எங்கள் ஊரில் ஒரு காலத்தில் 'கிடாய் வெட்டு' எனப்படும் வேள்வி நடந்தது.
காட்டு வைரவர் கோயில் என்று அழைக்கப்பட்ட அந்தக் கோயில் கிடாய் வெட்டுக்கு யாழ்ப்பாணத்துக்குள்ளே பெயர் போனது. ஊருக்குள்ளேயே வைரவர் ஞான வைரவராயும், மடத்தடி வைரவராயும் ஆங்காங்கே இருந்தாலும் காட்டு வைரவருக்குத் தான் வேள்வி நடக்கும்.
இதே போல சிறுப்பிட்டியில் ஒரு அண்ணமார் கோயில், கோணாவத்தையில் ஒரு கோயில் என வேறு சில இடங்களிலும் இந்த கடா வெட்டு நடக்கும்.
பேய்களை அடக்குபவர் என கிறிஸ்தவர்கள் நம்பும் புனித மைக்கேல் தூதரின் கோயிலுக்கு பின்னால், கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித வாரப் பகுதியில் சித்திரை மாதத்தில் கடா வெட்டு நடக்கும் அளவுக்கு வைரவரும், புனித மைக்கேலும் வேலிப் பிரச்சனையில்லாமல் நூறு ஆண்டுகளுக்கு கிட்ட வாழ்ந்து வருகிறார்கள். வேலி அரக்குப்படாமல் போனதற்கு இடையில் பாதை இருந்தது காரணமாக இருக்கலாம்.
வேள்விக்கான முதல் கடா, பூசாரி வீட்டிலிருந்து நாசக பானையுடன் ஊர்வலமாக வரும், அதிகாலை நான்கு மணிக்கு!
அந்த முதல் கிடாய் மாடு அளவில் பெரியதாக இருக்கும் என ஆரம்பப் பள்ளி நண்பர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.
அதிகாலைகளில் நித்திரையால் எழுப்பி அப்பா தொலைவில் இருந்து காட்டினாலும் இந்த முதல் கடாவை நான் கண்டதில்லை... பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தை தவிர!
பொழுது விடிவதற்கு முன்னால் முதல் கடா வெட்டப்படும். சுமார் 1200 ஆடுகள் வரை அன்றைய தினம் வெட்டப்படும். பின்பு எட்டாம் மடை என்ற பெயரில் எட்டாம் நாளும் இன்னொரு தடவை கடா வெட்டு நடக்கும்.
அப்போதெல்லாம் ஐஸ்பழம் வாங்கவும், லொத்தர் எடுக்கவும் வீட்டில் சில்லறைக் காசுகளை பொறுக்கி, வாங்கிக் கொண்டு போய் கடா வெட்டை விடுப்புப் பார்த்ததுண்டு.
முக்குலத்துத் தேவர்கள் தற்போது முதுகில் சொருகி வைத்திருக்கும் அரிவா(ள்) கத்தி போல, ஒரு கத்தியால், ஒருவர் தலையை கயிறோடு சேர்த்து இழுக்க வெட்டு விழும். இரத்தம் சீறிப் பாயும்.
கொஞ்ச நேரம் பார்த்து சலித்துப் போய் ஐஸ்கிரீம், கடலை சாப்பிட்டு லொத்தரில் வென்ற அலுமினியச் சட்டி, கிளாஸ்களுடன் வெற்றி வீரனாய் வீடு திரும்புவதுண்டு.
இவற்றை கடாவைத் தழுவி, கொம்பிலிருந்து தான் எடுக்க வேண்டும் என்று விதிமுறையிருந்தால், பண்பாடாச்சு, பரிசாச்சு என்று சீசீ, இந்த பழம் புளிக்கும் என்று கடாவை அடக்கும் மாவீரர்களை, ஓடக்கூடிய தூரத்திற்கும் அப்பால் எட்டி நின்று வாழ்த்தியும், கொம்பால் குத்தப்பட்டவர்களை மிக நெருக்கமாக முண்டியடித்து வேடிக்கை பார்த்தும் எமது பண்பாட்டைக் காத்திருக்கக் கூடும்.
அப்போது செல்பி வசதிகளோ, இருந்தாலும் வாங்கக் கூடிய வசதிகளோ இருக்கவில்லை!
இந்தக் கடா வெட்டின் போது, இந்துக்களான அம்மாவின் சகல சகோதரிகள் வீட்டிலும் ஆட்டிறைச்சிக் கறி சாப்பிடலாம் என்ற மகிழ்ச்சி தவிர வேறெந்தப் பண்பாட்டுப் பெருமையையும் இந்தக் கடா வெட்டு தந்ததில்லை.
இவ்வாறாகத்தானே, தமிழ்ப்பண்பாடு காக்கப்பட்டு வரும் காலை...
