உள்ளத்தில் எழும் காதலை வார்த்தைகளில் வடிப்பது என்பது சுலபமானதில்லை.
இளம் வயதில் காதல் வயப்பட்ட இளசுகள், ‘ அலைகடல் வற்றினாலும், அன்புக் கடல் வற்றாத’ என்று கடிதம் எழுதி, சைக்கிளில் கடந்து போகும் போது, காதலி எடுப்பாள் என்ற நம்பிக்கையில் எறிந்து போனாலும், செருப்படி, அண்ணன் உதை என்றெல்லாம் முடிவதுண்டு.
ஆனால், எழுத்துக்களாலேயே காதலை ஈர்த்தவர்களும் உண்டு. முகம் காணாக் காதல், ‘வானொலி கேட்டல், பத்திரிகை வாசித்தல், கவிதை எழுதுதல்’ போன்ற பொழுது போக்குகள் கொண்ட பேனா நண்பர்களாய் ஆரம்பிப்பதில்லையா?
• • •
எழுபதுகளின் இறுதிப்பகுதியில், பதின்ம வயதுகளில் நம்ம வீட்டில் Leo Sayer இன் கசட் ஒன்று இழுபட்டுக் கொண்டு இருந்தது. எங்கிருந்து வந்தது என்று நதி மூலம், ரிஷி மூலம் தெரிந்திருக்கவில்லை.
ஒரு தடவை கசட் பிளேயரில் கேட்ட போது, இலங்கை வானொலியும், திருமண வீட்டு சவுண்டு சேர்விஸ்களும், நியூ மார்க்கட் றெக்கோடிங் பார்களும் தந்த சினிமா இசையின் முன், லீயோ சேயர் நம்மை ஈர்க்கவேயில்லை.
ஜேர்மனியில் வாழ்ந்த இடத்தில் இருந்த அமெரிக்க படைத் தளத்திற்கான பண்பலையைக் கேட்டதில் ஒரு தடவை லீயோ சேயரின் Real Live என்ற பாடலை கசட்டில் றெக்கோட் பண்ணிக் கேட்டதில் ரசனை பிறந்தது. பின்னர் இங்கே வந்ததும், எதியோப்பியன், பிலிப்பைன்காரன் என லியோ சேயரின் பெருமை சொல்லக் கேட்ட பின் தான், சில சர்வதேச அளவிலான ஹிட்டுகளின் சொந்தக்காரன் என்ற விசயம் தெரிய வந்து, CD வாங்கி ரசித்ததில் பிடித்துப் போனது.
இன்று வரைக்கும் றியல் லைவ் தேடிக் கொண்டிருக்கிறேன். இன்னமும் அகப்படவில்லை.
• • •
புனிதம், தெய்வீகம் என்ற தமிழ்க் கவிஞர்களின் புழுகுகளுக்கும் அப்பால், உண்மையான காதல் தரும் உணர்வு…
வார்த்தைகளால் வடிக்க முடியாதது.
சாதாரணமாக வீட்டிற்குள் அருகருகே நின்று எதையாவது செய்து கொண்டிருக்கும் போது எதேச்சையாக கொடுக்கும் முத்தம்… காதலின் உச்சங்களில் ஒன்று.
அதன் இனிமைக்கு எங்கே வார்த்தையைத் தேடுவோம்?
You must be logged in to post a comment Login