புலிகள் தங்கள் கொலைகளுக்கு உரிமை கோருவது எப்போதும் அதனால் ஏற்படும் லாப நட்டங்களை கணக்குப் பார்த்தே!
தங்கள் ரசிகர் கூட்டத்தை உசுப்பேத்துவதா, அவர்கள் கோபம் கொள்ளாமல் பேய்க் காட்டுவதா, அதனால் அரசியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுமா, வேறு யாரையாவது குற்றம் சாட்டி லாபம் பெற முடியுமா என்ற கணிப்பீடுகள் இல்லாமல் புலிகள் எந்தக் கொலைகளையும் உரிமை கோரியதில்லை.
புலிகள் செய்த எந்தக் கொலையும் ஈழ விடுதலைக்கான ஒரு படி என்ற எண்ணத்தில் வாழ்ந்த ரசிகர் கூட்டமோ, நியாய அநியாயங்கள் பற்றியோ, அரசியல் ரீதியாக ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் பற்றியோ உணர்ந்து கொள்வதற்கு எந்த மனச்சாட்சியும் அறிவு வளர்ச்சியும் இல்லாமல், சொல்வதை நம்பியதும், நம்பிய மாதிரி நடித்துக் கொண்டே கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டதுமாக,
விசில் அடித்துக் கொண்டே இருந்தது.
மாத்தயா கைது விவகாரம் அது ஊரவர்களுக்குள் ஏற்படுத்தக் கூடிய கொந்தளிப்பைக் குறைக்க மறைக்கப்பட்டது.
அமிர் கொலைக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழலாம் என்ற அச்சத்தில் றோ மீது பழி சுமத்தப்பட்டது.
ராஜீவ் கொலை கூட மறைக்கப்பட்டு, நீண்ட நாட்களின் பின்னர் கொலையாளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி உத்தியோகப்பற்றற்ற முறையில் உரிமை கோரப்பட்டு, துன்பியல் சம்பவமாகியது.
தாங்களே கொலை செய்து விட்டு, லெப்டினன்ட் பதவி கொடுத்த சம்பவங்களும் உண்டு. பிரான்சில் வைத்து தாங்களே கொன்று விட்டு, சிங்களப் புலனாய்வு, ஓட்டுக்குழுக்கள் மீது குற்றம் சுமத்தி, பட்டம் கொடுத்து கௌரவித்த சம்பவங்கள் கூட பின்னர் புலிகளின் கொலை என உறுதி செய்யப்பட்டன.
இதே போல, கருணாரத்தினம் அடிகளார் கொல்லப்பட்ட போதும், ஆழ ஊடுருவும் படையணி மீது குற்றம் சாட்டியிருந்தனர். அது அவர்களுக்கு அரசியல் ரீதியாக தேவையானதாக இருந்தது. அவர்களின் தொண்டரடிப் பொடிகளுக்கு மனித உரிமை பற்றி குத்தி முறிந்து குளறியழ ஒரு சந்தர்ப்பத்தையும் வழங்கியிருந்தது.
ஆனால் அந்தக் கொலை புலிகளால் அரசியல் லாபத்திற்காக நிகழ்த்தப்பட்டது என்ற எங்கள் சந்தேகம் என்றைக்கும் குறைந்ததில்லை.
அதைப் பற்றி அன்றைக்கே எழுதியிருந்தோம்.
தற்போது ‘தேசிக்காய்த் தலையர்’ என்ற பதப் பிரயோகம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டி தேடிய போது, அடிகளார் பற்றி எழுதிய கட்டுரையை மீளப் பிரசுரித்திருக்கிறோம்.
அடிகளாரின் இளைய சகோதரர் என்னுடைய நண்பர், ஒரே கல்லூரியில் படித்த சக வகுப்பு மாணவர். அவரும் ஒரு கத்தோலிக்க குருவானவர், இத்தாலியில் நீண்ட காலமாக உள்ளவர்.
இன்னொரு எங்கள் வகுப்பு மாணவர், கத்தோலிக்க குருவாக உள்ளவர் கனடா வந்திருந்த போது பாடசாலை நண்பர்களைச் சந்தித்திருந்தார். அவர் சொன்ன விடயம் ஒன்று தான் புலிகள் மீதான சந்தேகத்தை வலுப்படுத்தியது.
ரோமில் இந்த குரு நண்பர் தங்கியிருந்த போது, அங்கு தங்கியிருந்த இடத்தில் உள்ளவர்களுக்கு வந்த தொலைபேசி அழைப்பு ஒன்று கருணாரத்தினம் அடிகளாருடையது.
