Recent Comments

    புகைப்படக் கலை கற்றுக் கொள்வீர்

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி

    இன்னொருவரின் புகைப்படக் கருவியாகட்டும், செல்பி செல்போன் ஆகட்டும். தங்கள் மூஞ்சிகளைப் படம் பிடி(ப்பி)த்து புளகாங்கிதம் அடைவதிலிருந்து தொடங்கி, பேஸ்புக்கில் பதிவிட்டு பெருமை சேர்ப்பது வரைக்கும் புகைப்படக் கலையின் ஒரு பிரிவான portrait படக் கலை எங்கள் வாழ்வில் பெரும் இடத்தைப் பிடித்திருக்கிறது.

    இயற்கைக் காட்சிகளையோ படைப்புகளையோ படம் பிடிப்பதை விட, இந்த மூஞ்சிகளைப் படம் பிடிப்பது என்பது ஒரு தனிக்கலை. தனிமூஞ்சிகள் முதல் குடும்ப போட்டோ வரைக்கும் இந்த portrait புகைப்படக் கலை அடங்கும்.

    தேர்ந்த படப்பிடிப்பாளர்கள் தாங்கள் யாரையும் போஸ் கொடுக்க வைக்கும் போது, வேறு யாரையும் படம்பிடிக்க அனுமதிப்பதில்லை.

    நம்ம மூத்த குடியில், புதிதாக கமெரா வாங்கியவர்கள் தொடக்கம் கலியாணப் போட்டோ அனுபவசாலிகள் வரைக்கும் ஆட்களைப் படம் பிடிப்பதற்கு என்றே சில போஸ்களை வைத்திருப்பார்கள்.

    அவை யாதெனில்...

    * தேடப்படுகிறார் போஸ்!

    இங்கே குற்றவாளிகளை எதிர்காலத்தில் அடையாளம் காண்பதற்கு வசதியாக பொலிஸ் நிலையத்தில் வைத்து எடுக்கப்படும் போஸ் இது. police profile photo எனப்படுவது. என்றாவது ஒருநாள் தேடப்படும் போது பயன்படும் என்று  சுவரோடு வைத்து உயர அளவு தெரியக் கூடிய அளவுகோலின் அருகில் வைத்து, தனது பெயர் முதலான விடயங்களை ஒரு மட்டையில் பிடித்தபடி எடுக்கப்படுவது. கமெராவைப் பார்த்து ஒரு போஸ், பின்னர் பக்கவாட்டில் மூக்கின் அழகு தெரிய ஒரு போஸ்.

    portrait படப்பிடிப்பில் தோள்கள் சமனாக இருக்காமல், ஒரு புறம் உயர்வாக இருந்தால் சற்று எடுப்பாக இருக்கும்.

    இந்த நடைமுறையைத் தெரியாமல், தட்டையான தோள்களின் நடுவே உருண்டையான தலை நடுவில் தோன்ற... தேடப்படுகிறார் போஸ் படமாகும்!

    இது நம்ம ஊரில் தேசிய அடையாள அட்டை, கல்வித் திணைக்கள பரீட்சைக்கான அடையாள அட்டையுடன், தலை மாறி வெளிநாடு போக பாஸ்போட்டுக்கும் பயன்படும்.

    இங்கே இவ்வாறான படங்களுக்கு சிரிக்கக் கூடாது என்றே கட்டளை இடப்படும்.

    பல பேருக்கு திருமணப் பேச்சுக்கு கொடுத்தனுப்பும் படங்களில் இதுவும் ஒன்று. இதையும் பார்த்த பின்னால் திருமணம் நடக்குமாயின், அந்த திருமணம் நிச்சயம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகத் தான் இருக்கும்.

    இவ்வாறான 'கலியாணம் பேச கொடுத்து அனுப்பிய' ஒரு கறுப்பு வெள்ளை போட்டோவை பேரக்குழந்தை கண்ட வயதிலும் பத்திரிகையில் பிரசுரிக்க வைத்த எழுத்தாளினி ஒருவரைக் கனடாவில் கண்டதுண்டு.

