இனியும் இருத்தல்…
குஞ்சன்
சவங்களின் மீது
எனது இருப்பை வாசிக்கின்றேன்
எனது இருப்பும்
உனது இருப்பும்
நமது இருப்பும்
நாளை சவங்களாகும்
ஆம்!
இருப்பைத் தேடி வெளிக்கிட்டது
ஓர் ஆமை.
நான் இந்த ஆமையைப்
பின் தொடர்ந்தேன்
அதனது
இருப்பைத் தேடியல்ல
தேடலுக்கும்
உதவாமலுமல்ல
நான் அதனைத்
தொடர்ந்தது
பேட்டி எடுப்பதற்காக
நாம் நிறைய
ஆண்களினதும் பெண்களினதும்
பேட்டிகளை
வாசிக்கின்றோம்
அவைகளைப் பற்றுகின்றோம்
பின்பு திட்டுகின்றோம்
பிறகு முட்டுகின்றோம்
அதன் பின்பு தட்டுகின்றோம்
தட்டல் சுகமானது
தட்டினால் பேட்டிகளும் இல்லை
பேச்சுகளும் இல்லை
பின்பு
பொய்ப் பேட்டிகளும்
பேச்சுகளும் வரும்
நான் ஆமையைப்
பின் தொடர்ந்தேன்
அது
ஓர் இலக்கியக் கூட்டத்துள்
நுழைந்தது
நான் ஓடினேன்
“எனக்கு இருத்தல் வேண்டாம்!”
கத்தியபடி.
ஆமைக்குக் கேட்டது
எனது கத்தல்
அது
என் பின் நோக்கி “ஓடியது”
நான்
ஓர்
வீதியில் இருந்த
கடுதாசிப் பெட்டிக்குள் ஒழித்தேன்.
You must be logged in to post a comment Login