Recent Comments

    இயற்கை – நிலம் – இசை 4

    T.சௌந்தர்.

    கவிதை, நாடகம் , சிற்பக்கலைகளும்சிலகுறிப்புகளும்…

    ஒவ்வொரு கலைக்கும் ஒவ்வொரு சிறப்பு இயல்புண்டு. தொன்மைக் காலத்திலிருந்து இயற்கையை அழகியலுடன் வெளிப்படுத்தியதில் நீண்டதொரு தொடர்ச்சியைக் கொண்டிருப்பது கவிதைக்கலை என்றால் மிகையில்லை.  கவிதைகளின் பாடுபொருளில்  கற்பனைகள் கலந்திருந்தாலும், நிலத்தோற்றங்கள் பற்றிய குறிப்புகளுடன்  இணைத்தும் நோக்கியுள்ளனர் என்பதாலும் கவிதைக்கலை முக்கியத்துவம் பெறுகிறது.  

    புகழ்பெற்ற மார்க்சிய விமர்சகரும், செயல்பாட்டாளருமான கிறிஸ்தோபர் காட்வெல், மாயையும் உண்மையும் [Illusion and Reality ] என்ற கட்டுரையில் கவிதையின் தோற்றம் பற்றி பின்வருமாறு கூறுவார் .

    Poetry is one of the earliest aesthetic activities of the human mind. When it cannot be found existing as a separate product in the early literary art of a people, it is because it is then coincident with literature as a whole; the common vehicle for history, religion, magic and even law. [ Christopher Caudwel - 1907 - 1937 ] -Illusion And reality -  The Birth of poetry.  

    மனித மனத்தின் ஆரம்பகால அழகியல் செயல்பாடுகளில் ஒன்று கவிதை. மக்களின் ஆரம்பகால இலக்கியக் கலையில் அது ஒரு தனிக்கலையாக  காணப்படாத போதும், அது ஒட்டுமொத்த இலக்கியத்துடன் தொடர்புள்ளதால் வரலாறு, மதம், மந்திரம் மற்றும் சட்டம் போன்றவற்றிற்கான பொது ஊடகமாகத் திகழ்கிறது. [கவிதையின்தோற்றம் - கிறிஸ்தோபர் காட்வெல், ]   

    இயற்கைக்கும், இசைக்கும், கவிதைகளுக்குமான தொடர்பு நீண்ட நெடியதாகும். பழங்காலக் கிரேக்கத்தில் வழக்கத்திலிருந்த  Lyrics  என்ற கிரேக்க சொல்லே இன்றும் பொதுவாக அதே பெயரிலே லிரிக்ஸ் [ Lyrics ] என ஐரோப்பிய மொழிகளிலெல்லாம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. lyre என்கிற வாத்தியக் கருவியின் இசையுடன் அவை பாடவும் பட்டன. பழங்கால கிரேக்கர்கள் தனிப்பட்ட இசைநிகழ்ச்சிகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் யாழ் [ Lyre ] வாசிக்கும் போதே  தனியேயும், குழுவாகவும் சேர்ந்தும் பாடினர்.

    தமிழில் யாழ் என்று அழைக்கப்பட்ட இசைக்கருவியை மேல்நாடுகளில் Harp என்றும் Lyre என்றும் அழைக்கின்றனர். இரண்டு வாத்தியங்களுக்குமிடையே மிகக் குறுகிய வேறுபாடே காணப்படுகிறது. Harp என்பது நீண்ட கழுத்தமைப்பைக் கொண்டும், Lyre என்பது சற்று வளைந்த கழுத்தமைப்பையும் கொண்டும் காணப்படும்.  Harp என்பது இரண்டு கைகளாலும் , Lyre  ஒரு கையாலும் வாசிக்கப்படுகின்ற கருவியாகும். 

    Lyric [ Poetry of Song] என்பது வாசிக்கவும், இசையுடன் பாடவும்  பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலக்கவிஞரான William Wordsworth என்ற புகழ் பெற்ற கவிஞர் எழுதியது Lyric Poetry  எனவும், அவர் ஒரு Lyric poet எனவும் Cambridge English  Dictionary பொருள் கூறுகிறது. 

    அவ்விதம் பாடல்வரிகளை இசையுடன் பாடும் போது அதை Melis என்றும் Melos என்றும் அதாவது பாடல் [ Songs ] என கிரேக்கர்கள்  அழைத்தனர். இன்று ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் Melody என்ற சொல் ஓர் பிரெஞ்சு சொல்லாகும். அதற்கான  வேர்ச்சொல் லத்தீன், கிரேக்க மூலத்திலிருந்து கிடைத்ததாகும். கவிதை இசைத்தன்மையுடன் இணைந்திருந்தது மட்டுமல்ல பேச்சுநடை  அதோடு இசைந்ததாகவும் இருந்தது குறிப்படத்தக்கது. 

    கவிதையின் தோற்றம் வளர்ச்சி பற்றி கிறிஸ்தோபர் காட்வெல் "உண்மையும் மாயையும்" என்ற நூலிலும் , ஜோர்ஜ் தொம்சன் " மனித சமூகசாரம் "  என்ற நூலிலும் விரிவாக எழுதியுள்ளனர். இவர்களின் கருத்துக்களை மேலோட்டமாக பேராசிரியர்கள்  கைலாசபதி,  நா.வானமாமலை, அ. மார்க்ஸ் போன்றோர் தொட்டுக் காட்டியுள்ளனர்.

