(மே 18 முடிவின் போது தாயகம் இணையத் தளத்தில் வெளியான கட்டுரை இது. காலச் சுழற்சியில் விதியும் வரலாறும் எப்படி மீண்டும் ஒரு சுற்றில் வருகின்றன என்பதை திரும்பிப் பார்த்த போது எழுந்த சிந்தனை இது.)
இருபது வருடங்களுக்கு முன்பாக தாயகத்தின் முதல் இதழை வெளியிடுவதற்காக அச்சிட்டுத் தயார் செய்து விட்டு மறுநாள் வினியோகிக்கும் உத்தேசத்துடன், இரவு வேலைக்கு சென்று நள்ளிரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கனடாவில் இருந்த கூட்டணி பா.உ ஒருவருக்கு நெருக்கமாக இருந்த ஒருவர் எலிவேட்டரில் கண்ட போது, சக தமிழர் என்பதை உணர்ந்து அமிர்தலிங்கத்தைச் சுட்ட லேட்டஸ்ட் செய்தியைச் சொன்னார். அத்துடன் ‘றோ தான் செய்திருக்கு’ என்ற அரசியல் ஆய்வையும் கூடவே போனஸாக தந்தார்.
எனவே, முதல் முதலாய் வெளியிடும் பத்திரிகையில் ‘சுடச் சுடச் செய்திகளை முந்தித் தர வேண்டும்’ என்பதற்காக வேறுவழியின்றி, அமிர் கொலை பற்றிய செய்தியை உடனடியாக அச்சமைப்புச் செய்து, மறுநாள் காலை பிரதி செய்து பொருத்தி வெளியிட வேண்டி வந்தது. முதல் மூன்று இதழ்களிலும் செய்தியின் பின்னால் வந்த குறிப்புகளில் ஒன்றாக, அமிரின் கொலையும் ‘வளர்த்த கடாக்களுக்கே பலிக்கடாவோ?’ என்ற குறிப்புடன் வெளிவந்தது. (அந்தப் பிரதிப் பகுதி மட்டும் மஞ்சள் நிறத்தில் வெளிவந்ததால் தான், பின்னால் ஐரோப்பியக் கவிஞர் தாயகத்தை ‘மஞ்சள் பத்திரிகை’ என்று பிரகடனம் செய்தாரா? என்பது இது வரை தெரியாது!)
முதல் இதழை கடைகளில் வினியோகித்து வந்த பின்னால், முதலில் தொலைபேசி எடுத்து கருத்துத் தெரிவித்து நேரில் சந்திப்பதில் ஆர்வம் கொண்டது தேடகம் நண்பர்கள். அடுத்த வந்த அழைப்பில் ஒன்று… பக்கத்துக் கட்டிடத்தில் ஜாகை அமைத்து ‘புலிக்கு வேலை செய்து’ கொண்டிருந்த கும்பலில் ஒன்றான ஞானமில்லாத ‘பண்டி’தன். மிரட்டல் பாணியில் வந்த அந்த அழைப்பின் நோக்கமே, அந்த ‘வளர்த்த கடாக்களுக்கே பலிக்கடாவோ?’ என்ற பதத்தை பயன்படுத்துவதற்கான உரிமை பற்றியதே. ‘நீ எப்பிடி அப்பிடி எழுதுவாய்?’. அதாவது அந்தக் கொலைக்கான பழி புலிகள் மீது இல்லை என்பதை வலியுறுத்தி, மிரட்டிப் பணிய வைத்து, முடியாவிட்டால் ‘தம்பிக்கு இருட்டடி போட்டு’ முளையிலேயே கிள்ளி விட எடுத்த முயற்சி அது.
முன்பாக வேறெந்த வழிகாட்டிகளும் இல்லாமல், யாருமே பயணிக்காத ஒரு பாதையில் காலடி எடுத்து வைத்து, தமிழர்கள் கருத்துச் சுதந்திரம் குறித்து மதிப்புக் கொண்டிருப்பார்கள் என்ற அதீத நம்பிக்கையில் சுதந்திரமான கருத்தாடலுக்கான ஒரு களம் அமைக்கப் புறப்பட்ட முயற்சி அது. அப்போது நான் பயமறியாத இளங்கன்று! (இப்போது? முதிர்ச்சியடைந்த முரட்டுக் காளையாய் இருக்கக் கூடும்.)
இவ்வாறான அனுபவங்கள் முன்பின் இல்லாவிட்டாலும், இவ்வாறான மிரட்டல்களைக் கண்டு பயந்து கடையைப் பூட்டி விட்டு ‘புறுபுறுத்துக் கொண்டே நம்ம வேலையைப் பார்த்துக்’ கொண்டிருக்கும் நோக்கமோ, பிரபாகரனின் படத்தை முன்பக்கத்தில் போட்டு ஆயுத ஒப்படைப்புச் செய்து ஈனப்பிழைப்பு நடத்தும் கீழ்மைப் புத்தியோ இல்லாமல், இவ்வளவு தூரம் வந்த பின்னாலும் இவர்களுக்குப் பயந்து வாழ வேண்டுமோ என்ற எண்ணம் தான் மனதில் தலை தூக்கியது.
அந்த முயற்சிக்கு தேடகம் நண்பர்கள் உட்பட்ட பல்வேறு ஆர்வலர்கள் கொடுத்த தோள்கொடுப்புகளும், ‘தாயகம்காரர்’ என்ற முத்திரை குத்தலுக்குப் பயம் கொள்ளாது எழுதிய எழுத்தாளர்களும் கவிஞர்களும், கண்ணாடி உடைப்புகளுக்கும் பயப்படாமல் பத்திரிகை விற்ற வியாபார நிலையங்கள், இவ்வாறான ஒரு பத்திரிகை வெளிவர வேண்டும் என்பதற்காகவே மிரட்டல்களுக்குப் பயப்படாமல் விளம்பரம் செய்த வர்த்தகர்களும், எல்லாவற்றுக்கும் மேலாக முழுநேர வேலையையும் செய்து கொண்டே பத்திரிகை நடத்த வேண்டிய நிலையில் நேரத்திற்கு ஒழுங்காக பத்திரிகையை வெளியிட முடியாத போதும் கடைகளில் காத்திருந்து வாங்கிச் சென்று வாசித்த வாசகர்களும் என தாயகம் புலிகளின் தடையையும் மீறி தொடர்ந்தும் வெளிவந்தது.
