Recent Comments

    மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும்-13

    T .சௌந்தர்

    தொகையறாவும்  சிறிய பாடல்களும்.

    மரபிசையின் தொடர்ச்சி நாடகத்தினூடாக வளர்ந்ததெனினும்,தமிழ் சினிமாவில் அதன் தொடர்ச்சியாயும், பிரதிநிதிகளாயும்   ஜி.ராமநாதன் , எஸ்.எம்.சுப்பையாநாயுடு , சி.ஆர்.சுப்பராமன் ,எஸ்.வி.வெங்கடராமன் போன்ற முன்னோடி இசையமைப்பாளர்கள்  இருந்தார்கள்.அவர்களின் தொடர்ச்சியாகவும்,புதுமையாகவும், அமைந்த மெல்லிசைமன்னர்களின் இசை,கதைப்போக்கின் நிகழ்வுகளை தெளிவாக்குவதும்,இசைரசனையை ,அழகுணர்ச்சியை வெளிப்படுத்துவதுமாய் அமைந்தது.

    அந்தக்காலங்களில் கதைப்போக்கின் சில முக்கிய அம்சங்களை  சின்ன ,சின்ன பாடல்கள் மூலம் விளக்கும்  யுத்தியை கைக்கொண்டனர். அதற்கு விருத்தம் ,தொகையறா போன்றவை சிறந்த முறையில்  பயன்படுத்தப்பட்டன

    ஜி.ராமநாதன் இசையமைத்த அம்பிகாபதி  போன்ற படங்களில் இவற்றை அதிகமாக கேட்க முடியும்.

    கவியரசர் கம்பனின் மகனான அம்பிகாபதி பற்றிய கதை என்பதால் அப்படத்தில் பல தொகையறாக்கள் கம்பன் ,ஒட்டக்கூத்தன்,அம்பிகாபதி பாடுவதாக அமைந்துள்ளன. அரச சபையில் இக்கவிஞர்கள் மூவரும் மாறி ,மாறிப் பாடுவதாக அமைந்த காட்சிகளில் செவ்வியல் ராகங்களில் அமைந்த அருமையான மெட்டுக்களில் இவற்றை நாம் கேட்கலாம்.கம்பருக்காக வி.என்.சுந்தரமும், ஒட்டக்கூத்தருக்காக சீர்காழி கோவிந்தராஜனும் ,அம்பிகாபதிக்காக டி.எம்.சௌந்தர்ராஜனும் அப்பாடல்களை பாடியிருக்கின்றனர்.

    01  சோறு மணக்கும்   சோநாடா  - அம்பிகாபதி 1957  - வி.என்.சுந்தரம் - இசை :ஜி.ராமநாதன்

    02  வெல்க நின் கோட்டம் மன்னா   - அம்பிகாபதி 1957  - சீர்காழி கோவிந்தராஜன்- இசை :ஜி.ராமநாதன்

    03  வரும் பகைவர் படை கண்டு   - அம்பிகாபதி 1957  - டி.எம் சௌந்தரராஜன்  - இசை :ஜி.ராமநாதன்

    இதுமட்டுமல்ல ,படத்தில் அம்பிகாபதி தன்னெழுச்சியாக கவிதை பாடும் இடங்களிலெல்லாம்  இது போன்ற பல பாடல்கள் இடம்  பெற்றுள்ளன.

    04  இட்ட அடி நோக்க எடுத்த அடி   - அம்பிகாபதி 1957  - வி.என்.சுந்தரம் - இசை :ஜி.ராமநாதன்

    05  அம்புலியைக் குழம்பாக்கி    - அம்பிகாபதி 1957  - டி.எம் சௌந்தரராஜன்  - இசை :ஜி.ராமநாதன்

    06  ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்   - அம்பிகாபதி 1957  - டி.எம் சௌந்தரராஜன்  - இசை :ஜி.ராமநாதன்

    07  சற்றே சரிந்த குழலே துவள   - அம்பிகாபதி 1957  - டி.எம் சௌந்தரராஜன்  - இசை :ஜி.ராமநாதன்.