    பேச்சும்பாடலும்:

    மார்க்சிய ஆய்வறிஞர் நா. வானமாமலை பின்வருமாறு விளக்குவார்.   

    “ பேச்சின் சிறப்பான வடிவம் தான் பாடல். இது கூட்டு உழைப்பிலும்கூட்டு விருப்ப வெளியீட்டிலும் தோன்றியது. இதில் சாதாரணப்பேச்சில் காணப்படாத இரண்டு இயல்புகளுண்டு. 1 . மந்திரம்  [ magic ], 2 . இசைவு [ Rhythm ] . மந்திரம் என்பது விருப்பம், சடங்கினால் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் கூட்டாகச் சில சொற்களை உச்சரிப்பது. இசைவு என்பது சொற்களை இசைபட அமைப்பது. அவ்வாறு அமைத்தால் தான் கூட்டமாகப் பாடமுடியும்.பண்டைய இனக்குழு மக்களிடையே சாதாரண பேச்சில் கூட " இசைவு " காணப்படுகிறது. தோடர், கோதர், படகர், காஷிகள், நாகர்கள் போன்ற இனக்குழு மக்களின் பேச்சில் இசைவு காணப்படுகிறது. “ [ இலக்கியத்தில்உள்ளடக்கமும்உருவமும் - கவிதையின் தோற்றமும்  வளர்ச்சியும் - நா. வானமாமலை - பக்கம் 63] 

    அதே போலவே Poem என்ற என்ற சொல் இன்றைய நிலையில் Lyrics என்ற சொல்லுக்கு இணையாக தமிழில் கவிதை என்ற பொருளில்  பயன்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய காலத்தில் ஐரோப்பிய தாள இசைக்கு பொருத்தமாக, அதன் தாளலய இசைக்கோட்பாட்டிற்கு ஏற்ப பாடல் வரிகள் எழுதப்பட்டு  Poem என அழைக்கப்பட்டது. இன்று Lyric, Poem என்கிற இரண்டு சொற்களும் தமிழில் பாடல் என்றும் கவி,  கவிதை என்ற பொருளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழந்தமிழ் பாட்டு வகையில் ஒன்றான பரிபாடல் கவிதை பற்றிய குறிப்பொன்றினைப் பின்வரும் பாடலில்  தருகிறது. 

    " மாசுஇல் பனுவற் புலவர் புகழ்புல 

    நாவின் புனைந்தநன் கவிதா மாறாமை.. 

    [குற்றமில்லாத நூல்களைக் கற்ற புலவர்கள், புகழுடைய அறிவினைக் கொண்ட தம் நாவால் பாடிய வையை ஆற்றைப் பற்றிய நல்ல கவிதைகள் பொய்படாமல் நிலைநிற்கச் செய்ய…]

    கவிதையே கலைகளின் அரசி என்பார் தோமஸ் ஸ்ப்ராட். [ Poetry, the queen of Arts -Thomas Sprat.]  அவர் மட்டுமல்ல " கவிதை என்பது இறைவன் மனிதனுக்கு வழங்கிய தெய்வீக மருந்து " - என்பார் ஜான் கெப்பிள். [ Poetry, a kind of medicine, divinely bestowed upon man - John Keble.

    வியப்பும், களிப்பும் தருகின்ற கவிதைக்கலை குறித்து ஆழமான ஆய்வுகள் உலகெங்கும்  நிகழ்த்தப்பட்டும், ஒப்பீடுகள் செய்யப்பட்டும், வெல்வேறு காலப்பகுதிகளின் கவிதைச் சிறப்புகள், நயங்கள், கவிதைப்பண்புகள் குறித்த திறனாய்வுகளும் செய்யப்பட்டு வருகின்றன.  

    கவிதையியல் குறித்து தொன்மைமிக்க  தமிழ், கிரேக்க இலக்கிய மரபுகளின் வேறுபாடுகளை  பற்றி ஆய்வு நோக்கில் பேராசிரியர் மருதநாயகம் கூறும் கருத்துக்கள் கவனம் பெறுகின்றன. அவர் தம் கருத்தைப் பின்வருமாறு விளக்குவார்.