எந்த வித இயக்க அரசியல் பின்னணியும் இல்லாத தனிமனிதனுக்கு இந்த மிரட்டல் என்றால்…?
அமிரின் கொலை நினைவாக அவரது ஆதரவாளர்கள் ரொறன்ரோவில் ஒரு நினைவு நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தனர். அதில் கலந்து கொள்ளச் சென்ற போது நிலக்கீழ் தொடருந்து நிலையத்திலிருந்து அருகிலிருந்த மண்டபம் வரைக்கும் இருமருங்கிலும் புலிக்காடையர்களும் குண்டர்களும் அணிவகுத்து நின்று போவோர்கள் மீது நெற்றிக்கண் அனல் பார்வை வீசிக் கொண்டிருந்தனர். தங்களால் கொலை செய்யப்பட்ட, ஒரு மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவனின் மரணத்தை நினைவு கூரச் சென்றவர்களை நேரடியாக மிரட்டாமல், ‘உங்களைக் கவனிக்கிறம்’ என்ற செய்தியைத் தருவதற்காக நடத்தப்பட்டதே அந்த அணிவகுப்பு. நண்பருடன் தனியாக அந்தக் கூட்டத்தைக் கடந்து தான் மண்டபத்திற்கு செல்ல வேண்டி வந்தது. (சிங்கம் சிங்கிளாத் தாண்டா வரும், ‘பண்டி’தான்டா கூட்டமா வரும்!)
மண்டபத்தில் பின்னால் வரிசையாக நின்று அந்த உலகத்தமிழ்த் தொண்டரடிப் பொடிகளும் குண்டரடிதடிப் பொடியளுமாய், அட்டகாசமாய் சிரிக்கும் தமிழ்ப் படத்து வில்லன்களின் பின்னால் கையைக் கட்டிக் கொண்டு தலையைச் சரித்து இளிக்கும் அடியாட்கள் போல, கூட்டத்தில் உரையாற்றுவோர்கள் மீது மிரட்டல் தொனியில் பார்த்த பார்வையைக் கண்டு எமது இனம் வந்து சேர்ந்திருக்கும் சீரழிவு நிலையைக் கண்டு மனம் வெதும்பத் தான் முடிந்தது.
தங்கள் தலைவனை யார் கொன்றார்கள் என்பதைத் தெரிந்து கொண்டாலும் அதைப் பகிரங்கமாகச் சொல்ல யாரும் தயாராக இருக்கவில்லை. அந்த ஆயுதம் தாங்கிய கொலைகாரர்கள் ஜனநாயகத்திற்கு விடுக்கும் அச்சுறுத்தல் பற்றிக் கடல் கடந்து வந்த பின்னாலும் கண்டனம் செய்ய எவரும் துணியவில்லை.
கூட்டணியின் தூண்கள் என்றில்லாவிட்டாலும் சுவர்க் கற்களாக எண்ணப்படக் கூடியவர்களில் ஒருவரான சட்டத்தரணி, ‘இளைஞர்களே, உங்களைத் தான் நம்பியிருக்கிறோம்’ என்று, அங்கு வந்து உரையாற்றிய பாவத்திற்கு மன்னிப்புக் கேட்டார்.
அமிரின் வாரிசாக கருதப்பட்ட சட்டத்தரணி எழுந்து, ‘என் தலைவன் இறந்து விட்டான், உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன், அவனை நினைத்து அழுவதற்கு எனக்கு உரிமை தாருங்கள்’ என்று கேட்ட போது தான் இத்தனை ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வந்தும் எங்கள் சுதந்திரத்தை எங்கள் ‘உரிமை’களுக்காகப் போராடும் வீரர்களிடம் பறிகொடுத்த அவலம் மனதைக் குடைந்ததுடன் எங்கள் இனத்தின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியது.
வயிற்றுப்பசியால் உணவு வேண்டும் ஒரு பிச்சைக்காரனைப் போல, விரல்களைக் குவித்து தன் அழும் உரிமையை யாசித்த அந்தக் கணம் இன்றும் மனதில் படிந்திருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் அந்த கசப்பான கணத்தை தற்போதைய சூழ்நிலைகளில் மறக்க பிரயத்தனப்பட்டிருக்கலாம். மீள நினைவு கொள்வதில் அச்சம் கொண்டிருக்கலாம். ஆனால், இந்த பகுத்தறிவை இழந்த பைத்தியக்காரத்தனத்திற்கு எதிராக கொலைப்பயமுறுத்தல் மற்றும் உயிர் இழப்பு பற்றிய அச்சம் இன்றி குரல் எழுப்ப வேண்டும் என்ற ஓர்மத்தைக் கொடுத்த காரணங்களில் அந்தக் கணமும் ஒன்று!
வரலாறு சுற்றுக்களாய் சுழல்கிறது. இந்த மிருகத்தனத்திற்கு முடிவு வரும் என்ற நம்பிக்கை மட்டும் மனதை விட்டு என்றுமே அகன்றதில்லை. தாயகம் மூலமாய் அறிந்து கொண்ட சகோதரர் ஒருவர் சில வருடங்களுக்கு முன்பாக, சமாதான காலத்தில் புலிகள் வகைதொகையின்றி மாற்று இயக்கத்தினரைக் கொன்று குவித்ததைக் கண்டு, ‘கடவுள் கூட இதைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்’ என்று மனம் வெதும்பியிருந்தார். அப்போது நான் அளித்த பதில் இதுதான். ‘அண்ணை, நாங்கள் தற்போதைய காரணிகளை வைத்துக் கொண்டு தான் மாற்றம் வராது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். மாற்றம் வரும். ஆனால் அது நாங்கள் எதிர்பார்க்காத விதத்தில் வரும்’. கம்போடியா, லெபனான் என்று எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இழந்த இடங்களில் எல்லாம் சகஜ வாழ்வு எப்படி திரும்பியது என்பதையும் அவருக்கு ஞாபகப்படுத்தியிருந்தேன். இதெல்லாம் எழுபது கோடியை வாங்கிக் கொண்டு மகிந்தவை ஜனாதிபதியாக்குவதற்கு முன்பான உரையாடல்.
