மறத்தமிழர் பண்பாட்டில் காலங்கள் கடந்தும் மறையாப் பொருளாய் இருப்பது இந்த மொட்டைக் கடதாசி. ஊரில் உண்மை விளம்பிகள் எக்கச் சக்கம். ஏதோ பதவியில் இருப்பவன் பற்றி மேலிடத்திற்கு மொட்டைக் கடிதம் அனுப்புவதாயினும், பின்னால் அலைந்தும் கடைக்கண் பார்த்து அருளாத பெண் பற்றி தந்தைக்குக் கடிதம் எழுதுவதாயினும், அடையாளம் காட்டாது கரந்துறையும் உண்மை விளம்பிகளின் தொல்லை சொல்லி மாளாது.
கட்டழகுக் காரிகை மேல் மையல் கொண்டு, கடிதம் கொடுக்கப் போக, காலணியைக் காட்டிய காரிகை பற்றி அப்பனுக்கு எழுதுவான் ஐயாக்குட்டி…
‘ஐயா, உமது மகள் ஆச்சிக்குட்டி உவன் அப்புக்குட்டியுடன் ஆடித் திரிகிறாள்’.
ஆச்சிக்குட்டிக்கு வீட்டுக்குள் பூட்டி வைத்துப் பூசை நடக்கும். அப்பாவி அப்புக்குட்டி ஆச்சிக்குட்டியின் அண்ணன்மார்களால் நையப்புடைக்கப்படுவான்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
ஆச்சிக்குட்டியைப் பழி வாங்கிய மகிழ்ச்சி. வில்லன் அப்புக்குட்டி ஒழுங்கைப் பக்கம் தலைக்கறுப்புக் காட்ட மாட்டான், போட்டிக்கு வில்லன் குறைந்த மகிழ்ச்சி.
பக்கத்து வீட்டு வேலிப் பிரச்சனையா? பள்ளிக்கூட வாத்தியாரோடு பிரச்சனையா? தன்னால் நேரடியாக முகம் கொள்ள முடியாத எந்தப் பிரச்சனைக்கும் தமிழனுக்கு இருக்கவே இருக்கிறது மொட்டைக் கடிதம்.
இந்த மொட்டைக்கடிதங்களால் பிரிந்த குடும்பங்கள் எத்தனை? பொலிடோல் குடித்த பெண்கள் எத்தனை? தண்ணியில்லாக் காட்டுக்கு தலைமறைவான தலைமை வாத்தியார்கள் எத்தனை?
தன் அடையாளமே தெரியக் கூடாது என்ற ஒரே நோக்கத்தில் தானே, மூலைக்கு மூலை மண்ணின் மைந்தர்கள் வைத்த முறைப்பாட்டுப் பெட்டிப் பக்கமே தமிழன் தலை வைத்துப் படுக்காமல் இருந்தான். வேலிச்சண்டைப் பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஆமிக்காரனோடு சகவாசம் என்று இயக்க முகாமுக்கு மொட்டைக் கடிதம் எழுதினால் பிரச்சனை முடிந்தது. பக்கத்து வீட்டுக்காரனின் வேலி மட்டுமல்ல, வீடும் வசமாகும்.
கையெழுத்தில்லா ஒரு மொட்டைக்கடிதத்தை வைத்தே இத்தனை சாகசம் காட்டிய தமிழனால் ஏன் மொட்டைக் கடிதம் எழுதி தமிழீழம் பெற முடியவில்லை என்பது தான் கியூறியஸ்க்கு இன்னமும் புரியவில்லை.
இலங்கை சீனாவுடன் ஆடித் திரிகிறது என்று இந்தியாவுக்கு ஒரு மொட்டைக் கடிதம்.
இலங்கை திருகோணமலையை இந்தியாவுக்கு கொடுக்கிறது என்று அமெரிக்காவுக்கு ஒரு மொட்டைக் கடிதம். இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கையைப் பங்கு போட முயற்சிக்கின்றன என்று சீனாவுக்கு ஒரு மொட்டைக் கடிதம்.
