இயற்கை பற்றிய வெளிப்பாடுகளை மனிதன் மிக பழங்காலத்திலிருந்து வெளிப்படுத்தியதை பழைய உலக இலக்கியங்களிலும் காண்கிறோம். குறிப்பாக பண்டைய கிரேக்க,ரோம இலக்கியங்களில் இயற்கை பற்றிய குறிப்புகளும், வர்ணனைகளும் மிகுந்து காணப்படுகின்றன. இந்தியாவில் தமிழ் மரபிலும், சம்ஸ்கிருத மரபிலும் இயற்கை வர்ணனைனகள் காணக்கிடைக்கின்றன. தமிழில் சங்க இலக்கியங்கள் உலகம் வியக்குமளவுக்கு இயற்கை வர்ணனைகளை வெளிப்படுத்திருக்கின்றன.
பழைய இலக்கியங்களூடே சொல்லப்பட்ட கதை , கவிதைகளில் இயற்கை அல்லது புவியியல் சார்ந்த நுண் அவதானங்களும் வெளிப்பட்டிருக்கின்றன. பிற்காலத்தில் அவை தனித்துறையாக வளர்ச்சி பெற்றன.
பழங்கால எகிப்திய, கிரேக்க, ரோம புவியியலாளர்கள் தொட்டு சென்ற கருத்துக்களின் விரிவுகளை பின் வந்த ஐரோப்பிய அறிஞர்கள் வளர்த்தெடுத்தனர். கி.பி மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிளினி என்ற இத்தாலி அறிஞர் Natural History என்ற தனது நூலில் வானியல் தாவரவியல் போன்றவற்றுடன் புவியியல் பற்றிய செய்திகளையும் பேசுகின்றார். அதே போல கி.பி. 170இல் வாழ்ந்த தொலமி [ Ptolemy ] என்ற பல்துறை அறிஞர் வரைந்த உலக வரைபடமும், புவியியலின் தந்தை என போற்றப்படுகின்ற Eratosthenes [ கி.மு 279 ] என்பவர் முதன் முதலில் வரைந்த உலகப்படமும் முக்கியமானவையாகும்.
அதுமட்டுமல்ல, பழங்கதைகள் பலவும் உலகத்தின் தோற்றம் குறித்தும் பேசுவதை உலகெங்கும் காண்கிறோம்.பாபிலோனிய, சுமேரிய, யூத, கிரேக்க ஆதி இலக்கியங்கள் இது குறித்து பேசுகின்றன என்பார் மார்க்சிய அறிஞர் நா.வானமாமலை.
“ உலகைப் படைத்தது யார் ? இக்கேள்வியை வரலாற்று முக்காலத்திலும், நாகரீக தொடக்க காலத்திலும் வாழ்ந்த மக்கள் கேட்டனர். ஆதாரங்களோடு விடையளிக்க முடியாத கேள்விகளுக்கு கதைகளை புனைந்து அவற்றையே அளித்தனர். விஞ்ஞான ஆய்வுகளும்,சிந்தனை வளர்ச்சியும் ஏற்பட்டிராத காலத்தில் பண்டையமக்கள் இயற்கையைப் பற்றியும், வாழ்க்கையைப் பற்றியும் இத்தகைய கதைகளையே கண்டுபிடித்திருக்கிறார்கள் என்பதை பண்பாட்டு மானிடவியல் விளக்குகிறது “ என்பார் அறிஞர் நா.வானமாமலை. – [பழங்கதைகளும் பழமொழிகளும்]
நவீன காலத்தில், இயற்கையுடனான மனிதனின் ஆத்மார்த்தமான உறவு, நகர்ப்புற தொழில்நுட்ப நாகரீகத்தில் மறைக்கப்பட்டிருப்பது போல ஒரு தோற்றம் தந்தாலும், அடிப்படையான இயற்கை ஆற்றலின் ஆதிக்கத்திலிருந்து அவன் தப்பிக்கவே முடியாது. மனித உயிர்ப்பின் இயக்கமே இயற்கைதான்!
