Recent Comments

    பட்ட பின்னால் வருகிற ஞானம்

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி

    திருவெம்பாவைக்குப் பனிக்குளிரையும் பொருட்படுத்தாது, பக்தி தவிர்ந்த சகல காரியங்களுக்காகவும், இளைஞர் கூட்டம் கோவிலில் ஆஜராகுவது போல, புலிகள் மாநாட்டு மண்டபம் ஒன்றில் அதிகாலை செய்மதி :மூலம் அரங்கேற்றிய தேசியத்தலைவரின் மாவீரர் தின உரையைக் கண்டு கொண்டு இன்புற்றிருக்க, எலும்பைத் துளைக்கும் குளிருக்குள்ளும் காலைத் துயில் கலைத்து பெருந்தெருக்கள் கடந்து, மரமண்டைகளும் மாங்காய் மடையர்களும் ஏறி இழந்து போக, கியூறியஸ் வானொலியில் தேசியத் தலைவரின் பாராயணப் படிப்பைக் கேட்டுத் துன்புற்றிருந்தான். உரையைக் கேட்டதும் பின்னர் அது தொடர்பான படங்களைப் பார்த்ததும் கியூறியஸ்க்கு பற்றிக் கொண்டது இரண்டு பயங்கள் தான்.

    வன்னியில் மாவீரர் தினத்தில் ஆங்காங்கே கொடியேற்றிய கூட்டத்தில் பொட்டம்மானும் இளந்திரையனும் தப்பிப் போனது கியூறியஸ் மூளையில் பொறியாய் தட்டி, என்ன ஏதோ நடந்திருக்குமோ என வாட்டினாலும், கொல்கலாசாரத் தொலைக்காட்சியில் அவர்கள் திருத்தரிசனம் தந்திருக்கக் கூடும் என்பதால், கியூறியஸ் அது பற்றிய விசாரணைகளை மறந்தே விட்டான். இது பயமாக கியூறியஸின் தூக்கம் கலைத்து வாட்டாது போனாலும், தலைவர் பற்றிய பயம் கியூறியஸ்க்கு அதிகரித்துக் கொண்டே போனது.

    கழுத்துக்கு வந்தது கத்தி!

    பிரான்சில் பதினான்காம் லூயியின் கொடுங்கோல் ஆட்சியில் தேசியத்தலைவி மேரி அன்ரனற் 'பாணில்லாவிட்டால் என்ன, கேக் சாப்பிடலாம் தானே' என்று திருவாய் மலர்ந்தது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியப்பட்ட ஒரு 'மணி'மொழி. இந்த அதிகார துஷ்பிரயோகத்துடன் கூடிய அடக்குமுறை தாங்காமல் வெடித்த பிரெஞ்சுப் புரட்சி தான் இன்று வரை சகல மக்கள் புரட்சிகளுக்கும் வழிகாட்டிக் கொண்டிருக்கும் மக்கள் புரட்சி. இந்த மக்கள் புரட்சியில், மன்னனோடு சேர்ந்து கைது செய்யப்பட்ட 'துரோகி'களை கழுவிலேற்ற, அப்போது மின்கம்பங்கள் இல்லாத காரணத்தால், தலை கொய்வதற்காக வடிவமைக்கப்பட்டது தான் கில்லட்டின் எனப்படும் கத்தி. வட்டமாய் கழுத்தை வைத்திருக்கக் கூடியதான பலகையில் மேலிருந்து விழும் கத்தி தலையைத் துண்டாட, கீழ் உள்ள கூடையில் தலைகள் சேரும். இந்துக் கல்லூரி மைதானத்தில் மக்கள் கூட்டம் பார்த்திருக்க புலிகள் அடித்துக் கொன்றது போல, அன்றும் மக்கள் கூட்டம் சூழ நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

    தெரிந்தோ தெரியாமலோ, தனது தலையின் மேலும் கத்தி காத்திருக்கும் நிலை வந்திருக்கிறது என்பதை சிம்போலிக்காகக் காட்டவோ என்னவோ, இந்த மாவீரர் தினப் பேருரைக் குறுமேடையும், தலை வைப்பதற்கு வசதியான பாதி வட்ட வடிவில் காட்சியளிக்க, வட்டக்கச்சிக்கு வெற்றிகரமாகப் பின்வாங்கிய போது கழற்றிச் செல்லப்பட்ட தமிழீழ வைப்பகத்தின் கொடுக்கல் வாங்கல் ஜன்னல் ஒன்றை றிசைக்கிள் பண்ணி வடிவமைக்கப்பட்டிருந்ததானது, தலைவரின் முடிவும் இப்படித் தான் இருக்குமோ என்ற பயத்தை கியூறியஸின் அடிவயிற்றில் ஏற்படுத்தியிருந்தது.

    மாவீரர் திருவிழா விஞ்ஞாபனம்

    புலன் பெயர்ந்த தமிழ்க் கலியாண வீடுகளில் மாப்பிள்ளை கோட் போட்டு, ஐயர் மந்திரம் ஓதாத குறையாக, கேக் வெட்டும் பெருந்தமிழ்ப் பண்பாட்டுப் பாரம்பரியம் தோன்றியது போல, மாவீரர் தினப் பேருரையும் அதன் தாற்பரியத்தை இழந்து வெறும் சம்பிரதாயச் சடங்கு நிலைக்கு வந்து விட்டது.

    வழமையில், தலைவருக்கு பிறந்த நாள் பரிசு கொடுக்க, ஒரு பெரிய 'அட்டாக்' செய்வதுடன் திருவிழாக் கொடியேற்றம் ஆரம்பமாகும். முழுப் பிரபஞ்சமுமே வன்னிச் சூரிய தேவனை சுற்றிச் சுழல்வதாக உலகத்தைச் 'சுத்தும்' புலிகளும் தேசியத் தலைவரின் உரைக்காக சர்வதேசமும் காத்திருப்பதாக புலிகளின் ஊடகங்களில் திருவிழா விஞ்ஞாபனம் பிரசுரிக்க..

    பிறகென்ன? தினசரி தவில் நாயனக் கோஷ்டிகளும் இசைக்குழுக்களும் உபயகாரர் உபயத்தில் வெழுத்து வாங்குவது போல, புலன் பெயர்ந்த ஆய்வாளர்கள் வெழுத்து வாங்குவர். இவர்கள் எல்லாம் தலைவர் ஈழப் பிரகடனம் செய்யப் போகிறார், யுத்த நிறுத்தம் அறிவிக்கப் போகிறார் என்றெல்லாம் 'சுத்தி ஜீவி'க்க..

    வன்னிப் பூங்காவனத்தில் மஞ்சம் கொண்டிருக்கும் சூரிய தேவன் இரணைமடுக் குளத்தில் தீர்த்தமாடி, பங்கருக்குள் தேர் உலா வந்து, யாழ்ப்பாணத்துக் கிரிக்கட் போட்டிகளில் சுத்தி நின்று நடனமாடும் கூட்டம் போல, 'ஏலுமா? ஏலாது! ஏலுமெண்டால் பண்ணிப் பார்! ஏலாட்டி விட்டுட்டுப் போ' என்று பாலசிங்கம் எழுதிக் கொடுத்ததை ஒப்புவிப்பார்.

    தொடரும் துன்பம்

    துன்பம் அத்தோடு முடியாது. அங்கே தான் துன்பத்தின் ஆரம்பமே!

    லண்டனில் உள்ள செம்மறிகளுக்கு, தானே எழுதிய உரையை 'தலைவர் சொல்லுறார்' என்று மது உரைஞர் ஆபாச நடையில் விசிலடிகளுக்கும் மத்தியில் பொழிப்புரை செய்ய, புலன் பெயர்ந்த ஆய்வாளர்கள் தலைவர் ஏதோ கிரிகிஸ்தானிய மொழியில் உரை நிகழ்த்திய மாதிரி, தலைவர் 'கோடு போட்டுக் காட்டுகிறார்', 'சூசகமாய் தெரிவித்திருக்கிறார்' என்று சர்வதேச சமூகத்திற்கும், இந்தியாவுக்கும் மற்றும் புலன் பெயர்ந்த செம்மறிகளுக்கும் விளங்க வேண்டும் என்பதற்காக வெழுத்து முடிந்ததை, அக்கு வேறு, ஆணி வேறாகப் பிரித்து அலசுவார்கள்.

    அத்தோடு தற்போது இந்த மாவீரர் தினப் பாரம்பரியத்தில், தலைவரின் உரையை கியூறியஸ் வருடாந்தம் 'அறுப்பதும்', புலிகளின் வானொலிக்கு விமானங்கள் குண்டு போடுவதும் சேர்ந்து கொண்டிருக்கின்றன.

    ஆனால் இம்முறை நிலைமை கவலைக்கிடம்.