நாராயணனும் சிவசங்கர் மேனனும் மகிந்தவுக்கு கதவைப் பூட்டி வைத்துப் பூசை நடக்கும், ஆச்சிக்குட்டியின் அப்பன் போல.
இந்து சமுத்திரத்தில் அம்பாந்தோட்டைப் பக்கமாய் வால் ஆட்டும் அமெரிக்காவை சீனா நையப்புடைக்கும், அண்ணன்மார் போல.
குட்டையைக் குழப்பி விட்டு வேடிக்கை பார்க்க வேண்டியது தான். கொழுவ விட்டு, கூத்துப் பார்க்கும் தமிழ்ப் பாரம்பரியத்தைக் கைக்கொள்ள வேண்டியது தான்.
தமிழீழம் தானே மலர்ந்திருக்கும்.
அட, விடுடா, வயித்தெரிச்சலைக் கிளப்பாதே!
ஓகே… இப்ப கியூறியஸ் உங்க மனம் புண்படும்படி அப்படி என்ன சொல்லியிட்டான்? பெட்டிஷன் அடித்தல் என்று தமிழ்ப் பண்பாட்டின் மையப் பொருளாய் விளங்கிய ஒரு பெருமைக்குரிய விடயம் பற்றித் தானே பேசியிருக்கிறான்.
இன்றைக்கும் இணையத்தில் பின்னூட்டம் என்ற பெயரில் தன்னை அடையாளம் காட்டாமல் மற்றவர்களை வசை பாடித் தொடரும் ஒரு பாரம்பரியம் பற்றித் தானே சொல்கிறான்.
புலன் பெயர்ந்த தமிழன் எதற்கு அனாவசியமாய் முத்திரைக்குப் பணம் செலவழிப்பானேன் என்று போட்டோக் கொப்பிக்கு செலவழித்து மொட்டை நோட்டீஸே விடத் தொடங்கினான். திகிலூட்டும் உண்மைகளும், மயிர்க் கூச்செறிய வைக்கும் தகவல்களும், முள்ளந்தண்டை உறைய வைக்கும் குற்றச்சாட்டுகளும் என தமிழனின் பாரம்பரியம் தொடர்ந்தது. உண்மை விளம்பிகள் நலன் விரும்பிகள் என பெயரை மாற்றிக் கொண்டார்கள்.
கடைகள் எங்கும் பத்திரிகைகளோடு போட்டி போட்டுக் கொண்டு மொட்டை நோட்டீஸ்கள் வந்தன. பத்திரிகை எது, மொட்டை நோட்டீஸ் எது என்ற வித்தியாசம் தெரியாமல் புலன் பெயர் தமிழன் அவதியுற்றான்.
(பேனாவை வாளாகப் பாவிக்கலாம் என்பதை மட்டும் தெரிந்திருந்த கியூறியஸ்க்கு பேனாவை சைக்கிள் செயினாகவும் பாவிக்கலாம் என்பதை உணர்த்திய பொதிகை உட்பட!)
இது போதாதென்று, நள்ளிரவில் பேயைப் போல, உலவின தொலைநகல் மொட்டை நோட்டீஸ்கள்… உதயன்களுக்கும் சூரியன்களுக்கும் போட்டியாய், உதயச் சந்திரன்கள்!
கோயில் பிரச்சனையா? வானொலி உரிமைப் பிரச்சனையா? தலைமறைவான சீட்டுக்காரனா?
மக்கள் மன்றத்தில் நீதி கேட்க வந்தன மொட்டை நோட்டீஸ்கள்.
இந்த அநியாயத்தைக் கேட்பார் யாருமே இல்லையா?
தமிழனுக்கு என்ன வேடிக்கை தானே! பரபரப்போடு வாசித்தான். புல்லரித்தான். புன்னகைத்தான். வாசித்த முடிந்த பின்னால் ஒன்றில் மா அரித்தான். மற்றதை அடுத்தவருடன் பகிர்ந்து கொண்டான், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று.
