காலம்,பொழுதுகளுக்கென சில ராகங்களை வைத்து அவற்றை இலகுவில் அடையாளம் காணும் வண்ணம், ஓர் குறியீட்டு உத்தியாக பொழுதுசார்ந்த காட்சிகளை உருவகப்படுத்தும் முறையை நம் முன்னோர்கள் வகுத்து வைத்திருந்தனர். அந்த மரபின் தொடர்சியே நாடகங்களிலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
பழங்காலத்திலிருந்தே கூத்து, நாடகம், தெருக்கூத்து போன்ற கலைவடிவங்களிலெல்லாம் இசை என்ற பெயரில் வாத்திய இசைக்கு முக்கியத்துவம் கொடுக்காத , மொழிசார்ந்த இசைப்பாடல்கள் தொடர்ந்து வந்த நிலையில், மொழிசார் மரபை மீறாதவகையில் புதிதாக வந்த கலைவடிவமான சினிமாவிலும் தொடந்தார்கள். மொழிக்கு பிரதானம் கொடுத்து, அதன் ஓசை நயத்திற்கு ஏற்ப இசை வடிவமைக்கப்பட்டதுடன், நடிக்கும் நடிகர்களின் பாவங்களையும் பிரதிபலிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் இசைக்கு ஏற்பட்டது. உணர்ச்சி வெளிப்பாடுகளுக்கேற்ப இசை அடக்கிவாசிக்கப்பட்டது. அல்லது நல்ல இசை என்பதே கதாபாத்திரங்களின் உணர்வுகளை மட்டுமே வெளிப்படுத்த வேண்டிய காட்டயத்தில் இருந்தது. அதனாலேயே சினிமாவில் நடிகர்களுக்காக பாடுபவர்களும் அழுது புலம்ப வேண்டியுமிருந்தது. இசை என்பது மொழியின் ஓசைக்கும், நடிகர்களின் பாவத்திற்கும் அடங்கியதாகவே இருந்தது.
அதுமட்டுமல்ல ஹிந்திப்பாடல்களின் மெட்டுக்களுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழை விடுவிக்க, தமிழ் மொழியின் ஓசைக்கும், இயல்புக்கும் ஏற்ப புதிய மெட்டுக்களை அமைக்க முடியும் என்பதற்கான முயற்சிகளும் 1940 களின் கடைக்கூறுகளில் ஆரம்பமாகியது. மக்களுக்கு நன்கு பழக்கப்பட்ட நாட்டார்மரபைத் தாங்கி, 1950களில் அதன் வளர்ச்சியாக பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம், மருதகாசி, உடுமலை நாராயணகவி பின் கண்ணதாசன் போன்றோர் பாடல்களை தந்ததுடன் செவ்விசையியல் சார்ந்த மெல்லிசைக்கு [ Semi Classical Songs ] ஏற்ற செந்தமிழ் நடையிலும் பாடல்களை எழுதும் ஆற்றல் மிக்கவர்களாகவும் விளங்கினர். இவர்களது பாடல்களுக்கு ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி போன்றோரும் பிறரும் பொருத்தமான இசையைத் தந்தனர். இப்பாடல்கள் பெரும்பாலான பொதுமக்களின் கொண்டாட்ட இசையாக மாறின.
இவை ஒருபுறமிருக்க எழுதப்படுகிற பாடல் வரிகளின் ஓசைகளிலேயே மெட்டு இருப்பதாக இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பல பேட்டிகளில் கூறியிருப்பதையும், தனியே புதிதாக மெட்டுக்கள் போடுவதற்கு நாம் கஷ்டப்படவே தேவையில்லை என்றும் பாடல் வரிகளை வாசித்தாலே, அந்த ஓசைகளை பிடித்தாலே மெட்டுக்கள் வரும் என்று கூறியதையும் இங்கு நினைவுகூருவது பொருத்தமானதாகும்.
இசை என்றாலே பாடல் என்ற புரிதல் இருந்த தமிழ் சூழலில், புதிதாக அறிமுகமான சினிமாவும் அதையே ஆரம்பகாலங்களில் பிரதிபலித்தது. 1950களிலிருந்து ஹிந்தி திரையிசையின் தாக்கத்தாலும், நவீன மாற்றங்களினாலும் பாடல்களில் வாத்திய இசையின் சேர்க்கையும் அதிகமாக உள்வாங்கப்பட்டது. அதன் வளர்ச்சி 1960களில் கே.வி.மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி போன்ற இசையமைப்பாளர்களின் பாடல்களில் வாத்திய இசைக் கலவை குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்தது.
பழந்ததமிழ் இலக்கியங்களில் பல வாத்தியங்கள் சேர்ந்திசைப்பது [ பல்லியம் ] பற்றிய செய்திகள் அறியக்கிடைக்கினும், அதன் தொடர்ச்சி தொலைந்த நிலையில், வாத்திய இசையில் ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு காலத்தின் பின் ஏற்பட்ட புதிய எழுச்சி, அதன் தாக்கம் தமிழ் சூழலில் எள்ளளவும் இல்லை என்பதே நிதர்சனமாக இருந்தது. ஆனால் அதை ஓரளவு மாற்றியமைத்தது சினிமா என்ற கலை தான் என்பதில் சந்தேகமில்லை! .
இயற்கையை வாத்திய இசையில் வெளிப்படுத்திக் காட்ட முனைந்த ஐரோப்பிய இசை போலல்லாது, அந்த இசை குறித்த விழிப்புணர்வு சற்றும் இல்லாமல் குழந்தைப்பருவத்தில் இருந்த தமிழ்ச்சினிமா அவற்றை ஓரளவு ஈடுசெய்யும் வகையில் அல்லது ஒரு மாற்றாக, இயற்கை பற்றிய பழைய புலவர் மரபில் கிடைக்கப்பெற்ற கவிதை மரபின் தொடர்ச்சியாக இருந்த பாட்டுமுறையைப் பயன்படுத்த்திக் கொண்டது.