அமிர்தலிங்கத்தைக் கொல்வதில் சூத்திரதாரியாக இருந்த ‘மாத்தயாவினால் தாயகம் தடை செய்யப்படுகிறது’ என்று ஒரு கும்பல் எங்களை தெருவில் மறித்து மிரட்டுகிறது. போராட்டத்திற்கு துரோகம் இழைக்கிறீர்கள் என்றும் கொச்சைப்படுத்துகிறீர்கள் என்றும் மேலிடம் முடிவு எடுக்கும் என்றும் அச்சுறுத்தப்படுகிறது.
அதே மாத்தயா அதே புலிகளால் துரோகி என்று கைது செய்யப்பட்டு கொல்லப்படுகிறார். தங்கள் தலைவனை இழந்து தவித்த மாத்தயாவின் விசுவாசிகள் அழுவதற்கான உரிமையை மட்டுமல்ல, உயிர் வாழ்வதற்கான உரிமையையும் இழந்து காட்டுக்குள் கொன்று புதைக்கப்படுகிறார்கள். அதில், எங்களை வழியில் வைத்து மிரட்டி, பின்னால் களம் சென்று மாத்தயாவின் மெய்க்காப்பாளரானவரும் அடக்கம்.
சிறி சபாரத்தினம் கொல்லப்படுகிறார். பல போராளிகள் எரிநெருப்பில் உயிரோடு தூக்கி எறியப்படுகிறார்கள். பத்மநாபா கொல்லப்படுகிறார். அவரது ஆதரவாளர்கள் துரோகிகளாக்கப்படுகிறார்கள்.
திட்டமிட்டு தமிழ் அரசியலின் தலைமைகள் ஒவ்வொன்றாக அழிக்கப்படுகின்றன. அந்த தலைமைகளின் வழிநடந்தவர்களுக்கு வாழும் உரிமை கூட மறுக்கப்படுகிறது.
ஆனால், ஆயுதம் தாங்கிய மிருகத்தின் கொடுமை கண்டு, பொங்கி எழ முடியாவிட்டாலும், இயலாமையால் மெளனமாகவாவது இருக்க வேண்டிய இனம் துரோகிகள் அழிக்கப்பட்டார்கள், தடைக் கற்கள் நீங்குகின்றன, களைகள் பிடுங்கப்படுகின்றன என்று ஆனந்தக் கூத்தாடுகிறது. மனித நாகரீகமே கண்டு வெட்கப்படும் காட்டுமிராண்டித் தனம் விடுதலைக்கான வழியாவது கண்டு வெட்கித் தலை குனிய வேண்டிய இனம், இறுமாப்பில் பெருமை கொள்கிறது. வீடு கொழுத்தும் மன்னனுக்கு கொள்ளி எடுத்துக் கொடுக்க மூலைக்கு மூலை மந்திரிமார்கள்.
அப்போதே தங்களுக்கான புதைகுழியை இவர்கள் தோண்டத் தொடங்கி விட்டார்கள். தங்கள் கொலை வெறி எப்படி ஒரு சுற்றின் பின்னால், வந்து தங்களையே பலி கொள்ளும் என்பதை உணர்ந்து கொள்ள முடியாதபடி ஆயுத மோகம் என்னும் அபின் போதையூட்டி மதி மயக்கி விட்டது. அந்த சுய அழிப்பை எங்கள் கண் முன்னாலேயே காணும் பேறு பெற்ற சாட்சியங்களாக நாங்கள் இங்கே!
ஊரெல்லாம் அவலக் குரல் எழுவதற்கு காரணமானவர்கள், இன்று தங்கள் அவலக் குரலுக்கு ஓடி வர யாருமின்றி அவலமாய் அழிந்ததை எங்கள் கண் முன்னாலேயே நாங்கள் கண்டு கொண்டிருக்கிறோம்.
இத்தனை வருடங்கள் கழிந்த பின்னாலும், விடுதலைக்கான பாதையை தங்களுக்குக் காட்டிய தலைமைகள் புலிகளால் அழிக்கப்பட்ட பின்னாலும், தங்கள் தலைவர்களுக்காகவும் தங்களோடு இருந்து உயிர் நீத்த போராளிகளுக்காகவும் அஞ்சலி செலுத்தி நினைவு கூரும் பண்பாட்டை மாற்றியக்கப் போராளிகள் இன்னமும் இழந்து விடவில்லை. ஒரு நூறு பேரையாவது கூட்டி, அமிர்தலிங்கத்தை நினைவு கூர்வதற்கு இன்றும் பலர் பயமுறுத்தல்களுக்கும் பயப்படாது தயாராக இருக்கிறார்கள்.
ஆனால், சூரிய தேவன் என்று தூக்கிக் கொண்டாடி வழிபட்ட ஒரு தலைவன் இறந்து விட்டான் என்பதை பகிரங்கமாக அறிவிக்க முடியாத நிலையில், மக்களுக்காக அழுகிறோம் என்று கூறிக் கொண்டே தங்கள் தலைவனை நினைந்து, தெருத்தெருவாக கறுப்பு ஆடையுடுத்தி கண்ணீர் விட்டு கதறி அழும் நிலையைக் கண்டதும் இந்த அவலத்திற்கான சூத்திரதாரிகளே தங்கள் தவறை இன்னமும் உணர்ந்து கொள்ளாமல் நீலிக்கண்ணீர் வடிப்பதாகவே உணர முடிகிறது. ‘சீவியத்தில் நேசித்தவர்கள் மரணத்தில் மறந்து போய்’ கடைக் கண்ணாடிகளில் கண்ணீர் அஞ்சலியும் கார்களில் கறுப்பும் கொடியும் கூடக் கட்ட முடியாமல் விக்கித்துப் போய் திணறிக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய எல்லாளத் தாக்குதல் ‘சிங்கள இராணுவ பூதத்தின் தலையில் ஆப்பாக இறங்கியிருக்கிறது’ என்று கடைசி மாவீரர் தின உரையில் பிரகடனம் செய்த தலைவரின் உச்சந்தலையை துணியால் மறைத்துக் காட்ட வேண்டிய பரிதாப நிலைக்கு அந்த இராணுவ பூதம் தள்ளியதைக் கண்ட அதிர்ச்சியிலிருந்து இவர்கள் இன்னமும் மீளவில்லை.
