Recent Comments

    அன்பு என்னும் சுடராய்…!

    பனி கொட்டும் குளிர் காலங்களில் எனது வீட்டில் வாகனம் நிறுத்துவதற்கு ஒரு தற்காலிக கூடாரம் ஒன்றை ஒவ்வொரு வருடமும் நிர்மாணிப்பதுண்டு. இரும்புக்குழாய்களும் தடித்த பிளாஸ்டிக் துணியாலும் ஆன அந்த கூடாரம் காற்றில் கிளம்பி விடாதபடிக்கு ஒரு பக்கத்தில் நிலத்தில் ஆணியால் அறையப்பட்டு, மறுபக்கத்தில் பாரமான சீமெந்துக் கற்களால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும்.

    பனி கொட்டும் குளிர்காலங்களில் சில நேரங்களில் கடும் காற்று வீசும். பல வருடங்களாக எந்த சேதமும் இருந்ததில்லை.

    சென்ற முறை, ஒரு இரவு கடும் காற்று வீசியிருந்தது. இரவு ஏதோ சத்தம் கேட்டது. காலையில் காற்று வீசுகிறதே என்று கதவைத் திறந்து பார்த்தால், அறையப்பட்டிருந்த ஆணியைக் கிளப்பி, என் காரின் பக்க கண்ணாடியைப் பிடுங்கிக் கொண்டு, அப்படியே வளைந்து அடையாளம் காண முடியாதபடி பக்கத்து வீட்டுக்கு மின்சாரம் போகும் வயரில் தொங்கிக் கொண்டிருந்தது.

    ஒரு இரும்புக் குழாய் மூன்றாவது வீட்டில் போய் விழுந்து பிறகு கொண்டு வந்து தந்தார்கள்.

    மின்சாரம் பாயும் வயர். இரும்புக் குழாய்கள்.

    தீயணைப்புப் படைக்கு அழைப்பு விடுக்க...

    கூவிக் கொண்டு வந்து, நீண்ட குழாய் ஒன்றினால் அதை வயரிலிருந்து கழற்றி எடுத்தார்கள்.

    பாரிய ஆபத்துக்களை வருவித்திருக்கக் கூடிய சம்பவம்.

    சிரித்துக் கொண்டே 'கவனம்' என்றார்கள்.

    வீட்டுக்காரி தன்னிடம் இருந்த கோப்பிக் கடைக் கார்ட் ஒன்றுடன் ஓடி வந்தாள்.

    இல்லை, வேண்டாம் என்று நாகரிகமாக அவர்கள் தங்கள் கடமையைச் செய்ததாக மறுத்த போதும், கைகளில் திணித்து விட்டேன்.

    கொட்டிய பனி. குழாய்கள் கழற்ற முடியாதபடிக்கு வளைந்து நெளிந்தபடி இருக்க, ஒருவாறாக கூட்டி திரட்டி சீமெந்து கற்களால் பாரம் வைத்து, பனி உருகி முடிந்த பின்னால் தான் அவற்றை அப்புறப்படுத்த முடிந்தது.

    இவ்வாறாகத் தான் என் கடந்த வருட புத்தாண்டு மலர்ந்தது.

    கண்ணாடி திருத்திய செலவோடு!

    ***

    புது வருட உறுதிமொழிகள் முன்பு எடுப்பதுண்டு. இப்போது அதெல்லாம் கிடையாது.

    யாராவது கேட்டால், கெட்ட பழக்கம் இருக்கிறவன் தானே அதை விடுவதாக உறுதிமொழி எடுக்க வேண்டும், எனக்கெதற்கு? என்று சொல்லுவேன்.

    தற்போது திரும்பிப் பார்க்கிறேன். கடந்த வருடம் எப்படி எனக்கு இருந்தது என்று.

    எதுவும் சிறப்பாக நடந்ததாகவோ, எதையும் சிறப்பாக செய்ததாக எதுவும் நினைவில் வரவில்லை.

    கடந்த வருடத்தில் எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்ததில்லை. செய்ய வேண்டியவற்றைக் கூட செய்வதற்கான மனநிலை வந்ததில்லை. எதைச் செய்தாலும் துன்பம் என்ற நிலையில், எதற்கு அனாவசியமாக செய்யப் போய் மன உழைச்சலுக்கும் வேதனைக்கும் ஆளாக வேண்டும் என்ற நினைப்பில் சென்ற வருடம் எதையும் செய்ய வேண்டும் என்று விருப்பம் கொள்ளவில்லை.

    எனவே உறுதிமொழிகள் எதுவும் எடுக்கவும் இல்லை.

    வழமையாக செய்யும் எனது பொழுதுபோக்குகள், ஆர்வம் கொண்ட விடயங்கள் என செய்திருக்கிறேன். மற்றும்படி சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் இல்லை.

