Recent Comments

    கொண்டாட்டம் – சிறுகதை

     

    பூங்கோதை 

    அம்மா தன் கால்களில், நான் விளையாடும்  ரோலர் ஸ்கேட்ஸ் (roller skates ) பூட்டியிருப்பது போல, நிற்காமல் அசுரத்தனமாக வீட்டினுள்ளும் புறமும் ஓடிக்கொண்டேயிருந்தாள்.  அவளைப் பார்க்க பாவமாக இருந்தாலும்,அவளும் தன் வாயைத் திறந்து தனக்கு ஓய்வு வேண்டும் என்று அப்பாவைக் கேட்கலாம் தானே என எனக்குத் தோன்றியது.

    "அம்மா, நான் உங்களோட கதைக்க வேணும்." மெதுவாக, ஆனால் அம்மாவுக்கு கேட்கும் படி அழுத்திக் கூறினேன்.

    அம்மாவுக்கு அது கேட்டிருக்கும், ஆனால் கேளாதது போல தான் செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்தபடியிருந்தாள்.  அவளுக்குப் பக்கத்தில் ஒரு அழகான  விளையாடும் தொட்டி ஒன்றில் இரட்டைக் குழந்தைகளான எனது தம்பிமார்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.  நான் அம்மாவைக் கூப்பிட்டதும் இருவரும் அம்மாவை நிமிர்ந்து பார்த்து தாங்களும் கூப்பிட்டார்கள்.  அம்மாவுக்கு அது பயத்தைக் கொடுத்திருக்கக் கூடும்.அவர்கள் இருவரும் அழத் தொடங்கினால், அம்மா போட்டது போட்டபடி கிடக்க அவர்களைக் கவனிக்க வேண்டி வரும்.  அதனால்த் தான் அம்மா என்னோடு கதைக்க மாட்டேன் என்று அடம் பிடிப்பிக்கிறாள். ஆனால் நானும் தான் எத்தனை நாட்களாக இப்படிக் கூப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்?

    ஒவ்வொரு நாளும் அம்மாவோடு கதைப்பதற்கு நான்  எடுத்த முயற்சிகள் எல்லாம் வீட்டுத் தோட்டத்தில் முளைக்கக் கூடும் என நான் எறிந்த பப்பாசி விதைகள் போல் வீணாய்ப் போனது.  நேற்றும் இப்படித்தான், அம்மாவோடு கதைக்கலாம் என்ற ஆசையில், அவளோடு சமையல் அறையில் போய் இருந்த போது, தான் இன்னும் இந்த ஒரு வாரத்திற்குள் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை எனக்குப் பட்டியல் போட்டு சொல்லிக் கொண்டிருந்தாள்.பாவமாக இருந்தது. அவளுக்கும் ஓய்வாக இருந்து தன் கவலைகளைச் சொல்வதற்கு என்னைப் போல் பள்ளித் தோழிகள் இல்லை. தினமும் விடிந்தவுடன் என்னையும், மூன்று வயது தம்பிமார்களையும் பாடசாலைக்கு அழைத்துப் போய் விட்டபின், அப்பாவின்  கடைக்கு ஓட வேண்டும்.

    அப்பா கடைக்குத் தேவையான பொருட்களை வாங்கப் போகும் போது அம்மா தான் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களைக் கவனிக்க வேண்டும். அதன் பின் அப்பா கடைக்குத் திரும்பும் போது, வீட்டுக்கு ஓடி வந்து எமக்குத் தேவையான சாப்பாடுகளைத் தயாரிக்க வேண்டும். 

    நானும் தம்பிமார்களும் பாடசாலையிலிருந்து வீடு வரும் போது, முன்பெல்லாம் அம்மா தான் எம்மைக் கூப்பிட வருவாள். இப்போது கடந்த மூன்று மாதங்களாக, அப்பாவின் அப்பாவான தாத்தா வரத் தொடங்கியிருக்கிறார்.அம்மாவுக்கு இதனால் வேலை சிறிது குறையும் என நான் யோசித்தேன், ஆனால் அப்படி ஒன்றும் குறைந்து போனதாய்த் தெரியவில்லை. அதற்கும் காரணத்தை அம்மாவே எனக்கு அறிவித்திருந்தாள். 

