Recent Comments

    இலக்கியத்திலும் போர்: யார் தலைவர்?

    Leader

    க.கலாமோகன்

    இலக்கியம் படைப்பில் உள்ளதா அல்லது எழுதுபவர் தலைவர் ஆதலில் உள்ளதா? அநேகமான (எல்லோரிடமும் அல்ல) படைப்பாளிகளிடமும் சொல்வேன், உங்கள் “எழுத்து” உங்களைச் சாத்திரிகளாகக் காட்டுவதே. படைப்பு சாத்திரி சமாசாரம் அல்ல. கலைத்துவத்தால் கட்டப்படுவன தற்காலிக வாழ்வுத்துவ வழிகள். இந்த வழித்துவம் தமிழினத்தில், இலக்கியப் பாலத்தில் சந்தோஷ இலக்கில் தொடங்கியபோதும், பின் தலைமைத்துவப் போட்டிகளைக் காட்டுவதிலேயே முடிகின்றன. இலங்கையில் முற்போக்கு இலக்கியம் என்று தோன்றியது. இதனது தலைவர் யார்? சிவத்தம்பியா? கைலாசபதியா? முற்போக்கு இலக்கியம் என்பது இடதுசாரிக் கொள்கைகளைத் தூவியபோதும் இவர்களைத் தூக்கியோர், இவர்கள்போல் இலக்கிய தலைமைத்துவத்தை இடது கைக்குள் வைத்து வலது கையால் தலைமையத் தேடுபவர்களே. இதனது தேடல் ஓர் மறைமுகக் கோட்டைக்குள். இது இன்றும் புகலிடத்தில் காக்கப்படுகின்றது என்பது வேதனையை எனக்குத் தருகின்றது. இந்தத் தலைமை நினைப்பு கலையின் அழகிய தோற்றலான எழுத்து எனும் வழியில் கொடுமையான கல்களைப் போடும். இது எழுத்தையும், மனிதத்துவத்தின் தற்காலிக இருத்தலையும் கெடுதல் செய்யும் என நான் நினைப்பது எனது நோக்கு. எழுத்தில் அப்போதும் இப்போதும் தலைமை வெறி மூச்சில் உள்ளது. குடும்ப, ஒழுங்கை, பள்ளம், குள்ளம், குறிச்சி, நாடு, நாடுகள், தேசம், தேசங்கள், புலம்பெயர்வுகள் …….. ஒவ்வொரு பிரிவிலும் ஒருவர் தலைவர் ஆகாது இருக்கும் கனவைக் கொள்ளாது இருப்பாரா? மனிதத்துவம் கெடுவது தலைமைத்துவத்தால், இந்த மனிதத்துவத்தைக் கெடுப்பதில் எழுத்தர்கள் பலர் தலைமைத்துவ நிழலைக் கொஞ்சிக்கொண்டிருக்கின்றார்கள். “முற்போக்கு” மீது எதிர்ப்பைக் காட்டி எஸ்பொ (இவர் தமிழ் மொழியினது காப்பாளர்களில் ஒருவர், எனது பிரியமான நண்பர் ) “நற்போக்கை”த் தொடக்கினார். இந்தத் தொடக்கம் ஓர் போரின் தொடக்கமே. “முற்போக்கு” எழுத்தர்கள் “நற்போக்கை” நிறைய எதிர்த்தனர். இரண்டு போக்குகளும் இலக்கியப் போரினை வெறித்துவதுடன் விரும்பின. சொல்லில் என்ன உள்ளதாம் போரே இவர்களது குறியாகும்போது? போர்கள் இல்லாமல் மனித இயல்பு இல்லை. தலைமைத்துவம் இல்லாத போர்கள் அவசியமானவையே. படைப்புகளது பெருமையைச் சிறுமைகளாக்குவதே இலக்கியத் தலைமைத்துவம். இது காரணமாகவே கப்காவும் (kafka) வும், எங்களுக்கு கவிதை உயிப்பைத் தந்து சின்ன வயதில் காட்டிய சிவரமணியும், வேறுபல படைப்பாளிகளும் தங்களது எழுத்துகளை அழிக்கத் துடித்தனரா? “நற்போக்கு”, “முற்போக்கு” இவைகள் தொடங்கிய வேளையில் எவரும் “பிற்போக்கு” இலக்கியம் எனத் தொடங்கவில்லை. இதனைத் தொடங்க யாரும் இல்லையா? (சில வேளைகளில் நான் தொடங்குவேன்….) guernica Pablo Picassoகலையின் செழுமைகளை எப்போதும் அழிப்பன “போக்கு” வாதங்களே. “நற்போக்கு”, “முற்போக்கு” எனும் போக்குகள் இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் தலைமைத்துவப் போர்களை எப்போதும் வாசிக்க வைத்துள்ளன. இந்தப் போர்கள் இல்லாமல் இலக்கியம் இல்லையா? உலக இலக்கிய வயல்களில் இந்தப் போர்கள் நிறைய