் போட்டுச் சனங்களச் சாகடிச்சுக்கொண்டிருந்த சண்டக்கப்பலொண்ட நம்ம சொந்தக்காரப்புள்ள தற்கொலப் போராளியாப்போய் வெடிக்கவச்சுத் தானுஞ் செத்துப்போனாள். அந்த உண்மக்கததான் உமையாள்தேவி எண்ட கூத்து"
"அதிலயிருந்தொரு பாட்டுப் பாட ஏலுமா ஐயா?"
"ம்...... ம்...... இது ஒரு உருக்கமான பாட்டு ராசா..., அண்டைக்குக் கூத்துப் பாத்த எல்லாச் சனத்தயும் தேம்பவச்ச பாட்டு. உமையாள்தேவி கடல்ல வெடிச்சுச் செத்துப்போனாள். பிரேதங் கைக்குக் கிடைக்கையில்ல, அவளின்ர படங்கள வாகனங்களில கட்டி ஊரெல்லாம் ஊர்வலம் வச்சுக் கொண்டாடிக் கொண்டிருக்க, தாய்க்காறி போய்க் கடக்கரயில தனியனா நிண்டு புலம்பியழுகிற பாட்டு அது. என்ர பேத்திமுறயான பிள்ளயொருத்திதான் தாய்க்காறிக்கு நடிச்சவள். சனமெல்லாத்தயுங் கதறவச்சுப்போட்டாள் புள்ள. அவளும் பிறகிட்டு இந்த வன்னிக்க அம்பிட்டு..... இண்டுவரயும் எங்க ஏதண்டில்ல"
சொல்லிக்கொண்டிருந்த தாவீதுத்திறவு அண்ணாவியார் துயர் கவிந்தவராக தலை கவிழ்ந்து நிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் அந்த இடத்தை அமைதி ஆட்கொண்டிருந்தது. அதனை அண்ணாவியாரே கலைத்தார்.
"ஓம் தம்பி.... அந்தப் பாட்டு...?"
"ஓமையா பாடுங்கோ"
பாடி முடித்த பின்புதான் அவதானித்தேன் அண்ணாவியாரின் இருவிழிகளும் கசிந்திருப்பதை. நான் அவரைப் பார்த்ததும் தனது தலையைக் கவிழ்ந்துகொண்டார். என்ன சொல்லவது, மேற்கொண்டு என்ன செய்வது என்று எதுவுமே புலப்படவில்லை எனக்கு. மீண்டும் அந்த அண்ணாவியார் வீட்டு வேப்பமரத் திடலை அமைதி ஆக்கிரமித்துக் கொண்டது.
வீட்டுக்குள்ளிருந்து வெளிப்பட்ட மகிறம்மாஆச்சி சட்டகம் போட்ட இரண்டு புகைப்படங்களைக் கொண்டுவந்தார். ஒரு படத்தில் ஒரு இளம் போராளிப் பெண் கறுப்புச் சீருடையோடிருந்தாள். இன்னொரு படத்தில் ஒரு இளம் பெண் சிரித்தபடி அழகாகக் காணப்பட்டாள். மகிறம்மா ஆச்சி இரண்டு படங்களையும் எனது கையில் தந்துவிட்டு விளங்கப் படுத்தத் தொடங்கினார்.
"இதுதான் தம்பி உமையாள்தேவி எண்ட போராளி. பீரங்கிக்கப்பல வெடிக்கவச்சுத் தானும் செத்துப்போன பிள்ள. மற்றப் படத்தில இருக்கிறவள் தம்பி எங்களுக்குப் பேத்திமுறயானவள். அந்தக் கூத்தில தாய்க்காறிக்கு நடிச்சவள். வன்னியில இருந்தவள். இப்ப எவ்விடம், ஏதிடமெண்டில்ல. ரெண்டு குமர்ப்பிள்ளயள் தகப்பனோடதான் இருக்கிறாளவய. புருசன் காரன் மருசல். அவர இப்ப நீங்க காணலாம், சத்துநேரத்திர வருவார்"
இதற்கெல்லாம் நான் என்ன சொல்வது, அல்லது எதைக் கேட்பது? அல்லது என்னிடமிருந்து எப்படியான வார்த்தைகளை, கேள்விகளை இவர்கள் எதிர் பார்க்கிறார்கள். அல்லது எவ்விதக் கேள்வி நியாயங்களையும் என்னிடமிருந்து எதிர்பார்க்கவேண்டிய தேவை இவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லையா? புரியாமல்த் தவித்தேன். இரண்டு படங்களையும் மகிறம்மாச்சியிடம் கொடுத்தேன். மகிறம்மாச்சி படங்களோடு வீட்டுக்குள் போனாள்.
"ஐயா, உங்கட தாவீது எண்ட பேரோட இருக்கிற அந்த திறவு எண்டது ஏதாவது காரணப் பேரா ஐயா?"
