ஆங்கிலத்தில் nomenclature என்ற வார்த்தை உண்டு. பெயரிடும் முறை. குறிப்பாக விஞ்ஞானத்தில் மிருகங்களுக்கோ, தாவரங்களுக்கோ பெயரிடும் போது, ஒரு நாட்டில் ஒரு மொழியில் இடும் பெயர், மற்ற நாடு, மொழியினருக்குப் புரியாது போகும் என்பதால், எல்லோருமே பொதுவாக விளங்கிக் கொள்ளக் கூடியதாக லத்தீன் மொழி மூலத்தில் பெயர்கள் அமையும்.
இந்தப் பெயர்கள் ஏதோ ஒரு விதத்தில் எதையோ குறிப்பதாக அமையும். கண்டுபிடித்தவர் பெயர் முதல் யாரையாவது அல்லது எதையாவது நினைவு கூருவது வரைக்கும் இந்தப் பெயர்கள் அமையும்.
இப்படியாக நம்ம நாட்டுக்கு வந்த விஞ்ஞானிகளில் யாரோ ஒருவர் ஒரு பூவைப் பார்த்து விட்டு, மெய்மறந்து Glorius என்றாராம். மற்றவர் Superb என்றாராம். அதன் பின்னால் அதன் பெயர் Gloriusa Superba என்றாகியது. இது கியூறியஸ்க்கு தாவரவியல் கற்பித்த ரத்தினசபாபதி ஆசிரியர் சொன்னது. (அவர் பெருமை புகழப்படுவதாக!)
இது லத்தீன் பெயர், எவருக்கும் புரியாது. கார்த்திகைப் பூ என்றால், எல்லோருக்கும் தெரியும். அட, நம்ம மாவீரர் மாதத்தில் நினைவு கூரும் பூ என்று நினைவுக்கு வரும்.
இந்தப் பூவை வைத்து புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்க முயன்றார்கள் என்றும் அவர் சொன்னார். அதில் விஞ்ஞானிகள் வெற்றியடைந்தார்களோ என்னவோ, அதை வைத்து நம்ம சமூகத்துப் புற்றுநோய்கள் பலர் காசு பார்ப்பதில் வெற்றி கண்டார்கள்.
மனிதர்களைப் புதைக்கவும் எரிக்கவும் பயன்படும் இடங்களில் வளரும் இந்த நச்சுப் பூவை தேசியப் பூவாக்கிய புத்திஜீவிக்கு இந்தப் பூவை சயனைட் மாதிரிக் கடிக்கக் கொடுக்க வேண்டும் போலிருக்கிறது. இதன் கிழங்கு மிகவும் நஞ்சு. பொலிடோல் வராத காலத்தில் காதலில் தோல்வியுற்றோருக்கும் பரீட்சையில் சித்தி பெறாதோருக்கும் வாழ்வு கொடுத்தது (மேல் உலக!) இது.
இது ஒன்றும் ஈழத்தின் தனிச் சொத்துமன்று. சிங்களத்தில் நியங்கல என்று இதற்குப் பெயர். இது ஆபிரிக்கா வரையில் பரந்து கிடக்கிறது. இங்கே கூட தற்போது வீட்டுத் தோட்ட கன்றுகள் விற்குமிடங்களில் விற்பனைக்கு வந்திருக்கிறது.
ஆனால், நம்ம நஞ்சுண்ட பெருமாள்கள் நம்மவர்களுக்கு மூளையைக் கழுவி, இந்தப் பூ எங்களுக்குப் பெருமை சேர்க்கும் என்று விட்டார்கள். சயனைட் கடிப்பவர்களுக்கு செக்கென்ன, சிவலிங்கமென்ன? பிறகென்ன, பின்னால் போன மந்தைகள் எல்லாம் வேலியில் நின்ற கார்த்திகைப் பூவைக் கடிக்கத் தொடங்கி விட்டன.
