திரும்பிப் போவதைத் தனது தற்காலிக முடிவாக்கிக் கொண்டாலும், எது அல்லது எவைகள் காரணமாக இருக்கலாம் என அவனுக்குள் சந்தேகம் வந்தது. தனது காதல் மீதும் பல கேள்விகள். அவள் அவனது காதலியா? காதலனாக அவள் அவனைக் கருதிக் கொண்டாளா? காதல் எனும் சொல் ஒரு முழுமைக் கருத்தைக் கொள்ளாதது என அவன் இன்றுதான் நினைத்தான். நினைப்பு வேறு நாள்களிலும் அவனிடம் வந்து போயிற்றா?
நேற்றைய தினம் நான் விமானத்தில் இருந்தபோது இந்தக் கதையை எழுத வெளிக்கிட்டேன். பொதுவாக, சில காலங்களில் எனக்குக் கதைகள் எழுதும் விருப்பம் இல்லை. சில வேளைகளில் கதைஞன் என்ற பொருளும் எனக்குள் வாட்டம் தராத சொல் போல. விடுபடும் ஆசைகள் சில வேளைகளில் மீண்டும் தலைக்குள் பூருவதை நிறையக் கண்டுள்ளேன்.
இலக்குத் தெரியாமல் எழுத வெளிக்கிட்டேன் எனும் நினைப்பு எனக்குள். இந்த இருப்பின்மை எனது கிழிந்த கொப்பியில் உள்ள சில வெள்ளைப் பக்கங்களின் ஒன்றில் நீல வயலை உருவாக்கியது. நான் அதற்குள் நடமாடினேன். எனக்கு மீண்டும் எழுத்தில் காதல் வந்ததோ? இந்த விரல்களின் நடமாட்டம் நாட்டமுமாக மாறியது. இந்த விமானத்தில் இவை எழுச்சியைக் கட்டிப்பிடித்ததுபோலும்.
ஒரு நொடிக்குள் வயலைக் காணவில்லை. இருள். எனது முகத்தின் முன். ஆம்! பிரயாணிகள் தூங்குவதற்கான அழைப்பு வந்ததென எனக்குப் பின்னாலேயே விளங்கியது. எனக்குள் முளைத்த கொடூரமான எரிச்சலைக் கிழிக்க வெளிக்கிட்டேன். இந்த மெல்லிய இருட்டிலும் உயர்ந்த, இந்திய அழகிய விமான சேவகிப் பெண் என் இருக்கையைக் கடந்தாள்…. அவளிடம் இரண்டு சிறு வைன் போத்தல்களைக் கேட்டேன். சம்மதிப்பு அவளது சிரிப்புள். இரு போத்தல்களும் இந்திய போத்தல்களாக இருந்ததை மங்கல் இருட்டுள் அறிந்தேன்.
உண்மையிலேயே எனக்குக் குடிக்கும் விருப்பம் இருந்ததில்லை. ஆனால் மெல்லிய ஒளியில் வெறுப்பு வந்தது, அது எனது தாள்களிலே பேனாவால் நடப்பதற்கு தடை போல. சில வேளைகளில் எனக்கு எழுத வரும். அந்த வருகைக்கு ஒரு தடை. இந்திய வைனை நான் குடிக்க வெளிக்கிட்டேன். அது மிகவும் கசப்பானதும், வைன் போல இல்லாததாகவும் பட்டது. ஒளி மக்கரான கோபத்தால் மீண்டும் குடித்தேன். கலீல் கிப்ரான் எனது குடிப்பைப் பார்த்தால் பரிகசித்திருக்கலாம்.
நான் தொடங்கிய கதையை நினைப்புக்குக் கொண்டுவந்தேன். சில வரிகள். பாத்திரங்களுக்குப் பெயர்கள் இல்லாமல். அவர்களுக்குப் பெயர்கள் வைக்க வேண்டுமா? ஆணுக்கும் பெண்ணுக்குமான கதை எனப்படுகின்றது. அவர்களுக்குள் காதலை வைத்துள்ளேன். அவர்கள் நாடுகளும் தெரியாது. தெரிய வைக்க வேண்டுமா? மொழியும் தெரியாது. அவர்களுக்கு மொழிகளையும் கொடுக்க வேண்டுமா? நான் நிறையக் கதைகளைப் படித்தேன். ஆயிரக்கணக்கான பெயர்கள் எனது வாசிப்புக்குள். சில பெயர்கள் மட்டும்தான் என் நினைப்பினில். சில தடவைகளில் நான் வாசித்த படைப்புகளுள் வந்த பெயர்களைத் தேடுவதுண்டு. வருவதேயில்லை. படைப்புகளின் தலைப்புகளது பெயர்களும் எனது மறப்புள். சிறுவனாக இருந்தபோதே எனது நினைவுத் தியானம் உடைதலை அபூர்வமாக நான் அவதானித்து வந்துள்ளேன்.