"அதொரு பெரிய கதை தம்பி. பொறுமயாக் கேள்ப்பீராயிருந்தாச் சொல்லுவன்"
"சொல்லுங்கையா" பலகை நாற்காலியில் இதுவரை சாய்ந்திருந்தபடி கதை சொல்லிக் கொண்டிருந்த அண்ணாவி தாவீதுத்திறவு நிமிர்ந்து நாற்காலி நுனிக்கு வந்தார்.
"அப்பேக்க.... எனக்குப் பத்து வயசு நடந்துகொண்டிருக்கு ராசா. நான் முதல்ல சொன்னன்தானே பிசப்பாண்டவர் அல்பிரேட்டுக் குயோமர், அவர் எங்கட அண்ணாவியயுங் கூட்டிக்கொண்டு மலேயாவுக்குப் போனவர். எதுக்கெண்டால் அந்த வருசம் மலேயாவில தமிழ்ப் பிள்ளயளுக்கெண்டொரு பள்ளிக்குடம் கட்டித் திறந்தவயள். அது வந்து பிலோமினா தமிழ்ப்பள்ளி ராசா. அதுக்குப் போய் காப்புவிருத்தம் பாடினவர் எங்கட அண்ணாவியார். அப்ப அங்கயிருந்த பெருந்தலக்கட்டு சொக்கலிங்கச் செட்டியார். அவர் அண்ணாவியாரக் கூப்பிட்டு விருந்து வச்சவர். விருந்து முடிஞ்ச மறுநாள் சொக்கலிங்கஞ்செட்டி அங்கயிருந்த நாகம்மாள் கோயிலுக்கும் கூட்டிக்கொண்டு போய், நாகம்மாள் பேரிலயும் ஒரு பாட்டுக் கட்டித் தரச்சொல்லிக் கேட்டிருக்கிறார். அண்ணாவியார் நம்மட நயினாதீவு நாகம்மாளின்ர பேரில எழுதின நாகம்மாள் காப்பு விருத்தங்கள மூச்சு விடாமல்ப் பாடியிருக்கிறேர். அப்பிடியே செட்டியார் மயங்கமடிச்சுப்போய் விழுந்திட்டாராம். அண்ணாவியார வீட்டுக்குக் கூட்டிக்கொண்டுபோய் என்ன வேணும் கேளும் எண்டு செட்டியார் கேட்டிருக்கிறார்"
மீண்டும் அண்ணாவி தாவீதுத்திறவு நாற்காலியில் சாய்ந்து கொண்டார். "தொடச்சியா நிமிந்திருக்கவும் ஏலாது ராசா, சாஞ்சிருக்கவும் ஏலாது. நாரிக்க விண்விண்ணெண்டு குத்துது குடயுது"
"தண்ணி ஏதாவது குடிக்கப் போறீங்களாய்யா?"
"இல்லயப்பன், இப்ப பறுனாந்துக் கும்பாவின்ர பேரன்காறன் மருசல் வந்திடுவான். காலமயும் பின்நேரமும் கட்டாகட்டியா ஒவ்வொருபோத்தில் கள்ளுக் கொண்டு வந்து தந்திடுவான் பொடியன். அந்தப்பிள்ளயும் இந்த வன்னி வனாந்திரமெல்லாம் கிடந்து, ஆண்டவர் சிலுவயில படாப் பாடுகளெல்லாம் பட்டுச் செத்துப்புழைச்சு வந்தான். புனர்வாழ்வெண்டு சொல்லி கிட்டடியிலதான் விடுவிச்சாங்கள். ஏலாக்காலோட நாலைஞ்சு பனயளச் சீவித்தான் சீவியத்தப் போக்காட்டுறான்"
அண்ணாவியார் சொல்லிக் கொண்டிருக்கவே கள்ளும் வந்தது.
"தொட்டமகன், இதில சத்து இரடா..."
"இல்லத் தொட்டப்பு, நான் கோப்றட்டிக்குப் போகவேணும்"
"போகல்லாம் சத்து இரு இதில, தொட்டாச்சியட்டத் தேத்தண்ணி குடிச்சுப்போட்டுப் போடா புள்ள, இஞ்சேரண.... தொட்டமோன் வந்திருக்கிறான் ரெண்டுபேருக்கும் தேத்தண்ணி கொண்டாண"
கள்ளுக் கொண்டுவந்த மருசலை தனது பக்கத்தில் கிடந்த மரக்கதிரையில் உட்கார வைத்தார் அண்ணாவியார்.
