ஒரு பச்சை ஜோக்!
அசைவம் பிடிக்காதவர்கள், இலக்கியம் மட்டும் படைப்போர் படிக்க வேண்டாம். இருதய நோய் உள்ளவர்கள் தாராளமாகப் படிக்கலாம்.
இது எத்தனையோ வருடங்களுக்கு வேலையிடத்து நண்பர் ஒருவர் சொல்லக் கேட்ட ஜோக். கேட்டவுடன் நண்பர் ஒருவருக்கு அடித்துச் சொன்னது.
சரியான இடம், பொருள், ஏவல் இல்லாததால் சொல்ல முடியவில்லை. இன்றைக்குத் தான் சந்தர்ப்பம் கிடைத்தது.
இந்த சனிக்கிழமை நிர்வாணமாக வீட்டுத் தோட்டம் செய்யும் நாள். மே மாத முதல் சனிக்கிழமை வீட்டுத் தோட்டத்தில் நிர்வாணமாக நின்று தோட்டம் செய்யலாம்.
ஏப்ரல் மாதம் பனிக்குளிர் முடிந்து மெதுமெதுவாக சுற்றாடல் வெப்பநிலை கூட, நிலத்தைக் கொத்திப் பண்படுத்தி மே மாதம் பயிர் நாட்டல் ஆரம்பமாகும். ஐரோப்பா, வட அமெரிக்காவில் இடத்திற்கு இடம் மே மாதம் எந்த வாரம் என்பது வேறுபடும்.
நமது தாயகமாம் ஈழத் திருநாட்டில் இந்த பனிப்பொழிவுப் பிரச்சனை இல்லை. இருந்தாலும் அரை நிர்வாணமாக கோவணத்தோடுதான் நம் முன்னோர்கள் ஏர் பூட்டி உழுதார்கள்.
இங்கே இன்னமும் குளிர் விட்டுப் போகவில்லை. எனவே குளிருக்குள் நிர்வாணமாதல் என்பது சிக்கலான விடயம். இதற்குள் வீட்டுக்காரரி ஏவாளையும் கூட்டிப்போய், (நிர்வாணமாகத் தான்!) பாவச் சோதனைக்கு உள்ளாகலாம் என்றால் அப்பிள் மரத்தில் அப்பிளோ, பாம்போ இல்லை. இலையே தளிர்க்கவில்லை.
நல்ல காலம் சில வருடங்களுக்கு முன் இந்த தினம் கொண்டாடப்பட்டிருந்தால் சகிக்க முடியாது போயிருக்கும். ஒரு புறத்தில் மசடோனியக் கிழவி. மறுபுறத்தில் இத்தாலியக் கிழவர். பிறகு பின் வீட்டுக்காரர் பொலிசாரை அழைத்திருக்கக் கூடும்.
கிழவி இப்போது மேலுலகில். நானும் இத்தாலியரும் தான்.
இத்தக் குளிர் தாங்க முடியாமல் தோட்ட வேலைக்கு அணிவதற்காகவே குளிர், மழை உடுப்புகள் வாங்கி வந்தாயிற்று.
தோட்டம் முழுவதும் ஏற்கனவே கொத்தி, குளிருக்கு தாக்குப்பிடிக்கக் கூடிய வெங்காயம், விதைகள் விதைத்தாயிற்று.
நமது தக்காளி, கத்தரி, மிளகாய், பாகல் போன்றன கன்றுகளாய் வீட்டு பின்புறம் பிளாஸ்டிக் கூட்டினுள் காத்திருக்கின்றன… குளிர் முழுமையாக முடிய. அது ரொறன்ரோவில் விக்டோரிய தின வார இறுதி.
அதுவரையும் குளிர் தான். இதற்குள் நிர்வாணமாக எப்படி நிற்பது?
சரி, ஜோக்கிற்கு வருவோம்.
கடைசித் தடவை எச்சரிக்கை! சுத்த சைவர்கள் தயவு செய்து படிக்க வேண்டாம்!
ஒரு ஆணும் பெண்ணுமாய் அருகருகான வீடுகளில் வசித்து வந்தார்கள். பின்புறத் தோட்டத்தில் பயிர் நாட்டி விவசாயம் வேறு செய்தார்கள்.
வேலிக்குள்ளால் எட்டிப் பார்த்து உரையாடும் போது, பெண் கேட்டார்…
‘ஓ! உன்னுடைய தக்காளிகள் நல்ல சிவப்பாக தளதள என்று இருக்கின்றனவே, பார்த்தவுடன் கடிக்க வேண்டும் போல தூண்டுகிறதே! இதற்கு என்ன பசளை போடுகிறாய்?’
ஆண் சொன்னார்..
சொன்னால் கோபிப்பீர்கள்!
பெண்… பரவாயில்லை சொல்லுங்கள்.
‘இல்லை, இரவுகளில் நான் நிர்வாணமாக தோட்டத்தில் உலவுவதுண்டு. அதனால் அவை வெட்கமடைந்து சிவந்து தளதளக்கின்றன’
‘ஓகோ, அப்படியா? நானும் அப்படி முயற்சித்துப் பார்க்க வேண்டும்’
பெண் தீர்மானமாகச் சொன்னார்.
சில பல நாட்கள் கழிந்து ஆண் கேட்டார்…
எப்படி பரிசோதனை முயற்சி பெற்று விட்டதா?
பெண் சொன்னார்…
‘நிர்வாணமாக நடமாடித் திரிந்தேன். தக்காளிகள் சிவந்து தளதளக்கவேயில்லை. ஆனால் கத்தரிக்காயும் கியூக்கம்பரும் தான்…. நன்றாகப் பெருத்து விட்டன!
ஏற்கனவே எச்சரித்திருந்தேன்;! என்னைக் குறை சொல்லக் கூடாது!தோட்டம் பற்றிய ஜோக்குன்னா பச்சையாகத் தான் இருக்கும்!
(துணிவு இருந்தா ஷெயர் பண்ணுங்க!)
You must be logged in to post a comment Login