கியூறியஸைப் பொறுத்தவரைக்கும், தமிழன் மனம் உவந்து மற்றவனோடு பகிர்ந்து கொண்டது மொட்டை நோட்டீஸ்கள் மட்டும் தான்!
தமிழனிடம் நீதி கேட்டு வந்து போட்டுடைத்த உண்மை விளம்பிகளும் நலன் விரும்பிகளும் இந்த மொட்டைக் கடிதக் கலாசாரத்தை கனடியர்களுக்கும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ஆளாளுக்கு ஆளாளைப் பற்றி, கனடிய அரசின் சகல மட்டங்களுக்கும், தமிழர்கள் தொடர்பு கொள்ளும் சகல அலுவலகங்களுக்கும் தமிழன் தமிழனைப் பற்றி மொட்டைக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறான்.
தமிழ்த் தேசிய வார்த்தைப் பிரயோகத்தில் சொல்வதாயின், தமிழன் தமிழனையே காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.
பண்பாட்டுப் பாரம்பரியம்!
ஊரில் பெட்டிஷன் அடிப்பதில் பேர் போன சிலர் இங்கே பத்திரிகையும் நடத்துகிறார்கள். தங்கள் எழுத்துத் திறமையை பொருத்தமான முறையில் பயன்படுத்தும் இவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியுமா?
அட, இதென்ன கியூறியஸ் மொட்டைக் கடிதம் பற்றிச் சொல்கிறானே என்று நீங்கள் தாடியைச் சொறியக் கூடும். காரணம் இருக்கிறது.
கியூறியஸும் ஒரு காலத்தில் மொட்டைக் கடிதம் எழுதியவன் தான்.
களவும் கற்று மற என்பது போல கியூறியஸும் மொட்டையை எழுதி மறந்திருக்கிறான்.
ஆசிரியர் சென்ற தடவை வாத்யார் எம்.ஜி.ஆர் மாதிரி ‘தன்னை வாழ வைத்த தெய்வங்களுக்கு அன்புக் காணிக்கை செலுத்தி’ பலருடைய மனதைத் தொட்டிருக்கிறார் போலிருக்கிறது. அதில் தன்னுடைய கல்லூரி அதிபர் பற்றியும் தனக்கு எழுத்தறிவித்த அந்த இறைவர்கள் பற்றியும் சொல்லியிருக்கிறார்.
இந்த ஆனானப்பட்ட எழுத்தறிவித்த இறைவர்களுக்கே மொட்டைக் கடிதம் எழுதியவன் தான் கியூறியஸ்.
அடப் பாவி!
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று பகிரங்கமாய் சவால் விடப் போய், நீறாகிப் போகவோ, நெற்றியில் பொட்டு வைக்கப்படவோ கியூறியஸ் என்ன மாங்காய் மடையனா?
அந்த உண்மையை எப்படிங்க என்ர வாயாலேயே சொல்றது?
ஆசிரியர் போலவே கியூறியஸும் அடி(போட்ட)களார்களின் பாசறையில் பயின்றவன் தான். அடிகளார்கள் யேசுக்கிறிஸ்துவின் நாமத்தினாலே கியூறியஸ் போன்றோர்க்கு நன்றாகவே பூசை போட்டார்கள்.
அந்தக் கால கட்டத்தில் தான், நாகாஸ்திரமாக மொட்டைக்கடிதம் ஒன்றைப் பாவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு கியூறியஸ் உள்ளானான்.
நடந்த கதை இது தான்!
கியூறியஸ் உயர்தர வகுப்பில் பயின்ற போழ்தில், ஓர் ஆசிரியை அவன் வகுப்பிற்கு பாடம் பயிற்றுவிக்கலானார். ஆசிரியை ஒழுங்காகத் தான் கற்பித்து வந்தனர். அவ்வாசிரியையின் எழிலையும் அழகையும் வர்ணித்திடல் ஒவ்வாதெனினும் அவர்தம் பேரழகை எடுத்தியம்பல் இவ்விடை பொருத்தமாமே. கியூறியஸ் ஆயின மாணாக்கர்க்குக் கற்பித்த காலையில் தான், அவ்வாசிரியைக்கு பெரியோர் கூடி திருமணப் பொருத்தம் நிச்சயிக்கப்பட்டது.
