Recent Comments

    பெண்டாட்டி ஊரில இருந்து வந்திட்டா! பெண்டாட்டி ஊரில இருந்து வந்திட்டா!

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி

    பெண்டாட்டி ஊருக்குப் போவது பற்றி துள்ளிக் குதித்து மகிழ்ச்சி கொள்ளக் கூடிய 'ஜனங்க'ராசுகள் எவ்வாறான துன்பங்களுக்கு எல்லாம் ஆளாகியிருப்பார்கள் என்பது நமக்குத் தெரியாது.

    பெண்டாட்டி வீட்டில் இருக்கும் போதே நண்பர்களுடன் போய் குடிப்பதையும், தாங்கள் இளமைக்காலத்தில் துரத்தித் திரிந்து, நிறைவேறாக் காதல் கனவு கண்டு, தற்போது பேத்திகளையும் கண்டு, காதல் நோயெல்லாம் போய், நாரி நோ, மூட்டு வலி, சலரோகம் போன்ற நோய்களால் வாடும் பெண்டிர் பற்றி ஜொள் ஒழுக கதைத்து பொழுது போக்குவதையும்...

    கட்டாயமாகக் கொண்டிருப்போரை தர்மபத்தினிகள் நெளிவு எடுப்பது பற்றியும் கவலை இல்லை.

    வீட்டில் துன்பம் தாங்காமலும், கவனிப்பு இல்லாததாலும் தான் நண்பர்களுடன் போய் கவலையை மறக்க குடிக்கிறேன் என்று அதே நபர்கள் சொன்னால் நான் என்ன சொல்ல முடியும்?

    ஒவ்வொரு குடும்பத்திலும் ஆயிரம் பிரச்சனை ஆயிரம் விதத்தில் இருக்கும். இதையெல்லாம் பொதுமைப்படுத்தி, அது பற்றியெல்லாம் தீர்ப்பளிப்பதற்கு நம்மாலாகாது.

    நமக்கு அதெல்லாம் பிரச்சனை இல்லை.

    ஆத்தா நம்ம விசயங்களில் தலைப்போடாது.

    நானும் ஆத்தா விசயங்களில் தலைப்போடுவதில்லை.

    மிஞ்சிப் போனால்... என்னுடைய பொருட்களை எடுத்து 'பத்திரமாக' வைக்கும்...

    என்னை ரென்ஷன் ஆக்க!

    ***

    மூணு மாசம் அபிதகுஜாம்பாள் ஊரில் இல்லை.

    இப்படிக்கொத்த ஒருத்தனை வீட்டில் விட்டுப் போவது பற்றியும் ஆத்தாவுக்கு எந்தக் கவலையும் இல்லை.

    நாய் எங்க போகப் போகுது? உங்கினேக்க தான் சுத்திக் கொண்டிருக்கும் என்ற நினைப்பு.

    நானும் அந்தக் காலங்களில் பேஸ்புக்கிலிருந்து தலைமறைவாகி விட்டேன்.

    அப்படி பயம் எதுவும் இல்லை!

    நான் தனியே இருக்கிறேன் என்ற விசயம் வெளியே தெரிந்தால்...

    பாதுகாப்பு அரண்கள் பலவீனமான நிலையில்...

    இனமான உணர்வு மிகுந்த, கனடிய தமிழ்த் தேசிய உணர்வாள மகளிர் விடுதலை அணி ஏதாவது வந்து...

    டேய், நிர்வாணமா வெளியில வாடா! என்று வீதியில் நின்று சத்தம் போட்டால்...

    வேலிக்கு அப்பால் உள்ள சிங்கிள் மதர்களுக்கு பதில் சொல்ல வேண்டி வரும்.

    சாணக்கியமாக இந்த சூ மந்திரன் காளியாத்தாக்களிடம் தப்பித்துக் கொள்வதற்கான மந்திர தந்திர முற்காப்பு நடவடிக்கை தான்.

    வாயே திறக்கவில்லை.

    ***

    அங்கே ஊரில் என் பேஸ்புக் நண்பிகள் பலர் இருக்கிறார்கள். போதாதற்கு வெளிநாட்டிலிருந்து போயிருந்த நண்பி, கிழக்குப் பக்கம் வாழ் நண்பி என எல்லாரும் விளக்குமாறு, உலக்கை போன்ற கனரக ஆயுதங்களால் தாக்குதல் நடத்தக் கூடிய ஆட்டிலறி ரேஞ்சுக்குள் தான் நின்றார்கள்.