    சோறில்லையா? இதோ, பிறந்த நாள் கேக்!

    ஆடிய ஆட்டத்தில் கூத்தடிக்க முடியாத நிலை. வேறு பெயர்களில் பினாமிப் பெயர்களில் நடத்த வேண்டியது மட்டுமல்ல, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தைக் கூட கடைசி வரை இரகசியமாக வைத்திருக்க வேண்டிய நிலைமை.

    'முக்கி முயங்கியும்' மண்டையடி கொடுக்க முடியாத நிலை மட்டுமல்ல, புலிகளுக்கும் தலையில் பனங்காய் விழுந்த மண்டையடி ஏற்பட்டு சித்தப்பிரமை வந்திருக்கிறது. கொடியேற்ற உற்சவ கோலாகலங்கள் கொண்டாட முடியாத நிலை. கடைசி நாள் வரைக்கும் 'மாவீரர் தின உரை வருகிறது. பராக்! பராக்!' என்று கட்டியம் கூற முடியாமல் போய் விட்டது.

    இதற்குள் தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்று தலைவர் 'பணித்ததாக' முதல் நாள் மட்டுமே சேதி வருகிறது. ரஜனி, கமல் எல்லாம் ஈழத்தமிழர் அவல நிலை காரணமாக பிறந்த நாள் கொண்டாட வேண்டாம் என்று எப்போதோ அறிவித்த நிலையில், தலைவர் கடைசி நிமிடத்தில் தான் 'பணிக்கிறாராம்'.

    யுத்தத்தில் லட்சக்கணக்கில் மக்கள் இடம் பெயர்ந்து, தகரங்களும் ஓலைகளும் சர்வதேச உதவியாய் கிடைத்த விரிப்புகளும் கூரையாக, சேலைகள் சுவர்களாக அகதிகளாகி, மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல, இயற்கையும் சீற்றம் கொண்டு வெள்ளம் வந்து அவலப்படுகிறார்கள். விமானக் குண்டுவீச்சுகளுக்கும், புலிகளின் பிள்ளை பிடிகளுக்கும் மத்தியில் மத்தளம் போல இரண்டு பக்கமும் இடி படும் மக்கள் தங்கள் துயரங்களுக்கு மத்தியில் வேலைகளை விட்டு, தலைவருக்குப் பிறந்த நாள் கொண்டாட துடியாய் துடிக்கிறார்களாம்! தலைவர் அவர்களைத் தடுத்து நிறுத்துகிறாராம்!

    இந்த ஜோக்கை ஆரிட்டைப் போய் சொல்லி அழுவது?

    அன்றாட உணவுக்கு அரசாங்கத்திடமும் தமிழக மக்களிடமும் சர்வதேச சமூகத்திடமும் கையேந்தி நிற்கும் மக்களுக்கு, 'சோறு இல்லாவிட்டால் என்ன, தலைவரின் பிறந்த நாள் கேக்கை சாப்பிடலாம் தானே!' அழைக்கும் அன்ரனட் தனமான வக்கிர புத்தி புலிகளைத் தவிர வேறு யாருக்குத் தான் வரும்? இந்த வக்கிர புத்திக்கு தலையில் கில்லட்டின் கத்தி வராமல் வேறு என்ன தான் வரும்?

    உலகத்தை தொடர்ந்தும் சுத்தும் சூரிய தேவன்

    பங்கரில் பதுங்கியிருக்கும் தலைவர் இந்தப் பேருரைக் குறுமேடையில் ஆற்றிய உரையை கேட்ட போது, தலைவர் தன்னைப் பின் தொடர்ந்து வரும் செம்மறிகளின் ஞாபக சக்தியிலும் பகுத்தறிவிலும் வைத்திருக்கும் அபாரமான நம்பிக்கை தெளிவாகவே தெரிந்தது.

    இம்முறை உரை இருக்கட்டும். சென்ற வருடம் என்ன சொன்னார் என்பதைப் பார்ப்போம் ஆயின்.. தலைவர் சென்ற வருடம் ஆற்றிய உரையை வாசித்த போது, கியூறியஸ் தன்னை அறியாமலேயே வாய் விட்டுச் சிரித்து விட்டான்.

    'சுழன்றடிக்கும் சூறாவளியாக, குமுறும் எரிமலையாக, ஆர்ப்பரித்தெழும் அலைகடலாக, எமது மக்கள் வரலாற்றிலே என்றுமில்லாதவாறு ஒரே தேசமாக, ஒரே மக்களாக ஒரே அணியில் ஒன்று திரண்டு நிற்கின்றனர்... எல்லைக்காப்புப் படைகளாக, துணைப்படைகளாக, விசேட அதிரடிப்படைகளாக எழுந்து நிற்கின்றனர். போர்க்கோலம் கொண்டு, மூச்சோடும் வீச்சோடும் போராடப் புறப்பட்டு நிற்கின்றனர்... நீண்ட கொடிய சமர்களில் களமாடி அனுபவமும் முதிர்ச்சியும் பெற்ற முன்னணிப் படையணிகளோடும் பன்முகத் தாக்குதல்களையும் நிகழ்த்தவல்ல சிறப்புப் பயிற்சி பெற்ற சிறப்புப் படையணிகளோடும் நவீன படைக்கலச் சக்திகளுடனும் பெரும் போராயுதங்களுடனும் ஆட்பலம், ஆயுத பலம், ஆன்ம பலம் எனச் சகல பலத்துடனும் நவீன இராணுவமாக வளர்ந்து நிற்கிறோம்' என்று பீற்றிக் கொண்டதை இன்று வாசிக்கும் போது சிரிப்பு வராமல் என்ன செய்யும்?

    அப்புறமாய்.. 'எதிரியின் யுத்த நோக்குகளையும் உபாயங்களையும் முன்கூட்டியே தீர்க்கதரிசனமாக அனுமானித்தறிந்தே எ(த)மது போர்த்திட்டங்களை வகுக்கும்' இந்த தீர்க்கதரிசி கடந்த வருட உரையில் தொடர்கிறார். 'கிழக்கிலும்... தற்காப்புத் தாக்குதல்களை நடத்தியவாறு தந்திரோபாயமாகப் பின்வாங்கினோம்... சிங்கள இராணுவம் நாம் விரித்த வலைக்குள் வகையாக விழுந்து பெரும்தொகையில் படையினரை முடக்கி, ஆளில்லாப் பிரதேசங்களை ஆட்சி புரிகிறது'.

    புலிகள் விரித்த வலைக்குள் மாட்டிக் கொண்ட சிங்கள அரசு கிழக்கில் தேர்தலை நடத்திய பின்னால், ஆங்காங்கே அம்பாறையில் நடக்கும் தாக்குதல்கள் தவிர இன்று வரைக்கும் புலிகள் இந்த 'அகலக் கால் நீட்டலுக்கு' எதுவுமே செய்யவில்லை.

    '... நடாத்திய எல்லாளன் நடவடிக்கை சிங்கள இராணுவப் பூதத்தின் உச்சந்தலையில் ஆப்பாக இறங்கியிருக்கிறது. இந்த மண்டையடி சிங்களம் கட்டிய கற்பனைகள், கண்டு வந்த கனவுகள் அத்தனையையும் அடியோடு கலைத்திருக்கிறது. அனுரதபுர மண்ணில் எம்மினிய வீரர்கள் ஏற்படுத்திய பேரதிர்விலிருந்து சிங்களத் தேசம் இன்னும் மீண்டெழவில்லை.'

    இப்படியாக, படைப்பலங்களோடு வளர்ந்து நின்று, மண்டையடி அடித்த பின்னால் தான், 'பேரதிர்விலிருந்து மீண்டெழுந்து வந்து' மன்னாரில் தொடங்கி கிளிநொச்சி வரைக்கும் இராணுவம் வந்து நிற்கிறது. மாவீரர் தினத்திற்கு இராணுவம் கிளிநொச்சியில் கொடியேற்றுமா என்ற பயம் புலி ஆதரவாளர்களின் வயிற்றில் கலக்கத்தை ஏற்படுத்தும் நிலை இருந்தது என்பதே உண்மை. இராணுவ பூதத்தின் உச்சந்தலையில் ஆப்பு அடித்தவர், ஆப்பிழுத்ததால் வந்த வினை இது.

    இப்படியாக சென்ற வருடம்.. 'உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவரையும் தமிழீழ விடுதலைக்காக உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுமாறு வேண்டிக் கொண்டு'.. 'அந்த மாவீரரின் இறுதி இலட்சியம் நிறைவு பெறும் வரை தொடர்ந்து போராடுவோம்' என்று முடிந்த சென்ற வருட பேருரையைப் பற்றி கியூறியஸ் எழுதிய போது 'மேலோங்கி யாழ்ப்பாணத்தின் மேலங்கி களையப்பட்டு, கிழக்குக் கரை வேட்டியும் உரியப்பட்டு, வன்னிக் கோவணம் எப்போதும் உருவப்படலாம் என்ற நிலையில், தமிழீழம் என்ற பட்டுத் துகில் வியாபாரத்திற்கு தலைவர் புலம் பெயர்ந்தவர்களை அழைத்திருக்கிறார்.' என்று எழுதியிருந்தான்.