நேற்று வரைக்கும் தலைவர் வெள்ளி திசை கண்டு அடுத்த ஆண்டு தமிழீழப் பிரகடனம் செய்வார் என்று ‘சுத்திக்’ கொண்டிருந்த தமிழ் ஊடகங்கள் இன்று அந்த மரணத்தை பகிரங்கமாக அறிவிக்க முடியாமல் திணறிக் கொண்டுள்ளன. துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் எல்லாம் கொல்லப்படும்போது முன்பக்கச் செய்தி போட்டு உசுப்பேத்தியவர்கள் இன்று தங்கள் பிழைப்புக்கு வழி வகுத்த தலைவனுக்கு பெட்டிச் செய்தி போடக் கூட நாதியற்றுப் போய் விட்டார்கள்.
ஐயோ, செய்தியை வெளியிட்டால், கண்ணீர் அஞ்சலி விளம்பரத்தில் காசு கிடைக்குமே என்று வாய் ஊறினாலும், எந்தப் பக்கத்தில் இருந்து அடி விழுமோ என்ற பயத்தில் பத்திரிகைகள் எப்போதோ சொன்ன செய்திகளை வைத்து தலைவருக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கின்றன. தூங்கிக் கிடந்த தமிழினத்தை தூங்க விடாமல் விடிய விடிய ‘பிரபாகரன் படை வெல்லும்’ என்று பாட்டுப் போட்ட வானொலிகள் ஷெனாய் இசையுடன் ‘உண்மை ஒரு நாள் வெளியாகும்’ என்ற அந்தக் காலத்து திருச்சி லோகநாதன் பாட்டை எங்கோ தேடிப் பிடித்து ஒலிபரப்பி, ‘எங்கள் தேசத்தின் மேலே இடி விழுந்தது ஏனம்மா?’ என்று கேள்வி கேட்டுக் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு இனத்தின் போராட்டத்தை முப்பது வருடங்கள் நடத்திச் சென்ற ஒரு தலைவனுக்கு, அரை நிமிட மெளன அஞ்சலி செலுத்தக் கூட ஆளில்லை. பொன் முட்டையிடும் வாத்தாக ஊடக ஆய்வாளர்கள் முதல் பணம் சேர்ப்பவர்கள் வரைக்கும் அள்ளிக் கொடுத்த வள்ளலை, செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி போல, புலன் பெயர்ந்த தமிழர் மனங்களில் சாக விடாமல் வைத்திருக்க பலத்த பகீரதப் பிரயத்தனங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தலைவரின் மூளைக்குள் குடியிருந்தது போல, தலைவர் அப்படிச் சிந்தித்தார், இப்படி உபாயம் வகுத்தார் என்றெல்லாம் கதை அளந்து, நடந்து முடிந்தவைகளை நேரில் பார்த்தது போலவும், நடக்கப் போவதை முன்கூட்டியே உணர்ந்தது போலவும் மந்தை மேய்த்துக் கொண்டிருந்த ஆய்வாளர்கள் எல்லாம், அந்த மூளையே சிதறிப் போன கதையை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் வாந்தி எடுக்கவும் முடியாமல் தலைக் கறுப்புக் காணாமல் தலைமறைவாகி விட்டார்கள். பணத்துக்கும், வயிற்றுப் பிழைப்புக்கும், புகழுக்கும், சமூக அந்தஸ்துக்குமாய் புலியின் முட்டாள்தனங்கள், கொடுமைகள், அநீதிகள் எல்லாவற்றுக்குமே புத்திஜீவி முலாம் பூசி தெருத் தெருவாய் விற்றவர்கள் இன்று கண் முன்னால் கிடக்கும் தங்கள் திருவாய் மலர்வுகளின் தடங்கள் சாட்சியமாகிக் கிடப்பதைக் கண்டு வெட்கித்துப் போய் முகம் காட்ட முடியாமல் மறைந்து விட்டார்கள்.
தங்களின் தலைவனின் கொடுரமான முடிவை பகிரங்கப்படுத்த இவர்களால் எவ்வாறு முடியும்? தங்கள் தலைவன் இன்னமும் உயிரோடு தான் இருக்கிறான் என்று எப்படி இவர்களால் உறுதியாகச் சொல்ல முடியும்?
இத்தனை காலமும் ஈரைப் பேனாக்கி, பேயைப் பெருமாளாக்கி, எட்டாம் வகுப்பே தாண்ட முடியாத ஒருவரை உலக மாமேதகு ஆக்கி, ஈனப் பிழைப்பு நடத்தி இழிந்த வாழ்வு வாழ்ந்தவர்களுக்கு, தங்கள் வயிற்றுப் பிழைப்பின் மூலாதாரத்திலேயே இடி விழுந்ததும் ‘துன்ப அதிர்ச்சி’ கொள்ளாமல், இன்ப அதிர்ச்சியா கொள்ள முடியும்?
இவர்கள் செய்தி வெளியிடுவதாக இருந்தால் அது புதினத்தில் வெளிவந்திருக்க வேண்டும். புதினத்தில் வெளிவருவதாக இருந்தால் அது அரசியல் பிரிவிடம் இருந்து வர வேண்டும். அரசியல் பிரிவிடம் இருந்து வருவதாயின் அது தலைவரின் அனுமதியோடு வர வேண்டும். அனுமதி வழங்க தலைவரும் இல்லை. வானொலிக்கு பேட்டியளிக்க நடேசனும் இல்லை. பின்னர் எப்படி புதினத்தில் செய்தி வரும்?
எந்தச் செய்தியை வெளியிட்டாலும், ‘உண்மையை எழுதி, உண்மையாய் எழுதும்’ பத்திரிகைகளும் வானொலிகளும் செய்திகளின் உண்மைத் தன்மையை ஊர்ஜிதம் செய்து கொண்ட பின்னால் தான் வெளியில் விடும் பத்திரிகாதர்மத்தின் படி தாண்டாப் பத்தினிகளாகக் கருதி தலைவரின் செய்தியை உறுதி செய்வதற்காக காத்திருக்கின்றன. அதற்கு தலைவர் ‘ஆராவது விதானையைப் பிடிச்சு தன்னுடைய டெத் சேர்ட்டிபிக்கேட் அனுப்பிய’ பின்னால் தான் இந்த ஊடகங்கள் அந்தச் செய்தியை வெளியிடும். அதன் பின்னால் தான் இந்த ஆய்வாளர்கள் எனப்படும் திடீர் மரண விசாரணை அதிகாரிகள் ‘மண்டையில் போடப்பட்டதால் மரணம் சம்பவித்தது’ என்று கண்டு பிடித்து ஆய்வு செய்வார்கள்.
