(இப்போதுதான் கலைச்செல்வனின் பிறந்த தினம் சில தினங்களில் கழிந்துவிட்டது என எனக்குத் தெரியவந்தது. எனக்கு இந்தத் தினங்களில் அதிக விருப்பம் இல்லாமல் போயினும், இந்தத் தினங்களை நான் சபிப்பவன் அல்லன். ஆனால் வருடத்தின் பல தினங்களில் எனது இனிய நண்பனின் நினைவு எனக்குள் எப்போதும் வரும், உமாகாந்தன், சபாலிங்கம் அவர்களது நினவினைப் போல. எமது புகலிட இருப்பில் நினைவில் இருக்க வேண்டியவர்களில் ஒருவர் கலைச்செல்வன். அராஜகத்துக்கு எதிராக எழுத்து ஓர் ஆயுதம் எனக் காட்டியவர், பயம் இல்லாமல். புகலிட இலக்கியம் மீது பேசும்போது “பள்ளம்” எனும் இதழ் முதல் உதாரணங்களில் ஒன்று. சில இதழ்கள் வந்தாலும் இதனைப் பலர் வாசிப்புக்குக் கொண்டுவந்தவர் கலைச்செல்வனே. புகலிட இலக்கியத்தின் தொடக்க இதழ்களில் ஒன்றுதான் “பள்ளம்”. இன்று புகலிடத்தில் புதிய எழுத்துகள் வருகின்றன. அன்று எழுத்து இயக்கத்தின் பின்னால் அபாயப் பாம்புகள் திரிந்தன என்பதுதான் உண்மை. இந்தப் பாம்புகளை எதிர்த்ததே கலைச்செல்வனின் எழுத்து இயக்கம். 2017 இல் நான் இவர் மீது எழுதிய இந்தக் கட்டுரை ஓர் அஞ்சலிக்காக உங்களது மீள் வாசிப்பிற்கு.)
எனது நாட்டின் தலைநகரான கொழும்பில் தொழில் செய்து, பின்னர் அங்கு அகதியானபோது எது எனது தேசம் என்ற கேள்வியால் வந்ததே நான் வாழத்தொடங்கிய அகதிப் பயணம். ஒவ்வொரு நாடுகளிலும் முதலாளித்துவமும், தேசியத்துவமும், இனவெறித்துவமும் மக்களை அடிமைகளாக உருவாக்கிக்கொண்டுள்ளது. மோசமான அரசியல்களும், பொருளாதார இருப்பின்மைகளும் எமது அகதி நிலைப்புகளை ஊக்குவிக்கவில்லையா? சரி! அகதித்துவம் முதலாளித்துவத்தினது படைப்பாகவும் கொள்ளலாம். எனது இனிய நண்பரும், “பள்ளம்” இதழைக் கொண்டுவரத் துடித்தவருமான கலைச்செல்வனை நினைக்கும்போது இந்தச் சிந்தனைகள் எனக்குள் வருகின்றன.
தோழராகவும் நண்பராகவும்தான் அவரை நான் சந்தித்தேன். ஓர் அகதி எனும் நினைப்புள் அவர் பின்னிப் பிணைந்ததை ஒவ்வொரு சந்திப்பிலும் அவதானிக்கத் தவற முடியாது. இந்த நினைப்புள் ஓர் தேசிய வெறியை வாழ்வதில் தனது தினங்களை அவர் செலவழிக்கவில்லை. ஓர் அகதித் தியானிப்புள் உள் நுழைந்து தமிழ் கலாசாரத்தின் போக்கிரிப் பக்கங்களை அழிக்கவேண்டும் எனக் கருதியது அவரது மனம். அரசியலும் இலக்கியமும் பலமான அவரது கைகளாகின இந்த அகதித்துவத்தால்தான். இந்த மனத்தின் முகம் எப்படி எனக்குள் அழியும்? கலை அலையாலும் அரசியல் அலையாலும் முத்தமிடப்பட்டவர் கலைச்செல்வன்.