    போதாக்குறைக்கு சகல மதங்களிலும் பேஸ்புக் சகோதரிகள் வேறு. சொன்னால் மச்சினர்மாரை தொந்தரவு பண்ணி வாகனம் பிடித்தே போய் இறங்கியிருப்பார்கள்... அண்ணியைப் பார்க்க.

    ***

    ஆத்தாவை யாருக்குத் தான் பிடிக்காது.

    இங்கே என்னுடைய நண்பர்கள் எல்லாரும் ஆத்தாவுக்கு அண்ணன்மார்.

    என்னோடு கதைக்காத கதைகள் எல்லாம் ஆத்தாவுடன் நடக்கும்.

    யார் யாருடைய துணைவிமார் சமையல் காட்சி இல்லாமல் சதா பேஸ்புக்கில் இருக்கிறார்கள் என்பது முதல், யாருக்கு பேரப்பிள்ளைகள் பெற்றுக் கொள்ளும் வயதில் வெளியில் தெரியாத பிள்ளைகள் இருக்கும் விசயம் வரைக்கும் ஆத்தா சொல்லித் தான் எனக்குத் தெரியும்.

    'நாங்கள் சொன்னா, அவர் எங்களைப் பற்றி என்ன நினைப்பார்?'

    ஆத்தா இங்கே இருக்கும்போதே, என் நம்பருக்கு போன் அடித்து, ஆத்தாவோடு கதைத்து, 'உவன் பேஸ்புக்கில பிட்சா, பிரியாணி, பூ எண்டெல்லாம் படம் போட்டுக் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு கொஞ்ச பேர் இருக்கினம், அவனைப் பப்பா மரத்தில ஏத்தி விட! கொஞ்சம் கவனிச்சு வை!' என்று அள்ளியும் வைப்பார்கள்.

    போதாக்குறைக்கு சந்தேக நபர்களையும் (நபருக்கு பெண்பால் என்ன?) அடையாளம் காட்டி வைப்பார்கள்.

    ஆத்தாவுக்கு சிரிப்பாக இருக்கும்.

    இந்த நாயையும் தேட ஆக்கள் இருக்கினமோ? என்பதாக இருக்கக் கூடும்.

    ஆத்தா பேஸ்புக்கில் இல்லாததால், இப்படி யாராவது அள்ளி வைத்தால் தான் உண்டு.

    இதனால் தானோ என்னவோ, இந்த நாய் எங்கேயாவது வேலி தாண்டி வெள்ளாடுகளைத் தேடப் போய் விடுமோ என்ற நினைப்பில், என் நண்பர்களும் அடிக்கடி போன் பண்ணி பின்னணியில் பெண்கள் சிரிப்புச் சத்தம் கேட்கிறதா என்று செக் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

    ***

    அடேய், நான் என்ன உட்பெட்டிக்குள் 'ஹை செல்லம், சாப்பிட்டியா செல்லம்? குளிச்சியா செல்லம்?' என்று ஜொள்ளுத் தூது விட்டுக் கொண்டாடா இருக்கிறேன்?

    இல்லை, 'என்ரை மனிசி என்னை அண்டர்ஸ்டான்ட் பண்ணிறாவில்லை, அவவுக்கு உங்கள மாதிரி இலக்கியம் எல்லாம் விளங்காது' என்று கடலை போடுகிறேனா?

    அல்லது, நள்ளிரவில் போன் அடித்து, 'நான் கதைக்கேக்கை உங்களுக்கு வயித்துக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கிற மாதிரி இருக்குமே!?' என்று ஏதாவது..?

    உங்கட கவிதையை அடுத்த லெவலுக்கு கொண்டு போக உதவி செய்யிறன் எண்டு இலக்கிய பீலா விட, எனக்கு பின்நவீனத்துவமும் தெரியாது.

    என்னுடைய பின்னூட்ட சேட்டை எல்லாமே, எல்லாரும் பார்க்கிறபடிக்கு பகிரங்கமாகத் தானே இருக்கிறது.

    அதுவும் என்னுடைய அண்ணன்மார், அக்காமார் வேறு எனது நட்பு வட்டங்களோடு நட்பாக இருக்கிறார்கள். தெரிந்தால் பிடரியில் இரண்டு தந்து 'போய் வேலையைப் பாரடா!' என்றோ, 'என்ன ராசா, நாங்கள் எத்தனை பேரை சின்னச் சின்ன மச்சாள் எண்டு சொல்லிறது?' என்றோ சொல்ல மாட்டார்களா?