    தாத்தா எங்கள் வீட்டுக்கு வந்த ஒன்றோ இரண்டோ நாட்களில் அம்மாவோடு நடந்த உரையாடலை நான் யோசித்துப் பார்க்கிறேன்.

    ***

    " ரேயா, தாத்தா இனி கொஞ்ச காலத்துக்கு, பிள்ளையின்ர நல்ல நாள் விசேஷம் முடியத்தான் திரும்ப சித்தப்பா வீட்டுக்கு ஜேர்மனிக்குப் போவார். அதுவரைக்கும் எங்களோட தான் இருப்பார்." 

    அம்மாவே தொடர்ந்தாள், " தாத்தாவும் ஊரில இருந்து வந்து அப்பிடியே ஜேர்மனியில இருந்திட்டார். இங்க வந்து போக விசாவும் இல்லை, காசும் இல்லை. இப்ப தான் எல்லாம் சரியான நேரம் வந்திருக்கு அவருக்கு!" 

    "அப்ப அம்மாவுக்கு தாத்தா கொஞ்சம் வீட்டு வேலைகளில உதவி செய்து தருவாரோ? அல்லது அப்பாவோட கடைக்குப் போயிடுவாரோ? எங்களுக்கு கதைகள் சொல்லுவாரோ?" 

    ரேயா, ஒரு பதினோரு வயதுக் குழந்தைக்கேயுரிய  ஆவலோடு கேட்டாள். அப்படியாவது இப்போது தோன்றியிருக்கும் திடீர் பரபரப்பில் இருந்து அம்மாவுக்கு ஒய்வு கிடைக்கலாம் என்ற நம்பிக்கை அவளை விட்டுப்போகவில்லை.   

    "தாத்தாவுக்கு ஒரு கை பாவிக்க ஏலாது, விழுந்து முறிஞ்சிருக்கு. அவரை நாங்கள் தான் பத்திரமாய் பார்க்கிறம் எண்டு கூப்பிட்டு வைச்சிருக்கிறம். உங்கட சாமத்திய வீடு முடிய அவரை நாங்கள் கவனமாய் அனுப்பிப் போட  வேணும். அப்பாவும் ஒரு நாளைக்கு பத்து தரம் அதைச்  சொல்லிப் போட்டார்."  அம்மா தன் குரலை இறக்கி மிக மெதுவாக, ஒரு இரகசியம் சொல்வது போல சொல்லி முடித்திருந்தாள். 

    அம்மா சொன்னதைப் பார்க்கும் போது தாத்தாவின் உடல் நிலை நன்றாக இல்லை என்பதும் அவரை நாங்கள் எந்த விதத்திலும் தொல்லை பண்ணக் கூடாதென்பதும் ரேயாவுக்குப் புரிந்தது.  

    அப்பாவும் வீட்டில் இருக்கும் நேரங்களில் எல்லாம் ஓய்வில்லாத தொலைபேசி தொல்லைகளில் முழுவதுமாய்க் கரைந்துபோயிருந்தார். ஒரு நாள் அப்பா அம்மாவுக்கு கூறியது அவள் காதிலும் விழுந்தது.

    "என்ன செய்யிறது, என்ர ஃபிரண்ட்ஸ் எல்லாரும் தங்கட மகளவைக்குச்  சாமத்திய வீடு நல்ல பெரிசாய் கொண்டாடினவை எல்லே? நாங்களும் போய் வந்தனாங்கள். இப்ப ரேயாவுக்கு ஒண்டும் கொண்டாடாமல் சத்தம் போடாமல் இருப்பம் எண்டால், இவளோட தானே என்ற ஃபிரண்ட்  மகாலிங்கத்தின்ர  மகள் படிக்கிறவள். அவளுக்கு இவள் ஏதோ சொல்லிப் போட்டாள் போல கிடக்கு.  அவன் அண்டைக்கு போன பிறந்த நாள் பார்ட்டியில எல்லாருக்கும் முன்னால இனி நாங்கள் ரேயாவின்ர சாமத்திய வீட்டில சந்திப்பம் எண்டு சொல்லிப் போட்டான்." அப்பா பெரும் கவலையுடன் சொல்வதை அம்மா அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