இவரது புன்சிரிப்பு வசீகரத் தன்மை கொண்டது. இது இல்லாமல் நான் ஒருபோதும் அவரைக் கண்டதில்லை. ஆம்! அவரிடம் உணர்ச்சி வேகங்களைப் பல தடவைகள் கண்டேன். இந்த வேகங்கள் புன் சிரிப்பால் மறைந்துவிடும். இவரது சிரிப்பின் பின் தேங்கிக் கிடப்பன ஒரு கேள்வியல்ல பல கேள்விகள். இவர் ஓர் கேள்விகளின் புத்திரராகவே இருந்து தனது கருத்துக்களைத் தனது போக்கின் ஒழுங்குகளால் வெளிப்படுத்தியவர்.
பிரான்சின் தொடக்க புகலிடத் தினங்களில் (1975 களில் எனவும், தம்பிமுத்து, அழகு சுப்ரமணியம் காலங்களிலும் எனச் சொல்வேன். இலங்கைத் தமிழர் புகலிட இருப்பு பலர் காட்டுகின்ற “தேசப் பிரிப்பு” வாதத்தில் மட்டும் எழுவது அல்ல. அது மிகவும் முந்தியே தொடங்கியது.) எப்போதும் போல எனது எழுத்துத் தொழில் அனுபவங்களை யாரிடமும் பிரசித்ததில்லை. சிலர் நான் பத்திரிகையில் தொழில் செய்தேன் என்பதை அறிந்துகொண்டபோது எனக்குள் வியப்பு வந்தது. இந்த வேளையில்தான் கலைச்செல்வனோடும் அவரது இலக்கிய அரசியல் நண்பர்களுடனும் சந்திப்புகள் நடந்தன. இந்தச் சந்திப்புகளில் இலக்கியத்தின் புதிய வாசிப்புகள் மீது நாம் சம்பாசித்தோம். ஆம்! இவர்கள் புகலிடத்தை எழுத்தில் கொண்டுவர விரும்பினார்.
எனது அபிப்பிராயங்களையும் தமது எழுத்துகள் மீது அறிய எனது தோழர்கள் விரும்பினார்கள். பாரிஸின் மிகப் பெரிய கலை நிறுவனமான Centre Georges Pompidou வில் பல சந்திப்புகள் நடந்தன. 83 இற்கும் 90 க்கும் இடையில் இந்த சந்திப்புகள் நடந்து இருக்கும் என நான் நினைக்கின்றேன். இலக்கியப் பாடம் செய்தல் என்பது எனது நோக்கமாக இல்லாதிருந்தும், எனது சில அபிப்பிராயங்கள் எழுத்தின் சேர்மையை விளக்கி அவர்களுக்குச் சொல்லப்பட்டன.
Centre Georges Pompidou வின், அழகான தரையில் இருந்து எமது சிந்தனைகளைப் புதுப்பித்து, பல உலக இலக்கியங்கள் மீது உரையாடுதல் உவப்பானதாக இருந்தது. இந்தத் தினங்களில் “பள்ளம்” இதழின் ஆசிரியராக இருந்தவரின் இளம் முகத்தில் புதுப் பிரகாசங்களைக் கண்டேன். இந்தத் தினங்களை எனது ரசனைத் தினங்களாகவும் கொள்ளலாம். ஆம்! இலக்கியத்தில் மிகவும் பிரியம் உள்ளவராக அவரைக் கண்டேன்.
இவருடன் எனக்கு ஏற்பட்ட தொடர்புகள் நிறைய. ஓர் புரட்சிப் பூ இவரது இதயத்துக்குள் எப்போதும் இருந்தது. எமது பழைய கொடூரமான கலாசாரங்களின் மீது எதிர்ப்பு இருந்ததைத் தனது சொல்களால் காட்டினார். இந்தக் காட்டல் தனது தேச வாழ்வில் கண்ட மோசமான பக்கங்களை, இவரது அகதிப்போக்கு மறுத்தது எனவும் சொல்லலாம்.
கலைச்செல்வனின் நினைப்புகள் புகலிட நினைப்புகளுள் காக்கப்படவேண்டும். எமது வெளிநாட்டு வாழ்வு ஓர் அகதி வாழ்வும், ஓர் கருத்துப்போர் வாழ்வும் எனக் கருதியவர் இவர். இலக்கியம் செய்தல் ஓர் போர் செய்தல் எனும் கருத்தை இவரிடம் இருந்து நான் கேட்டு உள்ளேன்.