"இவன் தம்பி பெரிய போராளி ராசா. வன்னிச்சண்டையில கால்ல காயம் பட்டுப்போனதோட, மனிசிக்காறியயும் காணவத்துக் குடுத்துப்போட்டு, ரெண்டு குமர்ப்பிள்ளயளோட தப்பியொட்டி வந்து கிடக்கிறான். ஆச்சி கொண்ணந்து காட்டின அந்தப் படத்தில இருந்தவள்தான் இவன்ர மனிசிக்காறி. இவன் பன்ரெண்டு வயசிலயே போராளியாப் போய், போதாததுக்கு அவளயுஞ் சடங்குமுடிச்சு, பாதியில துலைக்கக்குடுத்து, நாசங்கட்டி இப்ப நடுத்தெருவில வந்து நிக்கிறான். கவனிப்பார் கிடயாது. நாலு பனயச் சீவித்தான் ரெண்டு குமரயும் காமேந்து பண்ணுறான்"
"விடுங்க தொட்டப்பு, நான் கோப்பிறட்டிக்குப் போகவேணும்"
"இரடா புள்ள, தொட்டாச்சியட்டத் தேத்தண்ணி குடிச்சுப்போட்டுப்போ"
மகிறம்மாஆச்சி இரண்டு கோப்பைகளில் தேநீரோடு வந்து எனக்கும். மரிசலுக்கும் கொடுத்தார்.
சாய்வுநாற்காலிக் காலோடு ஆயத்தமாக இருந்த சீவிச்செப்பனிட்ட தென்னங்குவளையில் மருசல் கொண்டுவந்து கொடுத்த கள்ளை வார்த்தார். இரண்டு மிடறு சுவை பார்த்துவிட்டு, மடியிலிருந்து சுருட்டு ஒன்றை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டு தொடர்ந்தார். மருசல் ஒரே மூச்சில் தேநீரைக் குடித்துமுடித்து, எங்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றான்.
"எதில விட்டனான் தம்பி..... அ, அப்ப மலாயச்செட்டியார் அண்ணாவியாரப் பாத்து விரும்பினதக் கேளும் சூசமுத்து எண்டிருக்கிறார். அண்ணாவியார் முதலே ஒரு பொருளில கண் வச்சிற்றார். அதென்னெண்டு கேட்டீரெண்டால்...., நாகம்மாள் கோயிலச் சுத்திப் பாக்கிறபோது, கோயில் பின்வளவில தறப்பாள் படங்கால மூடிக் கிடந்தது அது. மலயாளப் பெருந்தச்சன் மலேயாத் தேக்கில செருக்கின பெரியதொரு அஞ்சுதல நாகாசனம் மின்னலடிச்சு நடுவால வெடிச்சு ரெண்டாப் பிளந்துபோய்க் கிடந்தது. அதில ஒருபாதியத் தர ஏலுமோ செட்டியார் எண்டு சட்டெண்டு வாய்விட்டுக் கேட்டுப் போட்டார். இதக் கொண்டுபோய் என்ன செய்யப்போறீர் சூசமுத்து, தாறன் கொண்டுபோம், வேறயேதாவது கேளும் சூசமுத்து எண்டிருக்கிறார். அதுமட்டும் போதும் வேறயொண்டும் வேணாமெண்டு சொல்லிப்போட்டு, பிசப்பாண்டவற்ற செல்வாக்கில மலாயாவிலயிருந்து அஞ்சுதல நாகத்தின்ர ஒருபாதியக் கப்பல்ல கொண்டுவந்து சேத்துப்போட்டார். அதக் கொம்பேராவாக சீவி வச்சு, பர்மாவிலயிருந்து பாய்வத்தயில தேக்குமரங்கள முழுசுமுழுசா வருவிச்சு, காளிகோயிலடித் தச்சரக் கொண்டுவிச்சு பலகசீவி, வன்னிவேம்பில வங்குகள் வெட்டிக் கொண்டுவந்து, மூண்டு வருசம் சிலவழிச்சுச் செய்ததுதான் அண்ணாவியாற்ற நாககொம்பேரா சிறகுகட்டி வள்ளம்.
ரெண்டுகூட்டம் மடி கயிறுகளயும், இருபது முப்பது தொழிலாளியளயும் ஏத்திப்பறிச்சுத் தொழில் செய்யுமாப்போல பெரிய கலம் அது. அந்தச் சிறகுகட்டி கடல்ல இறங்கேக்குள்ள எனக்கு பயின்மூணு வயசு. தொழிலுக்குப் போய் கரைக்கு வந்த முதல்நாளே என்னப் புடிச்சுப் பாமரத்தோட கட்டி, மணச்சோறு காய்ச்சி சிலவு செய்து முழுப் பங்கு வைப்பிச்சினம். அடுத்த வருசமே நான் திறவு சொல்ல வெளிக்கிட்டிட்டன். அதப்பிடியே ஊருக்குள்ள பேராயும் போச்சு தம்பி"
அண்ணாவியார் மீண்டும் கள்ளில் சில மிடறுகளை சுவை பார்த்து, சுருட்டுப் புகையை ஊதிக் கலைத்தார். இத்தனைக்கும் அவர் சொன்னவற்றில் பாதிக்கு மேற்பட்ட வார்த்தைகள் எனக்குப் பிடிபடவில்லை. ஏதோ விளங்கிக் கொண்டவன்போல தலையை அசைத்துக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவற்றை அண்ணாவியாரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமாக இருந்தது.
