எனது தாயகப் பயணம் இந்த அசாதாரண, அரசியல், பொருளாதார சீர்கேட்டிலும், மிக இனிமையாகக் கழிந்து, முற்றுப் பெறும் தருவாயில் இப்பிடியொரு இடி வந்து விழுந்து துயரையும் அதிர்ச்சியையும் தந்தது.
கோமகன் என அழைக்கப்பட்ட மாமனிதன் இனி எம்மோடு இல்லை என்பது நம்பத்தக்கத்தாக இல்லை.
இது தவறான தகவலாக இருக்க வேண்டும் என்ற அவாவில் பல இலக்கிய நட்புகளோடு பேசியதில்
இந்த மறைவு நிஜமானது என்பது மனத்தில் வலியைத் தோற்றுவித்தது.
முகநூல் வழியாக ஏற்பட்ட உறவுகளில் ஒருவராகவும், கொரோணா காலத்து இலக்கியச் சந்திப்புகள் - காணொலி மூலம் என்னோடு அறிமுகமாகி, தனது ‘நடு’ மின் இதழ் மூலம் எனது சில படைப்புக்களை பதிப்பாக்கியவராகவும் இருந்த கோமகனின் தொலைபேசி சந்திப்புகளில் சிலவற்றை அசை போடுவது சாலச்சிறந்தது எனத் தோன்றுகிறது.
இன்னொரு தோழரின் முகநூல் பின்னூட்டத்தில், ஒடியல்க்கூழ் பற்றிய கோமகனின் நகைச்சுவை உணர்வு கண்டு, நான் அதற்குப் பதில் சொல்லப் போக, “அட்லீஸ்ட் ஒரு மரக்கறி கூழாவது செய்வியள் தானே?” எனக்கேட்டதோடு எமது முகநூல்ப் பயணம் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து வந்த பேரிடர் காலத்தில் எமக்கிடையேயான தொலைபேசி அழைப்புகள் ஆரம்பமாகின.
“வணக்கம்! நீங்கள் போட்ட குறுஞ்செய்தி கிடைச்சது. அதெல்லாம் தேவையில்லை, நான் இப்ப தொழில் ஒண்டும் இல்லாமல் வீட்டில தானே இருக்கிறன். எப்ப வேணுமெண்டாலும் கதையுங்கோ.”
என்னை அதிகம் அலட்டிக் கொள்ள விடாமல், பதட்டப்பட ஒன்றும் இல்லை என்ற ரீதியில் தன்னுடன் பேச வைக்க முயன்றார்.
“உங்களுக்கு — ————- இன்னாரையெல்லோம் தெரியுமோ?“ வினாவினார்.
“ இல்லையே? மன்னிக்க வேணும், நான் வருசக்கணக்கில ஒரு கடிவாளம் பூட்டின குதிரை மாதிரி, பள்ளிக்கூடமும் வீடுமாய் இருந்திட்டன்!”
குற்றவுணர்வோடு சொல்லி முடித்தேன்.
அந்தப்பக்கம் வெடிச் சிரிப்புப் பறந்தது.
“ உப்பிடிச் சொல்லுறதுக்கும் ஒரு கெத்து வேணும் பாருங்கோ!” என்றார்.
“ அது தானே , சொன்னனான், உண்மையிலயே எனக்கு கன தமிழ் அறிஞர் பெருமக்களைத் தெரியாது. நான் வேலைக்குப் போகாட்டால் என் வீட்டுப் பொருளாதார நிலை மோசமாகிப் போயிருக்கும் எல்லோ? அப்ப இப்ப தான் ஒரு கொஞ்சம் மூச்சு விடுறன்!” சொல்லிய போது என்ன ஏது என்று விடுப்பில்லாமல் எனக்கு அருமையாகப் பதில் கூறினார்.
“ முதலில நாங்கள் எங்களைப் பாதுகாக்க வேணுமெல்லோ? அதுவும் வெளிநாட்டில? அதுக்குப் பிறகு தான் எழுத்து, இலக்கியம் எல்லாம் வர வேணும்!” அமைதியாக, ஆனால் அழுத்தம் திருத்தமாகப் பதில் தந்தார்.
“ நாளைக்கு என்னையும் சரியாய்த் தெரியாமல் போகக்கூடாதெல்லே? என்ர பேட்டி ஒண்டு அனுப்பி விடுறன், வாசிச்சுப் பாருங்கோ!” அன்போடு சொன்னதோடு அனுப்பியும் வைத்தார் .
“ உங்களுக்கு சாத்திரியைத் தெரியுமோ?”
“ எந்த ஊர் சாத்திரி? கன சாத்திரிமார் இருக்கினம்.” கேட்ட போது, மீண்டும் அந்த வெடிச்சிரிப்பு.
“ ஆயுத எழுத்து எண்ட நாவல் ஆசிரியர் சாத்திரி. நீங்கள் அந்தப் புத்தகத்தைக் கட்டாயம் வாசிக்க வேணும். அவருக்கு முகநூல் அழைப்பும் குடுக்கலாம் விரும்பினால்!”
“ சரி, அப்பிடியே செய்யிறன்!” சொன்னபடியே செய்தேன்.
