Recent Comments

    எருவெல்லாம் பெரும் பொய்யடா, வெறும் குப்பை அடைத்த பையடா!

    வீட்டுத் தோட்ட சீசன் ஆரம்பமாகி விட்டது. பெரும் பெட்டிக்கடைகளும், கார்டன் சென்டர்களும் தற்போது பைகளில் மண்ணும் எருவும் விற்பனை செய்வார்கள்.

    கடைகளில் இவற்றையெல்லாம் பைகளில் அடைத்து வகை வகையாக வைத்திருப்பார்கள்.

    தமிழர்கள் தானே!

    எதையாவது மலிவாகக் கண்டவுடன், மலிவு எண்டா நல்லதாத் தானே இருக்கும் என்று அள்ளிக் கட்டிக் கொண்டு வந்திருப்பீர்கள்.

    தோட்டத்தில் போட்டு பயிர் நட, எல்லாம் வாடி வதங்க...

    நல்லாத் தான் சுத்திப் போட்டான் என்று மறுபடியும் இன்னொரு கடையில்...

    எதையும் செய்ய முதல், என்ன? எது? என்று அறிந்து செய்யும் பழக்கம் இந்த எல்லாம் தெரிந்த மூத்த குடிக்கு தெரிவதில்லை.

    எவனாவது வந்து ஈழம் எடுத்துத் தாறன் எண்டால் காசைக் குடுத்தால் சரி எண்ட மாதிரி!

    அதென்னடா, ஈழம் என்ன மீனே, சந்தையில காசு குடுத்து வாங்க..?

    ஏமாந்த சோணகிரிகளைச் சுத்தாமல் விட்டால் தான் பிழை!

    சரி, அதை விடுவம்.

    கடைகளில் கிடைக்கும் இந்த பைகளின் உள்ளே இருப்பவை என்ன?

    ரொறன்ரோ போன்ற பெருநகரங்களில், இலையுதிர் காலத்தில் வீடுகளில் கூட்டி அள்ளப்படும் இலைக் குப்பைகளை உக்கப் போட்டு Compost உருவாக்குவார்கள். இதை நகரில் குப்பைகள் கையாளும் இடங்களில் இலவசமாக அள்ளலாம். தற்போதைய கொரோணா துன்பம் காரணமாக அந்த நிலையங்கள் எல்லாம் மூடப்பட்டுள்ளன. எங்கே அள்ளுவது, எப்படி அள்ளுவது என்றெல்லாம் பழைய தாயகம் பதிவுகளில் சொல்லியிருக்கிறோம். இம்முறை அதெல்லாம் செல்லுபடியாகாது.

    எனவே கடைகளில் விற்கப்படும் பைகளில் Compost என இருக்குமாயின், அது இலை, குழைகள் குப்பையாகக் குவித்து பசளையாக்கப்பட்ட உருவமே. இதை நீங்கள் விலைக்கு வாங்க தேவையில்லை.

    உங்கள் வீட்டிலேயே இவற்றைக் குவித்து வைத்து இடையில் மண்ணும் கலந்து, அடிக்கடி நீர் விட்டு கிளறி வந்தால் விரைவில் சிதைவடைந்து நல்ல பசளை கிடைக்கும். அதுவும் உங்கள் தெருவில் குப்பை நாட்களில் காகிதப் பைகளில் அயலவர்கள் வெளியே வைக்கும் இலைகளை திருடியும் வரலாம். யாரும் பொலிசுக்கு அறிவிக்க மாட்டார்கள்.

    அடுத்த வகை... Top Soil அல்லது Black Earth.

    வயல் நிலங்கள் எல்லாம் மேல் பகுதியில் ஆயிரக்கணக்கான வருடங்களாக விழுந்த தாவரங்கள், இலை, குழைகள், கிளைகள் எல்லாம் உக்கி மண் புழுக்களாலும் பக்ரீறியாக்களாலும் மண்ணுடன் கலந்து மிகவும் செழிப்பான பசளையுள்ள மண்ணாக இருக்கும்.

    வயல் நிலங்கள் எல்லாம் குடியேற்றமாக, முதல் வேலையாக அந்த மேல் மட்ட மண்ணைச் சீவி அடைத்து பைகளில் விற்பார்கள். இது மிகவும் மலிவாக கிடைக்கும். லீட்டர் அல்லது கிலோ நிறை அளவுகளில் பைகளில் கிடைக்கும். விலைகள் அளவுக்கு தகுந்த மாதிரி கூடிக் குறையும். ரொறன்ரோவில் Walmart போன்றவற்றில் ஒரு பை ஒரு டொலர் கணக்கில் கிடைக்கும்.

    இந்த மண் வாங்குவதில் உள்ள பிரச்சனை... இதனுடன் எக்கச்சமான களைகள் உங்கள் தோட்டத்திற்கு வந்து சேரலாம். எனவே Sterilized என இந்த களைகள் எல்லாம் அழிக்கப்பட்டிருக்கின்றனவா என பைகளில் பார்த்து வாங்குங்கள். அவை விலை கூட இருக்கலாம். அத்துடன் அவற்றில் களைகள் இருக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை நினைவில் கொள்க.

    களைகள் வந்து விட்டால்... 'நீ தானே சொன்னனீ!' என்று சொல்லக் கூடிய புலன் பெயர்ந்தவர் நீங்கள்!

    அடுத்தது

    Triple Mix

    மண், Peat Moss, Compost, சாணி எரு போன்றவற்றில் மூன்றை மூன்றில் ஒரு பகுதி வீதம் கலந்து விற்கப்படுவன இவை. இவை விலையும் சற்று அதிகமாக இருக்கும். வாங்கும்போது, அதில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பதை பார்த்து வாங்குங்கள்.

