Recent Comments

    இயற்கை – நிலம் – இசை : 19

    T.சௌந்தர்

    பல்தேசிய கம்பனிகளும்

    அதன் அடியாள் இசையும்:

    1970களுக்குப்பின் உருவான இசைத்தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக வியத்தகு மாற்றங்கள் உருவாகின.   குறிப்பாக, உலக மின்னியல் வாத்தியங்களில் உண்டான மாற்றங்களும், இசைமாதிரி [ Music Samplings ]  என அழைக்கப்படும் ஏற்கனவே அமைக்கப்பட்ட இசையை அல்லது ஒலித்தொகுப்புகளை  சேமித்து வைக்கும் மின்னியல் தொழில்நுட்பமும் , ஒலிகளை அதீத நுட்பத்துடன் பதிவு செய்யும் ஒலிப்பதிவுக் கருவிகளின் கண்டுபிடிப்புகளும் அதீத பாய்ச்சல்களை உண்டாக்கின. 

    1980களில் அதிவேகம் பெற்ற இம் "மாதிரி இசை " [ Music Samplings ] மேல்நாட்டின் பல்வகை இசைக்களிலும்  [ Pop, F unk, Soul , Hip hop ]  பயன்பட்டு 1990களில் உச்சம் பெற்றது. எல்லாவிதமான தேவைகளுக்குமான ஒலித்தொகுப்புகள் முன் கூட்டியே உருவாக்கப்பட்டு எல்லோரும் பயன்படுத்தும் வகையிலும் சேகரித்து வைக்கப்பட்ட நிலையில் கற்பனை ஆற்றல் இல்லாதவர்களும், குறைந்தளவே படைப்பாற்றல்மிக்கவர்களும், கீபோர்ட் கருவியை ஓரளவு வாசிக்கத் தெரிந்தவர்களும் இம்மாதிரியான Sampling ஐ பயன்படுத்தி  இசையமைப்பாளராகும் " தகுதி " யைப்  பெற்றனர்.

     இதே காலப்பகுதியில், இதன் சமாந்தரமாக வளர்ந்த சிந்தசைசர் [ Synthesizer ]  என்கிற மின்னியல் வாத்தியக்கருவியின் வளர்ச்சியும் வினோதமான ஒலிகளை உள்ளடக்கிய, பல்வகை ஓசைகளை  எழுப்பவல்ல,  இசைக்கருவியாக உருப்பெற்று அமைந்தமையும் , ஒரு பட்டனை தட்டி விட்டாலே இனிய ஓசைகளையும், அதன் பலவிதமான பரிமாணங்களையும் காட்டவல்ல கருவியாக அமைந்தமையும் படைப்பாற்றல் இல்லாத பலரை இசைக்கலைஞர்களாகக் காட்ட உதவியது. இந்த இசை குறித்து முதன் முதலில்  மேலைநாட்டு இசைத்துறையில் தான் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. 

    உலகளவில் புகழ் பெற்ற ஜப்பானிய இசைக்கலைஞரான கிட்டாரோ [ Kitaro ] போன்ற கலைஞர்கள் இந்த வாத்தியத்தைப் பயன்படுத்தி வியக்கத்தக்க இசைவடிவங்களின் மூலம்  இயற்கையைப் பிரதிபலிக்கும் இசையையும் , தியானம் ,யோகா போன்ற செயற்பாடுகளுக்கான மென்மையான இசையையும் உருவாக்கி பிரபல்யபடுத்தினர். கிட்டாரோ உருவாக்கிய இந்த புதிய வகை இசை ஓர் அடையாளப்படுத்தலுக்குட்ப்பட்ட போது  New Age Music என்ற பெயர் கொண்டுஅழைக்கப்பட்டது. இந்த வகை சிந்தசைசர்  வாத்தியத்திய இசை  Star Trek  போன்ற படங்களிலும் பயன்பட்டது.