    " ..// மேலைமரபால் முதன் முதலில் செம்மொழி என்று ஏற்றுக் கொள்ளப்பட்டதும் பல மேலை இலக்கியங்களுக்கு மூலமாய் அமைந்ததும் கிரேக்கம், ஹோமரின் இலியத், ஒடிசி ஆகிய இரண்டு காப்பியங்களுக்காகவும் ஈஸ்கிலஸ், யூரிபிடீஸ்,சாஃப்க்ளிஸ் ஆகிய மூவரின் துன்பியல் நாடகங்களுக்காகவும் பெரும் புகழ்பெற்றது. தன்னுணர்ச்சிப்பா எனும் சிறப்பான இலக்கிய வகையை எடுத்துக் கொண்டோமானால் கிரேக்க இலக்கியம் குறையுடையது என்பது தெளிவாகும். கவிதையியல் [ Poetic ] எனும் அரிஸ்டோட்டலின் நூலில் தன்னுணர்ச்சிப்பா பற்றிக் குறிப்பிடத்தக்க கருத்து ஏதுமில்லை. துன்பியல் நாடகத்தையும் ஒப்பிட்டுக் காட்டித் துன்பியல் நாடாகமே சில கூறுகளில் காப்பியத்தினும் சிறப்புடையது  எனக்கூறி அவரது நூல் முடிவுக்கு வந்துவிடுகிறது. இதனால் தன்னுணர்ச்சிப்பா பற்றி பேசுதற்கோ, எது கவிதை என்று வரையறுத்துச் சொல்லுதற்கோ அவருக்கு வாய்ப்பில்லாமல் போகிறது. கவிதையிலக்கணம் பற்றித் தெளிவான கருத்து அரிஸ்டாட்டலின் ஆசிரியரான பிளேட்டோவிடமும் இல்லை. கவிதையின் பிறப்பு, பயன் பற்றியும் அவ்விரு கிரேக்கச் சிந்தனையாளர்களும் ஆழ்ந்து எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள் என்று  நாம் வர வேண்டியுள்ளது. கவிஞன் ஏதோ ஒருவிதமான ஆவேசத்தால் உந்தப்பட்டுக் கவிதை எழுத்துவதாகவும் அவனால் சமுதாயத்திற்கு எவ்வித நன்மையையும் இல்லையென்றும், கவிஞர்களுக்குத் தாம் கற்பனை செய்துள்ள இலட்சியக் குடியரசில் இடம் கொடுக்கக் கூடாதென்றும் பிளேட்டோ கூறுவார். தொல்காப்பிய பொருளதிகாத்தை ஒத்த ஓர் அறிவுசார்ந்த ஆவணத்தை மேலை அறிஞர்கள் படைக்கவில்லை என்பதே வரலாற்று உண்மை. கவிதை என்பது வாழ்க்கையின் குறையுடைய நகலென்பது பிளேட்டோவின் கருத்தாகும்...... கவிதை வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட நகலென்பதை ஏற்றுக்கொண்ட அரிஸ்டாட்டில் அதில் கற்பனையின் செயலாக்கம் இருப்பதால் பெருமைக்குரியதே என்று வாதிட்டார். இவர்களிருவரும் இலக்கியப்படைப்பின் தோற்றம், தன்மை பற்றி நிறைவான அறிவு பெற்றிருக்கவில்லை. இவர்களுக்குப் பின்னால் வந்த மேலை அறிஞர்கள் யாவரும் இவர்கள் இருவரில் ஒருவரைப் பின்பற்றியே தம் கருத்துக்களை உருவாக்கிக் கொண்டனர் என்பதால் மேலை உலகின் கவிதையியல் முற்றுப் பெறாததாகவே இன்றுவரை இருந்து வருகிறது. அரிஸ்டோட்டலின் இலக்கியக் கோட்பாடுகளை மீட்டுருவாக்கம் செய்து அதன் பெருமை பேசிய சிகாகோ திறனாய்வாளர்களும் தன்னுணர்ச்சிப் பாவின் கவிதையியல் [ Poetic of the  Lyric ] இன்னும் தெளிவு பெறவில்லை என்பதை அருகே கொண்டனர். இவர்கள் யாவரும் தமிழ்க்கவிதை   இயலையும் தொல்காப்பியரின் செய்யுளியலையும் பற்றி ஏதும் அறியாதவர்கள்.”..// - [செம்மொழிகளில்ஒருகவிதைமொழி - பேராசிரியர்.மருதநாயகம்

    உலகெங்குமுள்ள அறிஞர்கள் கவிதை பற்றிச் சிறப்பாகப் பேசியுள்ளதுடன் , அதை  இசையுடனும்  இணைத்து பேசுவதையும் காண்கிறோம்.   "கவிதை என்பது இசைமயமான சிந்தனை" என்று ஷெல்லியும், "கவிதை பா முறையில் அமைந்த ஒன்று "   என்று ஜான்சனும், இயற்கை அம்சங்களை சொல் ஓவியங்களாகக் காட்டுவது கவிதை எனவும் பலவிதமாகக் கூறுகின்றனர். இவ்விதம் உயர்வாகப் பேசப்படும் கவிதை / பாடலில் இயற்கை என்பது மிகவும் முக்கியமான பாடுபொருளாக அமைந்துள்ளது. 19ம், 20ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட ஆங்கில நாடகத் தனிப்பேச்சு [ Dramatic Monologues], நாடக இசைப்பாடல்கள் [ Dramatic Lyrics ] அமைந்த நாடக முன்னிலைப் பாடல்களைக் கவிதை வடிவிலேயே காண்கின்றனர் என்பர்.

    "இயற்கையழகை துய்க்கும் ஆற்றல், முதிர்ந்த பண்பாட்டின் சின்னமாகுமென்று பேரறிஞர்கள் கருதுகின்றன. ஆர்னால்டு டாயின்பி குறிப்பிடும் இருபத்தியோரு நாகரீகங்களில் மூன்று நாகரீகங்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னமே இயற்கையழகில் ஈடுபடும் முதிர்ச்சி பெற்றிருந்தன.மேலைப்பண்பாடும்,சீனப்பண்பாடும், இந்தியப்பண்பாடுமே இப்பீடு எய்தியவை, என்பது மட்டுமல்ல தொல்காப்பியர் அகப்பாடல்களுக்கு இயற்கையை பின்னணியாக்கும் சிறப்பு குறிப்பிடத்தக்கதாகும்"  என்பார் பேரா.மருதநாயகம். 

