முழு உலகமும் பயங்கரவாதம் என்று சொன்னாலும், 'இல்லை, நாங்கள் தேசிய விடுதலைப் போராட்டம் நடத்துகிறோம்' என்றும், முழு உலகமும் சமாதானம் செய்யுங்கள் என்ற போது, 'எங்கள் தேசியத் தலைவருக்கு எல்லாம் தெரியும், நீங்கள் வாயை மூடிக் கொண்டிருங்கள்' என்றும் சொல்லிக் கொண்டே, நீங்கள் வோட்டுப் போடும் நேரமெல்லாம் 'சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பதாகப்" புல்லரித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு எது நடந்தாலும், முழு உலகமும் ஓடி வந்து ஒப்பாரி வைக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
தினசரி மாறும் சந்தை மரக்கறி விலைகள் மாதிரி மாறிக் கொண்டிருக்கும் உங்கள் கொள்கைகளை அன்றன்று எவன் புகழ்ந்து கொண்டிருக்கிறானோ, அவனை உங்கள் உண்மையான ஆதரவாளன் என்றும், மற்றவன் எல்லாம் துரோகி என்றும் திட்டித் தீர்க்கும் உங்களுக்கு, நேற்றைய துரோகிகள் இன்றைய நம்பிக்கை நட்சத்திரங்களாக உங்கள் வோட்டுகளுக்காக காத்திருக்கிறார்கள்.
ஒரு நாட்டை சர்வதேச அரங்கில் வல்லரசாக தலைநிமிர வைத்த ஒரு தமிழனை, உங்களுக்காக ஒப்பாரி வைக்கவில்லை என்பதற்காக துரோகி என்று சொல்லாக் குறையாக கத்தித் தீர்க்கிறீர்களே!
தலைவர் கனவில் ஜொனி மிதி வெடியைக் கண்டுபிடித்தார் என்று புல்லரிக்கும் உங்களுக்கு ஏவுகணைத் திட்டங்களின் மூலவர்களின் பெருமை எங்கே தெரியப்போகிறது?
உங்களைப் போல தமிழன் என்று புலம்பிக் கொண்டிருக்காமல். தன்னை மொழிக்குள்ளோ, மதத்திற்குள்ளோ குறுக்கிக் கொள்ளாமல், தன்னை இந்தியன் என்று பெருமைப்பட்டு, முழு இந்தியாவின் மதிப்பையும் சம்பாதித்த ஒரு மனிதனை உங்களுக்குப் பிடிக்கவில்லை.
உங்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் சீமான், நெடுமாறன், வைகோ போன்றவர்களைப் பிடிக்கிறது.
ஏழ்மையில் பிறந்தாலும், மனது வைத்தால் கனவுகளைச் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை விதையை இளைய தலைமுறைக்கு முன்மாதிரியாகக் காட்டிய மனிதன், காந்தித் தாத்தா, நேரு மாமா என்ற குழந்தைகளும் மாணவர்களும் கல்வியையும் ஆற்றலையும் வியந்து மதிக்கும் ஒருவராக வந்து முடிந்த ஒரு தமிழனில் பெருமை கொள்ள முடியவில்லை.
ஆனால், குழந்தைகள் கையில் துப்பாக்கியைக் கொடுத்து பலிக் களத்துக்கு அனுப்பிய மனிதனை சாமியறையில் வைத்துக் கும்பிட முடிகிறது.
சரி! உங்களது இன அழிப்புக்கு மற்றவர்கள் வந்து ஒப்பாரி வைப்பது கிடக்கட்டும்.
உங்கள் தலைவர் தனியான அரசாங்கம் நடத்திய காலத்தில் தான் றுவாண்டாவிலும், பொஸ்னியாவிலும் இன அழிப்புகள் நடந்தன.
அவற்றுக்கு எல்லாம் நீங்கள் கொடி பிடித்துப் போராட்டம் நடத்தினீர்களா? இல்லை, உங்கள் தலைவர் உண்ணாவிரதம் இருந்தாரா? இல்லை, அறிக்கை விட்டாரா? என்றெல்லாம் நாங்கள் கேட்கப் போவதில்லை.
தலைவர் இருந்த பங்கருக்கு அப்பால் உங்களுக்கு உலகம் இல்லை. உங்களுக்கோ, உங்கள் தலைவருக்கோ இதெல்லாம் தெரிந்திருக்காது.
ஆனால், மற்றவர்களுக்கு மனித நேயம் இல்லையே என்று புலம்பும் நீங்கள், உங்கள் கண் முன்னால் முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்திலிருந்து எல்லாமே பறிக்கப்பட்டு துரத்தப்பட்ட போது என்ன செய்தீர்கள் என்பதை மட்டும் சொல்லுங்கள்!
உங்களைப் போன்ற அறிவுக் கொழுந்துகளுக்காகத் தான் கன்பியூசியஸ் தொடக்கம் யேசுக் கிறிஸ்து வரை, கிரேக்க தத்துவஞானிகள் முதல் வள்ளுவர் வரை சொல்லி விட்டுப் போயிருக்கிறார்கள்...
do unto others as you would have them do unto you!
அதாவது, மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதை நீங்கள் முதலில் மற்றவர்களுக்கு செய்யுங்கள்.
You must be logged in to post a comment Login