    இந்த நிலையில், 1980களில் இந்திய திரைப்படங்களிலும்  இவ்வாத்தியம் அறிமுகமான வேளையில் தமிழ் திரையில் உச்சத்திலிருந்த இளையராஜா, அபூர்வமாக இவ்வாத்தியத்தை இசைக்கத் தெரிந்த தமிழ்நாட்டுக்  கலைஞர்களை பயன்படுத்தி    ஒரு சில படங்களில் " என் கண்மணி உன் காதலி  " [ சிட்டுக்குருவி 1978  ]போன்ற பாடல்களில் பயன்படுத்திக் கொண்டார். அதைத் தொடர்ந்து பல  பாடல்களில் பயன்படுத்தினாலும், பின்னர் அதனுடன் கம்பியூட்டர் இணைவு மூலம்  புன்னகை மன்னன், அக்னிநட்சத்ரம் படத்தில் " நின்னு கோரி வர்ணம் " - "ராஜாதி ராஜன் இந்த ராஜா" போன்ற பாடல்களிலும்   இம்முறையை இளையராஜா பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு நிலைக்கு மேல் போகமுடியாத, செயற்கைத் தன்மைமிக்க இவ்வாத்தியங்களின் எல்லையை புரிந்து கொண்டு அதன் பயன்பாட்டை நிறுத்திக் கொண்டார். 

    1990களில் உலகமயம் என்ற கொள்கை அமெரிக்காவால் முன்னணிக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், இத்தொழில்நுட்பங்கள்  இந்தியாவில் அறிமுகமான போது  மேற்கூறிய சிந்தசைசர் வாத்தியம் வாசிக்கும் பழக்கமுள்ளவர்களும், ஒலிப்பதிவாளர்களும் [ Sound Engineers ] அமெரிக்க பாப் பாடகர்கர்களான  மைக்கேல் ஜாக்சன், சமந்தாபோக்ஸ் வகையறாக்களின் பாப் [ Pop ] பாணி இசையில் அதிக மோகமும் , ஈடுபாடும்  கொண்ட,  மனோபாவத்தில் அமெரிக்கர் போல பாவனை காட்ட விரும்பிய சிலர் அவர்களை போல் இசைக்க ஆர்வம் காட்டினர்! 

    இந்திய வர்த்தக சினிமாக்களில் 1960களிலிருந்தே மேலைத்தேய பாப் இசையின் கவர்ச்சியும், அதன்  மீதான ஈர்ப்பும் தொடர்ந்து வந்த போதிலும்  1990களில் அது முழுமையாக ஆக்கிரமிக்கத் தொடங்கியது.  

    அதுமட்டுமல்ல  ஒலிதொழில்நுட்பத்தில் [ Recording Technology ]  ஏற்பட்ட பாய்ச்சலான முன்னேற்றமும் இசைக்கலையின் பின்னால் நிற்கும் , ஒலிப்பதிவாளர்களைக் [ Sound Engineers ]  கூட இசையமைப்பாளர்கள் ஆகும் வல்லமையைக் கொடுத்தது.

    அதி நவீன மின்னியல்  இசைக்கருவிகளும் , அவற்றில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பலநூறு ஓசை, ஒலிகளும், அதன் ஆகச் சிறந்த ஒலித்துல்லியத்தரமும், ஒரு மழைத்துளி விழும் ஓசையைக் கூட மிகப் பிரமாண்டமான, மிகைப்படுத்தப்பட்ட  ஒலியாகக் [ Exaggerate ] காட்டக்கூடிய பேராற்றலும் இருந்தது. 

    1990களில்  உலகமயக் கொள்கை இந்தியாவில் வேகம்  பெற்று அரசியல்,பொருளாதார, கலாச்சார துறைகளில் புதிய மாற்றங்கள் நிகழத்தொடங்கிய வேளையில் தொலைக்காட்சிகளிலும், சினிமாவிலும் குறிப்பாக இசைத்துறையில் Star TV, MTV போன்றவைகளாலும், அதைத்தொடர்ந்து   A. R.  ரகுமானின் அறிமுகமும் அவரைப் பின்பற்றி வந்த இசையமைப்பாளர்களினாலும் தமிழ்த்திரை இசையிலும்  மாற்றங்கள் நிகழ்ந்தன.

     இந்திய நாட்டுப்புற இசை, செவ்வியலிசை பற்றிய புரிதல் இவர்களிடம் இல்லை என்பதும் முற்றுமுழுதாக அமெரிக்க பாப் இசை நாயகனான மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகர்களாகவும் அவரின் இசையை மட்டுமல்ல, அவரது நடையுடை பாவனைகளையும் பின்பற்றும் ரசிகர்களாகவும் இருந்தனர்.