    என்னுடைய சேட்டைகள் எல்லாம்...

    யாருமே நினைக்காத, சம்பந்தம் இல்லாத ஒன்றைச் சொல்லி சிரிப்புக் காட்டவும்,

    பேட்டைக்குள் சைக்கிள் ஹாண்டிலில் இருந்து கையை எடுத்து, நெஞ்சு பட்டனை திறந்து, கொலரை தூக்கி விட்டு, விசில் அடித்தபடியே வலம் வரும் உட்பெட்டி ஜொள்ளு மைனர் குஞ்சுகளுக்கு கடுப்பு ஏத்தவும் தானே?

    ***

    ஆனால் பெண் நண்பிகள் விவகாரம் வேறு.

    இவர்கள் எல்லாரையும் அறிமுகம் செய்தால்...

    ஆத்தாவோடு நெருக்கமாகி, 'ஐயோ, அவ எவ்வளவு நல்லவ!? உவரை விட!' என்று ஆத்தா புராணம் தொடங்கியிருப்பார்கள்.

    அதில் என்ன பிரச்சனை? என்று உங்களுக்கு கேள்வி வந்திருக்கும்.

    பிரச்சனை ஒன்றுமில்லை.

    இவர்கள் எல்லாரும் தமிழ்ப் பெண்டிர்.

    தமிழ் பெண்டிர் ஆலோசனை சொல்கிற ஸ்டைல் எப்படியிருக்கும்?

    ஏதோ மற்றவர்களின் நல்வாழ்வில் அக்கறை கொண்ட மாதிரித் தான் தொடங்கும்.

    'என்னண்டு விட்டுட்டு இருக்கிறியள்? உவற்ரை சேட்டையளுக்கு! நீங்கள் எவ்வளவு நல்லவ!'

    இப்படியாகப்பட்ட பல தர்மபத்தினிகளைக் கண்டிருக்கிறேன்.

    வீட்டுக்காரனுக்கு யாராவது பெண்கள் போன் அடித்தாலேயே, 'நீங்கள் ஆர்? உங்களுக்கு அவரை என்னண்டு தெரியும்? என்ன அலுவலுக்கு போன் அடிச்சனிங்கள்?' என்ற செக்கியூரிட்டி கிளியரன்ஸ் முதல்... போன் நம்பரைத் தேடிப் பிடித்து, 'மற்றவளவேயின்ரை புருசன்மாரைப் புடிக்கத் (அல்லது புருஷன்மாரோட படுக்கத்) திரியிறியளோடி?' என்று தடுத்தாட் கொள்கின்ற வரைக்குமான பத்தினி தெய்வங்களைக் கண்டும் கேள்விப்பட்டும் உள்ளேன்.

    ஒரு மனிதரில் அக்கறை இருப்பது வேறு. அந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வது வேறு.

    ஆண் நண்பர்கள் மிஞ்சிப் போனால்...

    'உவனைக் கொஞ்சம் கவனிச்சுக் கொள்ளு!' என்பதோடு நிறுத்திக் கொள்வார்கள்.

    ஆனல் நண்பிகள் graphic details ஸோட தீர்வு நடக்கும்!

    'நாங்கள் எண்டா பாத்துக் கொண்டு இருக்க மாட்டம். உந்த கத்தியால!'

    ஆத்தாவுக்கு சமையலுக்கு இறைச்சி வெட்டிறது கூட நான் தான்.

    ஆத்தா ஏதோ நாளிதுவரைக்கும் கத்தியால் மரக்கறிகள் தான் வெட்டிக் கொண்டிருக்கிறது... கத்தரிக்காய், கியூகம்பர் என்று.

    இவர்களை அறிமுகப்படுத்தப் போய்...

    தடியைக் கொடுத்து வெட்டு வாங்கின மாதிரி...

    சே...

    அடியை வாங்கின மாதிரியான வேலைக்கு போகக் கூடாது என்பதால் இவர்கள் யாருக்கும் அபிதகுஜாம்பாள் ஊரில் இருப்பதைப் பற்றி மூச்சு விடவில்லை.

    சொல்லியிருந்தால்...

    'ஐயோ, உங்கட மூஞ்சையைத் தான் இன்னும் பாக்கேலை, அவவையாவது நாங்கள் போய் பாக்கிறம்!' எண்டு குத்தி முறிந்திருப்பார்கள்.