    தமிழில் இயற்கை பற்றிய வர்ணனையில் நிலத்துடன் இணைத்து பெரும் பொழுது, சிறுபொழுது பற்றிய கால சித்திரங்களும் காட்டப்படுகின்றன. இயற்கையுடன் ஒன்றிய காலநிலை, தட்பவெப்ப மாற்றம் என்பது அவை அமைந்துள்ள பகுதிகளை சார்ந்ததாவே இருக்கும். தமிழ் நிலப்பகுதி என்பது பூமத்தியரேகையை ஒட்டி இருப்பதனால் வண்ணமயமான பகுதிகளாக விளங்குகின்றது. பல வகைவகையான மரம், செடிகள், பூக்கள், மிருகங்கள், பறவைகள் மட்டுமல்ல நிலக்காட்சிகளிலும், ஒளியின் பிரகாசமும், வெம்மையும், தெளிந்த நீலவானம் என பலவிதமான வண்ணமயக்  காட்சிகளை அதிகம் கொண்டிருப்பதும் இயற்கையின் வாய்ப்பாக உள்ளது.

    பூமத்திய ரேகையை அண்டியுள்ள நிலப்பரப்புகளில் வகை வகையான வண்ணங்களில் பூக்களும், காய்கறிகளும் விளைவது போல அந்நிலங்களில் வாழும் மக்களும் கண்ணைப்பறிக்கும் பலவண்ண ஆடைகளையும் அணிவர். அங்குள்ள கலைகளிலும் மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் காணப்படும்.  ஆனால் ஐரோப்பிய நிலப்பரப்பில் கோடைகாலங்களில் மட்டும் மூன்று மாதம் ஒளிவீசும் வெய்யில் காலங்கள் தவிர்ந்த மற்றைய பருவகாலங்களில் ஒருவித மிக மிக மெல்லிய நீலநிறம் கலந்த சாம்பல் நிறத்தில் மேகம் தோற்றம் தரும்.அதன் தாக்கத்தை ஐரோப்பியர்களின் ஓவியங்களிலும் உடைகளிலும் தாராளமாகக் காணமுடியும்.

    எந்தவிதமான காலநிலை இருப்பினும் மனித உந்துதல், ஈடுபாடே படைப்பாக்கத்திற்கு முக்கியமானது என்ற வகையில் கவிஞனுக்கும், இயற்கைக்கும், கவிதையாக்கத்திற்கும் உள்ள தொடர்பு அல்லது இயைபு அவசியமாகிறது. 

    " கவிதைக்கு இரண்டு பெரிய விஷயங்கள் இருக்கின்றன. இயற்கை உலகு, மனித இயற்கை. கவிதை மிகச் சிறந்ததாகவும் ஆரோக்கியமாகவும் தன்னளவில் இருக்கும் போது, அது மனித இயக்கையையும், இயற்கையையும், ஒன்றின் மீது ஒன்றுகொண்ட  நேசத்தையும் ஒன்று கலக்கிறது, கவிதையில் மானிட இயற்கையே முதலாவது. இயற்கை இரண்டாவது தான். ஆனால் கவிதை மிகச் சிறந்ததாகவும், உணர்ச்சிபூர்வமாகவும், எளிமையாகவும், கூர்நோக்குடையதாகவும் , மென்மையாகவும் அமைய வேண்டுமாயின் அவை இரண்டும் ஒருங்கு செல்ல வேண்டும். கவிதை முழு அளவில் மனிதனைப் பற்றியதாகவோ இயற்கையைப் பற்றியதாகவோ இருக்கும் போது அதை உருவாக்குவது கடினம். மேலும் இந்த இரு நிலைகளிலும் கவிதை மெலிந்தும், பலவீனமாகவும், கற்பனையற்றும் இருக்கும்; உணர்ச்சித் துடிப்பையோ ஆறுதலையோ அளிக்க இயலாததாகவும் ஆகிவிடும். "  Stopford Augustus Brooke - [ Naturalism In English Poetry ] ஸ்டாப்போர்ட் புரூக்கின்  இக்கருத்தை கூறிவிட்டு, 

    “ இக்கருத்து தமிழ்க்கவிதை  பற்றியே சொல்லியிருப்பதாகக் கருதலாம். காரணம், சங்கத் கவிதையில் இவையிரண்டின் ஒருங்கிணைவு முற்றிலும் சாத்தியமாகியுள்ளது.  தமிழ்க்கவிஞர்கள் மனிதனைப்பற்றித்தான் மிகச் சிறப்பாக ஆராய்ந்தார்கள்.அந்த மனிதன் ஓரினத்திற்கோ ஒரு சமூகத்திற்கோ உரியவன் அல்ல, அவன் ஒரு இல்டசிய மனிதன், உலகப்பொது மனிதன். சங்கக்கவிஞர்கள் உளவியலாளர்களாகவும், இயற்கைவாதிகளாகவும் இருக்க வேண்டிய எதிர்பார்ப்பு இருந்தது.”  என்பார் தனிநாயகம் அடிகளார்.

     இயற்கை மீதான காதல், ஈடுபாடு என்பது "இயற்கையின் மீதான இந்த காதல், கவிஞன் மனிதனில் உள்ள இயற்கைக்கு திரும்பியதன் மற்றொரு அம்சமாகும்." என்பார் ஸ்டோப்போர்ட். 