    ஒலியின் பல இழைகளை ஒன்று சேர்க்கும் [Multitrack Sound Recording ] நவீன ஒலிப்பதிவுக்கருவிகள் மூலம் பாடல்களை மிகத் துல்லியமாக ஒலிப்பதிவு செய்வதிலிருந்த ஆர்வம் இவர்களிடம் வெளிப்பட்டதேயல்லாமல், அதைப்பயன்படுத்தி புதிய இசையைப் படைப்பதில் வெளிப்படவில்லை. அதுமட்டுமல்ல, வெவ்வேறு மேலைநாட்டுப் பாடல்களை மிக இலகுவாக வெட்டி ஓட்டும் முறையையும் அரங்கேறியது. Midi Interface,  Sampler,Sequencer, Digital Sampling Music Computers போன்ற அதி நவீன இசைச் சாதனங்கள் இசையில் பரீட்சயமில்லாதவர்களையும்  இலகுவில்  இசையை  அணுக வைத்தது.

    தமிழ்திரைப்படங்களில் ஆங்கிலப்பாடல்கள் என்று அறியப்பட்ட அமெரிக்க, மேற்கத்தேய பாப்பாடல்கள் ஆங்காங்கே கையாளப்பட்ட ஓர் நிலை மாறி முற்றுமுழுதாக  அதையே நம்பியிருக்கக்கூடிய நிலை உருவானது. 

    மேலைநாட்டு பாப் இசை என்றால், கணிசமான மக்களுக்கு அவற்றின் அடையாளம் தெரிந்துவிடும் என்பதற்காக, அவற்றையும் தாண்டி வித்தியாசமாகக் காட்டுவதற்காக தமிழ்மக்கள் அதிகம் அறியாத  அரேபிய, இஸ்ரேல் மற்றும்  ஆபிரிக்க நாட்டுப் பாப் பாடல்கள் தமிழ் திரைப்படங்களில் இறக்கிவிடப்பட்டன. அவை பற்றி ஓரளவு பரீட்ச்சயமிக்க இசை ரசிகர்களுக்கு இவையெல்லாம் கேலிக்குரியதாக தெரிந்தன. 

    பாடல்களுக்கு தாளம் என்ற நிலைமாறி தாளங்களுக்குப் பாட்டு என்பது போல  சகட்டு மேனிக்கு தாளங்கள் முழக்கப்பட்டன. ஆனால் 1990களின் பருவவயதினர் மற்றும் இளைஞர்கள் அதில் உள்ள தாளலயத்தை ரசித்தனர். 

    அதுமட்டுமல்ல இசை என்பது மிகப்பெரிய வியாபார பொருளாக பல்தேசிய   இசைக்கம்பனிகளின் விருப்பத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்டதுடன் மேலைத்தேய பாப் இசைக்கலைஞர்கள் போலவே உடையலங்காரம், முடியலங்காரம் போன்றவையும் வடிவமைக்கப்பட்டன. பாடலைப் பாடுபவர்களும் தமிழ்மொழி உச்சரிப்பை ஆங்கிலேயர் உச்சரிப்பது போல பாட நிற்பந்திக்கப்பட்டனர்.

    பாடகர் ஸ்ரீனிவாஸ் ஏ.ஆர். ரகுமானுடன் ஏற்பட்ட தனது அனுபவத்தை பின்வருமாறு கூறுகிறார்.   " சார்,வழக்கமான இனிமையான குரலில் பாட வேணடாம். நான் சொல்கிறபடி பாடுங்கள் " என ஏ.ஆர்.ரகுமான் ஒருமாதிரி பாடிக்காட்டினார். அப்படியே நானும் பாடினேன் . ஆனால் அது கேட்பதற்கே நன்றாக இல்லை . இந்தாளுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா ? என நினைத்தேன்”!.  

    அது போலவே பாடகர் சீர்காழி சிவசிதம்பரம்  ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாட சென்ற போது ஏ.ஆர்.ரகுமான்  " பாடலை சரியாக உச்சரித்து பாட வேணடாம். நான் சொல்கிறபடி பாடுங்கள் " என பேட்டி ஒன்றில் பாடிக்காட்டினார்.  