இந்தப் பூவை நச்சுப் பூ என்று பிபிசி நிருபர் யாரோ சொன்னதற்காக, நம் அரசியல் நோக்கர் யாரோ அந்த அம்மையாருக்கு புலன் பெயர்ந்த பத்திரிகை ஒன்றில் திறந்த கடிதம் எழுதிய கதை இன்னொன்று. அம்மையார் இந்தப் பெருமகன் தமிழில் எழுதிய கடிதத்தை வாசிக்க மாட்டார் என்பது உங்களுக்கும் கியூறியஸ்க்கும் தெரிந்தாலும், அந்தக் கடிதத்தின் நோக்கமே தமிழ் வாசகர்களைக் குஷிப்படுத்துவதற்காகத் தான் என்பது பலருக்கும் தெரியாது.
இப்படியாகப் பெயர் வைக்கும் போது ஒரு காரணத்தோடு வைப்பார்கள். இருந்தாலும் A rose by any other name would smell as sweet என்று ஷேக்ஸ்பியர் ரோமியோ ஜுலியட்டில் சொல்வார். ரோஜாவுக்கு கார்த்திகைப் பூ என்று பெயர் வைத்தாலும், அதன் மணம் மாறாது. கார்த்திகைப் பூவுக்கு ரோஜா என்று வைத்தால், அதற்கு அழகும் மணமும் வந்து விடப் போவதில்லை. அது அப்போதும் நஞ்சு தான்.
இருந்தாலும் நம்ம மூன்று கால் முயல்காரர்கள் தேசியப்பூ என்பதால் அது தான் உலகத்தில் அழகில், மணத்தில், சுவையில் சிறந்த பூ என்று திறந்த கடிதம் எழுதத் தான் செய்வார்கள்.
பெயர்கள் எல்லாமே பொருளுடையனவா? எல்லாப் பெயரும் பொருளுடையன என்கிறது தொல்காப்பியம். கியூறியஸின் தமிழ் வாத்தியார் ஒருவர் சொன்னார், எல்லாச் சொற்களும் ஏதோ ஒரு பொருளுடன் தான் உருவாக்கப்பட்டன. ஆனால் அந்த விளக்கங்கள் எல்லாம் கடல் கோள் கொண்டு சங்கம் அழிவுற்றதோடு போய் விட்டன என்றார்.
இது தமிழன் வழமையாக விடும் றீல். தன்னுடைய பெருமையைக் கடல் கொண்டு போன கதை தான் அப்போதும் இப்போதும். முன்பு லெமூரியாக் கண்டத்தைக் கடல் கோள் கொண்டதால், முதல் சங்கச் சுவடிகள் போய் விட்டன என்று கதை விடுவான். இப்போது நந்திக் கடல் கொண்டதால், தனியான அர'சங்கச்' சுவடுகள் போய் விட்டது என்று புலுடா விடுவான்.
ஓலைச் சுவடியில் வரலாறு எழுதினால், கடல் என்ன, கறையானே கொண்டு போய் விடும். காட்டுக்குள் அரசாங்கம் அமைத்தாலும் அதே தான். கடல் (நந்தி) என்ன? வெறும் வாய்க்காலே (முள்ளி) கொண்டு போய் விடும்.
இப்படியாக, பெயர்கள் எல்லாம் பொருளோடு தான் உருவாகின என்று ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியனார் சொல்கிறார் என்பதற்காக, எட்டாம் வகுப்பிலேயே முகத்தாரின் (அதுதான் ஆறுமுக நாவலரின்) இலக்கணச் சுருக்கத்தைக் கரைத்துக் குடித்த கியூறியஸ் அப்படியே ஏற்றுக் கொண்டு விடுவானா? He begs to differ! ஒப்ஜெக்ஷன், யுவர் ஒனர்!
மண்ணை வெட்டுவதால் மண் வெட்டி. மாவை வெதுப்புவதால் வெதுப்பகம். பணத்தை எடுக்கவே முடியாமல் வைப்பதால் வைப்பகம். பொருளுடைத்த பெயர்களும் உள்ளன தான். அப்படின்னா, பெயர்களில் காரணப் பெயர், இடுகுறிப் பெயர் என்று இரண்டு இருக்கக் காரணம் என்ன? இடுகுறிப் பெயர் என்பதே காரண காரியமில்லாமல் இடப்படும் பெயர். அதற்கு பொருள் இல்லை என்பது தானே அர்த்தம்.