பாடல் - கவிதை மரபின் நீட்சியை நவீன காலத்தில் பாரதி, பாரதிதாசன் போன்றோரது கவிதைகளில் நாம் காண்கிறோம். அந்த நீண்ட மரபின் அடியொற்றி சினிமாவிலும் கவிஞர்கள் இயற்கை பற்றிய வர்ணனைகளை எழுதி அந்தத் தேவையை ஓரளவு நிறைவு செய்தனர்.
இயற்கை கவிஞர்களை உந்தச் செய்கிறது. இயற்கையைப் பார்க்கும் கவியின் உள்ளத்தில் எழுகின்ற உணர்வை பாரதிதாசன் மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டும் கவிதை இது
ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட
'என்னை எழு' தென்று சொன்னது வான்!
ஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின்
ஓவியந் தீட்டுக, என்றுரைக்கும்!
காடும் கழனியும் கார்முகிலும் வந்து
கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்!
ஆடும்மயில் நிகர் பெண்களெல்லாம் உயிர்
அன்பினைச் சித்திரம் செய்க, என்றார்!
சோலைக் குளிர் தரு தென்றல் வரும், பசுந்
தோகை மயில் வரும் அன்னம் வரும்.
மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்
மாணிக்கப் பரிதி காட்சிதரும்
'வேலைச் சுமந்திடும் வீரரின் தோள் உயர்
வெற்பென்று சொல்லி வரைக' எனும்
கோலங்கள் யாவும் மலைமலையாய் வந்து
கூவின என்னை! -- இவற்றிடையே,
இன்னலிலே, தமிழ் நாட்டினிலேயுள்ள
என் தமிழ் மக்கள் துயின்றிருந்தார்.
அன்னதோர் காட்சி இரக்கமுண்டாக்கியென
ஆவியில் வந்து கலந்ததுவே
இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால் --
துன்பங்கள் நீங்கும், சுகம் வரும் நெஞ்சினில
தூய்மை யுண்டாகிடும், வீரம் வரும்.
[ தமிழ் பேறு ] - பாரதிதாசன்.
பாரதிதாசன் இயற்கை, கவிதை எழுத உந்துகிறதாகச் சொல்ல, பாரதியோ அந்த உந்துதலின் வீச்சை இசையின் பிறப்புடன் பொருத்திப்பார்க்கின்றான். குயில் பாட்டு என்ற பகுதியில் இசையின் தோற்றம் பற்றி பாடும் பாரதி, இயற்கையில் அமைந்த ஒலிகளையும், அதன் பாதிப்பால் மனிதன் உண்டாக்கிய இசையையும் பின்வரும் பாடலில் அழகாக விவரிக்கின்றான். இயற்கையுடனும் மனித செயற்பாடுகளுடனும் இணைத்து இசையின் முழு வரலாறையும் வடித்துத் தருவதாக கீழே தரப்பட்ட பாரதியின் பாடல் அமைகிறது.
கானப் பறவை கலகலவெனும் ஓசையிலும்
காற்று மரங்களிடைக் காட்டு மிசைகளிலும்
ஆற்று நீரோசை அருவி ஒலியினிலும்
நீலப் பெருங்கல் எந்நேரமுமே தான் இசைக்கும்
ஓலத்திடையே உதிக்கும் இசையினிலும்
மானுடப் பெண்கள் வளரும் ஒரு காதலினால்
ஊன் உருகப் பாடுவதில் ஊறிடுந் தேன் வாரியிலும்
ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும் நெல் இடிக்கும்
கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
சுண்ணம் இடிப்பார் தம் சுவை மிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாம் ஒலிக்கக்
கொட்டி இசைத்திடும் ஓர் கூட்டமுதப் பாட்டினிலும்
வேயின் குழலோடு வீணை முதலா மனிதர்
வாயினிலும் கையாலும் வாசிக்கும் பல் கருவி
நாட்டினிலும் காட்டினிலும் நாள் எல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும் நெஞ்சைப் பறி கொடுத்தேன். -. பாரதி
பாரதி மட்டுமல்ல அழகின் சிரிப்பு என்ற பகுதியில் பாரதிதாசனும் இயற்கை , இசை குறித்து பல செய்திகளை பாடியுள்ளதை நாம் காணலாம். அவர்களின் அடியொற்றி உடுமலை நாராயணக்கவி மணமகள் [ 1951 ] படத்தில் எழுதிய பாடல் ஒன்று இயற்கை, இசை பற்றி அற்புதமாக விளக்குகிறது.
எல்லாம் இன்பமயம் புவிமேல்
இயற்கையினாலே
இயங்கும் எழில் வளம்
எல்லாம் இன்பமயம்
மலையின் அருவியிலே- வளர்
மழலை மொழிதனிலே மலரின் மணம்தனில்
வயலின் பயிர்தனில் மனையாள் பணிதனிலே
நிலவின் ஒளியாலே குழலின் இசையாலும்
நீலக்கடல் வீசும் அலையாலுமே
கலைஞன் சிலையிலும் கவிதை பொருளிலும்
கானமாமயிலின் ஆடல் அறுசுவையும்
காதலோடு மனிதனின் குலம் காண்பது
எல்லாம் இன்பமயம்
"சுண்ணம் இடிப்பார் தம் சுவை மிகுந்த பண்களிலும்", “வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாம் ஒலிக்க” என்றும் பாடல்களை பெண்கள் பாடினார்கள் என்றே பாரதி பழந்தமிழர் மரபை சுட்டிக்காட்டுவதை நாம் காண்கிறோம். இளங்கோ, தேவாரம் பாடிய மணிவாசகர் பாடிய பாடல்களில் பெண்கள் மகிழ்வுடன் பாடல்கள் பாடி, ஆடியது பற்றிய குறிப்புகளை நாம் காண முடியும்!
தமிழ் திரையில் இடம்பெறும் பாடல்கள் பெரும்பாலும் கதை நகர்த்தியாக, கதாபாத்திரங்களின் உணர்வுகளை வெவ்வேறு சூழ் நிலைகளுக்கேற்ப வெளிப்படுத்துவதை நாம் அறிவோம். ஆனாலும் ஆங்காங்கே, வெகு அபூர்வமாக கதைக்களம் சார்ந்த நிலப்பரப்புகளின் காட்சி அமைப்புகளுக்கு, அவை மிக அரிதாக அமைந்தாலும் அங்கங்கே பாடல்களில் காட்டியிருப்பதையும் நாம் காண முடியும்.