தலை கிறுகிறுத்தது எனக்கு. "மூத்த கலையாளுமைகளைச் சந்தித்துக் கதைத்தல்" என்பதை விடுத்து, "ஈழப் பிராந்தியங்களின் வட்டாரமொழி அகராதி" என்று ஆய்வு செய்வதைக் கையிலெடுத்திருக்கலாமோ என்று தோன்றியது. இல்லை, தவறு.
இது எவ்வளவொரு வெட்கப்படும்படியான விடையம். அயலட்டையில் நம்மோடு காலகாலமாக வாழும் மக்களிடம் அன்றாடம் சாதாரணமாகப் புழக்கத்தில் உள்ள பேச்சாடல்களைப் புரியாமல் இருந்திருக்கிறோம் என்பது சிந்திக்க வேண்டியதுதானே? ஏன், எதற்கு இப்படித் தள்ளி இருந்திருக்கிறோம் என்ற கேள்விகள் ஒன்றொன்றாய் மேலெழுந்தபடி இருந்தன. ஒன்றுமட்டும் புரிந்து கொண்டது. ஒரு நாளில், அல்லது ஒருசில நாட்களில் இவரிடமிருக்கும் வாழ்வனுபங்களையோ, கலைத்திறனையோ முழுமையாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளவதென்பது முடியாத காரியம்.
எல்லா வெட்கப்பாடுகளையும் அள்ளி, இலையினோரத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு அண்ணாவியாரைக் கேட்டேன்.
"ஐயா, சில கேள்விகள் கேட்கலாமா ஐயா.... நீங்கள் சொல்லுற சிலசில சொல்லுகள் எனக்குப் பிடிபடேல்ல, அதப்பற்றிக் கொஞ்சம் விளங்கப் படுத்த ஏலுமோ ஐயா?"
"ஓமோம், சங்கடப்படாமல்க் கேளுங்க தம்பி"
"ஐயா, அந்த... பாமரத்தோட கட்டிறது, மணச்சோறு, திறவு எண்டால்... கொஞ்சம் விளங்கப் படுத்த ஏலுமோய்யா?"
"ஓம் தம்பி, அதென்னண்டால் ராசா..., தொழில்ல கட்டிறது எண்டால், அரப்பங்கு வாங்கிற இளம்பொடியள் தரவளியள் தொழில்ல வளந்து கெட்டித்தனமா வந்திட்டாங்களெண்டு கண்டால், தொழில் செய்து கொண்டிருக்கும்போதே தாய்வள்ளத்தின்ர அணியக்கயித்தால பாமரத்தோட பிடிச்சுக் கட்டியிருவாங்கள். பிறகிட்டு அந்தப் பொடியன மாமனோ, மச்சானோ பொறுப்பு நிண்டு அவிழ்க்கவேணும். செலவுக்கு தான் பொறுப்பு எண்டும் நிக்கவேணும். அடுத்தாப்போல.... மறுநாளோ, இல்லாட்டி மற்றக் கிழமயோ எல்லாத் தொழிலாளியளுக்கும் விருந்துச்சோறு சமைச்சுக் கடலுக்குக் குடுத்துவிடுவினம் அந்தப் பொடியன்ர புள்ளகுட்டியள். கொஞ்சம் வசதியுள்ளவயள் ஊருக்கெல்லாம் சொல்லியும் விருந்து குடுப்பினம். அவயவயின்ர வீக்க தூக்கத்துகுத் தக்கமாதிரி. விருந்து வைக்கிறண்டு தொழில்ல வாற பருமனுகள்ள சிலத செலவுகளச் சமாளிக்கவெண்டு அண்ணாவியார் செலவுகாறப் பெடியனுக்கு கட்டாயமாகக் குடுத்தனுப்புவார். அதிலயிருக்கிற அமுசடக்கம் என்னண்டாலப்பன்..., பொடியன் இளந்தாரியா வந்திட்டான் எண்ட கணக்கா எண்டு வச்சுக் கொள்ளுங்கோவன்"
"ஐயா, தமிழ் ஒரு மிகப் பழமையான, பாரம்பரியமான மொழி. அப்பிடியிருந்தும் தமிழ் நாடகங்கள் எண்டு உலகத்தரத்தில சொல்லிக் கொள்ளுற மாதிரி நல்ல நாடகங்களோ, இல்லாட்டி.... நாடகாசிரியர்மார் எண்டு சொல்லிக் கொள்ளுற மாதிரியான ஆட்களோ ஏன் இன்னும் எங்களிட்ட இல்ல எண்டு சில கலாநிதிமார் கவலப் படுகினமே ஐயா....?"
