புதிதாக எதையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றினால், அதைக் கரை காணும் வரை கற்பதற்காய் காடு மேடெல்லாம் அலைவது பழக்கம்.
இதை பள்ளிக்கூட நாளில் செய்திருந்தால், இப்படியெல்லாம் எழுதி நேரத்தை விரயமாக்கும் (மற்றவர்களின்!) தேவையில்லாதபடிக்கு நம்ம தொழிலைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம்.
இப்படியாகத் தானே ஒரு விடயத்தை சுமார் நாற்பது வருடங்களாக கற்றுக் கொண்டிருக்கிறேன்.
தொடர்ச்சியாக அல்ல!
ஊரில் இருக்கும் போதும், பின்னாளில் வெளிநாட்டு வாசத்தில் கோடை காலத்து வீட்டுத் தோட்ட வேலை தவிர்ந்த நேரங்களிலும், குளிர்காலத்தில் வேறு எதுவும் செய்ய முடியாத குளிர் இரவுகளிலும் என அவ்வப்போது தினவெடுக்கும் போது!
சில நேரங்களில் வருடக் கணக்கில் ஆர்வம் இல்லாமலேயே இருந்ததும் உண்டு!
இந்த வருடம் எப்படியாவது கரைத்துக் குடித்து பாண்டித்தியம் பெறுவது தான் என்று புதுவருட உறுதிமொழி முயற்சிகளில் இறங்கி வழமை போல, கொஞ்ச நாளில் ஆர்வம் குறைந்து கைவிட்டதும் உண்டு.
இதை முறைப்படி கற்பதற்காக பல்வேறு ஆசான்களிடம் அவ்வப்போது போய் முறையில்லாமல் கற்றாலும், எனக்கு புரிந்து கொள்ளத் தக்கதாகவும், ஆர்வத்தை உண்டு பண்ணும் வகையிலும் அவர்களால் என்னை ஈர்க்க முடியவில்லை.
நான் புலமை பெற விரும்பும் நுணுக்கங்களில் தேர்ச்சி பெற முடியவில்லை.
ஆசான்களுக்கும் நான் கற்க விரும்புவதாகச் சொல்லும் நுணுக்கங்கள் எதுவெனப் புரிந்து கொள்ள முடியவில்லை.
எனவே, இது சுயமான பயிற்சியாகவே இருந்தது. இருந்தாலும் தினசரிப் பயிற்சி தொடர்ச்சியாக இல்லாததால் அந்த அறிவை வாலாயம் பண்ண முடியாமல் போயிற்று.
ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக, இரவுகளில் முயற்சியைத் தொடர... ஒருவாறாக அது கைவரப் பெற்றது.
இருந்தாலும் அதில் பாண்டித்தியம் பெறாத திருப்தியின்மை மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது.
சுயமாகக் கற்றுக் கொள்ளும்போது, சில, பல நுணுக்கங்களையும், சில்மிஷங்களையும் கற்றுக் கொள்ள முடிவதில்லை.
எங்களுடைய பயிற்சியை, கற்றுத் தெளிந்த இன்னொருவர் பார்க்கும் போது, அவர்களுக்கு நம் குறைபாடுகள் தெரியும்.
இப்படியாகத் தானே அல்லல்படும்போது...
மகனிடம் கணிதம் கற்பதற்காக சிங்களச் சிறுவன் ஒருவன் வந்தான். நான் கற்க விரும்பும் விடயத்தில் அவனுக்கு பரிச்சயம் இருந்தது தெரியும்.
ஒருநாள் வீட்டே வந்த போது, பொழுது போகாமல் இருக்க பாதாள அறைக்கு அழைத்துச் சென்று என் பொக்கிஷங்களைக் காட்ட...
என்னுடைய ஆர்வம் பற்றி தெரிந்திருந்தாலும் இவ்வளவு சீரியஸாக இருப்பேன் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
கண் முன்னால், அவனது புலமையைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போனேன்.
நான் தேடித் திரிந்த குரு என் கண் முன்னால்!
'நீ எனக்கு கற்றுக் கொடு'
உடனேயே கற்றுக் கொடுக்க அவன் ரெடி... மகனிடம் கற்றுக் கொண்டதற்கு பிரதியுபகரமாகவோ என்னவோ!
'வேண்டாம், உனது வருட இறுதி பாடசாலை விடுமுறை வரட்டும். நானே உன்னைத் தேடி வந்து கற்கிறேன்'
புலன் பெயர்ந்த தமிழர்கள் தற்போது இடம் பெயர்ந்து அள்ளுப்பட்ட புறநகர்ப் பகுதியில் ஐம்பது கிலோ மீட்டர் காடு, மேடெல்லாம் தாண்டி, குருதட்சணையுடன் போய்ச் சேர்ந்து...
அவயவங்கள் கொப்புளமாகும் வரை பயிற்சி...
அறிவு வாலாயமாகுவது போல தெரிகிறது.
அடுத்த நாள் பயிற்சிக்கு கொப்பளங்கள் அனுமதிக்க மறுக்கின்றன.
இருந்தாலும் கஜனி முகமதுவின் முயற்சி இம்முறை தடைப்படாது.
புதுவருடத்தில் முழுமையாய் பயிற்சியைத் தொடர்வதாக உத்தேசம், ஒரு கரை காணும் வரைக்கும்!