    Manure எனப்படும் எரு

    இது செம்மறி அல்லது மாடுகளின் (Sheep/Cattle) சாணி, புழுக்கைகளை உக்க வைத்து பைகளில் அடைக்கப்படுவன. உக்கியதால் இவற்றில் பெரும்பாலும் சாணி மணம் இருப்பதில்லை. இவை விலையில் கூடியன.

    அடுத்தது Peat Moss...

    பாசி போன்ற தாவர வகைகள் உக்குவதிலிருந்து கிடைப்பது இது. இதில் சத்து எதுவும் இருப்பதில்லை. இது நீரையும் காற்றையும் அதிகளவு உறுஞ்சி வைத்திருப்பதால் இந்த பசளைகளில் கலக்கப்படுவது. இதில் அமிலத் தன்மை அதிகம் இருப்பதால், புளூபெரி போன்ற அமில நிலத்தில் வாழும் தாவரங்கள் நடும் போது, இதைச் சேர்க்க வேண்டும்.

    இவை உருவாக ஆயிரக்கணக்கான வருடங்கள் எடுப்பதால், இவற்றை அள்ளுவதால் சுற்றாடல் பாதிப்பு அதிகம். எனவே வாங்குவதை தவிருங்கள்!

    Potting Mix இது வழமையாக சட்டிகளில் தாவரங்கள் வைக்கும் போது, பயன்படுத்தப்படுவது. இது வெறும் மீடியம் தான். அதாவது எந்தச் சத்துகளும் இல்லாமல் தாவரங்களைத் தாங்கிப் பிடிக்கவும், நீரை உறுஞ்சி வைக்கவும் பயன்படுத்தப்படுவது. இவை சட்டிகளில் நிறை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக மண்ணிற்கு பதிலாகப் பயன்படுத்தப்படுவன. இதில் Peat Moss, Vermiculite (கனிப்பொருள்), Perlite (எரிமலைச் சிதறல்கள்), Compost என்பன கலக்கப்பட்டிருக்கும். இவை மண் கலக்கப்படாமல் Soil less mix என்றும் குறிப்பிடப்பட்டிருக்கலாம்.

    அடுத்த Mulch...

    மரத் துகள்கள். தறிக்கப்படும் மரங்களை துகள்களாக்கி, மரங்களுக்கும் பூக்கன்றுகளுக்கும் அடியில் களைகள் வளராதபடிக்கு மூடுவதற்கு பயன்படுவது. இதில் மர நிறத்தை விட, கறுப்பு, சிவப்பு சாயங்கள் பூசப்பட்டனவும் உண்டு. இரசாயன சாயங்கள் பாவிப்பதில் நமக்கு விருப்பு இல்லை. எனவே நிறமூட்டப்படாத மர நிறம் உள்ளவை வாங்கலாம். இவற்றை நீங்கள் கடைகளில் தான் வாங்க வேண்டும் என்றில்லை.

    உங்கள் தெருவில் மரங்கள் தறிக்க வருவோர் அந்த இடத்திலேயே மரங்களை துகள்களாக்கும் இயந்திரங்களுடன் பெரும் சத்தத்துடன் கோடை காலங்களில் வேலை செய்வார்கள். அவர்களிடம் கேட்டால் 'நம்மடயா?'என்று அள்ளித் தருவார்கள். ஓசி தானே என்று நீங்களும் தேவைக்கு அதிகமாக அள்ளிச் செல்வீர்கள்... இடமில்லாட்டி கராஜ்க்கை எண்டாலும் வைக்கலாம் தானே எண்டு.

    இது தான் பைகளில் வரும் பசளை வகைகள்.

    ஸ்காபரோ பகுதியில் உள்ளோர் பெருமளவு வாங்க விரும்பினால்....

    Villacci 53 Comstock, வார்டன் எக்லின்டன் பகுதி

    Homeland 750 Danforth (at St.Clair) ஆகிய கடைகளில் வாங்கலாம்.

    நாகரிகம் அடைந்த மனிதர்களை விட்டு அப்பால், மார்க்கம், ஸ்ரூப்வில், ஏஜாக்ஸ் கடந்து வாழ்வோர் அங்கங்கே கடைகளில் வாங்குவது நல்லது. வீட்டு வினியோகத்திற்கு தனிச் செலவுண்டு.

    இதில் ஹோம்லாண்ட் இத்தாலிக்காரர் பக்கத்து வீட்டு இத்தாலிக்காரரின் நண்பர். அவர் மூலமாக இரண்டு தடவைகள் லோட் கணக்கில் பறிப்பித்து தோட்டத்திற்கு பரவினேன்.

    "அண்ணை, உங்களுக்கும் தெரியும் எண்டிறியள், மலிவா வாங்கித் தர மாட்டியளோ?" என்று கேட்பீர்கள் என்று தெரியும்.

    வேற்றினத்தான் என்றால் சொல்லிற விலையை கேட்டுக் கேள்வி இல்லாமல் கொடுக்கிற யாழ்ப்பாணிகள், எங்கட இனத்தில ஒரு நல்லவன் எண்டால், அவன் தொடர்ந்து இருந்தால் தானே எங்களுக்கும் நல்லது என்று நினைக்காமல், அவனை மொட்டை அடிச்சு ஏமாத்துவதையே தொழிலாகக் கொண்டிருப்பார்கள்.

    அங்க என்ன விலை என்ற விசயம் எல்லாம் எனக்குத் தெரியாது.

    நீங்களே விசாரிச்சு, சொல்கிற விலைக்கே வாங்கிப் பயன் அடையுங்கள்.

    Postad



    You must be logged in to post a comment Login