Lubna and Pebble
(லுப்னாவும் கூழாங்கல்லும்)
By Wendy Meddour 2022
நாடி, நரம்புகளை உறைய வைக்கும் பனி விழும் கடற்கரைப் பகுதியொன்றில், வெறும் கூடாரமாகக் காட்சி தரும் அகதிகள் முகாம் ஒன்றில் துயில் கலைந்தெழுகிறாள் லுப்னா. அவளுக்கு எல்லாமே புதியதாயும், துயரம் தருவதாயுமே இருக்கின்றது. குளிர் தாங்க மாட்டாதவளை அவள் தந்தை தன் உப்புக்காற்றிலும் நீரிலும் தோய்ந்த தன் கைகளில் அள்ளியெடுத்து அணைத்துக் கொள்கிறார்.
அவள் கடலோடும் சிப்பிகளோடும் கடற்கரையின் இன்னபிற இயற்கை வளங்களோடும் மட்டுமே தன் பொழுதைப் போக்குகிறாள். அவளுக்குத் தனிமையும் ஏக்கமும் ஆட்கொள்ளும் போதெல்லாம் அவள் ஒரு கூழாங்கல்லைத் தன் தோழமையாக்குகிறாள். அதன் மேல் கண்கள், மூக்கு, புன்னகைக்கும் உதடுகள் வரைந்து, அதற்கென ஒரு வடிவம் தருகிறாள்.
தன் தோழமைக்கு இரவுகளில்க் குளிராதா எனத் தந்தையிடம் வினவும் போது அவள் தந்தை அவளுக்கு ஒரு கடதாசியாலான, காலணிப் பெட்டியையும் ஒரு சிறு துணியையும் அக்கூழாங்கல்லை பாதுகாப்பதற்காகக் கொடுத்துதவுகிறார்.
கூழாங்கல் பேசாவிட்டாலும், லுப்னா தனது அனைத்து ரகசியங்களையும் கூழாங்கலுடன் பகிர்ந்து கொள்கிறாள். தான் ஒருபோதும் அதனை விட்டுப் பிரியேன் எனவும் உறுதியளிக்கிறாள்.
தனிமையில் கடலோரம் விளையாடிக் கொண்டிருந்த லுப்னாவும் அவளது தந்தையும் முகாமை விட்டு அகன்று, ஒரு புதிய வீட்டுக்கு போகும் வேளை வருகிறது.
ஆனால் அதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் அந்த முகாமிற்கு மற்றொரு குழந்தை அமீர் வந்து சேருகிறான். லுப்னா தன் கவலைகள் மறந்து அமீருடன் இனிய நட்பைப் பேணத் தொடங்கியிருந்தாள். நட்பு தளிர் விடத்தொடங்கும் போதே பிரிவும் வந்து சேருகிறது.
“நான் உன்னைப் பிரிவது வேதனை தருகிறது. உன் நினைவுகள் வரும் போது நான் என்ன செய்வது?” என்ற அமீருக்கு, லுப்னா தான் அருமை பெருமையாக அணைத்து வைத்திருந்த கூழாங்கல்லைத் தன் பரிசாகத் தருகிறாள். தான் ஒரு போதும் அப்பிரியமான கூழாங்கல்லை விட்டுப் பிரிய மாட்டேன் என்ற உறுதியை மீறி அவளது கருணை உள்ளம் ஆழமாய்ச் சிந்திக்கிறது.
தன்னை விட தன் கூழாங்கல் மூலம் அமீருக்குத் தான் கூடுதல் ஆறுதல் தேவை என்று லுப்னா உணர்கிறாள்.
அவள் கூழாங்கல்லை தன் நண்பன் அமீரிடம் கொடுத்து, நான் போன பிறகும் உனக்கு ஒரு நட்பு இருக்கும் என்பதை உணர்த்துகிறாள்.
“என் நினைவுகள் வரும் போது இந்த புன்னகைக்கும் கூழாங்கல்லைப் பார்த்து உன் கவலைகளை மறந்து விடு.” என லுப்னா சொல்லியவாறே அவனை விட்டுப் பிரிந்து செல்கிறாள். அவள் போக வேண்டிய கப்பலில் இருந்து அமீரை நோக்கிக் கை அசைப்பதோடு இந்தக் குழந்தை இலக்கியம் முடிவடைகிறது.
