அன்னையர் தினம் ஒருவாறாக முடிந்து விட்டது.
முகப்புத்தகத்தில் அன்னையர்களுக்கு எல்லாம் அவர் தம் புத்திர பாக்கியங்கள் சொரிந்த அன்பு வெள்ளத்தைப் பார்த்துப் பயந்து, இதற்குள் மூழ்கப் போனால் முக்குளிக்க வேண்டி வரலாம் என்று ஒரு ஓரமாய் ஒதுங்கி நிற்க வேண்டி வந்தது.
அன்னையைப் போல ஒரு தெய்வம் உண்டோ என்று, பலரும் தங்கள் தங்கள் தாய்மாருக்கு வாழ்த்துச் சொன்னார்கள். பெருமைகளை உயர்ந்தேத்தினார்கள்... முகப்புத்தகத்தில்!
வாழ்த்துப் பெற்றோர் முகப்புத்தகத்தில் பின்னூட்டம் விட்டதாயும் காணவில்லை. பலர் மேலுலகம் சென்றிருந்ததால், முகம் இல்லாமல் முகப்புத்தகத்தில் பொய் அடையாளத்துடன் தரிசனம் தர முடியாது போயிருக்கலாம்.
ஆனால் உண்மையிலேயே அவர்களெல்லாம் பின்னூட்டம் விட நேர்ந்திருந்தால், 'அன்னை ஒர் ஆலயம்' றீல்காரர்களில் பலர் தலைக்குத் துண்டோடு தலைமறைவாக வேண்டி வந்திருக்கும்.
('ஓமடா, அவளின்ரையைக் கண்டவுடன, எங்கள வீட்டாலை கலைச்சுப் போட்டு, இப்ப உனக்கு மதர்ஸ் டே கேக்குதோடா. போய் உன்ரை மாமிக்குச் சொல்லடா')
இந்தக் களேபரங்களுக்குள், ஏடாகூடமாக எதையாவது சொல்லப் போனால், காட்டாற்று வெள்ளம் நம்மையும் அடித்துச் சென்று விடுமோ என்ற பயம் வேறு.
ஏற்கனவே, தமிழைப் பழித்தவனை, (தலைவரையும் தான்!) தாய் தடுத்தாலும் விட மாட்டேன் என தமிழுணர்வாளர்கள் கொலை வெறியோடு அலைகிறார்கள். தாயைக் காக்கும் தனயர்களும், (அது சரி, தனயர்களின் பெண் பால் என்ன?) மற்றவர்களும் தாய் மேல் ஆணையாக, அன்னையின் காலடியில் நம் தலையை ஒப்படைக்க சபதம் எடுத்தால், நாட்டில் தலைக் கறுப்புக் காட்ட முடியாது.
எனவே, அமளி அடங்கும் வரைக்கும் அடக்கி வாசிப்பதாய் உத்தேசித்து...
வீட்டிலும் பக்கத்து வீட்டு இத்தாலிய அன்னைக்கும் வாழ்த்துக்களோடு அன்னையர் தினம் கழிந்தது.
அன்று, வீட்டில் உள்ள அன்னையார் வேறு யாரோ அன்னையாருடன், சமீபத்தில் காலமாகிய அன்னையார் ஒருவர் பற்றி நடத்திய தொலைபேசி உரையாடலை, சீரியஸாக முகப்புத்தகத்தில் மூழ்கியிருப்பதாய் பாவனை பண்ணிக் கொண்டே காதை எறிந்து விட்டுக் கேட்டதில்...
அன்னையின் சமூக உதவிப் பணத்திற்காக தனயர்கள் போட்டி போட்டுக் கொண்டு, அம்மாவைக் கவனிக்க ஆளாளுக்கு மோதிக் கொண்டதும், பின்னர் அம்மா படுக்கையில் விழுந்ததும், இரண்டு பேருமே கைவிட்டு, முதியோர் இல்லத்தில் விட்டதுமான கதை காதில் விழுந்தது.
அன்னையர் தினத்துக்குப் பொருத்தமான கதை. அந்தப் புத்திர பாக்கியங்களுடன் முகப்புத்தக நட்பு இல்லாததால்... அவர்களின் பதிவேற்றம் கண்ணில் படவில்லை. அன்னையின் வாழ்த்தின் பின்னூட்டத்தில் இன்னமும் தனயர்கள் மோதிக் கொண்டிருக்கக் கூடும்.