    முகத்தை 'நடுச்செண்டரில்' வைத்து எடுக்கப்படும் இந்த போஸ் தான் புதிதாக கமெரா வாங்கியவர்கள் முதலில் எடுக்கும் போஸ்.

    * ரிவால்வர் ரீட்டா போஸ்

    எமது சித்திமார், அன்ரிமார் அந்தக் காலத்தில் ஞானம், பாரத் ஸ்டுடியோக்களில் எடுத்த போட்டோக்களின் போஸ்.

    ரிவால்வர் ரீட்டா, சிஐடி சகுந்தலா, கன் பைட்காஞ்சனா போல மயிரைச் சுருட்டி காதோரமாக விட்டு, புதிதாக உடுத்திய சேலைகளுடன், சமையலறைகளில் கை துடைக்கப் பயன்படும் கதவுத் திரைச்சீலை போன்றதொரு திரைச்சீலையின் முன்னால், பக்கவாட்டில் நிற்க வைத்து எடுக்கும் போட்டோ.

    ஒரே வயதுப் பெண்கள் இதற்காகவே வெளிக்கிட்டு, பஸ் எடுத்து டவுனுக்குப் போய் எடுத்த இவ்வாறான புகைப்படங்கள் உண்மையிலேயே புகை பிடித்த படங்களாக, மழை நீர் பட்டு ஒழுகி சாயம் பட்டோ, செம்பாட்டுப் புழுதிக் கறையுடனோ, அந்தக் காலத்திலேயே கண்ணாடி பிரேம்களுக்குள் தொங்கும்.

    இதைப் படம் எடுத்தவர் தீக்கோழி மண்ணுக்குள் தலையைப் புதைப்பது போல, கமெராப் பெட்டிக்குள் துணியால் மூடி தலையை ஓட்டி எடுக்கும் படம் இது. இந்தப் படங்கள் உருப் பெருப்பிக்கப்பட்டு ஸ்டுடியோ வாசல்களில் தங்களின் பெருமையை பறை சாற்றும் விளம்பரங்களாக கதவருகே உள்ள கண்ணாடி அறைகளில், அதற்கு ஐம்பது வருடங்களுக்கு முன்னைய வேலை செய்யாத பெட்டிக் கமெராக்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.

    அந்தப் படங்களைப் பார்த்து விட்டு, அந்தப் பெண்ணைத் தான் திருமணம் முடிக்க வேண்டும் என்று அலைந்த ஆண்களும் உண்டு... அது பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முந்திய போட்டோ என்று தெரியாமல்!

    *புது வெளிநாட்டு அகதி போஸ்

    கிட்டத்தட்ட அகதியாக வந்து சேர்ந்த தமிழர்கள் எல்லாரும் எடுக்கும் போஸ். வீதியோரங்களில் நிறுத்தி வைத்திருக்கும் வாகனங்களில் அருகில் குளிர் கால ஜக்கட்டுகளுடன் சாய்ந்து நின்று எடுக்கும் போஸ்.

    படம் பெரும்பாலும் சரியாகக் குவியப்படுத்தப்படாமல் முகம் தெரியாமல் மங்கலாகவே இருக்கும். படத்தில் இருப்பவர் நீண்ட காலமாக உலகின் சகல பாகங்களிற்கும் ஏஜன்சியோடு அலைந்ததாலும், தலை மயிர் வெட்டுவதற்கான காசை இலங்கைக் காசுக்குக் கணக்குப் பார்த்ததாலும், நீண்ட நாட்களாக மயிர் வெட்டாமல் திரிந்ததால், ஹிப்பித் தலையோடு காணப்படுவார்.

    கமெரா வாங்கியவர் அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்று கூறும் அதனோடு வந்த புத்தகத்தை வாசிக்காமல், சூரிய ஒளித்தெறிப்பு பற்றிய விபரமும் இல்லாமல் 'அமத்தினால் படம் எடுக்கும்' என்ற நம்பிக்கையில் எடுக்கப்படும் போட்டோக்கள் இவை.