இந்தியா 2002க்கு பின்னர் ஆயுதங்கள் உள்ளே வருவதை தடுத்து விட்டது, இங்கே நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. தான் ரோம் வருவதற்கான ஆயத்தங்களைச் செய்யும்படி கருணாரத்தினம் அடிகளார் கேட்டிருக்கிறார்.
இவ்வாறு கேட்ட சில நாட்களுக்குள் அடிகளார் மீதான குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இப்போது இந்தக் கொலைக்கான காரணத்தை ஊகித்துக் கொள்வதற்கு சிரமம் இருக்காது.
புலிகள் இருந்த இக்கட்டான சூழ்நிலையில், புலிகளின் முக்கிய கையாள் ஒருவர் வெளியேறுவது புலிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தக் கூடியது. வெளிநாடு போன பின்னர் அவரால் எந்தப் பயனும் ஏற்படாது. இதை விட, புலிகளின் தலைமையுடன் அவருக்கு, கட்டாய ஆட்சேர்ப்பு தொடர்பாக, முரண்பாடுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புகளும் உண்டு.
ஒரு கத்தோலிக்க குருவானவரைக் கொன்று விட்டு, அரசாங்கத்தைப் பழி போடுவதன் மூலம் அரசியல் ரீதியான லாபங்களுக்கான வாய்ப்புகள் அதிகம்.
இதன் அடிப்படையிலேயே இந்தக் கொலை நிகழ்த்தப்பட்டு, பழி வேறிடத்தில் சுமத்தப்பட்டது.
ஆனாலும், உள்ளூரில் இது குறித்த கசப்புகள் எழத் தொடங்கியதும் வழமை போன்ற புலிகளின் கைங்கர்யங்கள் தொடங்கியிருக்கின்றன.
1. அவர் மீதான குற்றச்சாட்டுகளை, குறிப்பாக பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றிய வதந்திகளை பரப்பியது. தங்களால் கொல்லப்பட்ட பலர் மீது பாலியல் குற்றம் சாட்டிய புலிகள் இதில் மன்னனாய் விளங்கிய கிட்டு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
2. நிண்டவன், போனவனுக்கு எல்லாம், இதென்ன அப்பன் வீட்டுச் சொத்தா? என்ற மாதிரி அள்ளி வழங்கிய மாமனிதர் பட்டம் அவருக்கு அவருக்கு வழங்கப்படவில்லை.
3. அந்தக் கொலை குறித்து பெரிய அளவில் எந்த ஆர்ப்பாட்டமும் வெளியில் நிகழ்த்தப்படவில்லை.
4. கிணற்றில் விழுந்து வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கு கூட பேஸ்புக்கில் வீரவணக்கம் செலுத்துபவர்கள் இன்று வரைக்கும் அவரது இறப்பை நினைவு கூர்வதில்லை.
உண்மையிலேயே சிங்கள அரசு இந்தக் கொலைக்கு காரணமாக இருந்திருந்தால், இவ்வாறு சுலபமாக மறக்கப்பட்டிருக்க முடியாது. வருடாந்தம் அதை வைத்தே ஒரு கூட்டம் பேஸ்புக்கில் லைக் வாங்கவாவது அவரது படத்தை போட்டு வீரவணக்கம் செலுத்தியிருக்கும்.
இப்படியாக நடத்தப்பட்ட ஒவ்வொரு அரசியல் கொலைகளும் இப்படியே மறக்கப்படத் தான் வேண்டுமா?
இந்தக் கொலையின் உண்மையை சொல்வதற்கு இன்றைக்குப் புலிகள் இல்லைத் தானே, பழசையெல்லாம் ஏன் கிளறுகிறீர்கள் என்று வழமை போல பலரும் கிளம்பக் கூடும்.
உண்மைகளை அறியப் புறப்பட்டால், எல்லாமே நாறும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் தான் கிளறப் பயப்படுகிறார்கள். பேசாமல் பூசி மெழுகி மூடி விட்டால், ஈழம் கிடைக்கும் என்ற நம்பிக்கை.
ஆனால் இப்படி இதோடு முடிந்து போக வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை.
இந்தக் கொலைகளுக்குப் பதில் சொல்வதற்கு ஆள் இல்லை என்றாலும், அந்தக் கொலைகளின் உண்மைத் தன்மை பற்றியாவது புலிகளோடு சம்பந்தப்பட்டிருந்தவர்கள் சொல்ல வேண்டும்.
