குவேனியை ஒரு துணி நெய்பவளாக நினைவு வைத்திருக்கின்றன
வரலாற்று நூல்களின் பக்கங்கள்.
காலமெலாம்
ஊசியும் நூலும் கையுமாக
தையல் மெஷீனுடன்
கை விளக்கின் மங்கல் வெளிச்சத்தில்
உங்களை ஞாபகமிருக்கிறது புஞ்சி…*
வாழ்வின் அஸ்தமனத்தின் இறுதித் துளியிலும்
தைத்துக் கொண்டிருந்த தையல்காரி …
விழிகளில் பாதி இல்லை
இருட்டில்
நினைவுகளின் வெளிச்சத்தில் தைத்துக் கொண்டிருந்தாள் …
வாழ்வொரு தையலூசி …
தனிமையால் வறுமையால் துரோகத்தால் புறக்கணிப்பால்
கவிந்த இருட்டில்
ஒவ்வொரு முறை அது தொலைந்த போதும்
மீண்டும் மீண்டும் அதைக் கண்டெடுத்தீர்கள் …
ஊசித் துளையில் நூலைக் கோர்க்கும் முதிய விரல்களை
அந்த மங்கலான விளக்கு வெளிச்சம்
தோற்கடிக்க முனையும் ஒவ்வொரு கணத்திலும்
இடர் என்ற ஊசித் துளையினூடாக
மீண்டு வருகிறீர்கள் ஒரு நூலாக …
நூல் கொண்டு தைக்கவியலாத
வாழ்வின் பொத்தல்களால்
விழுந்த உங்களை பூமி கூட தாங்க மறுத்த நாட்களுண்டு …
வாழ்வின் அஸ்தமனத்தின் இறுதித் துளியிலும்
தைத்துக் கொண்டிருந்த தையல்காரி …
உங்கள் விரல் பட்டு எங்கள் சட்டைகளில்
நிறம் நிறமாகப் பூக்கள் சிரித்தன …
என் சட்டையில் ஒட்டகச் சிவிங்கி
தங்கையின் சட்டையில் தோடுகளணிந்த கோமாளிகள்
இன்னொரு தங்கையின் சட்டையில் வரிசையில் துள்ளும் முயல் குட்டிகள்
பெரிய கண்களுடன் நட்பாய்ச் சிரித்தபடி நீல யானை அண்ணனின் சட்டையில் …
தலையணைகளில் வரிசையாய்
எம் கனவுகள் வரை ஊர்ந்து வரும்
புன்னகைக்கும் வண்ண வண்ண நத்தைக் குஞ்சுகள்…
எங்கள் சிறு பிராயத்துக் கனவுகளை நெய்த மாயக்காரி நீங்கள் …
குழந்தைகளுக்குப் பூக்கள் தைக்கையில்
சிதைந்த உங்கள் சிறு பருவம்
உங்களைத் துரத்தவில்லையா புஞ்சி ?
உருகும் மெழுகைத் தொட்டு
உங்கள் விரல்கள் செய்த பத்திக் அற்புதங்களில்
சீகிரியப் பெண்களும் இசுருமுனிய காதலர்களும்
குகைச் சுவர்களையும் கற்களையும் விட்டெழுந்து வந்து
துணிகளில் உயிர்த்தனர் மீண்டும் …
எல்லா மந்திரங்களையும் மூட்டை கட்டி வைத்து விட்டு
உங்களை அவ்வப்போது அழைக்கும்
வறுமையோடு ஒளித்துப் பிடித்து விளையாடப் போய்விடுகிறீர்கள்…
பிலிங் இலைப் பளுத்தல்களும் பலா இலைப் பளுத்தல்களும்
கொட்டி கிடக்கும் நிலத்தில்
தேனாக விழுந்தொளிரும் பகலின் ஒளிக்கற்றைகளினால்
நெய்யப்பட்ட என் சிறு வயது நினைவில்
எமது சிறு கரம் பற்றி நடந்த உங்களின் வெம்மையான விரல்களில்
எத்தனை தடவைகள் ஊசிகள் குத்தியிருக்கும் புஞ்சி ?
வெசாக் காலத்து மாலை ஒன்றில்
உங்களுடன் பார்த்த தொரண்களிலொன்றிளிருந்து
எல்லாமிழந்து திக் பிரமை பிடித்து
தன் ஆடையை இழந்ததையும் அறியாமல்
வீதியில் நிர்வாணமாக ஓடுகிறாள் பட்டாசாரா …
மகளே!
நான்கு சமுத்திரங்களும்
உன் கண்ணீரால் நிரம்பி வழிகின்றன …
துயரத்தின் எல்லை நீ …
நானுமுனக்கு உதவ முடியாது
என்கிறார் புத்தர் …
சில மணி நேரத்துள்
வாழ்வின் எல்லாத் துயரையும்
ஒரு யுத்த நிலத்து தாயைப்போல
அடுத்தடுத்துக் காண்கிறாள் பட்டாசாரா…
அன்பிற்கினிய என் புஞ்சி…
மகிழ்ந்திருந்த பட்டச்சாராவின் வாழ்வில்
சில மணி நேரத்துள் துன்பம் சூழ்ந்தது
துன்பம் சூழ்ந்த உங்கள் வாழ்வில் சில மணி நேரமே மகிழ்வு இருந்தது…
ஒரு தையலூசி என் ஆன்மாவைத்
தைத்துக் கொண்டு வெளிச் செல்வதை
என்னையும் உங்களையும் பிரித்த காலம்
முறைத்துப் பார்த்தபடி நிற்கிறது …
சாவு ஒரு புதிராகவிருந்த
சிறு வயதில்
மனிதர்கள் சாவது ஏன் என
ஒரு நாள்
உங்களிடம் கேட்டேன்
மூச்செடுக்க மறப்பதனால்
என்று சொல்லி நீங்கள் சிரித்ததாக நினைவு …
எனக்குத் தெரியும்
நீங்கள் வாழ மறந்ததால் இறந்தீர்கள்
வாழும்போதே …
24.10.2015
*-சிங்கள மொழியில் சித்தி அல்லது சிற்றன்னை
(இரு வருடங்களுக்கு முன் மறைந்த என் சித்தி ஜீன் மேர்டல் நினைவாக)
You must be logged in to post a comment Login