சரி போகட்டும். இல்லாமல் போன ஒன்றை இழுத்து வைத்துக் கடிப்பதில் என்ன பயன்? தொல்காப்பியர் என்றோ போய் விட்டார். அவரோடு வாதப் பிரதிவாதம் வைத்து என்ன செய்ய முடியும்? யாராவது அவர் சாகவில்லை, அங்கே இருக்கிறார், இங்கே இருக்கிறார் என்று சொன்னால் ஒழிய!
சரி, பெயரீட்டியலுக்கு வருவோம்.
உலகெங்கும் மனிதர்கள் பெயர்கள் வைக்கிறார்கள்.
ஐரோப்பியர்களுக்கு மலிவான பெயர் ஸ்மித். கொல்லர், பத்தர், பாண் செய்வோர் என்று பல்வேறு நுண்வினை, நுண்ணாவினைக் கம்மியர்கள் தங்கள் தொழில் பெயர்களை சொந்தப் பெயராக்கினர். பேர்கர் என்று குடியானவனுக்கும் பெயர் வைத்தார்கள். அவையே தலைமுறை தலைமுறையாய் தொடரும் குடும்பப் பெயராயின.
தொழிலுக்கு ஏற்ப சாதி பிரிக்கும் எண்ணம் ஐரோப்பியனுக்கு ஏன் வரவில்லை என்பது தான் புரியவில்லை.
ஆதிக்குடிகள் இங்கே பெயர் வைத்தார்கள். பெருங்கழுகு, கரடி என்ற விலங்குப் பெயர்கள் முதல், வீரம் விளக்கும் பெருமைப் பெயர்கள் வரைக்கும் பெயர்கள் இருக்கும்.
ஆபிரிக்காவில் புலியைக் கொன்றான், சிங்கத்தை அடித்தான் என்றெல்லாம் விவரணங்கள் பெயராயின... நம்ம புறநானூற்று மன்னர்களுக்கு ஏழைப் புலவர்கள் வைத்தது போல.
தமிழ்நாட்டில் ஊர்ப் பெயரை முன்னாலும் சாதியைப் பின்னாலும் வைத்து தமிழன் பெருமை கொண்டான். தமிழ் நாட்டில் தமிழனே இல்லை, அங்கே வன்னியனும் நாடானும் முக்குலத்தோனும் பிள்ளைவாளும் தான் உள்ளனர் என்பது போலத் தான் தமிழன் பெருமை சாதி அரசியலால் நாறிக் கிடக்கிறது.
நம்ம ஈழத்தமிழன் பெயர் வைத்தான் பிள்ளைகளுக்கு.
தெய்வங்களின் பெயரை வைத்தான். தமிழில் மலிவான சிவாவும் குமாரும் சிவகுமாரும் என. தெய்வங்களின் பெயரை வைத்தால், கடவுள் அருள் நிறையும் என்ற நம்பிக்கையில். சகல தெய்வங்களின் பெயர்களிலும் தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் செய்யும் பாவங்களுக்கு மட்டும் குறைச்சலில்லை.
பெண்பிள்ளைகளுக்கு மலிவாக சாந்தி என்று பெயர் வைத்தான். ஐந்து பெண்ணைப் பெற்று நிம்மதியே இல்லாமல் ஆண்டியாகும் இவன் எதற்காக பெண்ணுக்கு சாந்தி என்று வைத்தான் என்பது கியூறியஸ்க்கு தெரியாது. சாந்தி என்பதற்கு அமைதி என்பது பொருளாயின், இந்தப் பெண்ணோடு சகவாசம் வைக்கும் எவனுக்கும் அது கிடைக்காது, எனவே பெயரிலாவது வைப்போம் என்ற எண்ணத்திலோ தெரியாது.
எதுக்குங்க விளக்குமாறு எல்லாம்? வழியில் விளக்குமாறு காட்டிய பெண்களைக் காட்டி, 'கொள்கை விளக்குமாறு கேட்டார்கள்' என்று கருணாநிதி கயிறு விட்ட மாதிரி விட்டுடவா?
தமிழன் காரணப் பெயர்களாய்த் தான் பிள்ளைகளுக்கு பெயரிட்டான். பொருத்தமோ பொருத்தமில்லையோ?
இதனால் தான் பஞ்சப் பரதேசிகள் செல்வத் துரையாகவும், செல்வராஜாக்கள் பஞ்சலிங்கங்களாயும் பெயர் பெற்றனர். பெயருக்குத் தட்டுப்பாடானால், மூத்ததம்பி, இளையதம்பி, சின்னத்தம்பி, பெரியதம்பி, ஆசைத்தம்பி என்று கூடப் பெயர் வைத்தான்.