    தொகையறா தனியே பாடப்படாமல் பாடல்களுக்கு முன்பாக அமைந்த புகழ் பெற்ற பாடல்கள் சில .

    01 கண்டால் கொல்லும் விஷமாம்

    கட்டழகு மங்கையரை-நான்

    கொண்டாடித் திரியாமல்

    குருடாவ தெக்காலம்?

    பாடல் : பெண்களை நம்பாதே - தூக்குத் தூக்கி   1955  - டி.எம் சௌந்தரராஜன்  - இசை :ஜி.ராமநாதன்

    02  உபகாரம் செய்தவர்க்கே

    அபகாரம் செய்ய எண்ணும்

    முழு மோசக்காரன் தானே

    முடிவில் நாசமாவான்

    பாடல் : அன்னம் இட்ட வீட்டிலே -  மந்திரிகுமாரி  1950  - டி.எம் சௌந்தரராஜன்  - இசை :ஜி.ராமநாதன்

    03  பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்

    பகலிரவாய் விழித்திருந்து வளர்த்தாள்

    பாடல் : அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை-  அன்னையின் ஆணை 1958  - டி.எம் சௌந்தரராஜன்

    எஸ்.எம்.சுப்பையாநாயுடு

    இது போன்ற இன்னும் பல பாடல்களை எடுத்துக்காட்டாக நாம் கூறலாம்.

    பாடலுக்கு முன்பாக மட்டுமல்ல பாடல்களுக்கு நடுவிலும் மிக அருமையாக தொகையறாவை , ஹம்மிங்கை புதிய பாங்கில் வைத்து ஜாலம் காட்டினார்கள். அதிலும் மெல்லிசைமன்னர்கள் முன்னோடிகளாகவே இருந்தனர்.

    01 மின்னலால் வகிடெடுத்து

    மேகமாய் தலை முடித்து

    பாடல் : பாட்டுக்கு பாட்டெடுத்து - படம்: படகோட்டி   1964 - டி.எம் சௌந்தரராஜன்- இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி.

    02 ஆரிரோ ஆரி

    ஆரிரோ ஆரிரோ

    பாடல் : வீடுவரை உறவு - படம்: பாதகாணிக்கை   1962 - டி.எம் சௌந்தரராஜன்- இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

    03 ஆரி ஆரிரோ ஆராரிரோ

    ஆரி ராரோ ஆராரிராரோ

    பாடல் : மாணிக்கத்தொட்டில்   - படம்: பணம் படைத்தவன்   1963 - டி.எம் எஸ்.+சுசீலா எல்.ஆர்.ஈஸ்வரி - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

    பாடல்கள் என்பது  தவிர்க்க முடியாது என்பதற்கப்பால் திரைக்கதையின் உணர்ச்சி நிலைகளை வெளிப்படுத்துகிற பல்வேறு நிலைகளூடாக ,ஆங்காங்கே சின்னச்,சின்ன பாடல்களிலும் திரையில் பின்னணி இசைக்கு பதிலாக ,பார்வையாளர்களின் உணர்வாகவும்,பல சமயங்களில் இயக்குனரின் கருத்தாகவும்  வெளிப்படும் வண்ணம் அருமையான பாடல்களை மெல்லிசைமன்னர்கள்  தந்துள்ளார்கள் என்பதும் நமது கவனத்திற்குரியது.

    அக்காலத்தில் சின்ன,சின்ன பாடல்களை படத்தின் அவசியம் கருதி வைப்பதும் ஒரு பழக்கமாகவே இருந்தது.படத்தின் மையக் கருத்தை அது இன்பமானாலும் ,துன்பமானாலும் இறுதிக்காட்ச்சியில் வசனமாகவோ ,பாடலாகவோ வெளிப்படுத்துவதுமுண்டு.