"ஓம். இல்லத்தான் தம்பி. அவயள் அப்பிடித்தான் சொல்லுவினம், அப்பிடி மெத்தத்தான் வியாகுலப் படுவினம். இதெல்லாம் ஆத்தில போட்டிட்டுக் குளத்தில தேடுற கதைகள் தம்பி. எங்கெல்லாம் போய்த் தேடினவயாம்? கலயளுக்குஞ் சாதிசொல்லி ஒதுக்கிவச்ச கசவனுகள் தம்பி இவனுகள். இப்ப தங்கட லாபங்களுக்காக குண்டியில குதிக்காலிடிக்க ஓடுப்பட்டுத் திரியுறானுகள். என்ர சின்ன வயசுக் காலத்திலயே எத்தின கூத்துகள்....? எல்லாம் ரெண்டு ரெண்டு ராக்கூத்துகளும், மூணுமூணு சரித்திரக்காறரும் எண்டு பாடின கூத்துகள். இப்பிடி ஆயிரக்கணக்கான நாடகங்கள் எங்களட்ட இருந்தது தம்பி...., இந்தக் கூத்துகளின்ர கவுத்துவமும், பேரின்பரசமும், கனிவும், கதயலங்காரமும் இண்டைக்கொருத்தரால நினைச்சுப் பாக்கேலுமா? இண்டைக்கு வந்து நெஞ்சு வலிக்க, நொந்தலப்பட்டுக் கதைக்கிறவைக்கு இந்தக் கூத்துகளின்ர பேர் ஊர் ஏதாவது தெரியுமோ எண்டு கேட்டுப்பாரும் அவயளட்ட ராசா. ஏனவ்வளவுதூரம் போறியளப்பன்.... ம், எங்களிண்ட மூத்தகுடியள் கட்டிவச்ச ஒவ்வொரு அம்பாவுமே ஒவ்வொரு கத சொல்லுமே மோனே. மனிசர் உசிர் வாழுற காலத்தைய எட்டு ரசங்களுக்க கட்டுப்பட்டு நிக்கும் எங்கட கூத்து. கடசிமூச்சக் கைவிட்டபிறகு சவக்கட்டைக்கு வாற சாந்தரசத்த சாபமெண்ட்ட நினைப்போ, பாவமெண்ட நினைப்போ முன்னத்தய நாடகங்கள் நாடுறதில்ல. காரணம் தம்பி.... வாழ்ந்து மகிழ்ந்து கண்டனுபவிச்சதத்தான் பாடினானுகள் எங்கட பாட்டன் பூட்டன். தாங்கள் கண்டறியாத சாவ எழுதிற திறவ அவங்கள் தொட்டும் பாக்கேல்ல. நான் இளந்தாரியா இருந்த காலத்தில எங்கட அண்ணாவியாற்ற ஒரு கூத்துக்கொப்பி கடசிப்பக்கத்தில எழுதி வச்சதப் படிச்சது இப்பவும் நினைவிருக்கு. அதெப்பிடியெண்டால் தம்பி...
அண்ணாவியார் சற்றுக் கோபமானதை அவதானிக்க முடிந்தது. இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக் கூடாதோ என்றும் தோன்றியது. சில காலத்துக்குமுன்னால் ஐரோப்பாவில் நிகழ்ந்த ஒரு இலக்கியக் கூட்டத்தில் "ஷேக்ஸ்பியர் போன்ற நாடகாசிரியர்மார் எங்களிடம் ஏன் உருவாகவில்லை" என்ற வாதங்கள் நடந்தபோது ஒரு கவிஞன் சொன்னான் "யாழ்ப்பாணத்துச் சாதியச் சட்டாம்பிமாரின்ர கையில ஆப்பிட்டிருந்தால் ஷேக்ஸ்பியரையும் தலையெடுக்க விடாமல் ஓரங்கட்டியிருப்பாங்கள்" என்று.
"ஐயா, இன்னொரு அபிப்பிராயம் சொல்லுப்படுகுது, அதப்பற்றி உங்கட கருத்தயும் ஒருக்காச் சொன்னா நல்லாயிருக்கும்"
"கேளுங்க தம்பி"
"இந்த அண்ணாவி மரபு இப்ப தேவையில்லாதது. அவயளட்ட இருந்துதான் முதல்ல இந்தக் கூத்துக்கலய மீட்டெடுக்க வேண்டியிருக்கு...., அண்ணாவிமாருக்குள்ளயே இழுபறியள் கிடக்கு, என்ர கூத்துத்தான் பெரிசு, இல்ல என்ர கூத்துத்தான் பெரிசு எண்டு அடிபடுவினம். அண்ணாவிமார ஒண்டடியாக் கூட்டிக் கதைக்கலாமெண்டால் அவயளுக்குள்ளயே ஒத்துவராகினம். நாங்கள்தான் எங்களின்ர தொன்மை மரபுகள மீட்டெடுக்கவேணும். இப்பிடியெல்லாம் சில அபிப்பிராயங்கள் சொல்லுப்படுகுதையா, இதப்பற்றி......."