இவ்வகைப்பாடல்களுக்கு முன்னோடியாக தமிழ்க்கவிதை மரபின் வழியே கவிதைகளில் இயற்கை பற்றிய வர்ணனைகளையொட்டி , 19 ம் நூற்றாண்டில் அரும்பிக்கொண்டிருந்த இந்திய தேசியம், தமிழ்நாடு, தமிழுணர்வு போன்ற வெளிப்பாடுகளில் இயற்கையை விவரணம் செய்யும் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன..மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து நல்ல உதாரணம் ஆகும்!
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடர்நல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந்
தமிழணங்கே! தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!!"
[ மனோன்மணீயம் சுந்தரனார் ]
1940களில் வெளிவந்த தமிழ்திரைப்படங்கள் சிலவற்றை கவனித்தால் அவை இயற்கை சார்ந்த சூழலில் படமாக்கப்பட்டிருப்பதை காணமுடியும். பெரும்பாலும் புராணக்கதைகள் கிராமம், காடுசார்ந்த இடங்களில் படமாக்கப்பட்டிருக்கும். நந்தனார் , அவ்வையார் , ஸ்ரீவள்ளி , பின் வந்த மந்திரிகுமாரி , மருதநாட்டு இளவரசி போன்ற பல படங்களை உதாரணம் காட்டலாம்.
அதைப்போலவே 1940 களில் வெளிவந்த படங்கள் சிலவற்றில் நாடுசார் வர்ணனைகள் இடம்பெற்றதற்கு உதாரணமாக சில பாடலைகளைத் தருவது பொருத்தமாக இருக்கும்.
01 பொங்கிவரும்அலைக்கடலை - படம் சாணக்கியா 1940 - பாடியவர் சாம்பமூர்த்தி - இசை :பாபநாசம் சிவன்.
இப்பாடல்வரிகளைக் கவனியுங்கள்…
பொங்கிவரும் அலைக்கடலை முப்புரம் ஒதுக்கி
வட பர்வதத்தில் இமயமலையும்
கங்கையோடு சிந்துவும்
தட்ஷணத் தனுஸ்கோடியும்
கன்னி வளர் குமாரி முனையும்
செங்கையென வேதமும்
தெங்குளம் ஓங்கியே
தான தர்மத்தில் உயர் தழைத்ததோர்
பாரத பூமி !
அதே திரைப்படத்தில் இடம்பெற்ற இன்னுமொரு கீழ்க்கண்ட பாடலும் அதைப்போலவே நாட்டின் பெருமை பேசுகிறது.
02 பாருக்குள்ளேஉயர்நாடு - படம் சாணக்கியா 1940 - பாடியவர் சாம்பமூர்த்தி - இசை :பாபநாசம் சிவன்.
பாருக்குள்ளே உயர் வீரமும்
உபகாரமும் தரும் பாரத பூமி
நெறியுயர் கிமகிரியும் அமிர்த
நீர் பெருகிடும் நதியும் வேதசாரமும்
சாரமும் கானமும் ஓங்கிடும்
வான் ஒலித்திடும் புகழும் கொடிய
வன்மையாகற்று வலியும் நீதி
மேனிலையாய் கவி ஊற்றிடும்
பாருக்குள்ளே உயர் வீரமும்
உபகாரமும் தரும் பாரத பூமி
03 பாரும்என்பாங்கிகாள் - சதி சுகன்யா - 1942 - டி.ஆர்.ராஜகுமாரி - இசை:
இப்பாடலும் இயற்கை வியப்பு பற்றிய ஓர் பாடலே !
04 ஆனந்தவாசம்அமரஉல்லாசம்
ஆகா பாரததேசம் - இருளுக்குப்பின் 1954 - பி.லீலா + என்.லலிதா - இசை: லட்சுமண் பிரதர்ஸ்.
05 வாழ்க நமது நாடு - சாரங்கதாரா 1957 - சீர்காழி - இசை: ஜி.ராமநாதன்.
இது போன்ற பாடல்கள் கதாபாத்திரத்தின் உணர்வுகள் பற்றியவை என்பதைத் தாண்டி அக்கதாபாத்திரம் இயற்கையை ரசிப்பதாக , அல்லது இயற்கை பற்றிய வர்ணனையாக அமைந்த பாடல்கள் வெகு சில படங்களிலேயே வெளிவந்திருக்கின்றன. சில பாடல்கள் படத்தின் ஆரம்பக்காட்சியிலே இயற்கையுடன் இணைந்த கதாநாயகன் அறிமுகப்பாடலாக அமைவதும் இடம்பெறும்.
முழுமையாக நாடு பற்றிய விவரிப்புடன் முழுமையாக இயற்கைக்காட்ச்சிகளில் படமாக்கப்பட்ட பாடல்களில் ஒன்று[ வாழ்க நமது நாடு ] இந்தப்பாடல்.
இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டுகளையொட்டி 1950 களில் வெளிவந்த சில திரைப்படங்களில் இது போன்ற தேசப்பற்றுப் பாடல்கள் பிரக்ஞய்பூர்வமாக பயன்படுத்திக் கொண்டதில் வியப்பில்லை.
1940 களில் ஸ்டுடியோக்கள் என்ற அமைப்பு நவீன தொழில் நுட்ப விரிவாக்கம் வலுப்பெறாத காலங்களில் வெளிவந்த திரைப்படங்களில் பாடல்காட்சிகள் இயற்கையைக் தேவைக்கேற்ப சிலவற்றை இயற்கை காட்சிகளில் படமாக்கினார்கள்.
தமிழ் திரைப்படப் பாடல்கள் இயற்கை பற்றி அதிகம் பாடல்களை வழங்காவிட்டாலும், அவற்றை அழகான வெளிப்புற காட்சிகளிலேயே ஒளிப்பதிவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகியது. அழகான காட்சிகள் என்பது மக்களை கவரும் ஒரு முறையாகவே இவை அமைந்தன.
