(புகலிடம் எப்போதும் எழுத்துப் பேச்சு வடிவங்களின் கண்ணாடியாக இருப்பது. ஆம்! இழப்புகள் இந்தக் கண்ணாடியில் தெரியும் வேளைகளில் தீர்வுகளின் வீதிகள் நிறையப் பிறப்பதுண்டு. பின்பு பல வீதிகள் அழிவதும் இயல்பு. இது எனது புகலிடம் மீதான விரிவான குறிப்பல்ல, எனது இனிய நண்பர், இலக்கியத்துக்குள்ளும் அரசியலுக்குள்ளும் தோய்ந்த கலைச்செல்வன் மீதான சிறிய குறிப்பு. இனியன சொல்லல், இவரின் இருப்பு. தீவிரமான வேளைகளிலும் எரியும் இதயத்தோடு இவர் இனியன சொல்வதைக் கேட்டேன். இருத்தல் மீதான கரிசனையோடு இவர் தமிழரின் போராட்டத்தைப் பார்த்தவர், இந்தப் போரில் இவரது கண்டனப் பார்வைகள் மனித உரிமைகளை வேண்டியன. இவரது தொடக்க கால இலக்கியத் காலங்களில் இவரையும், இவரது சில நண்பர்களையும் Centre Georges Pompidou எனும் பாரிஸின் கனதியான கலை நிறுவனத்துள் சந்தித்து படைப்பு மீது பேசியவை இப்போதும் எனது இன்றைய தினங்களாக உள்ளன,
“தமிழ் முரசு” வினது பின்னர் வந்த “பள்ளம்” புகலிடத்தினது வரலாற்றின் சாட்சியமாக இருக்கவேண்டியது, இதனது வருகையின் காரணி கலைச்செல்வனே. இந்த இதழில்தான் “ஜெயந்தீசன்” பிறந்தார். இது கலைச்செல்வனின் அழகிய புன்னகையுடன் கூடிய தொடர் வேண்டுகோளால். ஆம்! “பொட்டு” எனது முதலாவது கதை. இது புலிகளுக்குச் சிக்கலானது. உண்மைகளைப் புலிகளும், பல வேறு இயக்கங்களும் நேசிப்பன அல்ல எனும் நோக்கோடுதான் இந்தக் கதையை எழுதினேன், ஆம்! எனது பெயரில் அல்ல.
இந்தக் கதை வந்த வேளையில் கலைச்செல்வன் பிரான்சில் கடத்தப்பட்டு கொடூரமான வன்முறைக்கு உள்ளாகினார். “நீதான் பொட்டு எழுதுனனியோ?” எனக் கேட்டு மீளவும் தனக்கு அடித்ததை திரும்பிவந்தபோது என்னிடம் சொன்னார் கலைச்செல்வன்.
பின்னர் கனடா “தாயகம்” பத்திரிகையில் ஒவ்வொரு வாரமும் ஓர் கதை வந்தது. இந்தக் கதைகளின் கிண்டல்ப் போக்கு பலருக்கு ரசிப்பைத் தந்த வேளையில், வேறு சிலருக்கு எதிர்ப்பைத் தூண்டியதை அறிவேன்.
எனது இனிய நண்பரும், இலக்கிய வித்தகருமான எஸ்.பொ இந்தக் கதைகளைப் புத்தகமாகப் போடவேண்டும் என்பதை விரும்பினார். இவரினால்தான் “ஜெயந்தீசன்” என்பது க.கலாமோகன் எனத் தெரிவிக்கப்பட்டது . “ஜெயந்தீசன் கதைகள், கலாமோகன்” எனும் புத்தகத்தை 2003 ஆம் வெளியிட்டது மித்ரா பதிப்பகம்.
கலைச்செல்வன் எங்களோடு இல்லை. மறைவு பெரியது. அதுவும் இளம் வயதில். இவரது இலக்கிய, அரசியல் போக்குகள் தீர்வைத் தேடியன. இவருக்குக் காணிக்கையாக, இவரால் வெளியிடப்பட்ட எனது “பொட்டு” எனும் குட்டிக்கதை மீள் பிரசுரமாகின்றது.)
இன்று இரவு நான் ஒருவனுக்குப் பொட்டு வைக்கவேண்டும். எனக்கோ அவனைத் தெரியாது.இயக்கமோ எனது வலது கையில் ஒரு போட்டோவையும் இடது கையில் ஒரு துவக்கையும் வைத்துவிட்டு,
“நெற்றியில் வடிவாகப் பொட்டு வைக்கவேண்டும். வட்டப் பொட்டாகவும் இருக்கவேண்டும்.”