இயற்கையின் மூலகங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்றவற்றின் ஆற்றலைகளை, அதில் பொதிந்திருக்கும் இனம் புரியாத சக்திகளை அறியாத ஆதி மனிதன் அவற்றில் மந்திரசக்தி இருப்பதாகவும், அதில் ஆவிகள் இருப்பதாகவும் எண்ணிக்கொண்டான். அத்துடன் நிற்காமல் அவை தெய்வீக சக்தியுள்ளவை எனவும் உணரத் தலைப்பட்டான். தனது அறிவுக்கெட்டிடாத அனைத்தும் ஆவிகளின் செயல்பாடுகள் எனவும் அவைகளே தம்மையும் இந்த பூமியையும் காக்கின்றன எனவும் எண்ணினான். அதன் காரணமாக தமக்கு விளையும் விபரீதங்கள் கெட்ட ஆவிகளின் செயற்பாடுகளாகவும், தன்னைச்சுற்றிய நிலச்சூழல் அமைந்த பூமியில் ஆத்மா [ Spirituality ] இருப்பதாகவும் எண்ண வைத்தது.
இயற்கையிலுள்ள மலை, மரம், நீர்வீழ்ச்சி, ஆறு, குளம்,மிருகங்கள், பறவைகள், தாவரங்கள், பூக்கள் போன்றவற்றுடன் தன்னை அடையாளம் கண்டும் அங்கே தமது முன்னோர்களின் ஆவி இருப்பதாக கருதும் அளவுக்கு நிலமும், சூழலும் மனிதனின் ஆழ்மன உள்ளுணர்வில் நம்பிக்கைகளாகவும் பதிந்துள்ளன
இவ்விதம் நிலப்பரப்பில் நிகழும் எதிர்பாராத அதிர்ச்சி, விசித்திரமான கதைகளுக்கும், புராணீய, ஐதீக [ Myth ] கதைகளுக்கும் பாடுபொருளாகவும் அமைந்ததுடன், அவற்றை வெல்லும் நாயகர்களையும் உருவாக்கவும் உதவியுள்ளன.
காடுகளில் குறிப்பாக மரங்களில் ஆவிகள் இருப்பதாகவும் நம்பப்பட்டது. பெரும்பாலான பழங்குடி மக்களிடம் இந்நம்பிக்கை இருந்துள்ளது என்பதை நாம் அறிவோம். ஆவியுடன் பரம்பரை உறவுகளின் நீட்சி இணைந்ததாகவும், அவை மரங்களுடனும் தொடர்பு கொண்டுள்ளன எனவும் நம்பினார்கள்,
இவ்விதம் மரங்களுடனான தமது மூதாதையர் தொடர்பு பற்றிய ஆதிகால நம்பிக்கை அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் பழங்குடிகளிடமும் அவுஸ்திரேலியாவின் தென்பகுதியான Adnyamathanha பகுதி பழங்குடி மக்களிடமும், உலகின் பிறபகுதி பழங்குடி மக்களிடமும் காணப்படுகின்றன.
தென்கிழக்கு ஆசிய பகுதியான பர்மா, தாய்லாந்து பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள் தங்கள் உணவுக்கான வேட்டையை ஆரம்பிக்கும் முன்னர், மரங்களிடமும், அவைசார்ந்த தெய்வங்களிடமும் அனுமதி பெறுவதுவதற்காக சில மந்திர உச்சாடனங்களை சொல்லும் வழமையை இன்றும் கடைப்பிடிக்கின்றனர்.
மரங்கள் மட்டுமல்ல உயிரினங்களுக்கும் மந்திரசக்தி இருப்பதாக மனிதன் நினைத்தான்.