அவை காதல் மற்றும் உல்லாசத்தையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தப் பொருத்தமான இயற்கைக்காட்சிகளில் படமாக்கப்பட்டன.காடு, வயல்கள், மலைகள், நதி, நீர்வீழ்ச்சி, குளம், புல்வெளிகள், பூஞ்சோலைகள், கடற்கரை என நிலவியலின் எல்லாப்பகுதிகளிலும் [அரிதாக கதைக்கு பொருத்தமாகவும், பெரும்பாலும் கதைக்கு சம்பந்தமில்லாமலும்] பாடல்காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதை தமிழ் திரைப்படங்களிலும் காணமுடிகிறது.
நீர் நிலைகள்:
01 கண்ணின் கருமணியே கலாவதி - மர்மயோகி[ 1951 ] [ நீர் வீழச்சி ,நதி கரையில் ]
02 இன்பம் இதுவே இன்பம் - மர்மயோகி [1951] - [ இரவின் அமைதியில் ஓடத்தில் ]
03 வாராய்நீவாராய் - மந்திரிகுமாரி [ 1950 ] - [ மலை சார்ந்த காட்சிகள் ]
இப்பாடலில் ஆங்காங்கே சிலவரிகள் இயற்கையின் இயல்பை
"அமைதி நிலவுதே சாந்தம் தவழுதே
அழிவில்லா மோன நிலை கூடுதே " என வர்ணித்து செல்லும்.
04 நதியே நீராழி அதையே சேர்தல் போல - மருதநாட்டு இளவரசி [ 1950 ] - - எம்.எம் .மாரியப்பா + கே.வி.ஜானகி - இசை எம்.எஸ்.ஞானமணி [ நதியில் நீச்சல் ]
இவ்விதம் 1950 களின் ஆரம்பங்களிலே இயற்கைக் காட்சிகளிலேயே படமாக்கப்பட்ட திரைப்படங்களை நாம் காணக்கூடியவையாக இருந்தாலும் அவை முற்று முழுதான இயற்கை, நிலம்சார் வர்ணணைப்பாடல்கள் என்று கூறிவிட முடியாது. ஆனாலும் அவை நாயகர், நாயகிகள் இயற்கையின் வனப்பில் நெஞ்சைப் பறிகொடுப்பதாக அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
05 ஆகஇன்பநிலாவினிலே - படம் : மாயா பஜார் [ 1957 ] - பாடியவர்: கண்டசாலா +பி.லீ சலா - இசை கண்டசாலா
இந்தப்பாடல் பற்றி சிறுகுறிப்பு
தமிழ் இயக்குனர்களுக்கு இயற்கையின் அழைகைச் சாவகாசமாகக் காட்ட இன்றுவரை நேரமில்லாமல் இருக்கும் பாமரத்தன்மையை எண்ணி எண்ணி வியக்க வேண்டியுள்ளது. பல ஆயிரம் படங்கள் வெளிவந்தாலும் இயற்கையைக் காண்பிக்க அவர்களுக்கு .நேரமில்லை!
ஆனால் மிக, மிக அபூர்வமாக இயற்கையையும், இசையையும் அற்புதமாகப் பயன்படுத்தியதை " ஆகா இன்ப நிலாவினிலே " என்ற கண்டசாலா, லீலா பாடிய பாடலில் பார்க்க நேர்ந்தது.
மாயாபஜார் [ 1957]
மஹாபாரதக்கதையின் கிளைக்கதையாக வரும் அபிமன்யு + வத்சலா வின் கதையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம்.
மாயா பஜார் [ 1957] படத்தில் இரவில் உல்லாசமாக, படகில் பயணம் செய்தபடி பாடும் காட்சியில் அபிமன்யு - வத்சலா [ ஜெமினி -சாவித்ரி ] யார்க்கும் தெரியாமல் பாடிச் செல்வதை கண்ட காவலர் ஒருவன் வத்சலாவின் பெற்றோருக்கு [ பலராமன் தம்பதிகள் ] முறையிடுகிறான். அபிமன்யுவின் காதலுக்கு ஆதவராக இருந்த கிருஷ்ணன் தம்பதிகள் [ ராமராவ் - சந்தியா ] அபிமன்யுவை காப்பாற்றுவதாக அமைந்த காட்சியில் பாடும் பாடல்.
இந்த காட்சியை படமாக்கிய விதமும், அதற்கிசைந்த ஒற்றைப் புல்லாங்குழல் இசையும் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. அதோடு தஞ்சை ராமையாதாஸின் அருமையான வசனமும், அவரே எழுதிய இன்பகரமான பாடல் வரிகளுக்கு கனகச்சிதமாக மோகனராகத்தைப் பயன்படுத்திய கண்டசாலாவின் இசையும் குறிப்பிடத்தக்கன.
இந்தப்பாடலுக்கு உண்மையாக மெட்டுப் போட்டவர் , மிஸ்ஸியம்மா படப்புகழ் எஸ்.ராஜேஸ்வரராவ் என்ற இசையமைப்பாளர். கருத்துமுரண்பாட்டால் படத்திலிருந்து நீங்கினார். அவரின் மெட்டே பயன்படுத்தப்பட்டது. பின் , படத்தின் இசையமைப்பாளர் கண்டசாலாவே இந்த பாடலை பி.லீலாவுடன் இணைந்தும் பாடினார்!
இனிமையான மோகன ராகத்தில் அமைக்கப்பட்ட இந்தப்பாடல் முடிந்ததும், பின்னணி இசையாகவும், பாடலுக்கு முன்பும், கண்ணை மூடினால் நிலவு நம்மை சுற்றி வருவது போல உணர்வு மேலோங்க. மோகனராகம் குழலிசையாக அமைக்கப்பட்டுள்ளது
படத்தில் அதே காட்சியில் இயற்கை தரும் மன உணர்வையும், அதன் சிறப்பினையும் விவரிக்கும் வசனமும் அருமையாக இருக்கும்.
மனைவி : கால மகிமை ... சிறிய பெண் போல் இந்த ருக்மணிக்கு ஏன் இந்த விளையாட்டு !