    அதுமட்டுமல்ல ஓர் இசையமைப்பாளன் என்ற நிலையில் தமது இசை எங்கனம் வெளிப்பட வேண்டும் அல்லது முழுமை பெற வேண்டும் என்கிற தெளிவில்லாமல், தாம் போடும் தட்டையான ஒழுங்கற்ற மெட்டுக்களை பாட வருகின்ற, தங்களைவிட  இசை தெரிந்த  பாடகி,பாடகர்களையே வைத்து அவர்களை அவர்களது மனம் போன போக்கில் விதம் விதமாக மெருகேற்றிப் பாடச் சொல்லி அதிலிருந்து தங்களுக்குத் தேவையானதை பொருக்கி எடுக்கும் இயலாமைத்தனமும், இந்தவிதமான கையாலாகாத்தனத்தை பாடக, பாடகிகள் வாய்ப்புக் கொடுத்ததற்கான நன்றிக்கடனாக அவற்றை விதந்தோத்துவதையும்  நாம் பரவலாக்க கண்டிருக்கிறோம்.

    “கண்ணோடு காண்பதெல்லாம்” என்ற பாடலின் மெட்டு தான் தனக்கு சொல்லப்பட்டது என்றும் அதில் வருகின்ற வாயால் சொல்லுகின்ற தாள ஜதிகள் பத்து வித்தியாசமான முறைகளில் தானே பாடி கொடுத்ததாகவும் , பாடிய தருணத்தில் அந்தப்பாடல் எப்படி அமையும் என்று கூட தனக்குத் தெரியாது” என பாடகி நித்யஸ்ரீ கூறியது எல்லோருக்கும் நினைவிருக்கலாம்.இதை போன்று பல பாடக, பாடகிகள் பல சந்தர்ப்பங்களில் தங்கள் அனுபவங்களைக் கூறியிருக்கின்றனர்.

    இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த இசையை “புதிதாய் இருக்கிறது” என்ற ஒரே காரணத்திற்காக அதை போற்ற வேண்டும் என்கிற போக்கில் இந்தப் போலிப் புதுமைக்காரர்களை " விமர்சகர்கள்" , "ஆய்வாளர்கள்" என்ற பெயரில் உலாவிவரும் நபர்களெல்லாம் ஆகா, ஓகோ என்று பாராட்டு மழை  பொழிந்தார்கள்.  

    புதிய இசையமைப்பாளர்களின் இயலாமையை மறைக்க அவர்கள் மிகவும் நட்புடன் எம்மை நடத்துவார்கள், நாம் சில திருத்தங்கள் சொன்னால் ஏற்பார்கள் என்றும் இளையராஜா இசை என்றால் நாம் அவர் சொல்வதையே பாட வேண்டும் என பாடக, பாடகிகள் கூறுவதும், அதை இளையராஜா மீதான காழ்ப்புணர்வாக சில இசையறியா விமர்சகர்கள் ஓலமிடுவதும் , அது ஒரு சர்வாதிகார முறை என்றும் ரகுமான் போன்றவர்களின் பாணி ஜனநாயகம் எனவும் இசை அமைப்பு , அதன் நடைமுறை , வரலாறு  அறியாத சிலர் புலம்புவதையும் நாம் கண்டிருக்கிறோம். இவர்களுக்கு இசையும் தெரியாது வரலாறும் தெரியாது, அரசியலும் தெரியாதுஎன்பது வெள்ளிடைமலை. 

    இப்படிப்பட்ட இசையை செய்தி ஊடகங்கள் மிகைப்படுத்தி, ஊதிப்பெருக்கி விளம்பரம் செய்த போதும்  இசையில் "நவீனம்" அல்லது "புதுமை" என்ற பெயரில் இட்டுக்கட்டி புகழ்ந்த போதும் இசை என்பது சிறுபிள்ளைகளுக்கான பாடல்கள் [ Children Rhymes ] என கேலி பேசும் அளவுக்கான  படைப்புகளாவே வெளிப்பட்டன. ஆனாலும், இவர்களது பாடல்கள் எல்லாம் மில்லியன் மக்கள் பார்க்கும் அளவுக்கு விண்ணை விஞ்சும் அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு பரப்பப்பட்டன.

