Recent Comments

    High Priests and Hit lists!

    தனிமனிதனின்

    Top 8 லிஸ்டில் இடம் பெறாததால்

    ஈழத்தமிழ் கவிஞர்கள்
    கொதித்துப் போய் இருக்கிறார்கள்!

    கவிஞர்கள் என்றால்…

    முன்பெல்லாம்
    கலவன், கலவாத
    பாடசாலைகளுக்குப் போன
    ஆண்கள் தான்!

    அலைகடல் வற்றினாலும்
    அன்புக்கடல் வற்றாத காதலிகளுக்கு

    கண்ணதாசன் கவிதையைத்
    திருடிப் பெயர் வாங்கிய
    வைரமுத்துக்கள்!

    தற்போது
    கவிஞர்கள் என்றால்…

    ஏறக்குறைய
    முழுப் புலன் பெயர் சனத்தொகையும்
    யாழ்ப்பாணத்தில்
    மணி ஓடர் பொருளாதார வசதியால்
    பேஸ்புக்கில் உள்ளவர்களும்!

    இருநூறு பேர் லிஸ்ட் போட்டபோதே
    எத்தனை உள்ளங்கள்
    புண்பட்டிருக்கும்?

    ஆயிரம் பேரை வைத்து
    தொகுப்பு வெளியிட்ட
    அபூர்வ சிந்தாமணிகளின்
    மண் இது!

    அதில் கூட விடுபட்டவன்
    எப்படித் துடித்திருப்பான்?

    மூலைக்கு மூலை
    முகாம் அமைத்து
    இயக்கம் வளர்த்த மண் இது!

    மாற்று இயக்கப் போராளிகளை
    போட்டுத் தள்ளிய
    இலக்கியப் போராளிகள்
    நிறைந்த மண்!

    வேண்டப்பட்டவனைப் புகழ்ந்துரைத்தும்…

    தொட்டால் தீட்டு என்று
    தீண்டத்தகாதவனை தள்ளி வைத்தும்
    தொகுப்பு வெளியிடும்
    பாரம்பரியம் இது!

    அளவுகோல்கள்
    தங்கள் வசமே உள்ளதாக
    ஆளாளுக்கு கனவில் திரியும்
    இலக்கிய மரபு இது!

    விமர்சனங்கள் கூட
    முகாம் சார்ந்து இருப்பதை
    மூடி மறைத்து விட்டு…

    இதற்குள் எதற்கையா
    கெம்பிக் குதிக்கிறீர்கள்?

    சில நேரம்
    விருது கிடைக்கலாம் என்பதற்காக
    விமர்சனமே செய்யாமல்
    வீணீர் ஒழுக காத்திருப்பவர்கள்
    எத்தனை பேர்?

    இலக்கியத்தின் High Priest டின் கையால்
    கங்காநீரில் ஞானஸ்நானம் பெற்று
    கவிஞராக அங்கீகரிக்கப்படுவது தான்
    பிறவிப் பெரும்பயன் என
    கருதுவீர்களாயின்…

    உங்களுக்கு எல்லாம்
    எந்த சிகைக்கு எழுத்து?

    தனிமனிதனில் கையால்
    மாமனிதன் பட்டம் வாங்க
    பிணமாகவே வன்னிக்குப் போன
    பரம்பரைக்கு…

    பட்டங்கள், பொன்னாடைகள்,
    விருதுகள், லிஸ்டுகளின் மேல்
    உள்ளதை

    தெய்வீகக் காதல் என்று
    நினைத்தால் யார் குற்றம்?

    வெறும் Teenage Infatuation!

    ஹிட் லிஸ்டில் இருந்தாலும்
    குற்றம் குற்றமே என்று சொல்ல…

    முதலில்
    முள்ளந்தண்டுகளை
    இரவல் வாங்குங்கள்!

    நீங்கள் எப்படித் தான்
    எழுதிக் குவித்தாலும்…

    தமிழ்நாட்டில்
    உங்களின் இலக்கிய அந்தஸ்து
    நீங்கள் வழங்கும்
    விமானச் சீட்டுகள், விருதுகள்,
    விஸ்கிகளாலேயே நிர்ணயிக்கப்படுகிறது!

    முன்பு சொன்னது,
    இனியும் எத்தனை தடவையும்
    சொல்ல முடியும்!

    என்றோ எழுதி
    எப்போதோ மறந்து போனதை
    எங்காவது காணும் போது
    அடையாளம் கண்டு…

    ஒப்புவிக்கின்ற
    எளிமையான மனதுடைய
    வாசகனின் வாழ்த்தை விடவா
    இந்த வியாபாரிகளின்
    இன்றைய ஸ்பெஷல்கள் பெரியவை?

    Postad



    You must be logged in to post a comment Login