பலராமன் : கால மகிமை அல்ல! இயற்கையின் மகிமை ! வெண்ணிலவிலே, வீசும் தென்றலிலே.. ஆகா, இவ்வளவு தூரம் வந்துவிட்டோம்.. வா! நாமும் சற்று உல்லாசமாக சென்று வருவோம்.
06ஓ ,, ஹோ .. நிலாராணி - பாடியவர் : சீர்காழி - இசை: ஜி.ராமநாதன்
மேலே கூறிய பாடலைப்போலவே இரவினில், நிலவின் அழகில் மயங்கும் நாயகன் பாடுவதாக அமைந்த பாடல் ஒன்று சித்தூர்ராணி பத்மினி [ 1960 ] என்ற படத்திலும் இடம் பெறுகிறது.
தண்ணொளியைப் பாய்சுகின்ற வெண்ணிலவை மோகனராகத்தில் படம் பிடித்துள்ளார் இசையமைப்பாளர் ஜி.ராமநாதன். ஸ்டுடியோவில் படமாக்கப்பட்ட காட்சி, இயற்கை மீதான காதலை வெளிப்படுத்தும் வண்ணம் கவனமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் , நாட்டுப்பற்று, தேசவளம் போன்ற சிற் சில பண்புகளைத் தாங்கி அங்கொன்றும், இங்கொன்றுமாய் வந்தாலும் முழுமையாக இயற்கையின் மீதான காதலை, அதன் வளத்தை, மனிதர்க்கு அது வழங்கும் பயன் குறித்தும், மனதிலெழுந்த உணர்வுகளையும் இசை என்ற வாகனத்தில் ஏற்றி புதிய போக்காக மிக அபூர்வமாக சின்னப்பா தேவர் தயாரிப்பில் எம்ஜிஆர் நடித்த பல படங்களை இயக்கிய எம்.ஏ.திருமுகம் என்பவர் குறிப்பிடத்தகுந்தவராக உள்ளார்!
அதிகம் பேச்சப்பாடாத இயக்குனரான எம்.ஏ. திருமுகம் இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலும் காடும், காடுசார்ந்த இடங்களை கதைக்களங்களாகக் கொண்டவையாகவும் , கதையின் நாயகி அந்த ஊரைச் சார்ந்தவளாகவும். இயற்கையை ரசிக்கும் சுபாவமுடைய கிராமத்துப் பெண்ணாகவும் இருப்பதுடன், நாயகன் வெளியூரிலிருந்து வருபவராகவும் அமைந்திருக்கும்!
இயற்கையை மனித வாழ்வுடன் இணைத்து காட்டும் தமிழ் மரபின் தொடர்ச்சியை அவர் பின்பற்றியது போல, மாந்தரின் உள்ளத்து உணர்வை அழகுற வெளிப்படுத்துவதுடன். கதாபாத்திரத்தின் இயற்கை சார்ந்த ரசனையை மிக இயல்பாக அலங்காரமில்லாமல் பாடலுக்கேற்ப காட்சிகளையும் இழைத்து பாட்டின் இனிமையையும் இயற்கை அழகுகளையும் கவித்துவமிக்கதாய் காட்சிப்படுத்தி ரசிகர்களை கதையின் உள்ளிழுத்துவிடும் தன்மையை எம்.ஏ.திருமுகத்தின் படங்களில் நாம் காணலாம்!
நாட்டுப்புற மக்களின் இயற்கை மீதான தனிச்சிறப்பான உரிமை கோருதலையும், அதன் வலிமையையும், எளிமையையும் தங்களைவிட அதிக சக்தி வாய்ந்தது என்ற உறுதியான எண்ணமும், அங்கு மறைந்திருக்கும் அழகுகள் மீதான வியப்பும், அவை எழுப்பும் ஒலிகள் இசைக்கு உயிர்சத்து கொடுக்கிறது என்பதை உழைக்கும் மக்கள் மிக இயல்பாகவே உணரக்கூடியவர்கள் என்பதை உணர்த்துவதாக அவரது பாடல் காட்சிகள் அமைந்திருக்கும்.
எம்.ஏ.திருமுகம் 1960களில் இயக்கிய புகழபெற்ற திரைப்படங்களான தாயைக்காத்த தனயன், குடும்பத்தலைவன், நீதிக்குப்பின் பாசம், தாய் சொல்லைத்த தட்டாதே, தர்மம் தலை காக்கும் போன்ற படங்களின் பாடல்களில், இயற்கையுடன் இசைந்த இத்தன்மை வெளிப்படுவதைக் காணலாம்!
மேலைத்தேய திரைப்படங்களில், மெதுவாக நகரும் இயற்கைக் காட்சிகளுக்கு சிம்பொனி பாணியில் இனிய வாத்திய இசையை பின்னணியாக அமைக்கும் உத்தி போல, இப்பாடல்களில் இயற்கை காட்சி பற்றிய வர்ணனையாக, இயற்கையை வர்ணிக்கும் பாடல்வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதினார். அப்பாடல்களனைத்தும் இளங்கோ, மணிவாசகர், பாரதி போன்றோர் " மகளிர் பாடினர் " என்பதைப்போலவே, பெண் கதாபாத்திரங்கள் பாடுவதாகவே அமைந்திருப்பதும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.
இவ்விதம் இயற்கையில் தோய்வதாக அமைந்த பாடல்களுக்கு உதாரணமாக கீழே உள்ள பாடல்கள் சிலவற்றை கூறலாம்.
01 காட்டு ராணி கோட்டையிலே - படம்: தாயைக் காத்த தனயன் [1963] - பாடியவர் :பி.சுசீலா - இசை: கே.வி.மகாதேவன்
02 காடு கொடுத்த கனி இருக்கு - படம்: நீதிக்கு பின் பாசம் [1963] - பாடியவர் :பி.சுசீலா - இசை: கே.வி.மகாதேவன்
03 காட்டுக்குள்ளே திருவிழா - படம்: தாயைக் காத்த தனயன் [1963] - பாடியவர் :பி.சுசீலா - bஇசை: கே.வி.மகாதேவன்
04 பறவைகளே பறவைகளே - படம்: தர்மம் தலை காக்கும் [1963] - பாடியவர் :பி.சுசீலா - இசை: கே.வி.மகாதேவன்.