    இக்கருத்துக்கு இசைவாக சங்க இலக்கியப்பாடல்களான குறுந்தொகை, நற்றிணைப் பாடல்களில் தாம் வாழ்ந்த பகுதியின் இயற்கை வளத்தையும், அதன் மீதான கரிசனத்தையும், அதனுடன் இணைத்து தம் உணர்வுகளையும்  பொருத்திக்காட்டி காட்சி அழகியலைக் கவிஞர்கள்  வெளிப்படுத்துகின்றனர்.

    அந்த வகையில், இயற்கை குறித்து தமிழ் இலக்கியங்களில் ஏராளமான கவிதைகள் குவிந்து கிடக்கின்றன. இயற்கை பற்றிய வர்ணனைகளை சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், தேவாரம் போன்ற பல்வகை இலக்கியங்களிலும் ஏராளமாகக்  காண முடியும். இவ்விலக்கியங்களில் இயற்கை, நிலம் பற்றியும்,  அவை சார்ந்த வாழ்வியல் அம்சங்கள் குறித்தும் வர்ணனைகள் பின்னிப்பிணைந்து கிடக்கின்றன.

    வடமொழிக்கவிஞர்கள், மேல்நாட்டுக்கவிஞர்கள்கவிதைஎழுதுவதைஒருபொழுதுபோக்காகக்கருதினார்கள். ஆனால்சங்ககாலத்தமிழ்கவிஞர்கள்கவிதைஎழுதுவதையேவாழ்நாள்தொழிலாகக்கொண்டார்கள்.” என்பார் அமெரிக்க கல்வியாளர் ஜார்ஜ் ஹாட்.   

    19 ம் நூற்றாண்டில் தமிழ் இலக்கிய அறிமுகம் பெற்ற மேல்நாட்டவர், தமிழர்கள் ஒரு விஷயத்தைப்பற்றி கவிதை எழுதுவதில் மிக, வல்லமைமிக்கவர்களாக இருக்கும் அதே வேளை உரைநடையில் ஒரு வசனம் கூட எழுத முடியாமல் இருக்கின்றனர் என கூறினர்.

    இவ்விதம் பல அறிஞர்கள் போற்றுகின்ற தமிழ்க்கவிதை மரபில், இயற்கை, நிலம், பொழுது பற்றி மிக அழகான பாடல்களும் குவிந்து கிடக்கின்றன. பதச்சோறாக ஒரு பாடல், 

    கனைக்கும்அதிர்குரல்கார்வணம்நீங்கப்

    பனிப்படுபைதல்விதலைப்பருவத்து

    ஞாயிறுகாயாநளிமாறிப்பிற்குழந்து

    மாயிருந்திங்கள்மறுநிறைஆதிரை  [ பரிபாடல்: 11 74 - 76 ]

    பாடலின்கருத்து  : முழக்கத்தோடுங் கூடிய ஆகின்ற குரலைக் கொண்ட மேகங்களும் வானத்தைவிட்டு நீங்கின.பெய்கின்ற பனியினால் நடுக்குதலைக் கொண்ட பின்பனி பருவமும் வந்தது. அக்காலத்து ஞாயிறு காய்ந்து வருந்துவதில்லை. குளிர்ந்த பின் மழைபெய்யும். அக்காலத்தே களங்கமாகிய மறுவோடு விளங்கும் பெரிய திங்களின் பிறை நிறைவுற்று விளங்கும்.

    பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் இயற்கையை மிக நுண்மையாக  சித்திரித்துள்ளதை பல அறிஞர்கள் எண்ணற்றவகையில் எழுதிக் குவித்துள்ளனர். அக்காலக்கவிஞர்கள் மட்டுமல்ல, பின்வந்த பக்திக்கால சமயக்குரவர்களும் அந்த மரபை பின்பற்றியே தொடர்ந்து வந்துள்ளனர். இயற்கையையும், கால சூழல்நிலைகளையும், இயற்கை பற்றிய உவமைகளையும்,  மனித உறவுகளுடன் இணைப்பும் கொண்ட இக்கவிதைகளை  படிக்கும் போது நம்மையும் ஆட்டி வைக்கும் கலைத்துவத்தையும் தமிழ்க்கவிதைகளில் நாம் உணரலாம். 

    தமிழில் இலக்கியம், வரலாறு, கலை, காவியம், அரசியல், ஏன் கடவுள் என எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் அவையெல்லாம் பாடல், செய்யுள் அல்லது கவிதை வடிவிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. பாணர் மரபு புலவர் மரபாக மாறியதே சங்க இலக்கியம் என்பார் பேராசிரியர் கைலாசபதி.