உள்ளன, ஆனால் போர் முறைகள் வித்தியாசப்படுவன. இந்தப் போர்களினால் இவைகளை விரும்பாதோரின் அழிவைத் தேடுகின்றனர் நிறைய வாசிக்கப்படும் எழுத்தர்களும், விமர்சகர்களும்…… தமிழ் நாட்டைக் குறிப்பிடுகின்றேன். இந்த நாட்டின் கிராமங்களில் ஏழ்மை வாழ்வை வாழ்ந்தோர் “நற்போக்கு”, “முற்போக்கு” போக்குகளுக்கு மேலாக நிறையக் கலைகளை மக்கள் நுகர்வுக்குக் கொடுத்துள்ளனர். இந்த நுகர்வுகளில் நிறையச் சிவப்புப் பூக்கள் இருந்தன. இந்தப் பூக்களை கி.ராஜநாராயணனும், பா.செயப்பிரகாசமும், குணசேகரனும், சிவகாமியும் இவர்களது நோக்கில் இருப்பவர்களும் எமக்குத் தருகின்றனர். எது உள்ளதாம் போக்கில்? பல போக்குகள் படைப்பாளிகளை வெளியே தெரிய வைப்பன. உண்மையான போக்குகள் எமது வயல்களிலும், எங்களது சேமப்படுத்தப்படாத வீதிகளிளும்தாம் உள்ளன. இந்தப் போக்குகள் புறக்கணிப்புக் கிணறுகளில் விழுவதில்லையா? எழுத்து எது? இது வாசிக்கப்படவேண்டியதா? எழுத்து கேட்கப்படவேண்டியதும். வீதிகளில் மூட்டைகளைச் சுமப்பவர்கள் சொல்வன எழுத்துகளே, இவை செவிகளால் வாசிக்கப்படவேண்டியன. உங்களது நூல்களை எறியுங்கள். பின் வேலைத் தளங்களில் வேலைகளை முடித்துவிட்டு வந்து, தொழிலார்கள் எங்கு போகின்றார்களோ அங்கு போய் அவர்களிடம் கதைக்கவேண்டாம். கேளுங்கள் அவர்களை. அவர்கள் அவர்களது சக தொழிலாளர்களுடன் பேசுவதைக் கேட்டல் ஓர் வாசிப்பு என்பது எனக்கு விளங்குகின்றது. இந்த வாசிப்புக்குள்ளால் மேல் கீழ் நிலைகள் தெரியும். சிலர் தெரிவை விரும்புபவர், பிறர் தெரிவை உண்டும் தெரிவின்மையைப் போதிப்பவர். இந்த வேளையில்…. எனக்குள், கொழும்பு…. Daily Mirror, இலங்கையின் சிறப்பான பத்திரிகையாக இருந்தது. இதனது ஆசிரியர் Regie Michel, பத்திரிகைத்துவத்தின் பிதா எனக் கருதப்பட்டவர்.. இவர் தமிழர். இவரை ஓர் தடவை (1982 இல் இருக்கலாம்) கொழும்பில் நடந்த மூன்றாம் உலகம் மீதான கூட்டத்தில் கண்டுள்ளேன். மிகவும் அழகிய மனிதர், புன்சிரிப்பு இவருடன் பூத்ததுபோல போல இருக்கும். இவரது ஆசிரியத் தலையங்கம் எப்படி எழுதப்பட்டது? ஒவ்வொரு காலையிலும் இவர் தனது காரியாலத்தைவிட்டு இறங்கி அருகில் உள்ள தேநீர்க்கடைக்குப் போவார். அங்கு பலதரப்பட்ட நிறையத் தொழிலாளிகள். அவர்கள் பேசுவதைக் கேட்பார். பின்பு ஆசிரியத் தலையங்கம் வரும். இவரது தலையங்கங்கள் ஆங்கிலப் பத்திரிகைத்துவத்தின் சிறப்பான பதிவுகளாக உள்ளன. இந்தப் பத்திரிகைத்துவ மேதை, தொழிலாளர் கருத்துகளை ஏந்தித் தனது ஆசிரியத் தலையங்கத்தை எழுதினார். இவர் “போக்கு” இனர் அல்லர். இவரை நோக்கு இனர் எனச் சொல்லலாம். மனிதத்தின் சீர்கேடுகளை அழிப்பன போக்குகள் அல்ல. போக்குகள் சொல்களின் மேடைகள் ஆகிவிடக்கூடாது. இவர் வாரம் ஓர் தடவை Daily Mirror இல் எழுதிய சின்னக் குறிப்பு, தலைப்பை மறந்துவிட்டேன் (“என்னைக் குடைவது” என ஆங்கிலத்தில் என நினைக்கின்றேன். எனது கொஞ்ச ஆங்கில அறிவு வாசிப்பிலும் தரமான இலக்கியப் பதிவாக இவரது எழுத்துகள் இருந்ததை அறிகின்றேன். எமக்குத் தேவையானது இலக்கியம், தலைமைகள் அல்ல.

    Postad



    You must be logged in to post a comment Login