குளிர்காலத்திற்கு உங்கள் வீடு தயாரா?
குளிர்காலம் தொடங்க, குளிர் தாங்க முடியாமல் உங்கள் வீட்டின் சூடாக்கியை செயற்படுத்த வேண்டி வரும். மின்சாரம் அல்லது எரிவாயு மூலமாகச் சூடாக்கும் கருவிகளை இயக்கும்போது, அவற்றுக்கான செலவு அதிகரிக்கும். ஒவ்வொரு மாதமும் அந்தக் கட்டணத்திற்கான சீட்டு வந்திறங்கும் போது, திட்டிக் கொண்டே பணத்தைக் கட்டுவீர்கள்.
குளிர்காலத்தில் சூடாக்கும் செலவை முழுமையாக அகற்ற முடியாது போனாலும், அதைக் குறைப்பதற்கான வழிகள் உள்ளன.
உங்கள் சூடாக்கும் கருவிகளை இயக்கும் Thermostat இல் ஒவ்வொரு பாகை குறைக்கும் போதும், வீட்டைச் சூடாக்கும் செலவில் மூன்று முதல் ஐந்து வீதம் வரை சேமிக்கிறீர்கள். எனவே உங்கள் வீட்டை 20 முதல் 22 பாகை வரையான வெப்பநிலையில் பேணிக் கொள்வீர்கள் ஆயின் உங்கள் சூடாக்கும் செலவில் சுமார் இருபது வீதம் வரை சேமிக்கலாம்.
இதற்கு நீங்கள் உங்கள் தேர்மோஸ்டட்டை program பண்ணுவதன் மூலம் அது தானாகவே வீட்டை சூடாக்குவதற்கு வழி பண்ணலாம்.
பகலில் நீங்கள் வேலைக்குப் போகும் நேரத்தில் வீடு அதிகளவு சூடாக்கப்படத் தேவையில்லாததால் வெப்பநிலையைக் குறைக்கலாம். இரவு படுக்கப் போகும் போது வெப்பநிலையைக் குறைத்து, அதிகாலையில் மீண்டும் அதிகரிக்கும்படியாகச் செய்யுங்கள். இரவு போர்த்துக் கட்டிக் கொண்டு தூங்கும்போது அதிகளவு வெப்பம் தேவைப்படாது. ஆனால் காலையில் எழும்போது வீடு குளிர்ந்திருக்கும் என்பதால், அது தானாகவே காலையில் சூட்டை அதிகரிக்க வழி செய்யுங்கள்.
அதை program பண்ணும்போது, நீங்கள் கவனிக்காவிட்டாலும் அது தானாகவே வீட்டு வெப்பநிலையை பேணிக் கொண்டிருக்கும்.
வீட்டினுள் ஈரப்பதனை Humidifier மூலம் அதிகரியுங்கள். வீட்டுக்குள்ளே உள்ள வளியின் ஈரப்பதன் அதிகரிக்க அது உறுஞ்சி வைத்திருக்கும் வெப்பம் அதிகரித்து, சூடாக இருப்பது போல உணர்வீர்கள்.
வீட்டுச் சுவர்கள், ஜன்னல்கள், கதவுகள் போன்றவற்றில் உள்ள வெளிகளால் வீட்டுக்குள் உள்ள வெப்பம் வெளியேறும். (அல்லது குளிர் உள்ளே வரும்) கதவுகளுக்கு இடையில் உள்ள இடைவெளிகளை அடைக்கக் கூடிய Insulation Strip களை வாங்கி கதவுநிலை ஓரங்களில் ஒட்டி விடுங்கள். ஜன்னல்கள் சுவரில் பொருத்தப்பட்ட இடங்களில் துவாரங்கள் இருக்கக் கூடும். அவற்றை அடையுங்கள். குளிர் வருவதைக் கண்டுபிடிக்க சாம்பிராணிக் குச்சியைக் கொழுத்தி கதவு, ஜன்னல் ஓரங்களில் பிடித்தால், புகை அசையும் விதத்தைக் கொண்டு சரியான இடத்தைக் கண்டுபிடிக்க முடியும்.
பகல் நேரங்களில் சூரிய வெளிச்சத்தை வீட்டுக்குள் வரவிட்டால், அதன் கதிர்கள் வீட்டைச் சூடாக்கும். அதிலும் குறிப்பாக உங்கள் அறைகளின் தரை பளிங்கு ஓடுகளால் பதிக்கப்பட்டிருந்தால், அவை சூரியனின் சூட்டை உறுஞ்சி வைத்து வீட்டை சூடாக்கும். (தமிழர்கள் பலர் பளிங்கு மாளிகைகள் தானே வைத்திருக்கிறீர்கள்!)
மறக்காமல் இரவுகளில் வீட்டின் சூடு வெளியேறாதபடிக்கு ஜன்னல் திரைகளால் மூடுங்கள்.
மில்லியன் டொலரில் வாங்கிய மாளிகை வீட்டுக்கு அனாவசியமாக முழுவீட்டையும் சூடாக்காமல், நீங்கள் நடமாடும் பகுதிகளை மட்டுமே சூடாக்கக் கூடிய Space Heater களைப் பயன்படுத்தலாம். இதனால் நீங்கள் சூடாக்கப் பயன்படுத்தும் எரிவாயுச் செலவு குறையும்.
மற்றவர்களுக்குக் காட்ட மில்லியன் டொலர் வீட்டை வாங்கி விட்டு, எரிபொருள் செலவு அதிகம் என்பதற்காக குளிரில் நடுங்கி நோய்களைத் தேடிக் கொள்ளாதீர்கள்.
கதகதப்பான மேலதிக ஆடைகளும் போர்வைகளும் உங்கள் உடலைச் சூடாக வைத்திருக்கும். அருகில் துணை இருந்தால் தயக்கமில்லாமல் அணைத்தபடியும் தூங்கலாம். உங்கள் துணையின் விருப்பம், வசதியைப் பொறுத்து!
ஆனால் அருகில் துணையை அணைத்திருத்தல் கதகதப்பாக இருக்கிறது என்பதற்காக முற்றாக சூடாக்கியை அணைத்து விடாதீர்கள்.
முதலாவது உங்கள் வீட்டில் உள்ள மற்றவர்களின் உடல் குளிரை தாங்க முடியாமல் போய் நோய்கள் பீடிக்கலாம்.
அடுத்து முக்கியமானது, வீட்டுக்குள்ளே உறைநிலை வந்தால், உங்கள் வீட்டுக்கு நீர் வினியோகம் செய்யும் குழாய்கள் உறைந்து வெடித்து வீடே நீரால் நிறையலாம்.
எனவே உங்கள் உடல் தாங்கக் கூடிய அளவு குளிரை வைத்துக் கொண்டு, அணைப்பு, கதகதப்பு என்று ஜமாயுங்கள்!
அது எல்லை மீறிப் போய், பத்து மாதத்தில் குவா, குவா சத்தம் கேட்டால், அதனால் ஏற்படும் செலவுகளுக்கு நாங்கள் பொறுப்பாளிகள் இல்லை! (உம்மட கதையை நம்பி நாங்கள்... என்று எங்கள் மீது பழி போடாதீர்கள்!)
சுவடி ஐப்பசி 2015
You must be logged in to post a comment Login