இத்தகைய ஆழ்ந்த பயத்தால் இயற்கையை மகிழ்விக்க, சாந்தப்படுத்த மந்திர உச்சாடனங்கள் பயன்படும் என நினைத்தான். இவையே மதங்களுக்கான, வழிபாடுகளுக்கான அல்லது இறைவனுக்கான வழிபாடுகளாக வளர்ந்தன.
இந்திய சூழலிலும் இத்தகைய தன்மைகள் நிறைந்திருப்பதை நாம் காண்கிறோம். “ஆதிகாலத்தில் இந்திய பழங்குடிகளிடம் இருந்த நாகவழிபாடு, சுடுமண் தெய்வ வழிபாடு, பெண் தெய்வம், லிங்க வழிபாடுகள் சிறந்த உதாரணங்களாகும்.
இயக்கர் – இயக்கி வழிபாடுகள் பூர்வ இந்திய பழங்குடிகளுக்கானவையாகவும், ஆரியர்களின் வருகைக்கு முன்பிருந்த வழிபாட்டு முறையாகவும், இயக்கர்- இயக்கி என்ற பெயர்கள் யக் [ Yak ] , யக்கா [ Yaka ], வஜ் [ Vaj ] என்ற மூலச் சொற்களிலிருந்து பிறந்தன என்றும், அதன் அர்த்தம் விரைந்து செல்லக்கூடியது, பலி கொடுக்கத்தக்கது, விரைந்து செல்லும் ஒளி மற்றும் ஆவி, பேய் என பாளி மொழி உரைகள் பொருள் கூறுகின்றன. வேறு சிலர் பேய்த்தன்மை பொருந்தியது [ Spiritual Apparition ], தெய்வத்தன்மை பொருந்தியது [ Semi Divine ] எனவும் பொருள் கூறுகின்றனர்.
இயக்கர் – இயக்கிகள் தமது வாழ்விடங்களை காடு,மலை, நீர்நிலைகள், மரங்களில் அமைத்து கொண்டுள்ளதாகவும், பாமர செயல்களை செய்வதாகவும் எண்ணி, அவர்களுக்கு அஞ்சிய மக்கள், அவர்களுக்கு படையல்கள் கொடுத்து வழிபாடு செய்து வந்தனர். இந்த நம்பிக்கையின் செல்வாக்கை தவிர்க்க முடியாத சமண, பௌத்த, பிராமண மதங்கள் தமது கதைகளிலும் இணைத்துக் கொண்டன. குறிப்பாக, பௌத்த ஜாதகக் கதைகளிலும் நிறைந்து படுகின்றன. இக்கதைகள் பற்றிய வெளிப்பாடுகளை அசோகர்கால சிற்பங்களிலும் நாம் அதிகம் காண முடியும்.
பௌத்தர்கள் மட்டுமல்ல சமண தீர்த்தங்கரர்களின் இருபுறமும் இயக்கர்- இயக்கி சிற்பங்களை வடிக்கும் சிற்பமரபு சமணர்களிடமும் இருந்து வந்திருக்கிறது.
வட இந்தியா போன்று, தமிழ் நாட்டிலும் நாட்டுப்புறத்தில் இத்தன்மை பொருந்திய நம்பிக்கை, வழிபாடு இருந்துள்ளது. சமண. பௌத்த மத நம்பிக்கைகளாலும் இவை வலுப்பெற்றிருக்கலாம் எனினும் இயக்கி, இயக்கர் என்ற பெயர்களைக் கொண்டில்லாமல் அத்தன்மை பொருத்திய சங்ககால பெண்தெய்வத்தன்மை மிக்கதாக விளங்கின என்பர்.
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற பண்டைத்தமிழ் இலக்கியங்களில் கானமர் செல்வி, கடல்கெழுச்செல்வி, பாவை, அணங்கு, சூலி, சூரரமகளிர், சூர்மகள் போன்றவை கடல், காடு, ஊர், மலைகளில் வாழ்வதாக நம்பப்பட்டு வந்துள்ளன. பின்னாளில் வளர்ந்த சாங்கியம் [சக்திவழிபாடு] நில வழிபாட்டையும் , இயற்கை வழிபாட்டையும் அடிப்படையாகக் கொண்டது. இது ஆதி இயற்கைவாதம் என அழைக்கப்பட்டது.
