நான் அந்தத் தெரு வழியே நடந்து சென்று ஒரு சந்தியை அடைந்த போது அங்கு ஒரு தேரர் தனது சுட்டு விரலைக் காட்டி “பறத் தமிழ் நாயே இந்த நாட்டை விட்டு வெளியேறு” என்று ஒரு மனிதரைப் பார்த்துக் கோபத்துடன் திட்டிக் கொண்டிருந்தார்.
அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்த மனிதரின் பொறுமையின் மீது புத்தரின் நிழல் கவிந்து கொண்டிருந்தது. அப்பொழுது அவ்வழியாக வெள்ளையுடையணிந்த யாத்திரீகர் கூட்டமொன்று “சில் சமாதானம்” செய்வதற்காக விகாரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
நான் அந்த யாத்திரிகர்களிடம் சென்று “ஒரு பவுத்த துறவி இப்படிப் பேசலாமா ” என்று அந்த தேரரைக் காட்டிக் கேட்டேன்.
அதற்கு அவர்கள் “அவன் ஒரு பவுத்த துறவி அல்ல ” என்றனர். “ஆனால் அவர் அப்படித்தானே கூறிக் கொள்கிறார்” என்றேன். “அது எங்களுடைய பிரச்சனை இல்லை ” என்று கூறிவிட்டு யாத்திரிகர்கள் கடந்து சென்றனர். நான் திரும்பிப் பார்த்த பொழுது அந்த மனிதர் அங்கிருக்கவில்லை.
நானும் அந்தத் தேரரும் மட்டும் சில நிமிடங்கள் அங்கு நின்றிருந்தோம். அவ்வழியாக விகாரைக்குச் சென்று கொண்டிருந்த மனிதர்கள் தமது பிள்ளைகளுடன் தேரரின் காலில் விழுந்து வணங்கி விட்டுச் சென்றனர்.
நான் விகாரை இருந்த திசைக்கு எதிர்த் திசையாக நடக்கத் தொடங்கினேன்.
விகாரைக்குச் செல்லும் மனிதர்களிடம் தனது வறுமை நிலையை சொல்லி மலர்களை விற்கும் சிறுவனை வழியில் கண்டேன். அந்தத் தேரரிடம் திட்டு வாங்கிய அந்த மனிதர் அந்தச் சிறுவனிடம் ஆம்பல் மலர்களை வாங்கிக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் புன்னகை செய்தார். நான் அவரிடம் சென்று” நீங்கள் ஒரு அரச ஊழியராக இருப்பதனால் தானே அந்தத் தேரரிடம் அமைதியாக இருந்தீர்கள் ” என்று கேட்டேன்.
“உத்தியோகத்தில் இல்லாது இருந்திருப்பினும் அப்படித்தானே நடந்து கொண்டிருப்பேன்” என்றார்.
“இந்த அரசு அடிப்படையில் ஒரு சிங்கள பவுத்த அரசாக இருப்பதனால் பேசிப் பயனேதுமில்லை என்பதால் அமைதி காத்தீர்கள் அல்லவா ” என்றேன்.
“அரசு என்பது அரசு மட்டுமே. ஒரு அரசு எப்படி பவுத்தத்தைத் தழுவ முடியும்?
பவுத்தத்தைத் தழுவிய பின் அது ஒரு அரசாக இருக்கவும் முடியாது.
அரசைத் தழுவிய பின் அது பவுத்தமாக இருக்கவும் முடியாது ” என்றார் அதே அமைதியுடன்.
“பரிநிர்வாணத்தை அடைவதற்கான தம்மத்தின் பாதையின் திசையில் நடப்போம் வருகிறீர்களா?” என்றேன்.
ஆம்பல் மலர்களை என்னிடம் தந்து “உங்கள் பயணம் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ” என்று கூறி விடை பெற்றார்.
உலர் நிலத்தின் வெப்பசாரத்தில் முன்னால் தெரியும் எல்லாப் பாதைகளும் கானலாய் நெளிகின்றன.
எதிர்த் திசையிலிருந்து ஒரு சிறு பிக்குணி நடந்து வந்து கொண்டிருந்தார்.
“பரிநிர்வாணத்தை அடைவதற்கான தம்மத்தின் பாதையின் திசையைச் சொல்ல முடியுமா?” என்று அவரிடம் கேட்டேன்.
“ஒரு பாதையின் திசையைத் தீர்மானிக்கும் மறுகணமே அந்தப் பாதை தொலைந்து போகிறது ” என்று சொல்லிவிட்டு என்னைக் கடந்து போய்க்கொண்டிருந்தார் பிக்குணியான அந்தச் சிறுமி.
You must be logged in to post a comment Login