சரி, ஊடகங்களுக்குத் தான் இந்த நிலை. வன்னியோடு நேரடித் தொடர்பில் இருந்து வன்னி காலால் இட்ட கட்டளையை தலையால் நிறைவேற்றிய புலன் பெயர்ந்த புலித் தலைமைக்கு என்ன நடந்தது? ‘போன் அடிச்சால் லைன் பிஸி’ என்றோ, ‘ஆரோ சிங்களவன் ஆன்ஸர் பண்ணிறான்’ என்றோ சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? உலகெங்கும் எவருடனும் எந்தக் கணத்திலும் தொடர்பு கொள்ளக் கூடிய வல்லமை உள்ள புலித் தலைமையுடன் தொடர்பு கொள்ள முடிந்தால், உடனேயே தொடர்பு கொண்டு வானலையில் தவழ விட வேண்டியது தானே. இதுவரை காலமும் சூழ இருந்த கூட்டத்திற்கு விலாசம் காட்டவும், மிரட்டி வைக்கவும் ‘இப்ப தான் தலைவரோட கதைச்சிட்டு வாறன்’ என்றவர்கள் இப்போது தலைவர் இருக்கிறாரா என்ற அடிப்படைக் கேள்விக்கே பதிலளிக்க மறுக்கிறார்களே? போராளிகளை இழந்த கவலையில் தலைவர் மெளன விரதம் இருக்கிறார் என்று கதையைக் கிளப்பி விட கற்பனைக்கா பஞ்சம்?
காரணம் இருக்கிறது. முகவர்களும் பினாமிகளும், இவர்களுடன் ‘கோம்பை சூப்பியவர்களும்’ என ஒரு கூட்டத்தின் முழுமையான வருமானமுமே புலித் தலைவரின் இருப்பிலேயே தங்கியிருந்தது. தலைவரை உயிரோடு வைத்திருக்க எப்படித் தான் பகீரதப் பிரயத்தனம் செய்தாலும், இனிமேல் புலியைச் சொல்லி புலன் பெயர்ந்த தமிழரிடம் ஒரு சதம் வாங்கக் கூடிய நிலையில் யாரும் இல்லை. கமிஷனுக்காக போராட்டத்திற்கு பணம் சேர்ந்த கோம்பை சூப்பிய கூட்டம் கவனிப்பாரற்றுப் போக, பினாமிகளுக்கும் முகவர்களுக்கும் இடையிலான குளிர் யுத்தம் இப்போது உயிர்ச்சேதத்தில் போய் முடியும் போலத் தெரிகிறது. மாபியாக் கூட்டமான புலி நடத்திய வியாபாரத்தில் புரண்ட கோடிக்கணக்கான பணமும் சொத்துக்களும் இன்று யார் யாரோ கையில். இந்த சொத்துக்களின் பாகப்பிரிவினை நடந்து முடியும் வரைக்குமாவது தலைவரை உயிரோடு வைத்திருந்தே ஆக வேண்டும்.
இதனால் தான் முன்பின் கண்டு கேட்டறியாத யாழ்.செல்லும் படையணித் தளபதிகளும் வெளிநாட்டுப் புலனாய்வுத்தளபதிகளும் கனவில் தோன்றி அருள் பாலிக்கிறார்கள். ஈழப் போராட்டத்தை இணையத் தளத்திலாவது நடத்தியாக வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். ‘அந்த மகராசன் போய்ச் சேர்ந்து விட்டார்’ என்பது முடிவாகத் தெரிந்தால் பினாமிகள் எல்லாம் சொத்துக்களை திருப்பிக் கையளிப்பார்களா? எனவே, பல ‘இனம் தெரியாதவர்களால்’ நடத்தப்படும் கொலைகளும் வெள்ளை வான் கடத்தல்களும் புலன் பெயர்ந்த நாடுகளில் விரைவில் அரங்கேறும். இந்த மரணங்களும் அஞ்சலி செலுத்த ஆளில்லா களப்பலிகளாகி முடியும்.
சரி, இந்தக் கூட்டம் தான் லாப நட்டம் கருதி தலைவர் மரணத்தை பூசணிக்காய் கதையாக்கி இருக்கிறது.
மகாவீரர்களுக்கு நினைவு தினம் நடத்தி விருந்து மண்டபங்களில் கூத்தடித்த மகாஜனங்கள், மெகாவீரனுக்கு கண்ணீர் விடக் கூடத் தயங்குவதன் காரணம் தான் என்ன?
இதற்கு மரணம் பற்றி இவர்கள் கொண்டிருக்கும் கருத்தைப் பற்றிச் சற்றே சிந்திப்பது சாலவும் சிறப்புடைத்து. புலிகள் இயக்கத்தில் தலைவரின் பின்னால் சேர்ந்தவர்கள் எல்லோருக்குமே, ‘மனித இருப்பும் பெருமையும் வாழ்வில் அல்ல, மரணத்தில் தான்’ என்பதே அரிச்சுவடியாகக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. வாழ்வை விட மரணமே பெருமை மிக்கதாகவும் அந்த உயிரை தன் தலைவனுக்காக இழப்பதைத் தவிர வேறெந்தப் பெருமையும் இல்லை என்பதே இயக்கத்தின் பாலபாடம். ஆனால் மரணத்திற்கே பயப்படாத மாவீரர்களை எல்லாம், பொட்டம்மானின் சித்திரவதைக்கூடத்தில் துரோகி என்று பட்டம் சூட்டினால் நடத்தப்படும் கவனிப்பு பயப்பட வைத்தது என்பது தான் தலைவரின் இருப்புக்கான காப்புறுதியாக அமைந்தது.