    "அவர் சொன்னாப்போல நாங்கள் அப்பிடியெல்லாம் செய்ய வேணும் எண்டு ஒரு வில்லங்கமும் இல்லைத் தானே?எங்களுக்கு இருக்கிற கடனும் ஒருத்தருக்கும் தெரியாது. பிள்ளையும் சின்னப்பிள்ளை, அவளே பள்ளிக்கூடத்தில தன்ர ஃபிரண்ட்ஸ் ஒருத்தருக்கும் இப்பிடி எல்லாம் செய்யேல்லை எண்டு சொல்லிப்போட்டாள்.“ 

    “ஆக அந்த மகாலிங்கத்தின்ர மகள் சரிகாவுக்கு   மட்டும் தான் இப்பிடி ஊரெல்லாம் சொல்லி விழா எடுத்தவையாம்.இங்க இந்த விசயத்தை பெரிதாக்கிறேல்லையாம். இதைப் பற்றி போன வருசமே பள்ளிக்கூடத்தில படிப்பிச்சுப் போட்டினமாம். பள்ளிக்கூடத்தில சரிகாவுக்கு பெரிய வெட்கமாய்ப் போட்டுதாம். அவ பாவம் எண்டு சொன்னவள்.இப்ப தனக்கும்  இதே கதி தான் எண்டு தெரிஞ்சால் அவள் என்ன சொல்லுவாளோ தெரியேல்ல ."

    அம்மா தனக்கேயுரிய மெல்லிய குரலில் சொல்லி முடித்திருந்தாள். 

    "இல்லை, உவங்கள் என்ர ஃப்ரெண்ட்ஸ் விட மாட்டாங்கள். பேசாமல் கொண்டாடுவம்." அப்பா தன் முடிவைக் கூறினார்.  

    ரேயாவுக்கு தூக்கம் தொலைந்து போனது அன்று மட்டும் இல்லை, அதைத் தொடர்ந்து வந்த நாட்கள், வாரங்கள்,மாதங்கள் என்றாகிப் போயின. அவளும் அம்மாவிடம் இந்த கொண்டாட்டம் எல்லாம் வேண்டாம் என்று அழுது ,கெஞ்சி, சாப்பிடாமல் கூட இருந்து கேட்டுப் பார்த்தாயிற்று.

    "நீ சின்னப்பிள்ளை, பெரியவை சொல்லுறதை கேட்டு நட பார்ப்பம்." அம்மா பெரியதொரு முற்றுப் புள்ளி வைத்து முடித்து விட்டாள். 

    ஆனால் கொண்டாட்டத்திற்கான வேலைகளை ஒழுங்கு பண்ணும் பொழுதுகளில் ரேயா ஏதாவது கேட்டால், தன் வேலைப்பளுவினால் போலும், அவளை ஒரு பெரிய பெண்ணாக நினைத்துக் கதைகள் சொல்லத் தொடங்குவாள்.ரேயாவுக்கோ அம்மாவோடு கதைத்தால்த் தான் மனதிலிருக்கும் சுமை குறையும் போலிருந்தது. அம்மாவோ அவளுக்கு சொன்னதையே திரும்பவும் கூறத் தொடங்கியிருந்தாள்.

    "ரேயா, நீ இனி சின்னப்பிள்ளை இல்லை. பெரிய பிள்ளை. பன்னிரண்டு வயதாகப் போகுது.  நான் இந்த வயதில அப்பாவோட தோட்டம் போய் உதவி செய்யிறனான். அம்மாவுக்கு சமையலுக்கு உதவி செய்யிறனான். நீ என்னடா எண்டால் கதைக்கப் போறன், கதைக்கப் போறன் எண்டு என்ர வேலையையும் குழப்ப நிக்கிறாய்!"

    இப்படியே அம்மா அவளை  ஒவ்வொரு நேரத்திற்கேற்றாப் போல சின்னவளாயும் பெரியவளாயும் மாற்றிக் கொண்டிருந்தாள். அவளுக்கோ   அம்மாவோடு கதைக்க முடியாவிட்டாலும் கூட , இனிப் பள்ளிக்கூடம் விடுமுறை விட்டுத் தொடங்கும் போது  அவளுடைய  வகுப்பாசிரியை அல்லது  தோழிகளுடன் கதைக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என்பது பெரும் ஆறுதலாக இருந்தது. 