    அல்லது மலிவாக வாங்கிய ஒரு வெறும் பூதக்கண்ணாடி கொண்ட கமெரா!

    வெளிநாடுகளில் கல்லறைகள் பூந்தோட்டங்களாக இருப்பதால் அங்கேயும் இந்தப் படங்கள் எடுக்கப்பட்டிருக்கும்.

    இந்தப் படங்களும் 'கலியாணம் பேசக்' கொடுத்து அனுப்பப்படும்.

    * Famous landmark போஸ்

    பெரும்பாலும் பிரபலமான கோயில்கள், கட்டடங்கள், நினைவிடங்கள் போன்றவற்றின் முன்னால், ஈபிள் டவர், லூர்துமாதா கோவில், மொன்றியல் கோவில் மாதிரி... படத்திற்குள் எல்லாமே வரவேண்டும் என்பதற்காக கமெராவிலிருந்து வெகுதொலைவில் நின்றபடி ஆள் அடையாளம் தெரியாமல் எடுக்கும் போஸ்.

    'உந்தா அதில இடப்பக்கம் இருந்து நாலாவதா நிக்கிறது தான் நான்'.

    வருட முடிவில் பள்ளிக்கூடங்களில் எடுக்கப்படும் முழுப்பள்ளிக்கூட போட்டோக்களில் இதை விட அழகாக மூஞ்சிகள் தெரியும்.

    * செவ்வரத்தம்பூ போஸ்

    இது உள்ளூரில் கமரொ வைத்திருப்பவரை, அவர் நிச்சயமாக புகைப்படக் கலைஞராக இருக்க மாட்டார், சம்பளத்திற்கு அமர்த்தி, வெளிநாட்டு மாப்பிளைக்கு மணப் பேச்சுக்கு அனுப்பும் படப் போஸ்.

    மணமகள் தமிழ்ப் பண்பாட்டிற்கு அமைய சேலை உடுத்தி, வீட்டு முற்றத்தில் உள்ள செவ்வரத்தை, காகிதப் பூ, ரோஜா போன்ற பூ மரங்களின் அருகில் நின்று அந்தப் பூவைப் பிடித்தபடி எடுக்கும் போஸ்.

    மறக்காமல் கொண்டையிலும் அந்தப் பூ இருக்கும்.

    இந்தப் போஸ் கொண்ட படங்களை வெளிநாட்டு புலன் பெயர்ந்த மாப்பிள்ளைகள் தலைமாட்டிற்கு அருகில் வைத்து பூப் போட்டு கும்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

    நம்மிடமும் முன்னாள் காதலிகளின் இவ்வாறான சில போட்டோக்கள் தற்போதும் உண்டு... பெட்டிக்குள் மூடி மறைத்தபடி!

    * சாமத்தியச் சடங்கு போஸ்

    'பெரிசாகின' சின்னப்பிள்ளைக்கு சேலை உடுத்தி, 45 பாகை கோணத்தில், முழங்காலை மடித்து வைத்து கைகளால் பிடித்தபடி உட்கார்ந்திருக்கும் போஸ்.

    இதே போஸ் திருமணப் பெண்ணை கட்டிலில் வைத்தும் எடுக்கப்படும்... கணவனுக்காய் காத்திருப்பது போல!

    அப்போ, பாலும் பழமும் கொண்டு வந்து எப்பிடிடா காலில விழுவாங்க? என்ற சந்தேகத்தை உங்களுக்கு வரவைக்கும் போஸ்.

    * கலியாணவீட்டு குரூப் போஸ்

    அன்றைக்கு மட்டும் கோட் போட்டோர், இடுப்பில் சால்வையை சுற்றிக் கட்டிய வேட்டி கட்டியோர், மற்றவே என்ன நினைப்பினம் என்று போன கலியாண வீட்டுக்கு போட்டதைப் போடாமல் புதிதாய் வாங்கிய விலை உயர்ந்த சேலைகளுடனான பெண்களுடன், இதற்கெல்லாம் சம்பந்தமில்லாதது போல ஆங்காங்கே தங்கள் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த பஞ்சாபி பிள்ளைகளையும், எக்கச்சக்கமாகப் பூட்டிய தங்க சங்கலிகளுடனும் குர்தா, பாவடைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறிசுகளையும் இழுத்து வந்து எடுக்கப்படும் Royal family கணக்கான போஸ்.