    மெட்டுக்களில் மிக எளிமைப்படுத்தப்பட்ட, மிக மேலோட்டமான  தட்டைத்தன்மையும், அதே போலவே அதற்கேற்ப தாளங்களிலும்  நுணுக்கமற்ற தட்டுதல்களும் பயன்படுத்தப்பட்டன. தாளம் என்றால் மேலைத்தேய பாணியில் அடிதடிகளும், மெலோடி என்றால்தாளமற்றகுரல்ஜாலங்களும் அள்ளிவீசப்பட்டன.  இசையமைப்பாளர்களின் படைப்பாற்றல் இயலாமையை  நவீன ஒலிப்பதிவின் துல்லியத்தின் தரமும், அதன்  சப்த ஜாலங்களும்   மறைத்தன.இத்தனை நவீன வசதிகள் இருப்பினும் இன்றைய இசையமைப்பாளர்கள் ஒரு பாடல் இசையமைக்க பல மாதங்களை எடுத்துக் கொள்வதும் அவர்களது ஆற்றலைப் பறை சாற்றுகின்றன.

    காலமாற்றத்திற்கேற்ப உலகெங்கும் இளைஞர்கள் இந்தவகை இசை  அலையால் அடித்துச் செல்லப்பட்டனர் என்பதை மறுக்க முடியாது. இதனால் தமிழ் சூழலில் என்னவாயிற்று என்றால் இளையராஜா காலத்தில் ஏற்பட்ட இசை பற்றிய பரந்த விழிப்புணர் மங்கி, தாள முழக்கம்   ஒன்றே இசை நுகர்ச்சியாக வளர்க்கப்பட்டு, தமிழ் நாட்டுப்புற இசை, செவ்வியல் இசை என்றாலே என்னவென்று தெரியாத ஒரு பரம்பரை ரசிகர்கள் மட்டுமல்ல இசையமைப்பாளர்களும் உருவாகியுள்ளனர்.

    கதைகளின் போக்குக்கு ஏற்பவும் பாடல்வரிகளுக்கு ஏற்பவும் மட்டுமல்ல , இசைக்கென இருக்கும் அதன் தனித்தன்மையால் அதைத்தாண்டியும் பாடல்கள் அமைக்க முடியும் என்பதை இளையராஜா நிரூபித்த காலங்களில்,  இசை ஆற்றலின் ஊடாக அதன் முக்கியத்துவம் உணரப்பட்டதுடன், இசையமைப்பாளர்களுக்குக்  கிடைக்க வேண்டிய கவுரவம், அந்தஸ்த்து உயர வழி சமைத்தது. அதாவது இசையமைப்பாளர்கள் நடிகர்களுக்கு நிகராக பேசப்பட்டது இளையராஜாவின் காலத்திலேயே ! கதாநாயக அந்தஸ்த்தை ஒரு இசையமைப்பாளன் பெற்றதும், இவர் இருந்தாலே திரைப்படங்கள் வியாபாரமாகி விடும் என்ற நிலையும் உருவாக்கிற்று. இந்த நிகழ்வுகள் புதிய இசையமைப்பாளர்களுக்கு ஓர் புதிய பாதையைத் திறந்துவிட்டது. 

    1990 களில் சினிமாக்காரர்களிடம் உள்ள இயல்பான போட்டி பொறாமைகளால் இளையராஜாவுக்கு மாற்றாக யாரையாவது கொண்டுவந்து நிறுத்த வேண்டும் என்ற முனைப்பில் பல இசையமைப்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். இந்திய சாதீய சமூக உளவியலும் இதன் பின்னணியாக இருந்ததென்பதை  என்பதை யாரும் மறுக்க முடியாது. கவிஞர் வைரமுத்து தானே பல இசையமைப்பாளர்களை முன்னிலைப்படுத்திய போதும் யாராலும் நிலை பெற முடியவில்லை என்பதை வெளிப்படுத்தியிருந்தார்.

    என்னதான் காலங்கள் மாறி சென்றாலும் தான் பணியாற்றிய இசைக்கலைஞர்கள் குறித்து கவிஞர் வைரமுத்து சில  உண்மைகளை தன்னிடம் தெரிவித்ததாக  வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்த திரைப்பட இயக்குனர் மாரிமுத்து என்பவர் சமீபத்தில் [ 2023 ] சில செய்திகளைக் கூறினார். 