சிவலோகம் போன பாட்டன், பாட்டி பெயர்களை பேரன், பேத்திக்கு வைத்து முன்னோரை நினைவு கூர்ந்தான். இதனால், எங்கள் காலத்தில் மங்காத்தா (அடையாளம் தெரியாதிருக்க பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற பெயரில், ஏதோ ஒரு பெண் பாடசாலையில் பயின்ற பெண் பின்னால் திரிந்த நண்பனுக்காக, கியூறியஸ் சைக்கிள் மிதித்துத் தொலைக்க வேண்டியிருந்தது. அந்தப் பெயர் எங்களுக்கு எல்லாம் ஒரு வித்தியாசமாய் தெரிந்த பெயர். அந்த ஜோடி சேராமலேயே போய் விட்டது. ஆனால் டயானா என்ற பெண்ணுக்காக அலைந்த புண்ணியமூர்த்திக்காக சைக்கிள் மிதித்துக் களைத்தும், இன்றைக்கும் 'அண்ணை, நீங்கள் என்னத்துக்கு உந்த மனிசனை கூட்டிக் கொண்டு திரிஞ்சனீங்கள்? உங்களாலை நான் படுகிற பாடு. உந்த மனிசனை நம்பி என்ரை குடும்பத்தை விட்டு வந்தன்' என்று கணவனைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே, கியூறியஸைக் காணும் நேரமெல்லாம் திட்டுகின்ற டயானாவிடம் இருந்து தப்புவதே பெரும்பாடு. வயிற்றுப் பிள்ளைக்காரி. திட்டுவது கூடாது. அவளுக்கும் கியூறியஸ்க்கும் தான்!
ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு ஸ்டைலில் பெயர்கள் இருந்தன. மரபு மீறியோர் ஏற இறங்கப் பார்க்கப்பட்டனர்.
போதாக்குறைக்கு போராட்டமும் தமிழ் மொழி அமுலாக்கம் செய்யப் போக, போராளிகளும் தமிழ்ப் பெயரில் ஞானஸ்நானம் பெற்றனர். அவை கூட காரணப் பெயர்களாகவே இருந்தனர். அறிவு இருந்ததோ என்னவோ, அறிவழகன் என்ற பெயர் வந்தது. ஈன இரக்கமில்லாமல் உயிர் எடுப்பவருக்கும் இனியவன் என்று பெயர் வந்தது. வீரம் இல்லாவிடினும், கரிகாலன் என்ற பெயரும் வந்தது. பெயர்கள் மட்டும் காரணமாய், பெயர் கொண்டவர்களின் இயல்போடு தொடர்பே இல்லாமல், காரண காரியம் இல்லாமல் வலிந்து திணித்த இடுகுறிப் பெயர்களாயின.
ஆசிரியரின் பெயர் கூடக் காரணப் பெயர் தான். கிரேக்க மொழியில் உழவன் என்ற அர்த்தமாம். தனது பரம்பரையும் தற்போதைய பொழுதுபோக்கும் உழவு சம்பந்தமாய் இருப்பதால், அது காரணப் பெயர் தான் என்கிறார்.
அதற்காக, முயக்கம் சொன்ன மாதிரி தமிழ்ப் பெயர் வைத்து உழவன் என்று ஆசிரியர் பெயரைப் போட முடியுமா? யாள்ப்பாணத் தமிளன் ழகரத்தைப் படுத்தும் பாட்டில், உளவன் என்று உச்சரிக்கப் போனால், அதுவே புதுத் தலையிடியாகி விடும். உளவு பார்ப்பவன் என்று சுத்திஜீவிகள் வியாக்கியானம் கொடுக்கப் புறப்பட்டு விடுவார்கள்.
இந்தத் தமிழன் புலன் பெயர்ந்தான், மேற்குலகிற்கு. தமிழ்ப் பெயர்களும் ஞானஸ்நானம் பெற்றன. சாம் ஆன சாமிகளும், லின் ஆன லிங்கங்களும் என, வெள்ளைக்காரன் வாயில் புகுவதற்கு வசதியாய் தமிழன் பெயர்கள் சுருங்கின. கியூறியஸின் நண்பனும் ஆண்டிக் கிழவனின் பேரனுமான புண்ணியமூர்த்தி அன்டி மூர் என்று வைத்துக் கொண்டான்.