நல்ல காலம், அன்னையர் தின வாழ்த்துக் கேட்காமலேயே, அந்த அன்னை மேலுலகம் போனது நல்லது!
இங்கே பல அன்னையர்கள் பிள்ளைகளுக்கு பொன் முட்டையிடும் வாத்துக்கள்!
சமூக உதவிப் பணம் முதல், பிள்ளைப் பராமரிப்பு வரைக்கும் வருமானமாகவும், செலவுகளைத் தவிர்ப்பதுமாய் பிள்ளைகளுக்கு வருவாய் ஈட்டித் தருபவர்கள்.
பெறும் உதவிப் பணத்தில், பிள்ளைகளுக்குக் கடன் கொடுக்கும் அன்னையரையும் கண்டதுண்டு.
சில நேரங்களில் படுக்கையில் விழுவதாலோ, அல்லது மருமகள் வருகையாலோ, காலை சோபாவில் நீட்டியபடி, அதிகாலை முதல் நள்ளிரவு வரை விஜய் டிவி பார்க்கும் வசதிக்கு குந்தகம் விளையலாம்.
அதிருக்கட்டும். அமெரிக்காவில் தொடங்கிய அன்னையர் தினத்தின் பாதிப்பில் நம்மவர்களும் பூங்கொத்தோடு முதியோர் இல்லத்தில் உள்ள அன்னையரைப் பார்க்கச் செல்கிறார்கள்.
அன்பின் வெளிப்பாடு என்பதா? கடமைக்காக நிறைவேற்றும் கடமை என்பதா?
தாய்மையைத் தெய்வீகமாக்கியது எங்கள் கலாசாரம் மட்டும் தான் போலிருக்கிறது.
நாடு, மண், மொழி எல்லாமே எங்களுக்குத் தாய் தான். கடவுளே குடியிருக்கின்ற கோயிலாக, தாயில் சிறந்த கோயில் இல்லை என்கிறோம். தாயில் கடவுளையும் கடவுளில் தாயையும் காண்கிறோம்.
ஒரு தாய் தன் பிள்ளைகள் மேல் அன்பு செலுத்துவதும், அவர்களின் நல்வாழ்வு பற்றி அக்கறையும் கவலையும் கொள்வதும், அதற்காக அளப்பரிய தியாகங்களை மேற்கொள்வதும் மதிக்கப்பட வேண்டியது என்பது உண்மை.
ஆனால் இது நாங்கள் உயர்ந்தேத்துவது போல, தெய்வீகமானதா?
இது இயற்கையின் நியதியான விடயம். அடுத்த தலைமுறையை தன் உடலுக்குள்ளேயே சுமந்து, அது தன் சொந்தக் காலில் நிற்கும் வரைக்கும் பால் ஊட்டி, உணவு கொடுத்து, அதற்கு நேரக் கூடிய ஆபத்துக்களை எதிர்கொள்வதும், அதற்காக தன் உயிரைக் கூடத் தியாகம் செய்வதும் மனிதத் தாய்மார்களுக்கு மட்டும் உரியதல்லவே! பறவைகள், காட்டு மிருகங்கள் எல்லாமே இதை இயற்கையாகவே, எந்தச் சிந்தனையோ, பகுத்தறிவுக்கோ தேவையின்றி, செய்கின்றன.
இணயத்தில் தன் பிள்ளைகளுக்காக உயிரையே கொடுக்கும் தாய்மிருகங்கள் வரைக்கும் கண்ணீரை வரவழைக்கும் காணொளிகள் நிறைய உண்டு.
ஐந்தறிவு படைத்ததாக மனிதன் சொல்கிற ஜீவன்களுக்கே இருக்கும் தாய்மை மனிதர்களுக்கு இருப்பதில் எந்த விசேடமும் இல்லை.
கூர்ப்பில் மேலே வர வர, ஒரு இனத்தின் தொடர்ச்சிக்கு அதன் அடுத்த தலைமுறை, எதிரிகளிடமிருந்தும், சுற்றாடல் ஆபத்துக்களிலிருந்தும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக, அவை சுயமாக செயற்படும் வரைக்கும் தாயின் கவனத்திற்குள் இருக்க வேண்டிய கட்டாயம் உண்டு. அது இல்லாவிடில், எல்லா இனங்களும் சுலபமாக அழிந்து போகலாம்.