    சில நேரம் சாப்பிட்டுக் கொண்டிருப்பவரையும் இழுத்து வர, அவர் கையை பின்புறமாக மறைத்து வைத்தபடி போஸ் கொடுப்பார்.

    இதிலும் 'உந்த உதில பொம்பிளை மாப்பிளைக்கு வலப் பக்கம் எட்டாவதா தலைப்பாகையோட நிக்கிறது நான் தான்' என்னும் அளவுக்குத் தான் உருவங்கள் தெரியும்... படப்பிடிப்பாளர் மணவறையையும் படத்திற்குள் கொண்டு வர முயற்சி செய்ததால்!

    * விருது வாங்கும் போஸ்

    கலியாண வீட்டில் அன்பளிப்பு வழங்கப்படும் போதும், மேடையில் விருதுகள், பொன்னாடைகள் வழங்கப்படும் போதும், போட்டோ எடுப்பதற்கு வசதியாக freeze ஆகி அசையாமல் நின்று கொடுக்கப்படும் போஸ்.

    பரிசளிப்பு விழாக்களிலும் கொடுப்பவரைப் பார்க்காமல் கமெராவைப் பார்த்தபடி இந்த போஸ் இருக்கும்.

    ஒரு வரலாற்று ஆவணம் ஆக வேண்டிய கட்டாயத்திற்காக எடுக்கப்படும் போஸ் இது. இதனால் சரியான நேரத்தில் படம் பிடிக்கப்படா விட்டால் திருப்பிக் கொடுக்கப்பட்டு, திரும்பி வாங்கும்போது freeze ஆகும் போஸ்.

    *நடிகையின் அம்மா போஸ்

    இது ஒன்றும் சினிமா நடிகைகளின் அம்மாக்களின் போஸ் அல்ல. தங்கள் பிள்ளைகளை மொடல் அழகிகளாக, சினிமா நட்சத்திரங்களாக்கி விடும் துடிப்பில் அவர்களின் அம்மாமார் எடுப்பிக்கும் போஸ்கள்.

    நிறையப் பணம் செலவிட்டு, தயக்கமில்லாமல் நிறையக் காட்டி, ஏற்கனவே பெயர் பெற்ற புகைப்படக் காரர்களைக் கொண்டு எடுக்கப்படும் போஸ்.

    ஆனால் இந்தப் படங்கள் திருமணப் பேச்சுக்கு அனுப்பப்பட்டால், பையன் மட்டும் படத்தைப் பார்த்தால், சினிமா நடிகையைத் திருமணம் செய்யும் கனவில் இருக்கும் பையன் ஜொள்ளு வடிப்பான்.

    பையனின் அம்மா பார்த்தால் தான் கொஞ்சம் பிரச்சனை.

    *இலக்கிய புத்திஜீவி போஸ்

    இது பெரும்பாலும் கறுப்பு வெள்ளையில் இருக்கும். அண்ணாச்சி குறும்தாடி வைத்திருப்பார். கமெராவை நேராகப் பார்க்காமல், நாடியில் கை வைத்தபடி, சீரியஸாக சிந்தித்தபடி போஸ் கொடுப்பார்.

    சில நேரம் கண்ணாடி போட்டிருப்பார். அந்த ஜோல்னாப் பையும் அதனுள் உள்ள இலக்கியப்புத்தகங்களும்... கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளும்... சே... விற்றுத் தள்ளும் அவருடைய சொந்தப் புத்தகங்களும்... ஏனோ அந்தப் படத்தில் தலைமறைவாகி விடும்.