    இன்று மண்டையடிக்கான முயற்சிகளும் தோல்வி அடைந்து, வன்னிக் கோவணம் உருவப்பட்ட நிலையில், தலைவர் இந்த வருடம் 'என்ன சொல்ல வாறார்?' என்பதே எங்கள் எதிர்பார்ப்பாக இருந்தது.

    இந்நாள் நன்நாள், ஒரு பொன்நாள்!

    வழமை போல 'இந்நாள் நன்நாள், பொன்நாள்' என்று மாவீரர்களுக்குப் புகழ் பாடுவதுடன் உரை ஆரம்பமானது. பின்னே என்ன? தலைவர் என்ன உண்மையா சொல்ல முடியும்?

    தன்னுடைய பிள்ளைகளை வெளிநாட்டில் படிப்பித்துக் கொண்டே, பாடசாலைகள் மற்றும் அனாதை இல்லங்களில் உள்ள சிறார்களைக் கடத்திப் 'பிள்ளை பிடித்து' தமிழ் மக்களின் விடுதலை என்பதை விட, தான் வாழ்நாள் பூராவும் தலைவனாக இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக 'பலி கொடுக்கும்' உண்மையை பகிரங்கமாகச் சொல்லவா முடியும்? தமிழ் மக்களுக்கு கிடைத்த சமாதானத்திற்கும் தீர்வுக்குமான சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையும் வேண்டுமென்றே கெடுத்து, தன்னுடைய தலைமைப் பதவிக்கு பங்கம் வரக் கூடாது என்பதற்காக தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கான பாதிப்புகள் பற்றிய கவலை இன்றி எந்தக் கொலையையும் செய்யத் தயங்காத தலைவர் இதுவரை கொடுத்த இருபத்தையாயிரம் பலி கொடுப்புகளையும் பல்லாயிரக்கணக்கான பலி எடுப்புகளையும் இத்தோடு நிறுத்திக் கொள்ளப் போவதில்லை. தான் உயிரோடு இருக்கும் வரைக்கும் அவர் இந்தப் பலி கொடுப்புகளையும் எடுப்புகளையும் தொடரத் தான் போகிறார்.

    இதுவரை காலமும் தமிழ் மக்களுக்கான விடுதலைக்கான போராட்டத்திற்காக தாங்களாகவே விரும்பி இணைந்து கொண்ட பல்லாயிரக்கணக்கானோரைக் கொன்றும் நாட்டை விட்டோட்டியதுமான பெருமை தலைவரையே சாரும். அதில் இன்னும் பலர் புலிகளில் மாவீரர்களாக, மிஞ்சியுள்ளவர்கள் தற்போதைய தளபதிகளாக உள்ளனர்.

    மிச்சமாய் யுத்த முனைக் களத்தில் இன்று போராடும் சகலரும் புலிகளால் பலவந்தமாய் பிடிக்கப்பட்டுப் பயிற்சி கொடுக்கப்பட்டோரும், புலிகளால் வலிந்து திணிக்கப்பட்ட யுத்தத்தால் ஏற்பட்ட பொருளாதார, அன்றாட வாழ்க்கை நலிவினால் தவிர்க்க முடியாமல் சேர்ந்து கொண்டவர்கள் மட்டுமே. இன்று போரிடுபவர்கள் தாங்களாகவே விரும்பி புலிகளுடன் சேர்ந்து கொண்டார்கள் என்று பீற்றிக் கொள்பவர்கள் வெளிநாட்டில் உள்ளவர்கள் மட்டுமே.

    சமீபத்தில் கியூறியஸைச் சந்தித்த ஈழத்திலிருந்து வந்த வணக்கத்துக்குரியவர் மனம் வெந்து சொன்னார்... கனடாவில் உள்ளவர் ஒருவர் சொன்னாராம்... 'பின்ன என்ன? அவங்கள் சும்மா கேட்டால் போய் சேருகினமே? துவக்கைக் காட்டி எண்டாலும் அவங்கள் சேர்க்கத் தானே வேணும்!' என்று. இந்த வக்கிர புத்தி தான் புலன் பெயர்ந்தவர்களுடையது.

    இப்படியாகப் பலவந்தமாகக் கடத்தப்பட்டு பலி கொடுக்கப்படுபவர்களை மாவீரர்கள் என்று அழைத்து 'தாயக விடுதலைக்காக தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை. எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புகளை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்' என்று 'புலுடா விட்டுப் பேய்க்காட்டத் தானே' வேண்டும். தான் உயிரோடு இருக்கும்வரைக்கும் இப்படித்தான் இந்த புலன் பெயர்ந்த கூட்டத்தைப் பேய்க்காட்ட முடியும் என்ற உண்மை தலைவருக்கு நன்றாகவே தெரிந்ததால், 'ஈகைக்சுடர், மெளன அஞ்சலி' என்றெல்லாம் அதை வருடாந்த சம்பிரதாயமாகவே ஆக்கி விட்டிருக்கிறார்.

    தவறே இழைக்காத மகா பரமாத்மா!

    வழமை போல, தன் தவறுகளுக்கான பழியை, தன்னைத் தவிர உலகத்தில் உள்ள சகலத்தின் மீதும் போடும் பாரம்பரியத்தை வழமை போல தொடரும் தலைவர் யுத்தத்திற்கான காரணம் தன்னுடைய மாவிலாறு நீர் தடுப்பு, இராணுவத் தளபதி மீதான தாக்குதல்கள் போன்ற 'சேஷ்டைகள்' என்பதை மறைத்து, 'தமிழரின் தேசிய வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர் தேசத்தையே சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் அடிமைப்படுத்துவது தான் சிங்கள அடிப்படையான நோக்கம்' என்று, சிங்கள அரசு காரண காரியமில்லாமல் யுத்தத்தை ஆரம்பித்தது என்று பழியைப் போடுகிறார்.

    'உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இன அழிப்புப் போருக்கு முண்டு கொடுத்து நிற்க, தனித்து நின்று எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று எமது மக்களின் விடிவுக்காக போராடி வருகிறோம்' என்று முழு உலகத்திலும் பிழை சுமத்தும் இவர், சிங்கள அரசின் எதிர்ப்பையும் மீறி ஆதரவு நல்கிய நோர்வே முதலான நாடுகள் கூட வெறுப்படைவதற்கு காரணமான தனது திருக்கூத்துக்களை வசதியாக மறந்து விடுகிறார்.

    'ஆரம்பத்தில் அமைதியாக மென்முறை வடிவில், ஜனநாயக வழியில் அமைதிவழிப் போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதி கேட்டுப் போராடினார்கள். அரசியல் உரிமை கோரி தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களை சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத் தனமாக ஒடுக்க முனைந்த'தால் தான் தன்னுடைய விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது என்று சொல்லும் தலைவர், அவ்வாறு அமைதி கேட்டுப் போராடிய தலைவர்களை 'ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாகக்' கொன்றதும், தமிழ் மக்களை ஒடுக்கியதும் தன் தலைமையிலான இயக்கம் தான் என்ற உண்மையையும் சொல்லியிருந்தால் அவரது நேர்மையை நாங்கள் பாராட்டியிருக்க முடியும்.

    'தவிர்க்க முடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக் கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சனைக்கு போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வு காணவே விரும்புகிறோம்.. சிங்கள அரசுகளின் விட்டுக் கொடுக்காத கடும் போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவ வழித் தீர்விலான நம்பிக்கைகளுமே இந்த தோல்விகளுக்குக் காரணம்' என்று, தான் 'முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்டதாக' என முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்து கயிறு திரிப்பதற்கு, பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஆயுதம் இறக்கியதும் பேச்சுவார்த்தையை இழுத்தடித்ததும் பற்றி எல்லோருமே மறந்திருப்பார்கள் என்ற எண்ணம் தானே காரணம்.

    சமாதான ஒப்பந்தத்தை அதிகளவில் மீறியது புலிகளே என்று கண்காணிப்பாளர்கள் சொல்லியதை மறந்து 'ஆறு ஆண்டுகளாக தொடர்ந்த பேச்சுக்களில் நேர்மையுடனும் பற்றுறுதியுடனும் பங்கு கொண்டோம். ஆயுதப்படைகளின் அத்துமீறிய செயல்களையும் ஆத்திரமூட்டும் சம்பவங்களையும் பொறுத்துக் கொண்டு அமைதி பேணினோம்' என்று 'ஒண்ணும் தெரியாத பாப்பா'வாகிறார்.