    ***

    ஆத்தா ஊருக்குப் போய் முதலில் தங்கி நின்றது ஒரு இஸ்லாமிய சகோதரி குடும்பத்துடன். வழமை போல அவர்களுக்கு ஆத்தாவை முன்பின் தெரியாவிட்டாலும், ஆத்தா அந்த வீட்டில் ஒரு மகளாகவே ஆகி விட்டிருந்தாள்.

    என்னோடு போன் கதைக்குப் போதெல்லாம், எனக்கு விருப்பம் இல்லாத ஒன்றை ஆத்தா செய்து கொண்டே இருக்கும்.

    பக்கத்தில் இருக்கிற யாரையாவது கூப்பிட்டு அவர்களோடும் கதை என்று மாட்டி விடும்.

    முன்பின் தெரியாதவர்களோடு கதை என்றால் எதைக் கதைப்பது?

    சும்மா தேவையில்லாத சம்பந்தமில்லாத விடயங்களை இடைச்செருகி இடம் நிரப்பல் தான், பின்நவீனத்துவ கவிதை மாதிரி!

    வீட்டுக்கார அம்மா, அப்பா இருவருமே கதைப்பார்கள்.

    அம்மா ஏதோ ஆத்தாவை பிரிந்திருக்கும் துயரில் நான் வாடுவதைப் போல, 'நீங்க ஒண்ணுக்கும் கவலைப்படாதீங்க. அவுங்களை நாங்க கெவனமா பாத்திட்டுத்தான் இரிக்கம்' என்ற ஆறுதல் சொல்லப் போக...

    நானும் என் குறும்புத்தனத்தில், 'நாங்க ஒண்ணும் கவலைப்படேலை, அம்மா, நாங்க இங்க ஜாலியா சந்தோசமாத் தான் இருக்கிறம், நீங்க வேணுமெண்டா அவவை அங்கேயே வைச்சுக் கொள்ளுங்க!' என்று விட்டேன்.

    கொஞ்ச நேரம் சத்தத்தைக் காணோம். அம்மாவுக்கு என் ஜோக் விளங்கவில்லை என்றதும் சப்பென்று போய் விட்டது.

    பிறகு தான் அம்மா சிரிச்சாங்க.

    அதுவும் அம்மா அதை பக்கத்தில் இருக்கும் யாருக்கோ சொல்லி, அதை அந்த கூகிள் பீபி, அம்மாவுக்கு மொழி பெயர்த்து சொல்லித் தான்!

    நான் சந்தோசமாக இருந்தது வேற விசயத்திற்கு.

    வீட்டில் நான் வைத்த பொருட்கள் அந்தந்த இடத்திலேயே இருந்தன.

    ஆத்தா இருந்திருந்தா, அவை எல்லாவற்றையும் எடுத்து 'பத்திரமாக' வைத்திருந்திருக்கும்.

    அதுவே Domestic violence க்கு வழி கோலக் கூடிய அளவுக்கு எனது பொறுமையைச் சோதிக்கும்.

    அந்தளவு சந்தோசத்தை நான் வழமையில் அனுபவித்ததில்லை. நான் சமையலறையில் எனது தேவைக்காக வைத்திருக்கும் கத்தி, உருட்டுக்கட்டை, விசேட கரண்டிகள் எல்லாமே உரிய முறையில் வைக்கவென்றே விசேடமான பொருட்களை வாங்கி முறைப்படுத்தி வைத்திருந்தேன்.

    மகனுக்கும் வேறு அந்த சந்தோசத்தை சொல்லி பகிர்ந்திருந்தேன்.

    எனவே, என்னுடைய சந்தோசத்தை அந்த அம்மாவோடு பகிரப் போய், அவவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரச்சனை அதோடு முடிந்திருக்கும் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள்.

    அம்மா என்றால் சும்மாவா?

    அம்மாவிடமும் செல்போன் உண்டு.

    செல்போனை அம்மா சும்மா வைத்துக் கொண்டும் இருக்க முடியாது.

    அம்மாவும் வழமை போல, ஊர் பலாய் கழுவுவதுண்டு.

    வீட்டுக்காரி அந்தப் பக்கமாய் இருக்க...

    அம்மா யாருக்கோ போன் அடிச்சு பலாய் கழுவும் போது...

    'அவுங்க அங்க சந்தோசமா இரிக்கம் எண்டு சொல்றாங்க. அங்க ஆரையோ வைச்சிருக்காங்க போல. அதுதான்!'

    நாடு விட்டு நாடு போனாலும் சனி நம்மை விடாது!