நிச்சயமாய் இது குறித்த புதுவருட உறுதிமொழிகள், தீர்மானங்கள் எதுவும் இல்லை!
இதெல்லாம் நம்மைப் பற்றி நாமே புகழ்ந்து தள்ளும் சுயபுராணம் அல்ல.
நான் சொல்ல வருவது இது தான்!
இத்தனை வருடங்களாக கற்பதற்காக தேடித் திரிந்த ஆசான்... இப்போது கிடைத்திருக்கிறான்.
பதின்மவயதுகளில் தொடங்கிய கற்கை... மகன் பிறந்து அவன் ஆசானாகி அவனுக்கு மாணவனாக வந்த பதின்ம வயது சீடன் எனக்கு குருவாகியிருக்கிறான்.
ஸென் புத்த மதத்தில் ஒரு பழமொழி ஒன்றுண்டு.
When the disciple is ready, the master appears.
சீடன் கற்கத் தயாராகும் போது, ஆசான் தானாகவே வந்து தோன்றுகிறார்.
* * *
ஆசான் என்பது வெறும் மனிதர்கள் மட்டுமல்ல.
மனிதர்களின் படைப்புகளாகக் கூட இருக்கலாம். அது புத்தகங்களாகவோ, வீடியோக்களாகவோ இருக்கலாம்.
ஏன் மற்றவர்களின் வாழ்க்கையை அவதானிப்பதாகவும் இருக்கலாம்.
அமெரிக்க முதலீட்டாளர் வாரன் பபட் சொல்வார். உன்னுடைய தவறுகளிலிருந்து கற்றுக் கொள்வது நல்லது. மற்றவர்களின் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்வது அதை விட நல்லது.
சில நேரங்களில் நாங்கள் கற்க வேண்டியவை தானாகவே எங்கள் முன்னால் தோன்றுகின்றன.
கொஞ்சக் காலம் பெரும் மனம் சஞ்சலம் அடைந்து அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் போது, இணையத்தில் தொழில் நுட்பம் சம்பந்தமாய் எதையோ தேடப் போக, ஒரு இணையத் தளத்தில் தடக்கி விழ நேரிட்டது.
இளம் வயதில் பெரும் பணம் சம்பாதித்து அவற்றை இழந்து மீண்டும் சம்பாதித்து, இழந்து என அனுபவப்பட்ட ஒருவர் தன் வாழ்வின் அனுபவங்களை எழுதுகின்றார். அவரின் மின்னோலைப் பட்டியலில் மில்லியன்கணக்கில் வாசகர்கள் உள்ளனர். அதில் என்னையும் இணைத்துக் கொள்ள, தினசரி அவரது எழுத்துக்கள் தானே வந்து உள்பெட்டியில் விழும்.
தன் தோல்விகளையும் அதற்கான காரணங்களையும் விபரிக்கும்போது, பிரச்சனைகள் எங்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் பொதுவானது தான் என்று புரியும்.
கிட்டத்தட்ட ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்ற எழுத்தாக அது இருந்தது. அதில் அவர் பேட்டி காண்கின்ற சாதனையாளர்கள் தங்கள் அனுபவங்களைச் சொல்லும்போது அதுவே மனதுக்கு தெம்பு தரும்.
அந்தச் சாதனையாளர்கள் எழுதிய புத்தகங்களை அவர் குறிப்பிடும் போது, அதை நூலகத்தில் தேடி வாசிக்க, மனம் இன்னமும் உற்சாகம் அடையும்.
(தற்போது, அவர் அந்தப் பட்டியலில் உள்ளவர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் முயற்சியில் மட்டும் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்.)
இப்படியாக வாழ்வின் இருண்ட காலங்களை கடக்க அந்த ஆசான் வந்து சேர்ந்தார்.
இப்படி எத்தனை தடவைகளில் நாங்கள் அறிய வேண்டியவை, கற்க வேண்டியவை தாங்களாகவே ஏதோ ஒரு விதத்தில் எங்களை வந்தடைகின்றன.
முயற்சிகள் பலன் அளிக்காமல் போய், விதி விட்ட வழி என்று இருந்த போது, தற்செயலாக முகப்புத்தகத்தில் வந்த பதிவு ஒன்றின் தொடர்ச்சியாக தேடப் போக, அதுவே என் அறிவை விசாலமாக்கி வழியைக் காட்டி அடுத்த முயற்சிக்கு என்னைத் தயாராக்கியிருக்கிறது.
அகல விரிந்த தேடும் கண்களும், திறந்த விசாலனமான மனதும், கற்றுக் கொள்ள வேண்டும் என்ற துடிப்பும் இருக்கும் போது, நாங்கள் தயாராக இருக்கும் கணங்களில், ஆசான்கள் ஏதோ ஒரு வடிவத்தில் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள்.
குரு எப்போதும் முதியவராய், அனுபவம் மிகுந்த ஞானப்பழமாக இருக்க வேண்டிய அவசியமேயில்லை.
கள்ளமில்லாமல் தாய் மடியில் அமர்ந்து சிரிக்கும் குழந்தையாகவும் இருக்கலாம்.
நாங்கள் கற்றுக் கொள்ள நிறையவே இருக்கின்றன!
You must be logged in to post a comment Login