நெஞ்சிலே பாலை வார்க்கிறீங்க!
பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி
'ஈழத்தில்' புலி பட வெளியீட்டின் போது, விஜய் ரசிகர்கள் கட்டவுட்டுக்கு பால் ஊற்றினார்கள் என்று தமிழுணர்வாளர்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள்.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தின் முன் தோன்றிய மூத்த குடியின் வழித் தோன்றல்கள், நாகரீகத்திலும் பண்பாட்டிலும் பகுத்தறிவிலும், ஏன் கூர்ப்பிலும் மேம்பட்ட யாழ்ப்பாணத் தமிழினத்தின் இளைய தலைமுறை, மாவீரர்கள் தங்கள் உயிரை ஈகம் செய்த மண்ணில், தேசியத் தலைவரின் நல்லாட்சியில் பாலும் தேனும் ஓடிய தாய் மண்ணில், கேவலம், ஒரு இந்தியச் சினிமாக்காரனின் கட்டவுட்டுக்கு பால் ஊற்றுவதா?
என்ன திடீரென்று இந்தக் கொலைவெறி?
கொஞ்ச நாளைக்கு முன் தான் எங்க வீட்டு மாப்பிள்ளைன்னு விசிலடிச்சிட்டுக்கிருந்தீங்க! 'கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டு' 'இன அழிப்புச் செய்யப்பட்ட' ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தார்னு புல்லரிச்சிட்டு இருந்தீங்க!
நீங்க காலுக்குப் பால் ஊத்தும் உங்க மாப்பிள்ளையின் கட்டவுட்டுக்குத் தானே உங்க ஊர்க்காரங்க ஊத்திக்கிறாங்க. ஏதோ ஈழத்தில் இது என்றுமே நடக்காதது போலவும், கலாசாரம் சீரழிஞ்சு போச்சு என்றும் கொதிக்கிறீங்களே! பால் விற்கிற விலையில் ஊத்திக்கிறதுக்கு கஷ்டப்பட்டு உழைச்ச காசாயிருந்தா, கொட்டியிருப்பார்களா? இங்கே சகல சட்ட விரோதமான முறைகளிலும் சம்பாரிச்சு, அங்கே அனுப்பும் பணத்தில் தானே இந்தக் கூத்துக்கள் எல்லாம் நடக்கும்.
அதெல்லாம் சரி, இதெல்லாம் ஏதோ ஊருக்குப் புதிசு என்ற மாதிரி, ஏன் இந்த குய்யோ முறையோ?
சிவாஜி பட வெளியீட்டின் போது, திரைப்படச் சுருள்களை, நம்ம ஊர் கிடா வெட்டுக்கு முதல் ஆட்டோடு வரும் நாசக பானைக்கு செய்தது போல, நல்லூர் கோயிலில் பூசை வைச்சு, மேளதாளத்தோடு கொண்டு வந்து, மணியம் கீறிய நாற்பது அடி கட்டவுட் முன்னால் நின்று வரவேற்கும் தியேட்டர்களில் வாழை தோரணம் கட்டி அதிகாலை ஒரு மணிக்கு முதல் ஷோ ஓடிய பூமி இது. இந்த ரசிகப் பெருமக்களின் பண்பு தெரிந்து தான் கலரிக்குப் போகும் கியூ வரிசைக்கு சிறைச்சாலைகளை விட உயரமாய் மதில் கட்டி, மேலே பிசுங்கான் பதிந்திருந்தார்கள். (அதற்கும் உடுத்திருந்த சாரத்தைக் கழட்டி கையில் பிடித்துப் பாய்ந்து, படக் கூடாத இடங்களில் வெட்டித் தள்ளி விடுமே என்ற பயம் இன்றி, சாகசம் காட்டிய வீரவேங்கைகளும் உண்டு) ஒழுங்காக வரிசையாக நின்று பண்போடு நகரும் பழக்கமே தெரியாத பண்பாட்டுக் கூட்டம். பின்னால் நிற்பவன் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் கியூவில் 'பூந்து விளையாட' யாழ்ப்பாணத் தமிழனைக் கேட்டுத் தான். அதற்குள் மற்றவர்கள் நிற்கும் கவலையில்லாமல் எச்சில் துப்பி...
இதைக் கண்டால் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் விடுவார்களா? அறுபதடி கட்டவுட். அதிகாலை ரசிகர்களுக்கு இனிப்பு. ஹவுஸ்புல்லாக ஓட வேண்டும் என்பதற்காக தங்கள் சொந்தப் பணத்தில் டிக்கட் வாங்கி கிழித்தெறிந்து மற்றவர்களைப் பார்க்க விடாமல் செய்தவர்களும் உண்டு. ஒரே படத்தை முதல் நாள் அடுத்தடுத்த ஷோ பார்த்த மாவீரர்களும் உண்டு.