இதைச் சொல்லி முடிப்பதற்குள் அண்ணாவியார் அடக்கமாட்டாமல் பெருங்குரலெடுத்துச் சிரித்தார். நான் கண்ட அன்றையகால மேடையில் எதிரியான துருக்கி மன்னனைப் பார்த்து அந்தக் கூத்துக்களரியே அதிரும்படியாக எம்பரதோர் ராசாவக இவர் பெருங்குரலெடுத்து ஏளனமாய்ச் சிரித்த சிரிப்பொலியை இப்போ மீண்டும் காணக் கண்டேன் என்பதுதான் உண்மை.
"இதத்தான் தம்பி மந்தபுத்திக்காறர், ஒரு விளப்பங்கிளப்பம் இல்லாத ஆக்கள் எண்டு சொல்லுறது. புத்தி அவ்வளவும் பாழ்சாணம். அதுசரி தம்பி தெரியாமத்தான் கேக்கிறன், மரபுகளக் காமேந்து பண்ண வேணுமெண்டு சொல்லுகினம், பிறகு அண்ணாவிமரப அடியோட அழிக்கவேணுமெண்டுஞ் சொல்லுகினம். அப்ப இவயளின்ர தொன்மயும் மரபும் எதுதானப்பன்? இவயள் வேறயென்னத்தையோபற்றிக் கதைக்கினம்போல..... அண்ணாவியெண்டால் என்னண்டு நினச்சுக் கொண்டினம்.... ம்...? கூத்துச் சொல்லிக்குடுக்கிற ஆள் மட்டுமெண்டா...? அவன் தன்ர சனத்தின்ர அடயாளம் தம்பி. விலாசம் தம்பி. அண்ணாவி கூத்தையெழுதிப் பழக்கி, சோடின ஏத்திறதோட மட்டுமா இருப்பான்...? ஒரு கூத்துக்குத் தேள்வயான அடியந்தல மட்டுமா அவனுக்குத் தெரியும்.... ம்? ஓலச்சுவடியிலயிருந்து தேவாரம் விருத்தங்கள மட்டுமா அவன் படிச்சு வச்சிருப்பான்? வயித்தியம் படிச்சுவச்சிருப்பான், விசக்கடிக்கு மருந்து தெரிஞ்சு வச்சிருப்பான், அமுதமெது பாழ்சாணமெதெண்டு பகுத்திருப்பான், தன்ர சனத்த எப்பிடிக் காவல் காத்துக் காமேந்து பண்ணவேணும் எண்டு படிச்சிருப்பான், கிரகபூகோளங்களயும், சமுத்திரங்களயும் அறிஞ்சு வச்சிருப்பான், நீதிஞாயபரிபாலனத்தப் படிச்சிருப்பான்.... ம், அண்ணாவி எண்டிறது இவயள் நினைக்கிறமாதிரிப் பட்டப்படிப்பில்ல ராசா.... அது மனுமாஞ்சாதி சீவியச்சித்தாந்தம். சும்மா எடுத்தங்கவிழ்த்தமெண்டு வாயில வாற பொல்லாப்புக நரகலுகளக் கதைக்கப்படாது....."
ஒரு இடிமுழக்கம் எனது முகத்துக்கு அருகாமையால் கடந்து போனதுபோல் நினைத்திருக்க, விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கினார் தாவீதுத்திறவு அண்ணாவியார்.