************************************
” இளம் தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர் எண்டு என்ர கதையோட என்னை அறிமுகம் செய்திருக்கிறீங்கள். ‘இளம்’ எண்டதை தயவு செய்து எடுத்து விடுங்கோ!” அவரது மின் இதழில் வந்த எனது அறிமுகத்தின் போது கோரிக்கை வைத்தேன்.
“ ஏன், நீங்கள் அப்ப இளமையாய் இல்லையோ? எனக்கெண்டால் அப்பிடித்தான் இருக்கு!” பழையபடி அதே வெடிச்சிரிப்பு.
“ நான் என்ன சின்னப்பிள்ளையோ, இல்லைத்தானே? “ என்றேன்.
“ அப்ப என்ன, அன்ரி எண்டு கூப்பிடச் சொல்லுறியளோ?”
“ நீங்கள் என்னை, அன்ரி, ஆச்சி, அக்கா எண்டு எப்பிடியும் கூப்பிடலாம். நானும் அப்ப உங்களை அண்ணை எண்டு கூப்பிடலாமோ?” கேட்டு வைத்தேன்.
“ உது சரியில்லாத கதை பாருங்கோ, அதெப்பிடி நான் உங்களுக்கு அண்ணையாகலாம்? என்னை கோமகன் எண்டு கூப்பிடலாமெல்லே?” சிரித்துக் கொண்டார், எனக்கும் சிரிப்புத் தாளவில்லை.
************************************
என்னுடைய இரண்டாவது சிறுகதை ‘நடுவில்’ பிரசுரமான போது, நன்றி கூறினேன்.
“ சிறுகதைக்கு வரைஞ்ச படம் நல்லாயிருக்கோ? “ கேள்வி எழுப்பினார்.
“ அருமையாய் இருக்கு. பிடிச்சிருக்கு. நான் அந்த ஓவியருக்கும் நன்றி சொல்லலாமோ?”
கேட்டபோது அவருக்கு மிக்க சந்தோசம் என்பதை வெளிப்படுத்தினார்.
“ நான் ஓவியரிண்ட விபரம் அனுப்பி விடுறன், நீங்கள் நன்றி சொன்னால் சரியாய்ச் சந்தோசப்படுவார். ஒரு இளம் ஓவியர் தான், யாழ் பலகலைக் கழகத்தில படிச்சுக் கொண்டிருக்கிறார்.” சொன்னதோடு அந்த ஓவியரின் விபரங்களையும் தந்தார். நான் அவரை முக நூலில் இணைத்துக் கொண்டு நன்றி கூறினேன்.
“இந்த ஓவியங்கள் தொடர்பாய் போன இதழிலை ஒரு அண்டியோடை பஞ்சாயத்தாய் போச்சுது!” என்றபடி,
ஒருவருக்கு அவர் எழுதிய கதைக்குத் தீட்டப்பட்ட ஓவியம் குறித்த கருத்து மோதலைக் கூறிச் சிரித்தபடி விடை பெற்றார்.
************************************
நான் ஒரு தடவை, சற்றே அறச்சீற்றத்துடன் இன்னொருவருக்கு பதிந்த பின்னூட்டத்தைப் பார்த்து விட்டு, உள்பெட்டிக்கு வந்து, “ நான் இப்ப தான் நித்தாவால எழும்பினனான், உங்க என்ன பிரச்சனை?” எனக் கேட்டிருந்தார். பதில் விளக்கம் கூறினேன்.
“ அட கோதாரி, வந்த கோபத்தை அடக்கிறதே. உந்த விஷயம் கேள்விப்பட்டனான் தான். உங்களுக்கு தெரியும் தானே விஷயம் தெரியாமல் மூக்கை நுழைக்கிறது எமது சனத்தின்ரை ஜீன் பிரச்சனை. நல்ல புத்தகத்தை எடுத்து படியுங்கோ!” என்று சிரித்தபடி சென்றிருந்தார்.
************************************
இப்படியாக முகநூலிலும் தொலைபேசியிலும் மாத்திரம் அறிமுகமானாலும் பல ஆண்டுகள் பழகியது போல எமக்கிடையே சில சில்லறைக் கருத்து மோதல்களும் வந்ததுண்டு.
ஒருமுறை உள்ப்பெட்டியில், “வணக்கம் நான் நகைச்சுவைக்காக உங்களுக்கு பதில் போட்டிருந்தேன். தவறுக்கு வருந்துகின்றேன்.”
எனக் கோமகன் கூறிய போது நானும் சளைக்காமல், “ ஐயோ ஆசானே, அதுக்கெல்லாம் வருந்தத் தேவையில்லை.” எனத் தடாலடியாக எழுதியிருக்க, நட்பு வழமை போல தொடர்ந்தது.
என்னோடு ஒரு குறுகிய கால நட்பை வளர்த்திருந்தாலும், தன் நகைச்சுவை உணர்வாலும், தன் சமூக அக்கறையாலும், இலக்கியப்பணியைத் தார்மீகக் கடமையாகக் கொண்டதாலும் என் எழுத்துக்கும் இலட்சியங்களுக்கும் தன்னுடைய ஆதரவைத் தந்தவர். ஆதாலால், நான் நினைப்பது போலவே எம்மெல்லோருடனும் இறப்பை வென்று, எப்போதும் வாழ்ந்திருப்பார்.
கோமகனுக்கு இறப்பென்பது எப்போதும் இல்லை.
விழிநீர், வீர அஞ்சலி!
You must be logged in to post a comment Login