Recent Comments

    என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது!

    மொதல்ல வெறும் மக்கள் அமைப்புன்னாங்க. அதுக்குள்ளே சாமிமார் வேற இருந்தாங்க. நல்லது. ஏற்கனவே சிவில் சமூகம்னு ஒண்ணு இருக்கே, அதுக்குள்ள இது எதுக்குன்னு தலையைச் சொறிஞ்சோம். மக்களுக்குள் பெண்கள் இல்லையா, மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜான்சிராணி அனந்தி அக்காவுக்கும் பூலான்தேவி மண்ணெண்ணெய் அக்காவுக்கும் கூட தகுதியில்லையா என்று குழம்பிப் போனோம். அரசியல் அமைப்பு இல்லைன்னு அம்மாவாணை அடிச்சு சத்தியம் பண்ணினாங்க. அப்போ தெரிவு பெறாத அரசியல்வாதிகள் ஏன் இருக்காங்கன்னு விளங்கவும் இல்லை. தெரிவு செய்யப்பட்டவர்கள் ஏன் புறக்கணிக்கப்பட்டார்கள் என்று புரியவும் இல்லை. கூட்டமைப்புக்கு எதிராக இல்லைங்கிறாங்க. ஆனா, தனிநபர் முடிவுகளை இனிமேல் அனுமதிக்க முடியாது என்கிறாங்க. இனிமேலும்... என்றிருந்தால் மதித்திருக்கலாம். குருக்கள் எது செய்தாலும் குற்றமில்லை. சம்பந்தர் செய்தால் குற்றமாம்! அதுக்குள்ள மந்திரிசபை ரேஞ்சில் உப குழு இருக்குன்னாங்க. நாடு கடக்காத அரசாங்கமாயிருக்குமோன்னு பயமா வேறு இருந்திச்சு. பிறகு பிரதமர் அது இதென்னு வந்து, ஸ்கைப்பில் பாராளுமன்றம் நடத்துவார்களோ என்று பீதி வேறு வந்திச்சு. அடி மட்ட மக்கள் கருத்து அப்பிடின்னாங்க. ஆனா பாத்தவங்கல்லாம் படிச்சவங்க மாதிரியே இருந்தாங்க. அடிமட்ட மக்கள் இயக்கம்னா எதுக்கு வாய் பேசா ஊமைகளைத் தலைவர்களாக்கி, பத்திரிகையாளர்களுக்கு ஒளிச்சு ஓடி... இரகசியமாய் வைச்சிருந்தாங்கன்னு ஓடி முழுசினோம். நதிமூலம், ரிஷிமூலம் மாதிரி யார் இந்த முன்னெடுப்பைச் செய்தது என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. வலம்புரி என்று பரவலாய் வந்தது. வலம்புரிக்கு அடிமுடி தேடினால், அதன் பின்னால் யார் என்பது வடிவாகத் தெரியவில்லை. முதல் தடவை பெண்களைக் காணவில்லை என்றால், இரண்டாம் தடவை அமர்ந்த போது, சாமிமாரைக் காணவில்லை. வந்து ஆசீர்வாதம் தந்து விட்டு, தட்சணையை வாங்கிக் கொண்டு, கடமை முடிந்து போனார்களோ தெரியவில்லை. இப்போ அரசியல் தீர்வுத் திட்ட வரைவுக்கு ஒருத்தர் வந்திறங்கிறார்ங்கிறாங்க. தலைமை வகிப்பவர் முன்னாள் நீதிபதி. தமிழ்ப் போராளிகளை நீதிமன்றத்தில் விடுவித்ததாய் தகவல் இல்லை. இதற்கு முன்னால் நமக்குத் தெரிஞ்சதெல்லாம் இவர் பிரேமானந்தா பக்தர் என்பது மட்டும் தான். இதற்குள் புலன் பெயர்ந்த தமிழர்கள் துரோகி என்று கழுவேற்றக் கூடிய ரேஞ்சில், தற்போதும் மகிந்தவைக் கட்டிலேற்றத் துடிக்கும் வாசுவின் வீட்டில் சம்பந்தம் வைச்சவராம். தற்போதைய அரசியல் மார்க்கட் நிலவரப்படி சுமந்திரன் துரோகிங்கிறதால, கறுவாக்காட்டு அரசியல்வாதின்னோ, பின்கதவால் வந்தவர்னோ அவரை யாரும் திட்டவும் இல்லை. வந்திறங்கிறவர் முன்பு ஜே.ஆர் அரசில் சட்டமா அதிபராக இருந்து அன்றைய விடுதலை இயக்கங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து சிறைக்கு அனுப்புவதில் முன்நின்றவர். பிறகு தேசியத் தலைவருக்கு அட்வைசராயும் இருந்தவர்ன்னு குழப்புறாங்க. அன்று முதல் இன்று வரைக்கும் மக்களுக்காக தங்களைத் தியாகம் செய்தவர்கள் இன்றைக்கும் துரோகிகளாக மறக்கப்படாமல் இருக்கும்போது, இவர்கள் எல்லாம் எப்போது பாவம் கழுவப்பட்டு புனிதர்களானார்கள்? மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களே, சர்வதேச அனுசரணையுடன் தீர்வைப் பெற முக்கி, முனகிக் கொண்டிருக்கிறார்கள். இதற்குள் புத்திசீவிகள் நிறைந்த இந்த மக்கள் இயக்கம் தீர்வுத் திட்டம் வரைந்து எப்படி தீர்வு அல்லது ஈழம் பெறப்போகுதாம்? யாழ்ப்பாண முறையில் தயாரிக்கப்பட்ட புலி பிராண்ட் தமிழ்த் தேசியமே! உன்னை நம்மளாலே புரிஞ்சுக்கவே முடியலைப்பா!

    Postad



    You must be logged in to post a comment Login