    அல்லது மாபெரும் இலக்கிய நிகழ்வு ஒன்றில் பேருரையாற்றும் போஸ்... ஜனாதிபதியின் சிம்மாசனப் பிரசங்கம் மாதிரி! அல்லது தலைவரின மாவீரர் தின உரை மாதிரி!

    * Deer on the headlight போஸ்

    இரவு நேரம் காரின் ஹெட்லைட்டில் அகப்படும் மான் அதிர்ச்சியில் விறைத்துப் போய் முழுசுவது போல, திருட்டு முழியோடு எடுக்கப்படும் போஸ்.

    படத்திற்கு எப்படிச் சிரிப்பது என்று முடிவு செய்வதற்குள் படப்பிடிப்பாளர் அடுத்தவரை அழைத்து விடுவார்.

    *குதிரைச் சிரிப்பு போஸ்

    பெரும்பாலும் அழகான பெண்ணை புதிதாக திருமணம் செய்து நிகழ்ச்சிகளுக்கு கூட்டி வரும் சுமார் ஆண்களின் முகத்தில் பற்கள் தெரிய தவழும் சிரிப்புடன் எடுக்கப்படுவது. மாப்பிளை புதுசாக பல் கட்டியிருக்கிறாரோ என்ற சந்தேகத்தை வரவழைக்கும் போஸ்.

    *ஏஜன்ட் போஸ்

    ஏஜன்ட் போஸ் என்றதும் ஏதோ அரைகுறை ஆடை அழகிகள் சகிதம் போஸ் கொடுக்கும் உளவு ஏஜண்ட் ஜேம்ஸ் பொண்ட் என்று நினைத்து விடாதீர்கள்.

    கனடாவில் வீடு, காப்புறுதி விற்கும் ஏஜன்ட்டுகள் எ(கொ)டுக்கும் போஸ்.

    கோட், சூட், டை சகிதம் எடுக்கப்படும் போஸ். இவற்றில் சில deer on the headlight ரகத்தைச் சேர்ந்தன.

    சில குதிரைச் சிரிப்பிலும் இருக்கும்... புதிதாக கோட் போட்டதால்!

    வீதியோரங்களில் நடப்பட்ட பதாகைகளில் இந்த போஸ்கள் இருக்கும் போது, இவர் தேர்தலில் நிற்கிறாரா என்ற மயக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.

    நிகழ்ச்சிகளின் போது பக்கத்தில் நின்றால், கோட்டில் இருந்து வரும் சுகந்தமான ஆட்டிறைச்சிக் கறியும் வியர்வையும் கலந்த மணம் உடனேயே ஆளை அடையாளம் காட்டும்.

    பயப்படத் தேவையில்லை. தேர்தலில் நிற்கும் போது மட்டும் ஒரு தடவை இந்த கோட், சூட் உலர் சலவைக்கு செல்லும்!

    *ஊடகவியலாளர் போஸ்

    பொதுநிகழ்வுகளில் கமெராக்களுடன் ஆஜராகும் ஊடகவியலாளர்கள் எடுக்கும் படங்களின் போஸ். இப்படிப் படம் பிடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன், உடுத்துப் படுத்து வெளிக்கிட்டு வருவோர் கொடுக்கும் போஸ். முகத்தில் எந்த உணர்ச்சிகளும் இருக்காது.  படங்களில் குறிப்பிடக்கூடிய கலை அம்சங்களும் இருக்காது.

    வருகின்ற ஊடகவியலாளர் அனைவருமே எடுக்கும் படங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத் தான் இருக்கும்.

    ஒருவர் நிகழ்ச்சிக்கு வந்தார் என்பதை பதிவு செய்யும் attendance record ஆக மட்டுமே இதைப் பயன்படுத்தலாம்.

    *ஊளையிடலாளர் போஸ்

    தலையைச் சுற்றிய ஹெட்போன், அந்தக் காலத்து பொப் பாடகர்கள் தண்ணீர் குடிப்பது போல் பிடித்திருந்த மைக்ரோபோன், தோளில் சுமந்த வீடியோ கமெரா என தங்கள் தங்கள் தொழிலுக்கு ஏற்ப அணிந்தபடிக்கு 'கலையகத்திற்குள்' இருந்தும் களத்திலிருந்தும் ஊடகவியலாளர்கள் கொடுக்கும் போஸ்.