தான் இறந்தாலும் தனக்கு லெப்டினன்ட் கேணல் பட்டம் கிடைக்கும் என்பதும் தனக்கு சுவரொட்டி ஒட்டப்பட்டு அஞ்சலி செலுத்தப்படும் என்பதும் தனக்கு என ஒரு படுக்கை மாவீரர் துயிலும் இல்லத்தில் ஒதுக்கப்படும் என்பதும் என வெறும் அர்த்தமில்லாத ஒரு சிந்தனை பலிக்கடாக்களாக பயன்படுத்தப்பட்ட போராளிகளின் மூளைக்குள் திணிக்கப்பட்டிருந்தது. தன் முடிவுக்கான காரணம் என்ன என்பதையோ, அதனால் விளையக் கூடிய பயன் என்ன என்பதையோ மரணிக்கும் போராளி உணர்ந்து கொள்ள முடியாதபடிக்கு மூளைச்சலவை நடத்தப்பட்டிருந்தது. 25 ஆயிரம் பேர் வரைக்கும் அந்த பட்டியல் நீளும் வரைக்கும் இந்தச் சிந்தனையை யாருமே கேள்விக்குள்ளாக்கவில்லை. கேள்விக்குள்ளாக்கிய சிலரும் துரோகிகளாக்கப்பட்டு, வரலாற்றில் மறைக்கப்பட்டனர்.
அந்த மரணங்கள் எல்லாம் துயரத்தின் நினைவுகளாக இல்லாமல், விடுதலைக்கு இடப்பட்ட உரமாக, விதைக்கப்பட்ட விதைகளாக கதை விடப்பட்டு தலைமை தன் ஆடம்பர வாழ்க்கையைத் தொடர்ந்தது. இறந்த போராளிகளின் உடல்கள் வீடுகளுக்கு கொண்டு வரும்போது கூட, பெற்றவர்கள் கூட கண்ணீர் விட்டுக் கதறி அழ முடியாதபடிக்கு மிரட்டப்பட்டார்கள். கணவனையும் மூத்த புதல்வனையும் இழந்த பின்னால், தன் பால் குடிப் பாலகனை வேலோடு போருக்கு அனுப்ப வேண்டும் என்று தாயை எதிர்பார்க்கும் புறநானூற்றுத் தலைவன் அல்லவா!
விடுதலைக்குத் தடையாக இருந்ததாகக் காட்டப்பட்ட தலைவர்களும் விடுதலைப் பயிர் விளைச்சலுக்கு தடங்கலாய் இருந்த களைகளும் என கதை விட்டு, போட்டுத் தள்ளத் தொடங்கிய போதெல்லாம் அந்த மரணங்கள் இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கி, துரோகிகளின் அழிப்பு ஒரு பெருமகிழ்வுக்குரிய, கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாக ஆக்கப்பட்டதிலிருந்தே தமிழினம் தன் பகுத்தறிவை இழந்து ஒரு காட்டுமிராண்டிக் கூட்டமாக ஆகி விட்டது.
மரணம் தன் துயரத் தன்மையை இழந்து ஒரு வெறும் கேலிக்கூத்தாகவே புலிகளின் தலைமையால் ஆக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த மரணங்களால் பெற்ற பயன்களுக்கிடையில் தங்கள் மரணம் பற்றி சிந்திக்க மறந்து போனார்கள்.
தங்கள் இயக்கத்தில் இருந்தவர்கள் மரணிக்கும்போது கூட அதன் அரசியல் லாபம் தான் முக்கியமாக இருந்ததே தவிர, ஒரு உயிரின் அழிப்பு தரும் துயரம் பற்றி புலிகளுக்கு என்றுமே அக்கறை இருந்ததில்லை.
ஆரம்ப காலங்களில் மரணங்கள் சுவர்களில் அஞ்சலி நோட்டீஸ்களாக வருடக் கணக்கில், சாணி எறியாத எம்.ஜி.ஆர் பட நோட்டீஸ் கணக்கில் சாயம் இழந்து போகும் வரைக்கும் காட்சியளித்தன. மாவீரன், வீரமரணம் என்றெல்லாம் நடந்த அந்தக் கூத்து ஆட்சேர்ப்புக்கான ஒரு வழி தான்.
அதே புலிகள் மாத்தயாவின் கைதும் மரணமும் என இயக்கத்தின் நாறிக் கிடந்த உள்நிலையை மறைப்பதற்காக அடக்கி வாசித்தனர். உட்கொலைகள் எல்லாமே இப்படி வெளியில் தெரியாமல் பகிரங்க துரோக அறிவிப்புகள் இல்லாமல் நிறைவேற்றப்பட்டன.
ஆனால் எதிரியின் கையால் மறைந்த தலைவர்களின் மரணத்தை வெளியில் அறிவிப்பது கூட, அது எதிரிக்குப் பெருமை சேர்க்குமா அல்லது அதை வைத்து எதிரியைக் குறை கூறலாமா என்பதை வைத்தே தீர்மானிக்கப்பட்டது. மரண அறிவித்தல் என்பது புலிகளைப் பொறுத்த வரைக்கும் ஒரு லாப லட்டக் கணக்கே!
தமிழ்ச்செல்வனின் மரணத்தில் ஒரு சமாதானப் புறாவைக் கொன்றதாக அரசை இக்கட்டில் மாட்டி அரசியல் லாபம் தேடுவது தான் முக்கியமான நோக்கமாக இருந்ததே தவிர தமிழ்ச்செல்வனின் இழப்புப் பற்றிய துயரம் யாருக்கும் இருந்ததில்லை. அதே தமிழ்ச்செல்வன் தாக்குதலில் காயப்பட்டு பின்னால் காலம் சென்று இறந்திருந்தால், அது அரசுக்கு பெருமை சேர்க்கும் என்ற காரணத்தால் மறைக்கப்பட்டிருக்கும்.
கடைசியாக நடந்த ‘ஓய்ந்த அலைகள்’ யுத்தத்தில் கொல்லப்பட்ட முக்கியஸ்தர்களின் விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு வழங்கப்படும் சம்பிரதாய பூர்வ பதவி உயர்வுகள் கூட வழங்கப்படவில்லை. தீபன் உட்பட்ட அறுநூறு போராளிகள் ஈவிரக்கமின்றி வேட்டையாடப்பட்ட போது கூட, அந்தத் தகவல் எதிரிக்கு உளவியல் ரீதியாக உற்சாகத்தைக் கொடுக்கும், ஆதரவாளர்கள் சோர்ந்து போவார்கள், வெளிநாட்டு வீதிப் போராட்டங்கள் முடங்கிப் போய் விடும் என்ற அரசியல் கணக்கில் அமுக்கப்பட்டன.