    இறுதிக்காட்சிகெனவே தனியே இசையமைக்கப்பட்ட சிறிய பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.அந்தவகையில் எம்.ஜி.ஆர் நடித்த மதுரை வீரன் படத்தில் " கடமையிலே உயிர் வாழ்ந்து கண்ணியமே கொள்கையென மடிந்த வீரா "   என்ற பாடலும், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் " வீரத்தின் சின்னமே விடுதலைப் போருக்கு வித்தாக உருவெடுத்தாய் " என்ற இரு பாடலையும் கூறலாம்.

    வேறு சில படங்களின் இறுதிக்காட்சியில்  ஏற்கனவே அந்தப்படங்களில் உள்ள பாடல்களின் சில பகுதிகள் மட்டும் ஒலிக்கும்.

    படத்தின் இறுதியில் மட்டுமல்ல இடையிலும் குறிப்பாக சில விஷயங்களை தனித்துவமாகக் காண்பிக்கும்  காட்சிகளில் சின்ன சின்ன பாடல்கள் பயன்பட்டிருக்கின்றன.அதிலும் மெல்லிசைமன்னர்கள் மிகக்கவனம் செலுத்தி நல்ல பாடல்களை தந்திருக்கின்றனர்.

    திரையில் அங்கங்கே ஒலிக்கும் சிறிய  பாடல்கள் பெரும்பாலும் இசைத்தட்டில்  வருவதில்லை.அதனால் வானொலிகளுக்களிலும் இவற்றைக் கேட்க முடியாது. அவற்றை  படத்தில் மட்டுமே கேட்கமுடியும்.ஆனாலும் இது போன்ற பாடல்கள் இசையைத் துருவித் துருவி  ரசிக்கும் ரசிகர்களுக்கு பெரிதும் விருந்தளிப்பவை.

    அதே போலவே வெளிவந்து புகழ்பெற்ற சில பாடல்கள் இசைத்தட்டில் ஒருவிதமாகவும் ,திரைப்படத்தில் வேறு விதமாகவும் தணிக்கைக்குழுவின் கெடுபிடிகளால் மாற்றப்பட்டதும் உண்டு.

    குறிப்பாக வெளியில் அதிகம் கேட்கப்பட்ட பாடல்கள் திரையில் சிறிய வடிவில் மாற்றப்படுவதும் ,வெவ்வேறு   வடிவங்களில் அவற்றை மாற்றுவதும் [Musical Variations], புதிய குரலில் பாட வைப்பதும், இனிய வாத்தியங்களை இணைத்தும், புதிய திருப்பங்களைத்  தந்து  ரசனையைத் தூண்டுவதும் மெல்லிசைமன்னர்களின் தனிச் சிறப்பாகும்.இது போன்ற பாடல்கள் மூலம் இசையின் பல பரிமாணங்களை தெளிவாக காட்டிய முன்னோடிகள் என்று துணிந்து கூறலாம். வசனங்களை விட இசை அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனபதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    1950 களின் ஒரு போக்காக அமைந்த தொகையறா பயன்பாட்டைத் தமது இசையிலும் மெல்லிசைமன்னர்கள் வைக்க வேண்டிய காலமாக அவர்களது ஆரம்பகாலம் இருந்தது.அதுமட்டுமல்ல அந்த மரபின் தொடர்ச்சியை அவரது பிந்தைய காலப் பாடல்களிலும் நாம் கேட்கலாம்.

    அந்தவகையில் மெல்லிசைமன்னர்கள் அமைத்த சில பாடல்கள்:

    தொகையறாவில் மட்டும்  அமைந்த சிறிய பாடல்கள்

    01  மலரோடு விஷ நாகம் பிறப்பதால்    - பாசவலை 1956 - பாடியவர்: பி.பி.ஸ்ரீனிவாஸ்    - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.

    02  யாருக்குத் தீங்கு செய்தேன் நான்     - பாசவலை 1956 - பாடியவர்: சி.எஸ்.ஜெயராமன்     - இசை : விஸ்வநாதன். ராமமூர்த்தி

    03  வானம் பொய்யாது   - தங்கப்பதுமை 1959  - பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.

    04  விதி எனும் குழந்தை கையில்    - தங்கப்பதுமை 1959  - பாடியவர்: சீர்காழி    - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.