"இந்த அண்ணாவியள ஒரு பட்டிக்குள்ள கட்டிமேய்க்கேலாமல்க் கிடக்கெண்டு விசனங் கொள்ளுகினம் தம்பி.... அதச் சொல்லுறதுக்குமுந்தி இந்த அண்ணாவிமார் ஆரெவர், போக்கென்ன நோக்கென்ன, ஊரென்ன உழவாரமென்ன எண்டதத் தறளியா அறிஞ்சுபோட்டு வந்து கால் வைக்கவேணும் ராசா. ஏனவ்வளவு தூரம் போறியள், இந்தச் சுத்துவட்டாரத்திலயே பத்துப் பதினஞ்சு கிராமங்கள் பக்கத்துப் பக்கத்திலயே இருக்குது அப்பன். ஒவ்வொரு கிராமத்தில இருக்கிற கூத்தும், கிட்டத்தட்ட ஒண்டுமாதிரித் தெரிஞ்சாலும் ஒவ்வொண்டும் பாடலாடல் முறையள், பக்கவாத்தியங்கள், பிற்பாட்டுமுறயள் எண்டு பலதும் பத்தும் வேறவேறயாத்தான் இருக்கும். இதெல்லாம் ஏன் வந்தது, எப்பிடி வந்தது எண்ட காரணகாரியம், பட்டறிவு இந்தாக்களுக்கு வேணும் தம்பி. தங்கட தங்கட கூத்துத்தான் திறம் எண்டு ஒவ்வொரு ஊர்க்காறரும் சொல்லுவினந்தான் தம்பி. இத உலகத்தில ஆருதான் சொல்லமாட்டினம்? இதக்கூட விளங்கிக்கொள்ளாமல் சண்ட பிடிக்கினம், ஒருபட்டியில அடைக்கேலாமல்க் கிடக்கு, அண்ணாவிமாரக் கட்டிவச்சுத் தோலிரிக்கவேணும் எண்டு சொல்லுறதெல்லாம் அரப்பதப் புத்தியிலயிருந்து வாறதப்பன். இன்னுஞ் சொல்லப்போனா இது கெட்ட நஞ்சுப்புத்தி ராசா. இந்தக் கதகாரியங்களயெல்லாம் போய் உத்தமமெண்டு நினைக்காதேங்கோ"
அண்ணாவியார் ஒரு பிரசங்கியார்போல, அதிலும் சீற்றம் கொண்ட பிரசங்கியாராகக் காணப்பட்டார். மூப்படைந்த நிலையிலிருக்கும் இவரை உணர்ச்சிவசப்படுத்தி, இரத்தக் கொதிப்பை ஏற்படுத்தி விட்டேனோ என்றும் அச்சமாக இருந்தது.
அண்ணாவி தாவீதுத் திறவாருடனான இந்தச் சந்திப்பை இத்தோடு நிறுத்திக்கொண்டு, மிக விரைவில் இன்னும் ஒன்றோ இரண்டு முழு நாட்களை அண்ணாவியாருடனேயே களிக்கத் திட்டமிட்டுக் கொண்டேன்.
"சரி ஐயா, நாங்க கட்டாயம் இன்னொருநாள் முழுக்கமுழுக்க இருந்து கதைப்பம்..... "
"இருங்க தம்பி, சமயல் முடிஞ்சிருக்கும் சாப்பிட்டுப் போகலாம். நல்ல கருங்கண்ணித் தலக்கறி தம்பி. வீடுதேடி வந்தனீங்க கை நனைக்காமல்ப் போகேலாது, இஞ்சேருமப்பா.... தம்பி வெளிக்கிடப் போறாராம் சுறுக்கெண்டு பாரும்"
"கட்டாயம் ஐயா, நான் உங்களோடயிருந்து சாப்பிட்டுப் போறன்"
நாளை பேசாலை, தலைமன்னார் பயணிப்பதான திட்டம். நண்பர்கள் உதயசூரியன், தேவபாலன், சத்தியநாதன் ஆகியோரை தலைமன்னாரில் சந்தித்து ஒரு வாரம் அங்குள்ள கூத்துக் கலைஞர்களுடன் உரையாடுவதான ஒரு ஏற்பாடு அது.
அண்ணாவியார் வீட்டுப் பனைமட்டை வேலியில் இப்போ அந்த தாவீது ஓணான் ஒரு பக்கமாகவும், இரண்டு கோலியாத்து ஓணான்கள் எதிர்ப் பக்கமாகவும், போர்நிலை எடுத்து நின்றன.
-------------------
2018. ஒக்டோபர் 2ஆம் திகதி, இரவு 7மணி. தலைமன்னார். சத்தியநாதனோடு பஸ்ஸை விட்டிறங்க, எம்மைக் காத்துக்கொண்டு நின்றார்கள் உதயசூரியனும், தேவபாலனும். அன்றிரவு தேவபாலன் வீட்டில், வழமையாக நண்பர்கள் இப்படிச் சந்தித்துக் கொண்டால் எப்படி நிகழ்ந்தேறுமோ அப்படியே தீர்த்தப்பாமாலையாக உறைப்பும் உவப்புமான ஆழிப்புஷ்பங்களோடு சிறப்பாக நிகழ்ந்தேறலாயிற்று. மறுநாள் காலையில் தேவபாலன் வீட்டார் படைத்தருளிய குரக்கன் புட்டும், நண்டுக்குழம்பும், கட்டாக்கருவாட்டுப் பொரியலுமாகக் களமாடிவிட்டு நால்வரும் பேசாலைக்குப் பயணமானோம்.
அண்ணாவிமார் ஜெகநாதன் குரூஸ், அம்புரோஸ் குலாஸ் என்று இன்னும் சில கலைஞர்களைச் சந்தித்து அம்பாப் பாட்டும் கூத்துமாகப் பதிவு செய்து கொண்டோம். அன்றைய தினம் பேசாலையின் கரையோரத்து மென் காற்றுடன் இதமான இசையாகக் கரைந்து, கலந்து போயிற்று.