இதற்குள் சிம்மக்குரல், உரிமைக்குரல் என்றெல்லாம் அந்த நடிகர்களின் படங்களின் பெயர்களில் பத்திரிகைகள் வேறு. வரிசையில் நிற்கும் இந்த ரசிகர்களுக்கு விற்பனையாகும். வசூல் விபரம், மற்ற நடிகரின் பத்திரிகையில் வந்த புழுகுகளுக்குப் பதிலடி. ஆசிரியர் கருத்து.
பொறிப் பறக்கும்.
பின்னால் ஐம்பதாம் நாள், நூறாம் நாள், வெள்ளிவிழாக் கொண்டாட்டங்கள் வேறு.
மற்ற நடிகர்களின் போஸ்டர்களுக்கு சாணி அடிப்பது இன்னொரு போராட்ட வடிவம். இப்படியாகத் தானே ஆறாம் ஏழாம் வகுப்பில், யாழ்.பாதுகாவலன் அச்சகத்தின் பின்சுவரில் சிவாஜியின் படப் போஸ்டருக்கு யாரோ அடித்த சாணியை கரும சிரத்தையுடன் தடியால் தட்டி கறை நீக்கிய நண்பன் இங்கே வீடு விற்கிறான்.
அடுத்த முறை வரும் போது கேட்டுப் பார்க்க வேண்டும்.
டேய், உனக்கு நினைவிருக்கோடா?
மச்சான், உதையெல்லாம் ஆர் நினைவிலை வைச்சிருக்கிறது. நீ உப்பிடித் தான் ஒண்டையும் மறக்க மாட்டாய்.
எங்கள் உரையாடல் வழமையில் இப்படித் தான் போகும்!
கியூறியஸ் வாத்யார் ரசிகனாக இருந்தாலும் மாற்றுக் கருத்தாளர்களை மதிக்கும் பண்பாடு மிக்கவன். சகலருடைய கருத்துச் சுதந்திரங்களையும் மதிப்பவன். தன் நண்பன் போஸ்டர் சாணியைத் தட்டி சுத்தம் செய்தது பற்றி ஆட்சேபிக்கவேயில்லை.
எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு எல்லாம் ரசிகர் மன்றங்கள் இருந்தன. ஏன் அனைந்திந்திய அதிமுகவிற்கு கிளை கூட இருந்தது. எம்.ஜி.ஆருக்கு குருநகரில் சிலை எழுப்பினார்கள். எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர் கூட்டணி மேடைகளில் புழுதி கிளப்பினார்.
இதெல்லாம் நடந்தது தான் இந்தப் புண்ணியபூமி.
இப்போ மட்டும் எதற்கு குதிக்கிறீங்க?
அப்போது தெருவில் சாணி இருந்தது. எறிந்தார்கள். இப்போது வெளிநாட்டுப் பணத்தில் காட்டும் ஷோவுக்கு சாணியைக் கையால் தொடுவது அரியண்டம். இதற்காக சாணியைப் பக்கட்டில் போட்டா விற்க முடியும்? மூலைக்கு மூலை கிடக்கும் சுப்பர்மார்க்கட்டுகளில் பக்கட்டில் பால் கிடைக்கிறது. ஊற்றுகிறார்கள்.
தமிழ்நாட்டில் ரசிகர்கள் தீக்குளித்தார்கள், இரத்தம் விற்றுப் படம் பார்க்கிறார்கள் என்றெல்லாம் செய்தி வரும் போது, பகுத்தறிவுத் திலகங்களான நீங்கள் தமிழ்நாட்டுப் பாமரர்கள் பற்றி ஒரு கேவலச் சிரிப்புச் சிரிப்பீர்கள்.
நாங்கள் அப்பிடியொண்டும் செய்யேலைத் தானே என்று புளகாங்கிதம் அடைவீர்கள்.
வி.பி.கணேசனின் கம்புச் சண்டைகளைப் பார்த்தால், நமக்கும் இந்த ஆசையெல்லாம் வராது தான்.
ஆனால் சினிமா ஹீரோக்களுக்கு செய்ய வேண்டிய சகலதையும் யாழ்ப்பாணத்தான் அரசியல் ஹீரோக்களுக்குச் செய்தான்.
தளபதி விஜய்க்கு முன்னால் நமக்கும் தளபதி அமிர் இருந்தார். தல அஜித்துக்கு முன்னாடி, நமக்கு ஒரு தேசிக்காய்த் தல இருந்தார்.
தமிழக ஹீரோக்களுக்கு இரத்தம் விற்றுப் படம் பார்த்தால், நாங்கள் கையை பிளேட்டால் கீறி இரத்தத் திலகம் வைத்தோம். தீக்குளித்தால், நாங்கள் குண்டைக் கட்டிக் கொண்டு போய் வெடித்துச் சிதறினோம்... போராட்டம் என்ற பெயரில்!
அவர்கள் செய்தால் பாமரத் தனம். நாங்கள் செய்தால் போராட்டம்!
போராட்டம் என்ற பெயரில் பகுத்தறிவை நாங்கள் தொலைத்து எவ்வளவு காலம்?