    05  பூமாலை போட்டு  போன      - தங்கப்பதுமை 1950 - பாடியவர்:எஸ்.சி.கிருஷ்ணன் + ரத்னமாலா    - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.

    06  தங்கமணி பைங்கிளியும் தாயகத்து நாயகனும் மங்கலத்தில் ஒன்றுபட்டார் கையேடு

    - படம் - சிவந்த மண் 1969  - சீர்காழி- இசை: எம்.எஸ் விஸ்வநாதன்.

    07 நித்திரையில் வந்து நெஞ்சில் – ராமு 1966 - பி.சுசீலா - இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்

    பொதுவாக பழைய மரபில்  செவ்வியலிசையில் கனதி ராகங்களில் வருகின்ற தொகையறாவை தமது மெல்லிசைக்கு இசைவாக மாற்றியும், மாறாததும் போல,கனிந்த படிநிலையை மெல்லிசைமன்னர்கள் உருவாக்கிக் காட்டினார்கள்.

    தொகையறாக்களைக் கொண்ட புகழ் பெற்ற  பாடல்கள்:

    01  பதறி சிவந்ததே நெஞ்சம் ...

    பாடல் : கண்கள் இரண்டும் என்றும் உன்னைக்கண்டு  - படம் - மன்னாதிமன்னன் 1960 - பி.சுசீலா - இசை: எம்.எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி

    02  பாலும் பழமும் என ஒன்றாக சேர்த்தாயே  ...

    பாடல் : இந்த நாடகம் அந்த மேடையில்   - படம் - பாலும் பழமும் 1961- பி.சுசீலா - இசை: எம்.எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி

    03  சத்தியம் சிவம் சுந்தரம்

    சரவணன் திருப்புகழ் மந்திரம்

    பாடல் : அழகன் முருகனிடம்    - படம் - பஞ்சவர்ணக்கிளி 1965 - பி.சுசீலா - இசை: எம்.எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி

    04  ஒன்றையே நினைத்திருந்து

    ஊருக்கு வாழ்ந்திருந்து

    பாடல் : ஒருவர் வாழும் ஆலயம்     - படம் - நெஞ்சில் ஓர் ஆலயம் 1962 - டி.எம்.எஸ் + எல்.ஆர்.ஈஸ்வரி  - இசை: எம்.எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி

    05  காலம் பல கடந்து

    அன்னை முகம் கண்டேனே

    பாடல் : சிலர் சிரிப்பார்  - படம் - பாவமன்னிப்பு 1961  - டி.எம்.எஸ்   - இசை: எம்.எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி.

    06  மந்தரையின் போதனையால்

    மனம் மாறி கைகேயி மஞ்சள் குங்குமம் இழந்தாள்

    பாடல் : ஒற்றுமையாய் வாழ்வதால் - படம் - பாகப்பிரிவினை 1959  - சீர்காழி  + எல்.ஆர்.ஈஸ்வரி   - இசை: எம்.எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி

    07  தங்கை உயிர் எண்ணி

    தன்னுயிரை வைத்திருந்தான்

    பாடல் : மலர்களை போல் தங்கை  - படம் - பாசமலர் 1961  - டி.எம்.எஸ்    - இசை: எம்.எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி.

    08  வானகமே வையகமே

    வளர்ந்து வரும் தாயினமே

    பாடல் : மலருக்குத் தென்றல் பகையானால்    - படம் - எங்க வீட்டு பிள்ளை 1965  - சுசீலா _ ஈஸ்வரி     - இசை: எம்.எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி

    09  ஆடிய ஆட்டம் என்ன...

    பாடல் : வீடு வரை உறவு   - படம் - பாதகாணிக்கை  1962 -  டி.எம் சௌந்தரராஜன் - இசை: எம்.எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி

    10  இறைவா உன் மாளிகையில் ...