சரியோ தவறோ, தங்கள் வாழ்நாளையே போராட்டத்திற்காக அர்ப்பணித்தவர்களின் தியாகம், தாங்கள் இறந்தாலும் தங்கள் இறப்புக் கொண்டாடப்படும் என்ற எண்ணத்தில் வளர்க்கப்பட்ட புலி இயக்க உறுப்பினர்களின் உயிரிழப்பு அரசியல் லாப நட்டம் பார்த்து வெளியில் விடாது மறைக்கப்பட்டதில் இருந்தே மரணம் அடைந்தவனை நன்றியோடு நினைவு கூர்கின்ற அடிப்படைப் பண்பே புலிகளுக்கு இல்லை என்பது தெரிய வரும். தங்கள் அழிவில் எதிரிகள் வெற்றி கொண்டாடி விடக் கூடாது என்பதற்காக புலிகள் எதையும் செய்யத் தயாராக இருந்தார்கள். இதற்காக கசிந்து வந்த உண்மைகளைக் கூட மறைப்பதற்காக தங்கள் பிரசார இயந்திரங்களை முடுக்கி விட்டு உண்மையை மறைக்கும் குரூரத் தனம் புலிகளுக்கு மட்டுமே இருக்கும்.
உயிரிழக்கப் போகிறோம் என்று தெரிந்து கொண்டே போய் வெடித்துச் சிதறப் போகும் போராளிகளுடன் சிரித்துக் கொண்டே குறூப் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் குரூரத் தனத்தை விட மோசமானதாய் வேறென்ன இருக்க முடியும்?
இதையும் விட, தங்களுக்கு அதற்கான தகுதி இருப்பதாகக் காட்டிக் கொள்ளவும் தங்களுக்கு வால் பிடித்தவர்களைக் குஷிப்படுத்தவுமாக அறிமுகப்படுத்திய மாமனிதர், நாட்டுப் பற்றாளர் கோமாளித்தனங்கள் இன்னொரு புறத்தில். இதையெல்லாம் நம்பி தங்களுக்கும் அந்தப் பாக்கியம் கிட்ட வேண்டும் என்று வன்னி நோக்கித் தவமிருந்த கூட்டம் எத்தனை? காசியில் போய் இறந்தால் கைலாசம் போகலாம் என்று காசி யாத்திரை போகும் பக்தர்கள் போல, வீரசுவர்க்கம் அடைவதற்காக பிணமாகவே வன்னிக்கு ‘பாடை’ யாத்திரை போனவர்கள் எத்தனை?
மரணத்தைக் கேலிக் கூத்தாக்கியதற்கு இதை விடச் சாட்சியங்கள் வேறெதற்கு?
இன்று இந்த மரணம் முடிந்து இத்தனை நாட்களாகியும் இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவித்து, ஒரு இறந்த மனிதனுக்கு செய்ய வேண்டிய இறுதிக் கிரியைகளும் கிருத்தியங்களும் செய்து ஆன்மா சாந்தியடைந்து அமைதியில் இளைப்பாற வேண்டிக் கொள்ளாமல், இறந்த மனிதனை தொடர்ந்தும் உயிரோடு வைத்திருக்க முயலும் குரூரத்தனத்தை எந்த வகையில் சேர்க்க முடியும்?
இதற்குக் காரணம் இருக்கிறது.
இப்படி எல்லாம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்க்க உண்ணாவிரதம் (சுழற்சி முறை?), ஆர்ப்பாட்டம், வழிமறிப்பு என்றெல்லாம் இன அழிப்புக் கூச்சல் போட்டதெல்லாம் மக்களுக்காகவா? இல்லையே, தலைவருக்காகத் தானே என்ற நிலையில், அந்தத் தலைவன் இறந்து போனான் என்ற உண்மையை இவர்களால் எப்படி ஜீரணிக்க முடியும்?
இனம் அழிக்கப்படுகிறது என்று கூச்சல் போட்டவர்கள், புலிகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திச் சுட்டுக் கொன்ற மக்கள் இன்று அகதிகளாகவேனும் உயிர் வாழ்கிறார்களே என்று ஆறுதல் அடையாமல் கொந்தளிப்பதன் காரணமே, இவர்களின் முழு நோக்கமுமே தலைவரைக் காப்பாற்றுவதில் தான் என்பது தெளிவாகும். அந்த முயற்சி படுதோல்வியில் முடிந்த அவமானத்தை இவர்களால் எப்படித் தாங்க முடியும்?
தலைவர் சூரிய தேவன், அவரை நெருங்கியவர்கள் கருகிச் சாம்பலாவார்கள் என்று விசுவசித்தவர்களால் இன்று தலைவர் இறந்த பின்பும் அவமானப்படுத்தப்பட்டு அரைகுறை நிர்வாணப் பிணமாகக் காட்சியளித்தார் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
தலைவர் உயிரோடு பிடிபட மாட்டார், குப்பி கடிப்பார் என்றெல்லாம் கற்பனைக் கோட்டை கட்டியவர்களால் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எதிரியின் காலடியில் மண்டியிட்டார் என்ற உண்மையை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
விடுதலைப் புலிகள் வீழ்வதுமில்லை என்றெல்லாம் வசனம் பேசியவர்களால் தங்கள் தளபதிகள் நாய்களைப் போலச் சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடந்ததை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
தனியான அரசு, நீதிமன்றம், வீதிப் போக்குவரத்துப் பொலிஸ் என ஆகாயத்தில் தமிழீழக் கற்பனைக் கோட்டை கட்டி சுய இன்பம் கண்டவர்களால், தங்கள் கனவுகள் சில கணங்களிற்குள்ளேயே தகர்ந்து போனதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
ஒருவேளை இதையெல்லாம் இவர்களால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் இவர்களால் ஒன்றை மட்டுமே தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தங்கள் தலைவன் இறந்த துயரத்தையும் இவர்களால் தாங்க முடியும். தளபதிகள் மண்ணான வேதனையையும் இவர்களால் மறக்க முடியும்.
ஆனால், தங்கள் எதிரிகள், துரோகிகள் எல்லாம் தங்களின் தலைவனின் உயிரிழப்பில் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்ற நினைப்பை மட்டும் இவர்களால் தாங்க முடியவில்லை. இத்தனை நாளும் அடித்த பந்தாவிற்கு இன்று அவமானம் பிடுங்கித் தின்ன, இவர்கள் இன்று வரைக்கும் பகிரங்கமாகவே தங்கள் தலைவனுக்காக கண்ணீர் விட்டு அழாமல் இருப்பதன் காரணம் இது தான்.