புகலிடம் தோன்றுவதற்குப் பல காரணிகள் உள்ளன. எங்கள் தேசத்தில் விளைந்த இன ஒடுக்குமுறையும், தேசிய வெறிகளுமே தமிழர்களை மட்டுமல்ல சிங்களவர்களையும் அகதிகளாக்கியுள்ளன. உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தேசியவாத, மதவாதக் கொடூரங்கள், அரசியல் அடக்குமுறைகள் இப்போது அதிகமாகிவரும்போது உலகே ஓர் புகலிடமாகிவரும் விந்தையை நாம் காண்கின்றோம். இந்த விந்தையில்தான் புகலிடம் நாம் விட்டு வந்த நாடாகுகின்றது.
எமது புகலிடம் எதுவாம்? இது அமைதியான புகலிடமா? எனும் கேள்விகள் கலைச்செல்வனிடம் இருந்தன. சில வேளைகளில் புகலிடமும் யுத்தம் “நடக்கின்ற” தேசம் போல பட்டதுண்டு. எமது புகலிடம் பல வேளைகளில் எமது தேசமுமே. எமது தேசத்துள் வாழும் நல்ல விதிகளும் கெட்ட விதிகளும் புகலிடத்தில் பாதுகாக்கப்படுகின்றன. இது எமது புகலிடத்தின் கதையல்ல, அனைத்துப் புகலிடங்களின் கதைகளுமாகும்.
நல்ல விதிகள் தேசிய வாதங்களில் இல்லாதன என்பது என் போக்கு. “தேசியவாதம்” எனும் அழைப்பு மனிதர்களின் அடிப்படை வாழ்வு நோக்குகளை உடைப்பது. இந்த வாதத்தின் உள்ளே வாழும் துதிகள் ( மத,அரசியல் வழிபாடுகள்) நமது நாட்டிலும், நாம் வெளியே போகும் நாடுகளிலும் எம்மைக் கெடுப்பன. இந்தக் கெடுதலின் முடிவு எது? ஆம்! அராஜகத்தை எதிர்ப்பது எனலாம். உலகின் அராஜகங்கள் பல முகங்களைக் கொண்டன. இவைகள் பல கண்டங்களிலும், பல மொழிகளிலும், பல இனங்களிலும், பல சாதிகளிலும், அரசுகள், மதங்களிலும் வாழும்.
கலைச்செல்வனின் இலக்கிய, அரசியல் வெளிப்பாடுகள் அராஜகத்தினது எதிர்ப்பே. இவர் கொண்ட இந்தப் போர் எதிர்ப்பே இவருடன் எனது தொடர்புகளை நீளச் செய்தன. “பள்ளம்”, கலைச்செல்வனின் உறுதியால் தொடங்கிய முதலாவதான புகலிடச் சஞ்சிகைகளில் ஒன்று. போர் எதிர்ப்பின், போர் விமர்சனத்தின் தொடக்க வெளிப்பாடுகளில் கவனிக்கப்படவேண்டியது எனலாம். இவரது ஆர்வத்தாலும் துடிப்பாலும் தொடக்கப்பட்ட “பள்ளம்” சஞ்சிகை காத்திரமானது. இது அச்சகத்தில் நடத்தப்பட்டது அல்ல. Typewriter உம் பேனாவும்தான் இந்த வெளியீடுகளின் ரசங்களாக இருந்தன. இப்போது எமது வெளியீட்டு உலகில் பல உத்திகள் வணிக நோக்கில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த உத்திகள் இல்லாமல் ஓர் வாசிப்பு நோக்கில் தொடக்கப்பட்டதே புகலிட எழுத்துகள். இந்த வெளியீடுகளின் அழகியல் அநித்தியங்களும் அழகாக விபரிக்கப்படவேண்டியன. குளிரில் கடுமையான தொழில்கள் செய்து, ஓர் அறையில் பலர்களுடன் வாழும் வேளையில் தொடக்கப்பட்ட புகலிட வெளியீட்டில் சில வெளியீட்டு அசுத்தங்களும் சுத்தம் எனத் தியானிக்கப்படலாம்.