    பாடல் : ஆண்டவனே உன் பாதங்களை - படம் - ஒளிவிளக்கு 1968  - பி.சுசீலா - இசை: எம்.எஸ் விஸ்வநாதன்

    11  பால் போலவே வான் மீதிலே

    யார் காணவே நீ காய்கிறாய்

    பாடல் : நாளை இந்த வேலை பார்த்து  - படம் - உயர்ந்தமனிதன் 1968 -பி. சுசீலா - இசை: எம்.எஸ் விஸ்வநாதன்

    12  ஓடி வந்து மீட்பதற்கு  ...

    பாடல் : மேகங்கள் திரண்டு வந்தால்  - படம் - நான் ஆணையிட்டால் 1966  -சீர்காழி +பி.சுசீலா - இசை: எம்.எஸ் விஸ்வநாதன்

    13  தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்  ...

    பாடல் : நீங்க நல்லாயிருக்கணும்    - படம் - இதயக்கனி 1973 - சீர்காழி- இசை: எம்.எஸ் விஸ்வநாதன்

    வானொலிகளிலும் ,இசைத்தட்டுக்களிலும் முழுமையாகக் கேட்ட சில பாடல்கள் புதிய வரிகளைத் தாங்கி சிறிய பாடல்களாக்கப்பட்டு ,வேறு ஒரு பாடக/ பாடகிகள் குரலிலும் பயன்படுத்தப்பட்டு வருவதை திரைப்படம் பார்க்கும் போது மட்டும் கேட்கின்றோம்.அவற்றுள் சில படத்தின் டைட்டில் பாடலாகவும், சில படத்தின் முடிவுக்காட்சிகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

    அதில் சில பாடல்கள் ,ஒரு சிறிய பாடலாக இல்லாமல் , முழுமையான வடிவில் ஒரு தனிப்பாடல் ஒலிக்கும் நேர அளவிலும் அமைந்திருக்கும்.

    01  பார் மகளே பார் பரந்த உலகினைப்பார் - பார் மகளே பார் 1963- பாடியவர்: எஸ்.எஸ்.விஸ்வநாதன் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.

    டி.எம்.சௌந்தரராஜன் சோகமாகப் பாடி அதிகம் கேட்கப்பட்ட "நீயில்லாத மாளிகையை பார் மகளே   பார் " என்ற பாடலின் அதே மெட்டில் பல்லவியை மட்டும்  அமைத்துக் கொண்டு மெல்லிசைமன்னரே மிக அழகாகப் பாடுகிறார்.இனிய திருப்பங்களைக் கொண்ட இந்தப்பாடலில் மென்மையான சோகத்தையும் கேட்கலாம்.

    02  துயில் கொண்டாள் கலங்காது அமைதி கொண்டாள்  - பார் மகளே பார்1963 - பாடியவர்: பி.சுசீலா  - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.

    இரு பிள்ளைகளில் ஒரு பிள்ளை தனதில்லை என்ற குழப்பத்தில் தந்தை.இதை உணர்ந்து தனது தந்தையின் / பெற்றாரின் குழப்பத்தை தீர்க்க எண்ணும் ஒரு மகள் வீட்டை விட்டு போவதாக முடிவெடுத்து பிரியும் சமயத்தில் பின்னணியாக ஒலிக்கும் பாடல். இரவில் பிரியும் தருணத்தில் ஒவ்வொருவரிடமும் விடைபெறுவது போல பாடல்  காட்சி அருமையாக அமைக்கப்பட்டுள்ளது.

    ஒருவர் மட்டுமே தியாகம் செய்தால் போதும் தந்தை

    உள்ளத்திலே அமைதி கொஞ்சம் சேரும்

    தியாகம் செய்ய இரும்பு நெஞ்சம் வேண்டும் - அது

    சிலரிடம் தான் சில சமயம் தோன்றும்.

    என்று சகோதரியிடமும்

    உண்மையினை நீயறிவாய் தாயே - இருந்தும்

    ஒரு குறையும் வைத்ததில்லை நீயே

    கண்மணி போல காத்து வளர்த்தாயே - உன்னைக்

    கடந்து செல்ல துணித்து விட்டேன் தாயே.