மிக நெகிழ்வான கதைக்கரு. ஆசிரியர்களாகிய எமக்கு மாணவர்களுக்கு இக்கதையை வெறுமனே வாசித்துச் சொல்வதோடு அல்லது அவர்களை வாசிக்கப் பண்னுவதோடு கடமை முடிந்து போவதில்லை.
இதை மையமாக வைத்து ஆங்கிலப் பாடத்தினூடாக மனித நேயம், நட்பு, தோழமை, காதல், பாசம், உறவுகள், பிரிவு, பகைமை, அகதி வாழ்வு, யுத்தங்கள், விவசாயம், உணவுப்பற்றாக்குறை போன்ற பல்வேறு தலைப்புகளிலும் கற்றலும் கற்பித்தலும் தொடர்ந்தன.
எமது பாடத்திட்டங்களுக்கமைய, ஆனால் இந்த நூலை மையமாக வைத்தே ஏனைய அடிப்படை பாடங்களான விஞ்ஞானம், புவியியல், கலைகள், மத நம்பிக்கைகள், கணிதம் போன்ற பாடங்களையும் இந்நூலோடு தொடர்பு படுத்தவும், கற்பிக்கவும் முடிந்தது.
**********************************
ஆங்கிலப்பாட வேளையில்
அவர்களைப் பலவிதமாக யோசிக்கவும், தங்களுக்குள் கேள்விகள் கேட்கவும், அதற்குப் பலவிதமான பதில்கள் தரவும் உதவுகிறோம். அதன் பின்னரே அப்பாடம் குறித்து எழுதும் பயிற்சிகள் ஆரம்பமாகின்றன. எனது மாணவர்களுக்கு ஆறு வயது தான் ஆகிறது என்றாலும் அவர்கள் சிந்தனையில் உதித்த கேள்விகள் சில;
• அகதிகள் முகாம் என்றால் என்ன? எப்படி அது உருவாகிறது?
• அந்தக் கடற்கரை முகாமில் லுப்னாவிற்கும் அவளுடைய அப்பாவிற்கும் குளிராதா? அவள் தன் மன நிலையை எப்படி உணர்ந்திருப்பாள்?
• லுப்னாவின் அம்மாவிற்கு என்ன ஆயிற்று?
• அவளுடைய வீட்டுக்கு என்ன ஆயிற்று?
• அவள் ஏன் அகதிகள் முகாமுக்கு வர வேண்டியதாயிற்று?
• அவளுக்குப் பசித்தால் முகாமில் அவளுக்கு உணவு தருவார்களா?
குழந்தைகளின் எண்ணம், சிந்தனைகளை மதித்து அவர்களின் அறிவுக்கு உரமிட்டு வளர்க்கும் கடமை ஆசிரியர்களிடம் விடப்படுவது அழகான விடயம். We scaffold children’s knowledge through different topics.
எனது வகுப்பறையில் ஒரு நீளக்கயிறு கட்டி, அதில் துணிகளால் மறைத்து முகாம் அமைத்து, கதையின் களத்திற்கேற்ப குளிர் வேண்டும் என்பதற்காக வகுப்பறையின் வெப்பமாக்கிகளை ( Radiators) நிறுத்தி, காற்றாடிகளைச் சுழற விட்டு, மாணவர்களுக்கு ஒரு கடலோர அகதி முகாமை சில நிமிடங்களுக்கு அனுபவிக்கச் செய்தேன். இது அவர்கள் விருப்பிற்கேற்றது. அவர்களது தேடலுக்கானது. உணர்வு பூர்வமான தேடலுக்கு வழி கோலியது.
ஏற்கனவே குறிப்பிட்டபடி இதிலிருந்து மாணவர்கள் உணர்ந்து கொண்டதும் பேசுபொருளாக வந்த விடயங்களும் ஏராளம். உலக மகாயுத்தங்கள், அந்நிய ஆக்கிரமிப்புகள், மத,அரசியல் ரீதயான முரண்பாடுகள், அப்பாவி மக்களின் அகதி நிலை, மனித நேயமும் அதன் தொடர்பான பேச்சுக்களும், உணவுப்பஞ்சம் போன்ற பலவிதமான உலகளாவிய விடயங்களின் ஆரம்ப நிலையை அவர்களின் பேச்சுக்கள் குறித்து நின்றன.