இப்படிக் கட்டளை செய்தது.
“ஒரு நாளும் நான் ஆளைப் பார்த்ததில்லையே!” என்றேன்.
தளபதி என்னை முறைத்துப் பார்த்துவிட்டு,
“அதொண்டும் பெரிய பிரச்சினை இல்லை. போட்டோவும் போட்டோவுக்குப் பின்னாலை அட்ரசும் இருக்கு. அவ்வளவும் காணும். நீ இயக்கத்துக்கை வந்து மூண்டு வருசமாகுது. இண்டுவரைக்கும் நீ ஒராளுக்கும் பொட்டு வைக்கேல்லை. உனக்கு அந்த அனுபவம் வந்தாகவேணும். அதுதான் ஒரு ஈசியான கேசைப் பாத்து உன்னை அனுப்புறம். அவனிட்டை துவக்குமில்லை, வெடிகுண்டுமில்லை. ஓடிப்போய் பொட்டு வைச்சிட்டு வா!”
அதட்டும் குரலில் சொன்னார்.
வீட்டு வாசலில் போய் நின்றபோது அங்கே நிசப்தமாகவிருந்தது. காற்சட்டைப் பையுள் கிடந்த துவக்கு வில்லில் என் சுட்டுவிரலை நிதானமாகப் பொருத்தியபடி, ஏற்கனவே எனக்கு சொல்லித்தரப்பட்ட அறிவுறுத்தல்களை ஞாபகப்படுத்திக்கொண்டு,
“அண்ணை”
இப்படிக் குரலிட்டவாறு உள் நுழைந்தேன்.
பதில் எதுவும் வரவில்லை. குசினிக்குள் மட்டும் சத்தம் கேட்டது. இயக்கத்தில் எனக்குப் பெரும் நம்பிக்கையுமிருந்ததால் குசினிக்குள் பூனை போல் உள்ளிட்டேன்.
அவனோ வெறும் மேனியோடு. முன்னால் கிடந்த வெறுங் கிண்ணத்தில் அப்போதுதான் அவள் ஒரு அகப்பைச் சோற்றைக் கிள்ளிப் போட்டாள். அவனது கரங்களைப் போலவே அவளது கரங்களும் காய்த்துக் கிடந்ததை எனது கண்கள் படம் பிடித்துக்கொண்டன. தளபதி தந்த போட்டோவில் கிடந்த அதே உருவம். நெற்றியில் அதே மச்சம். இவனிற்குத்தான் நான் இப்போது பொட்டு வைக்கப் போகின்றேன்.
“அண்ணை!” இது நான்.
அவன் என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு,
“தம்பியைப் பாத்தா இயக்கம் போலத் தெரியுது. பாவங்கள், இயக்கமெண்டு வெளிக்கிட்டாப் பிறகு அதுகளெங்கை ஒழுங்காச் சாப்பிடுதுகள். தம்பி இதிலை இரும். ராசாத்தி! தம்பிக்கும் சேத்து ஒரு கிண்ணத்தில சாப்பாடு போடு”.
எனக்கு அப்போது பசித்தது. அவர்களோடிருந்து மூச்சுப் பேச்சில்லாமல் சாப்பிட்டேன். பின் எதை நிறைவேற்றச் சென்றேனோ அதை நிறைவேற்றாத திருப்தியில், கொய்க் குழம்பின் மகோன்னதத்தை நினைத்தபடி முகாமிற்கு வந்தபோது, தளபதி கேட்டார்:
“பொட்டு சரியாக வைக்கப்பட்டதா?”
“இல்லை நான் பொட்டு வைக்கேல்லை!”
தளபதியின் மீசை துடித்தது. அக்கினி இரண்டு கண்களிலிருந்தும் சீறியது. தன்முன் கிடந்த மேசையில் கைகளால் ஓங்கியறைந்து இரண்டு சீடர்களை அழைத்தார்.
இந்த அழைப்பிற்காகவே காத்திருந்தவர்களைப்போல ஓடி வந்தார்கள்.
“கூட்டிக்கொண்டு போய் ஆளுக்கொரு வடிவான வட்டப் பொட்டு வைச்சு விடுங்கோ”.
அவர்கள் என்னைக் கொற கொறவென்று இழுத்துச் சென்றார்கள்.
You must be logged in to post a comment Login