மண்ணை அல்லது நிலத்தை வழிபடும் முறை மிகப்பழமையான ஒன்றாகும். மண் குறித்த சிறப்பான பார்வை மிகப்பழங்காலத்திலேயே தமிழ் மக்களிடம் இருந்துள்ளது என்பதை தொல்காப்பியத்தில் நாம் காண்கிறோம்.
அன்றைய காலத்திற்குத்தகுந்த உலகம் பற்றிய ஒரு தரிசனம் இருந்ததை நாம் காண முடிகிறது. இன்றைய விஞ்ஞானம் பலவற்றை நீர்த்துப் போக வைத்தாலும் அவற்றின் சில முக்கியமான கூறுகளை நம்முன்னோர்கள் அறிந்து வைத்தனர் என்று கூறலாம்.
இயற்கை மற்றும் அங்கே வாழும் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியின் வளர்ச்சி இன்று புவியியல் என்ற ஒரு விஞ்ஞான துறையாக வளர்ந்துள்ளது. மிகப்பெரிய ஆய்வுத்துறையாக வளர்ந்திருக்கும் இன்றைய புவியியல்சார்கல்வி, கிட்டத்தட்ட இருநூறு வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பாவில் தோன்றியது.
புவியியல் என்பது உலகை அறிதல் என்பார் வில்லியம்ஹியூஸ், [ William Hughes 1818 – 1876 ] என்ற புவியியல் ஆராய்ச்சியாளர். Manual of Geography என்ற நூலில் உலகின் பல பாகங்களையும், ஐரோப்பா முதல் அவுஸ்திரேலியா வரை வகைமைப்படுத்தியும், வகைப்படுத்தியும் [ Categorize ] விரித்து பேசுகிறார் வில்லியம் ஹியூஸ். பண்டைக்கால மனிதர்கள் எழுதியவைகளின் விரிவாக்கமாகவே அவை வளர்ச்சி பெற்றன.
நிலம்சார்ந்த காட்சியமைப்பிற்கு புவியியலாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நிலம் மற்றும் இயற்கைக் காட்சிகள் அவை பற்றிய ஆராய்ச்சிகளுக்கு, ஆய்வு செயல்முறைகளுக்கு அடிப்படையாக அமைகின்றன. அறிவின் வாயில்களில் ஒன்று புறக்காட்சி. அதுவே பெரும்பான்மை விஞ்ஞானத்தின் அடிப்படையாகவும் உள்ளது!
நவீன காலத்தில் புவியியல் பற்றிய ஆய்வுகள் பல்துறைகளாக வளர்ந்துள்ளன. நிலஉருவாக்கவியல் [Geomorphology], நிலவியல்[Geology], நீர்வளஇயல்[Hydrology], பனியாற்றியல் [Glaciology], உயிரினப்புவியியல் [Biogeography] காலநிலையியல், மண்ணியல் [Pedology], புவிஉருவவியல் [Geodesy] , தொல்புவியியல்[Palaeogeography], சூழற்புவியியலும் மேலாண்மையும்நிலத்தோற்றவாழ்சூழலியல் [Landscape ecology] போன்றவை பெருந் துறைகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய நவீன கல்விமுறை சார்ந்த புவியியல் இன்று பேசும் பலவிடயங்களை கிட்டத்தட்ட இதற்கிணையாக பல செய்திகளை இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே தொல்காப்பியம், தாம் அறிந்த வகையில் பேசியிருப்பது மட்டுமல்ல அவை இன்றைய நவீன விஞ்ஞானபூர்வ முடிவுகளுக்கு இசைவாககவும் உள்ளமை கவனம் பெறுகிறது.
[ தொடரும் ] *
You must be logged in to post a comment Login