சுமந்திரனிடம் அடாவடித் தனம் பண்ணிய தமிழுணர்வாளர்களைப் பார்க்க, இவ்வாறான அனுபவம் ஒன்று நீண்ட நாட்களுக்கு முன் கிடைத்த நினைவை மீட்டிப் பார்க்க முடிந்தது. தாயகம் கனடாவில் வெளிவந்த காலத்தில், அதன் எழுத்துக்களை எதிர்கொள்ள முடியாத கனடாப் புலிகளான உலகத் தமிழர் கும்பல் ஒரு தடவை தாயகத்தைத் தடை செய்தது. சுதந்திரமாக கருத்துத் தெரிவிப்பதை சட்ட ரீதியாக அங்கீகரிக்கும் ஒரு நாட்டில், ஒரு காடையர் கும்பல் தன்னுடைய பேட்டை என நினைத்து தடை செய்த கோமாளிக் கூத்தை இந்த புலிவால் தமிழுணர்வாளர்கள் தவிர்ந்த வேறு யாரால் செய்ய முடியும்?
(சுமந்திரன் பேசுவதைத் தடை செய்ய முயன்ற கும்பல் போல, கனடாவில் லிபரல் கட்சியின் தலைவராகவும் அதற்கு முன்னர் ஒன்ராறியோ முதல்வராகவும் புலிகள் காலத்தில் புலிகளுக்கு உலக அரசியல் பற்றி கற்பிக்க முயன்றவருமான பொப் ரேயை பேச விடாமல் தடுப்பதில் முன்னணியில் நின்றவர் இன்று கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்! ஆனால் அந்த நிகழ்வு தான் கனடாவில் புலிகள் தடை செய்யப்படுவதற்கான இறுதி ஆணியாக அமைந்தது.)
இதற்கு முன்னால், உலகத் தமிழர் இயக்கத்திலிருந்து இரண்டு பேர் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வந்தார்கள். அவர்கள் திரும்பத் திரும்பச் சொன்ன வசனம்… ‘நீங்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறீர்கள்’.
இந்த மிரட்டல்களின் பின்னரும் தாயகம் நிறுத்தப்படவில்லை. தாயகத்தை நிறுத்த இவர்கள் செய்த அடாவடித் தனங்கள் சொல்லி மாளாது.
ஒரு தடவை வெலஸ்லிப் பகுதியில் உள்ள தேடகம் நூல் நிலையத்திற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த என்னையும் தேடகம் நண்பர் ஜயகரனையும் யாரோ அடையாளம் காட்ட, ஒரு கூட்டமாக ஓடி வந்து, தெருவில் தடுத்து நிறுத்தி மிரட்டியது ஒரு கும்பல். அதில் தாயகத்தை நிறுத்தும்படி மேலிடத்திலிருந்து கட்டளை வந்திருப்பதாகவும், அதன்படி தாங்கள் கடைகளுக்குச் சென்று தாயகம் விற்பதை நிறுத்த வேண்டும் என்று கட்டளையிட்டு வருவதாகவும் அந்தக் கும்பலில் இருந்த சிலர் சொன்னார்கள். அதில் மேலிடம் என்பது மாத்தயா என்ற நிலை தான் அப்போது. அந்தக் கும்பலில் சிறிய பையன் ஒருவன் என் நெஞ்சில் தள்ளித் தள்ளி மிரட்டிக் கொண்டிருந்தான்.
சுமந்திரனை மிரட்டிய கூட்டத்தைப் போலவே தான் அந்தக் கும்பலும் இருந்தது. அந்தக் கும்பலினால், தாயகத்தை நாங்கள் வெளியிடுவதையோ, கடைகளில் விற்பனை செய்வதையே நிறுத்த முடியவில்லை. பல வர்த்தகர்கள் கண்ணாடி உடைப்புகளையும் மீறி தாயகத்தை விற்பனை செய்தார்கள்.
இந்தக் கதையின் கிளைமாக்ஸ் தான் இன்னமும் சுவாரஸ்யமானது. வரலாற்றின் சுழற்சி என்பது கொடூரமானது.
உலகத்தமிழரில் இருந்து வந்து எங்களோடு, ‘தாயகம் விடுதலைப் போராட்டதை கொச்சைப்படுத்துகிறது’ என்ற சொன்ன ஒருவர் கொஞ்ச நாளில் உலகத்தமிழர் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
கனடா வந்த நாளிலிருந்து எந்த வேலை வெட்டியும் இல்லாமல், உலகத்தமிழரின் அலுவலகத்தில் படுத்துக் கிடந்த மற்றவர் தற்போது மிகப் பெரும் வியாபார நிலையம் ஒன்றுக்கும் சில கட்டடங்களுக்கும் சொந்தக்காரராக உள்ளார்.
வழியில் மறித்து மிரட்டியவர்களில் ஒருவர் அன்று போல் இன்றும் விடுதலைப் போராட்டத்தைச் சொல்லி என்ன வழிகளில் பணம் சுருட்ட முடியுமோ அத்தனை வழிகளிலும் சுருட்டிக் கொண்டிருக்கிறார்.
எங்களை தடை செய்ய மேலிடத்திலிருந்து கட்டளை அனுப்பிய மாத்தயா, கொஞ்ச நாளில் அதற்கும் மேலிடத்திலிருந்து வந்த கட்டளையில், என்னை நெஞ்சில் பிடித்து தள்ளிய சைஸ் போராளியால் கட்டிய சாரத்தோடு இழுத்துச் செல்லப்பட்டார்.
அன்றைக்கு மாத்தயா பற்றி புலிகளின் ஊடகங்கள் மறைத்த செய்திகளை தாயகமே துணிச்சலுடன் வெளியில் கொண்டு வந்தது.
மேலிடத்திலிருந்து தாயகத்தை தடை செய்ய கட்டளை அனுப்பப்பட்டிருக்கிறது என்று அன்று எங்களுக்குச் சொன்னவர், கொஞ்ச நாளில் வன்னி திரும்பி மாத்தயாவோடு இணைந்து, மாத்தயாவோடு இருந்த மற்றவர்களோடு சேர்ந்து அடித்துக் கொல்லப்பட்டார்.
இன்றைக்கு சுமந்திரனை மிரட்டிய கூட்டம் பற்றிப் பெருமை கொள்வோர் இதை மனதில் நிறுத்துவது நல்லது!
You must be logged in to post a comment Login