குறிப்பிட்ட கற்கை நெறி சார்ந்த வகுப்பறை கலந்துரையாடல்கள் இங்கு பலம் வாய்ந்தவையாகக் கருதப்படுவதற்கு, அந்தக் கலந்துரையாடல்கள் சிந்தனையைத் தூண்டுவதாக, மாணவர்கள் அனைவரும் தமது கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்துகின்ற ஒரு கருவியாக இருப்பதே காரணம். இந்தக் கலந்துரையாடலில் அவர்களுடன் கலந்துரையாடல் செய்வதற்கு அவர்கள் தமது Learning Partner ஐத் தெரிவு செய்யும் முறையும் உண்டு. இவற்றை பிறிதொரு தளத்தில் பார்க்கலாம்.
ஒவ்வொரு அரைத் தவணை இறுதியிலும் ஒவ்வொரு ஆண்டு மாணவர்களும் தாம் கற்ற விடயங்களை மையப்படுத்தி கலைப்படைப்புகளை தமது வகுப்பறையில் காட்சிப்படுத்துவர். அதற்கு என் போன்ற வகுப்பாசிரியர்கள் மாணவர்களைத் தகுந்த முறையில் பயிற்சிப்படுத்தியும், அவர்கள் தமது கற்றலை வெளிப்படுத்துவதற்கு தேர்வு செய்த கலைப்படைப்பின் பின்ணணியில் ஏற்கனவே தம்மை அடையாளப்படுத்திய கலைஞர்களை அறிமுகம் செய்தும் கற்றலை ஊக்குவிப்போம்.
லுப்னாவும் அவளது கூழாங்கல்லும் தொடர்பினாலான கருப்பொருளை கூழாங்கற்கள் கொண்டே உருவாக்கப்படுத்தலாம் என்பதை மாணவர்களும் ஏற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து Pebble Art எனப்படும் இக்கற்கலையில் தேர்ச்சி பெற்ற ஒரு கலைஞரை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் கட்டம் ஆரம்பமாயிற்று.
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக சிரியாவில் போர்க்கால சூழலை அடிப்படையாக வைத்து, அம்மக்களின் துயர்படிந்த வரலாறை கற்களால் கலை வடித்த, நஸார் அலி பாட்ரெ ( Nazar Ali Badre) என்னும் கலைஞரை தேர்ந்தெடுத்து, மாணவர்கள் சிறு ஆய்வொன்றை மேற்கொண்டார்கள்.
மாணவர்கள் தாமாகவே கூழாங்கற்களை கடற்கரைக்கும் , பூங்காக்களுக்கும், கடை வீதிகளுக்கும் போகும் போதெல்லாம் சேகரிக்கத் தொடங்கியது சுவாரசியம் தான். இங்கு அமேசன் போன்ற இணையவழி அங்காடிகளில் கூழாங்கற்களை வாங்கக் கூடிய நிலைமைகள் பாடசாலை வரவு செலவு கணக்குகளில் இருந்தும், நான் அதைப் பாவிக்காமல் இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் பழக்கம் வரவேண்டும் எனத் தீர்மானித்ததில் மாணவர்களும் பெற்றோர்களும் மிகத்தீவிரமாக என் முடிவை ஆதரித்தனர்.
கூழாங்கற்களினை ஓட்டுவதற்கு சில இறுக்கமான பசை வகை தேவைப்பட்டது. ஒரு தடவை ஓட்டினால் அதை அகற்ற முடியாது. ஆகையினால் மாணவர்கள் தாம் வடிவமைக்கும் சித்திரத்தை அழகாக ஒரு மட்டையில் வைத்து சரி பார்த்தார்கள். இங்கு மாணவர்களின் குழு வேலைகளுக்கும் (Team work ) மதிப்பளிப்பதால் தமது படைப்புகளை முடிவுக்கு கொண்டு வர முன்பு, சக மாணவர்கள், ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்வதும் அவசியமாகின்றது. தமது முடிவே இறுதி முடிவாக இருப்பினும் மற்றையவர்களின் கருத்துக்கள் ஆக்கபூர்வமாக இருப்பின் அவற்றை அவர்கள் தமக்கு சாதகமாக எடுத்துக் கொள்வார்கள். இப்படியாக, எனது மேற்பார்வையிலும் கற்பித்தலிலும் ' மனித நேயம்' பற்றிய சிறு கட்டுரைகளும் (அரசின் ஆங்கில பாடத்திட்டத்திற்கமைய கற்பிக்கப்பட்ட பாடங்கள்) எனது பார்வையில் கலை வடிவங்களும் எமது பாடசாலை சுவர்களில் இன்றுவரை அலங்கரிக்கின்றன.
You must be logged in to post a comment Login