    *புலன் பெயர்ந்த ரசிகர் போஸ்

    உட்கார்ந்து தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டுப் பிரபலங்களின் பின்னால், சில நேரங்களில் அவர்களுக்குத் தெரியாமலேயே, நின்று குனிந்தபடி கொடுக்கும் போஸ். பெண்களாக இருந்தால், மார்புக்கு உள்புறம் படத்திற்குள் வராதபடிக்கு படம் எடுப்பது என்பதே தனிப் பெரும் கலை.

    இவற்றில் பெரும்பாலானவை குதிரை on the headlight ரகம். இவை தங்களின் செல்பி போனை வேறு யாரிடமாவது கொடுத்து எடுக்கப்பட்டு, உடனடியாகவே பேஸ்புக்கில் தரவேற்றப்படுவன.

    *புலன் பெயர்ந்த மிதப்பு போஸ்

    வெளிநாடுகளில் கோடை காலத்தில் உடுத்தும் உடுப்போடு, ஓலைக் குடிசைகளில் ஏழ்மையில் கூனிக்குறுகி நிற்கும் ஏழை, எளியவர்களுக்கு செய்த உதவியை பேஸ்புக்கில் ஆவணப்படுத்த போட கொடுக்கும் போஸ்

    * மாவீரர் தின போஸ்

    ஒற்றைக் கை அக வணக்கம் முடிந்த பின்னால் Free kick கைத் தடுக்க தங்கள் மர்ம ஸ்தானங்களை பந்திலிருந்து பாதுகாக்க கைகளால் மறைத்தபடி வரிசையாக நிற்கும் உதை பந்தாட்ட வீரர்கள் போல, கைகளை அங்கே வைத்தபடி கொடுக்கும் போஸ்.

    இது புலன் பெயர்ந்தவர்கள் கொத்துரொட்டி சாப்பிடுவதற்கு முன்னால் செய்யும் உடற்பயிற்சி.

    இதுவே அரசியல்வாதிகளாக இருந்தால்... சின்னக்கவுண்டர் சிறிதரன் மாதிரி... தீபம் ஏற்றும் போது பிரபாகரன் மாதிரி அதே கோணத்தில் வைத்து போஸ் கொடுக்கப்படும்.

    பின்னர் மாவீரர்களுக்கு அகவணக்கம் செய்யும்போது, வழமைப் பிரகாரம் பந்துகளைப் பந்திலிருந்து பாதுகாக்கும் போஸ் கொடுக்கப்படும்.

    இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடுவது மாதிரி ஒரு போஸ் இருக்கிறது.

    அது ஆமைக்கறி போஸ்.

    அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு பக்கத்தில் இருந்து கொடுக்கும் போஸ் இது!

    இந்த போஸில் படம் எடுப்பதற்கு அவர் இல்லாவிட்டாலும், இருக்கவே இருக்கிறது போட்டோஷொப், கை கொடுக்க!

    அவர் மண்டையில் போட்டிடுவாரோ என்றெல்லாம் பயப்பட வேண்டியதில்லை.

    இவ்வாறான விதம் விதமான போஸ்களை நீங்கள் கற்றுக் கொண்டால்... ஒரு கமெராவை வாங்கிக் கொண்டு பொதுநிகழ்சிகளுக்கு ஆஜராக வேண்டியது தான்!

    உங்களையும் ஊடகவியலாளர் ஆக்கி விடுவார்கள். பிறகென்ன, தமிழ்நாட்டுப் பிரபலங்கள் வரும் போது உங்களை ஊடகவியலாளர் மாநாட்டுக்கு அழைப்பார்கள். அங்கே வந்திருக்கும் பிரபலங்களுடன் பின்னால் குனிந்து நின்று புலன் பெயர்ந்த போஸ் கொடுக்க வேண்டியது தான்! Save Save

    Postad



    You must be logged in to post a comment Login