    என்று தாயிடமும்

    வந்தாள் இருந்தாள் வந்தவள் தான் பிரிகின்றாள்

    தந்தையே  உங்கள் தங்க மனம்  அமைதி கொள்க.

    என்று தந்தையிடமும் விடைபெறுவதாக அமைந்த பாடல்.

    03 கானகத்தைத் தேடி இன்று போகிறாள் – கொடிமலர் 1967 - சீர்காழி - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

    04 ஓடம் நதியினிலே - காத்திருந்த கண்கள் 1962 - சீர்காழி - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

    " ஓடம் நதியினிலே " இந்த பல்லவியைக் கொண்ட இந்தப்பாடல் ,சற்று மாற்றப்பட்டு ..

    காதல் வழியினிலே காத்திருந்த கண்களினால்

    போய் வருவீர் என்று சொன்னால் புன்னகையால் முடிவிலே ..

    என்ற வரிகளைக் கொண்ட இந்தப்பாடலுடன் காத்திருந்த கண்கள் படம் நிறைவு பெறும்.

    05 இன்பமும் காதலும் இயற்கையின் நீதி - படம் - பாவமன்னிப்பு 1961  - ஜி.கே.வெங்கடேஷ் - இசை: எம்.எஸ் விஸ்வநாதன்

    இது  " வந்த நாள் முதல் இந்த நாள் வரை " என்ற டி.எம்.சௌந்தரராஜன் பாடிய பாடலின் சோக வடிவம். வாத்தியங்களால் மாற்றியமைக்கப்பட்டதுடன் மெல்லிசைமன்னர்களின் உதவியாளராக இருந்த ஜி.கே.வெங்கடேஷ் மிக அருமையாகவும் பாடிய பாடல்.

    06 நினைவில் வந்த நிம்மதி நேரில் வந்ததில்லையா- படம் - நீல வானம் 1965- சுசீலா - இசை: எம்.எஸ் விஸ்வநாதன்

    இது சொல்லடா வை திறந்து அம்மா என்று என்ற பாடலின் சோக வடிவம்.

    07  அன்னைமடி மெத்தையடி   - படம் - கற்பகம் 1964 -  பி.சுசீலா  - இசை: எம்.எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி

    அத்தைமடி மெத்தையடி என்ற பாடலின் மாற்றப்பட்ட வடிவம்.

    08   நா ..நா ..நானா...  நினைத்தாலே இனிக்கும்  - நினைத்தாலே இனிக்கும் 1979  -பாடியவர்: SPB.+ ஜானகி  - இசை : விஸ்வநாதன்

    09  What a waiting...[காத்திருந்தேன் காத்திருந்தேன்]  - நினைத்தாலே இனிக்கும் 1980  -பாடியவர்: SPB  - இசை : விஸ்வநாதன்.

    10  சொல்லத்தான் நினைக்கிறேன்   - சொல்லத்தான் நினைக்கிறேன் 1973  -பாடியவர்: விஸ்வநாதன்+ எஸ்.ஜானகி - இசை : விஸ்வநாதன்.

    திரைத்துறையினர் தங்களது கதையில் ,நடிப்பில் ,இயக்கத்தில் நம்பிக்கை வைத்திர்களோ இல்லையோ இசையமைப்பாளர்களிடம் அதிக நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதை சிறிய பாடல்களையோ,பெரிய பாடல்களையோ  தயங்காமல் தமது படங்களில் பாவித்ததிலிருந்து தெரிகிறது.அதுமட்டுமல்ல இசையில் அவர்களது ரசனையும் வெளிப்படுகிறது.அவை கதாபாத்திரங்கள் பாடுவதாக மட்டுமில்லை திரையின் பின்னணியில்  அசரீரியாகவும் ஒலிக்க வைத்தார்கள். இவற்றைப் பாடகர்கள் பலரும்  பாடி  செழுமைப்படுத்தினர்.

    இவர்களுடன் இன்னுமொரு முக்கியமான பாடகரின் குரல் அசரீரிக்கும் அழகாகப் பயன்பட்டது.

    [தொடரும் ]

     

    Postad



    You must be logged in to post a comment Login