    அந்த நீண்ட கோடை விடுமுறையில் அம்மாவும் அப்பாவும் அவளை  வீட்டை விட்டு வெளியே போக அனுமதிக்கவில்லை. தம்பிமார்களைக் கவனித்து அவர்களுடன் விளையாடுவது தான் அவளுக்குக் கிடைத்த ஒரேயொரு  பொழுது போக்கு. 

    அவள் எதிர் பார்த்தது போல தாத்தா கதைகள் சொல்லவோ, அவர்களோடு வேடிக்கையாக பொழுதைப் போக்கவோ இல்லை. அவள் அவர் கைகளை விளையாட்டாகப்   பிடித்து இழுத்த போது அவர் அவள் கைகளைத் தட்டி விட்டது அவளுக்கு என்னவோ போலிருந்தது. அதிகம் பேசா விட்டாலும் அவர் ஒரு வினோதமான மனிதனாகவே ரேயாவுக்குத் தென்பட்டார்.

    ரேயா அவளுடைய தோழிகளோடு தொலைபேசவும் அவள் அம்மா அவளை  அனுமதிக்கவில்லை. அவளுக்காக  அவர்கள் செய்யவிருக்கும் விழா பற்றி யாருடனும் பேசக்கூடாது, அவள் வீட்டில் நடக்கும் எந்த விடயங்களையும் அவர்களைக்  கேட்காமல் யாருடனும் கலந்துரையாடக் கூடாது, அது எமது பண்பாட்டுக்கு சீர்கேடு என்று அம்மாவும்,அப்பாவும் அடிக்கடி ஞாபகப்படுத்தியவாறே இருந்தனர்.  இதில் எது பண்பாடு எது பண்பாடில்லை எனப்  பிரித்தறிய முடியாதவாறு ஒவ்வொரு விடயமும் அவளுக்குக்  குழப்பமாகியது.

    "நீ போய் உன்ர அறையில இரு பார்ப்பம்." இது அடிக்கடி அவள்   கேட்கும் வசனமாகியது.   அவளது  அறைக்கு போவதென்பது அவளுக்குப்  பெரும் அவஸ்தையாய், சித்திரவதையாய்த் தோன்றத் தொடங்கியிருந்தது.

    ரேயாவுக்குத் தானும்  தாத்தாவும் தம்பிமாரும் அம்மாவையும் அப்பாவையும் விட்டு வெகு தூரம் போனாற் போல்  தோன்றியது.    தாத்தாவுக்கும் தம்பிமார்களுக்கும் அது பெரிதாய்த் தெரியவில்லைப் போலும் என அவள் எண்ணிக்கொண்டாள்.

    ***

    “ நானும் அப்பாவும் இண்டைக்கு எங்கட ஃபங்க்சனுக்கு வாறவைக்கு குடுக்கிற சாப்பாட்டை டேஸ்ட் பண்ணிப் பார்க்கப் போறம். தம்பியவையை நாங்கள் கூட்டிக்கொண்டு போகப் போறம்.  தாத்தாவோட பிள்ளை வீட்டில இருங்கோ."

    அம்மா அவசரம் அவசரமாக அப்பாவோடும் தம்பிமாரோடும் காரில் ஏறிப் பறந்தாள். 

    "அம்மா, நானும் வாறன்," என்னும் அவளுடைய எண்ணம், வார்தைகளாக  வெளியில் பிரசவிக்கப்படாமலேயே  இறந்து போனது.

    இன்னும் இரண்டு நாட்களில் இந்த ஓட்டங்களும் ஆட்டங்களும் அடங்கிப் போய்விடும்.  ஒரு வாரத்தில் பாடசாலை தொடங்குகிறது, அதன் பின்பு என்ன செய்ய முடியும் இவர்களால் என்ற ஒரு வித ஆற்றாமை கலந்த கோபம் ரேயாவுக்குள் வந்து போனது.  அவள் மேசை மீதிருந்த கண்ணாடிக்குவளையை நிலத்தில் போட்டு உடைத்தாள்.அவள் மனதுக்குள் இருந்த அத்தனை கவலைகளும் போல அவை சிதறிப் பறந்தன.  தாத்தா அவளைக் கோபத்தோடு முறைத்துப் பார்த்தார். 