ஐயா, கொலைகளைக் கண்டு இன்ப அதிர்ச்சிக்குள்ளாக நாங்கள் பகுத்தறிவைத் தொலைத்தவர்கள் இல்லை. மனித இறைச்சி வேகும் பானையைச் சுற்றி நடனமாடும் காட்டு மிராண்டிகள் இல்லை. பிணம் தின்னிப் பசாசுகள் போல கொலைகள் நடக்கும்போதெல்லாம், வானலையில் வந்து, ‘உவங்களைப் போட்டால் தான் ஈழம் கிடைக்கும்’ என்று பறை சாற்றும் பட்டிக்காட்டுப் பாமரத்தனம் எங்களுக்கு இல்லை.
ஒரு மரணத்தினால் வரும் இழப்பின் வேதனை எங்களுக்குத் தெரியும். அதிலும் சம்பந்தமே இல்லாத மனைவியும் மகளும் அப்பாவிக் குழந்தையும் நாய்கள் போலக் கொல்லப்பட்டு அடையாளமே இல்லாமல் மறைக்கப்பட்ட மிருகத்தனத்தின் கொடுமையும் எங்களுக்குத் தெரியும். வாழும் காலத்தில் செய்தது சரியோ, தவறோ, சரணடைந்தவர்களுக்கு சர்வதேச விதிகளின்படி பாதுகாப்பு அளித்து, பின்னால் விசாரணைகளுக்கு உட்படுத்தடும் பாரம்பரியம் இல்லாமல் இவர்கள் மிருகத்தனமாகக் கொல்லப்பட்டதற்கு காரணமான சூத்திரதாரிகள் மனிதத்திற்கு எதிரான, யுத்தக் குற்றங்கள் புரிந்த குற்றச்சாட்டில் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் அளவுக்கு எங்களுக்கு மனிதாபிமானமும் உண்டு.
கடவுள், கர்மம், காலம், விதி என்று எதிலெல்லாம் நம்பிக்கையோ, அது அளித்த தண்டனை, பரிசு என்றெல்லாம் குத்திக் காட்டி துயர் அடைந்தவர்களைப் புண் படுத்தும் அளவுக்கு நாங்கள் மனிதம் சிதைத்து வந்தவர்கள் இல்லை.
‘தலைவர் போனால் என்ன? உங்களுக்குத் தானே தேசியத் தலைவி ஜெயலலிதா இருக்கிறார். உலகெங்கும் இருந்து அவருக்கு வாழ்த்து அனுப்பிய தமிழர் அமைப்புகள் அடங்காப்பற்று இளையோரைக் கட்டி அனுப்ப, ஜெயலலிதா தலைமையில் உங்கள் போராட்டம் தொடரட்டும்’ என்று கேலி செய்யும் அளவிலும் நாங்கள் இல்லை.
எங்கள் அப்பாவித் தமிழ் மக்கள் அழியும் போது ஏற்பட்ட அதே மனவேதனை தான் உங்கள் தலைமையின் அழிவிலும் எங்களுக்கு உண்டு. தன் பதவி வெறிக்காக ஒரு இனத்தின் எதிர்காலத்தையே நிர்மூலமாக்கிய கொடுங்கோலனாக இருந்தாலும், ‘எதிரிக்குக் கூட இப்படியான முடிவு இருக்கக் கூடாது’ என்று நினைக்கும் பண்பு எங்களுக்கு நிறையவே உண்டு.
ஆனால், இந்த வேதனையிலாவது உங்களுக்குப் பகுத்தறிவு திரும்புமா என்பது தான் இன்று எங்களை வாட்டுகின்ற வேதனை. மற்றவர்களின் உயிரிழப்பில் கொண்டாட்டம் நடத்தி, உங்கள் உயிரிழப்பில் லாபநட்டக் கணக்குப் பார்க்கும் உங்களுக்கு ஒரு உயிரின் மதிப்பும் அதன் பிரிவு தரும் வேதனை என்ற இயற்கையான மனித உணர்வும் இப்போதாவது புரியுமா என்பது தான் எங்கள் கேள்வி.
சும்மா கிடந்தவனை சூரியதேவன் ஆக்கி, உங்கள் கண்களையே உங்கள் கைகளால் குத்தி, கண் கெட்ட பின்னால் சூரிய நமஸ்காரம் செய்யும் உங்களுக்கு இந்த நேரத்திலாவது ஒரு உயிரின் மதிப்புப் புரிய வேண்டும்.
தன் தலைவன் இறந்து விட்டான், அவனை நினைத்து அழுவதற்கான உரிமையை உங்களிடம் காலில் விழுந்து கெஞ்சி யாசித்துப் பெறவேண்டிய போதெல்லாம் நாகரீகம் கடந்து ஏளனப்படுத்திய உங்களுக்கு இனியாவது புத்தி வரவேண்டும்.
அவனால்தான் தலை நிமிர்ந்தோம் என்று நீங்கள் முழக்கமிட்ட உங்கள் தலைவன் உங்களை வாழ்நாள் பூராவும் தலை காட்ட முடியாமல் செய்துவிட்டுப் போயிருக்கிறானே…
தமிழன் செய்த பாவமும் பழியும் புலியோடு போய் முடியட்டும்.
அவனுக்காக அழுவதற்கான உரிமையை நீங்கள் யாரிடமும் கெஞ்சிப் பெற வேண்டிய நிலையில் இன்று இல்லை. நீங்கள் தாராளமாகவே உங்கள் கண்ணீர் வற்றிப் போகும் வரையில் அழலாம்.
அப்போது உங்கள் தலைவனுக்காக மட்டுமல்ல, இன்று உங்கள் தலைவன் புண்ணியத்தால் தங்கள் உரிமைகளை மட்டும் அல்ல, ஒரு நேர உணவைக் கூட தன் எதிரியிடம் யாசித்துப் பெற வேண்டிய நிலைக்கு வந்திருக்கும் எங்கள் ஈழத் தமிழர்களுக்காகவும் சேர்த்து அழுங்கள்!
You must be logged in to post a comment Login