    பேச்சுவார்த்தை நடக்கும் போதே தான் கப்பல் கப்பலாக ஆயுதம் இறக்கியதையும், விமான ஓடுபாதை அமைத்ததையும், மக்கள் படை என்ற பெயரில் பொதுமக்களுக்குப் பயிற்சி கொடுத்தும் சிறுவர்களைக் கடத்திப் படையில் சேர்த்ததை மறைத்து 'பேச்சு என்ற போர்வையில் சிங்கள அரசு தமிழர் தேசம் மீது ஒரு பெரும் படையெடுப்பிற்கான ஆயத்தங்களைச் செய்தது.. பெருந்தொகையில் ஆட்சேர்ப்பு நிகழ்த்தி, ஆயுதங்களைத் தருவித்து, படையணிகளைப் பலப்படுத்தி... தமிழர் தேசம் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்க, சிங்கள தேசம் போர்த் தயாரிப்பு வேலைகளிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்தது' என்று நன்றாகத் தான் சுத்துகிறார்.

    கதிர்காமர் கொலை உட்பட யுத்த நிறுத்தத்தை பல தடவைகள் மீறியது முதல், புலன் பெயர்ந்த கட்டாக்காலிக் குண்டர் கூட்டம் மூலம் மக்களை மிரட்டி கடத்தி பணம் பறித்தது வரையிலான சேஷ்டைகளைப் பொறுக்க முடியாமல் சர்வதேச சமூகம் புலிகளைத் தடை செய்ததை 'தாம் வாழும் நாடுகளின் அரசியல் சட்ட விதிகளுக்கு அமைவாக, நீதி நெறி வழுவாது எம்மக்கள் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளைக் கொச்சைப்படுத்தி... தமது தாயக உறவுகளைக் காக்க எமது மக்கள் முன்னெடுத்த மனித நேய உதவிப் பணிகளைப் பெரும் குற்றவியற் செயல்களாக அடையாளப்படுத்தி, தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைது செய்து சிறைகளில் அடைத்து அவமதித்தன' என்று குமுறுகிறார்.

    மரண தண்டனை என்பது மனித நேயத்திற்கு விரோதமானது என்று தடை செய்துள்ள இந்த நாடுகளில் சட்டத்தை மீறியதற்காக வெறும் சிறையில் அடைத்ததற்கு இந்தக் குமுறல் குமுறும் இவர், துரோகிகள் என்றெல்லாம் சொல்லி, நினைத்த மாதிரிப் போட்டுத் தள்ளும் போது மட்டும் என்ன நினைப்போடு இருக்கிறாராம்? ஜனநாயக ரீதியில் மாற்றுக்கருத்துக்களைக் கொண்டிருந்தவர்களை சிறையில் வைத்து சித்திரவதை செய்தும், காட்டுக்குள் வைத்து சுட்டெரித்தும் விட்டு, 'இந்த தமிழின உணர்வாளர்கள்' புலன் பெயர்ந்த மண்ணிலும் கடத்தி சித்திரவதை செய்து கப்பம் வாங்கியதை மறைத்து, இன்று சட்டத்தரணிகளும் நீதிமன்றங்களும், உண்ணாவிரதத்திற்கான உரிமையும் என சகல உரிமைகளுடனும் சிறை சென்ற செம்மல்களுக்காய், வக்காலத்து வாங்குகிறார்.

    முஸ்லிம்களை உடுத்த உடையோடு விரட்டி இனச்சுத்திகரிப்புச் செய்தவர் இன்று இன அழிப்புப் போர் நடக்கிறது என்று கூக்குரலிட்டவுடன் சர்வதேசம் 'ஒப்புக்குத் தானும் இதனைக் கண்டிக்கவில்லை, கவலை கூடத் தெரிவிக்கவில்லை' என்று மனம் நொந்து கொள்கிறார்.

    'தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை வழியில் அமைதி வழியில் நீதி வேண்டி நின்ற எம் மக்களிடம் சிங்கள தேசம் தான் போரைத் திணித்திருக்கிறது'. ஆகா! கேட்கக் கேட்க காது இனிக்கிறது!

    இந்தியாவை அன்போடு வேண்டிக் கொண்டு!

    இதெல்லாம் முடிந்ததும் வருகிறது இந்தியா பற்றிய கவலை.

    சென்ற வருட உரையில் 'அன்று இந்தியா தனது தெற்கு நோக்கிய வல்லாதிக்க விரிவாக்கமாக தேசியப் பிரச்சனையில் தலையீடு செய்தது. தமிழரது சம்மதமோ ஒப்புதலோ இன்றி, சிங்கள அரசுடன் கூட்டுச் சேர்ந்து ஒரு ஒப்பந்தம் செய்தது. தீர்வு என்ற பெயரில்.... எலும்புத் துண்டு போன்ற அரைகுறைத் தீர்வை இந்தியா அன்று எம்மக்கள் மீது கட்டி விட முயற்சித்தது. ஒரு லட்சம் இராணுவத்தினரின் பக்க பலத்தோடும்... எட்டப்பர் குழுக்களின் ஒத்துழைப்போடும் அந்த ஒப்பந்தத்தை செயற்படுத்தி விட இந்தியா தீவிரமாக முயற்சி செய்தது.. அன்று இந்தியா இழைத்த தவறை இன்று சர்வதேசமும் இழைத்து நிற்கிறது' என்று கூறியவர், இன்று 'எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும் தேசிய நலன்களுக்கோ, அவற்றின் புவிசார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை... பங்கமாக அமையவில்லை... நாம் திட்டமிட்டு எந்தவொரு தேசத்திற்கு எதிராகவும் நடந்து கொண்டதுமில்லை... எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம்... நட்புறவுப் பாலத்தை வளர்த்து விடவே சித்தமாக இருக்கிறோம்.... இந்தியப் பேரரசுடனான அறுந்து போன எமது உறுவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறோம்... இந்தியாவை நாம் ஒரு போதும் பகைச் சக்தியாகக் கருதியதில்லை... இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடையிலான நல்லுறவிற்கு பெரும் இடைஞ்சலாக எழுந்து நிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண்டிக் கொள்ளு'கிறார்.

    பட்ட பின்னால் வந்த ஞானம்!

    அட, ஒரு வருடம் தலைவர் சிந்தனையில் எப்படி மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது? இந்த மாற்றம் எப்போதோ ஏற்பட வேண்டும் என்று தானே ஒரு கூட்டம் இத்தனை காலமாய் கத்திக் கொண்டிருக்கிறது? இதெல்லாம் ராஜீவ் கொலை துன்பியல் சம்பவத்தை நடத்திய போதும், நான்காவது இராணுவத்தை விரட்டியதாக பீற்றிக் கொண்ட போதும் தெரிந்திருக்க வேண்டிய விடயங்கள்.

    இன்றைய மனமாற்றத்தின் காரணம், மகிந்த கொடுத்த மண்டையடி அன்றி வேறு காரணம் தான் என்ன? அந்த மண்டையடியில் சித்தப்பிரமை தெளிந்து ஞானோதயம் பிறந்திருக்கிறது.

    அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான் என்பார்கள்.

    யாழ்ப்பாண பாஷையில் சொன்னால்...

    தம்பிக்கு இப்பதான் அறிவு வந்திருக்குது!

    சென்ற மாவீரர் தின உரை பற்றி தாயகத்தில் கியூறியஸ் எழுதிய போது.. ''மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா' என்பது போல, தலைவர் 'ஈழம் தான் முடிவு' என்று கட்டிப் பிடித்துக் கொண்டிருப்பதை, புலிகளும் அவர்களின் ஊடகங்களும் வேண்டுமானால், 'அசைக்க முடியாத கொள்கைப் பிடிப்பு' என்று பெருமிதப்படலாம். ஆனால் கால மாற்றத்தில் தங்களை மாற்றிக் கொள்ளாதவர்கள் கால ஓட்டத்தில் அடிபட்டுப் போனதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.

    இவற்றைப் புரிந்து கொள்ளாமல், ஒரு கூட்டம் இப்போதும் புலிகளுக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கிறது.

    இவர்களுக்கு எல்லாம், எங்கள் முன்னோர் தங்கள் அனுபவத்தால் விட்டுச் சென்ற பழமொழி ஒன்றை ஞாபகம் ஊட்டுவது நல்லது.

    கெடுகுடி சொல் கேளாது!' என்று குறிப்பிட்டிருந்ததை இங்கே ஞாபகமூட்டுவது பொருத்தமாயிருக்கும்.

    அதே போல, இம்முறையும் எங்கள் முன்னோர் பழமொழி ஒன்றை ஞாபகப்படுத்துவது நல்லது.

