குறும்பாத்துவத்தின் அன்பால்… சில “கவிதை”கள்……
குஞ்சன்
(நிறையக் கவிதைகளை வாசித்துள்ளேன். தமிழ் மொழியிலும், ஆங்கில மொழியிலும், பிரெஞ்சு மொழியிலும். வாழ்வு நிச்சயமாகக் கவித்துவமானது அல்ல, ஆனால் எப்போதும் வாழ்வது கவித்துவம். இது மீண்டும் மீண்டும் தனது போக்கை மாற்றுவது. காலமும், சமூகங்களும் நிச்சயமாக அகநானூற்றையும், புறநானூற்றையும் எங்களுக்கு வாசிக்கத்தராது. இந்த வாசிப்பின்மை எமது இறத்தலுக்கு நிச்சயமாகக் காரணமாக இருக்கமுடியுமா? எமது காலங்கள் சுகமானதாக இருப்பின் எமது கவிதைகளும் சுகங்களே. காலங்கள் சுகமாக இருக்காத வேளைகளில் இவைகளைக் கண்டித்தும், கிண்டலடித்தும், நக்கலடித்தும் கவிதைப் போக்குகள் எழுவதுண்டு. ஆம்! இவைகளும் கவிதைகளே. நவ காலத்துள், புதிய சிந்தனைகளை வெளிப்படுத்த பழைய கவித்துவத்தை நாடியோர் சிலர், இந்த நாட்டம் இசைவானதே. இவர்கள் அகநானூறு, புறநானூறு போன்ற மொழிகளில் எழுதாததை புரட்சி எனவே எடுக்க வேண்டும். பாரதி நடத்தியது நவ வாசிப்பின் எழுத்துப் புரட்சியே. இவனது எழுத்துகள் தமிழின் பிந்திய நவீன கவித்துவத்தை எடுத்தது எனலாம். ஆம்! உலகம் கவித்துவத்துள் எப்போதும் வாழுவது. நிறையப் பேர் பெண்களைக் கண்டால் கவிஞர்கள் ஆகியுள்ளனர்… இப்போது ஆண்ககளைக் கண்டாலும் கவிஞர்கள் ஆகும் புரட்சி நடந்துகொண்டுள்ளது.
பல ஆண்டுகளின் பின்னர் மீண்டும் “குறும்பா" கவிதைகளை வாசித்தேன். இது “நூலகம்" இணைப்பின் கிருபையால். இந்த இணைப்பு தமிழின் இலக்கிய எழுத்தாக்கங்களை மிகவும் சிறப்புடன் எமக்குத் தருவது. தமிழின் இலங்கை இதழ்களை, புகலிட இதழ்களை நிச்சயமாக “நூலகம்" மீது வாசிக்கலாம்.
நூலகம்
இந்த இணைப்பு மீது சிறு நிதி ஆவணம் செய்தால் தமிழை அறிய, இலங்கைத் தமிழை அறிய, அபூர்வமான தமிழ் வெளியீடுகளையும் வாசிக்க, இலங்கைத் தமிழரின் வெளியினதும் உள்ளினதும் படைப்பு வெளியீடுகளையும் அறிய தற்போது இருக்கும் காலத்துக்கும், நாளை வரும் காலத்துக்கும் உதவலாம்.
தமிழ் இலக்கியத்தின் கவிதை பாரதியா? தமிழ் கவிதையின் பிதாவுக்குள் அடங்கும் பாரதியை இன்றும் நேசிக்கின்றேன். ஆனால், மஹாகவி எனும் புனைபெயரால் அறியப்பட்ட உருத்திரமூர்த்தி இலங்கையில் பிறந்தவர், ஆம்! தமிழ்க் கவிதையின் பிதாக்களுக்குள் இவரையும் அடக்கலாம்.. இன்று பாரதிக்கும், சற்று தமிழ் வெறிஞனான பாரதிதாசனுக்கும் கூட்டங்கள்… கூடக் கூட.. இவர்கள் கவிதைத் “தெய்வங்கள்” எனவும் கருதப்படுகின்றனர். ஆனால் மஹாகவி என்பது நிறையத் தமிழர்களுக்குத் தெரியாது. இதுதான் தமிழ்க் கவிதைத்துவம். இது தமிழுள் தரமான படைப்பாளிகளை மறைக்கும் இயல்புமெனலாம்.