தொழில்களைப் பார்த்து, இவைகளது பிடிகளில் தப்பி, பின்னர் தமது அறைகளுக்குள் வந்து, கடைகளுக்குள் சந்தித்து, சம்பாசித்து, சரியா சரியில்லையா எனும் சூடான விமர்சனங்களுக்குள் ஜனித்ததுதான் எங்கள் புகலிடம்.
புகலிடம் என்பது ஓர் போர் எதிர்ப்பே. இந்த சூழலை அனைத்துப் புகலிடங்களிலும் காணமுடியாது. இன்றும் புகலிட “மேதைகளில்” பலர் போர்த்துவத்தை மெத்துவதில் விண்ணர்களாக இருக்கும்போது “இங்கும் முதலாளித்துவம் எங்களை நொருக்குகின்றதே…” எனும் குறிப்புகள் எமக்குக் கிடைக்காது விடுகின்றன. ஆம்! போர் விருப்பின் நிறங்கள் பல புகலிடத் திரையில் காண்பது இலகு. எமது புகலிடத்துவம் போர்த்துவமாக இல்லாதிருத்தல் எமது தேசத்தில் மானிடச் சுவாத்தியத்துக்கு வழி வகுக்கும். இந்தப் போரின் எதிர்ப்பை நான் கலைச்செல்வனிடம் உரையாடிய வேளைகளில் கண்டுள்ளேன்.
இளம் வயதில் அமரராகிய எனது தோழரும் நண்பருமான கலைச்செல்வன் ஓர் கதைஞர் என்பதை அவருடன் உரையாடிய வேளைகளில் அவதானிக்கத் தவறவில்லை. அவரது கலை அவரினது கூச்சத்தால் முத்தமிடப்பட்டது. உணர்ச்சி வசம் ஒரு பக்கம், மறு பக்கத்திலோ அமைதியின் இருத்தல்.
ஆம்! அவர் எனக்குக் கதை சொன்னார். நானும் அவரும் பாரிஸின் Saint Lazare சுரங்க ரயில் நிலையத்துள் இருந்தோம்.
“உங்களுக்கு ஓர் கதை சொல்லலாமா?” எனக் கேட்டார்.
“ஆம்!” என்றேன்.
“இந்தக் கதை எழுதப்படவில்லை. எப்படிச் சொல்வது….” என முகத்தைத் தாழ்த்தினார்.
சிறிய வெட்கம் அவரது முகத்தில்.
“சொல்லுங்கள்… பின்பு எழுதுங்கள்….” என்றேன்.
புன்னகைத்தும் சில கூச்ச மொழிகளோடும் கதையைச் சொன்னார். வித்தியாசமான கதை. சம்பிரதாய விரும்பிகள் இந்தக் கதையினை எதிர்ப்பர். அது ஓர் புதுக் கதையாகவும், புரட்சிக் கதையாகவும் இருந்தது. நான் அவரது கதையை வாழ்த்தினேன். ஒருபோதும் இந்தக் கதை வெளிவந்ததில்லை.
ஆம்! அது அவரது காதல் கதையாக இருந்தது.
தமிழ்ப் புகலிடம் மீது பேசும்போது கலைச்செல்வன் எமது நினைப்புள் இருக்கவேண்டும்.
நான் ஜெயந்தீசன் எனும் புனைபெயரில் எழுதிய குட்டிக்கதைகளின் முதலாவது கதையான “பொட்டு”, “பள்ளம்” இதழில்தான் வந்தது. இது அராஜக எதிர்ப்பின் கதை. இந்தப் படைப்பின் மீள் பிரசுரம் கனடா “தாயகம்” இதழில் வந்துள்ளது. (http://www.thayagam.com/pottu/) இதில் “பள்ளம்” மீது எழுதியுள்ளேன்.
கலைச்செல்வனுக்கு எனது இனிய முத்தங்கள்.