    பட்ட பின்னால் வருகிற ஞானம் யாருக்கும் உதவாது!

    இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியாவின் அனுசரணையும் ஆசீர்வாதமும் இல்லாமல் தமிழ் மக்கள் தங்களுக்கு சாதகமான தீர்வு ஒன்றைப் பெற முடியாது என்பது சிந்திக்கத் தெரிந்த எல்லாருக்குமே தெரியும். அவ்வப்போது சித்தம் தெளிகின்ற போது, சம்பந்தன் முதல் பிரேமச்சந்திரன் வரைக்கும் இது குறித்து பிதற்றுவது உண்டு. அந்தப் பிதற்றலின் போதும் புலிகளை நோகாமல் 'புலிகளை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்' என்று கூறி, வன்னி யாத்திரையில் வாங்கிக் கட்டிக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்து கொள்வதுண்டு.

    இந்த உண்மை தேசியத் தலைவருக்கு எந்தக் காலத்திலும் விளங்கியதில்லை. அதற்கு காரணங்கள் உண்டு.

    கியூறியஸ்க்கு மிகவும் பிடித்த இறை வேண்டுதலும் தத்துவமும் இரண்டு.

    'இறைவா, என்னால் முடிந்தவற்றைச் சாதிக்கக் கூடிய துணிச்சலையும், என்னால் முடியாதவற்றை அறிந்து கொள்வதற்கான ஞானத்தையும் எனக்குத் தா!' என்பது தான் அந்த இறை வேண்டுதல். வாழ்க்கைப் போராட்டத்திலோ, விடுதலைப் போராட்டத்திலோ வெற்றி பெறுவதற்கான அடிப்படை இது தான் என்பது கியூறியஸின் நம்பிக்கை.

    மற்றத் தத்துவம் சாக்கிரட்டிஸின் 'உன்னையே நீ அறிவாய்!' என்ற தத்துவம். மேலோட்டமாய் பார்த்தால், வெறுமையானது போல இருக்கும் இந்த தத்துவம் ஆழமானது. மனிதன் தன்னை அறிந்து கொள்வது தான் அவனது அறிவின் தேடலின் உச்சம். இது மேற்படி இறை வேண்டுதல் போன்ற ஒன்று தான். தன்னால் முடிந்தது, முடியாதது, இந்த உலகில் தான் படைக்கப்பட்டதன் நோக்கம் என்ன என்று பல்வேறு தளங்களில் மனிதன் சிந்தித்து ஆன்ம விடுதலை பெறுவதற்கான கேள்வி தான், நான் யார்? என்பது.

    இந்த சோக்கிரட்டிஸ் பற்றி தேசியத் தலைவரும் மற்றும் படிக்காத பாமரர்களும் அறிந்திருக்க மாட்டார்கள் என்பதால் தான், புரட்சித் தலைவர் 'உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம், உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்' என்று பாடிச் சென்றிருக்கிறார்.

    எம்.ஜி.ஆர் கூட அதை வாழ்ந்து தான் காட்டியிருக்கிறார். தன்னுடைய பலம் தன்னுடைய பெயர் என்பதை வைத்துக் கொண்டு மக்கள் பலத்தை திரட்டிக் கொண்டது மட்டுமல்லாமல், தன்னுடைய பலவீனம் அறிவு என்பதை சரியாகப் புரிந்து கொண்டு, சரியான அறிவாளிகளையும் நிர்வாகிகளையும் கைக்குள் வைத்துக் கொண்டதால் மூன்றாம் வகுப்புப் படிப்புடன் மட்டுமே ஒரு மாநிலத்தை ஆள முடிந்தது. எங்கே மோத வேண்டும், எப்போது சமரசம் செய்ய வேண்டும் என்பதை நன்றாக அறிந்து கொண்டதால், தன்னுடைய அரசியல் எதிரிகளை ஓரம் கட்டியது மட்டுமல்லாமல், இந்திரா ஆட்சியில் சமரசங்களுடன் காலத்தை ஓட்ட முடிந்தது. இதனால் தான், அரசியலிலும் சினிமாவிலும் தன் எதிரியாக இருந்த சிவாஜியுடன் ஒரே அரசியல் மேடையில், சிவாஜி இந்திரா காங்கிரஸில் இருந்த போது, 'நாங்கள் ஒரே இலையில் சாப்பிட்டவர்கள்' என்று வரலாற்றின் ஏட்டைப் புரட்ட முடிந்தது.

    அந்த தன்னம்பிக்கை காரணமாகத் தான் மரணப்படுக்கையில் இருந்த போதும், வெற்றி பெற முடிந்தது.

    ஆனால் தேசியத் தலைவர்?

    அவருக்கு தன்னுடைய பலத்தையோ பலவீனத்தையோ புரிந்து கொள்ள முடியாதபடிக்கு, இந்த புலன் பெயர்ந்த கூட்டம் அவரைப் 'பப்பா மரத்தில் ஏற்றி விட்டிருக்கிறது'. இந்த ஹீரோக்கள் என்பவர்கள் எல்லாம் மற்றவர்களால் ஒரு வகையில் தள்ளப்பட்டு, திரும்பி வந்தால் கௌரவக் குறைச்சல் என்று, முடியாமல் முன்னே சென்றவர்கள் தான். அதில் வெற்றி பெற்றாலும் வீரன் என்ற கௌரவம், உயிரை இழந்தாலும் மாவீரன் என்ற கௌரவம்.

    'வைரவருக்கு நாய் வாய்ச்ச மாதிரி' உங்களுக்கு நான், எனக்கு நீங்கள் என்று, தேசியத் தலைவருக்கு புலன் பெயர்ந்த கூட்டம், பு.பெ.கூட்டத்திற்கு தே.தலைவர் என்று வாய்ச்சிருக்கிறார்கள். இந்த விசிலடிச்சான் கூட்டம், வாத்யார் முதலில் தோன்றும் போது, திரைக்கு சில்லறை எறியும், அடி வாங்கும் போது 'இந்தா அடிக்கப் போறார்' என்று காத்திருந்து, இரத்தத்தை துடைத்த பின்னால் திருப்பி அடிக்கும் போது விசிலடிக்கும். ஒரு போதும், பாய்ந்து வந்து நம்பியாரிடம் இருந்து வாத்யாரைக் காப்பாற்றாது.

    இந்தப் புலன் பெயர்ந்த கூட்டமும் இவ்வாறே, இதுவரை காலமும் திரைக்கு சில்லறை எறிந்து, இப்போது அடி வாங்கும் போது, 'இந்தா உள்ளுக்கை வரவிட்டு அடிக்கப் போறாங்கள்' என்று காத்திருக்கிறதே தவிர, ஒரு போதும் பாய்ந்து வந்து தலைவரை மகிந்தவிடம் இருந்து காப்பாற்றப் போவதில்லை. இந்தக் கூட்டத்தை நம்பித் தான் தலைவர் 'தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்' கொள்கிறார்.

    சில்லறை தானே! இந்தக் கூட்டத்திற்கு அது பிரச்சனையேயில்லை.

    இந்தக் கூட்டம் தன்னை தேசியத் தலைவர், சூரிய தேவன் என்றெல்லாம் புகழும் போது அதை நம்பியது தான் தலைவர் விட்ட மகா தவறு. தான் கவிதை எழுதும் போதெல்லாம் தலைவரிடம் காட்டி பாராட்டுப் பெறுவது தான் தன் பிறவிப் பயன் என்று புதுவையார் சொன்னால், அதற்காக தலைவர் தன்னை ஒரு இலக்கியவாதி என்றோ, கவிப் பேரரசு என்றோ நினைத்துக் கொள்ள முடியுமா? புதுவையார் அப்படித் தான்! மீசை வைத்தவர்களைக் கண்டால் அவருக்கு குஷி. முன்பு ஸ்டாலினைப் பாடினார். இப்போது தலைவரைப் பாடுகிறார்.

    ஆனால், கேட்பவருக்கான மதி என்ன? தன்னை அவர் அறிந்திருக்க வேண்டாமா?

    எம்.ஜி.ஆருக்கு பாமரர்கள் ரசிகர்கள், இரத்தம் விற்றுப் படம் பார்க்கிறார்கள் என்றால், அது எம்.ஜி.ஆரின் திறமை அல்ல, பாமரர்களின் முட்டாள்தனம்!

    அதைப் புரிந்து கொண்டதால் வாத்யார் தனக்குச் சாதகமாய் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் தலைவர், இந்தக் கூட்டம் உண்மை சொல்வதாக நம்பிக் கொண்டு விட்டார்.