அந்த இயற்கைக் கட்டாயத்தின் தொடர்ச்சி தானே, மனிதத் தாய்மை.
இதில் மனிதத் தாய் எந்த விதத்தில் உயர்த்தி?
பாம்பு கூட, தன் குட்டிகளுக்கோ, தன் முட்டைகளுக்கோ ஆபத்து என்றால், அதைப் பாதுகாக்கச் சீறுகிறது. சிறுவயதில் விசயம் தெரியாமல் குஞ்சுகளுக்கு கிட்டே போகப் போய் கோழிகளிடம் கொத்து வாங்கிய அனுபவமும் உண்டு. தன் வாரிசுகளுக்கு ஆபத்து என்றால் அதைத் தடுக்க சீற்றம் கொள்வது இயற்கை நியதி தானே.
இது எல்லாத் தாய்மார்களுக்கும் இயற்கை கொடுத்த பழக்கம். வெறுமனே உடலில் அடுத்த தலைமுறையையோ, முட்டையையோ சுமப்பது, உடல் ரீதியான தாயாவதையே குறிக்கிறது.
தங்கள் கருப்பையை வாடகைக்கு விடும் அளவுக்கு (Surrogate) தாய்மை முன்னேறியிருக்கிறது.
இதில் தாய் இருக்கிறாள். தாய்மை எங்கே இருக்கிறது?
பிறந்த குழந்தைகளை குப்பைத் தொட்டிக்குள் வீசுவதும், கழுத்தை நெரித்துக் கொல்வதும் தாய்மையைப் போற்றும் இந்தச் சமூகத்திற்குப் பயந்து தானே! சமூகம் எதிர்பார்க்கும் முறைமை தவறினால், வயிற்றில் குழந்தை இருந்தாலும் கொலையைச் செய்வது தாய்மையைப் போற்றும் இந்த சமூகத்தில் கௌரவத்தைக் காப்பதான பெருமையைத் தானே குறிக்கிறது! பிறகெதற்கு தாய் பற்றி இந்த பொய்மை எல்லாம்?தாய்மை என்பது அதுவல்ல. தாய்மை என்பது உடல் நிலைப்பாடு அல்ல, உள நிலைப்பாடு!
வெறுமனே பிள்ளையைப் பெறுவதால், ஒரு பெண் உடல் ரீதியாக மட்டுமே தாயாகிறாள். இயற்கை தாய்க்கு கொடுத்த இயல்புகளையே இழந்தவர்கள் எத்தனை பேர்?
பிள்ளைகளை விட்டு விட்டு, காதலனோடு ஓடிப் போன தாய்மார்கள்.
காதலனுக்கு அடித்த மகனிடம், 'உன்னைப் பிணை எடுக்க மாட்டேன்' என்று காதலனை மட்டும் பிணை எடுத்த தாய்.
தங்கள் வரட்டுக் கௌரவத்திற்காக பிள்ளைகளின் வாழ்வைப் பலியாக்கிய தாய்மார்கள்.
விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்தார்கள் என்பதற்காக பிள்ளைகளையே ஒதுக்கிய தாய்மார்கள்.
தான் பெற்ற பிள்ளைகளுக்குள்ளேயே ஓரவஞ்சகம் செய்யும் தாய்மார்கள். (என்னவோ, எனக்கு மிகவும் பிடிக்காதவர்கள் இவர்கள்! எனது பெற்றோர் அவ்வாறானவர்கள் அல்ல.)
பிள்ளைகள் மீதான கோபத்தில் ஒன்றுமறியா பேரக் குழந்தைகளை வெறுக்கும் தாய்மார்.
பாகிஸ்தானில், தன் காதலனுடன் ஓடிப் போய், கர்ப்பிணியான மகள், சட்டத்தரணியின் அலுவலகத்தில் இருந்த போது, ஆட்களைக் கூட்டி வந்து, நேரே காட்டி, துப்பாக்கியால் கண் முன்னே சுடச் சென்ன தாய்!