(புகலிடம் எப்போதும் எழுத்துப் பேச்சு வடிவங்களின் கண்ணாடியாக இருப்பது. ஆம்! இழப்புகள் இந்தக் கண்ணாடியில் தெரியும் வேளைகளில் தீர்வுகளின் வீதிகள் நிறையப் பிறப்பதுண்டு. பின்பு பல வீதிகள் அழிவதும் இயல்பு. இது எனது புகலிடம் மீதான விரிவான குறிப்பல்ல, எனது இனிய நண்பர், இலக்கியத்துக்குள்ளும் அரசியலுக்குள்ளும் தோய்ந்த கலைச்செல்வன் மீதான சிறிய குறிப்பு. இனியன சொல்லல், இவரின் இருப்பு. தீவிரமான வேளைகளிலும் எரியும் இதயத்தோடு இவர் இனியன சொல்வதைக் கேட்டேன். இருத்தல் மீதான கரிசனையோடு இவர் தமிழரின் போராட்டத்தைப் பார்த்தவர், இந்தப் போரில் இவரது கண்டனப் பார்வைகள் மனித உரிமைகளை வேண்டியன. இவரது தொடக்க கால இலக்கியத் காலங்களில் இவரையும், இவரது சில நண்பர்களையும் Centre Georges Pompidou எனும் பாரிஸின் கனதியான கலை நிறுவனத்துள் சந்தித்து படைப்பு மீது பேசியவை இப்போதும் எனது இன்றைய தினங்களாக உள்ளன,
“தமிழ் முரசு” வினது பின்னர் வந்த “பள்ளம்” புகலிடத்தினது வரலாற்றின் சாட்சியமாக இருக்கவேண்டியது, இதனது வருகையின் காரணி கலைச்செல்வனே. இந்த இதழில்தான் “ஜெயந்தீசன்” பிறந்தார். இது கலைச்செல்வனின் அழகிய புன்னகையுடன் கூடிய தொடர் வேண்டுகோளால். ஆம்! “பொட்டு” எனது முதலாவது கதை. இது புலிகளுக்குச் சிக்கலானது. உண்மைகளைப் புலிகளும், பல வேறு இயக்கங்களும் நேசிப்பன அல்ல எனும் நோக்கோடுதான் இந்தக் கதையை எழுதினேன், ஆம்! எனது பெயரில் அல்ல.
இந்தக் கதை வந்த வேளையில் கலைச்செல்வன் பிரான்சில் கடத்தப்பட்டு கொடூரமான வன்முறைக்கு உள்ளாகினார். “நீதான் பொட்டு எழுதுனனியோ?” எனக் கேட்டு மீளவும் தனக்கு அடித்ததை திரும்பிவந்தபோது என்னிடம் சொன்னார் கலைச்செல்வன்.
பின்னர் கனடா “தாயகம்” பத்திரிகையில் ஒவ்வொரு வாரமும் ஓர் கதை வந்தது. இந்தக் கதைகளின் கிண்டல்ப் போக்கு பலருக்கு ரசிப்பைத் தந்த வேளையில், வேறு சிலருக்கு எதிர்ப்பைத் தூண்டியதை அறிவேன்.
எனது இனிய நண்பரும், இலக்கிய வித்தகருமான எஸ்.பொ இந்தக் கதைகளைப் புத்தகமாகப் போடவேண்டும் என்பதை விரும்பினார். இவரினால்தான் “ஜெயந்தீசன்” என்பது க.கலாமோகன் எனத் தெரிவிக்கப்பட்டது . “ஜெயந்தீசன் கதைகள், கலாமோகன்” எனும் புத்தகத்தை 2003 ஆம் வெளியிட்டது மித்ரா பதிப்பகம்.
கலைச்செல்வன் எங்களோடு இல்லை. மறைவு பெரியது. அதுவும் இளம் வயதில். இவரது இலக்கிய, அரசியல் போக்குகள் தீர்வைத் தேடியன. இவருக்குக் காணிக்கையாக, இவரால் வெளியிடப்பட்ட எனது “பொட்டு” எனும் குட்டிக்கதை மீள் பிரசுரமாகின்றது.)
இன்று இரவு நான் ஒருவனுக்குப் பொட்டு வைக்கவேண்டும். எனக்கோ அவனைத் தெரியாது.இயக்கமோ எனது வலது கையில் ஒரு போட்டோவையும் இடது கையில் ஒரு துவக்கையும் வைத்துவிட்டு,
“நெற்றியில் வடிவாகப் பொட்டு வைக்கவேண்டும். வட்டப் பொட்டாகவும் இருக்கவேண்டும்.”
இப்படிக் கட்டளை செய்தது.