சரி! எப்படியோ கதையைத் தொடர்வோம்.
இன்று அவனுக்குக் காதலின் மீது கேள்வி எழுந்தது. நேற்றைய தினங்களிலோ அவளின் கோலம் அவனுக்குள் தீட்டியவை கனவுகளை. அவன் அவளையும் காதலித்தான், அவள் மூலமாக வந்த கனவுகளும் அவனது உபசரிப்புள். சிலவேளைகளில் அவளைக் காட்டிலும் அவள் உடலின் வசீகரிப்பால் வந்த கனவுகளைக் காதலிக்கும் வேளைகள் அவனுக்குள் வந்தது. உண்மையில் அவன் அவளிடம் தான் காதலிப்பதாக ஒருபோதுமே சொல்லவில்லை.
சொல்லுவதில் என்ன அர்த்தமாம்? விழிகள் களவாகப் பிடித்து வைத்திருக்கும் காதல் குறிப்புகள் அவனுக்கு மட்டும்தான் தெரியும்.
அவள் வீட்டுக்குள் அவன் போதலின் முதல் காரணம் சிநேகிதத்தால்தான். ஓர் அரசியல் ஆர்ப்பாட்டத்துள் அவள் கொடி பிடித்துக்கொண்டிருந்தாள். பின்னே, ஆம் அவளின் பின்னே அவன் கொடியில்லாமல். கொடியின் நிறம் சிவப்பு. அது கம்முனீச ஆர்ப்பாட்டம் இல்லாததாலிருந்தாலும் சிவப்பு நிறத்தில் கொடி. முன்பு சிவப்பு விளக்குகளின் ஒளியில் பெரிய புத்தகங்களைப் படித்த அவன், இப்போதோ படிப்புகளை நிறுத்திவிட்டான்.
“உங்களது சிவப்புக் கொடி அழகியது!”
“நன்றி! அது அழகியதுதான். நான் அழகு கருதி அதனைப் பிடிக்கவில்லை”. அவள் பதில் சொன்னபோது பேசியன அவளது விழிகள். இமைகளின் இலகுவான சரிவுகள் அவனுக்குள் விழுந்த கவர்ச்சிக் குண்டுகள்.
“எனக்குப் பச்சை நிறம் விருப்பம். ஆனால் எமக்கு பச்சை மரக்கறிகள் போலியாகவே தரப்படுகின்றன. போலிப் பச்சைக்கும் உண்மையான பச்சைக்கும் இடையுள் நாம். எமது இருத்தல் போலிக் கேள்விகளின் முன்னே. இந்த சூழலியல் ஆர்ப்பாட்டம் எமக்கு முக்கியமானது.”
“உங்களுக்குச் சிவப்பும் பச்சையும் பிடிக்கும் என்று நினைக்கின்றேன்.”
“முன்பு எனக்கு சிவப்புப் பிடித்தது. நான் சிவப்பு ஒளியை மிகவும் ரசித்தேன். இப்போது பிடிப்பதில்லை. ஏன் எனும் காரணம் எனக்குத் தெரியாது. ஆனால் உங்களது சிவப்புக்கொடி எனக்குப் பிடித்துள்ளது.”
“ஏன்?”
“கொடியின்மீது மிகவும் மறைவாகக் கிடக்கும் அப்பிள் பழத்தின் நிறம் பச்சை.”
“பச்சை அப்பிள் கசப்பானது.”
“உண்மைதான். அது உடலுக்கு நல்லதென்று உங்களுக்குத் தெரியும் என நம்புகின்றேன்.”
“இந்தக் கூட்டத்துள் நிறையப் பேர் இல்லை. எனக்கு வருத்தமாக உள்ளது.”
“கவலையான விடயம். உண்மையான பச்சையை உண்கின்றோமா, பொய்மையான பச்சையை உண்கின்றோமா என்பதை உண்பவர்கள் விளங்காதுள்ளனர். எமது உற்பத்தி இலக்குகளில் சுத்தம் இல்லாமல் உள்ளன.”