இவர்கள் எல்லாம் உடல் ரீதியான தாய்மார்கள் தான். நாங்கள் தினசரி காண்கின்ற தாய்மார்கள் இவர்கள்.
இவர்களுக்கும் தாய்மைக்கும் என்ன சம்பந்தம்? இவர்கள் தெய்வீகமானவர்களா?
தன்னுடைய வீட்டுக்கு வரும் மருமகள்களைக் கொடுமைப்படுத்தும் மாமிமார்கள் என்ன விதிவிலக்குகளா? இல்லையே! கொடுமைப்படுத்தா விட்டாலும், மாற்றாந் தாய் மனப்பான்மையோடு நடப்பது வழமை இல்லையா?
இவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமே தாய் ஆகியவர்கள்.
தாய்மை உணர்வு உள்ளவர்கள் இல்லை.
தாய்மை என்பது தன்னுடைய பிள்ளைகளை நேசித்து போஷித்து பாதுகாத்து, அவர்களின் வாழ்வுக்காக தியாகங்களைச் செய்வது அல்ல.
தாய் தன் பிள்ளைகளை நேசிப்பதை, பிள்ளைகள் கொண்டாடலாம். சமூகம் கொண்டாட முடியாது.
தனக்குப் பிறக்காத பிள்ளையையும் தன்னுடைய பிள்ளையாய் நினைப்பவள் தான் என்னைப் பொறுத்தவரைக்கும் தாய்!
அந்தத் தாய் சமூகத்தினால் கொண்டாடப்பட வேண்டியவள்!
• • •
தனக்கு பிள்ளை இல்லாமலேயே என்னை தன் பிள்ளையாக, ஆறு மாதக் குழந்தையாயிருந்த காலம் முதல் வளர்த்து, ஆளாக்கி, மறைந்த என் ஆச்சி,
எத்தனையோ இடர்களுக்கும் துயரங்களுக்கும் நடுவில், என்னைப் பெற்ற, காலம் சென்ற அம்மா,
கடைக்குட்டியான என்னை இன்றும் தங்கள் குழந்தையாக நினைக்கும் என் அக்காமார்கள்,
எல்லாக் குழந்தைகளையும் தன் குழந்தையாக நினைக்கும் வீட்டுக்காரி,
என் சகோதரர்களின் மனைவிகளான மச்சாள்மார்கள்,
என்னை தங்கள் பிள்ளைகளில் ஒருவனாக நினைக்கும் என் நண்பர்களின் தாய்மார்கள்,
ஊரில் குழந்தைப் பருவம் முதல் ராசா என்று வாஞ்சையுடன் அழைத்து அன்பு காட்டிய ஆச்சிமார்கள், குஞ்சாச்சிகள், பெரியம்மாக்கள், சின்னம்மாக்கள், மாமிகள்
என் அம்மாச்சிகள்,
என் உடன் பிறவாச் சகோதரிகள்,
பெறாமக்கள், மருமக்கள்,
நான் அம்மா என்று அழைக்கும் என் நண்பிகள், (தொகை அதிகமில்லை!)
அயோக்கியர்களுக்கு வாழ்க்கைப்பட்டும், கணவன்களை இழந்தும், பிள்ளைகளுடன் வாழ்வைக் கொண்டு நடத்த தினசரி போராடும் தாய்மார்கள்,
உலகெலாம் மற்றவர்களின் குழந்தைகளையும் தங்களின் குழந்தைகளாய் நினைத்து அன்பு காட்டும் தாய்மார்கள்,
அனாதைகளான குழந்தைகளுக்கு தாய்மையை கொடுக்கும் தாய்மார்கள்...
மாற்றுத் திறன்களேடு பிறந்த குழந்தைகளை சிரத்தையோடு வளர்க்கும் தாய்மார்கள்,
மருமகள்களையும் தன் பிள்ளை போல அன்பு செய்யும் அம்மாமிகள்,
உடல் ரீதியாக தாயாக முடியாவிட்டாலும், உள்ளத்தால் தாய்மை அடைந்த தாய்மார்,
இவர்களோடு, தாய் இல்லாக் குறையைப் போக்க, தாயாகவும் வாழும் தாயுமானவன்கள் எல்லாருக்கும்...
என் இதயம் நிறைந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்!
You must be logged in to post a comment Login