05 தண்ணீர் என்னும் கண்ணாடி - படம்: முகராசி [1966] - பாடியவர் :பி.சுசீலா - இசை: கே.வி.மகாதேவன்
06 பச்சைக் கொடியில் மழை விழுந்தது - படம்: வளர்பிறை [1962] - பாடியவர் :பி.சுசீலா - இசை: கே.வி.மகாதேவன்.
07 குருவிக்கூட்டம் போலே நிக்கிற - படம்: குடும்பத்தலைவன் [1962] - பாடியவர் :பி.சுசீலா - இசை: கே.வி.மகாதேவன்.
இந்தப்பாடல்களையெல்லாம் எழுதிய கவிஞர் கண்ணதாசன் ஒவ்வொரு பாடல்களிலும் கவிதையில் உள்ள இயற்கையழகையும், மனித இயற்கை அழகையும் ஒருங்கிணைத்து அழகாகப் பாடியுள்ளார். அவர் எழுதிய அப்பாடல்வரிகளை இங்கே பார்க்கலாம்.
1.காடுகொடுத்தகனியிருக்கு ..என்ற பாடலில்
சிந்திய விரவி சிறுக சிறுக ஓடி ஆறாச்சு - அதை
நம்பிய பேர்கள் வாழ்ந்தாலே நாடு நகர ஊராச்சு
தேக்கு சந்தனம் பாக்கு மூங்கில்
தேங்கி நிற்குது பூமியிலே - இதை
காக்கத் தெரிந்து காத்து வந்தா
கடனும் உடனும் தேவையில்லை.
2. காட்டுராணிகோட்டையிலே … என்ற பாடலில்
காட்டு ராணி கோட்டையிலே கதவுகளில் - இங்கு
காவல் காக்க கடவுளை அன்றி ஒருவருமில்லை
காட்டி காட்டி மறைத்துக் கொள்ளும் சுயநலமில்லை - இதிலே
கலந்துவிட்டால் காலம் நேரம் தெரிவதுமில்லை
மேகம் என்ற தந்தை கண்ணில் நீர் வழிந்தது - இங்கே
விதம் விதமாய் குழந்தைகள் போல் செடி வளர்ந்தது
பூமி என்ற தாய்மடியில் தவழ்ந்து வந்தது
நோயில் புலம்புகின்ற மனிதருக்கு மருந்து தந்தது.
3. காட்டுக்குள்ளேதிருவிழா ….என்ற பாடலில்
சலசலக்கும் அருவியக்கா மலையிலே தாவி
சதிராட்டம் போடுகிறாள் தரையிலே
கலகலக்கும் இயற்கையம்மா மடியிலே - அவள்
கண் மயங்கி ஓடுகிறாள் வழியிலே
தென்றலெனும் குதிரையிலே ஊர்வலமாம் மான்கள்
சீர்வரிசை தாங்கி வரும் வாகனமாம்
மங்களமாய் மூங்கிலிலே நாயனமாம்
பச்சை வாழ்க்கையுடன் மாவிலையும் தோரணமாம்
வாசலிலே வருக என்பாள் குயிலம்மா - அங்கே
வந்தவரை அமர்க என்பாள் கிளியம்மா
ஆசையுடன் நடமிடுவாள் மயிலம்மா - இந்த
அழகு கண்டால் தூக்கம் கூட தோன்றுமா?
4. மழைபொழிந்துகொண்டேஇருக்கும் ... என்ற பாடலில்
மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து
எண்ணம் வழிந்து வழிந்து
உயிர் மிதந்து கொண்டே இருக்கும்
5. பச்சைக்கொடியில்மழைவிழுந்தது … என்ற பாடலில்
பச்சைக் கொடியில் மழை விழுந்தது
மலர்கள் உண்டாச்சு - அது
பாய்ந்து செல்லும் பாதையெல்லாம்
பயிர்கள் உண்டாச்சு
தலைதழுவும் தென்றலில்
ஸ்வரங்கள் உண்டாச்சு - இங்கே
தாவி வரும் அருவியில்
ராகம் உண்டாச்சு.
மேல்குறிப்பிட்ட பாடல்களுடன் வேறு படங்களிலும் இடம்பெற்ற பாடல்கள் சிலவற்றை இங்கே குறிப்பிடலாம்
01 மண்ணுலகெல்லாம் பொன்னுலக்காக - படம்: உத்தமபுத்திரன் [1956] - பாடியவர் :பி.சுசீலா+ ஜிக்கி - இசை: ஜி.ராமநாதன்.
02 மழை பொழிந்து கொண்டே - படம்: குடும்பத்தலைவன் [1962] - பாடியவர் :பி.சுசீலா - இசை: கே.வி.மகாதேவன்
03.இதுவென்ன ஆனந்தமோ - படம்: மஞ்சள் மகிமை [1958] - பாடியவர் :பி.சுசீலா - இசை: மாஸ்டர் வேணு
பெரும்பாலும் 1960 களில் பாடல் வரிகளின் துணை கொண்டு பொதுப்பொருளான இயற்கையை வர்ணிக்கும் கண்ணதாசன் எழுதிய பாடல்களுக்கு கே.வி.மகாதேவன் இசை இசைந்து செல்வது நம்மை ஈர்க்கிறது என்றாலும் குறைந்த அளவிலான வாத்திய வெளிப்பாடுகளாகவே அவை அமைந்திருந்தன. அந்தவகையில் இது கூட ஓர் பாய்ச்சல் தான்!
தமிழ் இலக்கிய, பாடல் மரபையொட்டி பழைய இசையமைப்பாளர்கள் நேரம், காலம் பற்றிய சித்தரிப்புகளுக்கேற்ப அமைத்த இசையில் காட்சி பண்பு நிறைந்த பாடல்கள் சிலவற்றை இங்கே நோக்கலாம். புலரும் அழகிய காலைப்பொழுதை தழுவும் வலுவும், முனைப்பும் மிக்க ராகம் என்று கருதப்பட்ட ராகங்களில் [ பூபாளம் - மோகனம் - கல்யாணி ] அமைக்கப்பட்ட சில பாடல்களை இங்கே தருகிறேன். இப்பாடல்களைக் கண்ணை மூடிக்கொண்டு கேட்டாலே மனத்திரையில் காலைக்காட்சிகள் விரியும்!