     " இளையராஜாவிடம் நான் வேலை பார்த்த திருப்தி வேறு எந்த இசையமைப்பாளர்களிடமும் எனக்கு கிடைக்கவில்லை. அந்த ஆள் கொடுக்கிற டியூன் எனக்குள்ளே இருக்கிறதைத் தோண்டி எடுக்குமய்யா! இப்போ இருக்கிறவங்கட டியூனை புரிஞ்சு கொள்ள முடியலே. தத்தகாரத்தை புரிஞ்சு கொள்ளவே முடியலே, பல்லவியில்   ஒரே தத்தகாரத்தைத் தானே பாடணும், இரண்டாவது தரம் பாடும் போது  தத்தகாரத்தை மாத்திப் பாடுறாங்க. தானா நானாவை, தனன நானா என்று பாடுறாங்க. தானா நானா வேறு  தனன நானா வேறு, இரண்டுக்கும் வேறு சொற்கள்! ஆனால் இளையராஜா லட்டு போல மெட்டைக்  கொடுப்பார். எனக்குள்ளே இருக்கும் உயிரை அது எழுப்பும் ; அப்படி எழுதி அமைஞ்சதுதான் ஈரமான ரோஜாவே போன்ற பாடல்கள் !

    நவீன இசைத் தொழில் நுட்பத்தின் மூலம் நவீன இசை என்ற பெயரில் ஒருசிலரை வைத்தே  பாடல்களை அமைக்கமுடியும் என்ற நிலையில் பழைய பாணியில் இசைத்துவந்த பெரும்பாலான வாத்திய இசைகலைஞர்கள் வேலையற்று போக வேண்டியதாயிற்று. ஏற்கனவே தமிழ்நாட்டில் ஒரு நிலையான வாத்தியக்குழு இல்லாதநிலையில், இளையராஜாவின் இசையிலேனும் அது பயன்பட்டு வந்த பல வாத்திய இசையின்  பயன்பாடு முற்று முழுதாக இக்காலத்தில் அழித்தொழிக்கப்பட்டது.

    நவீன இசையால் மிஞ்சியதெல்லாம் இரைச்சலும், கூச்சலும்,  காற்றலையையும், சுற்று சூழலையும் அசுத்தப்படுத்தும் [ Noise Pollution ] இசைகளே  பாடல்கள் என்ற பெயரில் வந்தன!. தேசிய கீதங்களைக்கூட  கன்னாபின்னா என்று இசையமைக்கும்  பரிதாபமும் ஊக்கப்படுத்தப்பட்டது!.

    ”புதிய ஒலிகளைப் பயன்படுத்தி வந்தே மாதரம் பாடலுக்குப் புத்துயிர் கொடுக்கலாம், எல்லோரும் பாடத்தக்க பாடலாக அதை மாற்றலாம் என்ற யோசனையுடன் என நண்பன் பாலா என்னை அணுகினான்… ஒரிஜினல் மெட்டு மிகவும் ஆன்மீகத் தன்மை கொண்டதாக இருந்தால் (அதைமாற்றி) புதிதாக இசையமைக்க எனக்கு 3 மாதங்கள் பிடித்தது” என்றார் ரகுமான்.

    பழைய கருத்துக்களும், புதுமைக்கருத்துக்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வது இயல்பான ஒன்றாகும்.  அதே வேளையில் இசை பற்றிய கருத்துக்களை மனம் கொள்ளும் போது, உலகெங்கும் இசைக்கென பொதுவான நியதிகள் இருப்பது நமது கவனத்தை  ஈர்க்கிறது. உலகமக்கள் யாவரும் இசைரசிகர்களே !  ஆயினும், பல இனமக்கள் நாடோடிகளாக அலைந்த மிகப்பழங்காலத்திலேயே, தமிழர்கள் இசைக்கென ஓர் இலக்கணத்தை  [ Musical Grammer ] அமைத்ததை காண்கிறோம். பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் தொடக்கம் ஏராளமான நூல்கள் இசை இலக்கணம் பற்றிய செய்திகளைக் கூறுகின்றன.  

    பன்னெடுங்காலமாக தமிழர்களுக்கு இயல்பாக வியத்தகு இசையறிவு இருந்த போதிலும் விஞ்ஞான ரீதியிலான இசையியலை [ Musicology ] உருவாக்க வேண்டிய தேவையை இசையறிஞர்கள் வலியுறுத்துகின்றனர். 