ஆசிரியையும் தன் வருங்காலக் கணவரின் படத்தைத் தன் மாணாக்கர்க்குக் காட்டிப் பெருமை கொண்டனர். பொறியில் வல்லார் அவர் பொருத்தமாய் இருந்தாரன்றே.
அவ்விடை தான் தோன்றியது மிகுந்ததொரு பிரச்சனையே.
அப்படியொரு பெரிய பிரச்சனையும் இல்லை. ஆசிரியை வகுப்பிற்கு வருவார். பேசாமல் மேசையில் உட்கார்வார். கனவில் ஆழ்வார், கன்னத்தில் கை வைத்தபடி.
கியூறியஸ் கூட்டத்திற்கு என்ன பிரச்சனை? ஆசிரியை பேசாமல் உட்கார்ந்தால், பிறகென்ன ஜாலி தானே. சினிமா முதல் கனவுக்கன்னிகள் வரைக்கும், அரசியல் முதல் எல்லாம் வரைக்கும் பேசிப் பேசிப் பொழுது போயிற்று.
நாட்கள் நீண்டன, மாதங்களாயின. ஆசிரியை பாடம் படிப்பிப்பதற்கான எந்த சகுனங்களும் தென்படுவதாயில்லை. தினசரி கனவுக் காட்சி தான்.
பரீட்சை நெருங்க, கியூறியஸ் கூட்டத்திற்கு பயம் வேறு பிடிக்கத் தொடங்கி விட்டது.
இந்தப் பிரச்சனையை யாரிடம் சொல்வது?
அதிபரிடம் போய் சொல்ல முடியுமா, எங்களுடைய ரீச்சர் தன் வருங்காலக் கணவன் பற்றி கனவு காண்கிறார் என்று.
வீட்டிலும் சொல்ல முடியாது.
தீவிர மந்திராலோசனையின் பின் அதிபருக்கு மொட்டைக் கடதாசி எழுதுவதாக கியூறியஸ் தலைமையிலான மத்திய குழு உண்மை விளம்பிகள் தீர்மானித்தனர்.
இருப்பினும் காட்டிக் கொடுக்கும் கயவர்களால் ஏற்படக் கூடிய ஆபத்துக்களை மனதில் கொண்டு ஆசிரியர்களுக்குப் பந்தம் பிடிப்பவர்கள் தவிர்க்கப்பட்டு, கியூறியஸ் தலைமையில் திட்டம் தீட்டப்பட்டது.
மாணவர்கள் எழுதுவது போல் மொட்டைக்கடிதம் எழுதினால், வகுப்பு முழுவதற்குமே பூசை நடக்கும்… யேசுக்கிறிஸ்துவின் நாமத்தினாலே.
காட்டிக் கொடுக்கும் கயவர்களுக்கு பூசை நடப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அப்பாவிகளான நாங்கள் தண்டிக்கப்படுவதில் எந்த நியாயமும் இல்லையே.
எனவே, மாணவர்கள் வீட்டே போய் பெற்றோருக்குச் சொல்லி, அந்தப் பெற்றோரில் யாரோ உண்மை விளம்பிகள் மொட்டைக் கடிதம் எழுதியது போல இருக்கக் கூடியதாக கடிதம் எழுதப்பட்டது.
அங்கே தான் கியூறியஸின் மணிமூளை வேலை செய்தது.
ஆசிரியை கற்பிக்காமல் இருந்தால், அதைப் பற்றி அறியாமல் இருப்பதன் மூலம், அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மூலம் அதிபரும் அதற்கு உடந்தையாகிறார். அவரையும் குற்றம் சாட்டுவது போல கடிதம் அமையக் கூடாது.
எனவே அவருக்கு ஐஸ் வைக்க வேண்டியது கட்டாயம்.