    அதற்கு காரணமும் உண்டு.

    கடந்த சில ஆண்டுகளாக வாழ்க்கை பெரும் சோதனைகளுக்கு உள்ளாகியிருந்தது.

    பல நேரங்களில் நாங்கள் செய்யும் விடயங்களால் சோதனைகள் வருவதுண்டு. ஆனால் சம்பந்தமில்லாமல் எதிர்பாராமல் வரும் துன்பங்களை விளங்கிக் கொள்ள முடியவில்லை.

    குறிப்பாக சென்ற கிறிஸ்மஸ் காலம் பெரும் சோதனைக்காலமாக எங்கள் முழுக் குடும்பத்தினருக்குமே இருந்தது.

    இருண்ட காலம்.

    நானோ பெரிதாக என்னுடைய துன்பங்களைப் பற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை. வெளியில் காட்டிக் கொள்வதுமில்லை.

    அந்த நேரத்து என்னுடைய பேஸ்புக் பதிவுகளைப் பார்த்தால், அதே நகைச்சுவை உணர்வு இருக்கும்.

    நம்முடைய துன்பம் நம்மோடு. இதற்குள் மற்றவர்களுக்கு எதற்கு துன்பம் கொடுப்பது என்ற எண்ணம் தான்.

    இரண்டு பேருடன் மட்டுமே என் துன்பங்களைப் பற்றி புலம்புவேன்.

    மனைவி சொல்வார், நீ ஏன் துன்பங்களை பற்றி மட்டும் கவலைப்படுகிறாய்? உனக்கு கிடைத்திருக்கும் நன்மைகளைப் பற்றி நினைத்துப் பார். எவ்வளவு பேர் உன்னை விட மோசமான நிலையில் இருக்கிறார்கள் என்று.

    நண்பி சொல்வார், உனக்கென்னடா பிரச்சனை? நீ ஒருத்தன் தாண்டா கொடுத்து வைச்சவன். உனக்கு காசு மட்டும் தானே பிரச்சனை? என்னைப் பார்! என்று.

    அவர் பட்ட துன்பங்களோடு பார்த்தால், நான் கொடுத்து வைத்தவன்.

    இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்...

    துன்பங்கள் தவிர்க்க முடியாமல் எங்களைச் சூழும் போது, வாழ்க்கையும் எதிர்காலமும் இருண்டதாக இருக்கும் போது, இவையெல்லாம் முடிவுக்கு வரும் என்று மனதில் நம்பிக்கை உணர்வு பெறுவதற்கு தனிமனிதர்களாக இருக்கும் போது பலரால் முடிவதில்லை. அதற்கு கடுமையான மன உறுதி வேண்டும். தங்களுடைய துன்பங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு ஆறுதல் பெற முடியாதவர்கள் இந்தப் பிரச்சனைகளில் இருந்து மீளவே முடியாது, இனிமேல் வாழ்வதில் அர்த்தமில்லை என்று சில நேரங்களில் தவறான முடிவுகளுக்கு வந்து விடுகிறார்கள்.

    ஆனால், எங்களைச் சூழ அன்பான மனிதர்கள் இருக்கும்போது, பல துன்பங்களை நம்பிக்கையுடன் கடந்து விட முடியும்.

    துன்பங்கள் எங்களைச் சூழும் போது, நாங்கள் தான் அதற்கான காரணம் என்று எங்கள் மீது குற்றம் சாட்டுகிறவர்கள், எங்களைக் கேலி செய்பவர்கள் சூழ இருந்தால் துன்பங்கள் தரும் வேதனையை விட சூழ உள்ளவர்கள் தரும் வேதனைகள் தாங்க முடியாததாக இருக்கும்.

    வாழ்க்கையில் நொந்து போயிருப்பவர்களை தற்கொலைக்கே தூண்டியவர்களைக் கூட கண்டிருக்கிறேன்.

    வாழ்க்கை எனக்கு பெரிதாக அதிஷ்டத்தை தந்ததாக நினைவில்லை. நாளாந்த வாழ்க்கையை ஓட்டிக் கொள்ள விட்டிருக்கிறது.

    ஆனால் அன்பான மனிதர்களைத் தந்திருக்கிறது. அதை ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும்.

    பெற்றோர்கள், வளர்த்த அப்பா, ஆச்சி, சகோதரர்கள், அவர்களின் பிள்ளைகள், நண்பர்கள், என் குடும்பத்தினர், வேலை இடத்து நண்பர்கள் என்றெல்லாம் அன்பு என்ற விடயத்தில் எனக்கு குறைவு இருந்ததில்லை.