01 மலர்கள்நனைந்தனபனியாலே - படம் : இதயக்கமலம் - பாடியவர்: பி.சுசீலா - இசை : கே.வி.மஹாதேவன்
02 ஆலயமணியின்ஓசையை - படம் : பாலும் பழமும் - பாடியவர்: பி.சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
03 வெள்ளிக்கிழமைவிடியும்வேளை - படம் : நீ - பாடியவர்: பி.சுசீலா - இசை விஸ்வநாதன்
இதே போல தமிழ் திரையிசையில் புதுமை செய்ய விளைந்த இரட்டையர்களாக விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினர், தங்கள் மெல்லிசைக்கு ஆதாரமாக லத்தீன் இசையை கொண்டிருந்த போதும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தமிழ் பாடல்மரபை பயன்படுத்தியதுடன் காட்சி வெளிப்படும் வண்ணமும் , அதே வேளை கேட்பவர் மனங்களில் உணர்ச்சி ததும்பும் வகையிலும் ஒரு சில வாத்தியங்களை துணைக்கழைத்துக் கொண்டே கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் பாங்கில் அமைத்தமை மனம் கொள்ளத்தக்கது.சில எடுத்துக்காட்டுக்களை நோக்குவோம்.
01 உலகம் பிறந்தது எனக்காக - படம்: பாசம் [1962] - பாடியவர் :TMS - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
02 கட்டோடு குழலாட - படம்: பெரிய இடத்து பெண் [1962] - பாடியவர் :TMS + சுசீலா + ஈஸ்வரி - இசை: விசுவநாதன் ராமமூர்த்தி
03 ஆறோடும்மண்ணில் எங்கும் - படம் : பழனி 1963 - பாடியவர்: டி.எம்.எஸ்.+ பி.பி.எஸ் + சீர்காழி - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
04 ஓடம் நதியினிலே - படம் : காத்திருந்த கண்கள் 1962 - பாடியவர்: சீர்காழி - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
05 தாழையாம் பூ முடித்து - படம் : பாகப்பிரிவினை - பாடியவர்: டி.எம்.எஸ்.+ பி.லீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி.
06 என்னை எடுத்து - படம் : படகோட்டி - பாடியவர்: பி.சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி.
07 சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து - படம் : புதிய பறவை - பாடியவர்: பி.சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி.
08 அமைதியானநதியினிலே - படம் : ஆலயமணி 1963 - பாடியவர்: டி.எம்.எஸ். + பி.சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி.
இப்பாடலின் இசை மிகச்சிறப்பாக அமைக்கப்பட்ட பாடல் என்று சொல்லலாம். பாடலின் ஆரம்பத்தில் வருகின்ற குழல், சந்தூர், வயலின் இணைந்து வருகின்ற இசையும், பின் இடையிசையாக வரும் சந்தூர் வாத்தியத்தின் ஒலிகளும், குழலிசையும் காற்றில் தென்னங்கீற்று அசைவது போன்ற உணர்வுகளைத் தரும். கண்ணை மூடினால் தென்னஞ்சோலை கண்ணில் விரியும். பாடல் அமைக்கப்பட்ட தமிழன் கண்டுபிடித்த ஆதிப்பண்ணான ஹரிகாம்போதி ராகமும், பாடுபவர்களின் எழுச்சிமிக்க குரலும், உயர் உச்சத்தில் சன்னத ரீங்காரம் புரியும் குழலிசையும் நம்மை வானுலகத்திற்கு இட்டு செல்லும்.
1970 களில் மெல்லிசைமன்னர் இசையில் இதைவிட ஓர் மேம்பட்ட இயற்கை வெளிப்பாடுகளை, அது தரும் மன எழுச்சியை, பரவச உணர்வுகளை வெளிப்படுத்தும் புது உத்தியாக ஹம்மிங் மற்றும் வாத்திய இசைகளின் இனிய கூறுகளை புதிய பாங்கில் இணைத்து புதுமை செய்தார் . இப்பாடல்களில் வரும் ஹம்மிங் தன்னளவில் புது, புது சுவைகளைப் பிறப்பிப்பதுடன் பாடல்களையும் செறிவுள்ளத்தாக்கி கேட்போர்களைக் குதூகலிக்கவும் செய்து விடுகின்றன.
குறிப்பாக பாடல்களின் ஆரம்பங்களில் ஹம்மிங், குறுகிய ஆலாபனைகள், அவற்றுடன் குழலிசையைப் பிரதானமாகக் கொண்டும், பாடல்களுக்கு இடையேயும் ஹம்மிங் போன்றவற்றையும், அவற்றை எதிரொலி பிரதிபலிக்கும் வண்ணமும், சில இடங்களில் கோரஸ் பயன்படுத்தியும் இயற்கையை சிறப்பாகப் பிரதி பலிக்கும் பாடல்களைத் தந்தார்.
இவ்வகையான பாடல் அமைப்பு முறைகளை மலைசார்ந்த இடங்களுக்கு அதிகமாகப் பயன்படுத்தியது கவனம் பெறுகிறது.
01 ஓகோகோஓடும்மேகங்களே - படம் : நீலவானம் - பாடியவர் பி.சுசீலா - இசை எம்.எஸ்.விஸ்வநாதன்
02 ஓராயிரம் நாடகம்ஆடினாள்- படம் : சுமதி என் சுந்தரி - பாடியவர் பி.சுசீலா - இசை எம்.எஸ்.விஸ்வநாதன்
03 இயற்கைஎன்னும்இளையகன்னி - படம் : சாந்தி நிலையம் - பாடியவர்: எஸ்.பி.பி பி.சுசீலா - இசை எம்.எஸ்.விஸ்வநாதன்
04 பொட்டுவைத்தமுகமோ - படம் : சுமதி என் சுந்தரி - பாடியவர்: எஸ்.பி.பி. + பி.வசந்தா - இசை விஸ்வநாதன்
05 கடவுள்ஒருநாள்உலகைக்காண - படம் : சாந்தி நிலையம் - பாடியவர்: பி.சுசீலா - இசை விஸ்வநாதன்.
