பாதைகளில் செல்லும் மற்றவர்கள் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல், நினைத்தபாட்டில் வாகனத்தைச் செலுத்தும் பார்க்காத சாரதிகளுக்கு பெருந்தண்டம் அறவிட ஒன்டாரியோ புதிய சட்டம் ஒன்றை அமுல்படுத்துகிறது. நல்ல காலம், எதிர்கட்சிகளை ஆதரிக்கும் நம்மாழ்வார்கள் தற்போதைய அரசாங்கத்தின் மேல் இதற்கெல்லாம் பழி போடாதபடிக்கு இந்தச் சட்டம் சகல கட்சிகளின் ஏகமனதான ஆதரவுடன் சட்டமாக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால், தற்போதைய அரசு பார்த்தசாரதிகளின் உரிமைகளைப் பறிக்கிறது என்று வரிந்து கட்டியிருப்பார்கள்.
1. வாகனம் செலுத்தும்போது, செல்பேசி பயன்படுத்துவது கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டால், இதுவரை 200 டொலராக இருந்த அபராதம் 390 டொலர் முதல் ஆயிரம் டொலராக அதிகரிக்கப்படுவதுடன், மூன்று புள்ளிகளும் கழிக்கப்படும். G1, G2 வகை அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் சாரதிகளுக்கு அவ்விடத்திலேயே அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்படும்.
2. பாதசாரிகள், பாடசாலை மாணவர்கள் வீதியைக் கடக்கும் இடங்களில் அவர்கள் முழுமையாகக் கடக்கும் வரை சாரதிகள் காத்திருக்க வேண்டும். பாதசாரிகள் விபத்தில் உயிரிழப்பது சந்திகளில் என்பதாலேயே இந்த விதிமுறை தை மாதத்திலிருந்து அமுலாகிறது. தவறினால், 150 இலிருந்து 300 டொலர் வரை அபராதம் அதிகரிக்கும்.
3. துவிச்சக்கர வண்டிகளைக் கடக்கும்போது, அவர்களுக்கு சுமார் ஒரு மீட்டர் இடைவெளி வழங்க வேண்டும். தவறினால், 110 டொலர் அபராதமும் இரண்டு புள்ளிகளும் கழிக்கப்படும். Community Safety Zone பகுதிகளில் இதைச் செய்யத் தவறினால் பணத்தண்டம் 180 டொலர் அபராதமாக அதிகரிக்கும்.
4. துவிச்சக்கர வண்டிகள் வரும் பாதைகளில் பின்னால் பார்க்காமல் கதவைத் திறப்பவர்களுக்கு 300 முதல் ஆயிரம் டொலர் அபராதமும் மூன்று புள்ளிகளும் கழிக்கப்படும்.
5. சைக்கிள் பாவனையாளர்கள் சரியான வெளிச்சங்களை சைக்கிளில் பொருத்தாவிட்டால், அபராதம் 20 டொலரில் இருந்து 110 டொலராக அதிகரிக்கிறது.
6. அவசர உதவிக்காக வரும் பொலிஸ், அம்புலன்ஸ் வாகனங்கள் சிவப்பு, நீல வெளிச்சம் மின்னும் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தால், அடுத்த வீதிப் பிரிவுக்கு நகர வேண்டும். பழுதான வாகனங்களை இழுத்துச் செல்லும் ரோ ட்ரக்குகளின் மஞ்சள் விளக்குகள் மின்னினாலும் இந்த விதி கடைப்படிக்கப்பட வேண்டும். மீறுவோருக்கு 490 டொலர் அபராதமும் மூன்று புள்ளிகளும் கழிக்கப்படும்.
7. குடிபோதை, போதைப் பொருள் பாவனையில் வாகனம் செலுத்துவோருக்கு, குடிபோதையில் செலுத்துவோர் போன்ற அபராதங்களும் தண்ட னையும் உண்டு. மூன்று முதல் 90 நாள் வரை அனுமதிப் பத்திரம் தடை செய்யப்படலாம். உங்கள் வாகனம் ஒரு வாரம் வரை தடுத்து நிறுத்தப்படலாம். ஒன்டாரியோவில் விபத்துகளில் இறந்த சாரதிகளில் 45 வீதமானோர் தங்கள் இரத்தத்தில் அல்ககோல், போதைப் பொருளைக் கொண்டிருந்தவர்களே.
8. உங்கள் வாகனங்கள் விபத்துக்களில் அகப்பட்டால், முன்பு 700 டொலருக்கு மேல் சேதம் ஏற்பட்டிருந்தால் மட்டுமே பொலிசாரை அழைக்க முடியும். அதற்கு குறைவானவர்கள் தாங்களாகவே விபத்துக்களை பதிவு செய்யும் இடத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும். தற்போது அந்தத் தொகை 2000 டொலர்களாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, விபத்தினால் ஏற்பட்ட சேதம் இத்தொகைக்கு அதிகமானதாக இருந்தால் மட்டுமே பொலிசாரை அழைக்க வேண்டும்.
ஆனால் விபத்தில் யாரும் காயப்பட்டாலோ, அல்லது வாகனங்கள் தவிர்ந்த வேறு ஏதாவது சொத்துக்கள் சேதப்பட்டிருந்தாலோ, சேதத் தொகை பற்றிய எல்லை இல்லாமல் பொலிசாரை அழைக்க வேண்டும்.
பொலிசாருக்கு விபத்துப் பற்றி அறிவிக்க வேண்டிய நிலை இல்லாவிட்டாலும், பொலிசாரைத் தொடர்பு கொண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளைப் பெறுவது உங்களுக்குப் பாதுகாப்பானது. அத்துடன் விபத்துக்கள் பற்றி உங்கள் வாகனக் காப்புறுதி நிறுவனங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
அவ்வாறில்லாமல் மற்ற சாரதிகளுடன் திருத்தித் தருமாறு வாய் வழி ஒப்பந்தங்களுக்குப் போவது சில நேரங்களில் உங்களுக்குப் பாதகமாக அமையலாம். திருத்தித் தருவதாக சொல்பவர் பின்னர் மறுக்கலாம். அல்லது உங்களிடம் திருத்துவதற்கு பணம் வாங்கியவர் அதன் பின்னால் நாரி நோகிறது என்று பணம் பெறுவதற்காக, காப்புறுதி நிறுவனத்திற்கு அறிவிக்கலாம். எனவே உங்களைப் பாதுகாக்க சட்டரீதியான வழிகளில் செயற்படுங்கள்.
எனவே, வன்னியில் மாட்டு வண்டி ஓடியது போல, ஒன்ராறியோவில் வாகனம் ஓடப் போய் மாட்டிக் கொள்ளாதீர்கள். ஒன்டாரியோ பச்சை மட்டை அடிமுறையை அமுல்படுத்தாதற்கு சகல தேவன்களுக்கும் நன்றி கூறியபடியே வாகனங்களைச் செலுத்துங்கள்.
சுவடி ஆவணி-புரட்டாதி 2015
(ஒன்ராறியோவில் வாகன விபத்துகளில் எப்படி காப்புறுதிப் பணம் எடுப்பது என்பது பற்றி விலாவாரியாகத் தெரிந்து வைத்திருக்கும் தமிழர்கள் பலருக்கு இந்த விவகாரம் எல்லாம் தெரியாது. எனவே அவர்களுக்கும் பயன்படக் கூடியதாக பகிர்ந்து கொள்ளுங்கள்.)
You must be logged in to post a comment Login