தேசிக்காய்த் தலயின் படத்திற்கு நீங்கள் செய்யாததையா இவர்கள் செய்கிறார்கள்? குஷ்புவுக்கு கோயில் கட்டியதைக் கேலி செய்த நீங்கள், சாமியறை முதல் ஐ.நா முன்றல் வரைக்கும் போராட்டம் என்ற பெயரில் தலயின் படத்தை வைத்துச் செய்யாத கூத்தா?
இன்றைக்கு இந்த ரசிகர்கள் பால் ஊற்றுவது பற்றி கொதித்தெழுவதற்கு எந்தக் காரணமும் இல்லை.
தேசிக்காய்த் தலயின் நல்லாட்சியில் இந்தக் கூத்துக்கள் இல்லைத் தானே என்று தொடங்குவீர்கள்.
காரணம், பகுத்தறிவில்லாத மிருக சாதி, போட்டுத் தள்ளிவிடும் என்ற பயம் மட்டும் தான். பால் ஊத்தினால் பச்சை மட்டை அடி விழும் என்ற பயம்.
சினிமாப்பாடல்களைத் தடை செய்து விடுதலை கீதம் போட்டது போராட்டத்திற்காகவா? இல்லை, குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைத்து ஆட்சேர்க்கவா?
அன்றைக்கும் தேசிக்காய் தலயின் படத்தை தெருவில் வைத்து பால் ஊத்தியிருந்தால், நீஙகள் புல்லரித்திருப்பீர்கள். தமிழ் மக்கள் புலிகளோடு தான் என்று துள்ளிக் குதித்திருப்பீர்கள். இன்னும் ஒருபடி மேலே போய் ரொறன்ரோ தெருக்களிலும் ஐ.நா முன்றலிலும் படத்தை வைத்து பால் என்ன, தேனே ஊற்றியிருப்பீர்கள்.
இந்தப் பகுத்தறிவுச் சிந்தனையெல்லாம் அப்போது வந்திருக்காது.
இன்றைக்கும் புலிகள் இருந்திருந்தால், இந்த இளைஞர்களை எல்லாம் இழுத்து கொண்டு போய், களமுனையில் பலியிட்டிருப்பார்கள். நீங்களும் இங்கே இருந்து கொண்டு 'உயிரை ஈகம் செய்த' இதே இளைஞர்களான மாவீரர்களுக்கு வரிசையாக நின்று, அங்கே திருப்பித் திருப்பி றிசைக்கிள் பண்ணும் மாலைகளையும் பூக்களையும் விளக்குகளையும் விலைக்கு வாங்கி, காட்போட் கட்டவுட் மாவீரர் நினைவுக் கல்லறைகளுக்கு போட்டு தொட்டுக் கும்பிட்டு, அந்த ஏமாற்றுக் கூட்டத்தையும் பணக்காரர்கள் ஆக்கி, போராட்டத்திற்கான உங்கள் பகுத்தறிவை வெளிக்காட்டி வந்திருப்பீர்கள்.
அந்த இளைய தலைமுறை போராட்டத்தின் பெயரால், வைரவருக்குப் பலி கொடுத்த ஆடுகள் போல பலியிடப்படாமல், உயிர் தப்பி இருப்பதே பெரிய விடயம்.
தளபதி ரசிகர்களே! நீங்கள் வெறுமனே உயிர் தப்பி இருப்பதன் மூலம் உங்களுக்குப் பாலூட்டிய கொங்கைகளின் நெஞ்சில் பாலை வார்த்திருக்கிறீர்கள்.
நீங்க வெட்கப்படாமல், பெருமையோடு ஊத்துங்கப்பா! உங்க முன்னோர்கள் இதைத் தான் செஞ்சுக்கிட்டிருந்தாங்க. வேறுவேறு வடிவங்களில், வேறுவேறு காரணங்களுக்காக! இங்கே புலன் பெயர்ந்தவர்களும் இப்போதும் அதைத்தான் செய்து கிட்டிருக்காங்க.
இனத்தின் கலாசாரம் சீரழிஞ்சு போச்சு என்று முதலைக்கண்ணீர் வடிப்பவர்கள், இந்த இனத்தையே அழித்து நடுக்கடலில் தள்ளி விட்டவர்களுக்கு பால் ஊத்தாத குறையாக இன்றைக்கும் அபிசேகம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
உங்களை நாங்கள் எப்படித் தான் குறை சொல்ல முடியும்?
(தல ரசிகர்கள் தேன் ஊற்ற ரெடியாய் துடிச்சுக்கிட்டிருப்பீங்க! ஊத்தி வேஸ்ட் பண்ணாமல் பத்திரிகை தொடங்கலாம். இங்கே எழுதவே தெரியாதவங்கள் எல்லாம் பத்திரிகை நடத்துறாங்க, உரிமைக்குரல், சிம்மக்குரல் ரேஞ்சில்! பெயருக்குத் தட்டுப்பாடாயிருந்தால், 'தல' படி, தளபதி பெயர்களில் தொடங்கலாமே!)
You must be logged in to post a comment Login