    ***

    அவள் அப்பாவும் அம்மாவும் ஓடியோடி உழைத்த அந்த கொண்டாட்டமும் முடிந்து போய்,  பாடசாலையும்  ஆரம்பித்து இரண்டு நாட்கள் கழிந்து போயின. 

    பெரும் புயல் காற்றில் அடிபட்டு திரும்பிய நிலம் போல வீட்டு  நிலைமைகள் வழமைக்குத் திரும்பின. அப்பா பழையபடி கடைக்கு ஒடத் தொடங்கியிருக்க, அம்மா தம்பிமாருடன் முன்பை விட சிறிது ஆறுதலாக ஓய்வில் இருந்தாள். தாத்தா இன்றோ நாளையோ தன் இன்னொரு மகனிடம், எனது சித்தப்பாவிடம் ஜேர்மனிக்குப் போவதற்கு ஆயத்தங்கள் செய்யத் தொடங்கியிருந்தார்.  

    எனக்கு இன்னுமே அம்மாவுடன் கதைப்பதற்கான சந்தர்ப்பம் எதுவும் கிடையா விட்டாலும், பாடசாலைக்குப் போய் வருவதும், தோழிகளோடு பேச முடிவதும் பல விடயங்களைத் தெளிவுபடுத்தின. எல்லோருமே தமது விடுமுறையில் தாம் செய்தவை பற்றிப் பேசிக் கொண்டனர். நான் அமைதியாக அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டியதாயிற்று.  

    ***

    பாடசாலையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்திருந்தது.  ரேயாவின் அம்மாவுக்கு எதுவும் புரியவில்லை. மூன்று மணிக்குத் தான் அவள் மாமனார் ரேயாவை அழைத்து வரப்போவது வழமை. தான் அவர்களோடு இருக்கும் வரையில் அது ஒரு உதவியாக இருக்கட்டும் என அவர் கண்டிப்புடன் சொன்னதை அவர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். மாமாவுக்கு இப்போது தான் அறுபது வயதாகியிருக்கிறது, அவருக்கும் உடற்பயிற்சி தேவை என்பதால் அவள் கணவனும் ஒன்றும் எதிர்த்துக் கூறவில்லை. 

    இன்று இரண்டு மணியாக முதலே தன்னை பாடசாலைக்கு வரும்படி அழைக்கிறார்கள், அதுவும் மாமாவை அனுப்ப வேண்டாம் எனவும் என்னை அல்லது ரேயாவின் தந்தையை அனுப்பும்படியும்  கேட்கிறார்கள். அவள் உடனே தன் கணவனுக்கும் ஒரு தொலைபேசி அழைப்பை எடுத்து அந்த விடயத்தைக் கூறியபடியே,  வீட்டிலிருந்து புறப்பட்டாள்.  

    அவள் பாடசாலையை அடைந்த போது, அவளுக்காகவே ரேயாவின் வகுப்பு ஆசிரியையும் தலைமை ஆசிரியையும் பாடசாலை வரவேற்பறையில் காத்திருந்தார்கள். அவர்கள் இருவரும் அவளைப் பணிவோடு வரவேற்றாலும், அவர்கள் முகங்கள் வழமை போலில்லாது இறுகிப் போயிருந்ததை அவள் கவனித்தாள்.  அவளுக்கு அவள் கணவனும் அவளோடு வந்திருக்கலாம் போல ஒரு உணர்வு தோன்றி மறைந்தது.

    அவர்கள் அவளை ஒரு பிரத்தியேகமான அறைக்கு கூட்டிச் சென்ற போது, அவள் மயங்கி விழாத குறையாக அங்கு நின்ற காவல் அதிகாரிகளை நோக்கினாள்.  அவர்களுடன் இருந்த இன்னொரு பெண், தன்னை குழந்தைகளுக்கான சமூக நல அதிகாரியாக அறிமுகப்படுத்திக் கொண்டார்.  அவளை இருக்குமாறு பணித்தனர்.