    தமிழ் கவிதைகள் இந்த உலகத்தை ஞாலம், பூமி என பல சொற்களை பயன்படுத்தி பாடல்களை புனைந்திருக்கிறது.  இயற்கையை போற்றி தங்கள் செய்யுள்களை ஆரம்பிப்பது மட்டுமல்ல , ஆரம்பிக்கும்போதே உலகம் என்றும் ஆரம்பிப்பதையும், தாம் வாழ்ந்த நகரங்கள் பற்றிய குறிப்புகளையும், நகரங்களை பெண்களின் அழகுக்கு  ஒப்பிட்டும், நகரத்தை வாழ்த்திப் பாடியிருப்பதையும் காணலாம். பன்னிரண்டு திருமுறை என சொல்லப்படும் பெரியபுராணம்  "உலகெலாம்  உணர்ந்தோதற்கரியவன் " என்ற முதலடியுடன் , " பூம்புகார் போற்றுதும், பூம்புகார் போற்றுதும் " என சிலப்பதிகாரமும், நகர்ப்புற விவரணைகளை மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை பொருநணாற்றுப்படை போன்ற சங்கப் பாடல்களிலும் காணலாம். பூம்புகார் இயற்கையைப் போற்றியே ஆரம்பமாகிறது.

    கோவலனும் கண்ணகியும் மதுரையில் வைகை நதிக்கரையோரம் நடந்துசெல்லும் போது, வரப்போகும் துன்பத்தை உணர்த்தும் இடத்தில், வைகை நதி பூக்களால்  மூடப்பட்டு ஆடை போர்த்தியிருப்பதாக எழுதும் பாடலில் வைகைநதியின் வனப்பை இளங்கோவடிகள் வர்ணிக்கும் போது..

    புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி 

    வையை என்ற பொய்யாக் குலக்கொடி

    தையற்கு   உறுவது தான் அறிந்தனள் போல் 

    புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக்

    கண்நிறை நெடுநீர் கரந்தனர் அடக்கிச் 

    இப்படி வையை என்னும் குலக்கொடி - புலவர் நாவில் பொருந்திய குலக்கொடி - கண்ணக்கிக்கு நேரப்போகும் துன்பத்தை உணர்ந்தவள் போல, புண்ணிய மலர்களை ஆடையாகப் போர்த்திக்கொண்டு,  ஒழுகும் கண்ணீரை மறைத்து அடக்கிகிக்கொண்டு ஓடினாள்.

     " ....புண்ணிய நறுமலர் ஆடை போர்த்து " என்று மிக அருமையாக எழுதுவார்.அதாவது மலர்கள்  நிறைந்து, நீரை மூடியிருக்கும் வைகைநதி, பூ ஆடை போர்த்தியிருக்கிறாள் என்று கற்பனை செய்கிறார்.

    பக்தி இயக்கக காலத்தில் இசைப்பாடலாக விளங்கிய தேவாரங்களிலும் இயற்கை வர்ணனைகள் மிகுந்த காணப்படுகின்றன. சமயக்குரவர்கள் பாடிய தேவாரங்களிலிருந்து சில   வர்ணனைகள்..  

    மாசில் வீணையும் மாலை மதியமும்

    வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

    மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

    ஈசன் எந்தை இணையடி நீழலே…- [ அப்பர் ]

    சம்பந்தர்பாடிய பாடல்கள் சில:   

    1.

    தேங்கொள் பூங்குமுகு தெங்கிளங் கொடிமாச்

    செண்பகம் வண்பலா இலுப்பை

    வேங்கை பூ மகிழால் வெயிற்புகா வீழி

    மிழலையான் எனவினை கெடுமே.

    வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலிதாயத்து

    அண்டவாணன் அடி உள்குதலால் அருள்மாலை  தமிழ் ஆக

    கண்டல் வைகு கடல் காழியுள் ஞானசம்பந்தன்  தமிழ் பத்தும்

    கொண்டு வைகி இசை பாட வல்லார் குளிர்வானத்து உயர்வாரே.

    விளக்கம்: “வண்டுகள் மொய்க்கும் மணம் நிறைந்த சோலைகள் வளரும் திருவலிதாயம்.

    இதுபோன்ற ஏராளமான இயற்கை பற்றிய வர்ணனைகளை தேவாரப்  பதிகங்களில் காணலாம். 

    கவிதை , நாடகம் , ஓவியம் வெளிப்பாடுகளில் நிலம் குறித்து அதிகம் பேசப்பட்டிருப்பதை நாம் வெகு இலகுவாக காண்கிறோம். 

    தமிழ்க் கவிதைளில் காலங்காலமாக இளங்கோ, வள்ளுவன், கம்பன் முதல் ஏராளாமான  கவிஞர்களால் வர்ணனைகள் எழுதப்பட்டு வந்துள்ளன. சங்ககாலம் முதல் இன்றைய காலம் வரை அதன் தொடர்ச்சியை நாம் காண்கிறோம். நவீன காலத்தின் தலைசிறந்த கவிஞர்களான பாரதியும், பாரதிதாசனும் மிக அழகான வர்ணனைகளை தமது கவிதைகளில் படைத்து வளம் சேர்த்திருக்கிறார்கள். சில உதாரணங்கள்… 

    பாரதிதாசன்

    இயற்கைச்செல்வம்

    விரிந்த வானே, வெளியே, - எங்கும்

    விளைந்த பொருளின் முதலே,

    திரிந்த காற்றும், புனலும், - மண்ணும்,

    செந்தீ யாவும் தந்தோய்,

    தெரிந்த கதிரும் நிலவும் - பலவாச்

    செறிந்த உலகின் வித்தே,

    புரிந்த உன்றன் செயல்கள் - எல்லாம்

    புதுமை! புதுமை! புதுமை!

    காலை:

    ஒளியைக் கண்டேன் கடல்மேல் - நல்

    உணர்வைக் கண்டேன் நெஞ்சில்!

