Recent Comments

    இல்லாத கொள்கைக்கு ஒரு பரப்புரைஞர் வேறு!

    எம்.ஜி.ஆர் முன்பு அடிக்கடி அமைச்சரவையை மாற்றுவார். பத்திரிகைகள் எல்லாம் (அப்போது இந்த ஊடகங்கள் எனப்படும் டி.வி முதல் முகப்புத்தகம் வரை கிடையாது) அதன் பின்னாலுள்ள அரசியல் சாணக்கியம் பற்றி பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளும். அங்கே அப்படி எந்த சாணக்கியமும் இருக்காது. சுற்றியுள்ள அண்டிப் பிழைக்கும் கூட்டம் அள்ளி வைத்துப், போட்டுக் கொடுத்திருக்கும். அதைக் கேட்டு அவர் பதவிகளைப் பறித்திருப்பார். பறிக்கப்பட்டவர்கள் கருணாநிதிக்கு துண்டு போர்த்தி, தாய்க்கழகத்துடன் இணைவார்கள். கலைஞரின் போர்வாள் நான் என்று சூளுரைப்பார்கள். சீமானின் மாமா காளிமுத்து அடிக்கடி இப்படி பல்டி அடிப்பார். அல்லது அடுத்த தடவை கருணைக்கண் கிடைக்கும் வரை காய்ந்து கொண்டு ஓரமாய் கவனிப்பாரற்றுக் கிடப்பார்கள். யாருமே முதுகெலும்பு உள்ளவர்களாக, எதிர்த்துப் போராடத் துணியாதவர்கள். காரணம், அவர்களின் அரசியலே எம்.ஜி.ஆர் என்ற விருட்சத்தில் ஒட்டுண்ணி குருவிச்சைகளாக வாழ்வது தான். பிறகு அடுத்த சுற்றில், பாவம் கழுவப்பட்டு ஞானஸ்நானம் பெற்று, அண்ணனின் போர் வாள் ஆவார்கள்... எதுவுமே நடக்காதது போல! காலில் விழும் கலாசாரத்தின் முதல் பிதாமகன் அவர். அன்று தொடங்கிய தலைகுனிவு, இன்று அம்மாவின் காலில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடப்பது வரைக்கும் தொடர்கிறது. இந்த எம்.ஜி.ஆருக்கும் ஒரு கொள்கை இருந்தது. அண்ணாயிசம் என்று! அது அவருக்கும் கடவுளுக்கும் மட்டுமே வெளிச்சமான கொள்கை. அந்தக் கொள்கையில் ஈர்க்கப்பட்ட தமிழ்நாடு அவரைக் கடைசிவரைக்கும் முதல்வராகவே பார்த்தது. அந்தக் கொள்கைக்கும் ஒரு பரப்புச் செயலாளர் உருவானார். கொ.ப.செ என்று ஜெயலலிதா அரசியலில் புகும் வரைக்கும் லதா தான் அண்ணியாக இருந்தவர். கடைசி வரை ஜோடியாக படம் நடித்ததால் அண்ணி! வாரிசு தெரிந்த வெள்ளை வேட்டிகள் யாரின் காலில் விழுந்தால் நல்லது என்பதை சரியாகவே உணர்ந்திருந்தார்கள். ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆர் போலவே, அடிக்கடி பதவிகளைப் பறிப்பார். உடன்பிறவாச் சகோதரி குடும்பத்தையே ஒரு கட்டத்தில் வெளியேற்றியவர். நால்வர் அணி படாத அவமானமா? அவருக்கும் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மரமான தன்னில் படர்ந்து பிழைக்கும் கொடிகள் என்பது நன்றாகவே தெரியும். தேசியத் தலைவரும் இப்படித் தான். பொட்டம்மானுக்கும் மாத்தயாவுக்கும், பொட்டம்மானுக்கும் கருணாவுக்கும் மோதலை உருவாக்கி விட்டு, இரண்டு தரப்புக்கும் தடி கொடுத்துக் கொண்டிருந்தார். நித்திய புன்னகை மன்னன் போட்டுக் கொடுத்ததால், பாலசிங்கத்தையே எட்ட வைத்திருந்தார். தன்னம்பிக்கை இல்லாத தலைவர்களுக்கு தன்னைக் குழி பறிக்க எல்லோரும் முயல்வதாகவே நினைப்பு இருக்கும். எல்லார் மீதும் சந்தேகம் இருக்கும். தனக்கு இரண்டாம் இடத்தில் யாரையும் வைத்திருக்க மாட்டார்கள். எந்த நேரமும் தங்களுக்கு வேட்டு வைக்கலாம் என்ற பயம். இதனால், குழுச் சண்டைகளை உருவாக்கி, கீழுள்ளவர்களை மோத வைத்து இரண்டு தரப்பும் தன்னிடம் மற்ற தரப்பை போட்டுக் கொடுக்க வைத்திருப்பார்கள். அவரவரை அவரவரின் இடத்தில் வைத்திருக்க, தன்னுடைய அதிகாரத்தை காரணமில்லாமலே காட்ட வேண்டிய தேவை இருக்கும். எனவே, அடிமைகளுக்கு எஜமானர்களைக் குஷிப்படுத்த வேண்டிய தேவை என்றைக்குமே இருக்கும். பிழைப்பு போய் விடும் என்ற பயம் மனதில் என்றும் உறுத்தும். எஜமானர்களின் காலில் விழுந்து வணங்குவது மட்டுமன்றி, சுற்றியிருப்பவர்களுக்கு தோப்புக்கரணம் போட வேண்டிய நிலையும் உண்டு. உடன்பிறவாச் சகோதரி குடும்பத்தின் கோபத்திற்கு உள்ளாகாமல் இருக்க வேண்டிய அவசியம் என்றைக்கும் இருக்கும். வெள்ளம், அரசின் பொறுப்பற்ற தனம் எல்லாம் பீப் பாடலுக்குள் மறைந்தது போல, பொதுக்குழுக் கூட்ட கோமாளித் தனத்தை மறைக்க, இன்றைக்கு கொ.ப.செ பதவி பறிப்பு இன்றைய அவல். ஆங்கிலத்தில் oxymoron என்ற வார்த்தை உண்டு. முரண்பாடான சொற்கள் இணைந்த சொற்றொடர். காதைக் கிழிக்கும் மெளனம் என்பது போல! ஜெயலலிதாவுக்கு ஒரு கொள்கை, அதற்கு ஒரு பரப்புச் செயலாளர். புலிகளின் அரசியல் பிரிவு மாதிரி! • • • தன் தலைவிதியை தானே தேர்ந்தெடுத்த தமிழன் தன் தலையில் போட்டுக் கொள்ளும் மண் தான் இவையெல்லாம்!

    Postad



    You must be logged in to post a comment Login