    வேலை இடத்தில் கூட, கண்டிப்பானவர்கள் என்று பலராலும் வெறுக்கப்படும் மேலாளர்கள், எல்லோரோடும் சினந்து கொண்டிருப்போர்கள் எல்லாரும் என்னோடு பண்போடு தான் பழகுவார்கள்.

    எப்போதும் அன்பான மனிதர்களால் சூழப்பட்டே இருக்கிறேன்.

    ஆனால், இயற்கையும் வாழ்வும் எப்போதும் சிக்கலான மனிதர்களை தந்து கொண்டேயிருக்கும்.

    சிலர் காரணமில்லாமலேயே உங்களை வெறுப்பார்கள். என்னைக் கண்டு, என்னைத் தெரியாதவர்கள் காரண காரியமில்லாமலேயே என்னை வெறுப்பதைக் கண்டிருக்கிறேன்.

    மற்றவர்கள் மீதான கடும் வெறுப்பைக் கொண்டிருப்பவர்கள் பற்றி எனக்கு ஒரு விளக்கம் உண்டு.

    இவர்கள் தங்களை வெறுக்கிறார்கள். தங்களுடைய தோல்விகள், இயலாமைகள் காரணமாக மற்றவர்கள் மீது வெறுப்புக் கொள்கிறார்கள். அதற்கு பொறாமை அடிப்படையாக இருக்கலாம். அவர்கள் வளர்க்கப்பட்ட விதம் காரணமாக இருக்கலாம். பிரித்தாளும் தந்திரத்தில் ஒருவரை ஒருவர் வெறுக்கக் கற்றுக் கொடுக்கப்பட்ட இனமாகக் கண்டிருக்கிறேன். சில நேரம் மரபணுக்கள் கூட காரணமாக இருக்கலாம்.

    நானும் என் பங்கிற்கு மோசமான மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன்.

    வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு சொந்தச் சகோதரர்களுக்கே ஈனச் செயல் புரிந்தவர்களை சிறுவயதில் கண்டிருக்கிறேன்.

    மற்றவர்கள் நல்லாக வரக் கூடாது என்பது முதல் அழிக்க நினைக்கும் எண்ணம் வரைக்கும் உள்ள evil people எனப்படுவோரைக் கண்டிருக்கிறேன்.

    தங்களைத் தவிர மற்றவர்களை வெறுக்கும் சுயமோகிகளைக் கண்டிருக்கிறேன்.

    நம்பியவர்களை ஏமாற்றியவர்களைக் கண்டிருக்கிறேன்.

    ஏமாற்றும் நோக்கத்துடன் நம்ப வைப்பவர்களைக் கண்டிருக்கிறேன்.

    ஆனால் எப்போதும் நச்சு மனிதர்களை என் வாழ்க்கையில் விலத்தியே வைத்திருக்கிறேன்.

    நம்பிப் பழகியவர்கள் மாறினாலும், துரோகம் செய்து விட்டார்கள், முதுகில் குத்திப் போட்டார்கள் என்று கண்டவர்களுக்கு எல்லாம் சொல்லித் திரியும் பழக்கம் எனக்கு இருப்பதில்லை. அவர்களை நம்பியதில்  உள்ள தவறில் எனக்கும் பங்குண்டு.

    நச்சு மனிதர்களால் அனாவசிய மன உழைச்சல்கள் ஏற்படும் என்பதால், அவர்களுடன் தொடர்பானவர்களையும் தவிர்த்துக் கொள்வதுண்டு. காரணம், அவர்கள் எங்களைப் பற்றி சொல்லிய எதையாவது இவர்கள் எனக்கு சொல்லப் போக அதனால் ஏற்படும் அனாவசிய மன உழைச்சல்களைத் தவிர்ப்பதற்காக.

    நான் ஒன்றும் கோபமே வராத முனிவன் இல்லை.

    பகைவர்களை நேசியுங்கள் என்று யேசு சொன்ன மாதிரி, பகைவர்களை நேசிக்கும் அளவில் இல்லை. ஆனால் பழி வாங்கும் நோக்கமோ, பதிலுக்கு அவதூறு செய்யும் நோக்கமோ இருந்ததில்லை.

    என்னோடு பழகிய பின்னால், பிடிக்காமல் போனவுடன் நான் சொல்லாதவற்றையே நான் சொன்னதாக சொன்னவர்களும் உண்டு. பிடிக்காவிட்டால் மெளனமாக விலத்திக் கொள்வேன் என்பது என் நல்ல நண்பர்கள் பலருக்கும் தெரியும்.

    முன்பு தாயகம் வெளியிட்ட காலத்தில் அவதூறுகளை எல்லாம் வன்மத்தோடு எதிர்கொண்ட அனுபவம் உண்டு. எழுதியவர்களே வெட்கப்படும் அளவுக்கு கேலியும், சிரிக்கும் அளவுக்கு கிண்டலுமாக எழுதியதுண்டு;.