    நெளியக் கண்டேன் பொன்னின் - கதிர்

    நிறையக் கண்டேன் உவகை!

    தென்றல்:

    பொதிகைமலை விட்டெழுந்து சந்தனத்தின் 

    புதுமணத்தில் தோய்ந்து, பூந்தாது வாரி,

    நதிதழுவி அருவியின்தோள் உந்தித், தெற்கு 

    நன்முத்துக் கடல்அலையின் உச்சி தோறும்

    சதிராடி, மூங்கிலிலே பண்எ ழுப்பித்

    தாழையெலாம் மடற்கத்தி சுழற்ற வைத்து, 

    முதிர்தெங்கின் இளம்பாளை முகம்சு வைத்து,

    முத்துதிர்த்துத் தமிழகத்தின் வீதி நோக்கி.

    பாரதிபாடல்கள்… 

    ஒளியும் இருளும்:

    வானமெங்கும் பரிதியின் சோதி; 

    மலைகள் மீதும் பரிதியின் சோதி;

    தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே 

    தரையின் மீதும் தருக்களின் மீதும்

    கானகத்திலும் பற்பல ஆற்றின் 

    கரைகள் மீதும் பரிதியின் சோதி;

    மானவன்றன் உளத்தினில் மட்டும் 

    வந்து நிற்கும் இருளிது வென்னே!

    நிலாவையும்வானத்து…. [ பாரதி ]

    நிலாவையும் வானத்து மீனையும் 

    நேர்பட வைத்தாங்கு 

    குலாவும் அமுத குழம்பைக் குடித்தொரு 

    கோல வெறி படைத்தோம்

    உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும் 

    ஒட்டி மகிழ்ந்திடுவோம் 

    பலாவின் கனிச்சுழை  வண்டியில் ஓர் வண்டு 

    பாடுவதும் வியப்போ 

    தாரகை என்றொரு மணித்திரள் யாவையும் 

    சார்ந்திடப் போ மனமே 

    ஈரச்சுவையதில் ஊறிவருமத்தில் 

    இன்புறுவாய் மனமே!

    சீரவிருஞ்சுடர் மீனோடு வானத்துத்  

    திங்களையுஞ் சமைத்தே

    ஓரழகாக விளங்கிடும் உள்ளத்தை 

    ஒப்பதோர் செல்வமுண்டோ …

    பார்! சுடர்ப்பரிதியை..[ பாரதி ]

    “பார்! சுடர்ப் பரிதியைச் சூழவே படர் முகில்

    எத்தனை தீப்பட் டெரிவன! ஓகோ!

    என்னடீ யிந்த வன்னத் தியல்புகள்!

    எத்தனை வடிவம்! எத்தனை கலவை!

    தீயின் குழம்புகள்! - செழும்பொன் காய்ச்சி

    விட்ட வோடைகள்! - வெம்மை தோன்றாமே

    எரிந்திடுந் தங்கத் தீவுகள்! - பாரடீ!

    நீலப் பொய்கைகள்! - அடடா, நீல

    வன்ன மொன்றி லெத்தனை வகையடீ!

    எத்தனை செம்மை! பசுமையுங் கருமையும்

    எத்தனை! - கரிய பெரும் பெரும் பூதம்!

    நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத்

    தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட

    கருஞ் சிகரங்கள்! - காணடி யாங்கு

    தங்கத் திமிங்கிலந் தாம்பல மிதக்கும்

    இருட்கடல்! - ஆஹா! எங்கு நோக்கிடினும்

    ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்!

    கவிதைகளில் மட்டுமல்ல, நாடகம், சிற்பம், ஓவியம், இசை போன்ற பிற கலைகளிலும் இயற்கை பற்றிய வெளிப்பாடுகளை நாம் காணலாம். 

    நாடகம்.

    முத்தமிழில் ஒன்று என நாடகம் தமிழில் கூறப்பட்டாலும் நாடகம் பெரிதாக வளர்ச்சி பெற்ற துறை இல்லை என்றே எண்ணத்தோன்றுகிறது. நாடகம் பற்றி அரிதான செய்திகளே தமிழில் கிடைக்கின்றன.இருப்பினும்,  நாடகக்கலை பற்றிய  செய்திகளை சொல்லும் பழந்தமிழ் இலக்கியங்கள் நாடக செய்திகளைக் பேசும் பொழுது , நாடக அரங்கம், நாடகம் அமைய வேண்டிய நிலப்பரப்பு, அதன் அமைப்பு, அதற்கு பயன்பட்ட திரைகளையும் பேசுகிறது. அதன் வகைகளையும் பேசுகிறது. இயற்கை  கூறுகளையும் கொண்டு ஓவியங்கள் தீட்டப்பட்ட  திரைச்சீலைகள் அமைக்கப்பட்டதையும் தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன. திரைசீலைகள் மூன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

    1.ஒருமுக எழினி, 2. பொருமுக எழினி, 3. கரந்துவரல் எழினி.

    ஒருமுக எழினி என்பது ஒருபக்கம் கட்டப்படுகின்ற திரை. பொருமுக எழினி என்பது இரண்டாக பிரிக்கப்பட்டு ஒன்று சேரும் தன்மை கொண்டது. கரந்துவரல் எழினி என்பது மேல் கட்டிலிருந்து கீழே விரிந்துவிடவும் சுருக்கவும் கூடிய திரை. குறிப்பாக சிலப்பதிகாரம்  அருமையான சேதிகளைத் தருகிறது. 

