பிரபாகரன் படையணி திருப்பக் கால் பதிக்கும் மண்ணில!
என்னவோ, மாவீரர் மாதம் தமிழுணர்வாளர்களுக்கு அள்ளி வழங்கிக் கொண்டு தான் இருக்கிறது. நாராயணனுக்கு தொலைவில் நின்று செருப்பெறிந்ததை, செருப்பால் அடித்ததாய் பெருமை கொண்ட சூடு ஆற முன்னால், இந்த தமிழுணர்வாளர்கள் முகப்புத்தகத்தில் ஈழம் கிடைத்த பெருமையில் தலைகால் தெரியாமல் துள்ளிக் குதிக்கிறார்கள்.
சுமந்திரனுக்கு அவுஸ்திரேலியாவில் தமிழுணர்வாளர்கள் கொடுத்த வீரவரவேற்பைப் பார்க்க, எமது இனத்தின் அவல நிலையைப் பார்த்து அழுவதா? சிரிப்பதா? என்ற நிலையை விட வேறு எதுவும் இல்லை.
இருந்தாலும் சிரிப்பை மூட்டிய விடயம், இந்த பிரபாகரன் படையணிக் கதை. நாளைக்கு அவுஸ்திரேலியா பிடித்து திருப்பி அனுப்பப் போகிறது என்றாலேயே, காலில் விழுந்து ஐயோ, திருப்பி அனுப்பினால், வெள்ளை வான் பிடிக்கும் என்றும் கதறியழும் கூட்டம், 'பிரபாகரன் படை திருப்பக் கால் பதிக்கும் மண்ணில' என்று முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறது.
அமர்க்களமாய், வந்தவர்கள் எல்லாம் கொடி பிடித்த பழக்கமோ என்னவோ, செல்போனைத் தூக்கிப் பிடித்துப் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். நாராயணனுக்கு செருப்பு எறிந்து ஒரு இரவிலேயே 'பாதணியை ஈகை செய்த மாவீரன்' ஆனது போல, தாங்களும் புலன் பெயர்ந்த தமிழுணர்வாளர்களுக்கு ஹீரோக்கள் ஆகும் எண்ணமோ என்னமோ, இந்த கூத்தை பல கோணங்களில் படம் பிடித்து பலரும் முகப்புத்தகத்தில் ஏற்றியிருக்கிறார்கள்.
தன் சகோதரனை துரோகி என்று போட்டுத் தள்ளும்போது துள்ளிக் குதித்த போதே தமிழனுடைய தரம் எங்கோ பாதாளத்திற்கு போய் விட்டது. அற நனைந்தவர்களுக்கு குளிர் என்ன? கூதல் என்ன? இதுபோன்ற விடயங்களை எங்கள் சமூகத்தில் காணாமல் விட்டால் தான் நாங்கள் ஆச்சரியப்பட வேண்டும்.
இலங்கைப் பிரச்சனை பற்றி அடிநுனி தெரியாமல், புலிகள் போதித்ததை மட்டுமே விழுங்கியதை அரசியல் கற்றதாக நினைத்துக் கொண்டு, புலிகளுக்கு முண்டு கொடுக்கும் இணையத் தளங்களில் புலம்பப்பட்டதையே திருப்பி ஒலிபரப்புவதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாமல், ஆளாளுக்கு ஏதோ தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மாதிரி, நீ எனக்குப் பதில் சொல்ல வேண்டும் என்ற பாணியில் இந்தக் கும்பல் மிரட்டுகிறது.
புலிகளின் வால்களுக்கு, நாங்கள் அடிக்கடி சொல்வது போல, புலிகளின் முட்டாள்தனம் தான் தமிழர்களை இன்றைய நிலைக்கு கொண்டு வந்து விட்டது என்ற உண்மையை மறைக்க, என்றைக்கும் ஒரு துரோகி தேவை. அந்த துரோகிகளின் நீண்ட பட்டியலில் சுமந்திரனும் ஒருவர். நாராயணன் போல!