“ஒரு நாளும் நான் ஆளைப் பார்த்ததில்லையே!” என்றேன்.
தளபதி என்னை முறைத்துப் பார்த்துவிட்டு,
“அதொண்டும் பெரிய பிரச்சினை இல்லை. போட்டோவும் போட்டோவுக்குப் பின்னாலை அட்ரசும் இருக்கு. அவ்வளவும் காணும். நீ இயக்கத்துக்கை வந்து மூண்டு வருசமாகுது. இண்டுவரைக்கும் நீ ஒராளுக்கும் பொட்டு வைக்கேல்லை. உனக்கு அந்த அனுபவம் வந்தாகவேணும். அதுதான் ஒரு ஈசியான கேசைப் பாத்து உன்னை அனுப்புறம். அவனிட்டை துவக்குமில்லை, வெடிகுண்டுமில்லை. ஓடிப்போய் பொட்டு வைச்சிட்டு வா!”
அதட்டும் குரலில் சொன்னார்.
வீட்டு வாசலில் போய் நின்றபோது அங்கே நிசப்தமாகவிருந்தது. காற்சட்டைப் பையுள் கிடந்த துவக்கு வில்லில் என் சுட்டுவிரலை நிதானமாகப் பொருத்தியபடி, ஏற்கனவே எனக்கு சொல்லித்தரப்பட்ட அறிவுறுத்தல்களை ஞாபகப்படுத்திக்கொண்டு,
“அண்ணை”
இப்படிக் குரலிட்டவாறு உள் நுழைந்தேன்.
பதில் எதுவும் வரவில்லை. குசினிக்குள் மட்டும் சத்தம் கேட்டது. இயக்கத்தில் எனக்குப் பெரும் நம்பிக்கையுமிருந்ததால் குசினிக்குள் பூனை போல் உள்ளிட்டேன்.
அவனோ வெறும் மேனியோடு. முன்னால் கிடந்த வெறுங் கிண்ணத்தில் அப்போதுதான் அவள் ஒரு அகப்பைச் சோற்றைக் கிள்ளிப் போட்டாள். அவனது கரங்களைப் போலவே அவளது கரங்களும் காய்த்துக் கிடந்ததை எனது கண்கள் படம் பிடித்துக்கொண்டன. தளபதி தந்த போட்டோவில் கிடந்த அதே உருவம். நெற்றியில் அதே மச்சம். இவனிற்குத்தான் நான் இப்போது பொட்டு வைக்கப் போகின்றேன்.
“அண்ணை!” இது நான்.
அவன் என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு,
“தம்பியைப் பாத்தா இயக்கம் போலத் தெரியுது. பாவங்கள், இயக்கமெண்டு வெளிக்கிட்டாப் பிறகு அதுகளெங்கை ஒழுங்காச் சாப்பிடுதுகள். தம்பி இதிலை இரும். ராசாத்தி! தம்பிக்கும் சேத்து ஒரு கிண்ணத்தில சாப்பாடு போடு”.
எனக்கு அப்போது பசித்தது. அவர்களோடிருந்து மூச்சுப் பேச்சில்லாமல் சாப்பிட்டேன். பின் எதை நிறைவேற்றச் சென்றேனோ அதை நிறைவேற்றாத திருப்தியில், கொய்க் குழம்பின் மகோன்னதத்தை நினைத்தபடி முகாமிற்கு வந்தபோது, தளபதி கேட்டார்:
“பொட்டு சரியாக வைக்கப்பட்டதா?”
“இல்லை நான் பொட்டு வைக்கேல்லை!”
தளபதியின் மீசை துடித்தது. அக்கினி இரண்டு கண்களிலிருந்தும் சீறியது. தன்முன் கிடந்த மேசையில் கைகளால் ஓங்கியறைந்து இரண்டு சீடர்களை அழைத்தார்.
இந்த அழைப்பிற்காகவே காத்திருந்தவர்களைப்போல ஓடி வந்தார்கள்.
“கூட்டிக்கொண்டு போய் ஆளுக்கொரு வடிவான வட்டப் பொட்டு வைச்சு விடுங்கோ”.
அவர்கள் என்னைக் கொற கொறவென்று இழுத்துச் சென்றார்கள்.
You must be logged in to post a comment Login