    இப்போது நண்பர்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது. என்னைப் பற்றி எழுதப்படுவன பற்றி நான் பதில் அளிக்காதது பற்றி!

    அவதூறு செய்தவர்களை பேஸ்புக்கில் தடுத்தாட் கொண்டிருக்கிறேன். அவ்வளவு தான்!

    தங்களை மேலானவர்களாக நினைத்து எனக்கு கதை சொல்பவர்களைக் கடந்து சென்றிருக்கிறேன்.

    அவர்கள் எல்லாம் என்ன மன அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்களோ?, இதற்குள் நானும் எதையாவது எழுதி கிண்டல் பண்ணி இன்னும் வேதனைப்படுத்த வேண்டுமா? என்ற எண்ணம் தான் இப்போது மேலிடுகிறது.

    மற்றும்படி சுவாரஷ்யமான கேலியும் கிண்டலுடனும் எழுதியவர்களே வெட்கப்பட்டு எதற்கடா மாட்டிக் கொண்டோம் என்று நினைக்கிற அளவுக்கு எழுதுவது ஒன்றும் பெரிய பிரச்சனையில்லை.

    இதையெல்லாம் ஒவ்வொரு மனிதர்கள் பற்றியும் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பாகத்தான் கருத முடிகிறது.

    எப்படித்தான் நாங்கள் அன்பு செய்தாலும், பலர் இயல்பாகவே அந்த அன்பை உதாசீனம் செய்பவர்களாக, பலவீனமாகக் கருதி பயன்படுத்தும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களை அடையாளம் தெரியாமல் நம்பி ஏமாறக் கூடும்.

    ஏமாற்றம் மனவேதனைகளையும் வெறுப்பையும் தரும். கோபத்தைத் தரும். பழி வாங்கும் எண்ணத்தை தரும்.

    உண்மையான அன்பாக இருந்தால், குரூரமான பழி வாங்கும் எண்ணம் எல்லாம் வராது.

    தங்கள் மீதான அன்பில் முறிவு ஏற்பட்டு, தங்களை பழி வாங்கும் எண்ணம் எனக்கு இருக்கும் என்று பயம் கொண்டவர்களைக் கண்டு சிரித்திருக்கிறேன்.

    இவர்கள் எல்லாம் வாழ்வில் கிடைக்கும் பயனுள்ள அனுபவங்கள்.

    வெறுப்பும் கோபமும், நாங்கள் கொண்டிருப்பவர்கள் மீது அல்லாமல், எங்களிலேயே பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

    வீட்டில் சொல்லுவேன்,

    'அவங்கள் சும்மா எதையாவது சொல்லிப் போட்டுப் போவாங்கள். அதுக்கு நான் ஏன் மன உழைச்சல் பட வேண்டும்?'

    இதனால் எப்போதுமே கோபம் கொள்பவர்களுக்கான என் புத்திமதி அதை தவிர்க்கச் சொல்வதே.

    கோபம் எதிராளிக்கு ஏற்படுத்தும் பாதிப்பை விட, எங்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு அதிகம்.

    எங்கள் சுயமரியாதைக்கும் கௌரவத்திற்குமான இழுக்கு என்றோ, மற்றவர்கள் எங்களைப் பற்றி இழிவாக நினைப்பார்கள் என்றோ நினைக்கத் தேவையில்லை.

    அதிலும் மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி அலட்டிக் கொள்ளாத எனக்கு இது பெரிய பிரச்சனையாக இருப்பதில்லை.

    எனவே, கோபம் தவிர்! சினம் தணிக!

    புதிய வருடம் பிறந்திருக்கிறது.

    புதுவருட உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று நினைத்தால்... அது அன்பு செலுத்துதல் பற்றியதாகவே இருக்கட்டும்!

    நச்சு மனிதர்களை விட்டு விலகியே இருங்கள். பாசாங்கான அன்புகளால் வரும் துன்பங்கள் அதிகம்.

    உங்களுடைய அன்புக்குத் தகுதியற்றவர்கள் என்ற எண்ணத்தோடு கடந்து செல்லுங்கள்.

    எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் அன்பு செலுத்துங்கள். அந்த அன்பு உண்மையானதாக இருக்கட்டும்.

    வாழ்வில் இருண்ட கணங்களை எதிர்கொள்ள நேரிடும் போதெல்லாம் உங்களுக்கு உறுதுணையாக இருக்க... அன்பானவர்களைச் சம்பாதித்துக் கொள்ளுங்கள்.

    Postad



    You must be logged in to post a comment Login