அமிர்தலிங்கம் இராசதுரைக்கு போட்டியாக காசி ஆனந்தனை நிறுத்தி, அதையும் மீறி வென்ற இராசதுரை இந்து கலாசார அமைச்சராக வந்த போது, மிருக வதை என்று சொல்லி கடா வெட்டு தடை செய்யப்பட்டது.
தமிழினத் துரோகி என்று வர்ணிக்கப்பட்ட ஒரு அமைச்சர் கடா வெட்டைத் தடை செய்தார் என்பதைக் காரணம் காட்டியே, தமிழ்ப்பண்பாட்டை காட்டிக் கொடுத்த துரோகி அழிக்கிறான் என்று கூட்டணி பெரும் புரட்சியைக் கிளப்பி மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தி ஈழம் கண்டிருக்கலாம்.
ஆனால் அது வாயை மூடிக் கொண்டது.
காரணம், இது பெரும்பாலும் 'எளிய சாதிகளின்' வழிபாட்டு முறையாக இருந்தது தான்.
இந்த நிகழ்வுகளுக்கு ஆடு வளர்ப்பவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சமூகங்களில் இருந்து வந்தவர்கள் தான். வெட்டிய ஆடுகள் வடலிகளுக்குள் வைத்து பங்கு புறிக்கும்போது, உயர்சாதியினர் சாதி பேதம் பாராமல் இறைச்சிப் பங்குகளை பனையோலைக் கட்டுகளில் வாங்கிச் செல்வர்.
பிறகு யாழ்ப்பாணத்தில் இறைச்சிக்கடைகளும் அதிகரிக்க, வைரவருக்கு படைத்ததை விட, பிரிட்ஜில் இருப்பதை வாங்கலாமே என்ற எண்ணம் வந்திருக்கலாம்.
ஆக மொத்தத்தில், இந்தக் கடா வெட்டு வேள்வியை எங்கள் கலாசாரம் என்று யாரும் அன்றைக்கு காப்பதற்கு முயற்சிக்கவேயில்லை.
ஒரு சுமார் நூற்றாண்டு கலை, கலாசார, பண்பாட்டு பாரம்பரியம் எந்த வித புரட்சியுமின்றி மடிந்து போக, இன்னொரு வைரவர் தோன்றி, மனிதப் பலி எடுக்கத் தொடங்கியது இன்னொரு கதை. (இதைப் பற்றி முன்பு விலாவாரியாக எழுதியிருக்கிறேன்!)
கலை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் போன்றவை தமிழர்களால் வசதி கருதியே கொண்டாடப்படுகின்றன. சமூகத்தில் உள்ள வேறுபாடுகளையும் பிற்போக்குத் தனங்களையும் பழமைவாதத்தையும் தொடர்வதற்கான அம்சங்களாகவே இந்த விழுமியங்கள் ஆதிக்கம் கொண்டோரால் ஆதரிக்கப்படுகின்றன.
பெண்கள் சேலை அணிய வேண்டும் என்பதில் கலாசாரம் காப்பதை விட, அடக்க, ஒடுக்கமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கும் ஆண் மேலாதிக்க வாதம் தானே இருக்கிறது.
திருமண வீட்டில் வேட்டி கட்டி தாலி கட்டினாலும் கோட் போட்டு கேக் வெட்டுவது கூட தற்போதைக்கு நமது கலாசாரம் தான். இது ஒரு நூறாண்டு கழித்து தமிழ்ப் பண்பாட்டு விழுமியமாகவே போற்றப்படலாம்.
நவீன யுகத்தில் பகுத்தறிவு தலையெடுத்து பிற்போக்குத் தனங்களை விட்டு வெளியேறிய சமூகங்கள் எங்கோ போய் விட்டன.
முன்னோர் பெருமை பேசிய தமிழன் மட்டும், மாட்டுக்காக ஒன்று சேர்வது தவிர்ந்த மற்ற நேரங்களில் ஆளையாள் வெட்டிக் கொல்கிறான்.
யாரோ ஒரு சோழன் இறந்தபோது அவனது அறுநூறு மனைவியர்கள் உடன்கட்டை ஏறினார்களாம்.
அதுகூட நமது பண்பாடு தானே!
அதைக் காப்பதற்கான போராட்டத்தை தொடங்கி எமது பண்பாட்டை அமுல் படுத்துவதில் என்ன பிரச்சனையோ?
அந்தப்புரம் வைக்கும் ஆசை நிறைவேறிய மாதிரியும் இருக்கும், தன்னுடைய மனைவி இன்னொருவனுக்கு கிடைக்கக் கூடாது என்ற ஆண் மேலாதிக சிந்தனை தொடர்ந்த மாதிரியும் இருக்கும்! அதையெல்லாம் தமிழ்ப் பண்பாடு என்ற பெயரில் காத்த மாதிரியும் இருக்கும்!
You must be logged in to post a comment Login