அவளது விழிகளை மிகவும் இரசிகமாக அவன் ரசித்தான். அவை சின்ன விழிகள். அவைகள் பச்சை நிறத்தில். அந்த விழிகளை வைத்துக் கவிதைகள் எழுதவேண்டும் என அவன் நினைக்கவில்லை. அந்த விழிகளைக் களவு செய்யவேண்டும் என அவன் நினைத்தான்.
“ஆம்! எமது உற்பத்தி இலக்குகள் போலியானவை. நிறையப் படைக்கின்றோம் நிறைய எறிகின்றோம். நாம் எறிபவைகள் பல நாடுகளின் பசியைத் தீர்க்கும் என்பதில் எமக்கு அக்கறையில்லை.”
“நாம் உற்பத்தி செய்பவைகள் சுத்தமில்லாதவை. நாம் எறிபவைகளும் சுத்தமில்லாதவைகளே. சுத்தமில்லாத எமது உற்பத்திகளை வேறு வறுமை நாடுகளுக்குக் கொடுப்பதை நான் எதிர்க்கின்றேன்.”
அவளது முகம் மாறியது. தனது செம்முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவளது சின்னக் கூந்தலில் சில வெண் மயிர்கள் தெரிந்தன. ஆனால் அவள் வயது போன பெண்ணல்ல. ஓர் இளச்சி.
அவனது கருத்து அவள் மாற்றத்துக்குக் காரணம் என அவன் நினைத்தான்.
“எனது கருத்து உங்களுக்குப் பிடிக்கவில்லையா?”
“பிடிப்பும் பிடிப்பில்லாமலும்.”
இந்தக் கணத்தில் அவளது நண்பர்களும் நண்பிகளும் வந்ததால் அவள் அவர்களுடன் கலந்து மறைகின்றாள். கூட்டம் சிறிதென்றாலும் அவளது முகம் முக்கியம். அது அவனுக்குத் தனது வயலாகப் பட்டது.
தேடினான். பல தடவைகள். அவளைக் கண்டுபிடிக்க முடியவேயில்லை. அவளது கொடியும், முகமும் அவனுக்குத் தேவைப்பட்டன. அவன் தேடலை விரிவாகினான். ஒவ்வொரு பெண்களும் அவனது பார்வையால் பிடிபட்டன. அவள்களது முகங்களைத் துப்பறிவாளன் போலப் பார்த்தான். அவள் தனது முகத்தை மாற்றியிருப்பாளோ என அவனுக்குள் கேள்விகள் எழுந்தன.
தேடல், தேடல், தேடல். இதுதான் வாழ்க்கை போல பட்டதால் அவனுக்கு வாழ்வில் வெறுப்பு வந்தபோதும் அவளைத் தேடுவதில் நிறைய ஊக்கம் காட்டினான். அந்தத் தினத்தில் அவனுக்கு அவளில் காதல் வந்ததா? அவனிடம் உள்ளவை காதல் குறிப்புகளே.
சூழலியல் ஆர்ப்பாட்டம் முடிந்தது. எல்லோரும் போய்விட்டார்கள். அவன் தனித்து ஓர் பஸ் ஸ்டாண்டின் முன் நின்றான். மாலை இரவாகியது. வீடு போகும் இலக்கு அவனைக் கடிக்கவில்லை.
இந்தக் கதையை எழுதும் நான் விமானத்துக்குள் எழுகின்றேன். இரண்டு வைன் போத்தல்களும் காலியாக. மெல்லிருட்டு என்மீது. எனது பக்கத்தில் இருந்தவர் குறட்டை விடுகின்றார். வேறு பயணிகள், நிம்மதியாக குறட்டை விடாமல் தூங்கியபடி. நான் தூங்கியபோது குறட்டை விட்டேனா?. எனது மனைவி நான் தூங்கும்போது ஏற்படும் சத்தங்களைச் சொல்வதுண்டு. அவளதினைச் சொன்னால் நம்பும் கலை அவளுக்கு இல்லை.
பயண சேவகியைக் காணவில்லை. அவள் தூங்கியிருப்பாளா? அது நடந்திருந்தால் எனது முகம் அவளது நினைவுக்குள் இருக்குமா? மீண்டும் இரண்டு வைன்கள் அவளை, எனது கதையில் வரும் அவளை நினைக்க. அவள் தனது சேவை அறைக்குள் விரும்பாமல் சிறு தூக்கத்தைக் கொண்டிருக்கலாம் என நான் நினைத்தேன். நான் சிறிது அவளது முகத்தை நினைத்தேன்.