    "ரேயா எங்கே?" 

    அவள் குரல் அவளுக்கே கேட்காதது போல இருந்தது அவளுக்கு.  ஏதோ பாரதூரமான விடயம் என்பது புரிந்தது.ஆனால் என்னவாக இருக்கும் என்பதை அவளால் ஊகிக்க முடியவில்லை. அந்த அறையின் சுவர்கள் அனைத்தும் இராட்டினம் போல சுழலத் தொடங்கியிருந்தது.  அவள் தான் இருந்த இருக்கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.   

    ரேயாவின் வகுப்பு ஆசிரியை தான் பேசத் தொடங்கினார். அன்று காலை ரேயா மிகவும் களைப்புடன் காணப்பட்டதாகவும், அவளுடைய மிக நெருங்கிய தோழி ஒருவரின் அனுசரணையோடு தான் அவள் தன்னோடு பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறி விட்டு ரேயாவின் அம்மாவிடம் நீங்கள் கடந்த வாரங்களில் அவளில் எந்த மாற்றத்தையும் காணவில்லையா எனக்கேட்டார்.

    அவளுக்கு பதில் எதுவும் சொல்லத் தோன்றவில்லை. அவள் தான் ரேயாவின் சாமத்திய வீட்டோடு சமாதியாகியிருந்தாளே, குழந்தை கதைக்க வரும் போது கூட காது கொடுத்துக் கேட்க முடியாமல் கொண்டாட்டத்திற்கான வேலைப்பளுவில் அழுந்தி இருந்தாளே, இப்போது என்னவென்று சொல்லுவாள்.தலையைக் குனிந்தபடி தனக்கு எதுவும் வித்தியாசமாக  தோன்றவில்லை என்பதைத் தெரிவித்தாள்.  

    "ரேயா கர்ப்பமாக இருக்கிறாள். இது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?" சமூக நல அதிகாரி அதிராமல் ஆனால் மிக நிதானமாகவும் கவனத்துடனும் தான் கேட்க வேண்டிய கேள்வியை அவளிடம் நகர்த்தினார். அதிர்ச்சியில் அவளுக்குத் தான் கேட்பது ஒரு கெட்ட கனவாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர, வேறு எதுவும் தலையில் பதிய மறுத்தது.  வீட்டை விட்டு வெளியே போகாமல் இருந்த தன் குழந்தை எப்படி கர்ப்பமாய் ஆனாள்?

    அதே வேளை அவளிடம் அடுத்தடுத்து  கேள்விகள் முன்  வைக்கப்பட்டன.

    "உங்கள் வீட்டில் ரேயாவோடு பழகுவது யார்?  

    யார் யாரோடு அவள் அதிக நேரம் தனியாக இருந்திருக்கிறாள்? 

    அவள் படுக்கை அறையை யாரோடாவது பங்கு போட்டிருக்கிறாளா?

    அவளுக்குத் திடீரென பொறி தட்டியது, அப்படி யோசிக்கவே மனம் கூசியது, வாந்தி வருமாற் போல் குமட்டியது. ஒவ்வொரு நாளும் என்னோடு கதைக்கப் போகிறேன் என குழந்தை அங்கலாய்த்ததன் காரணம் இப்போது தான் அவளுக்குப் புரிந்தது. பெற்ற வயிறு பற்றி எரிந்தது.

    அவள் பதிலை அவர்கள் எதிர் பார்த்துக் காத்திருக்கவில்லை என்பதை,   அந்த காவல் அதிகாரிகள் தாம் ரேயாவின் வாக்கு மூலத்தை பெற்றுக் கொண்டோம் என்பதைத் தெரிவித்த போது அவள் தெரிந்து கொண்டாள். 

    "சந்தேக நபரை நாம் உங்கள் வீட்டிலிருந்து கைது செய்யும் வரை நீங்கள் எமது பாதுகாப்பில் இங்கு இருந்து கொள்ளுங்கள்," கூறியபடியே அவர்கள் அந்த அறையை விட்டு அவசரமாக நீங்கினார்கள்.  

    Postad



    You must be logged in to post a comment Login