    வீட்டுக்காரி ஒரே பேச்சு.

    'உனக்கு ஆரோட பகிடி விடுறது எண்டு தெரியாது.'

    அதுக்கு நான்... 'நான் என்ன செய்யிறது? நீ தான் கதை எண்டு போனைக் குடுத்தனி!'

    இப்படியாக வீட்டுக்காரி என் பேஸ்புக் நண்பிகளின் கண்ணில் அகப்படாமல் மூன்று மாதங்களின் பின் வந்து சேர்ந்தாள்.

    அந்த சந்தோசத்தை 'வீட்டுக்காரி ஊரில இருந்து வந்திட்டா!' என்று தானே கொண்டாட முடியும்.

    ***

    சரி, வீட்டுக்காரி வந்து வழமை போல என்ன செய்யக் கூடும்?

    என்னுடைய பொருட்களை எடுத்து 'பத்திரமாக' வைக்கும் வேலை தொடங்கி விட்டது.

    நான் எனது தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப ஒழுங்கு முறைப்படி வைத்திருந்த பொருட்கள் எல்லாம் ஆத்தாவின் தேவைக்கேற்ற மாதிரி மாற்றியமைக்கப்பட்டன.

    சமையலறையில் நான் வைத்திருந்த கத்தி காணாமல் போய் விட்டது. அதை இனி ஆத்தா தேடினாலும் 'உங்க தான்' கிடக்கும்!

    உருட்டுக்கட்டை மட்டும் முன்னால் 'உள்ளேன் அம்மா!' என்று கொண்டிருந்தது.

    ஏதும் அவசர தேவைக்காக ஆத்தா முன்னால் வைத்திருந்திருக்கக் கூடும்.

    சமையலறை மேசையில் இருந்த சொக்கலேட் பெட்டிகள் கொஞ்சம் ஆத்தாவின் கண்ணை உறுத்த...

    'இதென்ன சொக்கலேட் பெட்டியெல்லாம் இங்க கிடக்கு?

    அடே, ஏண்டா வலன்ரைன்ஸ் டேக்கு எனக்கு போன் பண்ணேலை?'

    அதற்கு நான் சொல்லியிருக்க வேண்டிய பதில்...

    'ஆத்தா, உனக்கு அதிர்ச்சி தர வேணும் எண்டு வாங்கி வைச்சனான்!'

    பிறந்த நாள் முதல் சனி பகவான் என்னை எல்லா வீடுகளிலும் இருந்து பார்த்தபடியே தானே இருக்கிறார்.

    அந்த நேரமாய் பார்த்து நாக்கில் குடி கொள்ள...

    'ஓ! அதோ?

    அது காதலர்கள் தினம் எண்டபடியா, நான் என்ரை காதலிகளுக்கு ரோசாப்பூவும், சொக்கலேட்டும் வாங்கிக் குடுத்தனான், உன்ரை நினைப்பு வரேலை!'

    ***

    எனவே, என்னை எங்காவது கடைகளில் இடியப்பம் வாங்கும் வரிசையில் தலையில் கட்டோடு கண்டால்...

    ஏதோ God Particle ளைக் கண்டுபிடித்த Quantum விஞ்ஞானி மாதிரி...

    'அண்ணை, என்ன அக்கா மண்டை உடைச்சிட்டாவோ?' என்று கேட்க தேவையில்லை.

    'அது, ஒரு சின்ன அக்சிடன்ட்!'

    அவ உருட்டுக்கட்டையை கையில வைச்சிருக்கேக்க, நான் அதுக்கு மேல சறுக்கி விழுந்திட்டன்.

    ***

    நீசக் கிரகன் சனி பகவான் எத்தனை கெடுதல்களைச் செய்தாலும், என்னை வாழ்க்கையில் ஏதோ சில எப்போதுமே காப்பாற்றிக் கொண்டு தான் வந்திருக்கின்றன.

    ஆத்தா அவசரத்திற்கு தேடிய போது...

    'பத்திரமாக எடுத்து' வைத்திருந்ததால், கத்தி கிடைக்காமல்...

    உருட்டுக்கட்டை கிடைத்ததற்கு...

    ராசி நாதன் செவ்வாயும், நேசக்கிரகங்களான சந்திரனும், புதனும்...

    இரண்டாம், மூன்றாம், நான்காம் (சின்ன) வீடுகளிலிருந்து பார்த்ததும் காரணமாக இருக்கக் கூடும்.

    Postad



    You must be logged in to post a comment Login