வங்காலை, சிலாவத்துறை, முத்தரிப்புத்துறை என தேடுதல்ப் பயணங்களை மூன்று தினங்களுக்குள் முடித்துக் கொண்டு ஒக்டோபர் 5ஆம் திகதி மதியம் மீண்டும் தலைமன்னார் தேவபாலன் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். நானாட்டான் கைக்குத்தரிசிச்சோறும், நண்டுக்கறியும், நகரைமீன் சொதியும், கயல்பொக்கணிப் பொரியலுமாக அந்த மதியம் எம்மைச் சிறைப் படுத்திக் கொண்டது. சாப்பிட்டு முடிந்ததும் சத்தியநாதனையும் அழைத்துக்கொண்டு தலைமன்னார் கரையோரக் காட்சிகளைப் படங்கள் எடுப்பதற்காகப் புறப்பட்டுக் கொண்டிருக்கும் போதுதான் மருசலிடமிருந்து அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது. அண்ணாவி தாவீதுத்திறவார் இறந்துவிட்டார் என்ற துன்பச்செய்தி அது. பட்டப்பகாலாய், வெட்டவெளியாய் விரிந்துகிடந்த தலைமன்னார் மேற்குக் கடற்பரப்பின் மேலாய் எங்கிருந்துதான் அந்தக் கருமுகல்கள் திரண்டனவோ...... பொலபொலவென்று அடித்துச் சொரிந்தது வானம். நெருப்புக்கொள்ளிகொண்டு சுட்டாற்போல் கொண்டல் பதைபதைத்து அங்குமிங்கும் ஓடி மரங்களை உலுப்பியது. குய்யோ முறையோவென அலைக்கரங்களை வானத்தை நோக்கி உயர்த்தித் தலைமன்னார்க் கடல் கொந்தளித்துக் குமுறியது. தீவகத்திலொரு மூத்த கூத்தன் செத்துப்போனதற்கு மன்னார் வளைகுடாவே துக்கித்துக் குளறி ஒப்பாரி வைத்ததெனவாகக் கண்டுகொண்டேன். ---------------------------------
2018. ஒக்டோபர் 6ஆம் திகதி, காலை 7மணி. பூதத்தம்பி கோட்டை, 2ம் ஒழுங்கை. ஒரே சனக்கூட்டம். இன்னும் இன்னும் வந்துகொண்டே இருந்தார்கள். பெரும்பாலானோர் 60, 70 வயதுகளைத் தாண்டிய பெண்களும் ஆண்களுமாகக் காணப்பட்டார்கள். அயற்கிராமங்களில், அயலூர்களில் இருந்து மட்டுமல்ல, எங்கெங்கோ தூரத்துப் பிராந்தியங்களில் இருந்தெல்லாம் வந்து கொண்டிருப்பதாக அங்கு அறிய முடிந்தது.
வீட்டுக் கூடத்தில் அண்ணாவியாரின் உடல் மலர்கள் சூழ்ந்த வெண்பட்டுப் படுக்கையில் கிடத்தப் பட்டிருந்தது. அந்த முகத்தில் இப்போ சாந்தம் படர்ந்திருந்தது என்று என்னால் சொல்ல நிச்சயம் முடியாது. ஏனெனில் அது தென்படவில்லை. அவரது முகத்தையே பார்த்துக்கொண்டிந்த நான் இமைகளை வெட்டித் திறக்கும் ஒவ்வொரு தடவையும் அண்ணாவியாரின் முகத்தில் வெவ்வேறு ரசங்களை உணரலானேன். மூடப்பட்டிருக்கும் அவரது விழிகளுக்குள் ஏதோ அசைவதாகவும் உணர்ந்தேன்.
அந்த ஒன்பதாவது ரசம் சாந்தம் எனச் சொல்லிக் கொண்டிருப்போர்மீது சந்தேகம் இன்னும் வலுக்கத் தொடங்கியது? தாவீதுத்திறவு அண்ணாவியாரின் பாதங்களைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டு கூடத்தை விட்டு வெளியே வந்தேன். சனங்கள், சனங்கள்...... சோகத்தை முகங்களில் அப்பிய சனங்கள் வந்துகொண்டேயிருந்தார்கள்.
அண்ணாவியார் வீட்டுப் பனைமட்டை வேலியில் இப்போ ஏழெட்டுத் தாவீது ஓணான்கள் அங்குமிங்குமாக நடந்து திரிந்தன.
என்ற பாடலை செத்துப்போன தாவீதுத்திறவு அண்ணாவியாரின் முகத்தில் வாசித்தவனாக சத்தியமாக உணர்ந்து கொண்டேன்.
நிறைவு!
You must be logged in to post a comment Login