போற்றுதல்: எம்.ஏ. நூஹ்மானும், எஸ்.பொ வும்., “நூலகத்தால்” பத்மநாப ஐயரும் மஹாகவியின் படைப்புகளை நிச்சயமாக வாழவைத்துள்ளனர். க்ரியா பதிப்பகம் தமிழில் மஹாகவியின் படைப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த மஹாகவியின் “குறும்பா"க்களை மீண்டும் வாசித்ததால் எனக்குள் பீடித்த வியாதியால்தாம் இவைகள் தோன்றின. இவைகள் கவித்துவத்தைக் கொண்டுள்ளனவா என்பது எனக்குத் தெரியாது. இவைகள் எனது கவித்துவ எத்தனங்களே. மிகவும் நன்றி கவிஞர் மஹாகவிக்கு. இவர் மீது பின்பு எழுதப்படும்.)
குஞ்சனின் குறும்பாத்துவத்தினது அன்பால்…..
“கெட்டுவிட்டான்” என்று சொன்னாள் பொன்னி
“சுதந்திரமே” என முனைந்தாள் வன்னி
பத்திரமாய்க் கேட்டுத்
தன்மொழியை விட்டுப் பின்
அவன் அலைதல் இன்று பின் வாணி
ஆறுமுகம் பாரிஸுக்கு வந்தான்
நூறு முகத்தை உடையலானான்
எந்த முகத் தாலி
என்பதையும் மீறி
இன்று வெள்ளைத் தாலி அன்பனானான்.
பாலன் கனடாவுக்குப் போனான்
பால் மொழியை மறைதலானான்
பாலனின் பப்பா வந்து
ரேவதியைக் காட்டியதால்
ஆங்கில மொழி மறந்து போனான்
பாட்டி போனார் ஓர் கூட்டம்
இலக்கியத்துள் போரடிக்கும் பாட்டம்
தலைவெடித்து தலை இடித்து
தன் தலையைத் தப்பிக்க
அவ்வை எனச் சொல்வதவள் திட்டம்.
சாதிவெறி உள்ளுக்குள் வைத்து
சமதர்மம் வெளியிலே பொய்த்து
தாழ்சாதிக் காதலியைத்
தட்டிவிட்ட தர்மனுக்கு
நீதிவெறியின் மீது கைப்பு.
இங்கிருந்து தேடியவன் கோடை
இது குளிரைக் கடிக்கும் புன்னாடை
அங்கிருந்து வரும் கோல்கள்
செவிடாக்கிக் கொண்டதனால்
இன்று குளிர் அவனுக்குப் பொன்னாடை
facebook இல் பாட்டி இருந்தாள்
பேட்டியைத் தேடுவதில் தவித்தாள்
like போட்டு like போட்டு
like இல் இருந்தவளுள்
பேட்டனை இன்பெண்ணுடன் பிடித்தாள்
அப்புவின் மனதில் ஓர் வீக்கம்
ஆச்சியுள் facebookகின் தாக்கம்
காதலிதா காதலிதா
கத்திவிட்டும் கதறிவிட்டும்
காலமடைந்தார் பின் பெரிய தூக்கம்
தம்பி தெருவில் கட்டி வேட்டி
“இது ஈரோப்!” ,
சிரிப்பால் அண்ணன் காட்டி
தம்பி திசை மாறி
அண்ணியின் முன் விழுந்தான்
அவள் நெருப்பைச் சாறிகளால் மூட்டி
கருத்தியக்கம் முன் வந்தாள் வாணி
இவைகளைப் பின் சொன்னாள் சாணி
கருத்தியரைக் கண்டதின் பின்
கருத்தியலை மறந்து விட்டு
சொன்னாள் கருத்தின்மை எங்கள் பாணி
கத்தி சொன்னான் இன்று முற்போக்கு
புத்தி சொன்னான் அது பிற்போக்கு
முத்தி வந்து முத்தித்து சித்தித்து
சொன்னான் இது ஓர் சிற்போ க்கு
You must be logged in to post a comment Login