    ''தோற்றிய அரங்கில் - தொழுதனர் ஏத்த 

    பூதரை எழுதி, மேல்நிலை வைத்து; 

    தூண் நிழல் புறப்பட, மாண்விளக்கு எடுத்து ,ஆங்கு 

    ஒருமுக எழினியும், பொருமுக எழினியும், 

    கரந்துவரல் எழினியும், புரிந்துடன் வகுத்து- ஆங்கு 

    ஓவிய விதானத்து, உரை பெறு நித்திலத்து 

    மாலைத்தாமம் வளையுடன் நாற்றி; 

    விருந்துபடக் கிடந்த அரும் தொழில் அரங்கத்து-

    (சிலப்பதிகாரம் - அரங்கேற்றுக்காதை - 106-113 வரிகள்)

    சிலப்பதிகாரத்தில் இன்னுமொரு இடத்தில்..  

    "இயல்பினின் வழா அ இருக்கை முறைமையின் 

    குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப 

    வலக்கால் முன்மிதித்து ஏறி, அரங்கத்து 

    வலத்தூண் சேர்தல் வழக்கு எனப் பொருந்தி 

    இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த 

    தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும்"

    ” (சிலப்பதிகாரம் - அரங்கேற்றுக்காதை 129 - 134 )

    சிலப்பதிகாரம் மட்டுமல்ல "பெருங்கதை "என்னும் பழந்தமிழ் நூலிலும் இது போன்ற செய்திகள் கிடைக்கின்றன.

    கொடியும் மலரும் கொள் வழி எழுதிப் 

    பிடியும் களிறும் பிறவும் இன்னவை 

    வடிமாண் சோலை யொடு வகைபெற வரைந்து"

    [என உஞ்சைக்காண்ட வரிகளான 63 – 65]

    திரைசீலைகள் மட்டுமல்ல பூக்களாலும், கொடிகளாலும் மேடைகள் அலங்கரிக்கப்பட்டன. இவை காட்சிக்கலை அழகியலின் அக்கறையின் வெளிப்பாடுகளாக விளங்குகின்றன.

    சிற்பக்கலையில்இயற்கை  :

    ஏனைய கலைகள் போலவே சிற்பக்கலையிலும் இயற்கை, பறவைகள். மிருகங்கள், தாவரங்கள், பூக்கள், செடி, கொடிகள் பற்றிய சித்தரிப்புக்களை எகிப்திய, கிரேக்க சிற்பங்களிலும் , மண்பாண்டங்களிலும் காண்கிறோம். மனிதர்களுடன் இணைந்ததாக இவை சித்தரிக்கப்பட்டுள்ளன. 

    தாவரங்கள், மிருகங்கள் பற்றிய சித்தரிப்புகளை இந்திய சிற்பக்கலையிலும் நாம் காண முடியும். மாமல்லபுரத்தில் அர்ச்சுனதபசு  என்ற சிற்பத்தொகுதியில் மனிதர்களுடன் காணப்படுகின்ற தாவரங்கள் , மிருகங்கள் மிகச் சிறப்பாகாகக் காட்டப்பட்டுள்ளன. இமய மலையில் அர்ச்சுனன் தவம் செய்வதாக சித்தரிக்கப்படும் இத்தொகுதியில் இமயமலையில் இன்றுவரை காணப்படும் பறவைகள் , மிருகங்கள் மிக நேர்த்தியுடன் செதுக்கப்பட்டுள்ளன. 

    சார்நாத், அமராவதி போன்ற வரலாற்று இடங்களிலுள்ள சிற்பங்களிலும் மிருகங்கள் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளன.

    காளிதாசன் எழுதிய இலக்கியங்களில்  இமயம் குறித்த இலக்கிய வர்ணனை நிறைந்து காணப்படுகிறது என்றும் காளிதாசன் ஓர் இமயமலையின்குழந்தை என்றும்  கூறுவர்! 

    மாமல்லபுரத்து சிற்பங்கள் மட்டுமல்ல. பழந்தமி ழ் இலக்கியங்களிலும் இமயமலை பற்றிய குறிப்புகளை நாம் காண்கிறோம்.

    கவிர்ததைச்சிலம்பிற்துஞ்சுங்கவரி

    பரத்திலங்குஅருவியோடுகனவும்  [ பதிற்று- 11  ] 

    இப்பாடல் கவரிமான்கள் தூங்குகின்ற காட்சியை விபரிக்கின்றது.

    எழிலிதோயும்இழ்இசைஅருவி

    பொன்னுடைநெடுங்கோட்டுஇமயம்  [ புறம் - 369  ]  

    சூரியனின் கதிர்கள் பட்டு பொன்போலத் துலங்கும் இயமமலை என்கிறது.

    இளங்கோவடிகள், காளிதாசன் போன்ற பெரும் கவிகள் நிலவியல் அல்லது புவியியல் நன்கு அறிந்தவர்கள் என்பதை அவர்களது இலக்கியங்கள் நன்கு வெளிப்படுத்துகின்றன.

    [ தொடரும் ]

    Postad



    You must be logged in to post a comment Login