கடிதத்தின் இறுதி வரிகள் கியூறியஸின் ஆலோசனைப்படியும் வற்புறுத்தல்படியும் பின்வருமாறு எழுதப்பட்டது.
‘எங்கள் பிள்ளைகளின் ஒழுக்கத்தில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். ஆனால் அவர்களின் எதிர்காலம் தான் கேள்விக்குறியாகியுள்ளது’
ஒரே போடு!
ஆமா, மொட்டைக் கடதாசி எழுதுகின்ற ஒழுக்கமான பிள்ளைகள்.
சரி, கடிதம் எழுதியாயிற்று. யாழ் பெரிய தபாலகத்திற்கு அருகில் வசித்த நண்பன் இரவு பதினொரு மணிக்கு தபால் அலுவலகத்தில் கடிதத்தைச் சேர்த்தான்.
மறுநாள் காலை பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னால் ஆங்கிலத்தில் புரியாத ஜெபம் சொல்லி முடிய, உயர்தர மாணவர்கள் எல்லோருக்கும் கூட்டம். அதிபர் அடிகளார் எல்லோரையும் உட்கார வைத்துச் சொல்கிறார்.
‘இன்று காலையில் எனக்கு ஒரு கடிதம் கிடைத்தது’.
பகீர் என்றது எங்களுக்கு. ஆளையாள் பார்த்துக் கொண்டோம். ஆரோ அள்ளி வைச்சிட்டாங்களோ? காட்டிக் கொடுக்கும் கயவர்களுக்கு தகவல் கசிந்து விட்டதோ? பகிரங்கமாய் பிரப்பம் பூசை?
‘எனக்கு ஒரு பெற்றோர் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அதில் உள்ள விசயம் உங்களுக்குத் தேவையில்லை’
அதிபர் சிரிக்கிறார், அர்த்தபுஷ்டியுடன்!
சொல்ல வேண்டிய தகவல் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேர்ந்திருக்கிறது.
‘அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிற ஒரு விசயம் முக்கியமானது’.
அதிபர் கடிதத்தை எடுத்து வாசிக்கிறார்…
‘எங்கள் பிள்ளைகளின் ஒழுக்கத்தைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்’.
அடுத்த வரியை வாசிக்கவில்லை. ‘அவர்களின் எதிர்காலம் தான் கேள்விக்குறியாக உள்ளது.’
அடிகளாருக்கு பெருமை தாங்கவில்லை. தன்னுடைய சகாப்தத்தின் கீழ், தன் மாணாக்கர்களின் ஒழுக்கம் பற்றி பெற்றோர் புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்கள்.
அந்த நாலைந்து ஒழுக்கமான மாணவர்களும் தங்களுக்குள்ளே பார்த்துக் கொள்கிறார்கள், சுத்தி இருக்கிற இந்தப் பரதேசிகள் எல்லாம் தங்களையும் ஏதோ ஒழுக்கத்தின் பிரதிநிதிகளாக நினைத்துக் கொண்டிருக்கிறார்களே என்று.
கியூறியஸின் மணிமூளையில் வந்துதித்த அந்த ஒரு வசனத்தை வைத்து அதிபர் அடிகளார் முக்கால் மணி நேரம் பிரசங்கம் செய்கிறார்.
தன்னுடைய மகத்தான சாதனைக்கு உரிமை கோர முடியாத சூழ்நிலையில், கியூறியஸ் அந்தப் பெருமையை மிகுந்த தன்னடக்கத்துடன் மெளனமாக ஏற்றுக் கொள்கிறான். கூட்டம் முடிந்து வந்ததும், பத்து மணிக்கு வரும் இடைவேளை வரைக்கும் சிரிப்பை அடக்கி வைத்து, கியூறியஸ் கூட்டம் வயிறு வலிக்கச் சிரித்தது.