அந்த முகத்தில் சோகம் இருந்ததுபோல பட்டது. அது அவளின் வேலையால் வந்துமிருக்கலாம். சில மாதங்களில் பல விமான விபத்துகள் நடந்தன. அவள் இந்த விபத்துகளைப்பற்றி வானிலும் வானில் இல்லாதபோதும் யோசித்திருப்பாள். அவளது பெற்றோர்களும் இந்த விபத்துகளைப்பற்றி யோசிக்காமல் இருப்பார்கள் என நான் நினைக்கவில்லை.
சோகக் கோலம் விமானத்துக்குத் தூரமாகவும் நடக்கலாம். ஒருபோது அவள் கணவனாலும், கணவன் இல்லாதுவிட்டால் தனது காதலனாலும்/காதலியாலும் சோகங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சில சோகக் கோலங்கள் மனித உறவுகளுக்கு அப்பாலும் நடக்கலாம்.
ஒரு நாள் நான் மிகவும் சோகமாக இருந்தேன். எனது பூனை 5ஆம் மாடியில் இருந்து விழுந்துவிட்டது, ஆனால் தப்பித்தும் விட்டது காயத்தோடு.
“உங்களிடம் பூனை இருக்கின்றதா?” அந்த மெல்லிருட்டில் எனக்குப் பக்கம் போன விமான சேவகியைக் கேட்டேன்.
“உங்களுக்கு இன்னும் ஒரு வைன் தேவையா?” என அவள் என்னிடம் கேட்டாள்.
“ஆம்! இரண்டு” என்றபோது எனது கைகளில் இந்திய வைனின் சிறு போத்தல்களை வைத்தாள் .
பூனையா நாயா செத்தது எனக் கேள்விகளை எழுப்பாமல் நான் வைன் வயலுள் வீழ்ந்தேன். இந்த வயலில்தான் நான் காண்பது அனைத்து நிறங்களையும்.
நான் எழுதிக்கொண்டிருந்த கதையில் ஆர்ப்பாட்டத்துக் கூட்டத்துள் இருந்து காணாமல்போன அவளின் முகத்தை அவன் தேடிக் கொண்டுள்ளான் எனும் கடைசிச் செய்தி வருகின்றது.
அவளைக் காணாததால், சில டின் பியர்களைக் குடித்துவிட்டு தனது றூமை சிக்கல்பட்டுக் கண்டுகொண்டான். நல்ல திறப்பாலும் கதவு திறபடவில்லை. தட்டினான். தட்டுதலின் வேகம் கூடியது. பதில்கள் உள்ளிருந்து வரவில்லை. ஆனால் ஓர் இருப்பு தனது றூமுக்குள் இருப்பதாக அவனுக்குப் பட்டது.
“எனது வீடு சில வேளைகளில் எனது வீடாகாமலும் இருக்கலாம். இப்போது உங்களது வீடே என் வீடு. நான் உங்களது வீட்டுக்கும் வரலாமா? “
“நான் உன் வீட்டில் இருந்தாலும், உன் வீட்டில் இருக்காதுள்ளேன். இருத்தலும் இருத்தல் இல்லாதிருத்தலும் என் இருப்பு.”
அவனது காதில் இந்தச் செய்தி கவிதையாகக் கேட்டது. ஆனால் அவன் உள் நுழையவில்லை. தனது வீடு தன் வீடு இல்லாதது போல் பட்டது.
வெளியே வந்தான். கொடிகளை விற்கும் கடைகளைத் தேடியபடி. நிறையக் கடைகளைக் கண்டான். கால் பந்துக் கொடிகளை விற்றபடி. ஆனால் அவனுக்குத் தேவையானதோ சிவப்புக் கொடிகள். இந்தக் கொடிகளை விற்பதற்கு கடைகள் இல்லை.
இரண்டு வைன் போத்தல்களும் வெறுமையாக. எனது கண்கள் அவளைத் தேடின. அவள் வருவது தெரிந்தது, மங்கலாக. அவளின் கையில் ஓர் பச்சைக் கொடி.
எனது மங்கல் பார்வைக்குள் அது ஓர் சிவப்புக் கொடியாகப் பட்டது.
(2014 விமானம்- 21/04/2016 பாரிஸ்)
You must be logged in to post a comment Login