வாழும், பிறக்கும் நாடுகள் மீது மனிதப் பிராணிகளிடம் நிறைய வியாதிகள் இருக்கின்றன எனக் கருதுகின்றேன். நாடுகள் எனக்கு எதுவும் இல்லை என்பது என்னை ஒவ்வொரு நாட்டினதும் எதிரியாக்கும். இந்த எதிரியாக இருப்பதில் எனக்கு நிறைய இஸ்டம் உண்டு. நாடு என்றால் என்ன? எமது இருத்தல் என்றால் என்ன? தமிழனாகப் பிறந்தால் எமக்கு அறிவு கூடுமா? பிரெஞ்சு நாசனலிற்றியை எடுத்தால் அறிவு 100 மடங்காக அதிகரிக்குமா? ஆயுள் கூடுமா? எமது இருத்தலின் நோக்கம் நிறங்களைப் பிரிப்பதல்ல, அவைகளைத் தியானிக்க வேண்டியவை. தேசப்பற்று எனும் வியாதி நாடுகளையும், நிறங்களையும் பிரிப்பதற்கு முன்னணிக் காரணமாக உள்ளது.
பிரிப்பு, இது எங்கும் உள்ளது. இருத்தல்களை துண்டாக உடைக்கும் கொள்கையைக் கொண்டவை பிரிப்புகளே. நிறையப் புத்திஜீவிகள் பிரிப்புகளுள் தமது தலைகளைப் புகுத்தி வைத்துள்ளனர். இவர்களது ஆய்வுகள் எல்லாம் பிரித்தல் காலத்திலும், அதனது தளத்திலும் தோய்வன என்பதை இவர்களது எழுத்துகளும் பேச்சுகளும் காட்டும். இந்தப் பிரிப்பின், பிரிப்புகளதும் கொள்கைகளே எனக்குள், எனக்கு எப்போதும் ஓர் நாடு இருக்கக் கூடாது எனும் கொள்கையை ஊட்டின.
நாடு வாழும் இடம். எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அது எமது நாடாக இருக்கவேண்டும். இந்த உரிமையை, மனித உரிமைகளைப் பாடும் அரசுகள் மறுக்கின்றன. விசா இல்லாமல் ஒரு நாட்டுக்குச் சென்றால் நிச்சயமாக மனிதனாக இருக்கமுடியாது, விசரனாகவே இருக்கவேண்டும்.
“எனது நாடு எதுவும் இல்லை” எனும் போக்கு சிக்கலான விசயமாக இருக்கலாம்? ஒவ்வொரு நாடுகளிலும் தொடக்கத்தில் தேசியவாதிகளை உருவாகிப்பது மனித அரசியல் இயக்கங்களின் வேலை. இன்று நான் எனக்கு நாடு இல்லை எனச் சொன்னால், பிரான்ஸ் என்னை வெளியால் தள்ளிவிடுமா? இந்த நாட்டில் இந்த சிக்கல் இல்லை. சில நாடுகளில் சிக்கல்கள் இருக்கலாம்.
நிறைய ஆண்டுகளை நான் முதலாளித்துவ பிரான்சில் வாழ்கின்றேன். இந்த நாட்டில் எனக்கு நாசனலிற்றி கிடைத்துள்ளது. நான் பிரெஞ்சா? ஹ்ம்ம்! எனது நிறம் கருப்பு. இந்த வெள்ளை நாடு என்னைக் கறுப்பாகப் பார்த்தலில் தப்பு இல்லை. காரணம் எனது சாதியை எப்போதும் கேட்பதில்லை. ஊரில், கிராமத்துக்குக் கிராமம் சாதி தேவை. மனிதம் தேவையில்லை. வீதிக்கு வீதி மனிதப் பிரிப்புகள். உபகண்ட சாதிப் போக்கின் கொடுமை ஐரோப்பிய இனவாதப் போக்கிலும் பெரிய இடத்தில் வைக்கப்பட வேண்டியதே.
கறுப்பும் கறுவலும் ஒன்றல்ல. நான் கறுப்பு. நான் கறுவல் எனச் சொல்ல முடியாது. கறுவல் என்பது ஆபிரிக்கருக்கு நாம் பட்டம் போடும் சொல். ஆனால் நாம் கறுப்பு என ஆபிரிக்கரின் முன் சொன்னால், அவர்கள் நம்மை இந்தியர், நிறைய அறிவு உள்ளவர்கள் என்றும் சொல்வதுண்டு. இது நக்கலான குறிப்பா என்பது எனக்குத் தெரியாது. நக்கலடிக்கும் கலாசாரம் ஒவ்வொரு இன, மொழிக் குழுக்களிலும் உள்ளது.
“எனது நாடு” என்னும் குறிப்பை எனது பிறப்புக் குறிப்பாக நினைக்காதபோது, நாம் வாழும் நாடுகள் எமக்குத் “தாய் நாடுகள்” போல. அரசியல், பொருளாதார நெருக்கடிகள் நிறையைப் பேரை வெளியால் தள்ளி, வெளியால் நிறைய வசிக்கப் பண்ணியுள்ளது, காலமாகவும் பண்ணியுள்ளது. இந்த சூழலில் வெளி என்பது எமது நாடாகக் கருதப்படலாம். ஆனால் இந்த வெளியை மறைக்கும் கலாசாரம் பல இனக் குழுக்களுள் உள்ளது, அவை இங்கு 50 வருடங்கள் வாழ்ந்தபோதும். இது நாட்டு வெறியல்ல, தேசிய வெறி. இந்த வெறியைக் கொடுக்க அப்போதும் புத்தகங்கள் இருந்தன, இப்போதும் நிறைய உருவாகுகின்றன.
ஆம்! எமக்கு ஓர் நாடு இல்லை என்பதை எமது உலக முதலாளித்துவக் கலாசாரத்துள் நாம் ஒவ்வொருநாளும் சொல்லலாம்.
You must be logged in to post a comment Login