இருந்தாலும், அதிபர் நீதி கேட்ட எங்கள் கோரிக்கைக்கு பதிலளித்ததாய் இல்லை. அவர் ஆசிரியையுடன் பேசியிருக்கக் கூடும். அந்த ஆசிரியையின் கனவுக் காட்சி பின்னரும் தொடர்ந்தது. பின்னால் திருமணம் நடந்து வயிற்றில் பிள்ளையோடு வந்து ஆசிரியை கற்பித்தார். திருமணம் முடிந்த பின்னால், வீட்டில் நடத்தும் டியூஷன் வகுப்புகளிற்கு வரச் செய்து ஒருவாறாகப் பாடத் திட்டத்தைப் பூர்த்தி செய்தார்.
அவரே வகுப்பாசிரியராக இருந்ததால், புதன்கிழமைகளில் எங்களுக்கு இறுதிப்பாடம் அவர் மேற்பார்வையில் கூட்டமாக நடைபெறும். பாடல்கள், பேச்சுக்கள், சிறுகதைகள் என்று எங்களது கலை உணர்வை ஊக்குவிக்கும் வகையில் வழி வகுக்கப்பட்டிருந்தது.
வயிற்றில் பிள்ளையோடு இருந்த ஆசிரியைக்கு குறும்புக்காரக் கியூறியஸ் அந்தக் கூட்டத்தில் பாட்டுப் பாடி மரியாதை செலுத்தினான், தெரிந்த இரண்டே இரண்டு வரிகளை வைத்து.
‘முத்துமகள் வந்துனக்கு பிறப்பா, அவ முத்தமிட்டா வந்து என்னை முறைப்பா’ என்று. சிரித்த முழு வகுப்போடும் அந்த ஆசிரியை சேர்ந்து சிரித்தார். கியூறியஸின் ஆசீர்வாதப்படியே அவருக்கு பெண் பிள்ளையும் பிறந்தது.
இப்படியாக கியூறியஸும் தனக்கு எழுத்தறிவித்த இறைவர்களுக்கு அவர்கள் அறிவித்த எழுத்தைக் கொண்டே மொட்டைக் கடிதம் எழுதினான். இதுதான் கியூறியஸ் களவும் கற்று மறந்த வரலாறு.
ஒரு வரியிலேயே தலையில் ஐஸ் வைத்து, நொக் அவுட்டாக்கும் வித்தையை நன்றாகத் தெரிந்து கொண்டவன் கியூறியஸ். ஆனாலும் வெறுமனே புகழ்ந்து யாரையும் பப்பாசி மரத்தில் ஏற்றும் பழக்கம் கியூறியஸ்க்கு கிடையாது.
அதைப் போல, உண்மை விளம்பிப் பெயரில் அவதூறுகளை எழுதும் வக்கிர புத்தியும் கிடையாது.
மனதுக்குப் பட்டதை எழுதுவான், நெற்றியில் ‘கண்’ வைக்கும் பயமின்றி! அதற்காகப் பேட்டை ரவுடிக் கணக்கில் சைக்கிள் செயினோடு அலைவதும் இல்லை!
இன்றும் தன்னை வாழ வைத்த அந்த தெய்வங்களை கியூறியஸும் என்றும் அன்புடனும் நன்றியோடும் நினைவு கூருவான்.
சிறுவயதில் தன் மீது அன்பு காட்டிய அனைத்து ஆசான்களுக்கும், இம்மை மறுமையின்றி கையாலும் பிரம்பாலும் விளாசித் தள்ளியவர்கள் உட்பட, கியூறியஸ் நன்றியுள்ளவனாகத் தான் இருக்கிறான்.
தன்னுடைய பதவிக்கால சகாப்தத்தில், ஒழுக்கமான ஒரு தலைமுறையை உருவாக்கிய பெருமையுடன், வானகம் சென்ற அதிபருக்கு மட்டும் கியூறியஸ் செலுத்தும் வணக்கம்…
‘தந்தையே, பாவியாயிருக்கிற என்னை ஆசீர்வதியும்’ என்பது தான்.
பூபாளம், புரட்டாதி 2012
You must be logged in to post a comment Login