    தலைவருக்கு ஒரு இனத்தை வழிநடத்தக் கூடிய அளவுக்கு கல்வியறிவு இருப்பதாக இந்த புலன் பெயர்ந்த கூட்டத்தைத் தவிர வேறு யாரும் நம்பவில்லை. சட்டி இருந்தால் தானே அகப்பையில் வரும், தலைவர் என்ன வைச்சுக் கொண்டா வஞ்சகம் பண்ணுகிறார் என்று தான் விசயம் தெரிந்தவர்கள் நினைத்துக் கொண்டார்கள். கல்வி தான் எங்கள் சொத்து என்று பீற்றிக் கொண்ட படித்த யாழ்ப்பாணத்திற்கு, இந்தக் கல்வியறிவோடு ஒருவர் தேசியத் தலைவர் ஆக முடிந்தது என்றால், அதற்கு இந்தக் கூட்டத்தின் பாமரத்தனம் தானே காரணம். எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த தலைவர், ஈழப் போராட்டத்திற்கான காரணம் தரப்படுத்தல் என்று வர்ணித்த போது பெருமை கொண்ட படித்த யாழ்ப்பாணம் அல்லவா!

    சர்வதேச ஊடகங்கள் ruthless and reclusive பயங்கரவாதி என்று தலைவரை வர்ணிக்க, புலி ஊடகங்கள் தான் தலைவரின் இராணுவ நுட்பத்தை சர்வதேசம் போற்றுகிறது என்றும், தலைவரின் அரசியல் நகர்வுகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் சர்வதேசம் திணறுகிறது என்றும் கதை அளந்து கொண்டிருந்தன. தன்னுடைய பிரசாரத்தையே தான் நம்பியதால் தானே இவ்வளவு வினையும்.

    தன்னுடைய கள்ளக்கடத்தல் பாரம்பரியத்தில், சட்டவிரோதமான செயற்பாடுகளும் துரோகத்திற்கு பரிசான கொலைகளும் தான் தன் அரசியல் என்று நம்பிக் கொண்டிருந்த தலைவருக்கு சர்வதேசத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் நெறிமுறைகளை புரிந்து கொள்ளவே முடியவில்லை. 'மண்டையில் போட்டு ஈழத்தை அடிச்சுப் பறிப்பம்' என்பதைத் தவிர மற்றதெல்லாம், பாலசிங்கத்தின் சித்து விளையாட்டுக்கள் தான்.

    இந்தியாவோடு மோதிக் கொண்டு பிரேமதாசாவோடு கை கோர்த்ததை 'ராஜதந்திர நகர்வு' என்றும், யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டப்பட்டு 13 வருடம் கானகம் சென்றதை 'தற்காலிக பின்னடைவு' என்றும் ராஜீவ் கொலையை 'துன்பியல் சம்பவம்' என்றும் சுத்தியது பாலசிங்கமே அன்றி, தலைவர் அல்ல. தலைவர் தன் புத்திக்கு எட்டியபடி நடத்திய நடவடிக்கைகளுக்கு பாலசிங்கம் அரசியல் விளக்கம் சொன்னார் என்பதற்காக, தலைவரின் நடவடிக்கைகள் அரசியல் நடவடிக்கைகள் என்று யார் சொன்னது?

    தன்னை அறிந்து கொள்ளாததால், தன் பலத்தைப் புரிந்து கொள்ளாததால் இந்தியாவோடு மோதிக் கொண்டு, அடித்த வாய்ச்சவடால்களுக்கு, இப்போது 'அன்போடு வேண்டிக் கொள்ளும்போது' வெட்கமாயில்லை. அன்று ராஜீவின் உயிரைப் பறித்த போது, இன்று உயிர்ப்பிச்சை கேட்கும் நிலை வரும் என்பதை இந்த தீர்க்கதரிசியால் உணர்ந்து கொள்ள முடியாமல் போனதன் காரணம் தன்னை அறிந்து கொள்ளாதது தானே!

    எம்.ஜி.ஆர் திறமைசாலிகளைத் தன்னோடு வைத்துக் கொண்டது போல, தலைவர் யாரை வைத்திருந்தார்? கல்வியறிவுக் குறைவு காரணமாக தன்னம்பிக்கையும் இல்லை. இதனால் 'தன்னைக் கவிழ்த்து விடுவார்கள்' என்ற பயத்தில் யாரையும் நம்பவும் தயாரில்லை. புலிகளோடு ஒட்டிக் கொண்டவர்கள், பாலசிங்கம் முதல் இந்த ஆய்வாளர்கள் வரைக்கும், சுயநலப் பம்மாத்துக் கூட்டம் தானே. இந்த ஜால்ராக்களின் புகழுரைகளை நம்பியதால் தானே இன்று படுகுழிக்குள் விழுந்து போய் கிடக்கிறார். சர்வதேச ரீதியாக எமது பிரச்சனையை எடுத்துச் செல்லக் கூடிய தலைவர்கள், மக்களை அரவணைத்து போராட்டத்தை முன்னெடுக்கக் கூடிய மாற்றியக்கத் தலைவர்கள் எல்லாரையும் போட்டுத் தள்ளி, விடுதலைக்காக உழைக்க கூடிய நேர்மையாளர்களை எல்லாம் நாட்டை விட்டோட்டியும் மெளனமாக்கியும் விட்டால், மிஞ்சியிருப்பது சந்தர்ப்பவாத அயோக்கியர் கூட்டம் தானே. எல்லோரையும் அரவணைத்து வழி நடத்தக் கூடிய பெருந்தலைவனாக வந்த சந்தர்ப்பங்களை தன் தன்னம்பிக்கை குறைவிலான சந்தேகத்தினால் தீர்த்துக் கட்டியதன் பயன் தானே இன்று வந்து தலையில் விழுந்திருக்கிறது.

    இந்தக் கூட்டத்தை வைத்துக் கொண்டு, 'இந்தியாவை வரப் பண்ணு, சர்வதேசத்தை குரலெழுப்பப் பண்ணு' என்றால், எப்படி முடியும்? இந்தக் கூட்டமும் ராஜதந்திரம் பற்றி எந்த அறிவும் இல்லாமல், திராவிடக் கழகங்களின் பாணியில் 'இந்தப் படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?' என்று ஆட்பலத்தைக் காட்டி ஷோக் காட்டினால் போதும் என்று தானே, தமிழகம் முதல் புலம் பெயர்ந்த நாடுகள் வரைக்கும் கோமாளிகளின் தெருக்கூத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

    பகிரங்கப்படுத்தப்படாமல் இரகசியமாக சரியான தொடர்பு வழிகள் மூலமாக இந்தியாவுடனான உறவுகளைச் சீர் செய்ய வழி செய்யாமல், பத்திரிகைகளுக்கு மின்னோலை பேட்டி கொடுத்தால், இந்தியா வேறு வழியின்றி தங்கள் தடையை நீக்கும் என்ற அளவில் தான், அரசியல் பொறுப்பாளரின் அரசியல் அறிவு இருக்கிறது. றீகன் ஆட்சிக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அமெரிக்கா அங்கீகரித்ததற்கு அந்த இரகசிய பேச்சுவார்த்தைகள் தான் காரணம். ஊடகங்களில் செய்தி வெளியில் வந்தால் ராஜீவ் கொலை முதல் மற்ற தலைவர்களைக் கொன்றது வரை வண்டவாளங்கள் வெளியில் வரும் என்பதால், இரகசியமாகச் செய்யப்பட வேண்டிய ராஜதந்திர நடவடிக்கைகளைச் செய்வதற்கு சரியான ஆட்களோ, அறிவோ இல்லாமல், தமிழ்நாடு கிளர்ந்தெழுந்தால், மத்திய அரசு வேறு வழியின்றி தங்களை காவாந்து பண்ண வேண்டும் என்ற அளவில் தான் இவர்களின் அரசியல் அறிவு இருக்கிறது. பூட்டிய அறைக்குள் காலில் விழும் கவுண்டமணி வெளியே வந்து விலாசம் காட்டுவது போல, வெளியே கொக்கரித்துக் கொண்டே, பூட்டிய அறைக்குள் காலில் விழுந்தாவது காரியத்தைச் சாதிக்கும் அளவுக்கு கூட இவர்களுக்கு அறிவு கிடையாது.

    இன்று காசாவில் பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு சர்வதேச அளவிலான எதிர்ப்புக் குரல்கள், ஏன் அதை விட மோசமாக நடத்தப்படும் தமிழ் மக்கள் மீதான யுத்தம் குறித்து எழுப்பப்படவில்லை? இதற்கு முழுக்காரணமுமே தலைவர் தானே.

    தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான போராட்டத்தை வெறும் பயங்கரவாதமாக்கியது தானே தலைவர் நடத்திய மகத்தான அரசியல். தன்னை முதன்மைப்படுத்தி சர்வதேச தலைநகரங்களில் நடத்தப்பட்ட போராட்டங்களைக் கண்டு குஷி கொண்டு தன்னை மகத்தான தேசியத் தலைவர் என்ற கனவில் மிதந்ததே அன்றி, தமிழ் மக்களின் அழிவை முதன்மைப்படுத்தி ஆதரவு தேட இவர் எப்போதாவது முயன்றாரா? இல்லையே!

    பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக உலகெங்கும் தலைநகர்களில் திரண்டவர்கள், இந்த பொங்குதமிழ்க் கூட்டத்தின் சிறு பங்கு கூட இருக்க மாட்டார்கள். ஆனால், அதற்கு கிடைத்த சர்வதேச ஊடகங்களிலான விளம்பரம் புலிகளால் நினைத்துப் பார்க்க முடியாதது. இது எப்படிச் சாத்தியமானது? தலைவரின் தீர்க்கதரிசனமின்மை தானே!

    தமிழ்ப்படம் ஒன்றில் கதாபாத்திரம் ஒன்று சொல்வது போல, 'நான் கலியாண வீட்டில் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும், அல்லது செத்த வீட்டில் பிணமாக இருக்க வேண்டும் என நினைப்பவன்' என்று சொல்வது போல, தன்னை முதன்மைப்படுத்துவதிலும், தனக்கு ஜால்ரா பண்ண வேண்டும் என்பதிலும் காட்டிய அக்கறையில் ஒரு பங்கை தமிழ் மக்களின் பிரச்சனை சம்பந்தமாகக் காட்டியிருந்திருந்தால், இன்று அதுவே இவரை இன்று காப்பாற்றியிருக்கும்.

    தான் தலைவனாக வேண்டும் என்பது மட்டுமல்ல, தான் மட்டும் தான் தலைவனாக வேண்டும் என்பதற்காக மற்றத் தலைவர்களை ஒழித்தது மட்டுமல்ல, தன்னுடைய இயக்கத்திலேயே அடுத்த மட்டத்துத் தலைவர்களை வளர விடாமல் ஒழித்துக் கட்டுவதில் குறியாய் இருந்ததால் தானே, இன்று தனித்துப் போய் நிற்க வேண்டி ஏற்பட்டது. மற்ற இயங்கள் சிதைக்கப்பட்டதும் மாத்தயா முதல் கருணா வரைக்கும் என முக்கிய தளபதிகள் எல்லாம் இன்று இல்லாமல் போனதும் இன்றைய தோல்விக்கான காரணங்களில் சில தானே.

    வன்னியிலிருந்து வரும் கண்ணீர்க் கதைகள் பற்றி வெளியே சொல்ல முடியாதபடிக்கு புலி ஆதரவாளர்களே குமுறிப் போய் உள்ளனர். அனாதை இல்லத்திலிருந்து குழந்தைகளைக் கடத்திப் போனதற்கு எதிராக கத்தோலிக்க குருமாரே உண்ணாவிரதம் இருந்து மீட்டது முதல் கடத்திச் சென்று யுத்த முனையில் பலி கொடுக்கப்பட்ட பிள்ளைகளை ட்ராக்டரில் ஏற்றி வந்து கொட்டி விட்டுச் செல்லும் போது, கதறிக் கொண்டே தங்கள் பிள்ளைகளை அதற்குள் தேடும் தாய்மார்கள் வரைக்கும் இன்று தமிழ் மக்கள் புலிகளின் அடக்குமுறைக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். வீடுகளில் இரவு புகுந்து ஆயுத முனையில் குடும்பத்தினரின் எதிர்ப்புக்கும் மத்தியில் கடத்திச் செல்லப்பட்ட குழந்தைகள், இயக்கத்திலிருந்து தப்பிச் சென்ற குழந்தைகளுக்குப் பதிலாக தாய்மாரைக் கடத்திச் சென்று சிறை வைத்த கதைகள் என தமிழினம் தனக்கு வாழ்நாளில் நடக்கும் என்று நம்ப முடியாத கதைகள் எல்லாம் வன்னியில் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.

    இதற்குக் காரணம் என்ன? தலைவர் தன்னுடைய உயிரைப் பாதுகாக்க எவரையும் பலி கொடுக்கத் தயார் என்பது தானே. தனக்கு ஒருபோதுமே சாதாரண வாழ்க்கைக்கான வழி சாத்தியமில்லை, வாழ்நாள் பூராவும் ஆயுதங்கள் புடை சூழ உயிர் வாழ்வது தான் ஒரே வழி, வெற்றி அல்லது வீரமரணம் என்ற துணிச்சலான முடிவுக்கும் தயாரில்லாத கோழைத்தனமான நிலையில் குழந்தைகளையும் பெண்களையும் கடத்தி பலி கொடுப்பதை விடுதலைப் போராட்டம் என்று சொன்னால் நம்ப முடியுமா? தன்னுடைய ஒரு உயிருக்காக ஒரு முழு இனத்தையும் பலி கொடுக்கத் தயாரான இந்த தேசியத் தலைவர், 'சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகி விட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோம் என உறுதி எடுத்துக் கொள்வோமாக' என்றால், எப்படி இருக்கும்?

    இவருடைய அரசியல் நடவடிக்கைகளின் லட்சணத்தால், 'எமது தேசத்தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி நாம் அறிவித்த பகைமைத் தவிர்ப்பையும் ஏற்க மறுத்து, அதனை ஏளனம் செய்யும்' நிலைக்கு வந்திருக்கிறது. யுத்த நிறுத்தத்தை அறிவித்தாலும் யாரும் நம்பவும் தயாரில்லை. முன்பெல்லாம் புலிகள் யுத்த நிறுத்தம் அறிவித்தால், முழு உலகுமே திரும்பிப் பார்த்தது. சர்வதேச அழுத்தம் இலங்கை அரசு மீது விழுந்தது. இன்று வாங்கிய அடியில் யுத்த நிறுத்தம் அறிவிக்கும் போதெல்லாம் சர்வதேசம் பகிடி வகை செய்யாத குறையாக வாய்க்குள் சிரித்துக் கொள்கிறது. அமெரிக்கா, இந்தியா என புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்த தேவையில்லை என்று பகிரங்கமாகவே கூற ஆரம்பித்துள்ளன. புலிகள் மீண்டும் இலங்கை அரசால் தடை செய்யப்பட்டு, சமாதான பேச்சுவார்த்தைக்கான வழி முழுமையாகத் தடுக்கப்பட்டது பற்றி யாருமே வாய் திறக்கவில்லை.

    இந்தியாவோடு உறவுகளைப் புதுப்பிக்க விரும்புவதாக அறிவித்தாலும் இந்தியா தற்போது பயங்கரவாதத்திற்கு முகம் கொடுத்த நிலையில், இன்னொரு பயங்கரவாதிக்கு கை கொடுத்து தூக்கி விடவும் தயாரில்லை.

    பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அமெரிக்கா அங்கீகரித்த போது, அதற்கு 'பாலஸ்தீன விடுதலை இயக்கம் பயங்கரவாதத்தை மறுதலிக்க வேண்டும்' என்ற நிபந்தனையை அரபாத் ஏற்றுக் கொண்டார். அவ்வாறாக தலைவர் பயங்கரவாதத்தை மறுதலிக்கவும் தயாரில்லை. காரணம், அவரது அரசியல் அறிவின் பிரகாரம், 'மகிந்தவையும் சரத் பொன்சேகாவையும் போட்டால் சரி'. இவ்வளவு தான் அவரது அரசியல் அறிவின் மகத்துவம். அதற்காக தற்கொலைப் போராளிகளை கொழும்புக்கு அனுப்புவதில் குறியாய் இருக்கிறாரே தவிர, உள்ளூர், பிராந்திய, சர்வதேச அரசியல் யதார்த்த நிலைமைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்.

    லெபனானில் இரண்டு இஸ்ரேலிய சிப்பாய்களைக் கடத்தியதற்காக இஸ்ரேல் பெருமளவிலான யுத்தத்தை முன்னெடுத்து, பெரும் அழிவை ஏற்படுத்தி, அவமானத்துடன் திரும்பியிருந்தது. ஆனால், கடத்தலுக்கு பொறுப்பான ஹிஸ்புல்லா தலைவர் அந்த அழிவைப் பார்த்ததும் 'இஸ்ரேலின் பதிலடி இப்படி இருந்திருக்கும் என்றால் அவர்களைக் கடத்தியிருக்க மாட்டேன்' என்று கூறியிருக்கிறார். இன்று கூட, இந்த அழிவுகளைப் பார்த்த பின்னால், ஹமாஸ் கூட, இஸ்ரேலுடன் கொண்டிருந்த சமாதானப் புரிந்துணர்வை தொடர்ந்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தே இருக்கும். இஸ்ரேல் மீதான பகைமை குறையாத போதும், தங்கள் தவறுகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவுக்கு அவர்களுக்கு அறிவிருக்கிறது.

