யானை துரத்தினால்
வளைந்து வளைந்து ஓடு
பாம்பு துரத்தினால் நேராக ஓடு என்று
காடுகளையும் ஊர்களையுந்
தொலைத்துவிட்டு
நகர்புறத்தில்
தொலைந்து போன என் ஆச்சி
எனக்குச் சொல்லிக் கொண்டிருந்தா…
எப்பொழுதும் மருண்டதைப் போலிருக்கும்
ஆச்சியின் விழிகளில்
அவர் நீந்த ஏங்கிய ஆறுகள் வறண்டு கொண்டிருந்தன…
தொலைவுகள் பாம்புகளாகி
எங்களைத் துரத்திய போது
நேராக ஓட முடியாத வளைவுப் பாதைகளினால்
காலம் என்னை இழுத்துக் கொண்டோடியது.
நாளைக்குத் தின்னும் யோசனையில்
சட்டைப் பையில் இனிப்பை வைத்து
உறங்கிப் போகும் சிறுவனாக
தொலைந்த என் இருப்பைத்
தலையடியில் வைத்து உறங்கி
ஒரு யுகம் கழித்துத்
திடுக்கிட்டு விழிக்கிறேன்.
காற்றை இழந்து கொண்டிருக்கும்
சுருங்கி விட்ட பூமிப்பந்தில்
எதையோ என்றைக்குமாய்த் தொலைத்ததினால்
எல்லாவற்றையுந் தொலைக்க வைத்த தொலைவுகள்
சாவைப் போல
நிழலைப் போல
மிக அருகில் துரத்திக் கொண்டிருக்கின்றன…
18.05.2015
You must be logged in to post a comment Login