    " பண்கள்,  சுரவியல் , தாளவியல், இசைக்கருவிகள், இசைப்பாடல்கள்   முதலியன குறித்த செய்திகளைத் தொல்காப்பியத்திலிருந்து திரட்டுவதன் மூலம் பழந்தமிழ் இசையியல் ஒன்றினை உருவாக்க இயலும். இவ்வகையில், இன்றைய இந்திய இசையியலில் பயின்று வரும் அட்சர காலம் என்னும் இசைக் கால கணக்கிற்கு அடிப்படையாக விளங்குவது தொல்காப்பிய நூன்மரபு தரும் எழுத்தாளபே  என்னும் கருத்தை வற்புறுத்திக் கூறலாம் என்பார்  இசையறிஞர் அரிமளம் பத்மநாபன்.  [ தமிழிசையும் இசைத்தமிழும் ]   முனைவர் அரிமளம் பத்மநாபன் கூறுவது போல விடுபட்டுப் போன பழந்தமிழ் இசைவடிவங்களை ஆய்வுசெய்வதும், தொகுப்பதும் அவசியமானதாகும்.

    உலகெங்கும் எந்தக் கலைக்கும் பொதுவான நியதிகள் இருப்பது போல இசைக்கலைக்கும் பொதுவான நியதிகள் உண்டு.11ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழந்தமிழ் நூலான கல்லாடம் ஓசைக்குற்றங்கள்  பற்றிய குறிப்புகளை கூறுகிறது.பாடல்  எப்படி பாடக்கூடாது என்றும் கூறுகிறது. இன்றைய இசையமைப்பாளர்களுக்கு அவை  கனகச்சிதமாக பொருந்துகிறது.

    01  நாசிப்பாட்டு

    02  பேய் கத்தினாற்போல் பாடுதல்

    03  வெடித்த குரலில் பாடுதல்

    04  நிறமில்லாத வெள்ளோசையில் பாடுதல்

    05  நிறமும் தாளமும் குறைந்த கட்டையான கீழ்த்தாளத்தில் பாடுதல்

    06  பாடும் இராகத்தை ஒதுக்கிப்பாடுதல், நெட்டுயிர்த்தல்.

    07  ஒரு பண்ணைப் பாட அது வேறு ஒரு பண்ணிலிருந்து விலகி நிற்றல்.

    08  காகம் கரைந்தாற்போல் ஓசையிழைத்துப் பாடுதல்.

    09  பல ஓசையில் பாடுதல்.

    போன்றவை ஓசைக் குற்றங்கள் என்று கூறுகிறது.

    “ பருந்து பறக்கும் போது நிழல் அதைத் தொடர்ந்து போவது போன்று குரலிசையும் வாத்திய இசையும் இருக்க வேண்டும் “ என்கிறது சீவக சிந்தாமணி.

    ஆனால் இன்றைய  இசையமைப்பாளர்கள் மக்களின் காதுகளை செவிடாக்குவதையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் போல, நுணுக்க விவரங்களற்ற,  அளவுக்கு அதிகமான இரைச்சலைக்  கொண்ட  பாடல்களை சர்வதேசத் ‘தரத்திற்கு’ உயரத்துவதான கற்பனையில்  அதிகமான அலறல்களைப்  பாடல்களாக்கித் தந்து கொண்டிருக்கின்றார்கள்.

    பல்தேசிய கம்பனிகளால் உருவாக்கப்பட்ட உலகமயமும் அவர்களின்  ஆளுகைக்குட்பட்ட, அவர்களின் கோட்பாடுகளுக்கு ஏற்ப இந்திய இசைக்கலைஞர்கள் விரும்பியோ, விரும்பாலாமோ நிர்ப்பந்தங்களுக்கு ஆளாக வேண்டியதொரு காலநிலையை யாரும் புரிந்து கொள்ளலாம்.   

    ஏ.ஆர்.ரகுமான் அறிமுகமான  ரோஜா படத்திலிருந்து அவர் பெற்ற புகழால் அவரது  இசைப்பாணியைப் பின்பற்றிய இசையமைப்பாளர்களினாலும்  இத்தொழில்நுட்பங்கள் அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்வது  தொடங்கின. மேலே கூறியபடி இவர்களின் பாடல்களில் அநேக இரைச்சலும், கூச்சலும் அதிகளவு வெளிப்பட்ட போதும்,  தொடர்ந்து வந்த காலங்களில் ஆங்காங்கே காட்சித்தன்மைமிக்க பாடல்களையும்  தந்தார்கள் என்பதை மறுக்க முடியாது. சில உதாரணங்கள்:

    01  புது வெள்ளை மழை  - ரோஜா  - உன்னிமேனன்  + சுஜாதா - இசை : ஏ.ஆர்.ரகுமான்.