06 சிட்டுக்குருவிக்கென்ன - படம் : சவாலே சமாளி - பாடியவர்: பி.சுசீலா - இசை விஸ்வநாதன்.
07 துளித் துளி துளித் துளி - படம் : புதுவெள்ளம் - பாடியவர் பி.சுசீலா - இசை எம்.பி.ஸ்ரீநிவாசன்.
கண்ணுக்கு இதமான நிலக்காட்சியானது மற்றெல்லாக் கலைஞர்களையும் கவர்ந்தது போலவே சினிமாக் கலைஞர்களையும் கவர்ந்த ஒன்றாகவும் விளங்கியது. தமிழ் சூழலில் ஒரே விதமான கதைகளையும், ஒருசில நடிகர்களையும் திரும்பத் திரும்ப காட்ட வேண்டிய நிர்பந்தநிலையில், அல்லது ஒருவிதமான திகட்டும் நிலை ஏற்பட்ட நிலையில் நவீன கண்டுபிடிப்புகளின் பயனாக ஏற்பட்ட வண்ண ஒளிப்பதிவு கருவி மூலம் நிறங்கள் மண்டிக் கிடக்கும் அழகிய நிலத்தோற்றங்களையும், அழகிய நகரங்களின் பல்வேறு பரிமாணங்களையும் நேரே பார்ப்பது போன்று விளக்கக்கூடியதாக அமைந்த காட்சிகள் மூலம் சினிமா பார்ப்பபவர்களைக் கவரலாம் என்ற நிலையில், அழகிய ,எழில்மிகு காட்சிகள் நிறைந்த தூர தேசத்து நாடுகள் நோக்கிப் படையெடுக்க ஊக்கம் கொடுத்தது.
சினிமாவை ஓட்டுவதற்கு சிறந்த உத்தியாகக் கண்ட தமிழ் திரைத்துறையினர் இதற்கேற்ப கதைகளை வடிவமைத்து இந்தியாவின் வேறு மாகாணங்களில் உள்ள அழகான இடங்களில் படமாக்குவதையும், அதன் விரிவாக்கமாக ஐரோப்பிய, தென்கிழக்கு ஆசியா போன்ற வெளிநாடுகளையும் தேர்ந்தெடுத்துப் படமாக்கினர். இந்திய மாகாணங்களில் படமாக்கப்பட்ட தேன்நிலவு, அன்பேவா போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கன. வெளிநாடுகளில் படமாக்கப்படுவதற்கு சிவந்தமண், உலகம்சுற்றும்வாலிபன்போன்ற படங்கள் ஆரம்பப்புள்ளியாக அமைந்தன.
தேன் நிலவு படத்தில் ஏ,எம்,ராஜா இசையமைத்துப் பாடிய " நிலவும் மலரும் பாடுது " என்ற பாடலும், அன்பேவா படத்தின் " புதிய வான புதிய பூமி " என்ற பாடலும் காட்சியைக் கண்முன் நிறுத்தும் வண்ணம் இசையமைக்கப்பட்ட பாடல்களாக அமைந்தன.
வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட சிவந்த மண், உலகம் சுடும் வாலிபன் போன்ற படங்களில் அழகான காட்சிகள் படமாக்கப்பட்ட போதிலும் பாடல்களில் காட்சிவிரிவு தன்மை அதிகம் வெளிப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட முடியவில்லை. மாறும் காட்ச்சிகளுக்கேற்ப பாடல்களில் பல்வேறு வாத்திய, தாள நடைகளின் வேறுபாடுகளை இசையமைப்பாளர் காண்பித்தார்.
குறிப்பாக சிவந்தமண் படத்தில் " ஒருராஜராணியிடம்" என்ற பாடல், இரண்டு, மூன்று பாடல்களை ஒன்றிணைத்தது போல இருப்பதைக்காணலாம்.
இப்பாடலின் பல்லவி பிரதான டியூனில் ஆரம்பிக்க..
"ஓடம் பொன் ஓடம் .." என்ற அனுபல்லவி வேறு தாள நடையிலும்,
" நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம் " என்ற முதல் சரணம் வேறு பாணியிலும்,
" இந்தப் பூமெத்தை பனியிட்ட " என்ற கடைசிச் சரணம் வேறுவிதமாகவும் அமைந்து பல்வேறு பாடல்களின் இணைப்பு போன்றியிருப்பதைக் காணலாம்.
ஆல்ப்ஸ்மலையின்சிகரத்தில்
அழகியநைல்நதிஓரத்தில்
மாலைப்பொழுதில்சாரத்தில்
மயங்கித்திரிவோம்பறவைகள்.
என பாடலின் இடையே வரும் இசைநடைக்கேற்ற கவிவரிகள், நில அமைப்பையும் [ திணை ], பொழுதையும் விளக்கும் பாங்கில் இசைப் பின்னணியில் சொல்லும் பாங்கும் மனதில் காட்சியை ஓரளவு கொண்டு வருகிறது.
இப்பாடலைப் போலவே உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் " தங்கத் தோணியிலே " என்ற பாடலிலும் வெல்வேறு பாணிகளில் இசை அசைந்து செல்லும்.
இவ்விதம் தம்வசப்பட்ட இசை நுட்பக் கூறுகளை எல்லாம் இணைத்துக் கொண்டு, பாமரமக்கள் புரியும் வண்ணம், எளிய வரிகளின் மூலம் பாடல்களில் இசையின்பம் பெருக செய்து மனங்களைக் கனிய வைக்கும் ரசவாதத்தையும் தந்த பழைய இசையமைப்பாளர்களின் தொடர்ச்சியாக இசைஞானி இளையராஜா வருகிறார்.
[ தொடரும் ]
You must be logged in to post a comment Login