ரௌடி வடிவேலு மாதிரி சீன் போடும் புஸ்வாணப் பட்டாசு பேஸ்புக் வெடிவாலுகளை விடுவோம்.
இன்றைக்குப் புலிகள் இல்லை. ஆனால் புலிகளோடு இருந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் பகிரங்க வெளியில் கருத்துத் தெரிவித்தபடியே இருக்கிறார்கள்.
யோ கர்ணன், நிலாந்தன், கருணாகரன், தமிழ்க்கவி, சாத்திரி என்று பலரும் பொது வெளியில் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்.
இவர்களாவது இந்தக் கொலைகள் பற்றி சொல்லியாக வேண்டும்.
தலைமையின் முடிவுகள் எங்களுக்கு பொறுப்பில்லை, எங்களுக்குத் தெரியாது என்று தட்டிக் கழித்து விட முடியாது.
குறைந்த பட்சம், இந்தக் கொலை பற்றி அன்றைய சமூகத்தில் இருந்த உணர்வு நிலை, இயக்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு இடையில் நடந்த கருத்துப் பரிமாற்றங்கள் பற்றியாவது இவர்கள் எழுதியாக வேண்டும்.
இன்றைய தமிழ் இலக்கியப் பரப்பில் கொச்சைப்படுத்தப்பட்டு வரும் ‘இலக்கிய அறம்’ இவர்களுக்கு இருக்குமாயின், இவர்கள் பதில் சொல்லித் தான் ஆக வேண்டும்.
ஆனால் இவர்களில் சிலர் இன்றைக்கும் தங்கள் அரசியல் அடையாளத்துக்கும் வாழ்வுக்கும் புலி சார்பு தமிழ்த் தேசியத்தை நம்பி இருப்பவர்கள். இவ்வாறான கருத்தைச் சொன்னால், தாங்களும் துரோகிகள் ஆக்கப்பட்டு, பிழைப்பில் மண் விழக் கூடும் என்ற புலி பிராண்ட் தமிழ்த்தேசியப் பூதத்தின் நிழல் மீதான பயம் இவர்களுக்கு இருக்கும்.
இவர்கள் தற்போது ஊடகங்கள் மூலமாகவே பொதுவெளிகளில் கருத்துத் தெரிவிக்கிறார்கள். மக்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதிலிருந்து தான் ஊடக அறம் ஆரம்பிக்கிறது. அந்த உண்மையை வெளிக்கொணர்வதில் தயக்கம் இருந்தால், அறம் பற்றிய பேச்சுக்கான தேவையே இல்லை.
துணிச்சலாக ‘இல்லை, இது அரசின் படுகொலை’ என்று அடித்துச் சொல்கின்ற அளவுக்கு மனச்சாட்சியாவது இருக்க வேண்டும்.
தமிழினி இன்றைக்கு இருந்திருந்தால், மனச்சாட்சிப்படி தனது கருத்தைச் சொல்லியிருக்கக் கூடும்.
சில நேரம் சாத்திரி? ஒருவேளை கருணாகரன்?!
இவனுக்குப் பதில் சொல்ல, இவன் என்ன பெரியாளா? என்ற கேள்வி இந்தப் பெரியவாளுகளுக்கு எல்லாம் இருக்கக் கூடும்.
‘ஒருத்தரும் இதைப் பற்றிக் கேட்கேலைத் தானே! பிறகு ஏன் நாங்கள் ஏன் அதைப் பற்றி சொல்ல வேண்டும்?’ என்று இவர்கள் சொல்லக் கூடாது என்பதற்காக, யாரோ இந்தக் கேள்வியைக் கேட்டுத் தான் ஆக வேண்டி இருக்கிறது.
மக்களுக்கு உண்மையைப் பேசி தங்கள் அறத்தை நிருபிப்பதா? இல்லை, தமிழ்த்தேசியத்தை பேசிப் பிழைப்பை தொடர்வதா? என்பதை அவர்கள் தீர்மானிக்கலாம்.
ஆனால் இவர்கள் குறித்து நான் எந்த நம்பிக்கைகளையும் கொண்டிருக்கவில்லை.
ஆனால் இவர்களில் ஒருவரின் எழுத்துகளை பார்க்கும் போது ‘ஆழ ஊடுருவும் படையணியை இலக்கு வைத்து புலிகள் வைத்திருந்த கண்ணிவெடியில் அடிகளார் தற்கொலை செய்து கொண்டார்’ என்று எழுதுவாரோ என்ற சந்தேகம் மட்டும் இருக்கிறது!
You must be logged in to post a comment Login