    02  மார்கழிப் பூவே  மார்கழிப் பூவே -மேமாதம் - இசை : ஏ.ஆர்.ரகுமான்.   

    03  மலர்களே மலர்களே  - ரோமியோ - ஹரிகரன் + சித்ரா - இசை : ஏ.ஆர்.ரகுமான்

    04  தென் மேற்கு பருவக்காற்று - கருத்தம்மா - உன்னிகிருஷ்ணன் + சுஜாதா - இசை : ஏ.ஆர்.ரகுமான். 

    05  உயிரே உயிரே என்னை - பம்பாய் - ஹரிகரன் + சித்ரா - இசை : ஏ.ஆர்.ரகுமான்.

    06  மலரே நலமா மௌனமே - எஸ்பிபி + ஜானகி இசை : வித்யாசாகர்.  

    07  புல்வெளி புல்வெளி - ஆசை - சித்ரா - இசை : தேவா. 

    08  யா..யா ,, யாதவா உன்னை அறிவேன் - தேவராகம் - சித்ரா -  இசை : மரகதமணி.

    09  சின்னச் சின்ன மேகம்  - தேவராகம் - ஜெயசந்திரன் + சுஜாதா - இசை : மரகதமணி. 

    10  நீ காற்று நான் மழை - நிலாவே வா   - ஹரிகரன்  - இசை வித்யாசாகர்.

    11 மழைக்காற்று வந்து தமிழ் பேசுதே - வேதம்  - ஹரிகரன் + மகாலட்சுமி - இசை வித்யாசாகர்.

    இந்த இயந்திர இசை நெரிசலில் இசையமைப்பாளர் வித்யாசாகர், மரகதமணி தங்கள் தனித்துவமிக்க இசையால் நல்ல மெலோடியில் அமைந்த  பாடல்களைத் தந்தமை மறுக்கமுடியாதவையாகும்!   

    கடந்த முப்பது ஆண்டுகளாக புதுமை, முன்னேற்றம், அதற்கிசைந்து கூத்தாடுவது என்ற பெயரில் நமக்கேயான இயல்பான இசையையும், அதன் பண்பாட்டையும் தொலைத்தது மட்டுமல்ல நம்மை பார்க்க நமக்கே ஏளனமாகவும் உள்ளது.  இசைத்துறையில் மட்டுமல்ல உலகெங்கும் பண்பாட்டுத்துறைகளிலும் மக்களின் கலாச்சாரங்கள் சிதறடிக்கப்படுவது நடந்து கொண்டிருக்கிறது.

    இவ்விடத்தில் இன்னொன்றையும் கூறுதல் பொருத்த முடையதாகும்.இயற்கையின் வெளிப்புறம்  கைத்தொழில் துறையால்  சுற்றுச்சூழல் மாசடைகிறது என்றால் இந்த நவீன இசைகளின் இரைச்சல்  நமது காதுகளில் புகுந்து உள்மன உலகத்தையும், உணர்வு நிலைகளையும் அசுத்தப்படுத்தி  வருகிறது. 

    இன்றைய நிலையில் இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய நிர்பந்தமும், அதன் மீதான அன்பையும் , ரசிப்புத் தன்மையையும் வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு  மனிதகுலம் தள்ளப்பட்டுள்ளது.  இவற்றோடு இசையையும் காப்பாற்ற வேண்டும் என்றால் முதலில்  இயற்கையைத்தான் அழியாமல் காக்க வேண்டும்.

    இயற்கையைவிட்டுத்தூரவந்துவிட்டோம்அதுநம்மைதுன்பத்திற்குள்ளாகிறது என சீன தத்துவஞானி லாஸே கூறியது மட்டுமல்ல " இயற்கைக்குத்திரும்புவோம் " [ Back to Nature ] என்று அவர் கூறியது போல திரும்ப முடியுமா என்பது தெரியவில்லை. 

    [ தொடரும் ]  

    Postad



    You must be logged in to post a comment Login