    ஆனால் இன்றைய நிலைக்கு காரணம் தான் ஆப்பிழுத்த நடவடிக்கை தான் என்பதை ஏற்க மறுத்து, தான் மட்டுமே சரியானவர், மற்றவர்களில் தான் தவறு இருக்கிறது என்ற தனது உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த சிந்தனை இன்று அவரது கழுத்திற்கு கத்தியாக வந்து நிற்கிறது.

    சமாதான ஒப்பந்தத்தில் சரியான அர்ப்பணிப்புடன் கலந்து கொள்ளாமல், ரணிலுக்கு ஆதரவான மக்களை வாக்களிக்க விடாமல் மகிந்தவை ஜனாதிபதியாக்கி ஆப்பிழுத்து மாட்டிக் கொண்ட தவறை இன்று வரைக்கும் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. மகிந்த இன அழிப்புச் செய்கிறார் என்றால், மகிந்த ஜனாதிபதியாக வரக் காரணம் யார்? மகிந்தவை யதார்த்தவாதி என்று புகழ்ந்தது யார்?

    ஒருவரின் நோயைக் குணப்படுத்த வேண்டும் என்றால், அதற்கான காரணத்தை அறிய வேண்டும் என்பார்கள். ஆனால் அதற்கும் மேலான ஒரு விடயம் உண்டு. நோயாளி தன்னை நோய் பீடித்திருக்கிறது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக மன நோய் பிடித்தவர்கள் விடயத்தில் இது மிகவும் முக்கியமான உண்மை.

    தன்னில் தவறு இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளாத மனிதனால் திருந்தவே முடியாது. இந்தியா பற்றிய மனமாற்ற நாடகம் கூட, தற்போதைய சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஆனதே தவிர, இன்னொரு தடவை புலிகள் பலம் பெற்று இராணுவத்தை விரட்டினால், 'இந்தியா தன் வல்லாதிக்கத்தை தெற்கில் வளர அனுமதிக்க மாட்டோம்' என்று சூளுரைக்க அதிக நேரம் எடுக்காது.

    இப்படியாகத் தன்னை அறிந்து கொள்ளாமல், தன்னால் முடிந்தது எது, முடியாதது எது என்பதைப் புரிந்து கொள்ளாமல், மூர்க்கனும் முதலையும் போல, கொண்டது விடாமல் மோதியதால் தான் இன்று கழுத்திற்கு கத்தி வந்திருக்கிறது.

    புலிகளால் கொல்லப்பட்ட, பலி கொடுக்கப்பட்ட ஒவ்வொருவருடைய தாய்மாரும் 'இந்த குறுக்காலை போவான்ரை தலையில இடி விழுந்து நாசமாய் போக மாட்டானோ?' என்று மண் அள்ளித் திட்டியது பலிக்குமோ என்ற அளவில், எந்த நேரத்திலும் விமானக் குண்டுவீச்சில் பலியாகலாம் என்ற நிலையில் தான் தலைவரின் ஆயுள் இருக்கிறது. போராட்டம் என்ற பெயரில் யாரையும் கொல்வதற்கான அனுமதியை தனக்குத் தானே வழங்கி, போட்டுத் தள்ளியவர், இன்று தனக்கு மரண தண்டனை வழங்குவதற்கான 'அலுகோசு' மகிந்தவை தானே தெரிந்தெடுத்தது தான் வரலாறு இவருக்கு கொடுத்திருக்கும் தண்டனை. எத்தனையோ பேருக்கு புதைகுழி அமைத்தவர், இன்று எங்கள் கண் முன்னாலேயே தனக்கான புதைகுழியைத் தோண்டிக் கொண்டிருப்பது தான் வரலாற்றின் பெரும் முரண்நகைகளில் ஒன்று.

    தன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் சரி, புலன் பெயர்ந்த மண்ணிலும் சரி, தன் மீது இருக்கும் மரியாதை தன் கையில் உள்ள துப்பாக்கிக்கு மட்டுமே உரியது என்ற உண்மையை உணர்ந்து கொள்ளாததால் தான் இன்று 'அன்போடு வேண்டிக் கொள்ளும்' அவல நிலைக்கு வந்திருக்கிறார்.

    இன்று யாராலும் மீட்க முடியாத ஒரு புதைகுழியைத் தோண்டி, அதன் உள்ளே இருந்து அபயக் குரல் எழுப்பி மன்றாடிக் கொண்டிருக்கிறார்.

    கடந்த இருபது வருடங்களாக நாங்கள் சொல்லிக் கொண்டிருப்பது போல, புலி ஸ்டைல் விடுதலைப் போராட்டம் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனையும் பெற்றுத் தரவில்லை. தரவும் முடியாது. தனிமனித வழிபாடும் ஜனநாயக மறுப்பும் கருத்துக்கள் மீதான விவாதங்களுக்கான சாவுமணியும் என்றைக்குமே எந்த இனத்தையும் அடிமைத்தனத்திலிருந்து மீட்க முடியாது. இந்த உண்மையை, உன்னையே நீ அறிவாய் என்பது போல, புலன் பெயர்ந்த சமூகமும் தேசியத் தலைவரும் உணர்ந்து கொள்ளாத வரைக்கும் முழுத்தமிழ் இனத்திற்குமான அழிவும் தலைவரின் பதவிக்கான அழிவும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து தான் இருக்கும்.

    தலைவரால் தமிழினத்திற்கான விடுதலையைப் பெற்றுக் கொடுக்க முடியாது என்பது மட்டுமல்ல, தலைவரே தமிழினத்தின் அழிவுக்கும் காரணமானவர் என்ற உண்மையை உணராமல், இப்போது வரைக்கும் 'முன்னகர்வு முயற்சி முறியடிப்பில் உடலங்கள் கைப்பற்றப்பட்ட' கதையும், 'உள்ளுக்க வரவிட்டு அடிக்கப் போறாங்கள்' என்ற நம்பிக்கையும் தொடர்ந்து கொண்டு தான் இருப்பது தான் எங்கள் இனத்தின் உண்மையான 'துன்பியல் நிலை'!

    புத்தம் சரணம் கச்சாமி

    இந்தக் சூழ்நிலையில், கியூறியஸ் ஆரம்பத்தில் சொன்னது போல, இரண்டாவது பயம் ஒன்று தற்போது வந்து பயமுறுத்துகிறது.

    சென்ற வருட உரையில் 'பௌத்தம் ஒரு ஆழமான ஆன்மீகத் தரிசனம். அன்பையும் அறத்தையும் ஆசைகள் அகன்ற பற்றற்ற வாழ்க்கையையும் தர்மத்தையும் வலியுறுத்தி நிற்கும் தார்மீகத் தத்துவம்' என்று சிலாகித்த தலைவர், இந்த வருடம் 'மனித துயரங்கள் எல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபட முடியாது' என்று புத்த தர்மத்தில் மூழ்கிப் போயிருக்கிறார்.

    பதவி ஆசையில், புத்தரின் பஞ்ச சீலங்களில் ஒன்றான கொல்லாமை என்ற வழியை மீறி போட்டுத் தள்ளிய ஒருவர், 'ஆசைகள் (தன்னை அறிந்து கொள்ளாத) அறியாமையிலிருந்து தோற்றம் கொள்வதாக' எங்கோ வன்னிக்காட்டு அரசமரத்தின் கீழ் இருந்து பரிநிர்வாணம் பெற்ற நிலையில் தத்துவம் உரைக்கிறார்.

    எனவே, கௌதமன் என்ற இளவரசன் தன் சுகபோகங்களைத் துறந்து, தட்டை ஏந்தி துறவறம் பூண்டது போல, தேசியத் தலைவரும் பொருத்தமான மஞ்சள், சிவப்புப் புலிக்கொடியை காவியாய் அணிந்து, புத்தம் சரணம் கச்சாமி என்று புறப்பட்டு விடுவாரோ?

    அல்லது, ஈழ முக்கோணச் சீட்டுக்கு காசு கட்டிய சோணகிரிகளை அம்போ என்று கை விட்டு, புத்த மதம் தழுவிய தாய்லாந்து, லாகோஸ், பர்மா, வியட்னாம் போன்ற நாடுகளின் நடுவில் உள்ள அரச கட்டுப்பாடுகள் இல்லாத தங்க முக்கோணப் பகுதிக்கு, புத்தம் சரணம், (ஏலுமெண்டால் என்னை) catch army என்று விடுதலைக்கு சேர்த்த பணத்துடன் கம்பி நீட்டி விடுவாரோ என்பது தான் கியூறியஸைப் பீடித்திருக்கும் இரண்டாவது பெரிய பயம்.

    Postad



    You must be logged in to post a comment Login