சுமந்திரன் கனடா வந்த போதும், திமிற முனைந்தவர்கள் பலருக்கு சுமந்திரன் துணிச்சலாகப் பதில் கொடுத்தது போலவே, துணிச்சலுடன் இந்தக் கூட்டத்திற்கும் பயந்தும் ஓடாமல் தன்னுடைய கருத்தைக் கூற முயன்றிருக்கிறார். இந்தத் துணிச்சல் முன்பு அமிர்தலிங்கத்திற்கு இருந்தது. இவ்வாறான தன்னம்பிக்கை உள்ளவர்கள் தான் எங்கள் அரசியலுக்குத் தேவை.
சுமந்திரன் அங்கே தமிழ் மக்களால் ஜனநாயக முறையில் வாக்களிப்பு மூலமாகத் தெரிவு செய்யப்பட்டவர். விசயம் தெரியாத வயதில் துப்பாக்கியைத் தூக்கி அரசியல் எதிரிகளைத் துரோகிகள் என்று போட்டுத் தள்ளி, தன்னைத் தானே சூரியதேவன், தேசியத் தலைவர் என்று இடி அமின் மாதிரி தனக்குத் தானே முடி சூட்டி, பதவிக்கு வரவில்லை. தன்னுடைய கருத்துகளுக்கு மக்கள் ஆதரவைக் கேட்டு தெரிவு செய்யப்பட்டவர். அதற்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்.
இவர்களுடைய தீவிரத்தைப் பார்த்தால் சென்ற தடவை கஜேந்திரக் குதிரைகள் மீது பணம் கட்டியது போலவும், விக்னேஸ்வர வேலவன் மீது விசுவாசம் கொண்டவர்கள் போலவும் தெரிகிறது.
அங்கே வாழும் மக்கள் தாங்கள் தங்களுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்திருக்கிறார்கள். இவர்கள் இங்கிருந்து பணத்தை வீசியெறிந்தும் இவர்களுடைய மேய்ப்பர்களை நிராகரித்திருக்கிறார்கள். அங்கே வாழும் மக்களுடைய தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்று அங்கீகரித்து விட்டு, பேசாமல் இருக்காமல், துள்ளிக் குதிப்பதாக இருந்தால், கஜேந்திரன் போன்றவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்து வாக்களித்து இங்குள்ள பாராளுமன்றங்களுக்கு அனுப்பலாம். அவர்களும் அங்கே தமிழில் உரை நிகழ்த்தி ஈழத்தைப் பெற்றுத் தருவார்கள்.
இந்த கஜேந்திரகுமார் தற்செயலாகத் தன்னும் பாராளுமன்றம் போயிருந்தாலும், இவர்கள் எதிர்பார்த்தது போல, சர்வதேச விசாரணையையோ, கைதிகளின் விடுதலையையோ பெற்றுத் தந்திருக்க முடியாது.
தமிழ் கைதிகளின் விடுதலைக்கு இவர்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று கூக்குரலிடுபவர்கள் அந்த கைதிகளின் விடுதலைக்கு தாங்கள் என்ன செய்தார்கள் என்பதைச் சொல்ல முடியுமா?
புலிகளின் அதிமுக்கிய தலைவர்களே கைது செய்யப்பட்டிருந்த போது, அவர்களை வெளியே காட்டு, அவர்களை அரசியல் கைதிகளாக அங்கீகரி என்று போராட்டம் நடத்தாமல், அவர்கள் சயனைட் குடித்து தியாகிகள் ஆகாமல் எதிரிகளிடம் சரணடைந்தார்கள் என்று அவர்களைக் கை கழுவி விட்ட கூட்டம் இன்றைக்கு கைதிகளை விடுவிக்க ஒன்றும் செய்யவில்லை என்று அழுகிறது.
ஜனநாயக நெறிமுறைகள் மீது நம்பிக்கையில்லாத ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் தான் எங்கள் போராட்டத்தைத் தொடரும் என்றால் தமிழனின் எதிர்காலம் தற்போதைய நிலையை விட மோசமாகவே முடியும்.
இந்தக் காடையர் கூட்டத்திடம் தான் தேசியத் தலைவர் போராட்டத்தை ஒப்படைத்தார் என்றால் தமிழனை முப்பத்து முக்கோடி தேவர்களால் கூட காப்பாற்ற முடியாது.
You must be logged in to post a comment Login