இப்படியாக இஷ்ட தெய்வங்களையும் இஷ்டமில்லாத கொடுந்தமிழ்ப் பெயர்களையும், அந்நியனின் நாக்குக்கு பங்கம் வரக் கூடாது என சுருக்கிய பெயர்களையும் கொண்ட புலன் பெயர்ந்த தமிழனுக்கு தன்னுடைய பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கும் போது மட்டும் பெயருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது.
காரணமும் இல்லாமல் இடுகுறியாயும் இல்லாமல் வாயில் நுழையா ஷன், ஷா, ஷிகா, ஜிகா, மெகா, ரெறா பைட்டுகளில் பெயர் வைக்கத் தொடங்கினான்.
முன்பெல்லாம் வட மொழியில் இருந்து அழகான பெயர்களை இறக்குமதி செய்த தமிழன் இப்போது பிள்ளைகளுக்கு உலகில் எந்த மொழியிலும் இல்லாத சொற்களை உருவாக்கிப் பெயர் வைக்கிறான். அதற்குக் காரணமே வேறு.
எண் சோதிடமாம்!
எப்படித் தமிழன் பிள்ளைகளுக்கான பெயரைத் தேடிக் கண்டுபிடிக்கிறான் என்பது இப்போது மர்மமாகவே இருக்கிறது. இந்த மர்மத்தைத் துலக்க, இங்கே அயகு தமிய்ப் பெயரில் பிள்ளைகளுக்குப் பெயர் வைத்தால் பணப் பரிசில் கொடுப்பதாக விளம்பரமும் போட்டார்கள்.
எதுக்கையா பரிசில்? சும்மா வெல்பெயர் கொடுப்போம் என்றால், பெற்றுத் தள்ளியிருக்க மாட்டார்களா?
ஆசிரியரைக் கியூறியஸ் கேட்டான். ஆசிரியர் சொன்னார், தன்னை வளர்த்து ஆளாக்கிய பேரனின் பெயரை தன் மகனுக்கு சூடியதாக. அதையும் அப்படியே வைத்தால், மங்காத்தா விவகாரம் ஆகி விடும் என்பதால், அந்தப் பெயரை மாற்றியதாகவும் சொன்னார்.
பார்ட்டியில் சந்தித்த ஒருவர் மிகவும் சிம்பிளாகச் சொன்னார்... நான் என்ரை பெடியனுக்கு இப்பிடித் தான் பேர் வைச்சனான். என்ரை பேர் சண்முகம். மனிசிக்குப் பேர் நிரஞ்சி. இரண்டையும் சேர்த்து நிருசன் எண்டு வைச்சன்.
என்னே பிள்ளைப் பாசம். பத்து நிமிடக் கலவிக்கும் (தன்னுடைய இல்லறச் சுருக்கம் பற்றி there are plenty of souls beg to differ என்பது கியூறியஸ்க்கு தெரியும்!) பத்து மாதம் சுமந்ததற்கும் எந்த அர்த்தமும் இல்லாமல், பிள்ளைக்குப் பெயர் வைக்க எடுத்த நேரம் ஒரு பத்து செக்கன்!
ஆசிரியரைக் கேட்டால், பேரன் பெயரை மகனுக்கு வைத்தேன் என்கிறார். பார்ட்டிக்காரரோ தன் பெயரையும் மனைவி பெயரையும் சேர்த்து வைத்தேன் என்கிறார்.
கியூறியஸின் பயமும் பிரார்த்தனையும்... ஆண்டிக்கிழவனின் பேரனும், டயானா என்ற கிறிஸ்தவப் பெண்ணை பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் மணம் முடித்தவனுமான கியூறியஸின் நண்பன் புண்ணியமூர்த்திக்கு தன் பெயர், மனைவி, பேரன் பெயர் எல்லாம் சேர்த்து பிள்ளைக்கு பெயர் வைக்கும் விபரீத எண்ணமே வரக் கூடாது என்பது தான்.
பூபாளம், அக்டோபர் 2012
You must be logged in to post a comment Login